மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
கடந்த புதன் கிழமை, பிரான்சின் பிரதம மந்திரி மிஷேல் பார்னியே முன்மொழிந்த சமூக பாதுகாப்பு வரவு-செலவு திட்டக்கணக்கை தணிக்கை செய்து, அவரது அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு 577 பிரதிநிதிகளைக் கொண்ட தேசிய நாடாளுமன்றத்தில், 332 வாக்குப் பெரும்பான்மையுடன் வாக்களித்துள்ளனர். மரின் லு பென்னின் தேசிய பேரணி (RN) மற்றும் ஜோன்-லூக் மெலோன்சோன் தலைமையிலான புதிய மக்கள் முன்னணி (NFP) கூட்டணியின் பிரதிநிதிகள் பார்னியேக்கு எதிராக வாக்களித்தனர். ஒரு புதிய பிரதமருக்கான ஒரு விரைவான தேடலை தொடங்கவிருப்பதாக மக்ரோன் அன்றிரவே அறிவித்தார்.
இது, ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனுக்கு பெரும் தோல்வியாகும். அவர் கடந்த ஜூலை 7ம் தேதி, நாடாளுமன்றத்தை கலைத்து திடீர் தேர்தலுக்கு அழைப்பு விடுத்தார். ஆனால், அவை ஒரு தொங்கு பாராளுமன்றத்தை உருவாக்கின. அதிக வாக்குகளைப் பெற்ற புதிய மக்கள் முன்னணியுடன் (NFP) ஒரு அரசாங்கத்தை அமைப்பதற்கு மறுத்த அவர், பார்னியே தலைமையிலான தனது ஆதரவாளர்களைக் கொண்ட ஒரு சிறுபான்மை அரசாங்கத்தை அமைத்தார். மேலும், நாடாளுமன்றத்தில் அதன் கொள்கைகளை ஆதரிப்பதாக மரின் லு பென்னின் தேசிய பேரணியிடம் (RN) இருந்து உறுதிமொழியைப் பெற்றார். ஆனால், பார்னியேரின் வரவு-செலவு திட்டக்கணக்கு சிக்கன நடவடிக்கைகளுடன் போதுமானளவுக்கு செல்லவில்லை என்று கடந்த வாரம் நிதியியல் சந்தைகள் மற்றும் பத்திரிகைகளிடம் இருந்து வந்த விமர்சனத்திற்கு உள்ளான நிலையில், RN தனது போக்கை மாற்றிக் கொண்டது.
பார்னியே தனது அரசாங்கத்தில் அவற்றைச் சேர்க்க மறுத்ததால், நம்பிக்கையில்லா தீர்மானங்கள் கொண்டுவரப்படும் என்று NFP நீண்டகாலமாக அச்சுறுத்தி வந்தது. எவ்வாறிருப்பினும், நேற்று NFP இன் கண்டனத் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்கப் போவதாக கடந்த வாரம் அறிவித்ததன் மூலம் RN பார்னியேரை பதவியிலிருந்து இறக்கியது.
தொழிலாளர்கள் சரியாகவே பார்னியே அரசாங்கத்தை வெறுத்தனர். மேலும், அவர்கள் எதிர்கொள்ளும் முக்கியமான கேள்வி அதன் வீழ்ச்சிக்குப் பிறகு ஒரு அரசியல் தாக்குதலை எவ்வாறு வளர்ப்பது என்பதுதான். பாரிஸ் மக்களின் எதிர்ப்பை மீறி உக்ரேனுக்கு தரைப்படைகளை அனுப்புவதாக அச்சுறுத்தி, இராணுவ மற்றும் பொலிஸ் வரவு செலவுத் திட்டங்களை அதிகப்படுத்திய அதே வேளையில், பெரும்பாலும் சமூகத் திட்டங்களை இலக்காகக் கொண்டு, 60 பில்லியன் யூரோக்கள் செலவின வெட்டுக்களை சுமத்தியுள்ளது. பிரெஞ்சு மக்களில் 52 சதவீதம் பேர் பார்னியே வீழ்ச்சியடைய வேண்டும் என்றும், 63 சதவீதம் பேர் மக்ரோன் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் விரும்புவதாக கருத்துக்கணிப்புகள் காட்டுகின்றன.
மக்ரோனை வீழ்த்துவதற்கும் பரவலாக வெறுக்கப்படும் அவரது கொள்கைகளை நிறுத்துவதற்கும், ரஷ்யாவுக்கு எதிரான நேட்டோ போர் விரவாக்கத்துக்கான திட்டங்கள், அவரது பாரிய ஓய்வூதிய வெட்டுக்கள் போன்ற சிக்கன கொள்கைகள், பொலிஸ் வன்முறை மற்றும் காஸா இனப்படுகொலைக்கான ஆதரவு ஆகியவற்றை நிறுத்துவதற்கும் தொழிலாள வர்க்கத்தில் ஒரு இயக்கம் தயாரிப்பு செய்யப்பட்டு கட்டியெழுப்பப்பட வேண்டும். இதை பிரெஞ்சு முதலாளித்துவ ஸ்தாபனத்திடம் விட்டுவிட முடியாது. முன்னோக்கி செல்லும் முற்போக்கான வழி, வர்க்கப் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, கீழ்நிலையில் இருந்து ஒரு இயக்கத்தைக் கட்டியெழுப்புவதாகும்.
அனைத்து பிரதான நேட்டோ சக்திகளும் ரஷ்யாவுக்கு எதிரான போர் அச்சுறுத்தல்களைத் தீவிரப்படுத்தி வருகின்ற நிலையிலும், நிதியியல் சந்தைகள் பிரான்சில் மட்டுமல்லாது ஐரோப்பா எங்கிலும் சிக்கன நடவடிக்கைகளைக் கோரி வருகின்ற நிலையிலும், தொழிலாளர்கள் ஒரு தேசிய போராட்டத்துக்கு அல்லாமல், மாறாக ஒரு சர்வதேச போராட்டத்திற்கு முகங்கொடுக்கின்றனர் என்பது தெளிவாகிறது. இது அமெரிக்க ஜனாதிபதியாக பாசிஸ்ட் டொனால்ட் ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து மிகவும் அப்பட்டமான வெளிப்பாட்டை எடுக்கிறது. மலைப்பூட்டும் வகையில் 2 ட்ரில்லியன் டாலர் சிக்கன நடவடிக்கைகளுக்கும், மில்லியன் கணக்கான புலம்பெயர்ந்தோரை பொலிஸ் சுற்றி வளைப்பதற்கும், மற்றும் மத்திய கிழக்கில் போரைத் தீவிரப்படுத்துவதற்கும் சூளுரைத்து, தொழிலாளர்கள் மீது வர்க்கப் போரைப் பாரியளவில் விரிவாக்க ட்ரம்ப் தயாராக உள்ளார்.
ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டதற்குப் பின்னர் சர்வதேச அளவில் முதலாளித்துவ அரசியல் துரிதமாக மறுவடிவம் பெற்று வருகிறது: ஐரோப்பாவில் முதலில் ஜேர்மன் அரசாங்கமும் இப்போது பிரெஞ்சு அரசாங்கமும் வீழ்ச்சி அடைந்துள்ளன. கடந்த செவ்வாயன்று தென் கொரியாவில் இராணுவச் சட்டத்தைத் திணிப்பதற்கான ஒரு முயற்சி தோல்வியடைந்தது.
பார்னியேரின் வீழ்ச்சிக்குப் பின்னர், பிரெஞ்சு முதலாளித்துவ வர்க்கம் மேலும் மேலும் வெளிப்படையாக நவ-பாசிசவாத RN ஐ முன்னுக்குக் கொண்டு வருகிறது. உண்மையில், பிரதான நேர தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த முதல் அரசியல்வாதியாக RN கட்சியின் தலைவர் மரின் லு பென் இருந்தார். TF1 மாலை செய்திகளில் தோன்றிய லு பென், பிரெஞ்சு மக்களின் பாதுகாவலராகவும், ஓய்வூதிய வெட்டுக்கள் மற்றும் மருந்து செலவுகள் அதிகரிப்புக்கு எதிர்ப்பாளராகவும், நலிவடைந்த மனிதரின் நண்பராகவும் காட்டிக் கொண்டார்.
RN மற்றும் NFP இரண்டும் உட்பட ஆளும் உயரடுக்கில் உள்ள மக்ரோனின் போட்டியாளர்களின் அரசியல் நிலைப்பாடு குறித்து கூர்மையான எச்சரிக்கைகள் செய்யப்பட வேண்டும். லு பென்னின் அரசியல், ட்ரம்பைப் போலவே, தீவிரமடைந்து வரும் உலகளாவிய போர் மற்றும் உலக முதலாளித்துவ அமைப்புமுறையின் பொருளாதார முறிவால் தீர்மானிக்கப்படுகிறது. சிக்கன நடவடிக்கைகள் மற்றும் போருக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் ஒரு போராட்டம் இல்லாமல், அடுத்த அரசாங்கம், பிரான்சின் 3 ட்ரில்லியன் யூரோ கடனுக்கு சேவை செய்வதற்கும் மற்றும் உக்ரேன் மற்றும் மத்திய கிழக்கில் ரஷ்யாவுக்கு எதிராக விரிவாக்கப்பட்டுவரும் போருக்கு சேவை செய்வதற்கும் நிதிகளைத் திருப்பிவிடுவதால், இது தொழிலாளர்கள் மீது பாரிய சிக்கன நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும்.
ஆயினும், லு பென் தன்னை மக்களின் நண்பராக காட்டிக் கொண்டு, பின்வருமாறு அறிவித்தார்: “பிரெஞ்சுக்காரர்களைப் பாதுகாப்பதே நாங்கள் தேர்ந்தெடுத்த தெரிவாகும். திரு பார்னியே மூன்று வாக்குறுதிகளை அளித்திருந்தார்: வரி நீதி, ஆனால் அவர் எங்களுக்கு 40 பில்லியன் யூரோ வரி கொண்ட ஒரு வரவு செலவுத் திட்டத்தை வழங்கினார்; பொதுச் செலவினங்களைக் கட்டுப்படுத்துதல், ஆனால் அதன் வரவுசெலவுத் திட்டம் பற்றாக்குறையை அதிகரித்துள்ளது; மற்றும் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து வரவு செலவுத் திட்டத்தை உருவாக்குவது, ஆனால் அவர் அதை வடிவமைத்தபோது எதிர்க்கட்சிகளை புறக்கணித்தார். எனவே இந்த பட்ஜெட் பிரெஞ்சுக்காரர்களுக்கு நச்சுத்தன்மையாக இருந்தது. அவர்களைப் பாதுகாக்க தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு ஒரே பொருத்தமான தீர்வு இந்த பட்ஜெட்டை எதிர்ப்பதுதான்.”
பார்னியேரின் தோல்விக்குப் பின்னர் ஜனாதிபதியை இராஜினாமா செய்ய நிர்பந்திப்பதற்கான அவரது நோக்கம் குறித்து வினவிய போது, “இம்மானுவேல் மக்ரோனின் பதவி விலகலை நான் கோரவில்லை. அவர் அரசியல் கட்சிகள் மற்றும் தேர்தல்களை மதிக்காத ஒரு காலம் வந்தால், ஜனாதிபதி மீதான அழுத்தம் வெளிப்படையாகவே பலமாக இருக்கும் என்று நான் கூறுகிறேன். எனவே, அந்த முடிவு அவரைப் பொறுத்தது” என்று லு பென் குறிப்பிட்டார்.
யதார்த்தத்தில், வரவு-செலவு திட்டத்தை ஏற்கத் தவறியதால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் காரணமாக, ஆளும் வட்டாரங்களில், பிரான்சில் மக்ரோனை பதவியிலிருந்து நீக்குவது குறித்து விவாதம் அதிகரித்து வருகிறது என்பது தெளிவாக உள்ளது. நிதியியல் சந்தைகள் அதன் அரசாங்கக் கடன்கள் மீது ஊக வணிகம் செய்து வருகின்ற நிலையில், பிரான்சின் கடன்வாங்கும் செலவுகள் கிரேக்கத்தை விட அதிகமாக உயர்ந்துள்ளன. அடுத்த ஆண்டு வரவுசெலவுத் திட்டம் இல்லையென்றால், சுகாதார அமைப்புமுறை, ஓய்வூதியங்கள் மற்றும் பொதுச் சேவைகளுக்கான நிதியாதாரங்கள் ஸ்தம்பிதமடைந்து விடுமோ என்ற அச்சங்கள் அதிகரித்து வருகின்றன.
நாடாளுமன்றம் ஒரு தொங்கு நாடாளுமன்றமாக இருப்பதாலும், கடந்த ஜூன் மாதம் மக்ரோன் அதை கலைத்ததற்குப் பின்னர் சட்டபூர்வமாக ஓராண்டுக்கு அதை கலைக்க முடியாது என்பதாலும், வரவு-செலவு திட்டக்கணக்கு பேச்சுவார்த்தைகள் வெடிப்பார்ந்ததாக இருக்கும். பட்ஜெட் தொங்கு பாராளுமன்றத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும், இது பட்ஜெட் வாக்கெடுப்புகளில் மீண்டும் முட்டுக்கட்டையை ஏற்படுத்தலாம்.
இந்த முட்டுக்கட்டையை உடைக்கும் பொருட்டு, அதுபோன்றவொரு சூழ்நிலையில் மக்ரோன் இராஜினாமா செய்வதற்கு லு பென் அழுத்தமளிப்பாரா என்று லு மொன்ட் (Le Monde) கேட்டபோது, லு பென், “நாங்கள் ஸ்தாபனங்களின் இயல்பான செயல்பாட்டை பின்பற்றுவோம். ஆனால் ஒரு அரசாங்கம் வீழ்ந்தால், இரண்டாவது, மூன்றாவது என்று நாம் கேள்வி கேட்க வேண்டும்” என்று பதிலளித்தார்
இதற்கிடையே, மக்ரோனின் இராஜினாமாவைக் கோரி RN ஒரு பத்திரிகை பிரச்சாரத்தைத் தொடங்கி வருகிறது. RN இன் துணைத் தலைவர் செபஸ்டியான் செனு (Sébastien Chenu) “இம்மானுவேல் மக்ரோன் தனது அலுவலகத்தை விட்டு வெளியேறி, பிரான்சுக்கு சேவை செய்ய ஒரு அரசியல் பாதையை மறுவடிவமைக்க அனுமதித்தால், தனது நாட்டிற்கு உதவி செய்வார் என்று நான் நினைக்கிறேன்” என்று கூறினார்.
RN இன் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினரும் லு பென்னின் ஆலோசகருமான பிலிப் ஒலிவியே (Philippe Olivier) “மக்ரோன் ஒரு அவமானப்படுத்தப்பட்ட குடியரசுக் கட்சியின் மன்னர், சட்டையைத் திறந்து கழுத்தில் கயிற்றுடன் முன்னேறுகிறார். ... நாங்கள் அதிக உற்சாகமடையவில்லை. ராஜினாமா செய்வதற்கான கோரிக்கை, எங்கள் தரப்பிலும் அதற்கு அப்பாலும் உயரத் தொடங்கும் போது இதைப் பற்றி விவாதிப்போம். தற்போதைக்கு, மக்ரோன் சூடான உருளைக்கிழங்கை எடுத்து பிரச்சினைகளை சமாளிக்க வேண்டும்” என்று கருத்துரைத்தார்.
தொழிலாள வர்க்கம் அணிதிரண்டு மக்ரோனுக்கு எதிரான அதன் சொந்த போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். மக்ரோனுக்கான எதிர்ப்பை RN அல்லது NFP இல் உள்ள பிற்போக்குவாதிகளின் கரங்களில் விட்டுவிட முடியாது. கடந்த ஜூலை 7 தேர்தல்களுக்கான வேலைத்திட்டத்தில் உக்ரேனுக்கு தரைப்படை துருப்புகளை அனுப்புவதற்கும் போலிஸ் மற்றும் உளவுத்துறை சேவைகளுக்கான நிதியாதாரங்களை அதிகரிப்பதற்கும் பிற்போக்குத்தனமான அழைப்புகள் விடுக்கப்பட்டிருந்தன.
NFP நிர்வாகிகளோ அல்லது அவர்களுடன் இணைந்த தொழிற்சங்க அதிகாரத்துவங்களோ மக்ரோன் மற்றும் நவபாசிசவாதிகள் இருவருக்கும் எதிரான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்கு அழைப்பு விடுக்கவில்லை. நேற்றிரவு, மெலோன்சோன் கட்சியின் நாடாளுமன்ற பிரிவு தலைவர் மதில்டு பனோட் (Mathilde Panot), NFP தணிக்கை தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர், தெளிவற்ற ஜனரஞ்சக வார்த்தைகளில் மக்ரோனை சுருக்கமாக தாக்கினார். “ஒரு குடியரசில் ஒரே இறையாண்மை மக்கள்தான்” என்று பனோட் கூறினார். RN உடனான ஒப்பந்தங்களை வெட்டுவதற்கான அரசாங்கத்தின் “மரியாதையற்ற” முயற்சியைக் கண்டித்த பனோட், “அரசாங்கம் இறுதியில் அவமரியாதை மற்றும் தணிக்கை தீர்மானம் இரண்டையும் பெற்றுள்ளது” என்று கூறினார்.
எவ்வாறிருப்பினும் தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்கள் பனோட் மற்றும் மெலோன்சோன் போன்ற சக்திகளால் அரசியல்ரீதியாக கட்டுப்படுத்தப்பட்டால், பார்னியே மற்றும் மக்ரோனை மிகவும் மதிப்பிழக்கச் செய்த போர், சிக்கன நடவடிக்கைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களின் கொள்கைகளை தடுத்து நிறுத்த முடியாது. பிரான்சிலும் சர்வதேச அளவிலும், ஏகாதிபத்தியப் போர் மற்றும் அதிவலது பிற்போக்குத்தனத்திற்கு எதிராக ஒரு சோசலிச இயக்கத்தைக் கட்டியெழுப்புவதே இன்றியமையாத பிரச்சினையாகும்.