முன்னோக்கு

வாரன் டிரக் ஆலையில் பெருமளவிலான பணிநீக்கங்களை நிறுத்து! வேலை வெட்டுக்களுக்கு எதிராக சர்வதேச தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டு!

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

சர்வதேச இளைஞர்கள் மற்றும் சமூக சமத்துவத்திற்கான மாணவர்கள் அமைப்பின் (IYSSE) உறுப்பினர்கள் டிசம்பர் 21, 2023 அன்று மிச்சிகன், வாரனில் உள்ள வாரன் டிரக் ஒருங்கிணைப்பு (Assembly) ஆலையில், ஸ்டெல்லாண்டிஸ் தொழிலாளர்களுக்கு காஸா இனப்படுகொலையை எதிர்க்கும் அறிக்கைகளை விநியோகிக்கின்றனர்

ஸ்டெல்லாண்டிஸின் வாரன் டிரக் (Warren Truck) ஒருங்கிணைப்பு ஆலையில் பாரிய பணிநீக்கங்கள் உலகெங்கிலுமான வாகனத்துறை தொழிலாளர்களுக்கு ஓர் அச்சுறுத்தலாக உள்ளன. அக்டோபர் 8 ஆம் தேதி நடக்கவிருக்கும், டெட்ராய்ட் பகுதி தொழிற்சாலை வேலை வெட்டுக்களானது, வேலைகள் மீதான உலகளாவிய போரின் பாகமாக இருக்கிறது. இது, பூகோள ரீதியான உற்பத்தியில் ஒன்றுபட்டுள்ள தொழிலாள வர்க்கத்தை, இராட்சத நாடுகடந்த நிறுவனங்களுக்கு எதிராக நிறுத்துகிறது.

கடந்த வியாழனன்று நடந்த ஒரு உள்ளூர் கூட்டத்தில், வாரன் டிரக் தொழிலாளர்கள் சீற்றம் அடைந்து போராட தீர்மானகரமாக இருந்தனர். மறுபுறம், ஐக்கிய வாகன தொழிலாளர் சங்க (The United Auto Workers - UAW) அதிகாரத்துவம், வேலையின்மைக்கு எவ்வாறு வழக்குத் தாக்கல் செய்வது என்பது பற்றி நிறுவனத்திலிருந்தே துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து, அக்கறை காட்டுவது போல் நடிக்கும் ஆற்றலைத் திரட்ட முடியவில்லை.

ஷான் பெயினும் ஐக்கிய வாகன தொழிலாளர் சங்க இயந்திரமும் பெருநிறுவன நிர்வாகத்தின் ஒரு அங்கமாக தங்கள் பங்கை நிறைவேற்றிக் கொண்டிருந்தன. அவர்கள் 2,450 தொழிலாளர்களின் பணிநீக்கத்தை (இது அவர்களுக்கு முன்கூட்டியே தெரியும் என்பதுடன், கடந்த ஆண்டு அவர்கள் முடுக்கிவிட்ட விற்றுத்தள்ளும் ஒப்பந்தங்களின் விளைவாக உள்ளது) தொழிலாளர்கள் எதிர்ப்பதற்கு ஒன்றும் செய்ய முடியாத ஒரு நியாயமான செயல் என்று முன்வைத்தனர்.

இது ஒரு பொய்! வேலை வெட்டுக்கள் எதிர்க்கப்பட முடியும், எதிர்க்கப்பட வேண்டும், ஆனால் இதற்கு தொழிலாள வர்க்கம் சுயாதீனமாக, அதிகாரத்துவத்திற்கு எதிராக ஒழுங்கமைக்கப்பட வேண்டும். UAW மற்றும் அதற்கு அப்பாலும் இருக்கும் அனைத்துத் தொழிலாளர்களின் கூட்டு வலிமையையும் அணிதிரட்ட வேண்டும்.

அமெரிக்காவில் வாகனத்துறை தொழிலாளர்கள் தங்கள் போராட்டத்தை, வேலைகளில் இரத்தக்களரியில் ஈடுபட்டுள்ள நாடுகடந்த பெருநிறுவனங்களுக்கு எதிராக ஒரு சர்வதேச தொழிலாள வர்க்கத்தை நிறுத்தும் ஒரு உலகளாவிய போராட்டமாக பார்க்க வேண்டும். வாரன் டிரக் ஆலையில் இடம்பெறும் பணிநீக்கங்கள் குறைந்து வரும் வாகன விற்பனையுடன் தொடர்புடையவை என்றாலும், ஹென்றி ஃபோர்டு மற்றும் இயந்திர வரிசையில் உற்பத்தி பொருட்களை ஒருங்கிணைக்கும் செயல்முறை உருவாகிய காலத்திலிருந்து வாகனத் துறையில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றத்தின் ஒரு பகுதியாக, பல ஆண்டுகளாக இவை திட்டமிடப்பட்டு வருகின்றன. உலகளாவிய வாகனத் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களின் பெரும் பிரிவுகளை அகற்ற, குறைந்த உழைப்பு தேவைப்படும் மின்சார வாகனங்களை நோக்கி நகரும் செயல்முறையை வாகன உற்பத்தியாளர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணி கடந்த ஆண்டு எச்சரித்ததைப் போல, இப்போது தொழிலாளர்களை பணிநீக்கம் செய்ய பயன்படுத்தப்பட்டு வரும் விற்றுத்தள்ளப்பட்ட ஒப்பந்தங்களுக்கு முன்கூட்டியே, அடுத்த தசாப்தத்தில் அனைத்து அமெரிக்க வேலைகளில் பாதியை அச்சுறுத்தவும், ஐரோப்பாவில் அரை மில்லியன் வேலைகளையும் மற்றும் பிற இடங்களில் நூறாயிரக் கணக்கான வேலைகளையும் வெட்டவும் நிறுவனங்கள் மின்சார வாகனங்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளன.

ஸ்டெல்லாண்டிஸ் (Stellantis) தலைமை நிர்வாக அதிகாரி கார்லோஸ் டவாரெஸ் (Carlos Tavares) இந்த கோடையில் முதலீட்டாளர்களிடம், “செலவுகளைக் குறைப்பதற்கான பந்தயமாக மின்சார வாகன உற்பத்தி மாறியுள்ளது” என்று கூறினார். எஞ்சியிருக்கும் வேலைகள் மோசமான ஊதியங்களில்தான் இருக்கும். அவை பெரும்பாலும் மிகக் குறைந்த செலவிலான சந்தைகளுக்குக்கு கொடுக்கப்படும்.

ஏற்கனவே இந்தாண்டு, வாகன உற்பத்தியாளர்கள் அமெரிக்காவில் மட்டும் 8,000 வேலைகளை வெட்டியுள்ளனர். இவற்றில், டெட்ராய்டில் உள்ள ஸ்டெல்லாண்டிஸின் அருகிலுள்ள மாக் ஆலையில் 2,000 க்கும் அதிகமானவர்கள் மற்றும் கூடுதல் நிறுவனங்களில் ஆயிரக் கணக்கான வேலை வெட்டுக்கள் உள்ளடங்கும். புதிய ஒப்பந்தத்தின் கீழ் அவர்கள் முழுநேரமாக பணியமர்த்தப்படுவார்கள் என்று ஐக்கிய வாகன தொழிலாளர்கள் சங்கம் வாக்குறுதியளித்து, அவர்களுக்கு பொய்யுரைத்தது.

பேர்லினில் உள்ள ஒரு தொழிற்சாலையில் 3,000 பேர் உட்பட, அமெரிக்காவிலும் வெளிநாடுகளிலும் அதன் உலகளாவிய செயல்பாடுகளில் 14,000 வேலை வெட்டுக்களை டெஸ்லா அறிவித்தது. பல தொழிலாளர்கள் வேலையில் தங்கள் அடையாள அட்டையை ஸ்கேன் செய்ய முயன்றபோதுதான், அவர்கள் வேலையிழந்துபோய் இருப்பதை அறிந்தனர்.

ஜேர்மன் வாகன தொழில்துறை முழுவதிலும், குறிப்பாக விநியோகஸ்தர்களிடையே பாரிய பணிநீக்கங்கள் நடந்துள்ளன. மேலும் வோல்ஸ்வாகன், 3,000 பேர் பணியாற்றும் பெல்ஜியத்தில் உள்ள அதன் ஆலையை மூடுவதற்கும் அச்சுறுத்தி வருகிறது.

2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஃபியட்-கிறைஸ்லர் மற்றும் பேஜோ நிறுவனங்களுக்கு இடையேயான இணைப்பின் மூலம் ஸ்டெல்லாண்டிஸ் உருவாக்கப்பட்டதிலிருந்து இத்தாலிய வாகனத்துறை தொழிலாளர்கள் அழிக்கப்பட்டுள்ளனர். ஸ்டெல்லாண்டிஸ்ஸில் உள்ள இத்தாலிய தொழிலாளர் தொகுப்பு மூன்றே ஆண்டுகளில் 55,000ல் இருந்து 43,000 என்று சரிந்துவிட்டது. நிறுவனம் இந்த ஆண்டு முன்னதாக மேலும் 3,500க்கும் மேற்பட்ட வேலை வெட்டுக்களை அறிவித்தது.

ஜெனரல் மோட்டார்ஸ் சீனாவில் அதன் வணிகத்தில் ஒரு பெரிய மறுசீரமைப்பை மேற்கொள்ள உத்தேசித்திருப்பதாக சமீபத்தில் அறிவித்துள்ளது, அங்கு அமெரிக்காவின் வர்த்தகப் போர் நடவடிக்கைகளை இறுக்குவதன் விளைவாக, 2017 இல் 4 மில்லியன் வாகனங்கள் என்ற உச்சத்தில் இருந்து விற்பனை பொறிந்துள்ளது.

இந்த பணிநீக்கங்களின் உலகளாவிய தன்மை, தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ரீதியில் ஒருங்கிணைக்கப்பட்ட விடையிறுப்பின் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. வாகனத்துறை தொழிலாளர்களின் சாமானிய தொழிலாளர் குழுக்களின் வலையமைப்பின் அறிக்கை இவ்வாரம் அறிவித்ததைப் போல, வாரன் டிரக் அல்லது உலகில் உள்ள வேறு எந்த தொழிற்சாலையிலும் உள்ள தொழிலாளர்கள் “எல்லா இடங்களிலும் உள்ள வாகனத் தொழிலாளர்களின் ஒருங்கிணைந்த எதிர் தாக்குதலின் ஆதரவு இல்லாமல் தங்கள் ஆலையை பாதுகாக்க முடியாது.”

இது, ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கு எதிரான ஒரு போராட்டமாகும். அங்கு தொழிலாளர்கள், “ஜேர்மனியில் ஐ. ஜி மெட்டல், கனடாவில் யூனிஃபொர் ஆகட்டும் அல்லது மெக்சிகோவில் UAW மற்றும் பைடென் ஆதரவிலான சின்டியா (SINTTIA) தொழிற்சங்கம் ஆகட்டும், நிர்வாகத்திற்கு எதிராகவும், தொழிற்சங்க விற்றுத்தள்ளல்களுக்கு எதிராகவும், இரண்டு முனைகளில் போர் நடத்தி வருகின்றனர்” என்பதையும் அது விளக்கியது.

முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு உற்பத்தித்திறன் மற்றும் செல்வவளத்தை உருவாக்கியுள்ள, ஆனால் இப்போது பெருநிறுவன செல்வந்த தட்டுக்களின் இலாபங்களுக்கு அடிபணிய வைக்கப்பட்டுள்ள ஒரு சிக்கலான உலகப் பொருளாதாரத்தை கட்டுப்பாட்டில் எடுக்க, ஒரு உலகளாவிய மூலோபாயம் அவசியமாக தேவைப்படுகிறது.

போரை நிறுத்துவதற்கு தொழிலாள வர்க்கத்தின் தலையீடு தேவைப்படுகிறது. உக்ரேன், காசாவில் அமெரிக்க பினாமிப் போர்கள் மற்றும் ஏனைய இடங்களில் அபிவிருத்தி அடைந்து வரும் மோதல்கள் ஆகியவை, “மனித உரிமைகளுக்காக” நடத்தப்படுகிறன்றன என்று கூற்றுக்களுடன் எந்த தொடர்பும் இல்லை. ஆனால், இவை உண்மையில் சந்தைகள், மூலப்பொருட்கள், கப்பல் போக்குவரத்து பாதைகள் மற்றும் உழைப்பு ஆகியவற்றின் வெற்றியைப் பற்றியது.

ஒவ்வொரு நாட்டிலும், தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் “அமெரிக்கா முதலில்,” “இத்தாலி முதலில்,” “ஜேர்மனி முதலில்,” மற்றும் பலவற்றை ஊக்குவித்து வருகின்ற அதேவேளையில், வேலைநீக்கங்களைத் திணிக்க உதவுகின்றன. இந்த பிளவுபடுத்தும் தேசியவாதத்தை ஊக்குவிப்பதன் மூலம், நிறுவனங்கள் தொழிலாளர்களை ஒருவருக்கு எதிராக ஒருவரை சாட்டையில் அடித்துக் கொள்வதற்கு உதவுகின்றன.

இது அமெரிக்காவில் தீவிர வெளிப்பாட்டைக் காண்கிறது. அங்கு UAW மற்றும் பிற தொழிற்சங்கங்கள் அரசாங்கத்துடன் பெருநிறுவனக் கூட்டில் ஈடுபட்டுள்ளன. ஆயிரக் கணக்கான வாகனத்துறை தொழிலாளர்களை பணிநீக்கம் செய்ய பயன்படுத்தப்பட்டு வரும் ஒப்பந்தத்திற்கு பைடென் ஒப்புதல் அளித்துள்ளார். அதேவேளையில் UAW தலைவர் ஃபெயின் அரை-அரசு அதிகாரி அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டுள்ளார். UAW தொழிற்சங்க இயந்திரம் இப்போது கமலா ஹாரிசின் தேர்தல் பிரச்சாரத்திற்கு ஊக்கமளிக்கும் உயர்மட்ட அமைப்புகளில் ஒன்றாக உள்ளது.

இதுவும் “உள்நாட்டு போர்முனையை” தயார் செய்வதற்கான போர்க்கால கூட்டணியாகும். இரண்டாம் உலகப் போர் குண்டுவீச்சு விமானங்கள் பொறிக்கப்பட்ட சட்டைகளை அணிந்திருந்த ஃபைன், தொழிலாளர்கள் “ஜனநாயக ஆயுதக்கிடங்கின்” அடிச்சுவடுகளைப் பின்பற்ற வேண்டும் என்று அறிவிக்கிறார். இது மற்றொரு உலகப் போருக்கு தியாகம் செய்ய அவர்கள் தயாராக இருக்க வேண்டும் என்பதற்கான உட்குறிப்பாகும்.

கடந்த வெள்ளியன்று வெளியிடப்பட்ட ஒரு காணொளியில், ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர் சங்கத்தின் தலைவர் பெயின், ஸ்டெல்லாண்டிஸை “தவறாக நிர்வகிப்பதற்காக” போர்த்துகீசிய டவாரெஸ் மற்றும் “வெளிநாட்டு நிர்வாகிகளை” கண்டித்தார். அவர் ஸ்டெல்லாண்டிஸை மிகவும் “அமெரிக்க” ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் ஃபோர்ட் என்று கூறப்படுவதுடன் சாதகமற்ற முறையில் ஒப்பிட்டார் - அவை உண்மையில் உலகெங்கிலும் செயல்படுகின்றன. UAW மூன்று பெரும் நிறுவனங்களிலும் ஆட்குறைப்பு செய்ய உதவுகிறது என்பதை பார்வையாளர்களுக்கு தெரிவிப்பதை அவர் புறக்கணித்தார்.

உலகப் பொருளாதாரம், தொழிற்சங்க அதிகாரத்துவங்களை நிர்வாகத்தின் மற்றும் தேசிய அரசின் வெளிப்படையான முகவர்களாக மாற்றுவதை மட்டும் விளைவிக்கவில்லை. மாறாக, அது முன்னெப்போதையும் விட மிகப் பெரியதாகவும், ஒன்றோடொன்று இணைந்து இருக்கும் தொழிலாள வர்க்கத்தையும் தோற்றுவித்துள்ளதுடன், சுரண்டலுக்கு எதிரான ஒரு புதிய, சர்வதேச இயக்கத்திற்கான சாத்தியத்தையும் உருவாக்கியுள்ளது.

கோவிட்-19 தொற்றுநோயின் ஆரம்ப கட்டத்தில் வாகனத் தொழில்துறையை மூடுவதுக்கு நிர்பந்தித்த அட்லாண்டிக் கடந்த திடீர் வேலைநிறுத்த அலை உட்பட, இந்த சாத்தியக்கூறை உறுதிப்படுத்தும் பல அறிகுறிகள் உள்ளன. இந்த ஆண்டு இத்தாலியிலும் பாரிய பணிநீக்கங்களுக்கு எதிராக திடீர் வேலைநிறுத்தங்கள் வெடித்தன.

தெற்கே உற்பத்தியை நகர்த்துவதற்கான ஸ்டெல்லாண்டிஸின் அச்சுறுத்தலுக்கு UAW அதிகாரத்துவமானது, மெக்சிக்கன் விரோத பேரினவாதத்துடன் விடையிறுத்து வருகின்ற அதேவேளையில், மெக்சிக்கன் தொழிலாளர்கள் தமது கொத்தடிமை நிலைமைகளுக்கு எதிராக போராடி வருகின்றனர். அவர்கள், 2019 GM வேலைநிறுத்தத்தின் போது, கருங்காலி உற்பத்தியைக் கையாள மறுத்து வடக்கிலுள்ள சகோதர சகோதரிகளிடம் இருந்து போராட்டத்துக்கு ஆதரவைக் கோரினர். 2019 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், பல்லாயிரக்கணக்கான உதிரிபாகத் தொழிலாளர்கள் மெக்சிகன் தொழிற்சங்கங்களை மீறி வெளியேறி, ஐக்கியப்பட்ட போராட்டத்திற்கு அழைப்பு விடுக்க அமெரிக்க எல்லைக்கு அணிவகுத்துச் சென்றனர்.

மணலில் ஒரு கோட்டை வரைந்து போராட வேண்டிய நேரம் இது! உலகளாவிய வேலைப் படுகொலைகளை எதிர்க்க வேண்டும் மற்றும் எதிர்க்கப்பட வேண்டும், வாரன் டிரக் ஆலை, இப்போது தொழிலாள வர்க்கத்தின் எதிர்-தாக்குதலின் ஒரு முக்கிய போர்க்களமாக உள்ளது.

இந்தப் போராட்டம் வெற்றிபெறுவதற்கு, தொழிலாளர்கள் சாமானிய தொழிலாளர் குழுக்களை ஒழுங்கமைக்கவும், தங்களின் சக தொழிலாளர்களுடன் தகவல் தொடர்பு வழிகளை ஸ்தாபிக்கவும், அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் வேலைநீக்கங்களுக்கு எதிராக கூட்டு நடவடிக்கையைத் திட்டமிட சாமானிய தொழிலாளர் குழுக்களின் ஒரு வலையமைப்பைக் கட்டியெழுப்பவும் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணி ஜனவரியில் கோடிட்டுக் காட்டிய கோட்பாடுகளை கையிலெடுக்குமாறு உலக சோசலிச வலைத் தளம் தொழிலாளர்களை வலியுறுத்துகிறது:

  • அனைத்து வேலை வெட்டுக்களுக்கும் உடனடியாக முற்றுப்புள்ளி வை! ஏற்கனவே பாதிக்கப்பட்ட அனைவரையும் மீண்டும் பணியில் அமர்த்து!

  • மின்சார வாகனங்களை உற்பத்தி செய்வதற்கும் மற்றும் பல தசாப்தங்களாக தேக்கமடைந்துள்ள ஊதியங்களை ஈடுசெய்வதற்கும் தேவைப்படும் குறைந்த மணிநேரங்களைக் கணக்கில் கொண்டு, ஊதிய அதிகரிப்புடன் வேலை நாளின் நீளத்தைக் குறைக்க வேண்டும்!

  • உலகளாவிய வேலைப் படுகொலையை எதிர்த்துப் போராட எல்லைகளைக் கடந்து ஒன்றுபடுவோம்!

  • வாகனத் தொழில்துறையை சமூக உடைமையின் கீழ் மற்றும் தொழிலாளர்களின் ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வாருங்கள்!

Loading