முன்னோக்கு

நோர்மண்டி தரையிறக்க நாள் நினைவேந்தலின் போது, பைடென் பொறுப்பற்ற முறையில் ரஷ்யாவுடன் போரைத் தூண்டுகிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

இந்த வாரம், ஏகாதிபத்திய சக்திகளின் தலைவர்கள் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க- நேட்டோ போரின் ஒரு பெரிய விரிவாக்கத்திற்கு உறுதிமொழி அளித்து, மனிதகுலத்தை மீண்டும் அச்சுறுத்தும் உலகப் போரில் மூழ்கடிப்பதற்கு நோர்மண்டி தரையிறக்க நாளின் (D-Day) 80வது ஆண்டு நினைவு தினத்தை பயன்படுத்திக் கொண்டனர்.

நேட்டோ போரில் நேரடியாக ஈடுபடுவதற்கான எஞ்சியுள்ள வரம்புகளையும் அகற்றி, ரஷ்யாவிற்குள் தாக்குதல் நடத்த நேட்டோ ஆயுதங்களைப் பயன்படுத்த உக்ரேனை அனுமதிக்கும் முடிவு மற்றும் நேட்டோ துருப்புக்களை நேரடியாக உக்ரேனுக்குள் நிலைநிறுத்த பிரான்ஸ் தலைமையிலான நேட்டோ உறுப்பினர்களின் அழைப்புகள் என்பன இந்த நிகழ்வில் நடந்தன.

ஜூன் 6, 2024, வியாழன் அன்று நோர்மண்டியில் டி-டேவின் 80வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் விழாக்களில் ஜனாதிபதி ஜோ பைடென் பேசுகிறார். [AP Photo/Evan Vucci]

பைடென் நோர்மண்டியில் இருந்தபோது, ​​அவர் ஏபிசி செய்திக்கு ஒரு நேர்காணலை அளித்தார். அதில், அவர் ரஷ்யாவிற்கு எதிரான தாக்குதல்களில் அமெரிக்க ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்று பகிரங்கமாக அறிவித்தார். பைடெனை நேர்காணல் செய்த டேவிட் முயர், “இது அமெரிக்காவை [ரஷ்யாவுடனான போருக்கு] மிகவும் பரந்த முறையில் போரில் இழுத்துவிடும் என்று நீங்கள் கவலைப்படுகிறீர்களா?” என்று கேட்டார்.

இதற்கு பதிலளித்த பைடென், “இது கோட்பாட்டளவில் முடியும், ஆனால் அது சாத்தியமில்லை,” அமெரிக்க ஆயுதங்கள் எல்லைக்கு அருகாமையிலுள்ள ரஷ்யாவின் பகுதிகளைத் தாக்க மட்டுமே பயன்படுத்தப்படும் என்று குறிப்பிட்டார்.

இவை அதிர்ச்சியூட்டும் பொறுப்பற்ற அறிக்கைகளாகும். பைடென் தனது கொள்கைகள் “கோட்பாட்டளவில்” அமெரிக்காவை, ஒரு அணு ஆயுத அரசுடன் முழு அளவிலான போருக்கு இழுத்து, மனித நாகரிகத்தின் அழிவுக்கு வழிவகுக்கும். ஆனால், அவர் அந்த வாய்ப்பை ஏற்கத் தயாராக இருப்பதாகக் கூறினார்.

ரஷ்யாவுக்கு எதிரான நேட்டோவின் தாக்குதல்களுக்கு அணு ஆயுதங்களைப் பயன்படுத்தி பதிலடி கொடுப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்குமாறு கேட்டபோது, ​​வெளிப்படையாக குழப்பமடைந்த பைடென், அவர் ரஷ்ய ஜனாதிபதியை நாற்பது ஆண்டுகளாக அறிந்திருக்கிறார் என்றும், 1984 இல் புட்டின் சோவியத் ஒன்றியத்தில் அறியப்படாத KGB முகவராக இருந்தார் என்றும் கூறியது வெளிப்படையான அபத்தமான கருத்தாகும்.

உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவர் டேவிட் நோர்த் குறிப்பிட்டது போல்: வாழ்க்கை மற்றும் இறப்பின் முடிவுகள், யதார்த்தத்தைப் பற்றிய குறைந்த புரிதலுடன் ஒரு மனிதனால் எடுக்கப்படுகின்றன.

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

நோர்மண்டி கடற்கரையில் நடந்த முக்கிய நினைவேந்தல் விழாவில் உரையாற்றிய பைடென், ரஷ்யாவை அடிபணிய வைப்பதற்கும் அதனை கைப்பற்றுவதற்கும் நேட்டோவின் குறிக்கோளுக்கு வரம்பற்ற உயிர்களையும் பணத்தையும் விலைகொடுக்க உறுதியளித்து, ஒரு இராணுவப் பேராசையை வழங்கினார்.

உக்ரேனில் நடந்துவரும் போரில் நூறாயிரக்கணக்கான ரஷ்ய துருப்புக்கள் இறந்ததைக் குறித்து பைடென் மகிழ்ச்சியடைந்தார். “ரஷ்யாவில் அவர்கள் பெரும் இழப்பை சந்தித்தனர், அந்த எண்ணிக்கை அதிர்ச்சியளிக்கிறது - 350,000 ரஷ்ய வீரர்கள் இறந்தனர் அல்லது காயமடைந்தனர்” என்று குறிப்பிட்டார்.

ரஷ்ய உயிரிழப்பு புள்ளிவிவரங்களை உயர்த்தி, சந்தேகத்திற்கு இடமின்றி அதிக உக்ரேனிய இறப்பு எண்ணிக்கையை புறக்கணித்த போதிலும், இப்போது நடந்து கொண்டிருக்கும் போர் இன்னும் அதிகமான இறப்புகளை விளைவிக்கும் என்பதை பைடென் தெளிவுபடுத்தினார்.

“சண்டையிடுவதற்கும் இறப்பதற்கும் மதிப்புள்ள சில விஷயங்கள் உள்ளன,” “அமெரிக்கா மதிப்புக்குரியது... அன்றும், இன்றும், எப்போதும்” என்று பைடென் கூறினார். “இப்போது கட்டுப்பாட்டை மீறிச் சுழன்று கொண்டிருக்கும் ஒரு உலகப் போரில் அதிக எண்ணிக்கையிலான அமெரிக்க துருப்புக்கள் “இறப்பதற்கு” தயாராக இருக்க வேண்டிய நேரம் நெருங்கி வருவதை இது தெளிவாகக் குறிக்கிறது.

“இறப்பதற்கு மதிப்புள்ள” விஷயங்கள்தான், “ஜனநாயகம்” என்று பைடென் கூறினார். ஆனால் அமெரிக்காவால் முட்டுக்கொடுக்கப்பட்ட டசின் கணக்கான சர்வாதிகாரங்களைப் போலவே, உக்ரேன் ஒரு “ஜனநாயகம்” அரசல்ல. உக்ரேன் இராணுவச் சட்டத்தின் கீழ் உள்ள ஒரு நாடு, இதில் சோசலிஸ்ட் போக்டன் சிரோடியுக் உட்பட போரை எதிர்ப்பவர்கள் அச்சுறுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள். இதில் பாசிஸ்டுகள் அரசு மற்றும் இராணுவத்தில் உயர் பதவிகளை வகித்து வருகின்றனர். ஜனாதிபதி செலென்ஸ்கி தனது பதவிக் காலத்தை தாண்டிவிட்டார். மேலும் போருக்கு எதிராக பெருகிவரும் மக்கள் எதிர்ப்பானது, தேர்தலில் ஏதேனும் வெளிப்பாட்டைக் காணும் என்ற அச்சத்தில் தேர்தல்களை நடத்த விரும்பவில்லை என்பதை அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

இதற்கிடையில், மத்திய கிழக்கில் அமெரிக்காவின் முக்கிய கூட்டாளியான இஸ்ரேல், பாலஸ்தீனிய மக்களை பாதுகாப்பு மந்திரி யோவ் கேலண்டின் வார்த்தைகளில் “மனித விலங்குகள்” என்று அறிவித்து, ஒரு இனப்படுகொலையை நடத்தி வருகிறது.

அமெரிக்கத் தலைவர்கள் ரஷ்யாவை நோக்கி மார்பில் அடித்துக் கொண்டிருந்தபோது, ஏகாதிபத்திய சக்திகளால் ஆயுதம், நிதி மற்றும் பாதுகாப்பு அளிக்கப்பட்டுவரும் ​​இஸ்ரேல், ஐக்கிய நாடுகள் சபையால் நடத்தப்படும் பள்ளிமீது குண்டுகளை வீசி குழந்தைகள் உட்பட 40 பேரைக் கொன்றதன் மூலம் நோர்மண்டி தரையிறக்க நாள் நிகழ்வைக் குறித்து வைத்தது.

இஸ்ரேலின் படுகொலைக்கு விடையிறுக்கும் வகையில், வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த தாக்குதலை வெளிப்படையாக தழுவி ஆதரித்தார்: “ஹமாஸ் இந்த பகுதியிலுள்ள ஒரு பள்ளிக்குள் ஒளிந்து கொண்டது. .. இந்த நபர்கள் முறையான இலக்குகள் ஆவர். ஆனால் அதே நேரத்தில், அவர்கள் பொதுமக்களுக்கு அருகில் மறைந்திருக்கின்றனர். ஆகவே இப்பகுதி பொதுமக்களை குறிவைக்க இஸ்ரேலுக்கு உரிமை உள்ளது” என்று மில்லர் குறிப்பிட்டார்.

“ஹமாஸ் போராளிகளை” குறிவைக்க இஸ்ரேலுக்கு உரிமை உள்ளது, “பொதுமக்களை” அல்ல என்று மில்லர் குறிப்பிட்டதாக வெளியுறவுத்துறை பின்னர் கூறியது. ஆனால் மில்லர் “தற்செயலாக” தவறாகப் பேசியதாக கருதிக் கொண்டால், அதற்கு அவர் மறைமுகமாக இருப்பதை வெளிப்படையாகக் கூறுகிறார் என்று பொருள். அமெரிக்கா தனது இராணுவ நோக்கங்களுக்காக, குழந்தைகள் உட்பட பொதுமக்கள் மீதான திட்டமிட்ட படுகொலைகளை பாதுகாத்து வருகிறது.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நோர்மண்டியில் நடந்த நினைவேந்தல் நிகழ்வுகள், நாசி போர்க் கொள்கையின் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சங்களை ஏகாதிபத்திய சக்திகளால் முன்னெப்போதும் இல்லாத வகையில் நேரடியாக ஏற்றுக்கொண்டதன் பின்னணியில் நடந்தன. அது, பொதுமக்களை வேண்டுமென்றே குறிவைத்து அவர்களை அழித்தொழிக்கும் நோக்கில் மற்றும் முழு உலகத்தையும் ஒரு உலகளாவிய போருக்குள் இழுக்கும் விருப்பத்தைக் கொண்டுள்ளது.

இரண்டாம் உலகப் போருக்கு எண்பது ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த முறை அணு ஆயுத நாடுகளுக்கு இடையே உலகம் மீண்டும் முழு அளவிலான போரின் விளிம்பில் தத்தளிக்கிறது. அனைத்து உரிமை கோரல்களுடன், முதல் இரண்டு உலகப் போர்கள் ஒரு வரலாற்று விதிவிலக்கைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன, அது மீண்டும் மீண்டும் வரக்கூடாது, பைடென் மற்றும் பிற ஏகாதிபத்திய தலைவர்களின் அறிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும்.

நேட்டோ சக்திகள் போரை தீவிரப்படுத்தி வருவதற்கு ரஷ்ய அரசாங்கத்தின் பதில் முற்றிலும் திவாலானது. புட்டின் தனது “மேற்கத்திய பங்காளிகள்” தங்கள் உணர்வுகளுக்கு வர வேண்டும் என்ற அழைப்புகள் மற்றும் இராணுவ பழிவாங்கல்கள் மற்றும் பெரிய அளவிலான அணுஆயுத யுத்த அச்சுறுத்தல்களுக்கு இடையில் மாறி மாறி வருகிறார். உண்மையில், ஏகாதிபத்திய சக்திகள் ரஷ்யாவைக் கைப்பற்றி அடிபணிய வைக்கும் முயற்சிகளுக்கு புட்டினிடம் பதில் இல்லை.

ஏகாதிபத்தியப் போருக்கு மூலகாரணமான முதலாளித்துவ அமைப்புமுறையை முடிவுக்குக் கொண்டுவருவதை இலக்காகக் கொண்ட ஒரு சோசலிச வேலைத்திட்டத்துடன் ஆயுதபாணியாகி, உலகெங்கிலும் உள்ள தொழிலாள வர்க்கத்தின் தலையீட்டின் மூலம் மட்டுமே, தீவிரமடைந்துவரும் உலகப் போரினை முடிவுக்கு கொண்டுவருவது சாத்தியமாகும்.

Loading