காஸாவிலுள்ள ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் பாலஸ்தீன ஓவியர் மஹாசென் அல்-காதிப் கொல்லப்பட்டுள்ளார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

அக்டோபர் 18 அன்று, ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் காஸாவைச் சேர்ந்த டிஜிட்டல் ஓவியரான மஹாசென் அல்-காதிப் கொல்லப்பட்டார். சர்வதேச சட்டத்தை அப்பட்டமாக மீறும் இந்த தாக்குதலில், இந்த கலைஞரின் நெருங்கிய குடும்பத்தில் எஞ்சியிருந்த உறுப்பினர்கள் உட்பட 33 பாலஸ்தீனிய பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலின் குற்றங்களை செயல்படுத்தி அனுமதி அளித்து வருகின்ற பைடென்-ஹாரிஸ் நிர்வாகம் மற்றும் பிற ஏகாதிபத்திய அரசாங்கங்களே இந்த இளம் பெண்ணின் படுகொலைக்கு பொறுப்பாகும்.

மஹாசென் அல்-காதிப் (அவரது சமூக ஊடகத்திலிருந்து)

ஒரு காட்சி கதைசொல்லிக் கலைஞராக பணிபுரிந்துவந்த 32 வயதான மஹாசென் அல்-காதிப், உலகெங்கிலும் உள்ள பல்வேறு பார்வையாளர்களுக்காக, கதா பாத்திரங்களை வடிவமைத்து வந்துள்ளார். கலாச்சாரம், கலை மற்றும் ஊடகத்திற்காக ரவாசி என்ற பாலஸ்தீன அறக்கட்டளையையும் அவர் நிறுவியிருந்தார். தனது டிஜிட்டல் விளக்கப்படங்களை இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்டோக்கில் வெளியிட்ட அல்-காதிப்புக்கு சமூக ஊடகங்களில் பல பின்தொடர்வாளர்கள் இருந்து வந்துள்ளனர்.

அக்டோபர் 7, 2023 இல் தொடங்கிய பாலஸ்தீனியர்கள் மீதான காட்டுமிராண்டித்தனமான படுகொலைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த அனைத்துக் காலத்திலும், சியோனிச அரசின் போர்க்குற்றங்களை சித்தரிக்கவும், மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக குரல் எழுப்பவும், தனது விளக்கப்படங்களை அல்-காதிப் பயன்படுத்தி வந்துள்ளார். பயங்கரவாதத்தின் தருணங்களை சித்தரிப்பதுடன், மனித நெகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் இந்தக் கலைஞர் தனது படைப்பில் சித்தரித்தார்.

“காஸாவின் மிகவும் தொழில்முறையான, அடக்கமான மற்றும் அழகான கலைஞர்களில் ஒருவர் மஹாசென்” என்று இந்தக் கலைஞரின் மாணவியும், நண்பருமான ஜுமானா ஷாஹின் ஈரானிய அரசாங்கத்திற்கு சொந்தமான செய்தி வலையமைப்பான பிரஸ் டிவிக்கு தெரிவித்தார். “மஹாசென் கற்பித்த அல்லது சந்தித்த அனைவருக்கும், ஒரு நீடித்த தோற்ற நினைவுகளை விட்டுச் சென்றுள்ளார்”.

“இந்தக் கலைஞர் தனது தைரியம் மற்றும் விடாமுயற்சியால் தனது நண்பர்களைக் கவர்ந்தார். அவரைப் போல நெகிழ்ச்சியான ஒருவரை நான் சந்தித்ததில்லை. அவர் பட்டினியால் அவதிப்படுவதைப் பற்றியும், குண்டுவீச்சுக்களின் பயங்கரமான ஒலிகளைப் பற்றியும் பேசும்போது கூட, அதை நகைச்சுவை உணர்வுடன் குறிப்பிட்டார்” என்று ஷாஹின் கூறினார். “அவர் தனது அறிவையும் அனுபவங்களையும் முடிந்தவரை பகிர்ந்து கொள்ள விரும்பினார், ஏனென்றால் அவர் கொல்லப்பட்டால், குறைந்த பட்சம் அவருடைய அறிவு மற்றவர்களின் மூலம் வாழும்” என்று அல்-காதிப் கூறியதாக, ஷாஹின் தெரிவித்தார்.

கடந்த ஜனவரியில், அல்-காதிப் தனது மரணத்தை எதிர்பார்த்து ஒரு பேஸ்புக் இடுகையை வெளியிட்டிருந்தார். அதில், அவர் நினைவில் வைக்க விரும்பிய தனது புகைப்படத்தையும் சேர்த்திருந்தார்.

அல்-காதிப்பின் தந்தை இறந்த பிறகு, அவர் தன் குடும்பத்தின் சுமையை எடுத்துக்கொண்டார். பொதுமக்கள் மீதான குற்றவியல் மற்றும் திட்டமிட்ட இஸ்ரேலிய தாக்குதல்களால், மில்லியன் கணக்கான இதர பாலஸ்தீனியர்களைப் போலவே, அவர்கள் பலமுறை இடம்பெயர வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டனர். பல விமானக் குண்டு வீச்சினால், அவர்களது வீடு சேதமடைந்தது. அல்-காதிப்பின் கலைப் பொருட்களும் திருடப்பட்டன. இதனால், அவர் தனது குடும்பத்தின் வாழ்வாதாரத்தை ஈட்டும் திறனை இழந்தார்.

காஸாவில் இருந்து உயிர் தப்பிக்க முயன்ற அல்-காதிப், கடந்த ஜூன் மாதம் GoFundMe என்ற பக்கத்தை உருவாக்கினார். அதில், “நான் ஒரு டிஜிட்டல் கலைஞர், இந்த கடினமான சூழ்நிலையில், எனது கலை … பிக்சல்கள் மற்றும் வண்ணங்கள் மூலம் ஆறுதலையும் நெகிழ்ச்சியையும் கண்டடைகிறேன்” என்று அவர் எழுதியிருந்தார்.

இஸ்ரேல் மனசாட்சியின்றி உணவு, தண்ணீர் மற்றும் மனிதாபிமான உதவிகள் காஸாவிற்குள் நுழைவதை தடுத்ததன் விளைவுகளிலிருந்து, இந்தக் கலைஞரும் அவரது குடும்பத்தினரும் நிச்சயமாகத் உயிர் தப்ப முடியவில்லை. மாதக்கணக்கில், இந்தக் குடும்பம் உயிர்வாழ்வதற்கு இலைகளை சாப்பிடும் நிலைக்கு தள்ளப்பட்டது. கடந்த ஆகஸ்டில், இந்தக் கலைஞரின் குடும்பம் ஒரு கோழியைப் பிடிக்க முடிந்தபோது, அல்-காதிப் தனது சகோதரனின் எதிர்வினையின் வீடியோவை வெளியிட்டார். பிடித்த கோழியை எப்படி சமைப்பது என்று ஆலோசித்தபடி அவரது சகோதரன் மகிழ்ச்சியுடன் விளையாடிக் கொண்டிருந்தான். அரிசி மற்றும் வறுத்த காய்கறிகளின் பாரம்பரிய உணவான மக்லூபாவை உருவாக்க அவர் பரிந்துரை செய்தார். பாரம்பரியமாக பண்டிகை காலங்களில் உண்ணும் இந்த உணவை தயாரிப்பதற்காக அல்-காதிப் கோழியை வேக வைக்க பரிந்துரைத்தார். ஆனால், இந்தக் கோழியை எட்டு பேருக்குப் பிரித்துக் கொடுக்க வேண்டும்.

இனப்படுகொலையின் ஆண்டு நிறைவையொட்டி, அல்-காதிப் ஒரு சமூக ஊடக இடுகையில், அவரும் அவரது குடும்பத்தினரும் ஜபாலியாவில் தங்கியிருப்பதாக எழுதினார். “ஏனென்றால் நாங்கள் பலமுறை இடம்பெயர்ந்து வாழ்ந்த பிறகு, உயிர் தப்பிக்க முடியாது என்று எங்களுக்குத் தெரியும்” என்று அதில் பதிவிட்டிருந்தார்.

நாங்கள் எரிந்து கொண்டிருக்கிறோம்.

இந்த கலைஞர் கொல்லப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, நாங்கள் எரிந்து கொண்டிருக்கிறோம் என்ற தனது கடைசி விளக்கப்படத்தை வெளியிட்டார். டெய்ர் அல்-பலாவில் உள்ள அல்-அக்ஸா மருத்துவமனை வளாகத்தில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலால் எரித்துக் கொல்லப்பட்ட காஸாவில் 19 வயது மாணவரான ஷபான் அல்-டலூவிற்கு இந்த விளக்கப்படம் அஞ்சலி செலுத்துகிறது. அந்த நேரத்தில் சிகிச்சை பெற்று வந்த அல்-டலூ, இரத்தக் குழாய் வழியாக (IV) சொட்டுநீரை உட்செலுத்தும் கருவியுடன் இணைக்கப்பட்டிருந்தார்.

வடக்கு காஸா மீது இஸ்ரேலின் கடுமையான குண்டுவீச்சுக்கள் தொடர்வதால், இந்தக் கலைஞரின் குடும்பத்தால் அல்-காதிப்பின் உடல் எச்சங்களை உரிமை கோர முடியாததாகிவிட்டது. இது, அல்-காதிப்பின் படுகொலையின் கொடுமையை அதிகப்படுத்துகிறது. ஆபத்தான சூழ்நிலையால் கமல் அத்வான் மருத்துவமனையில் உள்ள அவரது உடலை இன்னும் அடக்கம் செய்ய முடியவில்லை என்று அல்-காதிப்பின் மாமா ஹோசம், Press தொலைக்காட்சிக்கு தெரிவித்தார்.

பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகத்தின் சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி இன்றுவரை, கிட்டத்தட்ட 16,765 குழந்தைகள் உட்பட, இஸ்ரேல் காஸாவில் குறைந்தது 42,792 பேரைக் கொன்றுள்ளது. மேலும், 100,412 பேர் காயமடைந்துள்ளனர். மேற்குக் கரையில், குறைந்தது 165 குழந்தைகள் உட்பட, 760 பேர்களை இஸ்ரேல் கொன்றுள்ளதுடன், மேலும் 6,250 க்கும் அதிகமானோருக்கு காயத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இந்த உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்கள் குறிப்பிடத்தக்களவில் குறைத்து மதிப்பிடப்பட்டதாகவே அறியப்படுகிறது.

பாலஸ்தீன மக்களை அழித்தொழிப்பது மட்டுமல்லாமல், அவர்களின் கலாச்சாரத்தையும் அழித்தொழிக்கும் இஸ்ரேலிய தாக்குதல்களினால் சமீபத்தில் பாதிக்கப்பட்டவர்களில் அல்-காதிப்பும் ஒருவராவர். பாலஸ்தீனிய கலாச்சார அமைச்சகத்தின் கூற்றுப்படி, ஜனவரி மாதம் வரை, சியோனிச அரசு 28 பாலஸ்தீனிய கலைஞர்கள், புத்திஜீவிகள் மற்றும் எழுத்தாளர்களைக் கொன்றுள்ளது. இன்று இந்த எண்ணிக்கை சந்தேகத்திற்கு இடமின்றி அதிகமாக உள்ளது. இனப்படுகொலையால் பாதிக்கப்பட்டவர்களில் பின்வரும் கலைஞர்களும் அடங்குவர்:

  • ஹெபா ஜாகவுட், காட்சி கலைஞர் மற்றும் நுண்கலை ஆசிரியர்

  • ஹெபா அபு நடா, கவிஞர் மற்றும் ஆசிரியர்

  • ஒமர் அபு ஷாவிஷ், கவிஞர், நாவலாசிரியர் மற்றும் சமூக ஆர்வலர்

  • இனாஸ் சக்கா, நடிகை, நாடக ஆசிரியர் மற்றும் ஆசிரியர்

  • யூசப் தவாஸ், இசைக்கலைஞர், எழுத்தாளர், பத்திரிகையாளர் மற்றும் புகைப்படக்காரர்

  • முகமது க்ரைக்கியா, கார்ட்டூனிஸ்ட், கலைஞர் மற்றும் புகைப்படக்காரர்

  • நூரல்தீன் ஹஜ்ஜாஜ், நாடக ஆசிரியர் மற்றும் நாவலாசிரியர்

  • ரெஃபாத் அல்-அரீர், கவிஞர், ஆசிரியர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்

இஸ்ரேலின் மிருகத்தனமான வெறித்தனமானது, முதலாளித்துவத்தின் இறுதி வீழ்ச்சியின் கூர்மையான மற்றும் மிகவும் பயங்கரமான வெளிப்பாடாகும். அதன் தொடர்ச்சியான இருப்பு மனிதகுலத்தின் உயிர்வாழ்வோடு ஒருபோதும் பொருந்திப் போகாது என்பதை குறிக்கிறது. இனப்படுகொலைக்கு முடிவு கட்டுதல், கலைகளைப் பாதுகாத்தல், அதனைப் புதுப்பித்தல் மற்றும் நாகரிகத்தைப் பாதுகாத்தல் போன்ற பணிகள் சோசலிசத்திற்கான போராட்டத்திலிருந்து பிரிக்க முடியாதவையாகும்.

Loading