மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
ரஷ்ய எல்லைக்குள் ஆழமாகத் தாக்குவதற்காக, அமெரிக்காவின் நீண்டதூர ஆயுதங்களை உக்ரேன் பயன்படுத்த பைடென் நிர்வாகம் வழங்கியிருப்பதானது, ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போரில் ஒரு புதிய மற்றும் அபாயகரமான விரிவாக்கத்தை குறிக்கிறது. இந்த நகர்வும், அதைத் தொடர்ந்து இரண்டு நாட்களுக்குப் பின்னர், பேரழிவு விளைவுகளைப் பொருட்படுத்தாமல் நீண்ட தூர ஆயுதங்களைப் பயன்படுத்தி உக்ரேன் மேற்கொண்ட தாக்குதல்களும், மோதலை தீவிரப்படுத்த அமெரிக்க மற்றும் நேட்டோ சக்திகளின் இடைவிடாத உந்துதலை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
செவ்வாயன்று, ரஷ்ய எல்லைக்குள் 110 மைல் தொலைவில் உள்ள பிரையன்ஸ்க்கில் (Bryansk) உள்ள ஒரு இராணுவத் தளத்தை அமெரிக்கா வழங்கிய ATACMS ஏவுகணைகளைப் பயன்படுத்தி உக்ரேன் தாக்கியது. இந்த தாக்குதலில் எத்தனை ஏவுகணைகள் ஏவப்பட்டன, அவற்றில் எத்தனை ரஷ்ய பாதுகாப்பு அமைப்புகளால் சுட்டு வீழ்த்தப்பட்டன என்பது குறித்து முரண்பட்ட தகவல்கள் உள்ளன.
அதே நாளில், இங்கிலாந்து அதன் நீண்டதூர ஏவுகணைகளை ரஷ்யாவிற்குள் ஆழமாக தாக்க பயன்படுத்த அனுமதிப்பதில் அமெரிக்காவைப் பின்பற்றும் என்று கார்டியன் அறிவித்தது. “உக்ரேனுக்கான ஆதரவை நாம் இரட்டிப்பாக்க வேண்டும்,” என்று இங்கிலாந்து பாதுகாப்புச் செயலர் ஜோன் ஹீலி அறிவித்தார். இங்கிலாந்து பிரதம மந்திரி கெய்ர் ஸ்டார்மர், பிரேசிலில் நடந்த ஜி20 உச்சிமாநாட்டிற்கு வெளியே, “ரஷ்யாவிடம் இருந்து வரும் பொறுப்பற்ற வாய்வீச்சு ... உக்ரேனுக்கான எங்கள் ஆதரவைத் தடுக்கப் போவதில்லை” என்று குறிப்பிட்டார்.
அமெரிக்காவின் அறிவிப்பை வரவேற்ற பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன், இது “ஒரு நல்ல முடிவு” என்றும் ரஷ்யாவிற்குள் வட கொரிய துருப்புகளை நிலைநிறுத்துவதற்கான பொருத்தமான பதிலடி இது என்றும் குறிப்பிட்டார். “விரிவாக்கும் முடிவை எடுத்த ஒரே சக்தி ரஷ்யா மட்டுமே... உண்மையில் இந்த முறிவுதான் அமெரிக்காவின் முடிவுக்கு வழிவகுத்தது” என்று ஜி 20 உச்சிமாநாட்டில் மக்ரோன் கூறினார்.
ரஷ்யாவுக்கு எதிரான போரில், ஐரோப்பிய ஏகாதிபத்தியம், அவசியமானால் அமெரிக்காவில் இருந்து சுயாதீனமாக, இன்னும் அதிக திட்டவட்டமான மற்றும் ஆக்ரோஷமான பாத்திரம் வகிக்க வேண்டிய நிர்பந்தம் குறித்து ஐரோப்பிய ஊடகங்களில் ஆழ்ந்த விவாதங்கள் நடந்து வருகின்றன.
ரஷ்யாவை குறிவைக்க உக்ரேன் நீண்டதூர ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு அங்கீகாரம் அளிக்கும் நடவடிக்கை, புட்டின் அரசாங்கத்திடம் இருந்து பதிலடியைத் தூண்டும் என்பதை பைடென் நிர்வாகமும் நேட்டோ சக்திகளும் நன்கு அறிவார்கள். அணுவாயுதங்களின் சாத்தியமான பயன்பாடு உட்பட ஓர் இராணுவ விடையிறுப்புக்கு இட்டுச் செல்லும் என்று புட்டின் சுட்டிக்காட்டியிருந்த ஒரு “சிவப்புக் கோட்டை” அவர்கள் தெரிந்தும் வேண்டுமென்றே கடந்து வருகின்றனர்.
நீண்ட தூர ஆயுதங்களை உக்ரேன் பயன்படுத்துவதற்கு அங்கீகாரம் வழங்குவதற்கான பைடென் நிர்வாகத்தின் நடவடிக்கையானது, அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்கள் இடம்பெற்று இரண்டு வாரங்களுக்கும் குறைவான காலத்திற்குப் பின்னர் மற்றும் வரவிருக்கும் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு அதிகாரம் மாற்றப்படுவதற்கு வெறும் 60 நாட்களுக்கு முன்னர் வந்தது.
பைடெனின் தரப்பில், நிலைமையை முடிந்தவரை ஆக்ரோஷமாக தள்ளுவதற்கு “களத்தில் உண்மைகளை” உருவாக்கும் ஒரு கூறு உள்ளது என்பதில் சந்தேகமில்லை. செப்டம்பரில் ரஷ்யா மீதான தாக்குதல்களை அறிவிக்க வெள்ளை மாளிகை திட்டமிட்டிருந்தது. ஆனால், இறுதியில் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸின் எதிர்பார்க்கப்பட்ட வெற்றியின் பின்னர், இந்த அறிவிப்பை வெளியிட முடிவு செய்ததால், தேர்தல் பிரச்சாரத்தில் பாரிய போர் விரிவாக்கத்திற்கான உடனடி திட்டங்களைப் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.
ஆனால், உக்ரேனிய போரை விமர்சிப்பவராக வாய்வீச்சுடன் காட்டிக் கொண்ட டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெறுவதில் இந்த தேர்தல் முடிவடைந்தது. கடந்த வாரம், வெள்ளை மாளிகையில் சந்தித்த பைடெனும் ட்ரம்பும் “சுமூகமான ஆட்சி மாற்றத்திற்கு” வாக்குறுதியளித்தனர். திரைக்குப் பின்னால் நடந்த இந்த கலந்துரையாடல்கள் உக்ரேன் மீது ஒருங்குவிந்திருந்தன. தனது சமூக ஊடக தளத்தில் நாளொன்றுக்கு டசின் கணக்கான தடவைகள் பதிவிடும் ட்ரம்ப், ATACMS ஏவுகணை அங்கீகாரம் குறித்தோ அல்லது உக்ரேனால் அவை பயன்படுத்தப்படுவது குறித்தோ எதுவும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செப்டம்பரில், ரஷ்ய நகரங்கள் மீது அமெரிக்கா விரைவில் நீண்ட தூர ஏவுகணை தாக்குதல்களை மேற்கொள்வதற்கு அனுமதிக்கும் என்ற அறிக்கைகளுக்கு விடையிறுப்பாக, புட்டின் ரஷ்யாவின் அணுசக்தி கோட்பாட்டில் முன்மொழியப்பட்ட மாற்றங்களை கோடிட்டுக் காட்டினார். குறிப்பாக, “அணு ஆயுதம் இல்லாத எந்தவொரு நாடும், ஒரு அணு ஆயுத அரசின் பங்களிப்பு அல்லது ஆதரவுடன், ரஷ்யாவுக்கு எதிரான தாக்குதலை நடத்தினால், அது ரஷ்ய கூட்டமைப்பு மீதான ஒரு கூட்டுத் தாக்குதலாக கருதப்படும்” என்று ரஷ்ய ஜனாதிபதி கூறினார்.
கடந்த செவ்வாயன்று, பிரையன்ஸ்க் மீதான உக்ரேனிய தாக்குதலைத் தொடர்ந்து, புட்டின் புதிய அணுஆயுத மூலோபாய ஆவணத்தில் கையெழுத்திட்டார். இது “அத்தகைய ஆக்கிரமிப்பு, அவர்களின் இறையாண்மை மற்றும்/அல்லது பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு ஒரு முக்கியமான அச்சுறுத்தலை உருவாக்கினால், வழக்கமான ஆயுதங்களைப் பயன்படுத்தும் தாக்குதல்கள் உட்பட, அதன் பிராந்தியத்தின் மீதான தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யாவால் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான எல்லையை கணிசமாகக் குறைக்கிறது”.
புட்டினின் முந்தைய அறிக்கைகள் மற்றும் ரஷ்ய கூட்டமைப்பால் ஏற்றுக்கொள்ளப்பட்ட புதிய கோட்பாட்டின் விதிமுறைகளின் கீழ், உக்ரேனில் ஒரு போர் விரிவாக்கம், ஐரோப்பாவில் உள்ள அமெரிக்க தளங்கள் மீதான தாக்குதல்கள் அல்லது ஐரோப்பிய இராணுவ இலக்குகள் மீதான தாக்குதல்கள், “சமச்சீரற்ற போர்முறையின்” ஏனைய வடிவங்கள் அல்லது ஒரு அணுவாயுதத்தைப் பயன்படுத்துவதன் மூலமாகவும் கூட நேட்டோவின் தாக்குதலுக்கு ரஷ்யா பதிலடி கொடுக்கக் கூடும்.
பதிலடி எதுவாக இருந்தாலும், அமெரிக்க மற்றும் நேட்டோ சக்திகள் இதன் விளைவுகளைப் பணயம் வைக்கத் தயாராக உள்ளன. இடைவிடாத போர் விரவாக்கத்துக்கான போக்கு உள்ளது. கேள்வி கட்டாயம் கேட்கப்பட்டாக வேண்டும்: போரை விரிவாக்குவதில் அடுத்த கட்டம் என்ன? எவ்வளவு விரைவில் மாஸ்கோ மீது நேட்டோ ஆயுதங்கள் மழையாகப் பொழியும்? நேட்டோ படைகள் அங்கு நிலைநிறுத்தப்படுமா?
திங்களன்று, எஸ்தோனியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கஸ் சஹ்க்னா பைனான்சியல் டைம்ஸ்க்கு கூறுகையில், உக்ரேனில் ஐரோப்பிய சக்திகள் “தரையில் காலடிகளை” வைப்பதை அவர் ஆதரிப்பதாக தெரிவித்தார். ட்ரம்பால் வடிவமைக்கப்பட்ட ஒரு சாத்தியமான “சமாதான உடன்படிக்கையின்” உள்ளடக்கத்தில் இந்த முன்மொழிவு எழுப்பப்பட்டாலும், இந்த மோதலில் நேட்டோவை நேரடியாக நிலைநிறுத்துவதற்கான முன்மொழிவு, மிக முக்கியமாக இந்தாண்டு தொடக்கத்தில், பிரெஞ்சு ஜனாதிபதி மக்ரோனால் மீண்டும் மீண்டும் எழுப்பப்பட்டுள்ளது.
பைடென் நிர்வாகம், ஐரோப்பிய சக்திகளின் ஆதரவுடன், போரை தீவிரப்படுத்தும் தொடர்ச்சியான நடவடிக்கைகளை எடுக்க முற்படுகிறது. வரவிருக்கும் ஒரு ட்ரம்ப் நிர்வாகமும், அமெரிக்காவின் உலகளாவிய மேலாதிக்கத்தை ஈவிரக்கமின்றி பின்தொடர்வதில் அர்ப்பணித்துக் கொண்டாலும், உலகெங்கிலும் போர்களைத் தொடுப்பதில் அதேயளவுக்கு ஆக்ரோஷமாக இருக்கும்.
ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போரானது, தீவிரமடைந்து வரும் ஓர் உலகளாவிய போரின் பாகமாக உள்ளது. இதில், காஸாவில் நடந்து வரும் இனப்படுகொலை, லெபனான் மீதான இஸ்ரேலிய குண்டுவீச்சு மற்றும் ஈரானுக்கு எதிரான போர் அச்சுறுத்தல்கள், மற்றும் ட்ரம்பின் மையக் குவிமையமாக இருந்து வருகின்ற சீனாவுடன் அபிவிருத்தி அடைந்து வரும் மோதல் ஆகியவை உள்ளடங்கும்.
அனைத்து ஏகாதிபத்திய சக்திகளிலும் தீவிரமடைந்து வரும் அரசியல் நெருக்கடி, சர்வாதிகார ஆட்சி வடிவங்களுக்குத் திரும்புதல் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதலின் பிரமாண்டமான விரிவாக்கம் ஆகியவற்றிற்கு இடையே போர் தீவிரமடைந்து வருகிறது. சமூகம் அனைத்தையும் போருக்கு அடிபணிய வைப்பதில் தன்னலக்குழுக்கள் உறுதியாக உள்ளன. மூன்றாம் உலகப் போருக்குள் இறங்குவதை நிறுத்த சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் சர்வதேச தொழிலாள வர்க்கம் அணிதிரட்டப்பட வேண்டும்.