முன்னோக்கு

ட்ரம்ப் சர்வாதிகார ஆட்சியை நாடுகிறார் என்பதை கமலா ஹாரிஸ் ஒப்புக்கொள்கிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வியாழக்கிழமை, ஆகஸ்ட் 29, 2024 அன்று மிச்சிகனில் உள்ள பாட்டர்வில்லில் உள்ள ஆல்ரோ ஸ்டீலில் ஒரு பிரச்சார நிகழ்வின் போது உரையாற்றுகிறார். [AP Photo/Alex Brandon]

ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலும், வெள்ளை மாளிகையின் முன்னாள் தலைமை தளபதியுமான ஜோன் கெல்லி, முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை ஒரு பாசிசவாதி என்று வர்ணித்தார். மேலும், ட்ரம்ப் ஹிட்லரைப் புகழ்ந்ததாகவும் “ஹிட்லருக்கு இருந்த தளபதிகளை” விரும்புகிறார் என்றும் ஜோன் கெல்லி கூறினார். அதாவது, தனிப்பட்ட முறையில் அவருக்கு முற்றிலும் விசுவாசமாக இருக்கும் அதிகாரிகள் மற்றும் அவரது உள்நாட்டு எதிரிகளுக்கு எதிராக தனது படைகளைப் பயன்படுத்துவதற்கான உத்தரவுகளைப் பின்பற்றத் தயாராக இருக்கும் தளபதிகளை ட்ரம்ப் விரும்புகிறார் என்று இதன் அர்த்தமாகும்.

தி அட்லாண்டிக் (The Atlantic) இதழில் ஒரு முகப்புக் கட்டுரைக்கான நேர்காணல்களிலும், பின்னர் புதனன்று நியூ யோர்க் டைம்ஸுக்கு அளித்த ஒரு பின்னூட்டத்திலும் கெல்லி தனது இந்தக் கருத்துக்களை வெளியிட்டார். அவரது கருத்துக்கள், பரவலான ஊடக செய்திகளையும், ட்ரம்ப்பின் ஜனாதிபதி பிரச்சாரத்திற்கு கடுமையான கண்டனங்களையும், நவம்பர் 5 தேர்தலில் அவரது ஜனநாயகக் கட்சி போட்டியாளரான துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸிடம் இருந்து ஒரு சுருக்கமான, ஆனால் குறிப்பிடத்தக்க அறிக்கையையும் தூண்டின.

சுமார் பிற்பகல் 1:00 மணியளவில் அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியே வந்த ஹாரிஸ், கெல்லியின் கருத்துக்களுக்கும் அமெரிக்க அரசாங்கத்திற்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் “நாட்டுக்குள்ளே இருக்கும் எதிரியை” தாக்குவதற்கு இராணுவத்தைப் பயன்படுத்தப் போவதாக கடந்த வாரம் ட்ரம்ப் விடுத்த அறிக்கைக்கும் இடையிலான தொடர்பை எடுத்துரைத்தார். அவர் தொடர்ந்தார்:

மேலும், நான் மேற்கோள் காட்டியுள்ளபடி, டொனால்ட் ட்ரம்ப் நிச்சயமாக பாசிசத்தின் பொதுவான வரையறைக்குள் வருபவர் என்பது ஜோன் கெல்லியின் வார்த்தைகளிலிருந்து தெளிவாகிறது. உண்மையில், ட்ரம்ப் முதல் நாளிலேயே ஒரு சர்வாதிகாரியாக இருப்பேன் என்று சபதம் செய்தார். மேலும், அவரது தனிப்பட்ட மற்றும் அரசியல் பழிவாங்கல்களை முன்னெடுக்க இராணுவத்தை தனது தனிப்பட்ட ஆயுதக் குழுவாக பயன்படுத்த சூளுரைத்துள்ளார்.

“எனவே, இறுதி முடிவு இதுதான். டொனால்ட் ட்ரம்ப் என்ன விரும்புகிறார் என்பது எங்களுக்குத் தெரியும். கட்டுப்பாடற்ற அதிகாரத்தை அவர் விரும்புகிறார். 13 நாட்களில் கேட்கப்படும் கேள்வி இதுதான்: அமெரிக்க மக்கள் எதை விரும்புகிறார்கள்?” என்று ஹாரிஸ் கூறினார்.

குடியரசுக் கட்சியின் ஜனாதிபதிக்கான வேட்பாளர் ஒரு பாசிசவாத சர்வாதிகாரி என்பதை, ஹாரிஸ்சின் இந்த அறிக்கை ஒப்புக் கொள்கிறது. ஹாரிஸ் வேட்பாளராக நியமிக்கப்பட்டதற்குப் பிந்தைய இரண்டு மாதங்களில், அவர் மேற்கொண்ட பிரச்சாரத்தில், இந்த கருத்தைக் கூறுவதை அவர் தவிர்க்க முனைந்து வந்துள்ளார். ஆனால், இது முற்றிலும் கோழைத்தனமானது, சர்வாதிகாரத்திற்கான ட்ரம்பின் உந்துதலை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைக்கு எந்த அழைப்பையும் ஹரிஸ் விடுக்கவில்லை. ட்ரம்ப் தேர்தலில் வெற்றி பெற்றால், அமெரிக்க மக்கள் தான் குற்றம் சாட்டப்படுவார்கள் என்பதை மட்டுமே அவர் பரிந்துரைக்கிறார்.

ஜனவரி 6, 2021 ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியில், எதேச்சாதிகார ஆட்சிக்கான அவரது ஆரம்ப முயற்சியின் தோல்விக்குப் பிறகு, ட்ரம்ப் எப்படி அரசியல் ரீதியாக மீண்டும் வர முடிந்தது என்பதற்கு ஹாரிஸ் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. அப்போது பல ஆயிரக் கணக்கான ட்ரம்பின் ஆதரவாளர்கள், வாஷிங்டனுக்கு அழைக்கப்பட்டு, அவரது தேர்தல் தோல்விக்கான காங்கிரஸின் சான்றிதழைத் தடுக்கும் முயற்சியில் காங்கிரஸ் கட்டிடமான கேபிடோலைத் தாக்கினர்.

ட்ரம்ப் ஒரு தனிநபர் அல்ல. மாறாக, அவர் குடியரசுக் கட்சியின் வேட்பாளர். குடியரசுக் கட்சியின் பெரும்பான்மையான காங்கிரஸ் பிரதிநிதிகள் 2020 இல் பைடென் மற்றும் ஹாரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டதன் சட்டபூர்வத்தன்மையை ஒப்புக் கொள்ள மறுத்திருந்தனர். ஆனால், ஹாரிஸ் வெளியிட்ட அறிக்கையில், குடியரசுக் கட்சியைக் குறித்தோ அல்லது முற்றிலும் ட்ரம்புக்கு அடிபணியச் செய்யும் ஒரு பகிரங்கமான பாசிசவாத அரசியல் அமைப்பாக அது உருமாற்றம் அடைந்தது குறித்தோ எந்தக் குறிப்பும் இல்லை.

நவம்பர் 5 வாக்கெடுப்பு நெருங்குகையில் இரண்டு முக்கிய கூறுபாடுகள் உள்ளன. முதலாவதாக, 2021 ஜனவரி 6 அன்று மிகவும் வெளிப்படையாக காட்டப்பட்ட அரசியல் நிகழ்வுகளை வடிவமைக்க, நாடாளுமன்றத்திற்கு அப்பாற்பட்ட வன்முறையைப் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. இப்போது 2024 தேர்தலுக்கு முன்னதாக மிகவும் பரந்த மற்றும் மிகவும் திட்டமிட்ட அளவில் இது தயாரிக்கப்படுகிறது. தேர்தல் அதிகாரிகளுக்கு எதிராக நூற்றுக்கணக்கான அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன. தேர்தல் தினத்தன்றும் அதற்குப் பிந்தைய நாட்களிலும் வாக்குப்பதிவின் முடிவுகளை அட்டவணைப்படுத்துபவர்கள் மீது ஆயுதந்தாங்கிய தாக்குதல்கள் நடத்தப்படலாம்.

வாக்களிப்பின் முடிவுகள் ஆழ்ந்த அரசியல் நெருக்கடியின் காலகட்டத்தை திறந்து விடும். ட்ரம்ப் வெற்றி பெற்றால், அவர் ஏற்கனவே முன்னறிவித்துள்ள புலம்பெயர்ந்தோருக்கு எதிரான பாரிய அடக்குமுறை நடவடிக்கைகளில் தொடங்கி, பல்லாயிரக்கணக்கான உழைக்கும் மக்களை சுற்றி வளைத்து வெளியேற்றுவதாக சூளுரைத்து, உடனடியாக ஒரு பொலிஸ்-இராணுவ சர்வாதிகாரத்தை நிறுவுவார்.

ஹாரிஸ் வெற்றி பெற்றால், அவர் பதவியேற்பதற்கு இன்னும் 11 வாரங்கள் இருக்கும். இந்த சமயத்தில் ட்ரம்பும் குடியரசுக் கட்சியினரும் ஒருகாலத்தில் “அமைதியான அதிகார மாற்றம்” என்று அழைக்கப்பட்டதைத் தகர்க்கும் நோக்கில் சட்டபூர்வ மற்றும் சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளின் ஒரு சரமாரித் தாக்குதலை தயாரித்துள்ளனர். குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள மாநில சட்டமன்றங்கள், அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் அங்கி அணிந்த பாசிஸ்டுகள் மற்றும் ஜனவரி 6 க்கு தலைமை தாங்கிய ஆயுதமேந்திய குண்டர்கள் ஆகிய அனைவரும் இதற்கு களமிறக்கப்படுவார்கள்.

இரண்டாவது முக்கிய காரணி, இந்த பெருகும் சர்வாதிகார அச்சுறுத்தலுக்கு ஜனநாயகக் கட்சி செயலற்ற முறையில் இணங்கி நிற்பதாகும். ஒரு “வலுவான குடியரசுக் கட்சியை” பராமரிப்பதே தனது இலக்கு என்று அறிவித்த பைடென், வெள்ளை மாளிகையில் நுழைந்ததில் இருந்து ஜனநாயகக் கட்சியின் கொள்கையாக இதனைக் கடைப்பிடித்து வருகின்றார்.

ஜனவரி 6, 2021 இன் தோல்வியுற்ற ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்குப் பின்னர், பைடென்-ஹாரிஸ் நிர்வாகம் வேண்டுமென்றே குடியரசுக் கட்சிக்கு புத்துயிர் அளிக்க முயன்றது. ஒரு ஆக்கிரமிப்பு வெளியுறவுக் கொள்கைக்கு இரு கட்சி அடிப்படையை வழங்குவதற்காக, முதலில் ரஷ்யாவிற்கு எதிராக (உக்ரேனில் போரைத் தூண்டியது) இயக்கப்பட்டது, பின்னர் மத்திய கிழக்கிற்கும் (காசா, லெபனான் மற்றும் விரைவில் ஈரான்), விரிவடைந்து இறுதியில் சீனாவிற்கு எதிராகவும் இலக்கு வைக்கப்பட்டது.

ஹாரிஸின் பிரச்சாரமே குடியரசுக் கட்சியினரை நோக்கிய நோக்குநிலையை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இதில் லிஸ் செனியுடன் தொடர்ச்சியான ஹாரிஸின் தேர்தல் பிரச்சார தோற்றங்கள் மற்றும் தனது மந்திரிசபையில் ஒரு குடியரசுக் கட்சியை சேர்ந்தவரை நியமிப்பதாக மீண்டும் மீண்டும் அளித்துவரும் வாக்குறுதிகள் ஆகியவை அடங்கும்.

பைடெனைப் போலவே, ஹாரிஸும் சர்வாதிகாரத்தின் அச்சுறுத்தலை டொனால்ட் ட்ரம்பின் ஆளுமையில் இருந்து மட்டுமே வெளிப்படுத்துகிறார். ஆனால் பாசிசம் வானத்திலிருந்து விழுவதில்லை. முதலாளித்துவ வர்க்கம் அதன் வர்க்க ஆட்சியின் (அரசியலமைப்பு, முறையான ஜனநாயகம், இரு கட்சி அமைப்பு போன்றவை) வரலாற்றுரீதியாக வளர்ந்த வடிவங்களைத் தூக்கி எறிந்துவிட்டு, வர்க்கப் பதட்டங்கள் முறிவுப் புள்ளியை எட்டும்போது, ​​வேறு வழியின்றி சர்வாதிகாரத்தில் சூதாடுகிறது.

எலோன் மஸ்க் போன்ற சில செல்வந்த பில்லியனர்கள், சர்வாதிகார அதிகாரத்திற்கான ட்ரம்பின் முயற்சியை ஆதரிக்கின்றனர். மற்றவர்கள் -ஹாரிஸ் சார்பு அரசியல் நடவடிக்கைக் குழுக்களுக்கு $50 மில்லியன் டாலர் செலுத்துவதை உறுதிப்படுத்திய பில் கேட்ஸ் உட்பட- ட்ரம்பின் அபிலாஷைகளை மிகவும் ஆபத்தானதாகக் கருதுகின்றனர். இது அமெரிக்காவை அரசியல் ரீதியாக ஸ்திரமின்மைக்கு ஆளாக்கும் மற்றும் அவர்களின் வர்க்க ஆட்சியைக் குறைமதிப்பிற்கு உட்படுத்த அச்சுறுத்துகிறது.

ஆனால், ஆளும் வர்க்கத்திற்குள்ளான இந்தப் பிளவுகள், அவை எவ்வளவு ஆழமாக இருந்தாலும், ஒரு தந்திரோபாய குணாம்சத்தைக் கொண்டுள்ளன. அடிப்படை வர்க்கப் பிரச்சினைகளில், நிதியப் பிரபுத்துவத்தின் பிரம்மாண்டமான செல்வத்தை அதை உற்பத்தி செய்யும் பெருந்திரளான தொழிலாளர்களுக்கு எதிராக பாதுகாப்பது, மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகளாவிய நலன்களை அதன் வெளிநாட்டு விரோதிகளுக்கு எதிராக பாதுகாப்பது என்ற விடயத்தில், பெருநிறுவன செல்வந்த தட்டுக்களின் அனைத்து பிரிவுகளும் உடன்பாட்டில் உள்ளன.

தேர்தல் முடிவு எப்படி இருந்தாலும், சர்வாதிகாரம் மற்றும் உலகப் போரை நோக்கிய போக்குகள் மறைந்துவிடப் போவதில்லை. ஹாரிஸ் வெற்றி பெற்றால், குடியரசுக் கட்சி அவரது சட்டபூர்வத்தன்மையை நிராகரிக்கும், ட்ரம்ப் நடைமுறையளவில் நாடுகடத்தப்பட்ட ஜனாதிபதியாக செயல்படுவார். இரண்டாவது மற்றும் மூன்றாவது பெரிய மாநிலங்களான புளோரிடா மற்றும் டெக்சாஸ் உட்பட பல மாநிலங்களை பாசிசவாத வலது கட்டுப்படுத்தும். ஹாரிஸின் போர்வெறி மற்றும் இராணுவவாத கொள்கைகள் அதிவலதைப் பலப்படுத்த மட்டுமே செய்யும்.

ட்ரம்ப் தோற்கடிக்கப்பட்டாலும் பல மில்லியன் வாக்குகளை வெல்வார். இது பாசிசம் மற்றும் சர்வாதிகாரத்தை விரும்பும் பத்து மில்லியன் கணக்கான மக்கள் இருக்கிறார்கள் என்பதால் அல்ல. மாறாக, வோல் ஸ்ட்ரீட் மற்றும் இராணுவ-உளவுத்துறை எந்திரத்தின் கருவியான ஜனநாயகக் கட்சி உழைக்கும் மக்களுக்கு எதையும் வழங்கவில்லை என்பதே இதற்குக் காரணமாகும். இது, வீழ்ச்சியடைந்து வரும் வாழ்க்கைத் தரங்கள், நொறுங்கிச் செல்லும் சமூக சேவைகள், மற்றும் ஏகாதிபத்திய போரின் பெருகிவரும் நிதி செலவுகள் மற்றும் மனித இழப்புக்கள் ஆகியவற்றால் கொண்டு வரப்பட்ட, அடக்கி வைக்கப்பட்டுள்ள சமூக அதிருப்தியில் இருந்து குடியரசுக் கட்சியினரை லாபம் அடைய அனுமதிக்கிறது.

இந்தக் காலகட்டம் முழுவதிலும், சோசலிச சமத்துவக் கட்சியும் உலக சோசலிச வலைத் தளமும் உலகப் போரை நோக்கிய ஏகாதிபத்திய முனைப்பின் தவிர்க்கவியலாத பின்விளைவுகள் குறித்து தொடர்ந்து எச்சரித்து வந்திருக்கின்றன. வெளிநாட்டுப் போர் என்பது உள்நாட்டில் தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக உரிமைகள் மற்றும் வாழ்க்கைத் தரங்களுக்கு எதிரான போருடன் கைகோர்க்கும் என்று நாங்கள் விளக்கி வருகிறோம்.

இந்த எச்சரிக்கைகள் நிகழ்வுகளால் ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலைமைகளின் கீழ், உலக சோசலிச வலைத் தள வாசகர்களும் ஆதரவாளர்களும் அவசியமான முடிவுகளை எடுப்பது இன்றியமையாததாகும். தொழிலாள வர்க்கத்தின் நலன்களை வெளிப்படுத்தும் ஒரு வேலைத்திட்டத்தின் அடிப்படையில், ஒரு அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கு வெளியே பாசிசத்தை எதிர்க்கவும் முடியாது மற்றும் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கவும் முடியாது. அரசியல் ரீதியில் முன்வந்து, சோசலிசத்துக்காகப் போராடும் தொழிலாள வர்க்கத்தின் ஒரு பாரிய புரட்சிகர இயக்கத்தின் முன்னணித் தளமாக சோசலிச சமத்துவக் கட்சியை கட்டியெழுப்ப, அதில் இணைந்துகொள்ள வேண்டிய நேரம் இதுவாகும்.

Loading