ரஷ்யாவிற்குள் நேட்டோ ஆயுதத் தாக்குதல்களை விரிவுபடுத்த இருப்பதாக அமெரிக்காவும் பிரித்தானியாவும் அறிவிப்பு

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

கடந்த புதன்கிழமை, அமெரிக்காவும், பிரித்தானியாவும் நேட்டோ ஆயுதங்களைப் பயன்படுத்தி, ரஷ்யாவிற்குள் உக்ரேனிய தாக்குதல்களின் பாரிய விரிவாக்கத்தை உடனடியாக அறிவிக்கும் என்று கார்டியன் மற்றும் பொலிட்டிகோ பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. 

கியேவில் ஒரு சந்திப்பிற்கு பிரித்தானிய வெளியுறவு செயலாளர் டேவிட் லாம்மி (நடுவில்) மற்றும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் (வலது) ஆகியோரை உக்ரேனிய வெளியுறவு மந்திரி ஆண்ட்ரி சிபிஹா (இடது) வரவேற்றார். செப்டம்பர் 11, 2024 புதன்கிழமை, உக்ரேன். [AP Photo/Leon Neal]

கடந்து திங்களன்று, ரஷ்ய பிரதேசத்துக்குள் ஆழமாக, உக்ரேன் மிகப் பெரியளவில் சரமாரியான ட்ரோன் தாக்குதலை ஏவிய சில நாட்களுக்குப் பிறகு, இந்த அறிவிப்பு வந்துள்ளது. இந்த தாக்குதலில், முதன்முறையாக மாஸ்கோவில் ஒருவர் கொல்லப்பட்டதோடு, ஒரு அணு ஆயுத அரசின் தலைநகரில் இருந்த டசின் கணக்கான வீடுகள் அழிக்கப்பட்டன.

கடந்த புதன் கிழமை கியேவில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் மற்றும் பிரிட்டிஷ் வெளியுறவு மந்திரி டேவிட் லாம்மி ஆகியோர் உக்ரேனிய அதிகாரிகளுடனான சந்திப்பின் போது, இந்த நடவடிக்கை தொடர்பாக விவாதித்தனர்.

“ரஷ்ய நிலப்பரப்பைத் தாக்க உக்ரேனுக்கு இந்த நீண்ட தூரத் திறன் கொண்ட ஆயுதம் தேவையா” என்று கேட்டதற்கு, “நாங்கள் நீண்ட தூர சூட்டு திறன்கொண்ட ஆயுதங்கள் பற்றி உக்ரேனிய அதிகாரிகளுடன் விவாதித்துள்ளோம்” என்றும், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் வெள்ளிக்கிழமை வாஷிங்டனில் இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை சந்திக்கும் போது, இது தொடர்பாக மேலும் விவாதிக்கப்படும் என்று பிளிங்கன் பதிலளித்தார்.

முதல் நாளிலிருந்து, “நீங்கள் சொல்வதைக் கேட்டது போல், தேவைகள் உருவாகும்போதும், போர்க்களம் மாறும்போதும் நாங்கள் இதனை சரிசெய்து மாற்றியமைத்துள்ளோம், மேலும் நிலைமை உருவாகும்போது நாங்கள் அதைத் தொடருவோம் என்று நான் நம்புகிறேன்” என்று அவர் கூறினார்.

இந்த கலந்துரையாடல்கள் குறித்து, கார்டியன் பத்திரிகை  வெளியிட்டுள்ள செய்தியில், “அதிக துல்லிய தாக்குதல் Storm Shadow குரூஸ் ஏவுகணைகளை ரஷ்யாவிற்குள் இருக்கும் இலக்குகளை நோக்கி பயன்படுத்த உக்ரேனை அனுமதிக்கும் முடிவு ஏற்கனவே எடுக்கப்பட்டதாக பிரிட்டிஷ் அரசாங்க வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. இருப்பினும், வெள்ளிக்கிழமை வாஷிங்டன் DC இல் ஸ்டார்மர் பைடெனை சந்திக்கும் போது பகிரங்கமாக இது அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படவில்லை” என்று குறிப்பிட்டுள்ளது. 

ரஷ்யாவிற்குள் விரிவாக்கப்பட்ட தாக்குதலை அங்கீகரிப்பது பற்றி செவ்வாயன்று கேட்டதற்கு, “நாங்கள் அதைச் செய்து வருகிறோம்” பைடென் பதிலளித்தார்.

செனட் வெளியுறவுக் குழுத் தலைவர் பென் கார்டினை மேற்கோள் காட்டிய பொலிட்டிகோ, இந்த முடிவு ஏற்கனவே எடுக்கப்பட்டிருந்தால் “ஆச்சரியப்படுவதற்கில்லை” என்று குறிப்பிட்டிருந்தது. மேலும் அந்த அறிக்கையில், Storm Shadow குரூஸ் ஏவுகணைகள் குறித்து நேர்மறையான முடிவு எதுவும் எடுக்கப்படாவிட்டிருந்தால், பிளின்கன் மற்றும் லாம்மி ஆகியோர் கியேவ் நகருக்கு கூட்டாகச் சென்று, புதன் கிழமை இடம்பெற்ற ஜெலென்ஸ்கியுடனான சந்திப்பு நடைபெற்றிராது என்று அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தாக குறிப்பிட்டது.

ஆனால், “கியேவில் இந்த நீண்ட தூர ஏவுகணைகள் பற்றி பொது அறிவிப்பை வெளியிடுவது தேவையற்ற ஆத்திரமூட்டும் செயலாக கருதப்படும்” என்று பொலிட்டிகோ  மேலும் குறிப்பிட்டது.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ரஷ்ய நகரங்களில் நேட்டோ ஆயுதங்கள் குண்டுமழை பொழியும் என்ற “ஆத்திரமூட்டும்” உண்மையை குறைத்துக் காட்டுவதற்காக, வெள்ளிக்கிழமை இரவு வெளிவரும் தொடர் செய்திகளின் ஒரு பகுதியாக இந்த அறிவிப்பு இடம்பெறும். மேலும் போரை வியத்தகு முறையில் அதிகரிக்க அச்சுறுத்தும் இந்த வளர்ச்சியை பொது உணர்வுக்கு வெளியே வைத்திருக்க வேண்டும்.

ட்டுவிட்டர் X இல் Lammy பின்வருமாறு அறிவித்தார், “உக்ரேனுக்கான நமது ஐக்கியமான மற்றும் இரும்புக் கவச ஆதரவை மீண்டும் வலியுறுத்துவதற்காக நான் இன்று @SecBlinken உடன் கியேவில் இருக்கிறேன். விளாடிமிர் புட்டினுடைய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக நாம் எழுந்து நிற்க வேண்டும். நமது கூட்டு பாதுகாப்பு அதில் தங்கியுள்ளது” என்று குறிப்பிட்டார்.

ரஷ்யாவின் “விரிவாக்கத்திற்கு” விடையிறுப்பாக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து தயாரித்து வரும் பாரிய ஆத்திரமூட்டும் நடவடிக்கையை பிளின்கன் வடிவமைத்தார். “ரஷ்யாவின் இந்த நடவடிக்கையை நாங்கள் இப்போது பார்த்தோம், ரஷ்யா ஈரானிடம் இருந்து பாலிஸ்டிக் ஏவுகணைகளைப் பெறுகிறது. இது, உக்ரேனில் அதன் ஆக்கிரமிப்பை மேலும் வலுப்படுத்தும். எனவே யாராவது விரிவாக்க நடவடிக்கைகளை எடுத்தால், அது திரு. புட்டின் மற்றும் ரஷ்யாவாகத் தோன்றும்” என்று பிளிங்கன் கூறினார்.

கடந்த திங்களன்று, முன்னணி பிரதிநிதிகள் சபை குடியரசுக் கட்சியின் குழுவினர், உக்ரேனுக்கு நேட்டோ வழங்கிய ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் மீதமுள்ள அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்குமாறு ஜனாதிபதி பைடெனுக்கு ஒரு கடிதத்தை அனுப்பினர்.

ரஷ்யாவிற்குள் தொலை தூரத்திலுள்ள முறையான இராணுவ இலக்குகளுக்கு எதிராக உக்ரேன் அமெரிக்கா வழங்கிய நீண்ட தூர ஏவுகணை அமைப்புகளை குறிப்பாக இராணுவ தந்திரோபாய ஏவுகணை அமைப்புகளை (ATACMS) பயன்படுத்துவதுக்கு மீதமுள்ள கட்டுப்பாடுகளையும் நீக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று அந்தக் கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.

போரின் முதல் நாளிலிருந்தே அதன் தீவிரம் குறித்த கவலைகள் தொடர்ந்து செல்லுபடியாகாதவை என்று கடிதம் அறிவித்தது. ரஷ்யாவில் அமெரிக்கா வழங்கிய ஆயுதங்களை உக்ரேன் பயன்படுத்தியதோ அல்லது ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் அதன் இராணுவ ஊடுருவல்களோ, (இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ரஷ்ய பிரதேசத்தின் மீதான முதல் வெளிநாட்டு ஆக்கிரமிப்பு) இந்த விரிவாக்கத்திற்கு ரஷ்யாவின் பதிலடியைத் தூண்டவில்லை என்று அது வலியுறுத்தியது.

கார்டியனின் அறிக்கை குறித்து ரஷ்ய செனட்டர் அலெக்ஸி புஷ்கோவ், “ரஷ்ய பிரதேசத்தை தாக்குவதற்கான முடிவு தெளிவாக தயாராகி வருகிறது. ...  இந்த முடிவை தலைகீழாக மாற்றப்படுவதற்கு, அதைப் பற்றிய பல உரையாடல்கள் மற்றும் குறிப்புகள் உள்ளன. இன்னும் தயாரிக்காவிட்டாலும், இன்னும் கொஞ்ச நாள் ஆகும் போலிருக்கிறது. தி கார்டியன் பத்திரிகை வழியாக கசிந்தது தற்செயலான விடயமல்ல. பொதுமக்களின் கருத்து தயாரிக்கப்பட்டு வருகிறது” என்று டெலிகிராமில் எழுதினார்.

அமெரிக்காவுக்கான ரஷ்ய தூதர் அனடோலி அன்டோனோவ், “விரோத நடவடிக்கைகளுக்கான நமது சகிப்புத்தன்மையின் வரம்புகளை வாஷிங்டன் தொடர்ந்து சோதித்து” வருவதாகவும், “மூன்றாம் உலகப் போருக்கு வழி வகுத்து” வருவதாகவும் அறிவித்தார்.

கடந்த புதன்கிழமை அன்று, முன்னாள் கிரெம்ளின் ஆலோசகர் செர்ஜி காரகனோவ் கொம்மர்சண்ட் நாளிதழுக்கு அளித்த பேட்டியில், நேட்டோ தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் வகையில், அணு ஆயுதங்களைப் பயன்படுத்தத் தயாராக இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். “எந்தச் சூழ்நிலையிலும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த மாட்டோம் என்று நமது எதிரிகள் நம்பும் அளவுக்கு நிலைமை மோசமடைய அனுமதித்துள்ளோம்... எதிரிகளை நம்ப வைக்க முடியாமல் அணு ஆயுதங்களை வைத்திருப்பது, நீங்கள் அவற்றைப் பயன்படுத்தத் தயாராக இருக்கிறீர்கள் என்பது தற்கொலை” நடவடிக்கையாகும்.

அவர் மேலும், “ஒரு கோட்பாட்டின் முக்கிய குறிக்கோள், ரஷ்யா அணு ஆயுதங்களைப் பயன்படுத்தத் தயாராக உள்ளது என்பதை தற்போதைய மற்றும் எதிர்கால எதிரிகளை நம்ப வைப்பதாக இருக்க வேண்டும்” என்று கூறினார். அத்தோடு, “எங்கள் பிரதேசத்திற்கு எதிரான எந்தவொரு பாரிய தாக்குதலும், அணு ஆயுத தாக்குதலுடன் பதிலடி கொடுக்கும் உரிமையை எங்களுக்கு அளிக்கிறது என்பதை நாம் வலியுறுத்த வேண்டிய நேரம் இது” என்று அவர் தெரிவித்தார்.

ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போரின் பாரிய விரிவாக்கம், துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸின் புதன்கிழமை ஜனாதிபதி விவாதத்தின் பின்னணியில் உள்ளது. மேலும், உலகில் அமெரிக்காவின் “நிலையை” பாதுகாக்கும் வகையில், “உலகிலேயே மிகவும் கொடிய போரிடும் படை எங்களிடம் இருப்பதை உறுதி செய்வதில்” தனது வேட்புமனுவை அர்ப்பணிப்பதாக ஹாரிஸ் உறுதியளித்தார்.

Loading