மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் அவரது பதவிக்காலம் முடிய இன்னும் இரண்டு மாதங்களுக்கும் குறைவான காலமே உள்ள நிலையில், ரஷ்யாவிற்கும் நேட்டோவிற்கும் இடையிலான நேரடி போருக்கு வழிவகுக்கும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் கூறிய “சிவப்புக் கோட்டை” கடந்து, ரஷ்யாவிற்குள் ஆழமாக சென்று தாக்கக்கூடிய அமெரிக்காவின் நீண்ட தூர ஏவுகணைகளைப் பயன்படுத்த உக்ரேனுக்கு அங்கீகாரம் அளித்துள்ளார்.
ரஷ்யாவிற்குள் நிலைகொண்டுள்ளதாக கூறப்படும் வட கொரிய துருப்புக்களுக்கு எதிராக நீண்ட தூர ஏவுகணைகளைப் பயன்படுத்தவும் பைடென் அங்கீகாரம் அளித்துள்ளார். 1953 இல் கொரியப் போர் முடிவடைந்த பின்னர், வட கொரியப் படைகள் மீது அமெரிக்காவின் ஆயுதங்களைப் பயன்படுத்தும் முதல் பெரிய தாக்குதலாக இது இருக்கும்.
நியூயோர்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட், வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல், அசோசியேட்டட் பிரஸ் மற்றும் ராய்ட்டர்ஸுக்கு வழங்கப்பட்ட ஒருங்கிணைந்த அறிக்கைகளில், பைடென் நிர்வாகம் ரஷ்ய மற்றும் வட கொரிய துருப்புக்களை தாக்குவதற்கு இராணுவ தந்திரோபாய ஏவுகணை அமைப்பை (ATACMS) பயன்படுத்த உக்ரேனை அனுமதிக்கும் என்று ஞாயிற்றுக்கிழமை கூறியுள்ளது. ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தின் உள்ளே, அதன் சில பகுதிகள் உக்ரேனால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
எவ்வாறிருப்பினும், அமெரிக்க அதிகாரிகளின் இந்த அறிவிப்பானது, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்சின் நீண்ட தூர ஆயுதங்களுக்கான பாதையை தெளிவுபடுத்துகிறது. மேலும், ரஷ்ய தலைநகரம் உட்பட போர் முன்னரங்கில் இருந்து வெகு தொலைவில் உள்ள ரஷ்ய நகரங்களைத் தாக்குவதற்கு இந்த ஆயுதங்கள் பயன்படுத்தப்படும் என்பதை அமெரிக்க அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
பைடென் நிர்வாகம் நீண்டகாலமாக ரஷ்யாவிற்குள் நீண்டதூர தாக்குதல்களை நடத்துவதற்கான திட்டங்களை அறிவிப்பதற்கான தயாரிப்புகளை செய்து வந்திருக்கிறது. கடந்த செப்டம்பரில் கார்டியன் பத்திரிகையானது, “ரஷ்யாவிற்குள் உள்ள இலக்குகள் மீது இங்கிலாந்தின் Storm Shadow ஏவுகணைகளைப் பயன்படுத்த உக்ரேனை அனுமதிக்கும் முடிவு ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளது” என்று அறிவித்தது.
அந்த நேரத்தில், ஜனாதிபதி தேர்தல் முடியும் வரை இந்த அறிவிப்பை வெளியிட காத்திருப்பது என்று முடிவு செய்யப்பட்டது. மேலும், துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸுக்கு வாக்களிப்பது ரஷ்யாவுக்கு எதிரான போரை பாரியளவில் விரிவாக்குவதற்கான ஒரு ஆணையை உருவாக்கும் என்று வெள்ளை மாளிகை நம்பியது. எவ்வாறாயினும், உக்ரேனில் போர் விரிவாக்கத்தின் எதிர்ப்பாளராக வாய்வீச்சுடன் காட்டிக்கொண்ட முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு இந்த தேர்தலில் வெற்றி கிடைத்தது.
கடந்த புதன்கிழமை, பைடென் வெள்ளை மாளிகையில் ட்ரம்பை சந்தித்தார். அங்கு இரு நிர்வாகங்களுக்கும் இடையிலான “சுமூகமான ஆட்சி மாற்றத்திற்கு” இருவரும் உறுதியளித்தனர்.
அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் இந்த சந்திப்புக்கு முன்னதாக உக்ரேன் போர் ஒரு முக்கிய விஷயமாக இருக்கும் என்று சுட்டிக்காட்டினார். “உக்ரேனில் இருந்து அமெரிக்கா விலகிச் செல்லக் கூடாது, உக்ரேனில் இருந்து விலகிச் செல்வது என்பது ஐரோப்பாவில் அதிக உறுதியற்ற தன்மையைக் குறிக்கிறது என்று காங்கிரஸுக்கும், வரவிருக்கும் நிர்வாகத்திற்கும் கூறுவதற்கு அடுத்த 70 நாட்கள் ஜனாதிபதி பைடெனுக்கு வாய்ப்பு கிடைக்கும்” என்று அவர் தெரிவித்தார்.
ட்ரம்ப் உடனான சந்திப்பின் போது திட்டமிடப்பட்ட போர் விரிவாக்கம் குறித்த விரிவான அறிக்கையை பைடென் நிச்சயமாக வழங்கியிருந்தார். மேலும், ட்ரம்ப் இதற்கு ஆட்சேபனைகளை எழுப்பினார் என்று நம்புவதற்கு எந்த காரணமும் இல்லை.
அக்டோபர் 23 அன்று வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரீன் ஜோன்-பியர் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் கோடிட்டுக் காட்டிய, தேர்தலுக்கு முன்னதாக பைடென் வெள்ளை மாளிகையின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு என்னவென்றால், ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ட்ரம்ப் ஒரு “பாசிஸ்ட், அவர் முதல் நாளில் இருந்தே சர்வாதிகாரியாக” இருப்பார் என்பதாகும்.
ஆனால், வெள்ளை மாளிகையும் ஜனநாயகக் கட்சியும் புதிய நிர்வாகத்தின் பாசிசக் கொள்கைகளுக்கு எதிரான அனைத்து எதிர்ப்பையும் கைவிட்டுள்ளன. “உங்களுக்கு என்ன தேவை என்பதை உறுதிப்படுத்த எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்” என்று பைடென் சூளுரைத்துள்ளார். உண்மையில், பைடென் நிர்வாகத்திற்கு உள்ள ஒரே ஒரு கவலை என்னவென்றால், முதலாவதாக ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்காவின் போர்கள் சுமூகமாக தொடர்வதை உறுதி செய்வதாகும்.
அந்த நோக்கத்திற்காக, பைடென் நிர்வாகம் ட்ரம்ப் பதவியேற்பதற்கு முன்னர் போரின் ஒரு பெரிய விரிவாக்கத்திற்கு இட்டுச் செல்லும் “கள உண்மைகளை” உருவாக்க முயன்று வருகிறது.
கடந்த ஞாயிறன்று, அமெரிக்காவின் போர் ஆயுதங்களைப் பராமரிப்பதற்காக உக்ரேனில் அமெரிக்க இராணுவ ஒப்பந்ததாரர்களை நிலைநிறுத்த வெள்ளை மாளிகை ஒப்புதல் அளித்தது. ரஷ்ய வான்வழித் தாக்குதல்களில் அமெரிக்க இராணுவ ஒப்பந்ததாரர்கள் கொல்லப்படும் சம்பவத்தில், நடைமுறையளவில் ஒரு “கண்ணி பொறியை” உருவாக்கி, போரில் அமெரிக்க ஈடுபாட்டை பாரியளவில் விரிவாக்க ஒரு சாக்குபோக்காக இது பயன்படுத்தப்படலாம்.
அமெரிக்காவின் போர் ஈடுபாட்டின் பாரிய விரிவாக்கம் உக்ரேனிய இராணுவத்தின் ஆழ்ந்த நெருக்கடியின் பின்னணியில் வந்துள்ளது. ரஷ்ய இராணுவம், வட கொரிய துருப்புக்களின் உதவியுடன் மூன்று போர் முனைகளில் கணிசமான முன்னேற்றங்களை அடைந்து வருகிறது. அதே நேரத்தில், பெருகிவரும் வெளியேறுதல்களுக்கு மத்தியில், உக்ரேனிய இராணுவம் பெரும் ஆட்சேர்ப்பு நெருக்கடியை எதிர்கொள்கிறது.
இந்த வாரயிறுதியில் பைடெனின் அறிவிப்பின் பொறுப்பற்ற மற்றும் அதிகரித்து வரும் தாக்கங்களை மிகைப்படுத்திக் கூற முடியாது.
கடந்த செப்டம்பர் பிற்பகுதியில், ரஷ்ய நகரங்கள் மீது அமெரிக்கா விரைவில் நீண்ட தூர தாக்குதல்களை அனுமதிக்கும் என்ற அறிக்கைகளுக்கு விடையிறுப்பாக, புட்டின் ரஷ்யாவின் அணுஆயுத கோட்பாட்டில் முன்மொழியப்பட்ட மாற்றங்களை கோடிட்டுக் காட்டினார். “அணு ஆயுதம் இல்லாத எந்தவொரு நாடும், ஒரு அணு ஆயுத அரசின் பங்களிப்பு அல்லது ஆதரவுடன், ரஷ்யாவுக்கு எதிரான தாக்குதலை நடத்தினால், அது ரஷ்ய கூட்டமைப்பு மீதான ஒரு கூட்டுத் தாக்குதலாக கருதப்படும்” என்று புட்டின் கூறினார்.
மேலும், “ரஷ்யா மற்றும் பெலாரஸ் மீது ஆக்கிரமிப்பு இடம்பெற்றால் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான உரிமை எங்களுக்கு உள்ளது” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
காஸாவில் நடந்து வரும் இனப்படுகொலை, லெபனான் மீதான இஸ்ரேலிய குண்டுவீச்சு மற்றும் அமெரிக்க ஊடகங்களில் “மூன்றாம் உலகப் போர்” குறித்த அதிகரித்தளவில் இடம்பெற்றுவரும் பகிரங்க கலந்துரையாடல்களுக்கு மத்தியில், பைடென் நிர்வாகத்தின் இந்த பாரிய போர் விரிவாக்கம் வருகிறது.
கடந்த மாதம், வாஷிங்டன் போஸ்ட் கட்டுரையாளர் ஜோர்ஜ் வில், “மூன்றாம் உலகப் போர் ஏற்கனவே நடந்து கொண்டிருக்கிறது” என்று அறிவித்தார். “இந்தப் போரின் இலக்காக இருக்கின்ற இன்றைய அச்சு: சீனா, ரஷ்யா, ஈரான் மற்றும் வட கொரியா” என்று வில் எழுதினார்.
Foreign Affairs இதழின் இந்த மாத பதிப்பின் முதன்மைக் கட்டுரை பின்வருமாறு அறிவிக்கிறது: “மட்டுப்படுத்தப்பட்ட போரின் ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டது; விரிவான மோதல்களின் ஒரு சகாப்தம் தொடங்கியுள்ளது. உண்மையில், இன்று உலகம் பார்த்துக் கொண்டிருப்பது கடந்த காலத்தில் தத்துவாசிரியர்கள் “மொத்த போர்” என்று அழைத்ததற்கு ஒப்பானதையாகும். இதில் போரிடுபவர்கள் பரந்த ஆதார வளங்களைப் பெறுகிறார்கள், அவர்களின் சமூகங்களை அணிதிரட்டுகிறார்கள், மற்ற அனைத்து அரசு நடவடிக்கைகளையும் விட போர்முறைக்கு முன்னுரிமை அளிக்கிறார்கள், பரந்த பல்வேறு இலக்குகளைத் தாக்குகிறார்கள், மேலும் அவர்களின் பொருளாதாரங்களையும் மற்ற நாடுகளின் பொருளாதாரங்களையும் மறுவடிவமைக்கிறார்கள்.”
உக்ரேன் போரின் ஒரு எதிர்ப்பாளராக வாய்வீச்சுடன் காட்டிக் கொண்ட போதிலும், 2019 இல் உக்ரேனுக்கு ஆபத்தான ஆயுதங்களை பெரியளவில் வழங்குவதற்கு ஒப்புதல் அளித்த முதல் அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் இருந்தார். அவர், உக்ரேனை நேட்டோவின் பினாமியாக மாற்றவும் பிப்ரவரி 2022 இல் ரஷ்ய படையெடுப்பைத் தூண்டவும் உதவினார்.
2018 இல், ட்ரம்ப் நிர்வாகம் ஒரு தேசிய பாதுகாப்பு மூலோபாயத்தை வெளியிட்டது. “பெரும் சக்தி போட்டியே இப்போது அமெரிக்க தேசிய பாதுகாப்பின் முதன்மை மையமாக உள்ளது” என்று அது அறிவித்தது.
இந்த மூலோபாயம் பைடென் நிர்வாகத்தின் கீழ், உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான போரை விரிவாக்குதல் மற்றும் தூண்டுதல் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.