முன்னோக்கு

ஹாரிஸின் வாஷிங்டன் உரை: பாசிசத்தின் முகத்தை மூடிமறைத்தலும் உடந்தையாக இருத்தலும்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் அக்டோபர் 30, 2024 புதன்கிழமை வட கரோலினாவின் ராலேயில் ஒரு பிரச்சார பேரணியில் பேசுகிறார். [AP Photo/Allison Joyce]

கடந்த செவ்வாய் இரவு வாஷிங்டனில் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் ஆற்றிய உரையானது, அமெரிக்காவில் வளர்ந்து வரும் பாசிச அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கு முற்றிலும் பணிந்து, உடந்தையாக இருந்ததைக் காட்டுகிறது.

மாடிசன் சதுக்க தோட்டத்தில் டொனால்ட் ட்ரம்ப்பின் பேரணி இடம்பெற்று வெறும் இரண்டு நாட்களுக்குப் பின்னர் ஹாரிஸ் தனது உரையை நிகழ்த்தியிருந்தார். ட்ரம்ப்பின் நிகழ்வில் புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் அகதிகள் மீதான வக்கிரமான கண்டனங்கள், நாஜிக்களிடம் இருந்து நேரடியாக பெறப்பட்ட மொழி மற்றும் ஹாரிஸ் உட்பட ட்ரம்பின் அரசியல் எதிர்ப்பாளர்களை நோக்கி விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் நிறைந்திருந்தன.

எவ்வாறாயினும், ஹாரிஸ் தனது கருத்துக்களில் ட்ரம்பின் பேரணியைப் பற்றி குறிப்பிடவில்லை. முன்னாள் ட்ரம்ப்பின் அதிகாரிகள் மற்றும் முன்னாள் ஜெனரல்களின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு அவர் எப்போதும் கவனமாக இருந்த போதிலும், சமீபத்திய வாரங்களில் அவர் பயன்படுத்திய “பாசிசம்” என்ற வார்த்தையை அவர் பயன்படுத்தவில்லை. இது ஒரு புறக்கணிப்பு அல்ல, ஒருவர் குறிப்பிட மறந்துவிடும் விஷயமும் அல்ல. மாறாக, இது கணக்கிடப்பட்ட அரசியல் முடிவாகும்.

ஹாரிஸின் கருத்துக்களுக்கு முன்னதாக, பைனான்சியல் டைம்ஸின் அமெரிக்க தேசிய ஆசிரியர் எட்வார்ட் லூஸ், “அமெரிக்கா, பாசிசம் குறித்து அதிகம் கவலைப்படவில்லை” என்ற தலைப்பின் கீழ் ஒரு கட்டுரையை எழுதியிருந்தார். “ட்ரம்பின் வலிமையான அச்சுறுத்தல்” மீது கவனம் செலுத்துவதைத் தவிர்க்குமாறு ஹாரிஸுக்கு அவர் அறிவுறுத்தினார். பாசிசவாத அச்சுறுத்தல் உண்மையானது என்றாலும், “அமெரிக்கா, ஆச்சரியமான பகுதியைப் பற்றி கவலைப்படவில்லை” என்று லூஸ் கூறினார்.

இந்த அறிவுரைக்கு ஹாரிஸ் செவிசாய்த்தமையானது, அமெரிக்காவில் பாசிசத்தின் அச்சுறுத்தலைப் பற்றி யாரும் கவலைப்படவில்லை என்ற கவலையால் அல்ல. இதற்கு முற்றிலும் மாறாக, எல்லாவற்றிற்கும் மேலாக ஜனநாயகக் கட்சியினர் கவலையையும் சீற்றத்தையும் தூண்டிவிடுவோமோ என்றும், மக்களின் பரந்த அடுக்குகள் எதிர்வினையாற்றும் ஒரு சூழ்நிலையை தோற்றுவித்துவிடுமோ என்றும் அஞ்சுகின்றனர். ஒரு பாசிச அச்சுறுத்தலை எதிர்கொள்கையில், ஜனநாயகக் கட்சியினர் அமைதியை போதிக்கின்றனர்.

ஹாரிஸ் தனது உரையை நிகழ்த்திய இடத்திலிருந்து, ட்ரம்ப்பால் தொடங்கப்பட்ட ஜனவரி 6 ஆட்சிக் கவிழ்ப்பு சதியைப்பற்றி அரிதாகவே குறிப்பிட்டார். “நாட்டுக்குள்ளே இருக்கும் எதிரியை” இலக்கில் வைப்பதற்கான ட்ரம்பின் அச்சுறுத்தல்களைக் குறித்து, ஹரிஸ் போகிற போக்கில், முற்றிலும் ஒருவரின் தனிப்பட்ட செயலாக முன்வைத்தார். அதாவது, “பழிவாங்குவதில் வெறிகொண்ட” மற்றும் “கட்டுப்பாடற்ற அதிகாரத்திற்கு புறப்பட்ட” ஒரு “ஸ்திரமற்ற” மனிதனின் விளைபொருள் என்று அவர் அதனை குறிப்பிட்டார்.

ஹாரிஸின் “இறுதி வாதம்” என்று கூறப்பட்ட அவரது இந்த பெரிய நிகழ்வின் பெரும்பகுதி, ஆகஸ்டில் ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாட்டில் அவர் வழங்கிய உரைகள் மற்றும் பெரும்பாலும் அதே துல்லியமான மொழியைப் பயன்படுத்தி, சோர்வடைந்த ஒருவரின் மறுபரிசீலனையாக இருந்தது.

ட்ரம்பும் குடியரசுக் கட்சியினரும் உள்நாட்டுப் போருக்கான பாஷையில் பேசும்போது, ஹாரிஸ் கூட்டணி ஆட்சிக்கு அழைப்பு விடுத்தார். “பிளவு, குழப்பம் மற்றும் பரஸ்பர அவநம்பிக்கைக்கு” முற்றுப்புள்ளி வைத்து, “சமரசம்” மற்றும் “ஒருமித்த கருத்துக்கு” அவர் மன்றாடினார். “டொனால்ட் ட்ரம்பைப் போலன்றி, என்னுடன் உடன்படாதவர்கள் எதிரிகள் என்று நான் நம்பவில்லை. அவர் அவர்களை சிறையில் அடைக்க விரும்புகிறார். நான் அவர்களுக்கு மேசையில் உட்கார இடம் தருகிறேன்” என்று ஹரிஸ் அறிவித்தார்.

இதில் ஒருவர் கேட்க வேண்டிய கேள்வி கட்டாயம் உள்ளது: அவரையும் மீறி, ஹாரிஸ் தேர்தலில் வெற்றி பெற்று ஜனாதிபதியாக பதவியேற்றால், அவர் ட்ரம்ப் அல்லது அவரது மிக முக்கிய ஆதரவாளர்களுக்கு அவரது அமைச்சரவையில் ஒரு பதவியை வழங்குவாரா? எல்லாவற்றிற்கும் மேலாக ஹாரிஸ், புலம்பெயர்ந்தவர்கள் மீதான ஒரு பாரிய தாக்குதல் உட்பட குடியரசுக் கட்சியின் வேலைத்திட்டத்தின் பெரும்பகுதியை நடைமுறைப்படுத்த ஏற்கனவே சூளுரைத்துள்ளார். இதை அவர் கடந்த செவ்வாயன்று மீண்டும் வலியுறுத்தினார்.

ஜனவரி 6 ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு பைடெனின் விடையிறுப்பை, இப்போது நெருக்கடியின் மிகவும் முன்னேறிய கட்டத்தில் ஹாரிஸ் தொடர்கிறார். ஜனநாயகக் கட்சி அரசியல்வாதிகளைக் கடத்தி கொலை செய்வதற்கான முயற்சிகள் உட்பட தனது சொந்த பதவியேற்பைத் தடுப்பதற்கான ஒருங்கிணைந்த சதியில் இருந்து, பைடென் ஒரு “வலுவான குடியரசுக் கட்சி” இருப்பது அவசியம் என்று முடிவுக்கு வந்தார். நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் சர்வாதிகாரத்திற்கு சதித்திட்டம் தீட்டுபவர்கள் தங்கள் சதித்திட்டங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, முதலாளித்துவ செல்வந்த தட்டுக்களின் பகிரப்பட்ட நலன்களை நடைமுறைப்படுத்துவதில் கைகோர்ப்பார்கள் என்பதே ஹாரிஸின் நம்பிக்கையாக இருக்கிறது.

இதற்கிடையில், ட்ரம்பும் குடியரசுக் கட்சியினரும் எதிர் திசையில் நகர்ந்து, மோசடி தேர்தல் என்ற கூற்றுக்களுடன் வன்முறையைத் தூண்டி வருகின்றனர். கடந்த புதன்கிழமை, பென்சில்வேனியாவில் எந்தவொரு வாக்குப்பதிவும் ஆரம்பிக்கப்படுவதற்கு அல்லது எண்ணப்படுவதற்கு முன்பே, ட்ரம்ப் அவரது சமூக ஊடகத் தளமான ட்ரூத் சோஷியலில், “பென்சில்வேனியா இதற்கு முன்னர் அரிதாகவே பார்த்திராத அளவில் பெரிய அளவில் ஏமாற்று வேலைகள் பிடிபட்டு வருகிறது” என்று குற்றஞ்சாட்டினார். அவரது பிரச்சாரகர்கள் பென்சில்வேனியாவின் பக்ஸ் கவுண்டிக்கு எதிராக “வாக்காளர்களை மிரட்டுவதாக” குற்றம் சாட்டி வழக்கு தொடர்ந்தனர்.

இது ஒரு சட்டபூர்வ சவால் அல்ல, பாசிச கிளர்ச்சிக்கு ஒரு மோசடியான சாக்குப்போக்கை உருவாக்கும் முயற்சி ஆகும். ஏற்கனவே, வாஷிங்டன் மற்றும் ஓரிகானில் வாக்குப் பெட்டிகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன—இது வரவிருக்கும் நாட்கள் எதை முன்னறிவிக்கிறது என்பதற்கான ஒரு அறிகுறியாகும்.

ஜனநாயகக் கட்சியினரின் அரசியல் “மூலோபாயம்” பல காரணிகளால் உந்தப்படுகிறது. முதலாவதாக, பெருநிறுவன மற்றும் நிதிய தன்னலக்குழுவின் கணிசமான பகுதியினர் வெளிப்படையாக ட்ரம்பை ஆதரிக்கின்றனர் அல்லது ட்ரம்ப்பின் வெற்றிக்கு இடமளிக்கின்றனர் என்ற உண்மை உள்ளது. இதுகுறித்து புதன்கிழமை வெளியிட்ட கட்டுரையில் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல், பல தலைமை நிர்வாக அதிகாரிகள் பகிரங்கமாக நடுநிலை வகிக்கும் போது, அவர்கள் அமைதியாக ட்ரம்பை அணுகியுள்ளனர், வால் ஸ்ட்ரீட்டிற்கு எதிரான ஒரு சாத்தியமான பின்னடைவுக்கு எதிரான “காப்பீடாக” ட்ரம்ப் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதை அவர்கள் காண்கின்றனர் என்று குறிப்பிட்டிருந்தது. வாஷிங்டன் போஸ்ட் மற்றும் லொஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸின் பில்லியனர் உரிமையாளர்கள், அடுத்த செவ்வாய்கிழமை தேர்தலில் ஹாரிஸுக்கு ஆதரவான வெளியீடுகளை வெளியிடுவதற்கு அவர்களின் ஆசிரியர் குழுக்களை தடுத்துள்ளனர்.

அனைத்திற்கும் மேலாக, வர்க்கப் போராட்டத்தை ஒடுக்குவதற்கு ஜனநாயகக் கட்சிக்கும், குடியரசுக் கட்சிக்கும் இரு-கட்சி ஆட்சிமுறை அவசியப்படுகின்றன. ஹாரிஸ் அவரது உரையில் “குழப்பம்” மற்றும் “பிரிவு” பற்றி திரும்பத் திரும்ப முதன்மையாக குறிப்பிடுவது, அரசு எந்திரத்திற்குள் உள்ள மோதல்களைப் பற்றியது அல்ல. அமெரிக்காவிற்குள் வர்க்க ஆட்சியின் பாரம்பரிய அரசியல் ஸ்தாபகங்களின் முறிவு, தொழிலாள வர்க்கத்தின் தலையீட்டிற்கு ஒரு திறப்பை வழங்கும் என்று ஜனநாயகக் கட்சியினர் பீதியடைந்துள்ளனர். அவர்களின் உண்மையான எதிரி, எப்போதும் போல, வலதுபுறத்தில் இருந்து அல்ல, மாறாக இடதுபுறத்தில் இருக்கிறது.

இறுதியாக, ஜனநாயகக் கட்சியினரின் மையமான மற்றும் மேலான அக்கறையானது போரின் விரிவாக்கம் ஆகும். உண்மையில், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு ஹாரிஸ் வெளியிட்ட மிக முக்கியமான அறிக்கை, ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாட்டில் அவர் ஆற்றிய உரையில் இருந்து எடுக்கப்பட்ட அவரது உறுதிமொழியாகும். அதில், “தலைமைத் தளபதியாக, அமெரிக்கா உலகிலேயே மிகவும் பலமான, மிகவும் மரணகரமான சண்டையிடும் சக்தியைக் கொண்டிருப்பதை நான் உறுதிப்படுத்துவேன்” என்ற அவரது சூளுரையாகும்.

தேர்தலுக்கு முந்தைய நாட்கள், வாரங்களில், இஸ்ரேல், வெள்ளை மாளிகையின் ஆதரவுடன், வடக்கு காஸா மக்கள் மீது பாரிய படுகொலை தாக்குதலை மேற்கொண்டு பட்டினி போட்டு, லெபனானுக்கு எதிரான போரையும் ஈரானுக்கு எதிரான ஏவுகணைத் தாக்குதல்களையும் தொடங்கியுள்ளது. மத்திய கிழக்கில் நடக்கும் யுத்தம் உலகளாவிய போரின் ஒரு பகுதியாகும், இதில் உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்கா மற்றும் நேட்டோவின் போர் மற்றும் சீனாவுடனான மோதலும் அடங்கும்.

ட்ரம்ப் மற்றும் பாசிசவாத அச்சுறுத்தலுக்கு எதிரான ஒரு அரணாக ஜனநாயகக் கட்சி இருப்பதாக வலியுறுத்தும் “குறைந்த தீமைவாதம்” என்ற வாதம் அரசியல்ரீதியாக திவாலானதாகும். ட்ரம்பை நிறுத்த ஹாரிஸை ஆதரிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்த பெர்னி சாண்டர்ஸ், ஒகாசியோ-கோர்டெஸ் மற்றும் பிறரால் இப்போது பயன்படுத்தப்படும் அதே வாதங்கள் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பைடெனுக்கு அனைத்து எதிர்ப்பையும் அடிபணியச் செய்ய பயன்படுத்தப்பட்டன. அது எதனை உற்பத்தி செய்தது? அதில் ட்ரம்ப் அரசியல் ரீதியாக பலமடைந்தார்.

காஸாவில் இடம்பெற்றுவரும் இனப்படுகொலையின் இரத்தத்தில் மூழ்கி, தீவிரமடைந்து வரும் ஓர் உலகளாவிய போரை மேற்பார்வை செய்து கொண்டிருப்பது மட்டுமல்ல, வோல் ஸ்ட்ரீட், இராணுவ புலனாய்வு அமைப்புகள் மற்றும் உயர் நடுத்தர வர்க்கத்தின் தனிச்சலுகை கொண்ட பிரிவுகளின் ஒரு கட்சியாக உள்ள ஜனநாயகக் கட்சி, ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதில் இலாயக்கற்றும், ஆர்வமற்றும் உள்ளது. பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தில் ஹாரிஸ் சிறந்த தரம் வாய்ந்தவராக இருந்தால், இந்தப் போராட்டம் ஏற்கனவே தோற்றுவிட்டது.

இரண்டு முதலாளித்துவக் கட்சிகளுக்கும் எதிராக, சுயாதீனமாக அணிதிரட்டப்பட்ட தொழிலாள வர்க்கத்தால் மட்டுமே முதலாளித்துவம் பாசிச சர்வாதிகாரத்திற்குள் இறங்குவதை எதிர்க்க முடியும்.

Loading