முன்னோக்கு

அணு ஆயுதப் போரை நோக்கிய அமெரிக்கா-நேட்டோ விரிவாக்கத்தை நிறுத்து! ஏகாதிபத்திய போர் மற்றும் இனப்படுகொலைக்கு எதிராக சர்வதேச தொழிலாள வர்க்கத்தை ஒன்றுபடுத்து!

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

ஒரு ATACMS ஏவுகணை M270 MLRS இலிருந்து ஏவப்படுகிறது

1. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI), ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போரின் சமீபத்திய விரிவாக்கத்தையும், இது, அணுஆயுத நாடுகளுக்கு இடையே முழு அளவிலான போராக துரிதமாக தீவிரமடைந்து வருவதையும் கண்டனம் செய்கிறது. இதுவரையிலும், எந்தவொரு அமெரிக்க அரசாங்கமும் எடுக்காத மிகவும் பொறுப்பற்ற முடிவை, பைடென் அரசாங்கம் எடுத்திருக்கிறது. அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளைப் பொறுத்தவரை, 1914 இல் முதலாம் உலகப் போரையும், 1939 இல் இரண்டாம் உலகப் போரையும் அவர்கள் பேரழிவுகரமாகத் துவக்கியதன் மூலம் மட்டுமே இந்த விரிவாக்கத்தில் அவர்களின் ஒத்துழைப்பின் பொறுப்பற்ற தன்மையில் சமாந்தரமாக உள்ளன. அமெரிக்க ஆளும் வர்க்கமும் அதன் ஏகாதிபத்திய கூட்டாளிகளும் கடக்காத “சிவப்பு கோடுகள்” எதுவும் இல்லை. இஸ்ரேலிய அரசால், 35,000 க்கும் மேற்பட்ட காஸா மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைக்கு அவர்கள் அரசியல்ரீதியாக ஆதரவளித்து ஆயுதங்களை வழங்கிவரும் நிலையிலும் கூட, உக்ரேனில் அணுஆயுத பேரழிவை ஏற்படுத்தக்கூடிய, நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இது பூமியில் உள்ள அனைத்து உயிர்களையும் அழிக்கக்கூடும். இனப்படுகொலை மற்றும் போருக்கு அடிப்படைக் காரணமான தீர்க்க முடியாத உலகளாவிய நெருக்கடியான உலக முதலாளித்துவ அமைப்புமுறை காட்டுமிராண்டித்தனத்தில் இறங்குகிறது.

2. கடந்த வெள்ளியன்று, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென், உக்ரேனிய நகரமான கார்கிவ் அருகே உள்ள ரஷ்ய பிரதேசத்தில் அமெரிக்காவின் நீண்ட தூரம் பாயும் ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்குதல்களை நடத்த, தனது நடவடிக்கைகளுக்கான காரணங்களை விளக்கி ஒரு பகிரங்க அறிக்கை கூட இல்லாமல் இரகசியமாக உக்ரேனுக்கு அங்கீகாரம் அளித்தார். ஜேர்மனியும் அதையே செய்யப்போவதாக உடனடியாக அறிவித்தது. 24 மணி நேரத்திற்குள், உக்ரேன் ஏற்கனவே அமெரிக்கா வழங்கிய ஆயுதங்களைப் பயன்படுத்தி ரஷ்யாவிற்கு எதிராக தாக்குதல்களை நடத்தியுள்ளது. குறிப்பாக, கார்கிவ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதன் உக்ரேனிய பினாமி படையின் இராணுவ வீழ்ச்சிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

3. அமெரிக்கா, ஜேர்மனி மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகியவை உக்ரேனுக்கு 300 மைல்களுக்கு மேல் செல்லக்கூடிய குரூஸ் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை வழங்கியுள்ளன. உக்ரேனிய பிரதேசத்தில் இருந்து ஏவப்படும் இந்த ஏவுகணைகள், குர்ஸ்க், பெல்கோரோட், வோரோனேஜ், ரோஸ்டோவ் மற்றும் வோல்கோகிராட் உட்பட ரஷ்யாவின் சில பெரிய நகரங்களை தாக்கும் திறன் கொண்டவையாகும்.

4. இரண்டாம் உலகப் போரின் போது சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான நாஜிக்களின் 'நிர்மூலமாக்கும் போருக்குப்' பின்னரும், அமெரிக்காவைப் பொறுத்த வரையில், 1917 புரட்சிக்குப் பிந்தைய உள்நாட்டு போருக்குப் பின்னரும், ஏகாதிபத்திய சக்திகள் ரஷ்யப் பிராந்தியத்தை நேரடியாக இலக்கில் வைத்ததில்லை. இதுபோன்ற நடவடிக்கைகள் பனிப்போரின் உச்சத்தில் கூட எடுக்கப்படவில்லை, ஏனென்றால் அவை முழு அளவிலான அணு ஆயுத போரைத் தூண்டும் என்று அனுமானிக்கப்பட்டது.

5. ரஷ்யா பகிரங்கமாக, அணு ஆயுதங்களைப் பயன்படுத்தி அதன் பிராந்தியத்தின் மீதான தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் என்று அறிவித்த அதன் அதிகாரப்பூர்வ இராணுவக் கோட்பாடு, தவறானது என்ற அறிவிப்புகளால் அமெரிக்க ஊடகங்கள் நிரம்பியுள்ளன. மற்றும் பொது இராணுவக் கோட்பாட்டில், அணு ஆயுதங்களைப் பயன்படுத்தி அதன் பிராந்தியத்தின் மீதான தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுப்பது முட்டாள்தனமானது என்ற அறிக்கைகளும் நிறைந்துள்ளன. ரஷ்யா கடந்த காலத்தில் அமெரிக்க ஆத்திரமூட்டல்களுக்கு பதிலளிக்காததால், நேட்டோவானது ரஷ்யாவின் “சிவப்புக் கோடுகளை” விளைவுகள் இல்லாமல் கடக்க முடியும் என்பது வாதமாகும். முன்னாள் குடியரசுக் கட்சியின் காங்கிரஸின் உறுப்பினர் ஆடம் கின்சிங்கர் கடந்த வாரம் ஒரு CNN கட்டுரையில், “புட்டினின் முட்டாள்தனம் என்று அழைக்க வேண்டிய நேரம் இது” என்று அறிவித்தார். ஓய்வுபெற்ற ஜெனரல் பிலிப் பிரீட்லோவ், முன்னாள் தூதர் மைக்கேல் மெக்ஃபால், ஸ்டான்போர்ட் பேராசிரியர் பிரான்சிஸ் ஃபுகுயாமா மற்றும் டசின் கணக்கான முன்னாள் அமெரிக்க அதிகாரிகள் வெள்ளை மாளிகைக்கு எழுதிய கடிதத்தில்: “ரஷ்யாவின் அப்பட்டமான வெற்று அச்சுறுத்தல்கள் அமெரிக்காவைத் தடுப்பதில் வெற்றி பெறுகின்றன” என்று குறிப்பிட்டனர்.

6. ரஷ்யாவின் இராணுவக் கோட்பாடு ஒரு “முட்டாள்தனமானது” என்ற கூற்று மிக அடிப்படையான ஆய்வுக்கு கூட நிற்கவில்லை. கடந்த காலத்தில் நேட்டோவின் ஆத்திரமூட்டல்களுக்கு ரஷ்ய அரசாங்கம் பதிலளிக்கவில்லை என்பதற்காக அது எதிர்காலத்தில் அவ்வாறு செய்யாது என்று அர்த்தமல்ல. உதாரணமாக, ரஷ்யாவோ அல்லது சீனாவோ அமெரிக்கப் பிரதேசத்தின் மீது தாக்குதல் நடத்த முடிவுசெய்து, அதற்குப் பதிலடி கொடுக்க அமெரிக்க அரசாங்கம் “துணியாது” என்று உறுதியாகக் கூறினால், அமெரிக்கா பெரும் சக்தியுடன் எதிர்த்தாக்குதல் நடத்துவது தவிர்க்க முடியாதது என்று யாராவது சந்தேகிக்க முடியுமா?

7. ஒரு இராணுவக் கண்ணோட்டத்தில், ரஷ்ய இராணுவம் அதன் பிரதேசத்தின் மீதான நேட்டோ தாக்குதல்களுக்கு பதிலளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதற்கான உண்மையான காரணங்கள் உள்ளன. மேலும், புட்டின், நேட்டோ விரிவாக்கத்தால் தூண்டப்பட்ட நெருக்கடிக்கு மத்தியில், நேட்டோவிற்கு எதிராக பதிலடி கொடுக்க இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள இன்னும் கூடுதலாக தயாராக இருக்கும் ஒரு பிரிவினரால் மாற்றப்பட மாட்டார் என்று யார் கூறுவது?

8. ரஷ்ய இராணுவம் தாக்கப்பட்டால், அது பதிலடி கொடுக்காது என்று அமெரிக்க அதிகாரிகளின் கூற்றுக்கள் மிகவும் மெல்லிய வாதமாகும். இந்தக் கூற்றுக்கள் அவற்றைச் செய்பவர்களால் நம்பப்படாமல் இருக்கலாம். மேலும் ரஷ்ய அரசாங்கத்தின் சில வகையான கடுமையான, இராணுவ நடவடிக்கையைத் தூண்டுவதே அதன் உண்மையான இலக்காகும். இது, அமெரிக்காவின் அணுஆயுத பதிலடி தாக்குதலை நியாயப்படுத்த பயன்படுத்தப்படும்.

9. 2018 ஆம் ஆண்டு, அமெரிக்க தேசிய பாதுகாப்பு மூலோபாயத்தின் ஆசிரியரான எல்பிரிட்ஜ் கோல்பி தனது 2021 புத்தகத்தில், அமெரிக்க இராணுவ இலக்குகள் மீது “முதலில் சுட” கட்டாயப்படுத்துவது மற்றும் அதன் மூலம் முதலில் சுட்டவரை ஆக்கிரமிப்பாளர்களாகக் கருதுவது அமெரிக்க பிரச்சாரத்திற்கு எவ்வளவு இன்றியமையாதது என்பதை விளக்குகிறார் :

[எதிராளி] இந்த வழியில் பார்க்கப்படுவதை உறுதிசெய்வதற்கான தெளிவான மற்றும் சில நேரங்களில் மிக முக்கியமான வழி, முதலில் தாக்குபவர் அவர்தான் என்பதை உறுதிசெய்வதாகும். சில மனித தார்மீக உள்ளுணர்வுகள், அதை ஆரம்பித்தவர் ஆக்கிரமிப்பாளர் என்பதை விட ஆழமாக வேரூன்றியவராக உள்ளார். எனவே அதன்படி, தார்மீகப் பொறுப்பில் அவர் அதிக பங்கைக் கொண்டவர் என்று கருதப்படுகிறது.

10. பைடென் நிர்வாகம் ஒரு பொது அறிக்கை அறிவிப்பைக் கூட வெளியிடாமல் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. நியூ யோர்க் டைம்ஸ் மே 29 அன்று, “அதிகாரிகள் [பைடென்] ஒருபோதும் [முடிவை] அறிவிக்க மாட்டார்கள் என்று ஒப்புக்கொள்கிறார்கள்: அதற்கு பதிலாக, அமெரிக்க பீரங்கி குண்டுகள் மற்றும் ஏவுகணைகள் ரஷ்யர்களின் இராணுவ இலக்குகள் மீது தரையிறங்கத் தொடங்கும்” என்று எழுதியது: டைம்ஸில் முந்தைய கட்டுரை, மூன்றாம் உலகப் போரைத் தவிர்ப்பதற்கான “திரு. பைடெனின் கட்டளையின் காரணமாக அமெரிக்கா தாக்குதல்களை அனுமதிக்கவில்லை” என்று கூறியது. ஆனால், அந்தக் கொள்கையைச் சுற்றி ஒருமித்த கருத்து வறண்டு போகிறது. மனித நாகரீகத்தை முடிவுக்குக் கொண்டு வரக்கூடிய, அணு ஆயுதப் போர் ஆபத்தில் ஆழ்த்துவதற்கு தயாராக இருக்கும் அளவுக்கு, உக்ரேனில் என்ன நடக்கிறது, ஏன் அது ஈடுபட்டுள்ளது என்பது குறித்து எந்தக் கட்டத்திலும் பைடென் நிர்வாகம் விளக்கவில்லை.

11. நேட்டோ சக்திகள் அணு ஆயுதங்களுடன், ரஷ்ய சில்லி விளையாட்டான ரவோல்வரில் ஒரு துப்பாக்கி ரவையை வைத்து சுடும் விளையாட்டை விளையாடுகின்றன. அவர்கள் ஒரு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கான சாத்தியக்கூறுகளையோ அல்லது தங்களின் இழிநிலைக்கு ஒரு “புறம்பான வழியையோ” பரிந்துரைக்காமல், போரில் தலைகீழாக மூழ்கி வருகின்றனர்.

12. அதன் சமீபத்திய செயல்கள் ஒரு திட்டவட்டமான முறையைப் பின்பற்றுகின்றன. மீண்டும் மீண்டும், பைடென் நிர்வாகம் போரில் அமெரிக்க ஈடுபாட்டைக் கட்டுப்படுத்த நிர்ணயித்த ஒவ்வொரு “சிவப்புக் கோட்டையும்” தாண்டியுள்ளது. மார்ச் 2022 இல், “நாங்கள் தாக்குதல் உபகரணங்களை அனுப்பப் போகிறோம், எங்களிடம் உள்ள விமானங்கள், டாங்கிகள் மற்றும் ரயில்கள் அமெரிக்க விமானிகள் மற்றும் அமெரிக்கக் பணியாளர்களுடன் செல்வது” என்பது “மூன்றாம் உலகப் போர்” என்று பொருள்படும் என்று பைடென் கூறினார்.  மே 2022 இல், “நாங்கள் உக்ரேனை அதன் எல்லைகளுக்கு அப்பால் தாக்குவதை ஊக்குவிக்கவோ அல்லது செயல்படுத்தவோ மாட்டோம்” என்று பைடென் நியூ யோர்க் டைம்ஸில் ஒரு பதிப்பில் கூறினார். ஜூன் 2022 இல், பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், “நாங்கள் ரஷ்யாவுடன் போருக்குச் செல்ல மாட்டோம், எனவே சில ஆயுதங்களை குறிப்பாக, தாக்குதல் விமானங்கள் அல்லது டாங்கிகளை வழங்கக்கூடாது என்று ஒப்புக் கொள்ளப்பட்டது”  என்று குறிப்பிட்டார். 

13. இந்த “சிவப்புக் கோடுகள்” அனைத்தும் நேட்டோவால் கடக்கப்பட்டுள்ளன. நேட்டோ முதலில் கவச வாகனங்கள், பின்னர் முக்கிய போர் டாங்கிகள், அதற்குப் பின்னர் நீண்ட தூர ஏவுகணைகளை உக்ரேனுக்கு அனுப்பியது. நேட்டோ உறுப்பு நாடுகள், தங்கள் சொந்த குடிமக்களுக்கு தெரிவிக்காமல், நூற்றுக்கணக்கான துருப்புக்களை உக்ரேனுக்கு ரகசியமாக அனுப்பி நிலைநிறுத்தி வைத்தனர். உக்ரேன் போரில் அமெரிக்காவின் நேரடியான தலையீடு “மூன்றாம் உலகப் போருக்கும், பிரளயத்துக்கும்” வழிவகுக்கும் என்று அறிவித்த பிறகு, பைடென் தனது எண்ணத்தை மாற்றியதாகத் தெரிகிறது, அவர் அவ்வாறு செய்யத் தூண்டியது என்ன என்பதை விளக்கவில்லை.

14. ரஷ்யாவிற்கு எதிரான போரைத் தீவிரப்படுத்துவதற்கான அடுத்த கட்டமாக பல்லாயிரக்கணக்கான நேட்டோ படைகள் உக்ரேனுக்குள் குவிக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை. ஜூலையில் வாஷிங்டன், டி.சி.யில் நடைபெறும் அடுத்த நேட்டோ உச்சிமாநாட்டில் இந்த புதிய விரிவாக்கம் நிச்சயமாக இரகசிய விவாதங்களுக்கு உட்பட்டதாக இருக்கும். இந்த உச்சிமாநாட்டிற்கு முன்னதாக, போருக்கு எதிராக வளர்ந்து வரும் எதிர்ப்பைத் தடுக்கவும், ஐரோப்பிய அளவிலான போரில் ஒரு புதிய களத்திற்கான அரசியல் கட்டமைப்பை உருவாக்கவும், ஜூலை 4-ம் தேதி பிரிட்டனில் திடீர் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும்.

15. உக்ரேனில் பைடென் நிர்வாகத்தால் முன்னெடுக்கப்பட்டுவரும் போரின் தீவிரமானது, சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட பின்னர் பல தசாப்தங்களாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகளாவிய வெடிப்பின் மிகத் தீவிரமான வெளிப்பாடாகும். தங்கள் நலன்களைப் பின்தொடர்வதற்காக, ஆளும் உயரடுக்குகள் பாரிய அளவில் மரணத்தையும் அழிவையும் ஏற்கத் தயாராக உள்ளன. இதே அரசாங்கங்கள் ஏற்கனவே 40,000 ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளைக் கொன்று 2 மில்லியனுக்கும் அதிகமான மக்களை பட்டினியால் வாட்டி வதைத்து வருவதோடு, காஸாவில் இனப்படுகொலைக்கு நிதியுதவி, ஆயுதம் மற்றும் அரசியல் ஆதரவை வழங்கி வருகின்றன.

16. ரஷ்யாவை அடிபணிய வைப்பது என்பது, முன்னாள் சோவியத் ஒன்றியத்தை துண்டாடி அடிபணியச் செய்வது மட்டுமல்லாமல் இறுதியில் சீனாவையும் இலக்காகக் கொண்ட ஒரு பரந்த உலகளாவிய நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக இருக்கிறது. சீனாவுடனான வர்த்தகத்தில் கூர்மையான அதிகரிப்பு மற்றும் ஈரான் மற்றும் வட கொரியாவின் ஆயுதங்கள் காரணமாக, குறைந்த அளவிற்கு கூட ரஷ்யாவை பொருளாதார ரீதியாக முடக்கும் என்று கருதப்பட்ட தண்டனைத் தடைகள் அதை மண்டியிட வைக்கத் தவறிவிட்டன. எனவே ரஷ்யாவிற்கு எதிரான போர் விரிவாக்கம் உக்ரேனில் உள்ள மோதலை ஒரு உண்மையான உலகப் போராக மாற்ற வழிவகுக்கும்.

17. ஏகாதிபத்தியத்தின் பூகோள அரசியல் கட்டாயங்களுக்கு கூடுதலாக, பைடென் நிர்வாகம் மிகப் பெரிய அளவிலான சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியால் தூண்டப்படுகிறது, இதற்கு அமெரிக்க ஆளும் வர்க்கத்திடம் பதில் இல்லை. அமெரிக்கப் பொருளாதாரம் இராணுவ மறுசீரமைப்பு மற்றும் பெருவணிகங்களின் தொடர்ச்சியான பிணையெடுப்புகளுக்கான அரசாங்க செலவினங்களால் நீடித்து வருகிறது. கூட்டமைப்பு அரசின் கடன் ஒவ்வொரு தசாப்தத்திலும் இரட்டிப்பாகிறது மற்றும் நாணய மதிப்பிழப்பு மற்றும் கடன் பணமாக்குதல் ஆகியவற்றால் நிதியளிக்கப்படுகிறது.

18. இது 2024 ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக ஒரு திகைப்பூட்டும் அரசியல் நெருக்கடி மற்றும் கன்னைப் போரின் பின்னணியில் நடக்கிறது. தற்போதைய கருத்துக் கணிப்புகளில் முன்னணியில் இருக்கும் குடியரசுக் கட்சியின் அனுமான வேட்பாளர் டொனால்ட் டிரம்ப், மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பாசிச ஆட்சிக் கவிழ்ப்பின் மூலம் தேர்தலை மாற்ற முயற்சி செய்தார். ஆழ்ந்த சமூக நெருக்கடி மற்றும் காஸாவில் இஸ்ரேலிய இனப்படுகொலைக்கான அமெரிக்க ஆதரவின் மீது அதிகரித்து கோபம் மற்றும் சீற்றத்தின் மத்தியில், இரு முதலாளித்துவக் கட்சிகளுக்கும் (குடியரசுக்கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி) பரந்த மக்கள் எதிர்ப்பு உள்ளது.

19. அனைத்து முக்கிய முதலாளித்துவ நாடுகளிலும் இதே போன்ற நிலைமைகள் நிலவுகின்றன. போர்க்காலங்களில் “தேசிய ஒற்றுமை” என்ற பெயரில் ஜனநாயக உரிமைகளை நசுக்குவதற்கான சூழ்நிலையை வெளிநாட்டில் நடக்கும் போர் உருவாக்கும் என்று ஆளும் உயரடுக்குகள் நம்புகின்றன. இந்த நெருக்கடியான சூழ்நிலையானது, கீழ்த்தரமான இராணுவவாதத்தின் மீள் எழுச்சியையையும், பாசிச ஆட்சிகள் மற்றும் இராணுவ-பொலிஸ் சர்வாதிகாரங்களுடன் மட்டுமே தொடர்புடைய ஒரு வகையான உள் வன்முறையையும் வளர்க்கிறது. 

20. அதன் பங்கிற்கு, புட்டினின் ஆட்சி தவறான கணக்கீட்டிற்குப் பின் தவறான கணக்கீடுகளை செய்து வருகிறது. வெறித்தனமான ரஷ்ய முதலாளித்துவ தன்னலக்குழுக்களின் நலன்களுக்காக கிரெம்ளின் தொடங்கிய “சிறப்பு இராணுவ நடவடிக்கையில்” தொலைதூர முற்போக்கு எதுவும் கிடையாது. 1991ல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதன் அடிப்படையிலும், 1917 அக்டோபர் புரட்சிக்குப் பின் தேசியமயமாக்கப்பட்ட அரசு சொத்துக்களை தனியார்மயமாக்குதல் மற்றும் சூறையாடுவதின் அடிப்படையிலும் ரஷ்ய முதலாளித்துவ தன்னலக்குழுக்கள் ஆட்சிக்கு வந்தன.

21. 2022 இல், உக்ரேன் மீதான பிற்போக்குத்தனமான படையெடுப்பை தொடங்கிய புட்டின், தனது மேற்கத்திய “கூட்டாளிகளுடன்” வலிமையான நிலையில் இருந்து பேச்சுவார்த்தை நடத்தும் நம்பிக்கையில் இருந்தார். ஆனால் நேட்டோவானது, பேச்சுவார்த்தையில் முற்றிலும் ஆர்வமற்றிருக்கிறது என்பதைக் காட்டி வருகிறது. நேட்டோவால் ஏற்றுக்கொள்ளக்கூடிய போரின் ஒரே விளைவு என்பது, ரஷ்யாவின் இராணுவத் தோல்வி மற்றும் யூகோஸ்லாவியாவின் வழியில் ரஷ்ய நிலப்பரப்பை துண்டாடுவது மட்டுமே ஆகும். அதன் திவாலான தேசியவாத முன்னோக்கின் அடிப்படையில், புட்டின் அரசாங்கமும், அது பிரதிநிதித்துவப்படுத்தும் ரஷ்ய தன்னலக்குழுவின் பிரிவும் அதன் சொந்த பொறுப்பற்ற மற்றும் ஆத்திரமூட்டும் இராணுவ விரிவாக்கத்திற்கு உந்தப்படுகிறது.

22. ஏகாதிபத்திய போரின் உலகளாவிய விரிவாக்கம் பாரிய அடக்குமுறையுடன் இணைந்து செல்கிறது. அமெரிக்காவில், அரசாங்கமானது காஸா இனப்படுகொலைக்கு எதிரான போராட்டங்களை குற்றமாக்கியுள்ளது மற்றும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் இளைஞர்களை பாரியளவில் கைது செய்துள்ளது. போராட்டங்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறை, தொழிலாள வர்க்கத்திற்குள் ஒரு பரந்த இயக்கம் பற்றிய ஆளும் உயரடுக்கின் அச்சத்தை பிரதிபலிக்கிறது. இது, வாழ்க்கையில் போரையும் சமூக வேலைத்திட்டங்களின் அழிவையும் விலையாக செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கும்.

23. உக்ரேனில், போருக்கும் மற்றும் கட்டாய இராணுவ சேவைக்கும் பெருகிவரும் எதிர்ப்புக்கு மத்தியில், ரஷ்யாவின் நலன்களுக்குச் சேவை செய்ததாக மோசடிக் குற்றச்சாட்டின் பேரில், செலன்ஸ்கி அரசாங்கம் உக்ரேனிய சோசலிஸ்ட்டான போக்டன் சிரோடியுக்கை கைது செய்துள்ளது. உண்மையில், போக்டன் புட்டினின் முதலாளித்துவ ஆட்சி மற்றும் உக்ரேன் மீதான அதன் ஆக்கிரமிப்பிற்கு சமரசமற்ற எதிர்ப்பாளர் ஆவார். போக்டனின் கைதானது, போருக்கான எதிர்ப்பு உக்ரேனிய தொழிலாள வர்க்கத்தினுள் வளர்ந்து வரும் பிரதிபலிப்பைக் காண்பதுடன், செலென்ஸ்கியின் ஆட்சி மற்றும் அதன் நேட்டோ நட்பு நாடுகளுக்குள் உள்ள தீவிர பதட்டத்தை வெளிப்படுத்திக் காட்டுகிறது. 

24. பத்து ஆண்டுகளுக்கு முன்பு, “சோசலிசமும் ஏகாதிபத்திய போருக்கு எதிரான போராட்டமும்” என்ற தனது அறிக்கையில், ICFI பின்வருமாறு எச்சரிக்கை விடுத்தது: 

ஒரு புதிய உலகப் போரின் ஆபத்தானது, உலகப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கும், உற்பத்திச் சாதனங்களின் தனியார் உடைமை வேரூன்றியிருக்கும் விரோதமான தேசிய-அரசுகளாக பிரிப்பதற்கும் இடையே உள்ள முதலாளித்துவ அமைப்பின் அடிப்படை முரண்பாடுகளில் இருந்து எழுகிறது. அமெரிக்க ஏகாதிபத்தியம் யூரேசிய நிலப்பரப்பில் மேலாதிக்கம் செலுத்தும் உந்துதலில், எல்லாவற்றுக்கும் மேலாக, ரஷ்ய மற்றும் சீனப் புரட்சிகளால் அது பல தசாப்தங்களாக விலக்கி வைக்கப்பட்ட பகுதிகளில் மிகத் தீவிரமான வெளிப்பாட்டைக் காண்கிறது. மேற்கு ஐரோப்பாவில், அமெரிக்கா, ஜேர்மனியுடன் இணைந்து உக்ரேனைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர பாசிச தலைமையிலான ஆட்சிக் கவிழ்ப்பைத் திட்டமிட்டது. ஆனால், அதனது அபிலாஷைகள் அத்தோடு நிற்கவில்லை. மாறாக, ரஷ்ய கூட்டமைப்பைத் துண்டாக்கி, அதன் பரந்த இயற்கை வளங்களைக் கொள்ளையடிப்பதற்கான வழியைத் திறப்பதற்காக, அதை தொடர்ச்சியான அரை-காலனிகளாக குறைப்பதே அதன் இறுதி இலக்காக இருக்கிறது. கிழக்கு ஆசியாவில், ஒபாமா நிர்வாகம் ஆசியாவை நோக்கி திரும்புவதன் மூலம் சீனாவை சுற்றி வளைத்து அதை ஒரு அரை-காலனியாக மாற்றுவதை இலக்காக கொண்டிருந்தது. இங்கு, தொழிலாள வர்க்கத்திடமிருந்தும் முதலாளித்துவப் பொருளாதாரத்தின் உயிர்நாடியிலிருந்தும் பிரித்தெடுக்கப்படும் உபரி மதிப்பின் முக்கிய உலகளாவிய ஆதாரங்களில் ஒன்றான மலிவு உழைப்பின் மீதான மேலாதிக்கத்தை உறுதி செய்வதே அதன் நோக்கமாகும்.

25. கடந்த தசாப்தம் இந்த எச்சரிக்கையை உறுதிப்படுத்தியுள்ளது. ரஷ்யாவிற்கு எதிரான வெளிப்படையான அமெரிக்க-நேட்டோ போர் மற்றும் சீனாவுடன் வளரும் மோதலுக்கு மத்தியில், உலகப் போரை ஒரு விதிவிலக்கான நிகழ்வாகப் பார்ப்பது சாத்தியமில்லை, மாறாக, இந்த நிகழ்வு முதலாளித்துவத்தின் அடிப்படை உந்து சக்திகளின் வெளிப்பாடாகும்.

26. ஏகாதிபத்தியத்தை அணு ஆயுதப் போரின் விளிம்பிற்குத் தள்ளும் அதே முரண்பாடுகள்தான் சமூகப் புரட்சிக்கான புறநிலை அடிப்படையையும் வழங்குகின்றன. ஒரு பாரிய சமூக சக்தியான சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் நலன்கள், முதலாளித்துவ சுரண்டல் மற்றும் ஏகாதிபத்திய காட்டுமிராண்டித்தனத்துடன் மோதுகின்றன. ஏகாதிபத்திய போர்த் திட்டமிடலின் சதித் தன்மையானது, ஆளும் வர்க்கமே அதன் கொள்கைகளுக்கு வெகுஜனங்களின் ஆதரவைக் கொண்டிருக்கவில்லை என்பதை நன்கு அறிந்திருக்கிறது என்ற உண்மையைப் பிரதிபலிக்கிறது.

27. காஸா இனப்படுகொலைக்கு எதிரான பாரிய எதிர்ப்பு போராட்டங்கள் இருந்தபோதிலும், பரந்த மக்கள் பிரிவினர் ரஷ்யாவுடன் வேகமாக அதிகரித்து வரும் போரைப் பற்றி அறிந்திருக்கவில்லை. தொழிலாள வர்க்கத்தை ஏகாதிபத்திய போர்க் கொள்கைக்கு அடிபணிய வைக்கும் அதே வேளையில், ஆபத்தின் தீவிரத்தை தொழிலாளர்கள் புரிந்து கொள்வதைத் தடுக்கும் முறையான முயற்சியில் ஆளும் உயரடுக்குகளும் தொழிற்சங்க இயந்திரங்கள் உட்பட அவர்களது அரசியல் துணை அமைப்புகளும் ஈடுபட்டுள்ளன.

28. இந்தப் பேரழிவை நோக்கிய சுழல் தவிர்க்கப்படுவதற்கும், இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் இருக்கும் ஒரே ஒரு வழி, தொழிலாள வர்க்கத்தின் தலையீடாகும். காஸாவிற்கு எதிரான இஸ்ரேலின் இனப்படுகொலைத் தாக்குதலை முடிவுக்குக் கொண்டுவரும் போராட்டத்துடன் இந்தக் கோரிக்கை இணைக்கப்பட வேண்டும். உக்ரேனிலிருந்து அனைத்து அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள் மற்றும் ஆயுதங்கள் உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும் என்று தொழிலாளர்கள் கோர வேண்டும். அதேபோன்று, புட்டின் ஆட்சியின் பிற்போக்குத்தனமான தேசியவாதக் கொள்கைகளுக்கான அனைத்து ஆதரவையும் அது மறுக்க வேண்டும், அது எந்த வகையிலும் ஏகாதிபத்திய சக்திகளின் போர்க் கொள்கைகளுக்கு ஒரு முற்போக்கான மாற்றீட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தப்போவது கிடையாது.

29. பேரழிவை நோக்கி விரைவாக சென்று கொண்டிருக்கும் இந்தப் போரைத் தடுத்து நிறுத்த தொழிலாள வர்க்கம் அதன் சக்தியைப் பயன்படுத்த வேண்டும். இந்த சக்தியை அணிதிரட்டுவதற்கு உலகளாவிய அரசியல் நெருக்கடியின் மேம்பட்ட கட்டத்திற்கும் வெகுஜனங்களின் தற்போதைய அரசியல் நனவின் மட்டத்திற்கும் இடையிலான இடைவெளியைக் கடந்தே ஆக வேண்டும். இந்த வரலாற்றுப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு, ஒரு மார்க்சிச-ட்ரொட்ஸ்கிச தலைமையின் வளர்ச்சியும், சோசலிசக் கொள்கைகளின் அடிப்படையில் சர்வதேச தொழிலாளர் இயக்கத்தின் புரட்சிகரப் புதுப்பித்தலும் அவசியமானதாகும்.

30. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவானது, ரஷ்யா, உக்ரேன் மற்றும் முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள தொழிலாளர்கள் ஐரோப்பா, ஆசியா மற்றும் அமெரிக்காவிலுள்ள தங்கள் சகோதர சகோதரிகளுடன் போருக்கு மூலகாரணமான முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராக ஐக்கியப்பட வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறது. முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டமும் உலக சோசலிசப் புரட்சியின் வெற்றியும் மட்டுமே விரிவடைந்து வரும் பேரழிவிலிருந்து வெளியேறுவதற்கான ஒரே வழியாகும்.

Loading