பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்தின் புதிய அரசாங்கங்கள் மீது கடன் மேகம் சூழ்ந்துகொள்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம் 

ஜோன்-லூக் மெலன்சோன் மற்றும் கெய்ர் ஸ்டார்மர் [AP Photo/Thomas Padilla/Kin Cheung]

அடுத்த அரசாங்கத்தை அமைப்பதற்கான மரின் லு பென்னின் தேசிய பேரணியின் அபிலாஷைகளுக்கு ஒரு அடியைக் கொடுத்த மற்றும் ஒரு தொங்கு நாடாளுமன்றத்திற்கு இட்டுச் சென்ற ஒரு பரந்த பாசிச-எதிர்ப்பு இயக்கத்தைக் கண்ட பிரெஞ்சு தேர்தல்களில் இடதை நோக்கிய நகர்வு, வரவிருக்கும் வாரங்களில் நிதிய மற்றும் நாணயச் சந்தைகளில் கணிசமான தாக்கங்களைக் கொண்டிருக்கக் கூடும்.

ஆரம்ப விடையிறுப்பானது யூரோவின் மதிப்பில் சிறிது சரிவு ஆகும். இது 0.3 சதவீதம் வீழ்ச்சியடைந்தது, இருப்பினும், அது பின்னர் உறுதிப்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும், தேர்தலுக்கு முன்னதாக அனுபவித்த கொந்தளிப்புக்கு மீண்டும் வரக்கூடும்.

ஆரம்ப கீழ்நோக்கிய இயக்கம் குறித்து அறிக்கை செய்த புளூம்பேர்க் கட்டுரை ஒன்று, இது புதிய மக்கள் முன்னணியின் (NFP) எதிர்பாராத வலுவான காட்சியின் விளைவாகும், “வணிகர்கள் சில நாட்களுக்கு முன்னர் அவர்கள் பெரும்பாலும் எழுதிவிட்ட ஒரு விளைவை ஜீரணிக்கத் தொடங்கியதன் விளைவாகும், மேலும் சந்தைகளுக்கு ஒரு கொந்தளிப்பான சில வாரங்களை மீண்டும் உயிர்ப்பிக்கும் சாத்தியக்கூறைக் கொண்டுள்ளது” என்று கூறியது.

நிதிய மற்றும் நாணயச் சந்தைகளுக்கு ஒரு முக்கிய பிரச்சினை பிரெஞ்சுக் கடனின் அளவு ஆகும். பிரெஞ்சு வரவுசெலவுத் திட்ட பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.5 சதவிகிதம் என்று உள்ளது; இது ஐரோப்பிய ஒன்றிய விதிகளின்படி அனுமதிக்கப்பட்டுள்ள 3 சதவிகிதத்தைவிட மிக அதிகமாகும். செலவினக் குறைப்புக்கள், வருவாய் பெருக்கும் நடவடிக்கைகள் இல்லாவிட்டால் மொத்தக் கடன் இந்த ஆண்டு 112 சதவிகிதத்திற்கு உயரக்கூடும் என்று சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது.

OATs (ஒருங்கிணைக்கக்கூடிய திறைசேரி முறிகள்) என அழைக்கப்படும் பிரெஞ்சு 10 ஆண்டு கடனுக்கான இலாபம் அல்லது வருவாய் விகிதம், பாதுகாப்பான என்று கருதப்படும் ஜேர்மன் பத்திரங்களின் அளவை விட 66 அடிப்படை புள்ளிகள் (0.66 சதவீதம்) அதிகமாக உள்ளது. இந்த பரவலானது கடந்த மாதம் 80 அடிப்படை புள்ளிகளை எட்டியது, இது கடைசியாக 2012 இல் யூரோ பகுதியின் அரச கடன் நெருக்கடியில் காணப்பட்ட மட்டங்களை எட்டியது.

TD செக்யூரிட்டீஸின் உலகளாவிய மேக்ரோ மூலோபாயத்தின் (global macro strategy) தலைவரான ஜேம்ஸ் ரோஸிட்டர், “அதிர்ச்சியூட்டும் முடிவு” என்னவெனில் பரவல் மீண்டும் அதிகரிக்கக்கூடும் என்று ஒரு குறிப்பில் எழுதினார். “பத்திரச் சந்தைகளின் OATs எதிர் Bund (ஜேர்மன் ஃபெடரல் பத்திரங்கள்) ஆனது, ஒரு தொங்கு பாராளுமன்றத்திற்கான சூழ்நிலையில் விலையை பரவலாக்கின - ஆனால் RN தலைமையிலான தொங்கு பாராளுமன்றம் NFP [புதிய மக்கள் முன்னணி] அல்ல” என்று எழுதினார்.

புதிய நாடாளுமன்றத்தில் பிரதான கட்சியாக மீண்டும் வருவதற்குப் பதிலாக, பிரெஞ்சு ஜனாதிபதி மக்ரோனின் கட்சி மற்றும் அதிக இடங்களைப் பெற்ற NFP க்கு அடுத்தபடியாக RN மூன்றாவது இடத்தைப் பிடித்தது.

மே மாதத்தில், மக்ரோன் முன்கூட்டிய தேர்தலுக்கு அழைப்பு விடுப்பதற்கு முன்னர், தரமதிப்பீட்டு நிறுவனமான ஸ்டாண்டர்ட் அண்ட் புவர்ஸ் (Standard and Poor’s) பிரெஞ்சு அரச கடனுக்கான அதன் மதிப்பீட்டை AA- க்கு குறைத்தது.

தேர்தல்களுக்கு முன்னதாக, RN கட்சியின் ஆதரவைச் சார்ந்திருந்த ஒரு அரசாங்கம், செலவினங்களை அதிகரிக்கும் என்ற அச்சம் சந்தைகளில் இருந்தது. இப்போது இந்த அச்சம் புதிய மக்கள் முன்னணிக்கு மாற்றப்பட்டுள்ளது.

J.P. மோர்கன் சொத்து மேலாண்மை (Morgan Asset Management) உடைய Vincent Juvyns பிரெஞ்சுப் பத்திரங்களின் மதிப்பு அவற்றின் சக பத்திரங்களுடன் ஒப்பிடுகையில் குறையக்கூடும் என்றார்.

“புதிய அரசாங்கம் அதன் நிதி நிலையை தெளிவுபடுத்தாததால் சந்தைகள் அதிக பரவலை [அதாவது அதிக வட்டி விகிதம்] கோரக்கூடும். ஐரோப்பிய ஆணையமும் தரம் நிர்ணயிக்கும் முகமைகளும் 20 முதல் 30 பில்லியன் யூரோ வரை வெட்டுக்களை எதிர்பார்க்கின்றன, ஆனால் செலவுகளை 120 பில்லியன் யூரோக்கள் அதிகரிக்க விரும்பும் ஒரு கட்சியை அரசாங்கம் சமாளித்தாக வேண்டும்.”

நிதியச் சந்தைகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நிறுவனங்களின் கோரிக்கைகள் பிரெஞ்சு பொருளாதார மந்திரி புரூனோ லு மேர் ஆல் உச்சரிக்கப்பட்டன, NFP கூட்டணியின் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் நாடு ஒரு நிதிய நெருக்கடியை அனுபவிக்கக்கூடும் என்று அவர் தெரிவித்தார்.

கடன் பிரச்சினைகள் ஒன்றும் பிரான்சுடன் நின்றுவிடவில்லை. பிரிட்டனில் பொதுக் கடன் இந்தாண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 104 சதவீதத்திற்கு உயர்ந்துள்ளது, இது 2019 இல் 86 சதவீதமாகவும் 2007 இல் 43 சதவீதமாகவும் இருந்தது. பிரான்சில் இதற்கு ஒத்த புள்ளிவிவரங்கள் 112 சதவீதம், 97 சதவீதம் மற்றும் 65 சதவீதம் என்று சர்வதேச நாணய நிதியம் கூறுகிறது.

கெய்ர் ஸ்டார்மர் தலைமையில் தொழிற்கட்சி வெற்றி பெற்ற பிரிட்டிஷ் தேர்தலுக்கு முன்னதாக, லண்டனை தளமாகக் கொண்ட சிந்தனைக் குழுவான நிதி ஆய்வுகள் நிறுவனம் (Institute for Fiscal Studies - IFS), அனைத்து முக்கிய கட்சிகளும் தங்கள் தேர்தல் அறிக்கைகளில் கடினமான முடிவுகளை எடுப்பதை தவிர்த்ததாக கூறியுள்ளது.

நிறுவனத்தின் மூத்த ஆராய்ச்சி பொருளாதார நிபுணர் இசபெல் ஸ்டாக்டன் கருத்துப்படி: “வளர்ச்சி மிகவும் ஏமாற்றமளிக்கும் மற்றும் கடன் வட்டி அதிகமாக இருக்கும். இந்த கலவையானது ஐக்கிய இராச்சியத்தின் போருக்குப் பிந்தைய வரலாற்றில் வேறெந்த நாடாளுமன்றத்தையும் விட மோசமாக உள்ளது,” என்றார்.

1945ல் பதவிக்கு வந்த அட்லி, தொழிற்கட்சி அரசாங்கம் போர் முயற்சிகளால் கணிசமாக வடிகட்டப்பட்ட பிரிட்டிஷ் பொருளாதாரத்தை எதிர்கொண்டது என்ற நிலையில் இது ஒரு குறிப்பிடத்தக்க மதிப்பீடாகும்.

IFS பகுப்பாய்வானது வரவிருக்கும் சான்சிலர் ரேச்சல் ரீவ்ஸால் எதிரொலிக்கப்பட்டது, அவர் தனது முதல் பிரதான உரையில், தொழிற்கட்சி அரசாங்கம் “இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய மிக மோசமான சூழ்நிலைகளின் தொகுப்பை” மரபுரிமையாகக் கொண்டிருந்தது என்றார்.

கடன் மேகமூட்டம் பிரான்ஸ் மற்றும் ஐக்கிய இராச்சியத்திற்கும் அப்பால் நீண்டுள்ளது. கேபிடல் எகனாமிக்ஸ் (Capital Economics) கணக்கீடுகளின்படி, இது அனைத்து பிரதான பொருளாதாரங்களையும் உள்ளடக்கி வருகிறது, அவைகள் பெருந்தொற்று நோய்க்கு முந்தைய மட்டங்களை விட மூன்று சதவீத புள்ளிகள் அதிகமாக பற்றாக்குறையில் இயங்கி வருவதைக் கண்டறிந்தது.

இந்த மாத தொடக்கத்தில் போர்ச்சுகலின் சின்ட்ராவில் நடைபெற்ற ஐரோப்பிய மத்திய வங்கியின் வருடாந்திர கோடைகால கூட்டத்தில் கடனாது நிகழ்ச்சி நிரலில் மிகவும் அதிகமாக இருந்தது.

பிரதிநிதிகளுக்கு வழங்கிய ஓர் உரையில், ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவர் கிறிஸ்டின் லகார்ட் கூறுகையில், “நிதிய விடயங்கள் பாரிய விடயங்கள்” என்றும், ஐரோப்பிய ஒன்றியத்தின் வரம்பான 3 சதவீதத்திற்கு ஏற்ப அரசாங்கங்கள் அவற்றின் பற்றாக்குறைகளைக் குறைப்பது குறித்து கொள்கை இயற்றுபவர்கள் “மிகவும் கவலை” கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

ஐரோப்பிய மத்திய வங்கியின் “பணவீக்கத்திற்கு எதிரான போராட்டத்தில்” முக்கிய இலக்கு தொழிலாள வர்க்கத்தின் கூலிகளே என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். பணவீக்கத்தால் சுமத்தப்பட்ட உண்மையான வெட்டுக்களை ஈடு செய்யாத 5 சதவீத ஊதிய உயர்வுகள், சேவைகளின் விலைகளை உயர்த்துகின்றன, அவைகள் நுகர்வோர் மீது சுமத்தப்படுகின்றன என்று அவர் கூறினார்.

“இதன் பின்னணியில் என்ன இருக்கிறது என்பதை நாம் பார்க்க வேண்டும், இது நிறைய தொழிலாளர் செலவுகள்,” என்று அவர் கூறினார்.

அமெரிக்காவின் கடன் நிலைமையும் அதிகரித்த ஆய்வுக்கு உள்ளாகி வருகிறது. சின்ட்ரா கூட்டத்தில் ஒரு குழு விவாதத்தில், பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவலிடம் வரவிருக்கும் தேர்தல்களில் ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினரின் செலவினங்கள் மற்றும் வரித் திட்டங்களின் தாக்கம் குறித்து கேட்கப்பட்டது.

குறிப்பான கருத்துக்களை கூற மறுத்த அவர், பொருளாதாரம் மிகவும் வலுவாக உள்ளது என்றும், இது “தாமதமாக அல்லாமல் விரைவில்” தீர்க்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.

அமெரிக்க கடன் திரட்சி விரைவான வேகத்தில் வருவதன் அடையாளமாக, காங்கிரசின் வரவுசெலவுத் திட்ட அலுவலகம் (CBO) கடந்த மாதம் இந்த ஆண்டு பற்றாக்குறை பற்றிய அதன் மதிப்பீட்டை 1.9 டிரில்லியன் டாலர்கள் அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7 சதவிகிதம் என்று திருத்தியுள்ளது. சமீபத்தில் பெப்ருவரி மாதம் அது கணித்திருந்த 1.5 டிரில்லியன் டாலர்களுடன் இது ஒப்பிடத்தக்கது.

தற்போதைய கடன் அளவு, சுமார் 35 டிரில்லியன் டாலர்கள், “முற்றிலும் நிலையானது, ஆனால் நாம் செல்லும் பாதை முற்றிலும் நீடித்திருக்க முடியாதது” என்று பவல் கூறினார்.

அதிகரித்து வரும் கடன் மட்டமானது, இவற்றில் பெரும்பாலானவை மத்திய வங்கிகளால் திணிக்கப்பட்ட அதிக வட்டி விகிதங்கள் மற்றும் அனைத்து பிரதான நாடுகளிலும் இராணுவ செலவினங்களின் விரிவாக்கம் ஆகியவற்றால் எரியூட்டப்பட்ட நிலையில், ஊதிய கோரிக்கைகளை ஒடுக்குவதுடன் சேர்ந்து, சமூக வசதிகளுக்கான அரசாங்க செலவினங்களில் வெட்டுக்களுக்கு நிதியச் சந்தைகள் கட்டளையிடுகின்ற நிலையில், அரசாங்கங்களை தொழிலாள வர்க்கத்துடன் நேருக்கு நேராக மோதலுக்கு இட்டுச் செல்கிறது.

கடந்த திங்களன்று பிரசுரிக்கப்பட்ட ஐரோப்பாவில் “நசுக்கும் கடன்” குறித்த ஒரு கட்டுரையில், வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல், பிரிட்டனில் வரவு-செலவு திட்டக்கணக்கு பொறுப்புடைமைக்கான அலுவலகத்தின் ஒரு அதிகாரியான டேவிட் மைல்ஸின் பகுப்பாய்வை மேற்கோளிட்டு, இவ்வாறு குறிப்பிட்டது: “குறைந்த பொதுச் செலவினங்களுக்கு அரசின் பாத்திரம் குறித்த எதிர்பார்ப்புகளைக் குறைக்க வேண்டியிருக்கலாம். அந்த எதிர்பார்ப்புகள் இரண்டாம் உலகப் போரின் முடிவுக்குப் பின்னர் கணிசமாக விரிவடைந்துள்ளன, மேலும் சமீபத்திய மோசமான பொருளாதார செயல்திறனின் யதார்த்தத்துடன் சரிசெய்திருக்காது.”

கட்டுரை குறிப்பிட்டதைப் போல, இந்த நிலைமையானது பிரிட்டனில் முன்னாள் பிரதமர் லிஸ் டிரஸ் (Liz Truss) அனுபவம் மீண்டும் பெரிய அளவில் வருவதற்கான சாத்தியக்கூறை எழுப்பியது. குறுகிய கால பிரிட்டிஷ் டோரி பிரதம மந்திரி செலவின வெட்டுக்களைச் செய்யாமல் பெருநிறுவனங்கள் மற்றும் செல்வந்தர்களுக்கு பெரும் வரி வெட்டுக்களை செயல்படுத்த முனைந்தபோது, அவர் செப்டம்பர் 2022 இல் ஒரு பத்திர சந்தை நெருக்கடியை ஏற்படுத்தினார்.

இந்த அச்சுறுத்தல் ஐக்கிய இராச்சியத்துடன் மட்டுப்பட்டதல்ல, மாறாக அமெரிக்கா உட்பட ஒவ்வொரு அரசாங்கத்தின் மீதும் தொங்கிக் கொண்டிருக்கிறது.

Loading