பிரான்சில், புதிய மக்கள் முன்னணியும் (NFP) நவ-பாசிச தேசிய பேரணியும் (RN) மிஷேல் பார்னியே அரசாங்கத்தை கவிழ்த்துள்ளன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

பிரான்சில், அதிவலது தேசிய பேரணி (RN) ஆதரவுடன் ஜோன்-லூக் மெலோன்சோனின் புதிய மக்கள் முன்னணியால் (NFP) முன்வைக்கப்பட்ட தணிக்கை தீர்மானத்தை தொடர்ந்து, பிரதம மந்திரி மிஷேல் பார்னியேரின் அரசாங்கம் கவிழ்க்கப்பட்டுள்ளது.

பிரெஞ்சு அதிதீவிர வலதுசாரித் தலைவர் மரீன் லு பென் தேசிய நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களுக்குப் பதிலளித்து, வரவிருக்கும் நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பில் பிரதமர் மிஷேல் பார்னியேக்கு எதிராக அவரது தேசிய பேரணி கட்சி வாக்களிக்கும் என்பதை உறுதிப்படுத்துகிறார். டிசம்பர் 2 திங்கட்கிழமை [AP Photo]

கடந்த திங்களன்று பிரதமர் பார்னியே, நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு இல்லாமல் சமூக பாதுகாப்புக்கு நிதியளிப்பதற்கான வரைவு சட்டத்தை (PLFSS) திணிப்பதற்கான முயற்சியில், பிரெஞ்சு அரசியலமைப்பின் 49.3 வது சட்ட விதியை கையிலெடுத்தார். அதன்பின்னர், மெலோன்சோனின் அடிபாணியாத பிரான்ஸ் கட்சி (LFI) மற்றும் மரின் லு பென்னின் தேசிய பேரணி (RN) ஆகிய இரண்டும் நாடாளுமன்றத்தில் தணிக்கை தீர்மானங்களை முன்வைத்தன. லு பென்னும் ஏனைய RN நிர்வாகிகளும் LFI கட்சியின் தணிக்கை தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதாக இருந்தனர். அந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு திட்டமிடப்படும்போது பார்னியே வீழ்ச்சியடைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

புதிய மக்கள் முன்னணி கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (அடிபணியாத பிரான்ஸ் கட்சி 77 இடங்கள், பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி 17 இடங்கள், சோசலிஸ்ட் கட்சி 66 இடங்கள் மற்றும் பசுமைவாதிகள் 38 இடங்கள்) மற்றும் RN க்கு கிடைத்த 124 இடங்களுடன், 577 இடங்கள் கொண்ட நாடாளுமன்றத்தில் LFI யின் தணிக்கை தீர்மானத்திற்கு 332 வாக்குகள் பெரும்பான்மையை அளித்துள்ளது.

பிரதமர் பார்னியே மற்றும் ஜனாதிபதி இமானுவல் மக்ரோனைப் பதவியிலிருந்து இறக்குவதற்கான போராட்டத்தில் தொழிலாளர்கள் அணிதிரட்டப்பட வேண்டும் என்பதோடு, பார்னியே மீதான தணிக்கை தீர்மானம் மட்டுமே அவர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளைத் தீர்த்து விடாது என்று எச்சரித்தாக வேண்டும். பிரெஞ்சு மக்களில் மூன்றில் இரண்டு பங்கினர் மக்ரோன் வீழ்த்தப்பட வேண்டும் என்று விரும்புகின்றனர். ஆயினும், பார்னியே மீதான தணிக்கை தீர்மானம் மக்ரோனை வீழ்த்தவோ அல்லது உழைக்கும் மக்களுக்கு அதிக அதிகாரத்தை வழங்கவோ போவதில்லை. மாறாக, பார்னியேருக்குப் பதிலாக யார் வருவார் என்பது குறித்த ஆளும் உயரடுக்கின் போராட்டங்களை இது தீவிரப்படுத்தும். அதே நேரம், தொழிலாள வர்க்கத்தின் மீதான ஆளும் உயரடுக்கின் தாக்குதல்கள் தொடரும்.

நாடாளுமன்றத்தில் பார்னியேரின் போட்டியாளர்கள், பிரான்சிற்குள் அவரது சிக்கன நடவடிக்கைகள் மற்றும் ஒடுக்குமுறை கொள்கைகளை உந்துகின்ற மாபெரும் சர்வதேச மோதல்கள் மீதான அவரது கொள்கையில் இருந்து அடிப்படையில் வேறுபட்ட கொள்கையைக் கொண்டிருக்கவில்லை. அவர்களில் எவரும் ரஷ்யா மற்றும் மத்திய கிழக்கிற்கு எதிரான நேட்டோ போர்களை முடிவுக்குக் கொண்டுவரவோ அல்லது சர்வதேச நிதியச் சந்தைகளில் பிரெஞ்சுக் கடனைப் பற்றி ஊக வணிகம் செய்து கொண்டிருக்கும் நிதியப் பிரபுக்களின் செல்வங்களைப் பறிமுதல் செய்து, அவர்களின் கட்டளைகளை உடைக்கவோ போராடவில்லை.

பிரதமர் பார்னியே ஷரத்து 49.3 ஐ கையிலெடுத்த பின்னர், அடிபணியா பிரான்ஸ் கட்சியின் நாடாளுமன்ற குழுவின் தலைவர் மதில்டே பனோ கூறுகையில், “அரசியல் குழப்பம்” மற்றும் “மக்ரோனிசத்தின் மீதான ஒட்டுமொத்த அவமதிப்பை” மேற்கோளிட்டு, அடிபணியா பிரான்ஸ் கட்சியின் தணிக்கை தீர்மானம் ஒன்றை அவர் சமர்ப்பித்திருப்பதாக தெரிவித்தார். “தேசிய பேரணியுடனான பார்னியரின் பேச்சுவார்த்தைகளை” கண்டனம் செய்த அவர், அகதிகளுக்கான அரசின் மருத்துவ உதவியை வெட்டித்தள்ளும் பார்னியரின் முடிவைக் குறிப்பிட்டு, அவரது வரவு செலவுத் திட்டத்தை ஆதரிப்பதற்காக RN ​​ஐ வென்றெடுக்கும் முயற்சியில் அவர் தோல்வியுற்றதை குறிப்பிட்டார்.

அதன்பின் விரைவிலேயே, லு பென் நாடாளுமன்றத்தில் தனது சொந்த பத்திரிகையாளர் கூட்டத்தை நடத்தி பின்வருமாறு அறிவித்தார்: “நான் இப்போது உங்களுடன் பேசிக் கொண்டிருக்கையில், ஒரு [RN] தணிக்கை தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டு வருகிறது, நாங்கள் அரசாங்கத்தைக் கண்டிக்க வாக்களிப்போம். … இந்த தணிக்கை தீர்மானங்கள் எங்கிருந்து வந்தாலும், ஒன்று அல்லது பல இருந்தாலும், நாங்கள் இந்த தணிக்கை தீர்மானங்களுக்கு வாக்களிப்போம், எல்லாவற்றிற்கும் மேலாக, எங்களுக்கே வாக்களிப்போம்.”

பிரான்சில் உத்தியோகபூர்வ அரசியல் விவாதம் முற்றிலும் யதார்த்தமற்றது. அரசாங்கக் கட்சிகளில் உள்ள ஒரு சில பிரமுகர்களை தவிர, அடிபணியாத பிரான்ஸ் கட்சியில் இருந்து தேசிய பேரணி கட்சி வரையில் ஒட்டுமொத்தமாக பலதரப்பட்ட அரசியல் கட்சிகளும் ஓய்வூதிய வெட்டுக்கள், மருந்து மற்றும் அத்தியாவசிய விலை உயர்வுகள், மற்றும் பார்னியேரின் வரவு-செலவு திட்டத்தில் உள்ள பிற மக்கள் விரோத, பிற்போக்குத்தனமான நடவடிக்கைகளைக் கண்டனம் செய்து வருகின்றன. இந்த வரவுசெலவுத் திட்ட விவாதத்தை மேம்போக்காகப் பார்ப்பவர், பிரெஞ்சு முதலாளித்துவ நடைமுறை எப்படியோ விரைவில் இடதிற்கு ஊசலாடிக் கொண்டிருக்கிறது என்ற முடிவிற்கு வந்ததற்காக மன்னிக்கப்படலாம்.

ஆனால், இப்பொழுது நடந்துகொண்டிருப்பது இடதிற்கான மாறுதல் அல்ல. இதில் ஈடுபட்டுள்ள எந்த தரப்பினரும் பெரும் பணக்காரர்கள் மீதான பாரிய வரி அதிகரிப்புகளை முன்வைக்கவில்லை, பிரான்சின் பரந்த 3 டிரில்லியன் யூரோ கடனை நிராகரிக்கவில்லை அல்லது பிரெஞ்சு “போர் பொருளாதாரத்திற்கான” இராணுவ செலவின உயர்வை திரும்பப் பெறவில்லை. இவர்களைப் பொறுத்த வரையில், இராணுவ செலவின உயர்வுகளும், போரும், நிதியியல் பிரபுத்துவத்தை செழிப்பாக்குவதும் தொடரும். ஆனால், சிக்கன நடவடிக்கைகள் மீதான அவர்களின் விமர்சனங்கள் வெற்று வாய்வீச்சாக இருக்கின்றன. பார்னியேரின் வரவு-செலவு திட்டக்கணக்கு நிறைவேற்றப்படாது என்பது வெளிப்படையாக இருப்பதால் மட்டுமே அவர்களால் அதில் ஈடுபட முடிகிறது. வரவு செலவுத் திட்டம் குறித்த திருத்தங்கள் அல்லது கருத்துக்கள் எதற்கும் அவர்களிடம் ஸ்தூலமாக எந்த பதிலும் கிடையாது.

ஆனால், குறிப்பாக ஏதாவதொரு செல்வாக்கற்ற சமூக வெட்டுக்களை அது விமர்சிக்கும் அதேவேளையில், RN கட்சியின் தலைமை பற்றாக்குறையைக் குறைப்பதற்கான “கட்டமைப்பு சீர்திருத்தம்” என்ற ஒரு கடுமையான கொள்கைக்கு ஆதரவாக அதிகரித்தளவில் பகிரங்கமாக முன்வந்து கொண்டிருக்கிறது. செல்வந்தர்கள் மீது பாரிய வரி அதிகரிப்பு இல்லாமல் இது செய்யப்படுமானால், அது பேரழிவு தரும் சமூக வெட்டுக்கள் அல்லது தொழிலாளர்கள் மீதான வரி அதிகரிப்புகளை மட்டுமே குறிக்கும். உண்மையில், அட்லாண்டிக் பகுதி எங்கிலும், வரவிருக்கும் ட்ரம்ப் நிர்வாகத்திலுள்ள லு பென்னின் கூட்டாளிகள், அரசு செலவினங்களில் 2 ட்ரில்லியன் டாலர்களை வெட்டித் தள்ளுவதற்கு சூளுரைத்து வருகின்றனர்.

இந்த வார இறுதியில் லு பென், பார்னியரை திட்டவட்டமாக கண்டிப்பதை நோக்கி தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்ட நிலையில், வரவு-செலவுத் திட்டத்தை சமநிலைப்படுத்த ஆழமான “கட்டமைப்பு சீர்திருத்தங்களுக்கு” அழைப்பு விடுத்தார். “மிஷேல் பார்னியரின் கடைசி அறிவிப்புகள் கட்டமைப்பு சீர்திருத்தங்களால் நிதியளிக்கப்படவில்லை. … அதன் தற்போதைய வடிவத்தில், திரு. பார்னியரின் வரவு-செலவுத் திட்டம் ஒரு நிதி நெருக்கடியைத் தூண்டும்” மற்றும் “ஏற்கனவே பிரம்மாண்டமான பற்றாக்குறையை மோசமாக்கும்” என்று அவர் ட்வீட் செய்தார்.

அரசியல் ஸ்தாபனத்தில், வரவுசெலவுத் திட்ட நெருக்கடியைத் தீர்க்கவும், போர்களை விரிவாக்கவும், நிதியச் சந்தைகளுக்கு அதிக செல்வத்தை வழங்கவும் அவநம்பிக்கையான நடவடிக்கைகள் விவாதிக்கப்பட்டு வருகின்றன. 2025 ஆம் ஆண்டில் வரவு செலவுத் திட்டத்திற்கு வாக்களிக்க முடியும் என்பது ஒரு பிரச்சினையாகும். ஜூன் மாதத்தில் மக்ரோன் நாடாளுமன்றத்தைக் கலைத்ததில் இருந்து, ஜூன் 2025 வரையில் அவரால் நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியாது என்பதோடு, புதிய மக்கள் முண்ணனி, தேசிய பேரணி மற்றும் மக்ரோன்-ஆதரவு கன்னைகளுக்கு இடையே பிளவுபட்டுள்ள தற்போதைய நாடாளுமன்றத்துடன் சேர்ந்து ஒரு வரவு-செலவுத் திட்டத்தை எழுத வேண்டியிருக்கும்.

பிரான்சில் ஒரு சர்வாதிகாரத்தின் அச்சுறுத்தல் என்பது உண்மையாக இருந்து வருகின்றது. ஆழமாக பிளவுபட்டுள்ள நாடாளுமன்றம், 2025 தொடங்குவதற்கு முன்னர் ஒரு புதிய வரவு-செலவுத் திட்டத்தை வரைவதற்கு அல்லது 2024 வரவு-செலவுத் திட்டத்தை 2025 க்கு நீட்டிக்க வாக்களிக்க ஒரு மாதத்திற்கும் குறைவான காலமே உள்ளது. எவ்வாறிருப்பினும், 2024 வரவுசெலவுத் திட்டம், அதன் பரந்த பற்றாக்குறையுடன், நிதியியல் சந்தைகளிடம் இருந்து ஆழ்ந்த எதிர்ப்பை முகங்கொடுக்கும். ஆகவே நாடாளுமன்றம் ஒரு புதிய வரவு-செலவு திட்டக்கணக்கிற்கு வாக்களிக்கவோ அல்லது பழையதை நீட்டிக்கவோ தவறினால், மக்ரோன் நாடாளுமன்றத்தை இடைநீக்கம் செய்து உத்தரவாணை மூலம் ஆட்சி செய்ய அரசியலமைப்பின் ஷரத்து 16 ஐ கையிலெடுக்கக்கூடும் என்று ஊடகங்களில் ஊகங்கள் தெரிவிக்கப்படுகின்றன.

அத்தகைய எந்தவொரு கொள்கையும் தொழிலாள வர்க்கத்தில் இருந்து வெடிப்பார்ந்த எதிர்ப்புக்களை முகங்கொடுக்க வேண்டியிருக்கும். எவ்வாறிருப்பினும், ஆழமடைந்து வரும் உலகப் போர் மற்றும் நிதியியல் நெருக்கடிக்கு மத்தியில், அமெரிக்காவின் சமீபத்திய தேர்தல்கள் அதன் கடைசி தேர்தலாகவோ, அல்லது தென் கொரியாவில் நடந்த இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு சதியாக இருக்கக் கூடும் என்ற ட்ரம்பின் அச்சுறுத்தல்களுடன், ஆளும் வர்க்கம் செயலூக்கத்துடன் சர்வாதிகாரத்தைப் பரிசீலித்து வருகிறது என்பது தெளிவாகிறது. ஏகாதிபத்தியப் போர், சிக்கன நடவடிக்கைகள், சர்வாதிகாரம் மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு வேலைத்திட்டத்தின் அடிப்படையில் மக்ரோன்-பார்னியேருக்கு எதிராக அணிதிரள வேண்டியதன் அவசியத்தைக் குறித்து தொழிலாள வர்க்கத்தை எச்சரிப்பதே எந்தவொரு மார்க்சிச போக்கினதும் இன்றியமையாத கடமையாகும்.

மறுபுறம், மெலோன்சோன் தொழிலாளர்களையும் இளைஞர்களையும் தாலாட்டுப் பாடி தூங்க வைக்க முயன்று வருகிறார். இந்த ஜூனில் LFI கட்சியின் தேர்தல் வேலைத்திட்டத்தில் அடங்கியுள்ள ஓய்வூதிய அதிகரிப்புகளிலும் ஏனைய மட்டுப்படுத்தப்பட்ட சமூக நடவடிக்கைகளிலும் சிலவற்றை தேசிய நாடாளுமன்றம் ஆதரிக்கிறது என்பதை வரவு-செலவு திட்டக்கணக்கு பேச்சுவார்த்தைகள் எடுத்துக்காட்டியுள்ளன என்று வாதிடும் மெலோன்சோன், ஒரு முற்போக்கான அரசாங்கத்தை உருவாக்கும் வகையில் மக்ரோன் இராஜினாமா செய்ய வேண்டுமென கோருகிறார்.

எக்ஸ்/ட்விட்டரில் அவர் பதிவிட்ட ஒரு அறிக்கையில், மெலோன்சோன் பின்வருமாறு கூறியுள்ளார்:

அடிபணியாத பிரான்ஸ் கட்சியின் அங்கத்தவர்களும் புதிய மக்கள் முன்னணியும் [பார்னியேரின் வரவு-செலவுத் திட்டக்கணக்கில்] பல திருத்தங்களையும் முன்மொழிவுகளையும் முன்மொழிந்தனர். அவை கடந்த ஜூன் தேர்தல்களில் பிரெஞ்சு மக்கள் விரும்பிய ஒரு வேலைத்திட்டத்தில் இருந்து வந்திருந்தன. அது [வரவு-செலவுத் திட்ட பேச்சுவார்த்தைகளின்போது] தேசிய நாடாளுமன்றத்திலேயே பெரும்பாலும் ஒப்புதல் பெற்றிருந்தது. திரு. மக்ரோன் பதவிக்கு வந்ததில் இருந்து அவரால் திணிக்கப்பட்ட கொள்கைகளில் இருந்து இது ஒரு முறிவாகும். இந்தக் கொள்கைகள் செல்வந்தர்களை செழிப்பாக்குவதிலும் ஏழைகளை வறுமையில் தள்ளுவதிலும் அவற்றின் நேரத்தைச் செலவிடுகின்றன. …

திரு. மக்ரோனின் கட்சிக்கு நாடாளுமன்ற பெரும்பான்மையை வழங்க இந்த நாடு மறுத்துவிட்டது. ஏனென்றால், அவர் பெயரிட்ட அரசாங்கத்திற்கு நாடாளுமன்றம் அதன் நம்பிக்கையை வழங்கவில்லை என்பதாலும், அவரது வரவு-செலவுத் திட்டத்தை ஏற்க பெரும்பான்மை இல்லை என்பதாலும் நாம் வெளியேற வேண்டிய ஒரு அந்தி மண்டலத்தில் இருக்கிறோம். எனவே இதற்கு பொறுப்பான நபர் தனது பொறுப்பை எதிர்கொள்ள வேண்டும். அரசியல் சாசனம் நம்மீது திணித்துள்ள விதிகளுக்கு உட்பட்டு நாம் அதிகாரத்தை மீண்டும் மக்களிடம் ஒப்படைக்க வேண்டும். … ஜனாதிபதி பதவி விலக வேண்டும்.

ஆனால், அண்மித்து மூன்றில் இரண்டு பங்கு நவ-பாசிஸ்டுக்கள் அல்லது மக்ரோனுக்கு ஆதரவான உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றம், சமூக சீர்திருத்தங்களுக்கான ஒரு வேலைத்திட்டத்திற்காக போராடவில்லை. இது இயல்பாகவே பொலிஸ்-அரசு ஒடுக்குமுறை, சிக்கன நடவடிக்கைகள் மற்றும் ஏகாதிபத்திய போரின் ஒரு பேரவையாகும். பார்னியர் மீதான வாய்வீச்சு விமர்சனங்களை நாணயமாக முன்வைப்பது மற்றும் ஒரு புதிய ஜனாதிபதியை மட்டுமே தேர்ந்தெடுப்பதை ஒரு முற்போக்கான அரசாங்கத்திற்கான அடிப்படையாக முன்வைப்பது, தொழிலாள வர்க்கத்தை ஏமாற்றி தவறாக வழிநடத்துவதாகும்.

எவ்வாறாயினும், பிரெஞ்சு முதலாளித்துவத்தின் தலைமை இந்த வாக்கெடுப்புக்குப் பிறகு மறுசீரமைக்கப்பட்டாலும், அது உண்மையான ஜனநாயக ஆட்சியை உருவாக்கப் போவதில்லை. அத்தகைய ஜனநாயக ஆட்சியை, ஏகாதிபத்தியப் போர் மற்றும் காஸாவில் இடம்பெற்றுவரும் இனப்படுகொலைக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் சர்வதேசப் போராட்டத்திலிருந்தும், நிதியப் பிரபுத்துவத்தின் சொத்துக்களை தேசியமயமாக்குவதிலிருந்தும், - அதாவது சோசலிசத்திற்கான போராட்டத்திலிருந்தும் மட்டுமே உருவாக்க முடியும்.

Loading