மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
அமெரிக்கா, பெரிய பிரித்தானியா மற்றும் கனடா ஆகிய நாடுகளின் கூட்டுப் படைகளால் நோர்மண்டி மீதான படையெடுப்பின் 80வது ஆண்டு நினைவேந்தல் என்பது, அரசியல் பிரச்சாரம் மற்றும் வரலாற்று பொய்மைப்படுத்தலின் முற்றிலும் சிடுமூஞ்சித்தனமான செயலாகும். அவர்கள் காஸாவில் இனப்படுகொலைக்கு ஒப்புதல் அளித்து, ரஷ்யாவிற்கு எதிரான போரை பொறுப்பற்ற முறையில் தீவிரப்படுத்தி வருகின்றபோதிலும், அமெரிக்கா மற்றும் நேட்டோவின் ஊதுகுழல்கள் தற்போதைய ஏகாதிபத்திய அரசாங்கங்களின் குற்றவியல் கொள்கைகளை நியாயப்படுத்தவும், பெருமைப்படுத்தவும் ஜூன் 6, 1944 நிகழ்வுகளைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
இதனை அப்பட்டமாகச் சொல்வதென்றால், நேட்டோவின் கொள்கைகளும் நோக்கங்களும் இரண்டாம் உலகப் போரில் நேச நாடுகளுக்கு எதிராக போரிட்ட நாசி ஆட்சியின் கொள்கைகளுடன் குறிப்பிடத்தக்க ஒற்றுமையைக் கொண்டுள்ளன. ஹிட்லர், இந்த நிகழ்விற்காக உயிர்த்தெழுந்து வந்தால், அமெரிக்க ஜனாதிபதி பைடென், பிரிட்டிஷ் பிரதம மந்திரி சுனாக், பிரெஞ்சு ஜனாதிபதி மக்ரோன் மற்றும் ஜேர்மன் சான்சிலர் ஷோல்ஸ் ஆகியோர் அடங்கிய கும்பலுடன் தான் முழுமையாக இணைந்திருப்பதை உணர்ந்து கொள்வார். நோர்மண்டி கொண்டாட்டத்தின் வாய்ப்பைப் பயன்படுத்தி, ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோவின் போரை எவ்வாறு அதிகரிப்பது என்பது குறித்த ஆலோசனைகளையும் அவர்களுக்கு வழங்குவார்.
நோர்மண்டி தரையிறக்க நாள் (D-Day) நினைவேந்தலுக்கு ரஷ்யாவிற்கான அழைப்பை ரத்து செய்ய, அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் ஆட்சேபனைகளுக்கு பதிலளிக்கும் வகையில், மக்ரோனின் முடிவில் ஹிட்லர் நிச்சயமாக மகிழ்ச்சி அடைந்திருப்பார். ஹிட்லரின் மூன்றாவது பேரரசின் தோல்விக்கு சோவியத் யூனியன் வகித்த, நினைவிலிருந்து அழியாத மற்றும் தீர்க்கமான பங்களிப்பை ஒரு ரஷ்ய தூதுக்குழுவின் பிரசன்னம் விரும்பத்தகாத நினைவூட்டலாக இருந்திருக்கும். சோவியத் யூனியன் கலைக்கப்பட்டு முதலாளித்துவம் மீட்டெடுக்கப்பட்டாலும், அக்டோபர் 1917 சோசலிசப் புரட்சியின் வடுக்கள், ஏகாதிபத்திய சக்திகளின் மனதில் ரஷ்யாவை எப்போதும் தாங்கி நிற்கும்.
“நோர்மண்டியில் பிரெஞ்சு அரசாங்கம் ஏற்பாடு செய்யும் நினைவேந்தலை நாங்கள் ஒத்திவைப்போம்,” என்று பைடென் நிர்வாக அதிகாரி கடந்த மாதம் பொலிட்டிகோவிடம் இந்த அழைப்பு பகிரங்கப்படுத்தப்பட்டபோது கூறினார். “ஆனால் ரஷ்யர்கள் ஒருவேளை உக்ரேனில் கற்பனையான நாசிக்களுடன் அல்ல, உண்மையான நாசிக்களுடன் சண்டையிட்டு வருகிறார்கள் என்பதை அவர்களுக்கு நினைவூட்டும்.”
கேலிக்குரிய தொனி முற்றிலும் தேவையற்றது. கியேவ் ஆட்சியில் உள்ள நாசிக்களின் காதலர்கள் போதுமானளவு நிஜமாக உள்ளனர். உக்ரேனிய தேசியவாதியான ஸ்டீபன் பண்டேரா, சோவியத் யூனியனுக்கு எதிராக ஹிட்லரின் இராணுவத்துடன் இணைந்து போரிட்ட மற்றும் நாசிக்கள் மேற்கொண்ட யூத இனப்படுகொலையில் (Holocaust) ஒத்துழைத்த உக்ரேனிய தேசியவாதி ஆவர். இவர், உக்ரேனில் ஒரு சிறந்த தேசிய வீரர் என்ற நிலைக்கு உயர்த்தப்பட்டார்.
பைடெனும் அவரது சக ஏகாதிபத்தியத் தலைவர்களும் நாசிக்களின் கட்டுப்பாட்டில் இருந்த பிரான்ஸ் மீது, நிலத்திலும் நீரிலும் மேற்கொண்ட தாக்குதலுக்குப் பின்னர் 80 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் போது, நேட்டோ சக்திகள் கிழக்கு போர்முனையில் நாசி ஜேர்மனியின் இலக்கை தத்தெடுத்துள்ளன: அது, ரஷ்யாவைக் கைப்பற்றுதல், உடைத்தல் மற்றும் அதன் வளமான பரந்த பிரதேசங்கள் மற்றும் வளங்களை சுரண்டுதல் என்பனவாகும். நோர்மண்டியில் 80வது ஆண்டு நினைவேந்தல் என்பது உக்ரேனில் போரை முன்னெடுத்துச் செல்லவும், நேட்டோவின் தலையீட்டை திறக்க வழி வகுக்கவும் பயன்படுத்தப்பட உள்ளது.
மேலும், இந்தப் போராட்டம் ஹிட்லர் மற்றும் முசோலினியின் அரசியல் வாரிசுகளுடன் கைகோர்த்து நடத்தப்படுகிறது. ஐரோப்பா முழுவதும் பாசிச அரசியல் சக்திகளில் உண்மையான அதிகரிப்பு இருப்பதை மக்ரோன் ஒப்புக்கொண்டுள்ளார். அதே நேரத்தில், பிரான்சில் நாசி ஒத்துழைப்பு விச்சி ஆட்சியின் தலைவரான பிலிப் பெட்டனை ஒரு சிறந்த சிப்பாய் என்று மக்ரோன் பாராட்டினார். அடுத்த வாரம், இத்தாலியில் நடைபெறும் G7 உச்சிமாநாட்டிற்காக ஐரோப்பாவுக்கு பைடென் செல்கிறார். இது, முசோலினி மீதான வழிபாட்டை நீண்டகாலமாகப் பின்பற்றிவரும் ஒரு பாசிச பிரதம மந்திரி ஜியோர்ஜியா மெலோனியால் நடத்தப்படும் முதல் உச்சிமாநாடாகும்.
ஆறு வாரங்களுக்கு முன்பு காங்கிரஸின் மூலம் கையெழுத்திட்ட பாரிய இராணுவ உதவிப் பொதியைப் பின்தொடர்ந்து, நோர்மண்டி தரையிறக்க தின விழாக்களுக்காக ஜனாதிபதி ஜோ பைடெனின் பிரான்சுக்கான விஜயத்தில், உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கியுடனான சந்திப்பும் உள்ளடங்கியிருக்கிறது. உக்ரேனில் நேட்டோ தரைப்படைகளை நிலைநிறுத்த வேண்டும் என்று ஏகாதிபத்திய சக்திகளுக்கு பிரெஞ்சு ஜனாதிபதி தலைமை தாங்கிய சில நாட்களுக்குப் பிறகு, பைடென் ஒரு முறையான அரசுமுறை விஜயத்தில் மக்ரோனையும் சந்திப்பார். நேட்டோவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான வெளிப்படையான போராக, ஒரு முழு அளவிலான அணு ஆயுத மோதலின் ஆபத்துடன் இந்த மோதல் தீவிரமடைகிறது.
ஜனநாயகத்தைப் பாதுகாப்பது பற்றி பைடென் வாக்கியங்களை உச்சரிக்கும்போது, ஒவ்வொரு வார்த்தையும் பொய்யாகிவிடும். அமெரிக்க ஏகாதிபத்தியம் உலகளாவிய அரசியல் மற்றும் சமூக பிற்போக்குத்தனத்தின் கோட்டையாகும். அதன் கொள்கைகள், உலக மக்களை அடிமைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறதே ஒழிய, விடுதலைக்காக அல்ல.
ஏகாதிபத்தியத்தின் சமகால குற்றங்களை நியாயப்படுத்தவும், நோர்மண்டி தரையிறக்க நினைவு நாளில் சிடுமூஞ்சித்தனமான சுரண்டலுக்கு கூடுதலாகவும், ஜூன் 6, 1944 நிகழ்வுகளை மகிமைப்படுத்துவது, இரண்டாம் உலகப் போரில் அமெரிக்காவும் பிரிட்டனும் பின்பற்றிய உண்மையான நலன்களின் அடிப்படை பொய்யாக்கலுடன் எப்போதும் இணைக்கப்பட்டுள்ளது.
80 ஆண்டுகளுக்கு முன்பு, நோர்மண்டி கடற்கரைகளில் சண்டையிட்ட துருப்புக்கள் ஹிட்லர் மற்றும் நாசிசத்தின் மீதிருந்த வெறுப்பால் தைரியமாகவும் உற்சாகத்துடனும் இருந்தனர் என்பதில் சந்தேகமில்லை. அன்று உயிர்நீத்த ஆயிரக்கணக்கான இளம் ராணுவ வீரர்களை நினைவு கூர்ந்து கெளவுரவிக்க வேண்டும். ஆனால், அவர்களது இலட்சியத்தை அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் அரசியல் தலைவர்கள் பகிர்ந்து கொள்ளவில்லை. இந்த தலைவர்கள், பாசிசத்திற்கு எதிரான போராட்டமாக இதனை சந்தைப்படுத்துவதன் மூலம் மட்டுமே வெகுஜன ஆதரவைப் பெற முடியும் என்பதை நன்கு புரிந்து கொண்டனர். அது மக்கள் முன்னணி மற்றும் சோவியத் ஒன்றியத்துடனான ஒரு போர்க் கூட்டணியின் காலகட்டமாகும். அங்கு ஸ்ராலினிஸ்டுகள் ஏகாதிபத்தியவாதிகளுடன் கைகோர்த்து, மக்களின் பார்வையில் போரை சட்டப்பூர்வமாக்குவதற்கு உழைத்தனர்.
ஹிட்லரின் பாரிய படையெடுப்பிற்கு எதிரான சோவியத் யூனியனின் போராட்டத்திற்கு மகத்தான மக்கள் ஆதரவு இருந்தது. வரலாற்றில் மிகப்பெரிய இராணுவத் தாக்குதலுடன் நாசிக்கள் மேற்கொண்ட இந்த படையெடுப்பின் நோக்கம், படுகொலைகளை கட்டவிழ்த்துவிடுவதன் மூலம் மார்க்சிசத்தையும் சோசலிசத்தையும் ஒழிப்பதாக இருந்தது.
ட்ரொட்ஸ்கிஸ்டுகள் மற்றும் இதர புரட்சியாளர்கள் உட்பட அவர்களில் இருந்த முழு செம்படையின் தலைமையையும், குருதியில் களையெடுத்து, ஸ்டாலின்-ஹிட்லர் உடன்படிக்கையில் அவர் கையெழுத்திட்டது உட்பட, ஸ்டாலினின் சொல்ல முடியாத குற்றங்கள் இருந்தபோதிலும், சோவியத் மக்கள் அக்டோபர் புரட்சியின் எஞ்சிய வெற்றிகளைப் பாதுகாக்க முழுப் பலத்துடன் போராடினர். ஸ்டாலின்கிராட் போன்ற போர்களில் செம்படை ஒரு நாளைக்கு 10,000 வீரர்களை இழந்தது. இதனை ஒப்பிடுகையில், மேற்கத்திய நாடுகளில் இரத்தம் தோய்ந்த நோர்மண்டி தரையிறக்க நாளில் ஏற்பட்ட உயிரிழப்புகள் 5,000 க்கும் குறைவான இறப்புகளாகும்.
மக்கள் ஜனநாயக மற்றும் பாசிச-எதிர்ப்பு உணர்வுகளை திறம்பட ரூஸ்வெல்ட் பயன்படுத்திக் கொண்டாலும், திரைக்குப் பின்னால் வளர்ந்து வந்த அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும், அதன் பெயரளவு கூட்டாளியான பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கும் இடையே ஒரு கடுமையான போராட்டம் இருந்தது. ஸ்டாலினின் அவநம்பிக்கையான வேண்டுகோளுக்கு எதிராக, சோவியத் ஒன்றியத்தை இரத்தம் கசிய வைக்கவும், தெற்கு ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் அனைத்திற்கும் மேலாக இந்தியத் துணைக்கண்டத்தில் பிரிட்டனின் முயற்சிகளைக் குவிப்பதற்கும், சேர்ச்சில் மேற்கு நாடுகளில் “இரண்டாவது போர் முனையை” தொடங்குவதைத் தாமதப்படுத்தினார். கிரேக்கத்தில் பிரிட்டனின் நலன்களைப் பாதுகாக்கவும், ஜேர்மன்-சோவியத் போரில் நேரடியாகத் தலையிட நேச நாடுகளை நிலைநிறுத்தவும், யூகோஸ்லாவியாவில் நடந்துவந்த புரட்சிகரப் போராட்டத்தைத் தடுக்கவும், இத்தாலியில் இருந்து அட்ரியாடிக் கடல் வழியாக யூகோஸ்லாவியாவிற்கு ஒரு அமெரிக்க-பிரிட்டனின் தாக்குதலுக்கு சேர்ச்சில் அழுத்தம் கொடுத்தார்.
அமெரிக்க, பிரிட்டன் மற்றும் கனேடியப் படைகள் நோர்மண்டி கடற்கரையில் தரையிறங்கியபோது, செம்படை லெனின்கிராட் மீதான நாசிக்களின் முற்றுகையை முடிவுக்குக் கொண்டு வந்து, பால்டிக் நாடுகளை மீண்டும் கைப்பற்றி, உக்ரேன் மற்றும் மேற்கு ரஷ்யாவில் நாசிக்களின் படைகளைத் தீர்க்கமாக தோற்கடித்திருந்தது. அத்தோடு, வியன்னா மற்றும் பேர்லினை நோக்கிய பொது எதிர்த் தாக்குதலின் ஒரு பகுதியாக, போலந்திற்குள் நுழையும் தருவாயில் செம்படை இருந்தது.
பெரும்பாலான வரலாற்று மதிப்பீடுகளின்படி, ஹிட்லர் தனது இராணுவப் படைகளில் மூன்றில் இரண்டு பங்கை அல்லது சுமார் 200 டிவிஷன் படையணிகளை சோவியத் இராணுவத்தை எதிர்கொள்வதற்காக அனுப்பியிருந்தார். இத்தாலிய தீபகற்பத்தை நோக்கி நகர்ந்துவந்த நேச நாட்டுப் படைகளின் எதிர்பார்க்கப்பட்ட குறுக்குவழி தரையிறக்கத்தை எதிர்கொள்ளும் ஒரு பகுதிக்கு 50 டிவிஷன் படையணிகள் மட்டுமே இருந்தன. (ரோம் விடுதலையானது ஜூன் 4, 1944 அன்று நோர்மண்டி தரையிறக்கத்துக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு வந்தது.)
வெற்றிகரமான நோர்மண்டி தரையிறக்கத்துக்கு ஒன்பது நாட்களுக்குப் பிறகு, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போர் நோக்கங்களை ஒரு உரையில் கோடிட்டுக் காட்டிய அமெரிக்க ஜனாதிபதி பிராங்க்ளின் ரூஸ்வெல்ட், சூறையாடிய பொருட்களை போரில் வெற்றி பெற்றவர்களிடையே பகிர்ந்து கொள்வதற்கான ஒரு அரசியல் கருவியாக, ஐக்கிய நாடுகள் சபையை உருவாக்குவதற்கான அடித்தளத்தை இறுதியில் அமைத்தார். அமெரிக்காவில் அப்போதைய ட்ரொட்ஸ்கிச செய்தித்தாளான தி மிலிட்டண்டில் இதுபற்றிய ஒரு வர்ணனை பின்வருமாறு கூறியது:
நேச நாட்டு படையினர்கள் தங்கள் இரத்தத்தை சிந்துவது, ஐரோப்பிய மக்களை நாசிசத்திலிருந்து விடுவிப்பதற்காக அல்ல, அனைத்து நாடுகளிலுள்ள மக்களும் சுயநிர்ணய உரிமையைப் பயன்படுத்துவதை உறுதிப்படுத்துவதற்காக அல்ல, அத்துடன் பூமியின் நான்கு மூலைகளிலும் சுதந்திரங்களை நிறுவுவதற்காக அல்ல. மாறாக, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலக மேலாதிக்கத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில், பழைய அதிகார சமநிலையை மீட்டெடுப்பதற்காக.
இந்த ட்ரொட்ஸ்கிச பத்திரிகையானது, எதிர்ப்புரட்சிகர பாரிய படுகொலையாளி ஸ்டாலினின் கீழ் சோவியத் அதிகாரத்துவத்துடன் அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கூட்டணியின் மைய அரசியல் நோக்கத்தை பின்வருமாறு விவரிக்கிறது:
“சர்வதேச அமைப்பு” என்ற பொலித்தீனால் மூடப்பட்டிருக்கும் புதிய மூன்று கூட்டணியின் மற்றொரு செயல்பாடு, சோசலிசப் புரட்சியின் மரண ஆபத்துக்கு எதிராக ஐரோப்பா மற்றும் உலகம் முழுவதையும் காவல் காப்பது ஆகும். ஏகாதிபத்தியவாதிகளைப் போலவே ஸ்டாலினும் சோசலிசப் புரட்சிக்கு அஞ்சுகிறார். ஐரோப்பாவில் எங்கும் வெற்றிபெறும் ஒரு சோசலிசப் புரட்சி தன்னை அதிகாரத்தில் இருந்து வீழ்த்தும் என்பதை சோவியத் அதிகாரத்துவம் அறிந்திருக்கிறது.
இந்த காவல் பணியின் முறை ஏற்கனவே இத்தாலி மற்றும் வட ஆபிரிக்காவில் தெளிவாக வெளிப்பட்டுள்ளன. அங்கு போலீஸ்-இராணுவ சர்வாதிகாரங்கள் நேச நாட்டு துப்பாக்கி முனை கத்திகளால் முட்டுக் கொடுக்கப்படுகின்றன. இவை, வோல் ஸ்ட்ரீட் எஜமானர்களின் இருண்ட பிற்போக்குத்தனமான இலக்குகளாகும். இவையே அவர்களின் போர் நோக்கங்களாக இருக்கின்றன. இவை போருக்குப் பிந்தைய அவர்களின் திட்டங்கள் ஆகும்.
இந்த நேரத்தில், 18 அமெரிக்க ட்ரொட்ஸ்கிச தலைவர்கள் உலகப் போருக்கு எதிரான தங்கள் எதிர்ப்பிற்காக சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். அதே நேரத்தில் நான்கு பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிச தலைவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தண்டனை பெற்றனர். மேலும் இதேபோன்ற கொள்கை ரீதியான போர்-எதிர்ப்பு நிலைப்பாட்டிற்காக பலருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டன.
இரண்டாம் உலகப் போருக்கு எண்பது ஆண்டுகளுக்குப் பிறகு, உலகம் ஒரு புதிய உலகளாவிய மோதலின் பேரழிவுக்கு முன்னால் உள்ளது. நோர்மண்டி தரையிறக்க நாள் நினைவேந்தலுக்கு முன்னதாக, பைடென் மற்றும் பிற ஏகாதிபத்திய தலைவர்கள் உக்ரேனுக்கு நேட்டோ வழங்கிய ஏவுகணைகள் மூலம் ரஷ்ய பிரதேசத்தை தாக்க அதற்கு அதிகாரம் அளித்தனர். இது அணு ஆயுத நாடுகளுக்கு எதிரான நேட்டோவின் போரை பாரியளவில் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், இந்தப் போரின் விரிவாக்கமானது, விளாடிமிர் புட்டின் தலைமையிலான ரஷ்ய தன்னலக்குழுவின் பிற்போக்குத்தனமான வெளியுறவுக் கொள்கையின் திவால்நிலையை நிரூபித்துக் காட்டுவதுடன், இது மாஸ்கோவின் நலன்களுக்குச் சாதகமான ஒரு உடன்பாட்டை மேற்கொள்ள, அதன் ஏகாதிபத்திய “பங்காளிகளை” தூண்டுவதற்கு இராணுவ அழுத்தத்தைப் பயன்படுத்த முற்படுகிறது.
போருக்கு மூலகாரணமான முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான ஒரு பொதுப் போராட்டத்தில், உலகெங்கிலும் உள்ள தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதன் மூலம் இந்த உலகளாவிய போருக்கு முற்றுப்புள்ளி வைப்பதே மைய சவாலான விடயமாகும்.