மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
ஜூலியன் அசான்ஜும் போரின் மறைக்கப்பட்ட இரகசியங்களும் (Julian Assange and the Dark Secrets of War) என்ற ஒரு புதிய ஆவணப்படம், அக்டோபர் 5 அன்று பேர்லின் மனித உரிமைகள் திரைப்பட விழாவில் (HRFFB) முதன்முறையாகத் திரையிடப்பட்டது. இந்தப் படைப்பை திரைப்பட இயக்குநர் சாரா மப்ரூக் (Sarah Mabrouk ) மற்றும் துருக்கியப் பத்திரிகையாளர் கான் டுன்தார்(Can Dündar) ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளனர். (55 நிமிட நீள ஆவணப்படத்தின் ஆங்கில மொழி காணொளிப் பதிப்பு இங்கே யூடியூப்பில் கிடைக்கிறது.)
இந்த ஆவணப்படத்தில், துருக்கியில் ஒரு ஊடகவியலாளராக தான் நடத்தப்பட்ட விதத்திற்கும் பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க அரசாங்கங்களால் அசான்ஜ் துன்புறுத்தப்பட்டதற்கும் இடையிலான ஒற்றுமைகளை டுன்தார் சுட்டிக்காட்டுகிறார்.
2015 ஆண்டு நவம்பரில், அப்போது தினசரி கும்ஹூரியெத் நாளிதழின் (Cumhuriyet newspaper) தலைமை ஆசிரியராக இருந்த டுன்தார், ‘MİT லாரிகள்’ (“MİT trucks”) விவகாரம் குறித்து அவரது பத்திரிகை, செய்தி வெளியிட்டதற்காக சிறைத்தண்டனை பெற்றார். இச்செய்தி, 2014 ஆண்டில் துருக்கிய தேசிய புலனாய்வு அமைப்புக்கு (MİT) சொந்தமான லாரிகளில் சிரியாவில் உள்ள இஸ்லாமிய ஜிஹாதி படைகளுக்கு அனுப்பப்பட்டதாக நம்பப்படும் ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டது பற்றியதாகும். அடுத்தடுத்த நீதிமன்ற வழக்குகளைத் தொடர்ந்து இரண்டு ஆயுள் தண்டனைகளாக நீட்டிக்கப்பட்ட அவரது சிறைத் தண்டனைக்கு மேலதிகமாக, MİT உடன் தொடர்புடைய ஒரு குற்றக் குழுவின் உறுப்பினரால் நடத்தப்பட்ட கொலை முயற்சியிலிருந்து டுன்தார் மயிரிழையில் தப்பினார் (இதுவும் திரைப்படத்தில் காட்டப்பட்டுள்ளது). துருக்கிய ஜனாதிபதி ரெஜெப் தயிப் எர்டோகானின் பெரும் சீற்றத்திற்கிடையே, டுன்தார் இறுதியில் உயர் நீதிமன்ற உத்தரவால் விடுவிக்கப்பட்டு, தற்போது ஜேர்மனியில் நாடு கடத்தப்பட்ட நிலையில் வாழ்கிறார்.
தென்கிழக்கு லண்டனில் உள்ள பெல்மார்ஷ் உயர் பாதுகாப்புச் சிறையில் அசான்ஜிற்கு ஒதுக்கப்பட்ட இரண்டுக்கு-மூன்று மீட்டர் அறையின் மறுஉருவாக்கம் செய்யப்பட்டதற்குள் டுன்தார் நுழைவதுடன் ஆவணப்படம் தொடங்குகிறது. 2019இல் பிரிட்டிஷ் பொலிசாரால் லண்டனிலுள்ள ஈக்வடோர் தூதரகத்திலிருந்து கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அசான்ஜ் மொத்தம் ஐந்து ஆண்டுகள் மூன்று மாதங்களுக்கு நாளொன்றுக்கு 23 மணி நேரமும் அவரது சிறிய அறையில், தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார். “ஜனநாயக” பிரிட்டனில் அசான்ஜ் பெற்றதை விட எதேச்சதிகார துருக்கியில் தான் சிறந்த முறையில் நடத்தப்பட்டதாக டுன்தார் குறிப்பிடுகிறார்.
அசான்ஜை ஒரு ‘சர்ச்சைக்குரிய ஆளுமை’ என விவரித்த டுன்தார், தனது ஆவணப்படத்தில் தகவல் அளிப்பவரை விட தகவலையே கவனம் செலுத்த முடிவு செய்தார். அதாவது, விக்கிலீக்ஸால் வெளிச்சத்திற்குக் கொணரப்பட்ட அமெரிக்க இராணுவ அறிக்கைகளான ‘ஈராக் போர் ஆவணங்கள்’ மீதான கவனத்தை குவித்தார். இவ் ஆவணங்கள், ஈராக் மீதான நவ-காலனித்துவ படையெடுப்பு மற்றும் ஆக்கிரமிப்பின் ஒரு பகுதியாக அமெரிக்கப் படைகளால் 66,081 பொதுமக்கள் ஈராக்கில் கொல்லப்பட்டதை அம்பலப்படுத்தின. குறிப்பாக, ‘கூட்டுப் படுகொலை’ எனும் அவப்பெயர் பெற்ற காணொளியை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தன. 2007 ஆம் ஆண்டில் ஈராக் போரின்போது பாக்தாத்தில், அப்பாச்சி ஹெலிகாப்டரில் இருந்த அமெரிக்கப் படையினர்கள் ஊடகவியலாளர்கள் மற்றும் ஈராக்கியப் பொதுமக்களை இரக்கமின்றி சுட்டுக் கொன்றதை இக்காணொளி சித்தரிக்கிறது.
அந்தக் கொடூரத் தாக்குதலில் உயிர் பிழைத்த இருவரில் ஒருவரான சஜாத் முதாஷர் ( Sajad Mutashar ) தான் (அப்போது 10 வயது சிறுவனாக இருந்தவர்) அப்போது அரை உயிருடன் இருந்த அச்சிறுவனையும், கடுமையாகக் காயமடைந்த அவரது மூன்று வயது சகோதரியையும் அவர்களது தந்தை ஓட்டிய வாகனச் சிதைவிலிருந்து மீட்ட அமெரிக்க இராணுவ வீரரான ஈதன் மெக்கார்டை (Ethan McCord - 2010-இல் உலக சோசலிச வலைத்தளத்தால் நேர்காணல் செய்யப்பட்டவர்) கண்டறிவதற்காக டுன்தார் அமெரிக்கா மற்றும் ஈராக் ஆகிய இரு நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்கிறார். கொலைவெறி கொண்ட ஹெலிகாப்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களை (இரண்டு ரொய்ட்டர்ஸ் ஊடகவியலாளர்கள் உட்பட) காப்பாற்றுவதற்காக குழந்தைகளின் தந்தை சம்பவ இடத்திற்குச் சென்றிருந்தார். அவரது இரக்கச் செயலுக்காக, சஜாத்தின் தந்தை தனது உயிரைத் தியாகம் செய்தார்.
இந்த ஆவணப்படத்தின் மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும் காட்சிகளில் மெக்கார்டின் சாட்சியமும் அடங்கும். கன்சாஸின் விச்சிட்டாவைச் சேர்ந்த அவர், ஈராக்கில் அன்று அமெரிக்க இராணுவத்தின் கொடூரத்தைக் கண்டது தனது வாழ்க்கையை என்றென்றும் மாற்றியதாக விவரிக்கிறார். அப்பாச்சி ஹெலிகாப்டரால் நிமிடத்திற்கு ஆயிரம் முறை சுடப்பட்ட 30 மி.மீ ரவைகள் தனது முன்கையின் அளவில் இருந்தன என்று மெக்கார்ட் குறிப்பிடுகிறார். எந்த அச்சுறுத்தலுக்கும் அப்பாற்பட்ட உயரத்தில் பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டரில் இருந்த படைகளால் சுடப்பட்ட குண்டுகளால் சிக்கித்தடுமாறிப் பாதிக்கப்பட்டவர்கள், தரையில் மிருகத்தனமாக சிதைக்கப்பட்டும், பெரும்பாலும் தலையற்ற சதைக் குவியல்களாகவும் காணப்பட்டனர்.
செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு ‘அமெரிக்கா முதலில்’ என்ற பரப்புரை தன்னை இராணுவத்தில் சேர வைத்ததையும், அனைத்து முஸ்லிம்களையும் வெறுக்கத் தூண்டியதையும் மெக்கார்ட் விவரிக்கிறார். ஈராக்கில் நடந்த நிகழ்வுகள் அவரது நம்பிக்கைகளை மறுபரிசீலனை செய்ய வைத்தது. உலகம் முழுவதும் அமெரிக்க ஏகாதிபத்தியம் ஆற்றிய உண்மையான மற்றும் இரத்தம் தோய்ந்த பங்கை அவர் உணர்ந்தார். குற்ற உணர்வால் வாட்டப்பட்ட மெக்கார்ட், தற்கொலை முயற்சி செய்து மாய்த்துக்கொள்ள முயன்றதாகவும், தனது படைப்பிரிவைச் சேர்ந்த மன அதிர்ச்சிக்கு ஆளான எட்டு உறுப்பினர்கள் தற்கொலை செய்துகொண்டதையும் விவரிக்கிறார்
இந்த ஆவணப்படமானது மெக்கார்டுக்கும் சிறுவனாக இருந்து இன்று வளர்ந்த சஜாத் முதாஷருக்கும் இடையிலான மிகவும் உணர்ச்சிகரமான சமரசத்துடன் நிறைவடைகிறது. சஜாத் முதாஷர் தனது குடும்பத்தை அழித்த அமெரிக்கப் படைகள் மீதான வெறுப்பையும் இகழ்ச்சியையும் தொடர்ந்து நினைவில் வைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால், தனது உயிரைக் காப்பாற்றிய அமெரிக்க வீரருக்குத் தனது நன்றியையும் மன்னிப்பையும் வழங்குகிறார்.
அமெரிக்கா மற்றும் ஈராக்கில் ஆவணப்படமாக்கப்பட்ட காட்சிகள் மிகவும் வலிமை மிக்கவையாக இருக்கின்றன. அதே வேளையில், ஆவணப்படத்தில் குறைபாடுகளும் உள்ளன. ஆரம்பக் காட்சி ஒன்றில், அசான்ஜின் மனைவி ஸ்டெல்லா மோரிஸ் மற்றும் அவர்களது இரு குழந்தைகளுடன் இருக்கும் டுன்தார், துருக்கிய ஜனாதிபதியிடம் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் மேற்கொண்ட தலையீட்டிற்குத் தனது சொந்த விடுதலைக்குக் காரணம் எனக் காட்டுகிறார்.
கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையை வாய்மொழியாக ஒப்புக்கொள்ள முற்றிலும் தயாராக இருந்த போதிலும், நடைமுறையில் பைடென், அண்மைய அனைத்து அமெரிக்க ஜனாதிபதிகளைப் போலவே, அமெரிக்க அரசின் அச்சுறுத்தலின் கீழ், அசான்ஜின் உயிர் இருக்கும் நிலையில் அவர் சிறையிலேயே தொடர்ந்திருப்பதை உறுதி செய்தார்.
கடந்த ஜூன் மாதத்தில் ஜூலியன் அசான்ஜ் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதைக் குறிக்கும் அதன் முன்னோக்கில் உலக சோசலிச வலைத் தளம் எழுதியதாவது: “அசான்ஜின் துன்புறுத்தல் என்பது பொய்களும் அவதூறுகளும் நிறைந்த ஒரு இழிவான பிரச்சாரமாக இருந்து வந்துள்ளது. புஷ், ஒபாமா, ட்ரம்ப் மற்றும் பைடென் உள்ளிட்ட தொடர்ச்சியான நான்கு ஜனாதிபதி நிர்வாகங்கள், இந்தத் துணிச்சலான ஊடகவியலாளரை மௌனமாக்கி அடக்க முயன்றன”.
ஆவணப்படத்தின் மற்றொரு குறுகிய காட்சியில் முன்னாள் பிரிட்டிஷ் தொழிற் கட்சித் தலைவர் ஜெரமி கோர்பின் இடம்பெற்றுள்ளார். அவர் சமீபத்தில் அசான்ஜின் விடுதலைக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளார். ஆனால் 2015 முதல் 2019 வரையிலான கிட்டத்தட்ட நான்காண்டு காலம் இது தொடர்பாக மௌனம் சாதித்தார். அக்காலகட்டத்தில் தொழிற் கட்சியின் தலைவராக இருந்த அவர், அசான்ஜ் சார்பாக அரசியல் செல்வாக்குடன் தலையிட்டிருக்க முடியும்.
குறிப்பிட்ட இக்காலகட்டம், கார்டியன் மற்றும் நியூயோர்க் டைம்ஸ் போன்ற ஊடக நிறுவனங்கள் அசான்ஜிற்கு எதிராக நடத்திய இழிவான மற்றும் அவதூறான பிரச்சாரத்துடன் ஒத்துப்போனது. பேர்லினில் திரையிடப்பட்ட ஆவணப்படமானது, இது தொடர்பாக ஒரு முக்கியமான கருத்தை முன்வைக்கிறது. 2010-ஆம் ஆண்டில், அசான்ஜ் ‘கூட்டுப் படுகொலை’ எனும் காணொளியை ஐஸ்லாந்து ஊடகவியலாளரும் தற்போதைய விக்கிலீக்ஸ் தலைமை ஆசிரியருமான கிரிஸ்டின் ஹ்ராஃப்சனிடம் ( Kristinn Hrafnsson ) காட்டினார். அப்போது, அக்காணொளி வெளியிடப்படும்போது “அவர் [அசான்ஜ்] பூமியின் கடைசி முனைகள் வரை வேட்டையாடப்படுவார்” எனக் கருத்துரைத்தார்.
அந்த நேரத்தில் அசான்ஜ் மிகையாக நாடகமாடுகிறார் என்று தான் நினைத்ததாக ஹ்ராஃப்சன் வெளிப்படுத்துகிறார். ‘அவர்கள் துணிய மாட்டார்கள்... நீங்கள் உலகின் மிகப்பெரிய ஊடக அதிகார மையங்களுடன் பணியாற்றுகிறீர்கள்... அவர்களால் அதைச் செய்ய முடியாது’ என்று அவர் உறுதியாகக் கூறினார். இந்த ஊடக அதிகார மையங்கள் ‘ என அழைக்கப்படுபவை அசான்ஜிற்கு அளித்த ஆதரவு முற்றிலும் சரிந்துபோனதைக் குறித்துக் கருத்துரைக்கையில், 2010-இல் தான் தவறாக இருந்ததை ஹ்ராஃப்சன் ஒப்புக்கொள்ள நிர்ப்பந்திக்கப்படுகிறார்: ‘நிச்சயமாக, அவர்களால் முடிந்தது, அவர்கள் செய்தும் விட்டனர்.’
அக்டோபர் 5 அன்று ஆவணப்படம் திரையிடப்பட்டதைத் தொடர்ந்து, ஒரு குழு விவாதம் நடைபெற்றது. இதில் இணை இயக்குநர்களான மப்ரூக் மற்றும் டுன்தார், ஹ்ராஃப்சன், முதாஷர் ஆகியோர் நேரில் கலந்து கொண்டனர். மெக்கார்ட் கன்சாஸிலிருந்து காணொளி இணைப்பு வாயிலாகப் பங்கேற்றார்.
இவ்விவாதத்தில் பல முக்கியமான கருத்துகள் முன்வைக்கப்பட்டன. அன்றைய தினம் ஈராக்கில் அமெரிக்கப் படைகள் தெளிவாகப் போர்க்குற்றங்களைப் புரிந்திருந்தனர் என்றும், காணொளி வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்க இராணுவம் உள் விசாரணை நடத்த நிர்ப்பந்திக்கப்பட்டது என்றும் சுட்டிக்காட்டப்பட்டது. எனினும், சம்பந்தப்பட்ட எந்தப் படையினரும் ஒருபோதும் விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை என்பதும் அதில் தெரிவிக்கப்பட்டது.
உண்மையில் இது தொடர்பாக எந்தவொரு வழக்கு விசாரணையும் இருக்க மாட்டாது என்பதை மெக்கார்ட் தெளிவுபடுத்தினார். ஏனெனில் படைகள் ‘அவர்கள் எதற்காக அங்கு அனுப்பப்பட்டார்களோ அதையே செய்து கொண்டிருந்தனர்.’ அமெரிக்காவானது ஈராக்கை ஆக்கிரமித்திருந்த காலத்தில், பாக்தாதில் அன்று நடந்ததைப் போன்ற சம்பவங்கள் தினமும் நிகழ்ந்தன. ஒரே ஒரு குற்றவியல் வழக்கு கூட அமெரிக்காவின் முழுப் போர் மூலோபாயத்தையும் ஆபத்துக்குள்ளாக்கியிருக்கும். இதே காரணத்திற்காகத்தான், அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் விக்கிலீக்ஸை முடக்குவதிலும் அசான்ஜை அடக்குவதிலும் முழு உறுதியுடன் இருந்தன.
இந்தக் குழு விவாதத்தின்போது, மப்ரூக் மற்றும் ஹ்ராஃப்சன் ஆகிய இருவரும், ஈராக்கில் அமெரிக்கா புரிந்த கொடூரங்களுக்கும் தற்போது காஸாவில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திவரும் இனப்படுகொலைக்கும் இடையே நேரடித் தொடர்பு உள்ளதை தெளிவுபடுத்தினர். ஆவணப்படத்தில், ஹ்ராஃப்சன் ஏற்கனவே ‘கூட்டுப் படுகொலை’ முதல், ஆளில்லா விமானப் போர், [மற்றும் காஸாவில் நடைபெறும் இஸ்ரேலின் கொலைவெறி குண்டுவீச்சில்] செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு வரையிலான ஒரு வளைகோட்டைக் குறிப்பிட்டிருந்தார்.
சமீபகால மோதல்களிலும், போர்களிலும் பொதுமக்கள் உயிரிழப்பு 5 முதல் 10 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக ஹ்ராஃப்சன் வலியுறுத்தினார். ஆனால் காஸாவில், பொதுமக்களின் இறப்பு விகிதம் 46 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது. தனது உரையின் முடிவில், ஊடகவியலாளர்களின் ஒரே கடமை உண்மையைச் சொல்வதுதான் என்றும், அதன் அர்த்தமானது காஸாவில் இனப்படுகொலை நடந்து கொண்டிருப்பதை ஏற்றுக்கொள்வதுதான் என்றும் ஹ்ராஃப்சன் அறிவித்தார்.