மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
கடந்த வெள்ளிக்கிழமையன்று பேர்லினில் அமெரிக்க, ஜேர்மன், பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு அதிகாரிகள் ஒன்று கூடி ஈரான் மீது பாரிய குண்டுவீச்சுக்கான இஸ்ரேலிய திட்டங்களைப் பற்றி கலந்துரையாடிய பின்னர், வார இறுதியில் இஸ்ரேலியப் படைகள் வடக்கு காஸா மற்றும் லெபனானில் உள்ள இலக்குகள் மீதான தாக்குதலை தொடுத்தன.
காஸா சுகாதார அமைச்சரகத்தின் கூற்றுப்படி, நேற்று பெய்ட் லஹியாவில் இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சில் குறைந்தது 87 பேர் கொல்லப்பட்டும், குறைந்தது 40 பேர்கள் காயமடைந்தும் உள்ளனர். அவர்களில் பலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். கொல்லப்பட்டவர்கள் ஒரு “பயங்கரவாத இலக்கை” இலக்காகக் கொண்டிருந்ததாகவும், “டசின் கணக்கான பயங்கரவாதிகளை தாம் அழித்துவிட்டதாகவும்” இஸ்ரேலிய அதிகாரிகள் பெருமைபீற்றினர். இந்த தாக்குதலுக்கு முன்னர், அக்டோபர் 6 அன்று வடக்கு காஸாவில் தொடங்கப்பட்ட தற்போதைய இஸ்ரேலிய தாக்குதலில், ஏற்கனவே 400 க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாகியுள்ளதாக காஸா அதிகாரிகள் தெரிவித்தனர்.
வடக்கு காஸாவில் வசிக்கும் 36 வயதான பாலஸ்தீனியரான கமால் அத்வான், “உணவு, தண்ணீர் அல்லது மருந்து இல்லாமல் நாங்கள் சிக்கியுள்ளோம், பஞ்சத்தால் அச்சுறுத்தப்பட்டு இடிபாடுகளால் சூழப்பட்டுள்ளோம்” என்று AFP இடம் கூறினார்.
பெய்ட் லஹியாவில் உள்ள இந்தோனேசிய மருத்துவமனையின் அதிகாரிகள், இஸ்ரேலிய படைகளின் “கடுமையான துப்பாக்கிச் சூடுகளுக்கு” தாம் ஆளானதாகவும், மருத்துவமனைக்கு அருகில் அவர்கள் செயல்பட்டு வருவதாகவும் உறுதிப்படுத்தினர். காஸா சுகாதார அமைச்சகம், இந்த மருத்துவமனை மின்சாரத் தடையால் பாதிக்கப்பட்டபோது 40 பேர் உள்ளே இருந்ததாகவும், மருத்துவ விநியோக பற்றாக்குறையால் இரண்டு நோயாளிகளின் இறப்புக்கு இது வழிவகுத்தது என்றும் குறிப்பிட்டது.
வடக்கு காஸாவிலும், சனிக்கிழமையன்று ஜபாலியா அகதிகள் முகாம் மீதான இஸ்ரேலிய தாக்குதலில் 21 பெண்கள் உட்பட குறைந்தப்பட்சம் 33 பேர்கள் படுகொலை செய்யப்பட்டதோடு, மேலும் 85 பேர்கள் காயமடைந்தனர். இஸ்ரேலிய இராணுவத்தால் முற்றுகையிடப்பட்டுள்ள இந்த அகதிகள் முகாமில் நூறாயிரக்கணக்கான மக்கள் குறைந்தது இரண்டு வாரங்களாக சிக்கியுள்ளனர்.
வடக்கு காஸாவின் அல்-அவ்தா மருத்துவமனையின் இயக்குனர், நோயாளிகளின் வருகையால் மருத்துவமனை வார்டுகள் “முழுமையாக நிரம்பிவிட்டதாகவும்” காயமடைந்தவர்களை “தரையில் வைத்து சிகிச்சையளித்து வருவதாகவும்” அறிவித்தார். உணவு, தண்ணீர் மற்றும் மருத்துவப் பொருட்கள் ஜபாலியா முகாமை அடையவில்லை என்றும் சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தினர்.
குண்டு வீச்சுக்களை நியாயப்படுத்திய இஸ்ரேலிய புலம்பெயர்ந்தோர் விவகாரங்களுக்கான மந்திரி அமிச்சாய் சிக்லி, இஸ்ரேல் வடக்கு காஸாவின் சில பகுதிகளை “முற்றுகையிட்டுள்ளது” என்று கூறினார். ஆனால், பொதுமக்கள் இலக்கு வைக்கப்படுவதை மறுத்த அவர், “நாங்கள் பொதுமக்களை பாதுகாப்பான பகுதிக்குள் தப்பிச் செல்ல அனுமதித்து, முற்றுகை பிராந்தியத்திற்குள் பொருட்கள் நுழைவதை நாங்கள் தடுத்தோம்,” என்று அவர் கூறினார்.
காஸாவிலுள்ள முழு மக்களுக்கும் எதிராக, இஸ்ரேலிய அரசாங்கம் எவ்வாறு ஒரு இனப்படுகொலை போரை நடத்தி வருகிறது என்பதை சிக்லியின் கருத்துக்கள் மீண்டும் உறுதிப்படுத்துகின்றன. நூறாயிரக்கணக்கான மக்கள் முற்றுகைப் பகுதிகள் என்று அழைக்கப்படும் பகுதிகளில் வாழத் தள்ளப்பட்டுள்ளனர். அங்கு இஸ்ரேலிய படைகள் சந்திக்கும் பொதுமக்கள் எவரையும் இராணுவ இலக்குகளாக கருதி, படைகளின் விருப்பப்படி தாக்கப்படலாம் மற்றும் கொல்லப்படலாம்.
இஸ்ரேலிய சிப்பாய்கள் பெருந்திரளான கைதுகளை நடத்தி வருவதாகவும், வடக்கு காஸாவில் குடும்பங்களைப் பிரிக்கின்றனர் என்றும் பெரியளவில் செய்திகள் வெளி வருகின்றன. “இஸ்ரேலிய டாங்கிகள் அந்தப் பகுதியை முற்றுகையிட்டு, எங்கள் அனைவரையும் நாம் தங்கியிருந்த பாடசாலையிலிருந்து வெளியேற்றின” என்று தனது தோள்களில் ஒரு குழந்தையை வைத்திருந்த ஒரு பாலஸ்தீனிய பெண் அல் ஜசீராவிடம் கூறினார். “அவர்கள் அனைத்து ஆண்களையும் தடுத்து வைத்து, அனைத்து பெண்களையும் குழுக்களாக வெளியேறுமாறு எச்சரித்தனர். குழந்தைக்கான பால் உட்பட எல்லாவற்றையும் விட்டுவிட்டோம். … இஸ்ரேலியர்கள் பீரங்கிகளால் எங்கள் மீது குண்டுகளை வீசத் தொடங்கினர், அவர்களின் ஆளில்லா விமானங்கள் மற்றும் போர் விமானங்களும் ஏவுகணைகளை வீசின. பின்னர், அவர்கள் தங்கள் டாங்கிகளுடன் அப்பகுதிக்குள் புகுந்து அங்கொன்றும் இங்கொன்றுமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர்” என்று அப்பெண் குறிப்பிட்டார்.
எக்ஸ்/ட்விட்டரில், மனித உரிமைகளுக்கான பாலஸ்தீனிய மையம், இஸ்ரேலிலான் ஏற்படுத்தப்பட்ட பஞ்சம் மற்றும் வடக்கு காஸாவில் பொதுமக்கள் பெருமளவில் கைது செய்யப்பட்டிருப்பது “இன சுத்திகரிப்பு நேரடியாக இடம்பெறுவதாகும்” என்று குறிப்பிட்டது. வடக்கு காஸாவில் தஞ்சமடைந்திருந்த பொதுமக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றிய பின்னர், அங்குள்ள அகதிகள் முகாம்களை இஸ்ரேலிய படையினர் எரித்து வருகின்றனர்.
https://twitter.com/pchrgaza?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1847963308202025067%7Ctwgr%5E256b24d9357ca9054eca35f8b23f93ccb22ebbc8%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.wsws.org%2Fen%2Farticles%2F2024%2F10%2F21%2Fpsnu-o21.html
ஞாயிறன்று இஸ்ரேலியப் படைகள் குறைந்தப்பட்சம் ஒன்பது தாக்குதல்களை லெபனான் தலைநகர் பெய்ரூட்டை இலக்கு வைத்து தாக்கின. இதில் Haret Hreik ல் சாதாரண கட்டிடங்கள் மீதான பல தாக்குதல்களும் அடங்கும். டயர், பின்ட் ஜபீல் மற்றும் நபாதிஹ் உட்பட தெற்கு லெபனானில் டசின் கணக்கான இஸ்ரேலிய தாக்குதல்கள் இடம் பெற்றன. இதில், ரயர் என்ற இடத்தில் ஆம்புலன்ஸ் மீது மோதிய ஒரு கொடிய தாக்குதலும் அடங்கும். ஞாயிறன்று, லெபனிய சுகாதார அமைச்சரகம், கடந்த அக்டோபர் 8ல் முதல், இஸ்ரேலிய குண்டுவீச்சுக்களில் இருந்து 2,448 பேர் கொல்லப்பட்டனர், 11,500 பேர் காயமுற்றனர் என்று அறிவித்தது.
லெபனானில் உள்ள ஐ.நா இடைக்கால படையின் (UNIFIL) கண்காணிப்பு கோபுரத்தையும் இஸ்ரேலிய படைகள் மார்வாஹினில் தகர்த்துள்ளன. UNIFIL படை நிலைகளை தாக்குவது “சர்வதேச சட்டம் மற்றும் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் 1701 ஐ அப்பட்டமாக மீறுவதாகும்” என்று குறிப்பிட்டு ஐ.நா. இது தொடர்பான ஒரு அறிக்கையை வெளியிட்டது.
இஸ்ரேலிய அதிகாரிகள் இரக்கமற்ற முறையில் மோதலை விரிவாக்கி வருகையில், இன்னும் கூடுதலான இஸ்ரேலிய விரிவாக்கம் இஸ்ரேலுக்கே பேரழிவு தரும் இழப்புக்களுக்கு வழிவகுக்கும் என்பதற்கான பெருகிய அடையாளங்கள் உள்ளன. ஞாயிறன்று, ஒரு டிரோன் தாக்குதல் இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகுவின் ஆடம்பர கடலோர உல்லாச விடுதியான செசரியா இல்லத்தைத் தாக்கியுள்ளது. தாக்குதல் நடந்தபோது நெதன்யாகு வீட்டில் இல்லை என்று கூறப்படுகிறது.
ஹிஸ்புல்லா தெற்கு லெபனானில் இருந்து வடக்கு இஸ்ரேலின் இலக்குகளுக்கு எதிராக ஏவுகணைகளை ஏவியது. அத்துடன், இஸ்ரேலின் கவச 401 வது படைப்பிரிவின் தளபதி கேர்னல் அஹ்சான் தக்சா, ஜபாலியாவில் அவரது டாங்கியும் மற்றொரு டாங்கியும் கண்ணிவெடித் தாக்குதலுக்கு உள்ளானதை அடுத்து அவர் இறந்துள்ளதாக இஸ்ரேலிய அதிகாரிகள் அறிவித்தனர்.
எல்லாவற்றிற்கும் மேலாக, ஈரான் மீதான ஒரு இஸ்ரேலிய தாக்குதல் ஈரானின் பேரழிவு தரும் எதிர்தாக்குதலுக்கு இட்டுச் செல்லக்கூடும். மேலும், அமெரிக்கா, ஐரோப்பிய சக்திகள், ரஷ்யா மற்றும் சீனா உட்பட அனைத்து முக்கிய உலக வல்லரசுகளையும் உள்ளிழுக்கும் ஒரு பொதுவான மத்திய கிழக்குப் போருக்கு இட்டுச் செல்லும் அபாயம் அதிகரித்து வருகிறது.
நேற்று ஈரானிய வெளியுறவு மந்திரி அப்பாஸ் அரக்சி ஈரான் மீதான இஸ்ரேலிய குண்டுவீச்சுக்களுக்கு பதிலடியாக அது தாக்கவிருக்கும் இலக்குகளை பரிசீலித்து தேர்ந்தெடுத்துள்ளது என்று எச்சரித்தார். “ஈரானுக்கு எதிரான எந்தவொரு தாக்குதலும் அதன் சிவப்புக் கோட்டைத் தாண்டுவதாகும். அதற்கு பதிலடி கொடுக்காமல் விடமாட்டோம். ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீதான எந்தவொரு தாக்குதலுக்கும் அல்லது அதேபோன்ற தாக்குதலுக்கும் தேவையான பதிலடி வழங்கப்படும். இப்போது, நாங்கள் அங்குள்ள [இஸ்ரேலில்] எங்கள் இலக்குகள் அனைத்தையும் அடையாளம் கண்டுள்ளோம், அதேபோன்ற தாக்குதல் அவர்கள் மீதும் நடத்தப்படும்” என்று அரக்சி கூறினார்.
அமெரிக்காவுடன் ஈரான் போரை நாடவில்லை என்று வலியுறுத்திய அரக்சி, வாஷிங்டன் ஈரானுடன் போரைத் தொடுக்கும் ஆபத்து குறித்து எச்சரித்தார். “அமெரிக்கர்களுக்கு உண்மையான அரசியல் விருப்பம் இருந்தால், அவர்களால் தாக்குதல்களை நிறுத்தி இஸ்ரேலை நிறுத்த முடியும்” என்று அவர் கூறினார். “இப்பிராந்தியத்தில் ஒரு பெரியளவிலான போர் வெடித்தால், அமெரிக்கா அதற்குள் இழுக்கப்படும், இதை நாம் சிறிதும் விரும்பவில்லை,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
ஆயினும்கூட, பைடென் நிர்வாகம், அதன் ஐரோப்பிய நேட்டோ நட்பு நாடுகளின் ஆதரவுடன், இஸ்ரேல் ஒரு பிராந்தியம் தழுவிய போரைத் தூண்டக்கூடும் என்பதை அறிந்திருந்தாலும், இஸ்ரேலுக்கு தொடர்ந்து ஆயுதமும் ஆதரவும் கொடுத்து வருகிறது. வெள்ளியன்று @Middle_East_Spectator டெலிகிராம் அலைவரிசை ஈரான் மீது குண்டு வீசுவதற்கான இஸ்ரேலிய தயாரிப்புக்கள் பற்றிய, உயர்மட்ட இரகசிய உளவுத்துறை அறிக்கையை அக்டோபர் 16 அன்று வெளியிட்டது. பின்னர் அமெரிக்க அதிகாரிகள் இந்த செய்தியின் நம்பகத்தன்மையை சி.என்.என் இடம் உறுதிப்படுத்தினர்.
“இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் ஈரான் மீதான ஒரு தாக்குதலுக்காக ஏறத்தாழ நிச்சயமாக முக்கிய வெடிமருந்துகளையும் இரகசிய ஆளில்லா விமான நடவடிக்கையையும் தொடர்கின்றன” என்று அந்த ஆவணம் தலைப்பிடப்பட்டிருந்தது. இஸ்ரேலிய தளங்களின் அமெரிக்க செயற்கைக்கோள் படங்களை பரிசீலித்த அது, குறைந்தப்பட்சம் 16 கோல்டன் ஹொரைசன் மற்றும் 40 ISO2 ராக்ஸ் பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஹட்செரிம் விமானத் தளத்தில் உள்ள போர் விமானங்களில் ஏற்றப்பட்டுள்ளன என்று தகவல் கொடுத்துள்ளது. “இனி GEOINT [geospatial உளவுத்துறை] எச்சரிக்கை இல்லாமல் ஒரு தாக்குதல் நடத்தப்படலாம்” என்று அந்த அறிக்கை மேலும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரானிய பதிலடி தாக்குதல்களால் தாக்கப்படக்கூடிய தளங்களில் இருந்து இஸ்ரேலிய படைகள் இடம்மாறி வருகின்றன என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. மேலும், இஸ்ரேலின் ஹைஃபா கடற்படைத் தளம் மற்றும் ஓவ்டா விமானத் தளத்தை விட்டு வெளியேறும் படைகள், 1 மெகாடன் அணுவாயுதத்தை சுமந்து செல்லும் இஸ்ரேலின் ஜெரிகோ II ஏவுகணைகள் வெளியேற்றப்படுவதை அமெரிக்க படங்கள் காட்டுகின்றன என்றும், “மேலும், இஸ்ரேல் அணுவாயுதத்தைப் பயன்படுத்த விரும்புகிறது என்பதற்கான எந்த அறிகுறியையும் அமெரிக்க உளவுத்துறை கவனிக்கவில்லை” என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
கசிந்த அனைத்து உளவுத்துறை அறிக்கைகளைப் போலவே, இதையும் முக மதிப்பாக எடுத்துக் கொள்ள முடியாது. இஸ்ரேல் மீதான அமெரிக்க உளவு செயற்கைக்கோள்கள் காட்டுவதை இது உண்மையாக பிரதிபலிக்கலாம். அல்லது அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல் திட்டங்கள் உண்மையில் என்ன என்பதை ஈரானிய இராணுவத்தை ஏமாற்றுவதற்காக வெளியிடப்பட்ட தவறான தகவலாக இது இருக்கலாம். எப்படிப் பார்த்தாலும், அமெரிக்க அதிகாரிகள் ஈரான் மீது குண்டுவீசும் இஸ்ரேலிய திட்டங்கள் பற்றி முன்கூட்டியே அறிந்திருந்ததைக் காட்டும் ஆவணங்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தியுள்ளனர்.
இது வாஷிங்டன் மற்றும் அதன் பிரதான ஐரோப்பிய நட்பு நாடுகளை நேரடியாக சம்பந்தப்படுத்துகிறது. வெள்ளிக்கிழமை, பைடென் ஜேர்மன் சான்சிலர் ஓலாஃப் ஷோல்ஸ், இங்கிலாந்து பிரதம மந்திரி கெய்ர் ஸ்டார்மர் மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் ஆகியோரை சந்தித்தார். இதன்பின் பைடென் தானும் மற்ற தலைவர்களும் ஈரானை எப்படிக் கையாள்வது என்பது பற்றி உடன்பட்டிருப்பதாகவும், இஸ்ரேலிய போர்த் திட்டங்கள் என்ன என்பது பற்றி தனக்குத் தெரியும், ஆனால் வெளியிட மறுப்பதாகவும் கூறினார். இது, மத்திய கிழக்கில் ஒரு பேரழிவுகரமான, அணுஆயுத பிராந்திய போருக்கான தயாரிப்பை உலக மக்களிடம் இருந்து மறைப்பதற்கான வாஷிங்டன், பேர்லின், இலண்டன் மற்றும் பாரீஸின் ஒரு சூழ்ச்சிக்கு நிகரானதாகும்.