வாஷிங்டன் டி.சி.க்கு நெதன்யாகு வரும்போது இஸ்ரேலிய டாங்கிகள் கான் யூனிஸில் பாலஸ்தீனியர்களை படுகொலை செய்கின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம் 

பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்க காங்கிரஸின் ஒரு கூட்டுக் கூட்டத்திற்கு முன்னதாகவும், ஜனாதிபதி ஜோ பைடென், துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் மற்றும் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உடனான சந்திப்புகளுக்கு முன்னதாகவும் புதன்கிழமை வாஷிங்டன் டி.சி.க்கு வந்திருந்த நிலையில், இஸ்ரேலிய அரசாங்கம் காஸாவில் பாலஸ்தீனியர்கள் மீதான அதன் இனப்படுகொலை தாக்குதலைத் தொடர்ந்தது.

கான் யூனிஸ், காஸா பகுதியில் இஸ்ரேலிய குண்டுவீச்சைத் தொடர்ந்து புகை உயர்கிறது, திங்கள், ஜூலை 22, 2024 [AP Photo/Abdel Kareem Hana]

அல் ஜசீரா செவ்வாயன்று 89 பாலஸ்தீனியர்கள் காஸா பகுதி முழுவதும் கொல்லப்பட்டனர் மற்றும் 329 பேர் காயமடைந்தனர் என்று அறிவித்தது, இது அப்பகுதியின் தெற்கு எல்லையில் இருந்து ஏழு மைல் தொலைவில் உள்ள கான் யூனிஸ் நகரத்தின் மீது இஸ்ரேல் ஒரு புதிய தாக்குதலை தொடங்கியுள்ளது. தாக்குதல்களின் இடிபாடுகளுக்குள் மேலும் 68 பேர் காணாமல் போயுள்ளதாக அல் ஜசீரா தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய டாங்கிகள் திங்களன்று கான் யூனிஸ் நகரத்தின் மீதான மூன்றாவது தாக்குதலில் மீண்டும் இறங்கின. இதில் 70 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். ராய்ட்டர்ஸ் செய்தியின்படி, “பானி சுஹைலா நகரம் மற்றும் கான் யூனிஸின் கிழக்குப் பகுதியை ஒட்டியுள்ள பிற நகரங்களில் டாங்கி குண்டுகளால் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர், அப்பகுதியும் வானத்திலிருந்து குண்டு வீச்சு தாக்குதலுக்கு உள்ளானது” என்று காஸாவில் உள்ள மருத்துவர்கள் தெரிவித்தனர்.

“இது அழிவு நாள் போன்றது,” என்று ஒரு குடியிருப்பாளர் அரட்டை செயலி வழியாக ராய்ட்டர்ஸிடம் கூறினார். “மக்கள் துப்பாக்கிச் சூடுகளின் கீழ் தப்பி ஓடுகிறார்கள், பலர் சாலைகளில் இறந்தும் காயமடைந்தும் உள்ளனர்,” என்று அவர் கூறினார்.

இறந்தவர்களில் பல பெண்களும் குழந்தைகளும் அடங்குவதாகவும், குறைந்தபட்சம் 200 பேர் காயமடைந்துள்ளதாகவும் காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. சியோனிச அரசின் சூத்திரத்தின்படி, கான் யூனிஸ் படுகொலை நியாயப்படுத்தப்பட்டது, ஏனென்றால் அப்பகுதியில் இருந்து போராளிகள் ராக்கெட்டுகளை வீசுவதாகவும், ஹமாஸ் அங்கு மீண்டும் அணிதிரள முயற்சிப்பதாகவும் இஸ்ரேலிய உளவுத்துறை கூறியது.

எவ்வாறாயினும், பாலஸ்தீனிய அதிகாரிகள், இலக்கு வைக்கப்பட்ட பகுதிகளில் 400,000 மக்கள் வசித்து வருவதாகவும், டசின் கணக்கான குடும்பங்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறத் தொடங்கியிருப்பதாகவும், ஆனால் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளின் (IDF) வான்வழித் தாக்குதல்கள் தொடங்குவதற்கு முன்னர் அப்பகுதியை விட்டு வெளியேற அவர்களுக்கு போதுமான நேரம் வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்தனர்.

“சில குடும்பங்கள் கழுதை வண்டிகளில் தப்பியோடின, மற்றவர்கள் கால்நடையாக, மெத்தைகளையும் ஏனைய உடமைகளையும் சுமந்து கொண்டு தப்பிச் சென்றனர்” என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் அறிவித்தது.

இதற்கிடையில், பாலஸ்தீன செம்பிறை சங்கம் கிழக்கு கான் யூனிஸில் உள்ள அதன் இரண்டு கிளினிக்குகள் இஸ்ரேலிய தாக்குதலால் செயலிழந்துவிட்டதாக கூறியது.

நாசர் மருத்துவ வளாகத்தில், சிலர் பிணவறைக்கு வெளியே நின்று இறந்த தங்கள் உறவினர்களுக்கு பிரியாவிடை கொடுத்தனர். கிழக்கு கான் யூனிஸ் குண்டுவெடிப்பில் பல உறவினர்களை இழந்த அஹ்மத் சாமூர் ராய்ட்டர்ஸிடம் “நாங்கள் சோர்வடைந்துள்ளோம். காஸாவில் நாங்கள் களைத்துப் போயிருக்கிறோம். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு கணமும் எங்கள் குழந்தைகள் தியாகியாகிறார்கள்” என்று கூறினார்,

மேலும், “யாரும் எங்களை காலி செய்யச் சொல்லவில்லை. நான்கு மாடிக் கட்டிடங்கள் பொதுமக்கள் மீது விழுந்தன, ... அவர்களால் கைக்கு எட்ட முடிந்த உடல்களை குளிர்சாதன அறைக்கு (பிணவறைக்கு) கொண்டு வந்தனர்” என்று சாமூர் குறிப்பிட்டார்.

இறந்த உடல்களை ஏற்றிகொண்டு ஆம்புலன்ஸுடன் மருத்துவமனைக்கு வந்த ஒருவர் அல் ஜசீராவிடம், “குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருந்த ஒரு குடும்பம், துண்டு துண்டாக சிதைக்கப்பட்டது” என்று கூறினார்.

நூறாயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் தஞ்சம் புகுந்துள்ள அருகிலுள்ள நகரமான டெய்ர் அல்-பலாவில் இருக்கும் அல்-அக்ஸா மருத்துவமனைக்குள் உள்ளூர் பத்திரிகையாளர்கள் பயன்படுத்திய ஒரு கூடாரத்தின் மீதான வான்வழித் தாக்குதல், இஸ்ரேலிய ஆட்சியின் பொய்கள் அம்பலப்படுத்தின. அத்தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் இருவர் காயமடைந்தனர் என்று காஸா அரசாங்கத்தின் ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த படுகொலை இஸ்ரேலிய இனப்படுகொலையில் கொல்லப்பட்ட பாலஸ்தீனிய பத்திரிகையாளர்களின் எண்ணிக்கையை மேலும் 163 ஆக கொண்டு வருகிறது.

மத்திய காஸா பகுதியில் உள்ள புரிஜ் அகதிகள் முகாமின் நுழைவாயிலில் உள்ள ஒரு வீட்டின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட குண்டுவீச்சில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர் என்று அல் ஜசீரா தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தில் 4 குழந்தைகள் உள்பட 10 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அல் ஜசீரா வெளியிட்ட வீடியோவில், மக்கள் சடலங்களை வெளியேற்றும்போது வீட்டின் சுவர்களில் இரத்தம் தெறித்திருப்பதை காட்டுகின்றன.

கான் யூனிஸ் மற்றும் ரஃபா இடையே உள்ள கடலோர நகரமான அல்-மவாசியை விட்டு பாலஸ்தீனியர்களை வெளியேறுமாறு இஸ்ரேலிய இராணுவம் திங்களன்று உத்தரவிட்டது. ஒரு அறிக்கையில், இஸ்ரேலிய பாதுகாப்புப் படை, மக்களை கிழக்கு கான் யூனிஸை விட்டு வெளியேறி “அல்-மவாசியிலுள்ள மனிதாபிமான பகுதிக்கு” மேற்கே இடம்பெயருமாறு வலியுறுத்தியது. எவ்வாறாயினும், பத்து நாட்களுக்கு முன்னர், இந்த “பாதுகாக்கப்பட்ட மண்டலம்” மீதான தாக்குதலுக்குப் பின்னர், மேற்கு அல்-மவாசியில் உள்ள கூடார முகாம்களுக்குள் செல்ல பாலஸ்தீனியர்கள் தயக்கம் காட்டுகின்றனர். இந்த சம்பவத்தில், குறைந்தது 92 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 300 க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

இஸ்ரேலால் குறிப்பிடப்பட்ட போலி “மனிதாபிமான மண்டலங்கள்” 18.5 சதுர மைல்களாக குறைக்கப்பட்டுள்ளதால், பாலஸ்தீனியர்களுக்கு காஸாவில் பாதுகாப்பான இடம் இல்லை. இதன் அர்த்தம், 1.7 மில்லியன் மக்கள், கட்டாய வெளியேற்றங்களால் வேரோடு பிடுங்கப்பட்டு, காஸாவிலிருந்து வெளியேற முடியாமல் தடுக்கப்பட்டு, இப்போது காஸா பகுதியின் மொத்த பரப்பளவில் வெறும் 13 சதவீதத்தில் மட்டுமே வாழ்ந்து வருகின்றனர்.

பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. முகமையான UNRWA, இஸ்ரேலிய இராணுவம் காஸா பகுதியின் 80 சதவீதத்திற்கும் அதிகமானவற்றை “வெளியேற்ற உத்தரவுகளின் கீழ் வைத்துள்ளது அல்லது செல்ல தடை செய்யப்பட்ட மண்டலமாக  ஆக்கியுள்ளது” என்று கூறியது. X டுவிட்டரில் ஒரு செய்தியை UNRWA பதிவிட்டுள்ளது: “நாங்கள் எப்போதும் ஒரே கேள்வியைக் கேட்டுக்கொண்டே இருக்கிறோம்: நான் எங்கு செல்வேன்? “

இஸ்ரேலிய அரசாங்கம், காஸாவின் உள்கட்டுமானம், வீடுகள், வணிகங்கள், பள்ளிகள், மத கட்டிடங்கள் மற்றும் மருத்துவமனைகளை திட்டமிட்டு அழித்த பின்னர், பாலஸ்தீனிய மக்களை காஸா பகுதியின் ஒரு சிறிய பகுதிக்குள் கட்டுப்படுத்தி, அப்பிராந்தியத்தின் இனச்சுத்திகரிப்பை முழுமையாக்குகிறது என்பதில் இப்போது எந்த சந்தேகமும் இல்லை.

திங்கட்கிழமை நிலவரப்படி இறந்தவர்களின் எண்ணிக்கை 39,006 ஐ எட்டியுள்ளதாகவும், அக்டோபரில் இருந்து 89,818 பேர் காயமடைந்துள்ளதாகவும் காஸா சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். மருத்துவ இதழான தி லான்செட் (The Lancet) இரண்டு வாரங்களுக்கு முன்பு மதிப்பிட்டதைப் போல, இக்குற்றத்தின் அளவு உத்தியோகபூர்வ எண்ணிக்கையை விட பல மடங்கு அதிகம் ஆகும். நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கொல்லப்பட்டவர்கள் 186,000 அல்லது அதற்கும் அதிகமாக இருக்கலாம்.

காஸா இனப்படுகொலையை முடிவுக்குக் கொண்டுவரக் கோரி அதிகரித்து வரும் போராட்டங்களின் அலைக்கு மத்தியில், பாசிசவாத இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெத்தன்யாகு திங்களன்று வாஷிங்டன் டிசி வந்தடைந்தார். போராட்டக்காரர்கள் காங்கிரஸ் அலுவலக கட்டிடத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர், அமைதிக்கான யூத குரல் “எங்கள் பெயரில் இல்லை” என்று எழுதப்பட்ட டி-சேர்ட்டுகளுடன் “காஸாவை வாழ விடுங்கள்!” என்று கோஷமிட்டு Cannon அலுவலக கட்டிடத்தைக் கைப்பற்றியது. இரண்டு சம்பவங்களிலும், கேபிடல் கட்டிடத்திலுள்ள பொலிஸ் தலையிட்டு பல எதிர்ப்பு போராட்டக்காரர்களை கைது செய்துள்ளது.

நெதன்யாகு புதன்கிழமை காங்கிரஸின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றுவார், பின்னர் வியாழக்கிழமை ஜனாதிபதி பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் மற்றும் வெள்ளிக்கிழமை டொனால்ட் டிரம்ப் ஆகியோரை தனித்தனியாக சந்திப்பார். ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினரின் அழைப்பின் பேரில் நெதன்யாகு வாஷிங்டனில் பிரசன்னமாகியிருப்பது, காஸா இனப்படுகொலையில் அமெரிக்க அரசியல் ஸ்தாபகம் உடந்தையாக இருந்து வருவதை மேலும் உறுதிப்படுத்துகிறது.

மனித உரிமைகள் குழுவான அம்னெஸ்டி இன்டர்நேஷனல் ஒரு அறிக்கையில், “போர் குற்றங்கள் உட்பட, அமெரிக்க ஆயுதங்களை இஸ்ரேல் அரசாங்கம் சட்டவிரோதமாக பயன்படுத்துவதை அமெரிக்கா மேற்பார்வையிட்டு வருகிறது. மேலும் இந்த ஆயுதங்களுடன் மேற்கொள்ளப்படும் மீறல்களுக்கு அமெரிக்கா மேலும் உடந்தையாக இருக்கும்” என்று கூறியுள்ளது.

சர்வதேச சட்டத்தை மீறும் அரசாங்கங்கள் அல்லது ஆயுதக் குழுக்களுக்கு ஆயுதங்களை வழங்கும் நாடுகள் “சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மதிப்பதை உறுதி செய்வதற்கான தங்கள் கடமையை மீறுவது மட்டுமல்லாமல், உண்மையில் இந்த மீறல்களுக்கு ‘சர்வதேச அளவில் தவறான செயல்களை’ செய்ய உதவுகின்றன” என்று மனித உரிமைகள் குழு குறிப்பிட்டது. “ஆயுதங்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள், மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டம் மற்றும் அவற்றின் மதிப்பு சங்கிலிகள் முழுவதையும் மதிக்க வேண்டிய பொறுப்பைக் கொண்டுள்ளன” என்று அது மேலும் கூறியது. 

ஆனால், அமெரிக்க அரசியல் ஸ்தாபகத்தைப் பொறுத்தவரை, காஸாவில் இஸ்ரேலால் நடத்தப்பட்டு வரும் இனப்படுகொலை, உலக மக்கள் மீது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களைத் திணிக்கும் நோக்கம் கொண்ட ஒரு உலகளாவிய போர் மூலோபாயத்தின் ஒரு முக்கிய பாகமாக இருக்கிறது.

சோசலிச சமத்துவக் கட்சியும் உலக சோசலிச வலைத் தளமும் புதனன்று பிற்பகல் 1 மணிக்கு தேசிய முற்றத்தின் கிழக்கு முனையில் ஒரு பேரணியை நடத்துகின்றன. அதைத் தொடர்ந்து பிற்பகல் 3 மணிக்கு St. Matthews Evangelical Lutheran தேவாலயத்தில் ஒரு பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த நிகழ்வுகள் வெறுமனே நெதன்யாகுவின் விஜயத்தை எதிர்ப்பதோடு மட்டும் நிற்காமல், மாறாக போர் மற்றும் ஏகாதிபத்திய காட்டுமிராண்டித்தனத்திற்கு எதிரான போராட்டம் எவ்வாறு முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதற்கான ஒரு அரசியல் முன்னோக்கையும் வழங்கும்.

போருக்கு எதிரான போராட்டத்தை, சமூகத்தின் சோசலிச மாற்றத்திற்கான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தின் வளர்ந்து வரும் சமூக இயக்கத்துடன் இணைப்பதே மையப் பணியாகும். இனப்படுகொலைக்கு எதிரான போராட்டத்தை, முதலாளித்துவத்தின் பரந்த நெருக்கடியிலிருந்தும், காட்டுமிராண்டித்தனம், சர்வாதிகாரம், பாசிசம் மற்றும் உலகளாவிய அளவில் அது போருக்குள் வீழ்ச்சியடைந்ததில் இருந்தும் பிரிக்க முடியாது,

Loading