முன்னோக்கு

பிரெஞ்சு அரசாங்கத்தின் வீழ்ச்சியும் புதிய மக்கள் முன்னணியின் திவால்தன்மையும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

கடந்த புதன்கிழமை, பிரான்சின் தேசிய நாடாளுமன்றம், 2025 வரவு-செலவுத் திட்டத்தை தணிக்கை செய்த பின்னர், பிரதம மந்திரி மிஷேல் பார்னியேரின் செல்வாக்கற்ற சிறுபான்மை அரசாங்கம் வீழ்ச்சியடைந்தது. கடந்த ஜூலையில் இடம்பெற்ற முன்கூட்டிய தேர்தல்களைத் தொடர்ந்து பார்னியே அரசாங்கத்தை அமைத்த ஜனாதிபதி இமானுவல் மக்ரோனுக்கு இது ஒரு பெரிய அரசியல் அடியாகும். பிரெஞ்சு மக்களில் மூன்றில் இரண்டு பங்கினர் இப்போது மக்ரோனின் இராஜினாமாவுக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், பொதுமக்களின் அதிருப்தி மேலும் அதிகரித்து வருகிறது.

ஜோன்-லூக் மெலோன்சோன் தேசிய நாடாளுமன்றத்தில் உரைகளைக் கேட்டுக்கொண்டிருக்கிறார். பாரிஸ், டிசம்பர் 4, 2024 [AP Photo/Michel Euler]

மக்ரோன் மிகவும் வெறுக்கப்படுகிறார். அவரது கொடூரமான ஓய்வூதிய வெட்டுக்கள், பாரிய வேலைநிறுத்தங்கள் மீதான வன்முறையான அடக்குமுறை, ரஷ்யாவை எதிர்த்துப் போரிட பிரெஞ்சு துருப்புக்களை உக்ரேனுக்கு அனுப்புவதற்கான அழைப்புகள் மற்றும் காஸாவில் இஸ்ரேலிய ஆட்சியின் இனப்படுகொலைக்கு வெளிப்படையான ஆதரவு ஆகியவை பெரும் எதிர்ப்பைத் தூண்டி உள்ளன. இருப்பினும், பார்னியேரின் வீழ்ச்சியால் பலப்படுத்தப்பட்ட அரசியல் சக்திகள் இடதுபுறத்தில் அல்ல, மாறாக வலதுபுறத்தில் உள்ளன.

மரின் லு பென்னின் அதிவலது தேசிய பேரணி (RN – National Rally) அதன் ஆதரவை விலக்கிக் கொண்டு, ஜோன்-லூக் மெலோன்சோனின் புதிய மக்கள் முன்னணி (NFP – New Popular Front) அறிமுகப்படுத்திய ஒரு தணிக்கை தீர்மானத்தை ஆதரித்ததை அடுத்து பார்னியேரின் அரசாங்கம் கவிழ்ந்தது. பிரெஞ்சு ஊடகங்கள், இப்போது இஸ்ரேலிய இனப்படுகொலை ஆட்சியினதும், அமெரிக்காவின் பாசிச ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்ப்பினதும் முதன்மையான பிரெஞ்சு கூட்டாளிகளான RN மீது கவனம் செலுத்தி வருகின்றன. லு பென்னின் கட்சியான RN, மக்ரோனைக் கவிழ்ப்பதற்கான அதன் தயார்நிலையை சமிக்ஞை செய்கின்ற அதேவேளையில், பிரெஞ்சு அரசியலில் தீர்மானகரமான சக்தியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது.

பார்னியேரின் வீழ்ச்சிக்கு மத்தியில் அதிவலதுகள் பலமடைந்திருப்பது, தொழிலாளர்களை முடக்க முனைந்து வரும் NFP இன் திவால்நிலையின் நேரடி விளைவாகும். மக்ரோன் இராஜினாமா செய்ய வேண்டுமென மெலோன்சோன் பிரச்சாரம் செய்து வருகின்ற நிலையில், நிதி அமைச்சக அதிகாரத்துவவாதி லூசி காஸ்டெட்ஸ் (Lucie Castets) தலைமையிலான புதிய மக்கள் முன்னணி தலைமையிலான ஒரு அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க தேசிய நாடாளுமன்றத்திற்கு அழைப்பு விடுப்பதோடு மெலோன்சோன் தன்னை மட்டுப்படுத்திக் கொண்டுள்ளார்.

மெலோன்சோன் 2022 ஜனாதிபதித் தேர்தலில் 8 மில்லியன் வாக்குகளைப் பெற்று, பிரான்சின் அனைத்து பெரிய நகரங்களிலுள்ள தொழிலாள வர்க்க சுற்றுப்புறங்களில் மேலாதிக்கம் செலுத்தினார். இந்த வாக்காளர்களை அணிதிரட்டும் வேலைநிறுத்த இயக்கம் பிரெஞ்சு பொருளாதாரத்தை முடக்கிவிடும். ஆயினும்கூட, கடந்த இரண்டு ஆண்டுகளில் ஒருமுறை கூட, மக்கள் விருப்பத்துக்கு எதிராக மக்ரோனின் தொடர்ச்சியான மீறல்களுக்கு சவால் விடும் வகையில், ஒரு வெகுஜன அணிதிரட்டலுக்கு மெலன்சோன் அழைப்பு விடுக்கவில்லை.

மக்ரோனின் ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிராக கடந்த ஆண்டில் இடம்பெற்ற பாரிய வேலைநிறுத்தங்களின் போது, தொழிற்சங்க பேரணிகளில் கலந்து கொள்வதோடும் மற்றும் மறுபரிசீலனை செய்யுமாறு அவரிடம் பணிவுடன் ஒரு பரிதாபகரமான கடிதம் எழுதுவதோடும் புதிய மக்கள் முன்னணி அதன் தலையீட்டை மட்டுப்படுத்திக் கொண்டது. மில்லியன் கணக்கானவர்கள் மக்ரோனுக்கு எதிராக அணிவகுத்தனர். பிரெஞ்சு மக்களில் மூன்றில் இரண்டு பங்கினர், ஒரு பொது வேலைநிறுத்தத்தைக் கொண்டு பொருளாதாரத்தை முடக்கி, வெட்டுக்களை நிறுத்த விரும்பியதை கருத்துக்கணிப்புகள் எடுத்துக்காட்டின. ஆனால் மக்ரோனின் வெட்டுக்கள் சட்டமாக பிரகடனப்படுத்தப்பட்ட பின்னர் தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் போராட்டங்களை நிறுத்திய நிலையில், NFP மௌனமாக இருந்தது.

இந்தாண்டு, முன்கூட்டிய தேர்தல்களுக்கு மக்ரோன் அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து, மெலோன்சோன் அவரது அடிபணியா பிரான்ஸ் கட்சி (LFI), பெருநிறுவன சோசலிஸ்ட் கட்சி (PS), ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி (PCF), பசுமைக் கட்சி மற்றும் நடுத்தர வர்க்க பப்லோவாத புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி ஆகியவற்றுக்கு இடையிலான ஒரு கூட்டணியான புதிய மக்கள் முன்னணியை உருவாக்கினார். சோசலிஸ்ட் கட்சியின் முன்னாள் ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட் போன்ற மதிப்பிழந்த பிரமுகர்களுடனான இந்த சந்தர்ப்பவாத கூட்டணி, உக்ரேனுக்கு துருப்புகளை அனுப்புவது மற்றும் சட்ட அமுலாக்க மற்றும் உளவுத்துறை முகமைகளைப் பலப்படுத்துவது என்ற வாக்குறுதிகள் உட்பட முற்றிலும் வலதுசாரி திட்டநிரலை அடிப்படையாகக் கொண்டிருந்தது.

இந்தத் தேர்தலில், LFI தனது நூற்றுக்கணக்கான வேட்பாளர்களை PS மற்றும் மக்ரோன் சார்பு வேட்பாளர்களுக்கு ஆதரவளிப்பதற்காக திரும்பப் பெற்றுக் கொண்டது. இந்தக் கூட்டணி அதிவலதுகளை தடுக்கும் என்று கூறியது. இவ்விதத்தில் நூற்றுக்கணக்கான மக்ரோன்-ஆதரவு அல்லது சோசலிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு மெலோன்சோன் உதவினார். தேர்தல்கள் ஒரு தொங்கு நாடாளுமன்றத்தை விளைவித்த போது, மக்ரோன் உடனடியாக NFP உடனான தனது கூட்டணியைக் கைவிட்டு, அதிவலது RN பக்கம் திரும்பினார். மேலும் NFP ஆரம்பத்தில் பார்னியே அரசாங்கத்தில் உத்தியோகபூர்வமாக இணையாமலேயே அதை ஆதரிக்க உடன்பட்டது.

மக்ரோன் மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை தடுப்பதன் மூலமாக, புதிய மக்கள் முன்னணி, அதி வலது லு பென்னைப் பலப்படுத்தியது. இது, “இடதுகள்” வங்கிகளின் ஒரு கருவியாக இருப்பதாக கண்டனம் செய்வதற்கும், அடுத்தடுத்து வந்த சோசலிஸ்ட் கட்சி தலைமையிலான அரசாங்கங்களால் நடத்தப்பட்ட சமூக தாக்குதல்களால் ஏற்பட்ட கசப்புணர்வால் RN க்கு வாக்களிக்கும் மில்லியன் கணக்கான தொழிலாளர்களிடையே ஆதரவைப் பலப்படுத்துவதற்கும் லு பென்னை அனுமதித்திருக்கிறது.

அமெரிக்காவில், ட்ரம்ப் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து முதலாளித்துவ அரசியலின் பரந்த உலகளாவிய மறுசீரமைப்பை பிரதிபலிக்கும் வகையில், கடந்த வாரம் பார்னியேக்கான ஆதரவை RN திடீரென விலக்கிக் கொண்டது. சமீப நாட்களில், ரஷ்யாவிற்கு எதிராக நேட்டோ ஆதரவுடன் கூடிய ஏவுகணைத் தாக்குதல்களை உக்ரேன் நடத்தியது, தென் கொரியாவின் ஜனாதிபதி இராணுவச் சட்டத்தை கைவிடும் அறிவிப்பை வெளியிட்டார், ஜேர்மன் மற்றும் பிரெஞ்சு அரசாங்கங்கள் இரண்டுமே வீழ்ச்சி கண்டன. ட்ரம்பின் மறுதேர்வானது, இராணுவ விரிவாக்கம், பாரிய நாடுகடத்தல்கள் மற்றும் 2 டிரில்லியன் டாலர் சிக்கன நடவடிக்கைகளுக்கான திட்டங்களால் குறிக்கப்பட்டது. மேலும், இவை அனைத்தும், தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான முதலாளித்துவ வர்க்கப் போரின் ஒருங்கிணைந்த உலகளாவிய விரிவாக்கத்தை சமிக்ஞை செய்கிறது.

இந்த உள்ளடக்கத்தில், அடிபணியா பிரான்ஸ் போன்ற போலி-இடது கட்சிகள் அதிவலதுகளைப் பலப்படுத்தி, தொழிலாள வர்க்க எதிர்ப்பைத் தடுக்கவும், அதன் நோக்குநிலையை பிறழச் செய்யவும் சேவையாற்றி வருகின்றன. உண்மையில், 2022 ஜனாதிபதி தேர்தல்களின் போது, மெலோன்சோன் மக்ரோன் அல்லது லு பென்னின் கீழ் பிரதம மந்திரியாக சேவையாற்றுவதற்கு சூளுரைத்தார். நவ-பாசிசம் பற்றிய அவரது பார்வை 1970 களில் இருந்து மாறிவிட்டது. “தேசிய முன்னணிக்கு [தேசிய பேரணியின் முன்னோடி] எதிரான போராட்டத்தின் ஆரம்பத்திலேயே நான் மிகவும் கடுமையான நிலைப்பாட்டை எடுத்தேன். கடந்த காலத்தால் ஈர்க்கப்பட்டு, நாம் அவர்களை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று சொன்னேன்... இப்போது அந்தக் கேள்வி எனக்கு எழவில்லை” என்று மெலோன்சோன் குறிப்பிட்டார்.

முதலாளித்துவம் மீண்டும் ஒருமுறை உலகப் போர், இனப்படுகொலை மற்றும் அதிதீவிர வலதுசாரிகளின் பிற்போக்குத்தனத்திற்குள் மூழ்கும்போது, இத்தகைய கருத்துக்கள் நினைவுகூரத்தக்க வகையில் பிற்போக்குத்தனமானவை மற்றும் முட்டாள்தனமானவையாக இருக்கின்றன.

தொழிலாள வர்க்கத்தின் ஒரு சோசலிச அரசியல் தாக்குதல் மட்டுமே, ஆதாள பாதாளத்துக்குள் இறங்கும் முதலாளித்துவத்தை தடுத்து ஒழிப்பதற்கான ஒரே வழியாகும். ஆளும் வர்க்கத்தின் நிகழ்ச்சி நிரலை எதிர்த்துப் போராட, சமூகத்தில் கொதித்துக் கொண்டிருக்கும் பிரமாண்டமான சமூக எதிர்ப்பை நேரடியாக வெளிப்படுத்தும் கோரிக்கைகளை முன்வைத்து, சாமானிய தொழிலாளர்களால் வேலைநிறுத்தங்களும் போராட்டங்களும் ஒழுங்கமைக்கப்பட்டு தலைமை கொடுக்கப்பட வேண்டும். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரெஞ்சுப் பிரிவான சோசலிச சமத்துவக் கட்சி பின்வரும் அவசர கோரிக்கைகளை முன்வைக்கிறது:

ரஷ்யா, ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கிற்கு எதிரான ஏகாதிபத்திய போர்களை நிறுத்து! நேட்டோவை அகற்று!

நேட்டோவின் ஆயுதங்கள் மூலம் ரஷ்யா மீதான குண்டுவீச்சு மற்றும் உக்ரேனுக்கு பிரெஞ்சு துருப்புக்களை அனுப்ப மக்ரோனின் அழைப்பு ஆகியவை அணுஆயத சக்திகளுக்கு இடையே ஒரு முழுமையான போரைத் தூண்டும் அச்சுறுத்தலைக் கொண்டுள்ளன. ஆபிரிக்காவில் பிரான்சின் நவ-காலனித்துவ போர்களைப் போலவே, ரஷ்யா மற்றும் மத்திய கிழக்குக்கு எதிரான நேட்டோவின் போர் நிறுத்தப்பட வேண்டும். கடந்த ஆண்டு மக்ரோனால் திணிக்கப்பட்ட பரந்த இராணுவ வரவுசெலவுத் திட்டமும், அதற்கு நிதியளிப்பதற்காக ஓய்வூதியம் மீதான வெட்டுக்களும் ரத்து செய்யப்படவேண்டும். நேட்டோவை அகற்றுவதற்கான தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச போராட்டத்தின் ஒரு பகுதியாக, பிரான்ஸ் நேட்டோவை விட்டு வெளியேற வேண்டும்.

காஸா இனப்படுகொலையையும், இனப்படுகொலையை எதிர்ப்பவர்கள் மீதான துன்புறுத்தலையும் நிறுத்து!

காஸா மீது ஒரு இனப்படுகொலை தாக்குதலை நடத்தி வரும் இஸ்ரேலிய ஆட்சிக்கான ஆயுத உற்பத்தி மற்றும் வினியோகத்தை தடுக்க பிரான்சிலும் மற்றும் உலகெங்கிலுமான தொழிலாளர்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். பயங்கரவாதம் அல்லது யூத-எதிர்ப்புவாதம் என்ற போலிக் குற்றச்சாட்டுக்கள் மூலமாக இந்த இனப்படுகொலையை எதிர்ப்பவர்கள் மீதான ஒடுக்குமுறை முடிவுக்கு கொண்டுவரப் வேண்டும். போராட்டக்காரர்களுக்கு எதிரான அனைத்து அபராதங்களும், சிறைத் தண்டனைகளும், ஏனைய தண்டனை நடவடிக்கைகளும் இரத்து செய்யப்பட வேண்டும். போர்க்குற்றங்களுக்குப் பொறுப்பான இஸ்ரேலிய அதிகாரிகளுடன், இக்கொடூரங்களுக்கு உடந்தையாக இருந்துவரும் பிரெஞ்சு, நேட்டோ அதிகாரிகளும் சர்வதேச நீதிமன்றங்களில் விசாரணைக்கு உட்படுத்தி தண்டிக்கப்பட வேண்டும்.

ஐந்தாவது குடியரசின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்போம்!

பிரான்சின் வங்கிகளும், பெருநிறுவனங்களும் வன்முறையான பொலிஸ் அடக்குமுறை, வேலைநிறுத்தம் செய்பவர்களை பெருமளவில் கைது செய்தல் மற்றும் சர்வாதிகாரச் சட்டங்கள் மூலம் தங்கள் ஆட்சியை திணித்து வருகின்றன. 1958 அரசியலமைப்பின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையானது, இந்த அடக்குமுறையின் ஜனநாயக விரோத நரம்பு மண்டலத்தின் மையமாகும். இது பாராளுமன்றத்தை இடைநிறுத்தக்கூடிய மற்றும் அடிப்படை உரிமைகளை மீறக்கூடிய சர்வாதிகார அதிகாரங்களை குவித்து வைத்திருக்கிறது. மக்ரோனின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான போராட்டத்தில், (மக்ரோனின் கீழ் இருந்தாலும் சரி அல்லது RN இன் கீழ் இருந்தாலும் சரி) ஒரு பாசிச சர்வாதிகாரத்திற்கான அடித்தளமாக அச்சுறுத்தும் இந்த நிறுவனத்தை ஒழிப்பதற்கான போராட்டமும் இருக்க வேண்டும்.

தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்திற்காக, புலம்பெயர்ந்தவர்கள் மீதான துன்புறுத்தலை நிறுத்து!

ஆளும் வர்க்கம் தேசியவாதத்தின் மூலமாக தொழிலாளர்களை பிளவுபடுத்த முயல்கிறது. பாரியளவிலான நாடுகடத்தலுக்கு அழைப்புவிடும் RN ஐ தொழிலாளர்கள் நிராகரிக்க வேண்டும். மேலும், தஞ்சம் கோருவோருக்கான உரிமைகளை மறுக்கும் ஐரோப்பிய ஒன்றிய சட்டங்கள், பாரிய தடுப்புக்காவல் முகாம்கள், மற்றும் முஸ்லீம் மத உடைகள் மீதான பிரான்சின் இனவாத தடைகள் உள்ளிட்ட மக்ரோன் மற்றும் புதிய மக்கள் முன்னணி ஆதரிக்கும் புலம்பெயர்ந்தோர்-விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக தொழிலாளர்கள் போராட வேண்டும். பெருந்திரளான மக்களை நாடு கடத்துவதற்கான ட்ரம்பின் பாசிசவாத திட்டங்களை பிரதிபலிக்கும் இத்தகைய கொள்கைகளுக்கு எதிராக, சர்வதேச தொழிலாள வர்க்கம் ஒன்றுபட்டு நிற்க வேண்டும். புலம்பெயர்ந்தவர்களைப் பாதுகாப்பதென்பது, உலகத் தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்திற்கான போராட்டத்தில் ஒரு இன்றியமையாத கூறுபாடாகும்.

வேலைகள் மற்றும் சமூக திட்டங்களுக்கு பில்லியன் கணக்கான யூரோக்களை ஒதுக்கு! வங்கிப் பிணையெடுப்புகளைப் பறிமுதல் செய்!

பாரிய வேலைநீக்கங்கள் அதிகரித்து வருகின்ற நிலையிலும், பிரான்ஸ் மற்றும் ஐரோப்பா எங்கிலும் நூறாயிரக் கணக்கானவர்கள் வேலை வெட்டுக்களுக்கு முகங்கொடுத்து வருகின்ற நிலையிலும், சமூகத்தின் மீதான வங்கிகளின் இரும்புப்பிடியை உடைத்தெறிய வேண்டும். வேலைகள், சுகாதாரம் மற்றும் கல்விக்கு நிதியளிக்க பணம் இல்லை என்ற ஆளும் வர்க்கத்தின் பொய்யை தொழிலாளர்கள் நிராகரிக்க வேண்டும். சமூக திட்டங்களுக்கான ஆதார வளங்கள் இருக்கின்றன — அவை பல தசாப்த கால வங்கி பிணையெடுப்புகள் மூலமாக பொது நிதிகளைச் சூறையாடிய நிதியியல் பிரபுத்துவத்தால் பதுக்கி வைக்கப்பட்டுள்ளன. சமூகத்தின் செல்வவளம் தனியார் இலாபத்திற்காக அல்லாமல், மனிதயின தேவைகளைப் பூர்த்தி செய்ய பயன்படுத்தப்படுவதை உறுதிப்படுத்த, இந்த முறைகேடாக ஈட்டப்பட்ட ஆதாயங்களை பறிமுதல் செய்து, ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ் பிரதான பெருநிறுவனங்கள் தேசியமயமாக்கப்பட வேண்டும்.

ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளுக்காக

போர், இனப்படுகொலை மற்றும் சமூக பிற்போக்குத்தனத்தை எதிர்க்கும் பிரான்சில் உள்ள தொழிலாளர்களின் கூட்டாளிகள், சர்வதேச அளவில் இருக்கும் அவர்களது வர்க்க சகோதர சகோதரிகள் ஆவர். ஒரு தேசிய முன்னோக்கிற்காக வாதிட்டுவரும் பிரெஞ்சு தொழிற்சங்க அதிகாரத்துவத்தினரும், பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒரு உண்மையான போராட்டத்தை தடுப்பார்கள். முதலாளித்துவ ஐரோப்பிய ஒன்றியத்தை, ஐரோப்பிய சோசலிச அரசுகளின் ஒன்றியத்தைக் கொண்டு பிரதியீடு செய்து, பிரான்சிலும், ஐரோப்பா எங்கிலும் மற்றும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்திற்கு அதிகாரத்தைக் கைமாற்றுவதற்கான அவர்களின் சொந்த சாமானிய தொழிலாளர் போராட்ட அமைப்புகளையும் மற்றும் ஒரு அரசியல் இயக்கத்தையும் கட்டியெழுப்புவதே தொழிலாளர்களுக்கான முன்னோக்கிய பாதையாகும்.

பிரான்சிலும் உலகெங்கிலும் உள்ள நிகழ்வுகள் தொழிலாள வர்க்கத்திடம் இருந்து ஒரு தைரியமான மற்றும் புரட்சிகரமான பதிலைக் கோருகின்றன. தேசியவாதம் மற்றும் சீர்திருத்தவாதத்தின் திவாலான கொள்கைகளில் இருந்து முறித்துக் கொண்டு, சமுதாயத்தின் சோசலிச மாற்றத்திற்காக போராடுவதே முன்னோக்கிய பாதையாகும்.

Loading