மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்பை 2024 ஆம் ஆண்டிற்கான “சிறந்த நபராக” டைம் (Time) இதழ் கடந்த வியாழக்கிழமை தேர்வு செய்துள்ளது. “அமெரிக்க ஜனாதிபதி பதவியை மறுவடிவமைப்பதற்காகவும், உலகில் அமெரிக்காவின் பங்கை மாற்றியமைப்பதற்காகவும், ஒரு தலைமுறைக்கு ஒருமுறை அரசியல் மறுசீரமைப்பிற்காக, வரலாற்று விகிதாச்சாரத்தின் மறுபிரவேசத்திற்கு, ட்ரம்பைத் தேர்ந்தெடுத்ததாக” டைம் இதழ் எழுதுகிறது. பளபளப்பான முகப்புக் கட்டுரையைத் தொடர்ந்து, ட்ரம்பினுடைய மார்-அ-லாகோ தோட்டத்தில் தலைமை ஆசிரியர் சாம் ஜேக்கப்ஸ் உட்பட, இந்த பத்திரிகையின் நான்கு சிறந்த எழுத்தாளர்கள் மற்றும் ஆசிரியர்களால் ஒரு நீண்ட மற்றும் அருவருப்பான நேர்காணல் நடத்தப்பட்டது.
டைம் இதழில் முகப்புக் கட்டுரை வெளியான வியாழன் அன்று, நியூயோர்க் பங்குச் சந்தையில் தொடக்க மணியை அடிக்கும் தனது மிக முக்கியமான பார்வையாளர்களுக்கு முன்பாக, ட்ரம்ப் தலை வணங்கினார். மேலும், அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அமைச்சரவை வேட்பாளர்கள் கைதட்டியபோது, கூடியிருந்த பெருநிறுவன நிர்வாகிகள் மற்றும் பங்கு வர்த்தகர்கள் “அமெரிக்கா! அமெரிக்கா!” என்று கோஷமிட்டனர். ட்ரம்பின் பக்கத்தில் நின்றவர்களில் அமெரிக்காவின் டைம் இதழ் தலைமை நிர்வாக அதிகாரி ஜெசிகா சிப்லியும் இருந்தார்.
இந்த பாராட்டுகள் குமட்டலாக இருந்தாலும், அவை முற்றிலும் கணிக்கக்கூடியவையாக இருந்தன. 2016 ஆம் ஆண்டிலும் ட்ரம்ப் டைம் இதழின் “ஆண்டின் சிறந்த நபராக” இருந்தார். மேலும், ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற பெரும்பாலானவர்கள் இதே பாணியில் மகிமைப்படுத்தப்பட்டிருந்தனர். இது, அமெரிக்க ஆளும் வர்க்கத்திற்கு ஒரு அவசியமான சடங்காகும். ஏனெனில், இது தனது “தலைமைத் தளபதி” என்று தேர்ந்தெடுக்கப்பட்ட மனிதருக்கு சட்டபூர்வமான அத்தி இலையை வழங்கி பராமரிப்பதற்கான முயற்சியாகும்.
ஆனால் ட்ரம்புக்கு இப்போது செலுத்தப்பட்டு வரும் மரியாதைகளில் குறிப்பாக நோய்வாய்ப்பட்ட மற்றும் நேர்மையற்ற ஏதோ ஒன்று உள்ளது. டைம் இதழ் ட்ரம்ப் மீது குதூகலிப்பது, ஊடகங்களில் பாசிசவாத ஜனாதிபதியை பொதுவாக “இயல்பாக்குவதின்” பாகமாக உள்ளது. நேற்றுவரை “இருத்தலியலுக்கு அச்சுறுத்தலாக” இருந்த ஒருவர், வெளிப்படையான உடல் மற்றும் மன வீழ்ச்சியிலும், ஊழல் நிறைந்த பாசிச பிற்போக்குவாதியாகவும் இருக்கும் ஒருவர், இப்போது ஒரு உலக வரலாற்று தலைவராக சித்தரிக்கப்படுகிறார்.
“பாசிசம்” மற்றும் “சர்வாதிகாரம்” என்ற வார்த்தைகள், டைம் பத்திரிகையின் 5,000 வார்த்தைகளைக் கொண்ட முகப்புக் கட்டுரையில், அல்லது ட்ரம்ப்புடனான நேர்காணலின் கிட்டத்தட்ட 12,000 வார்த்தைகள் கொண்ட எழுத்து வடிவத்தில் காணப்படவில்லை.
நேர்காணல் செய்பவர்களின் இரண்டு கருத்துக்கள், இந்த நடவடிக்கையின் தன்மையையும், அது அடித்தளமாக கொண்டுள்ள அரசியல் யதார்த்தத்தின் கொடூரமான திரித்தலையும் படம் பிடித்துக் காட்டுகின்றன. “நீங்கள் இரண்டு அரசியல் கட்சிகளையும் மறுசீரமைத்துள்ளீர்கள், அமெரிக்காவை மாற்றிவிட்டீர்கள்” என்று ஒருவர் அறிவிக்கிறார். “வாக்குகளை வெல்வதுபற்றி அல்லது அமெரிக்க மக்களைப் பற்றி நீங்கள் புரிந்து கொள்ள வேண்டிய ஒன்று இருக்க வேண்டும், அதை உங்கள் எதிரிகள் உங்களுக்கு பாராட்டுக்களை வழங்க மாட்டார்கள்.” இதற்கு பின்னர் மற்றொரு நேர்காணல் செய்பவர், “இந்த நாட்டை மாற்றியமைத்த ஒரு சமூக மற்றும் அரசியல் இயக்கத்தை நீங்கள் ஊக்குவித்துள்ளீர்கள்” என்று ட்ரம்பிடம் கூறுகிறார்.
உண்மை என்னவென்றால், ட்ரம்பின் பாசிச வாய்வீச்சு ஒரு பாரிய இயக்கத்தை கீழிருந்து “உற்சாகப்படுத்தவில்லை”. அவரது அரசியல் “மீள்வருகையானது” பாரிய மக்களின் ஆதரவினாலோ, அல்லது அவர் தரப்பில் உள்ள எந்தவொரு அரசியல் மேதமையாலோ இருக்கவில்லை. மாறாக, பெயரளவிலான எதிர்க்கட்சிகளின் முட்டாள்தனம் மற்றும் அவர்களின் திவால்நிலையே இதற்கு காரணமாகும். அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக, தேர்தல்களில் தோற்கடிக்கப்பட்ட, பலவந்தமாக அதிகாரத்தில் ஒட்டிக்கொள்வதற்கு முனைந்து 2021 ஜனவரி 6 ஆட்சிக்கவிழ்ப்பு சதி முயற்சியில் ஈடுபட்ட ஒரு ஜனாதிபதிக்கு, அரசியல்ரீதியாக எந்தவொரு தீவிர விடையிறுப்பையும் வழங்க ஜனநாயகக் கட்சி மறுத்திருந்தது.
தோல்வியுற்ற ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு விடையிறுக்கையில், ஜனாதிபதி ஜோ பைடென் ஒரு “வலுவான குடியரசுக் கட்சியை” பராமரிப்பதே தனது குறிக்கோள் என்று அறிவித்தார். 2021 ஜனவரி 6 அன்று, காங்கிரஸ் கட்டிடமான கேபிட்டோலை உண்மையில் தாக்கிய பாசிச குண்டர்களுக்கு எதிராக அவரது நீதித்துறை அதன் விசாரணைகளை மட்டுப்படுத்தியது. இதற்கிடையே, குடியரசுக் கட்சியிலுள்ள ட்ரம்ப்பினுடைய பரிவாரங்கள் மற்றும் இராணுவ-உளவுத்துறை எந்திரத்தில் உள்ள அவர்களின் ஒழுங்கமைப்பாளர்களும், தூண்டிவிட்டவர்களும், ட்ரம்ப் மீண்டும் அதிகாரத்திற்கு வர சதி செய்ய சுதந்திரமாக இருந்தனர்.
ஜனநாயகக் கட்சித் தலைவர்கள், ரஷ்யா மற்றும் சீனாவை நோக்கி ஆக்கிரோஷமான ஏகாதிபத்திய வெளியுறவுக் கொள்கையைத் தொடர்வதற்கும், விரிவாக்குவதற்கும், உள்நாட்டில் நிதிய தன்னலக்குழுவுக்கு அரசியல் ஏகபோகத்தை அளித்து, தொழிலாள வர்க்க எதிர்ப்பை நசுக்குவதற்கும் இரு கட்சி முறையைத் தக்கவைக்க வேண்டும் என்பதை தெளிவுபடுத்தியுள்ளனர். பதவியில் இருக்கும் கடைசி வாரங்களில் கூட, உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போரைத் தொடர்வதும், மத்திய கிழக்கில் இஸ்ரேல் அரசின் குற்றங்களும், பைடென்-ஹாரிஸ் நிர்வாகத்தின் முதன்மையான முன்னுரிமையாக உள்ளது.
மேலும், ட்ரம்பின் முதன்மையான முன்னுரிமை, அமெரிக்காவிற்குள்ளேயே பொலிஸ்-அரசு உள்கட்டமைப்பை கடுமையாக விரிவுபடுத்துவதன் மூலமும், முதலில் உள்நாட்டுப் போர்முனையை உயர்த்துவதன் மூலமும் ஏகாதிபத்திய உலகப் போருக்குத் தயாராவதாகும். ஆரம்பத்தில் இது புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது, ஒரு மாபெரும் தாக்குதலின் வடிவத்தை எடுத்து, மில்லியன் கணக்கானவர்களை சுற்றி வளைத்து நாடு கடத்துவதாக இருக்கும். ஆனால், இதை நிறைவேற்றுவதற்கு அவசியமான பொலிஸ்-இராணுவ அணிதிரள்வு, உழைக்கும் மக்கள் பிறந்த இடம் எதுவாக இருந்தாலும், ஒட்டுமொத்தமாக அவர்களுக்கு எதிராக திருப்பி விடப்படும்.
டைம் இதழுக்கு ட்ரம்ப் அளித்த பேட்டியின் போது, அமெரிக்காவில் புலம்பெயர்ந்தோர் ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்க-மெக்சிகோ எல்லையை தாண்டியிருந்தாலும் சரி அல்லது தற்காலிகமாக பாதுகாக்கப்பட்ட இருப்பிட அந்தஸ்து போன்ற திட்டங்களின் கீழ் சட்டப்பூர்வமாக நுழைந்திருந்தாலும் சரி, இதனை ஒரு “படையெடுப்பு” என்று விவரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இது வெறும் அலங்காரச் சொற்றொடர் அல்ல. மாறாக, புதிய நிர்வாகம் எடுத்துள்ள அனைத்து அடக்குமுறை நடவடிக்கைகளுக்கான சட்டபூர்வ, அரசியலமைப்பு நியாயப்படுத்தல் ஆகும்.
“போஸ் கொமிடாடஸ்” (Posse Comitatus) எனப்படும் சட்டத் தடையின் கீழ், உள்நாட்டு சட்ட அமுலாக்க நோக்கங்களுக்காக, கூட்டாட்சி துருப்புகளைப் பயன்படுத்துவதற்கான தடை பற்றி ட்ரம்பிடம் கேட்கப்பட்டது. அதற்கு, “நல்லது, அது இல்லை, அது நமது நாட்டின் மீதான படையெடுப்பாக இருந்தால் அது இராணுவத்தை நிறுத்தாது, நான் அதை நமது நாட்டின் மீதான ஒரு படையெடுப்பாக கருதுகிறேன். சட்டம் என்ன அனுமதிக்கிறதோ அதை மட்டுமே நான் செய்வேன், ஆனால் சட்டம் அனுமதிக்கும் அதிகபட்ச மட்டத்திற்கும் நான் செல்வேன்” என்று ட்ரம்ப் பதிலளித்தார்.
கைதிகள் மற்றும் மனநோயாளிகளை அமெரிக்காவிற்கு அனுப்புவதற்காக நாடுகள் தங்களின் சிறைச்சாலைகளை மற்றும் மனநல மருத்துவமனைகளை காலி செய்கின்றன என்ற அவரது நீண்டகாலமாக நிராகரிக்கப்பட்ட பொய்களை ட்ரம்ப் மீண்டும் மீண்டும் கூறினார். மேலும், அவரது தேர்தல் வெற்றியில் பணவீக்கத்தால் ஏற்பட்ட பொருளாதார துயரத்தை விட, குற்றவியல் புலம்பெயர்ந்தவர்களாக கருதப்படுபவர்களுக்கு எதிரான மக்கள் வெறுப்பு மிக முக்கியமானது என்றும் கூறினார். மளிகை பொருட்களின் விலை முக்கியமானது, ஆனால் “அதைவிட பெரிய காரணி என்னவென்றால், எல்லை என்று நான் நம்புகிறேன்” என்றும் குறிப்பிட்டார்.
இதில் உண்மை என்பதற்கு ஒரு சிறிய ஆதாரமும் இல்லை. ஸ்பிரிங்ஃபீல்ட், ஓஹியோ மற்றும் பென்சில்வேனியாவின் சார்லரோய் ஆகிய இடங்களில் ஹைட்டியில் இருந்து குடியேறியவர்களை பேய்த்தனமாக சித்தரிக்கும் ட்ரம்பின் முயற்சிகள் அவரது முகத்தில் வெடித்தன. உள்ளூர் குடியரசுக் கட்சி அதிகாரிகள் கூட புலம்பெயர்ந்தவர்கள் செல்லப்பிராணிகளை சாப்பிட்டார்கள் அல்லது குற்றங்களைச் செய்தார்கள் என்ற அவரது கூற்றுக்களை நிராகரித்தனர். ட்ரம்பின் பாசிச கூட்டாளிகளான ஸ்டீபன் மில்லர் மற்றும் ரொம் ஹோமன் ஆகியோரால் பரிந்துரைக்கப்பட்ட காட்டுமிராண்டித்தனமான அடக்குமுறையைக் காட்டிலும், புலம்பெயர்ந்தோரை மிகவும் மனிதாபிமானத்துடன் நடத்துவதற்கு, கணிசமான மக்களின் பெரும்பான்மையான ஆதரவு இருப்பதாக கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவில் இருந்து விரைவில் நாடு கடத்தப்படுவார்கள் என்பதால், புலம்பெயர்ந்தவர்களுக்காக பாரிய தடுப்பு முகாம்களை அமைக்க வேண்டிய அவசியமில்லை என்ற ட்ரம்பின் அறிவிப்பை ஏற்றுக்கொண்ட டைம் இதழ், இதைப் பற்றி எதுவும் கூறவில்லை. தொழிலாள வர்க்க சுற்றுப்புறங்களில் “சட்டவிரோதமாக” இருப்பவர்களைத் தேடும் பாரிய வேட்டையாடுதல்களின் தாக்கம் குறித்தோ அல்லது அதுபோன்ற நோக்கங்களுக்காக அமெரிக்க இராணுவத்தை நிலைநிறுத்துவதன் தாக்கங்கள் குறித்தோ பத்திரிகையாளர்கள் ட்ரம்பிடம் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை.
அதேநேரத்தில், எந்தவொரு குறிப்பிடத்தக்க கட்டுப்பாடும் இல்லாமல் ஆட்சி செய்ய அவருக்கு உதவக்கூடிய ஒரு மக்கள் ஆணை குறித்த ட்ரம்பின் வாதங்களை அந்த இதழ் சவாலுக்கு உட்படுத்தாமல் விட்டுவைத்தது. “மக்கள் ஆணை மிகப்பெரியது,” என்று அவர் அறிவித்தார். “பல நூறு ஆண்டுகளில் நாங்கள் சந்தித்த மிகப்பெரிய தேர்தலில் நான் வெற்றி பெற்றேன்” என்று அவர் குறிப்பிட்டார்.
உண்மையில், ட்ரம்ப் மக்கள் வாக்குகளில் 50 சதவீதத்திற்கும் சற்று குறைவான வித்தியாசத்தில் வென்றார். இது வரலாற்று ரீதியாக, வெற்றிபெற்ற அமெரிக்க ஜனாதிபதிகளிலும் பார்க்க கீழ் பாதியில் உள்ளது. மேலும் அவர், 2020ல் பைடென் அல்லது 2008 மற்றும் 2012ல் ஒபாமாவை விடவும், 2004ல் ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்ஷை விடவும் மிகக் குறைவான முன்னிலையிலேயே இருந்தார். செனட்டில் 53-47, பிரதிநிதிகள் சபையில் 220-215 என்ற விகிதத்தில் அவரது கட்சி காங்கிரஸைக் கட்டுப்படுத்துகிறது. அமெரிக்காவில் செனட் தேர்தல் நடைபெற்ற ஐந்து முக்கிய மாநிலங்களில், அதிபர் தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற்றாலும், குடியரசுக் கட்சியினர் 4ல் தோல்வியடைந்தனர்.
இந்த உண்மைகள் மற்றும் புள்ளிவிபரங்கள் எதுவுமே, பெருநிறுவன ஊடகங்கள் ட்ரம்பின் “அரசியல் மூலதனத்தை” புகழ்வதில் இருந்து தடுத்து நிறுத்தப் போவதில்லை அல்லது அவர் வெல்லமுடியாத மக்கள் ஆதரவு என்று சொல்லப்படுவதற்கு முன்னால் ஜனநாயகக் கட்சியினர் மண்டியிடுவதிலிருந்து அவர்களைத் தடுத்து நிறுத்தப் போவதில்லை. ஆனால், ட்ரம்ப் தனது டைம் நேர்காணலில் கோடிட்டுக் காட்டிய கொள்கைகள், குறிப்பாக, செல்வந்தர்களுக்கு வரி விலக்கு, அமெரிக்காவின் பெருநிறுவனங்களின் கட்டுப்பாடுகளை நீக்குதல், 2021 ஜனவரி 6 அன்று, காங்கிரஸ் கட்டிடமான கேபிட்டலை தாக்கியவர்களுக்கு முழு மன்னிப்பு, அவரது அரசியல் எதிரிகளை துன்புறுத்துதல், புலம்பெயர்ந்தோர் மீதான போரை பற்றி எதுவும் கூற முடியாது என்பது, கீழிருந்து தொழிலாள வர்க்கத்தின் சக்திவாய்ந்த எதிர்ப்பைச் சந்திக்கும்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பப்பட்ட NBC உடனான தனது நேர்காணல் மற்றும் டைம் உடனான தனது நேர்காணல் ஆகிய இரண்டிலும், பணவீக்கத்தில், குறிப்பாக மளிகைப் பொருட்களின் விலையில் எந்தக் குறைப்பையும் தன்னால் உறுதிப்படுத்த முடியாது என்பதை ஒப்புக்கொள்வதன் மூலம் ட்ரம்ப் ஏற்கனவே இதை முன்னறிவித்தார்.
பங்குச் சந்தையில் பேசுகையில், “இதுவரை யாரும் கண்டிராத பொருளாதாரத்தை வழங்குவேன்” என்று ட்ரம்ப் CNBC யிடம் கூறினார். தொழிலாள வர்க்கத்தின் இழப்பில், புதைபடிவ எரிபொருள் தொழில்துறை, கிரிப்டோகரன்சி ஊக வணிகர்கள் மற்றும் நிதி மூலதனம் ஆகியவற்றின் அதிர்ஷ்டத்தை ட்ரம்ப் உயர்த்துவதன் மூலம் உண்மையில் ட்ரம்ப் இதனை செய்வார். இதன் விளைவு பல தலைமுறைகளில் காணப்படாத அளவிற்கு வர்க்கப் போராட்டம் வெடிக்கும் வகையில் தீவிரமடையும்.