காஸாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 186,000-க்கும் அதிகமாக இருக்கலாம் என்று லான்செட் எச்சரிக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

காஸா இனப்படுகொலையில் உண்மையான இறப்பு எண்ணிக்கை 186,000 அல்லது அதற்கும் அதிகமாக இருக்கலாம் என்று மதிப்புமிக்க பிரிட்டிஷ் மருத்துவ இதழான தி லான்செட் எச்சரித்துள்ளது.

இந்த அதிர்ச்சியூட்டும் எண்ணிக்கை காஸா மக்கள் தொகையில் 8 சதவிகிதம் ஆகும். அமெரிக்க மக்கள்தொகையில் இதே சதவீதத்தில் 26 மில்லியன் மக்களாக இருக்கும்.

பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலிய இராணுவத்தால் கொல்லப்பட்டவர்களின் உடல்களை காஸா பகுதியில் உள்ள ரஃபாவில் நடைபெற்ற பாரிய இறுதிச் சடங்கின் போது புதைக்கின்றனர். ஜனவரி 30, 2024 செவ்வாய் கிழமை [AP Photo/Fatima Shbair]

இது, காஸாவில் இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு நிதியுதவி, ஆயுதங்கள் மற்றும் அரசியல் ரீதியாக பாதுகாத்துவரும் அமெரிக்கா மற்றும் அதன் ஏகாதிபத்திய நட்பு நாடுகள் மீதான குற்றச்சாட்டாக உள்ளது.

அமெரிக்கா இஸ்ரேலுக்கு வழங்கிய 2,000ம் இறாத்தல் எடையுள்ள 14,000ம் குண்டுகளால் இந்த பாரிய உயிரிழப்பு எண்ணிக்கையை சாத்தியமாக்கியுள்ளது. மேலும் இது, பத்தாயிரக் கணக்கானவர்களைப் படுகொலை செய்ய மட்டுமல்ல, மாறாக காஸாவில் நாகரிகத்தின் அத்தனை அம்சங்களையும் அழிக்கவும், ஊட்டச்சத்தின்மை, தொற்று நோய்கள் மற்றும் மருத்துவ வசதியின்மை ஆகியவற்றின் மூலமாக பத்தாயிரக் கணக்கானவர்களின் உயிரிழப்புகளுக்கும் பங்களிப்பு செய்துள்ளது.

காஸா அரசாங்க ஆதாரங்களின்படி, இஸ்ரேலிய தாக்குதல் தொடங்கியதில் இருந்து உத்தியோகபூர்வ இறப்பு எண்ணிக்கை 37,396 ஆகும். ஆனால் இந்த எண்ணிக்கை இடிபாடுகளின் கீழ் புதையுண்ட ஆயிரக்கணக்கான மக்களையோ அல்லது காஸாவின் உணவு விநியோகம், சுகாதாரம் மற்றும் சுகாதார அமைப்புகள் வேண்டுமென்றே அழிக்கப்பட்டதால் ஏற்பட்ட எண்ணற்ற இறப்புகளையோ பிரதிபலிக்கவில்லை என்று தி லான்செட் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

“காஸாவில் இறந்தவர்களை எண்ணுதல் கடினமானது ஆனால் அத்தியாவசியமானது” என்று தலைப்பிட்டு வெள்ளியன்று பிரசுரிக்கப்பட்ட அதன் அறிக்கையில், லான்செட் குறிப்பிட்டது:

அறிவிக்கப்பட்ட இறப்புகளின் எண்ணிக்கை அநேகமாக குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது. அரசு சாரா அமைப்பான Airwars, காஸா பகுதியில் நடந்த சம்பவங்கள் குறித்து விரிவான மதிப்பீடுகளை மேற்கொள்கிறது. மேலும் அடையாளம் காணக்கூடிய பாதிக்கப்பட்டவர்களின் அனைத்து பெயர்களும் அமைச்சின் பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்பதை இந்த அமைப்பு கண்டறிந்துள்ளது. மேலும், பிப்ரவரி 29, 2024 க்குள், காஸா பகுதியில் 35 சதவீதமான கட்டிடங்கள் அழிக்கப்பட்டதாக ஐ.நா மதிப்பிடுகிறது. எனவே, இடிபாடுகளில் இன்னும் புதையுண்ட உடல்களின் எண்ணிக்கை கணிசமாக 10,000 க்கும் அதிகமாக இருக்கும் என்று அது மதிப்பிடப்பட்டுள்ளது.

“பெரும்பாலான உள்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டு வருவதால் காஸா சுகாதார அமைச்சகத்திற்கு தரவுகளை சேகரிப்பது பெருகிய முறையில் கடினமாகி வருகிறது” என்று லான்செட் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

அந்த அறிக்கை பின்வருமாறு எச்சரித்தது:

இந்த மோதலின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு மொத்த இறப்பு எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, சுகாதாரப் பாதுகாப்பு உள்கட்டமைப்பை அழித்தது; உணவு, தண்ணீர் மற்றும் தங்குமிடம் ஆகியவற்றில் கடுமையான பற்றாக்குறை; மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குத் தப்பிச் செல்ல இயலாமை மற்றும் காஸா பகுதியில் இன்னும் செயல்படும் மிகச் சில மனிதாபிமான அமைப்புகளில் ஒன்றான UNRWA வுக்கான நிதி இழப்பு ஆகியவை இதில் உள்ளடங்கும்.

தி லான்செட் குறிப்பிட்டது:

சமீபத்திய மோதல்களில், இந்த மறைமுக மரணங்கள் நேரடி மரணங்களை விட மூன்று முதல் பதினைந்து மடங்கு அதிகம். அறிவிக்கப்பட்ட 37,396 இறப்புகளுடன் ஒரு நேரடி மரணத்திற்கு நான்கு மறைமுக இறப்புகள் என்ற ஒரு முன்னைய மதிப்பீட்டைப் பயன்படுத்தி, 186,000 அல்லது அதற்கு மேற்பட்ட இறப்புக்கள் காஸா பகுதியில் தற்போதைய மோதலுக்கு காரணமாக இருக்கலாம் என்று மதிப்பிடுவது நம்பமுடியாதது அல்ல. 2022 ஆம் ஆண்டில் காஸா பகுதியின் மதிப்பிடப்பட்ட மக்கள்தொகை 2,375,259ம் ஆகும். இந்த மக்கள் தொகையின் அடிப்படையில், இது காஸா பகுதியின் மொத்த மக்கள்தொகையில் 7.9% க்கு ஒத்திருக்கிறது.

186,000 இறப்புகளை அறிவிக்கும் லான்செட் மதிப்பீடு, மதிப்பிடப்பட்ட இறப்புகளின் எண்ணிக்கையைக் குறைக்க முனையும் இரண்டு அனுமானங்களை அடிப்படையாகக் கொண்டது. முதலாவதாக, இது 37,396 இறப்புகள் என்ற அரசாங்கத்தின் எண்ணிக்கையுடன் தொடங்குகிறது, இதில் இடிபாடுகளுக்கு அடியில் புதையுண்டவர்கள் சேர்க்கப்படவில்லை. இரண்டாவதாக, போரால் ஏற்படும் “மறைமுக” இறப்புக்களை மதிப்பிடுவதற்கு இது நான்கு மடங்கைப் பயன்படுத்துகிறது, மற்ற மோதல்களில் காணப்பட்ட “நேரடி இறப்புகளின்” எண்ணிக்கையை விட இது 15 மடங்கு அதிகமாகும்.

இஸ்ரேலிய அதிகாரிகள் வெளிப்படையாக பாலஸ்தீனிய பொதுமக்களை பட்டினி மற்றும் நோய் மூலம் கொல்வதை இலக்காக கொண்டுள்ளனர் என்ற உண்மை உட்பட, இந்த குறைந்த அனுமானங்களின் செல்லுபடியாகும் தன்மையை கேள்விக்குள்ளாக்குவதற்கு காரணங்கள் உள்ளன.

தெற்கு காஸா பகுதியின் ரஃபாவில் உள்ள ஒரு மருத்துவமனையின் சவக்கிடங்கில் காஸா பகுதி மீதான இஸ்ரேலிய குண்டுவீச்சில் கொல்லப்பட்ட தனது இரண்டு மகள்களின் உடல்களுக்கு அருகில் அஷ்ரஃப் அபு திராஸ் ஆழ்ந்த துக்கத்துடன் உள்ளார். ஏப்ரல் 4, 2024 வியாழக்கிழமை [AP Photo/Fatima Shbair]

கடந்த நவம்பரில், இஸ்ரேலிய தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் முன்னாள் தலைவரான ஜியோரா எய்லாண்ட், ஒரு கட்டுரையை வெளியிட்டார். அதில் அவர் தடுக்கக்கூடிய நோயால் முடிந்தவரை அதிகமான காஸா குடிமக்களின் இறப்பை ஏற்படுத்தும் மருத்துவ நிலைமைகளை உருவாக்குமாறு இஸ்ரேலிய இராணுவத்தை வலியுறுத்தினார்.

அவர் பின்வருமாறு எழுதினார்:

காஸாவின் “ஏழை” பெண்கள் யார்? அவர்கள் அனைவரும் ஹமாஸ் கொலைகாரர்களின் தாய்மார்கள், சகோதரிகள் அல்லது மனைவிகள். … காஸாவில் மனிதாபிமான பேரழிவு மற்றும் கடுமையான தொற்றுநோய்கள் குறித்து சர்வதேச சமூகம் நம்மை எச்சரிக்கிறது. இது எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் நாம் இதிலிருந்து விலகிச் செல்லக்கூடாது. எல்லாவற்றிற்கும் மேலாக, காஸா பகுதியின் தெற்கில் கடுமையான தொற்றுநோய்கள் இருப்பது, வெற்றியை நெருக்கமாகக் கொண்டுவரும் மற்றும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினரின் உயிரிழப்புகளைக் குறைக்கும்.

இனப்படுகொலை வாய்வீச்சாளன் இஸ்ரேலிய பாதுகாப்பு மந்திரி யோவ் கேலண்ட், “ஒரு முழுமையான முற்றுகை ... அங்கு மின்சாரம் இல்லை, தண்ணீர் இல்லை, உணவு இல்லை, எரிபொருள் இல்லை. நாங்கள் மனித விலங்குகளுடன் சண்டையிடுகிறோம், அதற்கேற்ப நாங்கள் செயல்படுகிறோம்” என்று குறிப்பிட்டார்.

கடந்த மாதம் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், காஸா இனப்படுகொலையை விசாரித்த ஐக்கிய நாடுகள் ஆணையம் பின்வருமாறு அறிவித்தது:

இஸ்ரேல் பட்டினியை ஒரு போர் முறையாக பயன்படுத்தி வருகிறது. இது வரவிருக்கும் தசாப்தங்களில், குழந்தைகளுக்கு எதிர்மறையான விளைவுகளுடன் காஸா பகுதியின் முழு மக்களையும் பாதித்துள்ளது.

ஐ.நா. குழு பின்வருமாறு குறிப்பிட்டது:

இந்த அறிக்கையை எழுதும் நேரத்தில், கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நீரிழப்பு காரணமாக குழந்தைகள் ஏற்கனவே இறந்து வருகின்றனர். இஸ்ரேல் அது திணித்த முற்றுகையின் மூலம், தண்ணீர், உணவு, மின்சாரம், எரிபொருள் மற்றும் மனிதாபிமான உதவி உட்பட பிற அத்தியாவசிய விநியோகங்களை துண்டித்து உயிர் காக்கும் அத்தியாவசிய தேவைகளை நிறுத்தி வைப்பதை ஆயுதமாக்கியுள்ளது. இது கூட்டுத் தண்டனை மற்றும் பொதுமக்களுக்கு எதிரான பழிவாங்கல் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. இவை இரண்டும் சர்வதேச மனிதாபிமான சட்டத்தை தெளிவாக மீறுவதாகும்.

பைடென் நிர்வாகம், காஸா மீதான இனப்படுகொலையை பாதுகாத்து மூடிமறைத்து வருவதோடு, அப்பாவி மக்களின் இறப்புக்கள், இஸ்ரேலின் “ஹமாஸுக்கு எதிரான போரின்” ஒரு திட்டமிடப்படாத விளைவு என்று கூறியுள்ளது. ஆனால் இந்தக் கூற்றுக்கள் இஸ்ரேலிய அதிகாரிகளின் அறிக்கைகளால் பொய்யாக்கப்படுகின்றன, அவர்கள் பொதுமக்களுக்கு எதிராக அழித்தொழிப்பு போரை நடத்துகிறார்கள் என்பதை தெளிவுபடுத்தியுள்ளனர்

கடந்த அக்டோபரில், இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் பின்வருமாறு அறிவித்தார்:

இதற்கு முழு தேசமும்தான் பொறுப்பு. பொதுமக்களுக்கு தெரியாது, அவர்கள் இதில் சம்பந்தப்படவில்லை என்று கூறுவது தவறு... அவர்களின் முதுகெலும்பை முறிக்கும் வரை போரிடுவோம்.

அதே மாதம், இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு, “அமலேக்கியர் உங்களுக்கு என்ன செய்தார் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்,” என்று ஒரு விவிலிய பத்தியை மேற்கோள் காட்டி, “போய் அமலேக்கைத் தாக்குங்கள். ... யாரையும் விட்டுவைக்காதீர்கள், ஆண்களையும் பெண்களையும், கைக்குழந்தைகளையும் சிறுவர்களையும் ஒரே மாதிரியாகக் கொன்று விடுங்கள்” என்று குறிப்பிட்டார்.

காஸா மீதான இனப்படுகொலை நவீன வரலாற்றில் ஏகாதிபத்திய காட்டுமிராண்டித்தனத்தின் மிகப்பெரிய நடவடிக்கைகளில் ஒன்றாகும் என்பதை தி லான்செட் அறிக்கை தெளிவுபடுத்துகிறது. ஓராண்டிற்குள், அமெரிக்காவும் ஏனைய ஏகாதிபத்திய சக்திகளும் உலகின் மிக அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட நகர்ப்புற பகுதிகளில் ஒன்றின் மக்கள்தொகையில் பத்தில் ஒரு பங்கினரை துடைத்தழிக்க இஸ்ரேலுடன் இணைந்து வேலை செய்துள்ளன.

இந்தக் குற்றம், மையமாக ரஷ்யா மற்றும் சீனாவை இலக்கில் வைத்து, ஒட்டுமொத்த உலகையும் நவ-காலனித்துவ மேலாதிக்கத்தின் கீழ் கீழ்ப்படுத்தும் நோக்கில், ஏகாதிபத்திய வன்முறையின் உலகளாவிய வெடிப்பின் பாகமாக இருக்கிறது. காஸாவில் பாரிய உயிரிழப்பு எண்ணிக்கை ஒரு எச்சரிக்கையாகும்: ஏகாதிபத்தியம் அதன் சூறையாடும் நலன்களைப் பின்தொடர்வதுக்கு எந்தவொரு குற்றத்தையும் நடத்த தயாராக உள்ளது.

காஸா இனப்படுகொலை தடுத்து நிறுத்தப்பட வேண்டும்! ஜூலை 24 அன்று, இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு வாஷிங்டன் டி.சி.க்கு பயணம் செய்து தனது ஏகாதிபத்திய எஜமானர்களுக்கு ஒரு முன்னேற்ற அறிக்கையை வழங்குவார். தொழிலாள வர்க்கத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு பாரிய போர்-எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்புவதில் ஒரு இன்றியமையாத படியாக சோசலிச சமத்துவக் கட்சியால் அன்றைய தினம் வாஷிங்டனில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டம் மற்றும் கூட்டத்தில் இணையுமாறு நாங்கள் தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் அழைப்பு விடுக்கிறோம்.

Loading