உக்ரேனிய அரசாங்கம் உலக சோசலிச வலைத் தளத்தை (WSWS) தடை செய்துள்ளது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஜனாதிபதி ஜோ பைடென் செப்டம்பர் 21, 2023 வியாழக்கிழமையன்று, வாஷிங்டனில் வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கியை சந்திக்கிறார். [AP Photo/Evan Vucci]

ஜூன் 3 திங்களன்று, உக்ரேனிய அரசாங்கம் உலக சோசலிச வலைத் தளத்தை (WSWS) நாடு தழுவிய அளவில் தடைசெய்துள்ளதோடு, அனைத்து இணைய சேவை வழங்குநர்களும் WSWSக்கான அணுகலை காலவரையின்றி தடுக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

உக்ரேனின் இராணுவ-உளவுத்துறை இயந்திரத்தின் ஒரு பிரிவான உக்ரேனிய அரச சிறப்பு தகவல் தொடர்பு சேவையானது (SSSCIP- Ukrainian State Special Communications Service) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இது “மின்னணு தகவல்தொடர்பு வலையமைப்புகள் மற்றும் / அல்லது சேவைகளின் வழங்குநர்களுக்கு களப் பெயர் (domain name)  {அத்துடன் அதன் துணை களப் பெயர் (subdomains name)} WSWS.ORG இன் சொந்த சுழற்சி செய்யும் டிஎன்எஸ் வழங்கிகளில் (recursive DNS servers) அணுகல் கட்டுப்பாட்டை (அணுகலைத் தடுக்க) செயல்படுத்த அறிவுறுத்துகிறது.”

இந்த உத்தரவுக்கு இறுதி தேதி எதுவும் கிடையாது என்பதோடு, “உக்ரேனில் இராணுவச் சட்டம் முடிவுக்கு வரும் வரையில் அல்லது அது ஒழிக்கப்படும் வரையில்” நீடிக்கும். ஜனாதிபதி விளாடிமிர் செலென்ஸ்கியின் பிப்ரவரி 24, 2022 இராணுவச் சட்ட அறிவிப்பின் கீழ் இந்த தடை நியாயமானது என்று SSSCIP கூறுகிறது, இது நாடு முழுவதும் ஜனநாயக உரிமைகளை இடைநிறுத்தியது.

உலக சோசலிச வலைத் தளத்தை அணுகுவதைத் தடை செய்யும் இந்த உத்தரவு, உக்ரேனில் அமெரிக்க தலைமையிலான போரானது “ஜனநாயகம்” என்ற பெயரில் நடத்தப்பட்டு வருகிறது என்ற அனைத்து வாதங்களையும் பொய்களாக அம்பலப்படுத்துகிறது. நோர்மண்டியில் தரையிறக்க (D-Day) நினைவுகூரலில் உரையாற்றிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென், போரை “சர்வாதிகாரத்திற்கும் சுதந்திரத்திற்கும் இடையிலான ஒரு போராட்டமாக” சித்தரித்தார். யதார்த்தம் என்னவென்றால், உக்ரேன் ஒரு சர்வாதிகாரமாகும். அங்கு அரசாங்கம் அரசியல்ரீதியாக யூத இனப்படுகொலையை (Holocaust) வழிபடும் பாசிஸ்டுகளைச் சார்ந்துள்ளது. அரசாங்கம் அதன் போரை எதிர்ப்பவர்களை கொடூரமாக துன்புறுத்துவதோடு பேச்சு சுதந்திரத்தையும் அப்பட்டமாக நசுக்குகிறது.

உலக சோசலிச வலைத் தளத்தை தடை செய்யும் முடிவானது போக்டன் சிரோட்டியுக்கிற்கு பெருகி வரும் ஆதரவின் விடையிறுப்பாகும். 25 வயதான சோசலிச சர்வதேசியவாதியான சிரோட்டியூக், உக்ரேனுக்குள்ளும் சர்வதேச அளவிலும் ஆதரவைப் பெற்றுள்ளார். அவர் ஏப்ரல் 25 அன்று செலென்ஸ்கி ஆட்சியால் ‘உயர் தேசத்துரோகம்’ என்ற ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களின் பேரில் கைது செய்யப்பட்டார். உலக சோசலிச வலைத் தளத்திற்கு கட்டுரைகள் எழுதியதற்காக இந்தக் குற்றச்சாட்டுக்கள் அவர் மீது சுமத்தப்பட்டன. உக்ரேனின் உள்நாட்டு உளவுத்துறை அமைப்பின் பாகமாக இருக்கும் SBU இன் அரசாங்க வக்கீல்கள், உலக சோசலிச வலைத் தளம் (WSWS)  ‘ரஷ்ய பிரச்சார’  ஊடகம் என்று வஞ்சகமாக வாதிடுகின்றனர். சிரோட்டியுக், போல்ஷிவிக்-லெனினிஸ்டுகளின் இளம் காவலர் (YGBL) அமைப்பைச் சேர்ந்தவர். சிரோட்டியுக் மற்றும் அவர் சார்ந்துள்ள அமைப்பான YGBL அமைப்பும் ட்ரொட்ஸ்கிஸ்டுகளாக இருக்கிறார்கள். அவர்கள் ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போரின் உறுதியான எதிர்ப்பாளர்களாக இருப்பதோடு, அவர்கள் விளாடிமீர் புட்டினின் முதலாளித்துவ அரசாங்கத்தை உறுதியாக எதிர்த்து வருகிறார்கள். 

உலக சோசலிச வலைத் தளத்தை தடை செய்யும் உக்ரேனிய அரச சிறப்பு தகவல்தொடர்பு சேவையின் (SSSCIP- Ukrainian State Special Communications Service) உத்தரவு.

உலக சோசலிச வலைத் தளத்தை (WSWS) தடை செய்வதற்கான உக்ரேனிய அரசாங்கத்தின் முடிவு, பைடென் நிர்வாகத்துடன் கலந்தாலோசித்த பின்னரே எடுக்கப்பட்டது என்பதற்கு அங்கே பலமான ஆதாரங்கள் உள்ளன.

WSWS ஐ தடைசெய்வதற்கான உத்தரவு பிறப்பித்த உக்ரேனிய அரச சிறப்பு தகவல்தொடர்பு சேவையானது (SSSCIP) அமெரிக்க அரசாங்கத்தின் ஒரு நீண்ட கால பங்காளியாக உள்ளது. ஜூலை 2022 இல், அமெரிக்க தகவல் தொழில்நுட்பப் பாதுகாப்பு (Cybersecurity) மற்றும் உள்கட்டமைப்பு பாதுகாப்பு நிறுவனம் (CISA, உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் ஒரு அங்கம்) SSSCIP உடன் “பகிரப்பட்ட இணையப் பாதுகாப்பு முன்னுரிமைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த” ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது, இது “உக்ரேன் அரசாங்கத்துடன் CISA இன் தற்போதைய உறவை விரிவுபடுத்துகிறது.” CISA இன் இயக்குனர் ஜென் ஈஸ்டர்லி கூறுகையில், இந்த ஒப்பந்தம் “தகவல்களை எவ்வாறு திறம்பட பகிர்ந்து கொள்வது, சிறந்த நடைமுறைகள், ஒன்றாக பயிற்சி செய்வது, ஒன்றாக பயிற்றுவிப்பது, எதிரி நடவடிக்கைகளை எவ்வாறு வேட்டையாடுவது என்பதைக் கண்டுபிடிப்பது ஆகியவற்றில் உண்மையில் கவனம் செலுத்த எங்களுக்கு அனுமதித்தது” என்றார்.

சிரோட்டியுக்கிற்கு எதிரான போலியான குற்றச்சாட்டுக்களை விவரிக்கும் ஆவணங்களில், உக்ரேனிய அரசாங்கமானது, உக்ரேனிய தற்காப்பு மற்றும் பாதுகாப்பு கவுன்சிலின் ஒரு பிரிவான தவறான தகவல்களை எதிர்க்கும் மையம் (CCD, Center for Countering Disinformation) நடத்திய உலக சோசலிச வலைத் தளம் மீதான ஒரு “விசாரணையை” மேற்கோள் காட்டுகிறது. வழக்குத் தொடுத்த ஆவணங்களின்படி, CCD ஆனது “WSWS வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட வெளியீடுகளின் பகுப்பாய்வை நடத்தியது... அதன்படி உக்ரேனின் தகவல் பாதுகாப்புக்கு [சிரோடியுக்] ஏற்படுத்திய சேதத்தின் சாராம்சம் ஸ்தாபிக்கப்பட்டது.” 

சிரோட்டியுக் அல்லது உலக சோசலிச வலைத் தளம், ரஷ்ய அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் என்ற கூற்றை ஆதரிக்க அங்கே ஒரு துளி ஆதாரமும் இல்லை. அதற்கு நேரெதிராக, அமெரிக்க-நேட்டோ போரைக் கண்டித்தும், உக்ரேனிய அரசாங்கத்தில் பாசிசவாதிகளின் பாத்திரத்தை அம்பலப்படுத்தியும், அணுஆயுத தீவிரப்பாட்டின் அபாயம் குறித்து எச்சரித்தும், இரண்டு அரசாங்கங்களுக்கு எதிராகவும் ரஷ்ய மற்றும் உக்ரேனிய தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்திற்கு அழைப்பு விடுத்தும் சிரோட்டியூக் மற்றும் WSWS இன் கட்டுரைகளையே இந்த வழக்கு தொடுத்து வரும் ஆவணங்கள் முழுமையாக சார்ந்துள்ளன. விளாடிமிர் லெனின், லியோன் ட்ரொட்ஸ்கி மற்றும் WSWS இன் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவர் டேவிட் நோர்த் ஆகியோரால் எழுதப்பட்டவைகள் சிரோட்டியுக் போக்டனின் குடியிருப்பில் கண்டெடுக்கப்பட்ட பிரசுரங்களும் சிரோட்டியுக்கின் குற்றத்திற்கான ஆதாரமாக உக்ரேனிய அதிகாரிகளால் மேற்கோளிடப்பட்ட “ஆதாரத்தில்” உள்ளடங்கி இருந்தன.  

தவறான தகவல்களை எதிர்க்கும் மையம் (CCD) அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துடனும் நெருக்கமான உறவுகளைக் கொண்டுள்ளது. உலகளாவிய இடர் நுண்ணறிவு (Global Risk Insights) என்னும் இணையத்தள வெளியீட்டின் அக்டோபர் 2022 கட்டுரையின்படி,

“உக்ரேனின் தவறான தகவலை எதிர்க்கும் மையம் (CCD)... முன்னெடுத்த முயற்சிகளில் இருந்து உருவானதுதான் ... வெளியுறவுத்துறையின் மாற்ற முயற்சிகள் அலுவலகம் (OTI, Office of Transition Initiatives) ஆகும். OTI இன் உக்ரேன் மீதான நம்பிக்கையை கட்டியெழுப்பும் முயற்சி II இன் (Ukraine Confidence Building Initiative II) [அமெரிக்க வெளியுறவுத்துறையின் உலகளாவிய ஈடுபாட்டு மையத்தின்] சகோதர அமைப்பானது, உலகளாவிய ஊடகத்திற்கான அமெரிக்க முகமை (USAGM), அத்துடன் ஐக்கிய இராச்சியத்தின் வெளிநாட்டு காமன்வெல்த் மற்றும் அபிவிருத்தி அலுவலகம் (UK’s Foreign Commonwealth and Development Office) உட்பட ஒரு பரந்த அடிப்படையிலான கூட்டணியுடன் கூட்டு சேர்ந்துள்ள அமைப்பாகும். இந்த முயற்சி, ரஷ்ய படையெடுப்புக்கு கிட்டத்தட்ட ஒரு முழு ஆண்டுக்கு முன்னரே உக்ரேன் அதன் எதிர்த்-தகவல் துறைகளை அமைப்பதற்கு’ அனுமதித்தது.

குறிப்பிடத்தக்க வகையில், பென்டகனின் மத்திய கட்டளையகம் (Pentagon’s Central Command), “சந்தை ஆராய்ச்சி மற்றும் தேசிய ஆய்வுகளை” நடத்துவதற்கும் உக்ரேனிலும் சர்வதேச அளவிலும் “தவறான தகவல்களின்” சக்தியைத் தீர்மானிப்பதற்கும் உலகளாவிய ஊடகத்திற்கான அமெரிக்க முகமையால் (USAGM) வரவிருக்கும் முயற்சிகளைக் குறிப்பிட்டு இந்தாண்டு தொடக்கத்தில் ஓர் அறிக்கை வெளியிட்டது. பென்டகன் தகவல்படி, உக்ரேனில் போர்-எதிர்ப்பு மனோநிலைகளின் “தாக்கத்தை ஆராய்வதற்கு” “கவனக்குவிப்பு குழுக்கள், ஊடக கண்காணிப்பு குழுக்கள், மற்றும் தேசிய கணக்கெடுப்புகள்” ஆகியவை இந்த திட்டங்களின் ஆய்வு முறைகளில் உள்ளடங்கும். இதை அவர்கள் “தவறான தகவல்களின்” விளைபொருளாக முத்திரை குத்துகின்றனர்.

இந்த ஆய்வுகளானது “மார்ச் முதல் மே 2024” வரையில், சிரோட்டியுக் கைது செய்யப்பட்டது மற்றும் WSWS ஐ தடை செய்வதற்கான முடிவுக்கு உடனடியாக இட்டுச் சென்ற காலகட்டம் உள்ளடங்கலாக நடத்தப்பட்டது. இக்காலகட்டத்தில், உக்ரேனுக்குள் ரஷ்யாவிற்கு எதிரான போருக்கான எதிர்ப்பின் கணிசமான வளர்ச்சியைக் கண்டுள்ளது. இது உலக சோசலிச வலைத் தளத்தின் வாசகர் எண்ணிக்கையில் அதிகரிப்பு மற்றும் சிரோட்டியுக் மீதான குற்ற விசாரணைக்கு எதிரான பெருகிய விழிப்புணர்வு மற்றும் போர் எதிர்ப்புடன் பொருந்தி இருப்பதாக அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.

சிரோட்டியுக் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஏப்ரல் 30 அன்று வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுத் தலைவர் டேவிட் நோர்த் இவ்வாறு விவரித்தார்:

“இடதுசாரி இயக்கங்கள் மீதான செலென்ஸ்கி ஆட்சியின் மூர்க்கமான ஒடுக்குமுறைக்கு சமீபத்திய உதாரணமாக போக்டனின் கைது இருக்கிறது. போருக்கான இடதுசாரி இயக்கங்களின் எதிர்ப்பு உக்ரேனிய தொழிலாள வர்க்கத்திற்குள் அதிகரித்து வரும் விடையிறுப்பைக் கண்டு வருகிறது.”

சிரோட்டியுக் மற்றும் WSWS ஐ புட்டின்-ஆதரவாளர்களாக சித்தரிக்க உக்ரேனிய அரசாங்கம் செய்கின்ற முயற்சிகள் “அரசியல்ரீதியாக அபத்தமானவை” என்று நோர்த் எழுதினார். 

“நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் (ICFI) அரசியல் ஒற்றுமையுடன் செயல்பட்டுவரும் YGBL, உக்ரேன் மற்றும் ரஷ்யா இரண்டிலும் உள்ள தன்னலக் குழுக்களின் முதலாளித்துவ அரசாங்கங்களை எதிர்க்கிறது. உலக சோசலிச வலைத் தளத்தில் வெளியிடப்பட்ட பல கட்டுரைகளிலும், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அனுசரணையுடன் கூடிய நிகழ்வுகளில் ஆற்றிய உரைகளிலும் போக்டன் சந்தேகத்திற்கு இடமின்றி போரைக் கண்டனம் செய்ததோடு, கியேவ் மற்றும் மாஸ்கோவை தலைமையகங்களைக் கொண்ட பிற்போக்குத்தனமான தேசிய பேரினவாத ஆட்சிகளுக்கு எதிராக, உக்ரேனிய மற்றும் ரஷ்ய தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்திற்கு அழைப்பு விடுத்தார். ரஷ்யாவில் உள்ள போக்டனின் தோழர்கள், புட்டினின் முதலாளித்துவ மறுசீரமைப்பு ஆட்சியையும், நவ-ஜாரிச ரஷ்ய தேசியவாதத்தின் மாயையான மகிமைப்படுத்தலையும் சந்தேகத்திற்கு இடமின்றி எதிர்த்து வருகின்றனர்.”

சிரோட்டியுக்கை விடுவிப்பதற்கான பிரச்சாரம் பரந்த சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளதுடன், அவரது விடுதலையைக் கோரும் உலகளாவிய பிரச்சாரத்தை ஒருங்கிணைக்க அனைத்துலகக் குழுவானது ஒரு பாதுகாப்புக் குழுவை (defense committee) ஸ்தாபித்துள்ளது. ட்விட்டர்/எக்ஸ் இல் நோர்த் பிரசுரித்த ஒரு காணொளி 150,000 க்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது, மேலும் உலகெங்கிலுமான ஆயிரக்கணக்கானவர்கள் சிரோட்டியுக்கை விடுதலை செய்யக் கோரும் மனுவில் கையெழுத்திட்டுள்ளனர். உலகெங்கிலும் உள்ள முக்கிய கலைஞர்கள், அரசியல் குழுக்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் பொது நபர்கள் உக்ரேனிய அரசாங்கத்தை சிரோட்டியுக்கை விடுவிக்கவும், அவருக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுக்களையும் கைவிடவும் அழைப்பு விடுத்துள்ளனர்.

சிரோட்டியுக்கை விடுதலை செய்யக் கோரும் மனுவில் (wsws.org/freebogdan இல்) கையெழுத்திட்டு சுற்றுக்கு விடுமாறும், உலக சோசலிச வலைத் தளத்தைத் தொடர்பு கொள்ளுமாறும், பேச்சு சுதந்திரத்தின் மீது விரிவடைந்து வரும் தாக்குதலை எதிர்க்கும் பிரச்சாரத்தில் செயலூக்கத்துடன் ஈடுபடுமாறும், பொய் வழக்குத் தொடுத்ததையும் உலக சோசலிச வலைத் தளத்தைத் தடை செய்ததற்கான முடிவையும் கண்டித்து அறிக்கைகளை வெளியிடுமாறும் உலக சோசலிச வலைத் தளமானது அனைத்து வாசகர்களையும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

Loading