முன்னோக்கு

ரஷ்யா மீதான நேட்டோ தாக்குதல்களுக்கு பைடென் முன்னோக்கி செல்கிறார்: அதிகரித்து வரும் ஏகாதிபத்திய உலகப் போரில் ஒரு புதிய கட்டம்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

அதிதீவிர வலதுசாரி உக்ரேனிய ஆட்சி ரஷ்யா மீது அமெரிக்க ஏவுகணைகளை வீசுவதற்கு, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் ஒப்புதல் அளித்துள்ளார். அதே வேளை, பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அடுத்த வார தொடக்கத்தில் உக்ரேனுக்கு “இராணுவ பயிற்சியாளர்களை” அனுப்புவதைப்பற்றிய அறிவிப்பை விடுக்கலாம்.

இந்த அபிவிருத்திகள் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகள், அணு ஆயுதம் ஏந்திய ரஷ்யாவுக்கு எதிரான போரை எவ்வாறு பொறுப்பற்ற முறையில் உலகளாவிய மோதலை நோக்கி தீவிரப்படுத்துகின்றன என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் அரசியல் அணிதிரட்டல் மூலம் மட்டுமே இதனை தடுத்து நிறுத்த முடியும்.

எளிதில் நகர்த்தப்படும் திறன் கொண்ட உயர் பீரங்கி ராக்கெட் அமைப்பில் (HIMARS) ராணுவ தந்திரோபாய ஏவுகணை அமைப்பை (ATACMS) ஏற்றுவதற்கு ஒரு அமெரிக்க ராணுவ சிப்பாய் கிரேனை தயார் செய்கிறார். குயின்ஸ்லாந்து, ஆஸ்திரேலியா, ஜூலை 26, 2023. [AP Photo/Sgt. 1st Class Andrew Dickson]

அமெரிக்க அதிகாரி ஒருவரின் கூற்றின்படி, “கார்கிவில் எதிர்த் தாக்குதலை நடத்தும் நோக்கங்களுக்காக உக்ரேன் அமெரிக்க ஆயுதங்களைப் பயன்படுத்த முடியும் என்பதை உறுதிப்படுத்துமாறு ஜனாதிபதி சமீபத்தில் தனது குழுவிற்கு உத்தரவிட்டுள்ளார்”. இந்த வெளிப்பாடு, திங்களன்று பல்கேரிய தலைநகர் சோபியாவில் நேட்டோவின் பாராளுமன்ற சபையின் கூட்டத்தைத் தொடர்ந்து, அதன் இராணுவக் கூட்டணி உக்ரேனில் ரஷ்யாவின் மீது “மூலோபாய தோல்வியை” ஏற்படுத்த உறுதியளித்தது. இந்த அபிவிருத்திகள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலைவர்கள் அணு ஆயுதம் கொண்ட நாடான ரஷ்யாவுடனான போரை விரைவாக தீவிரப்படுத்தி வருகின்றனர் என்பதை தெளிவுபடுத்துகின்றன.

பைடென் மற்றும் அவரது ஆலோசகர்களின் வெளிப்படையான முன்மாதிரி என்னவென்றால், புட்டின் இதற்கு பதிலடி கொடுக்க மாட்டார், எனவே அவர்கள் ரஷ்யாவைத் தாக்க சுதந்திரமாக உள்ளனர் என்பதாகும். இது ஒரு அசாதாரணமான பொறுப்பற்ற அனுமானம் ஆகும். இன்னும் குறிப்பாக, இவை அனைத்தும் புட்டினை, அவர்கள் தவறு என்று நிரூபிக்க நிர்ப்பந்திக்கிறது. மேலும், நேட்டோ உடனடியாக அணு ஆயுதங்களை நாடுவதன் மூலம் தாக்குதலுக்கு எதிர்வினையாற்றாது என்று புட்டின் கருதலாம். நிச்சயமாக, புட்டின் நேட்டோவை தவறாக நிரூபிக்க அழுத்தம் கொடுக்கிறார்.

இப்படித்தான் இந்தப் போர், ஒரு அணு ஆயுதப் போராக விரிவடைகிறது. ஒவ்வொரு தரப்பும் அதன் எதிரிகளின் மூலோபாய கணக்கீடுகள் தவறானவை என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. ஆகவே, அவர்கள் தங்களால் தப்பிக்க முடியாத ஒரு வலையில் தங்களைத் தாங்களே சிக்கிக் கொள்கிறார்கள்.

ஐரோப்பிய ஏகாதிபத்தியவாதிகள் யுத்தத்தை தீவிரப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். அமெரிக்காவைத் தவிர வேறு எந்த நாட்டையும் விட உக்ரேனுக்கு அதிக ஆயுதங்களை வழங்கிவரும் ஜேர்மனி, வியாழனன்று கியேவுக்கு கூடுதலாக 500 மில்லியன் யூரோ இராணுவ உபகரணங்களை வழங்குவதாக அறிவித்தது. உக்ரேனுக்கு துருப்புக்களை அனுப்பும் மக்ரோனின் உடனடி முடிவைப் பற்றி ராய்ட்டர்ஸிடம் பேசிய பெயரிடப்படாத இராஜதந்திரி ஒருவர், “ஏற்பாடுகள் மிகவும் முன்னேறியுள்ளன, அடுத்த வாரம் நாங்கள் எதையாவது எதிர்பார்க்கலாம்” என்று கூறினார்.

ஏகாதிபத்தியவாதிகள் தங்கள் உலகளாவிய அபிலாஷைகளை அடைவதற்கும், அவர்களின் தீர்க்க முடியாத உள்நாட்டு சமூக மற்றும் அரசியல் நெருக்கடிகளிலிருந்து ஒரு வழியைக் காணவும் போரில் எல்லாவற்றையும் ஈடுபடுத்தி வருகிறார்கள். பாலஸ்தீனியர்கள் மீதான இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு அவர்கள் உடந்தையாக இருக்க எவ்வளவு தூரமும் செல்லத் தயாராக இருக்கிறார்கள் என்பதை அவர்கள் நிரூபித்துள்ளனர்.

உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவர் டேவிட் நோர்த் X twiiter இல் எழுதியது போல்,

பைடென் நிர்வாகம், ரஷ்யா மீதான நேரடித் தாக்குதல்களை அங்கீகரிப்பதற்கு முடிவு செய்துள்ள நிலையில், நேட்டோவிற்கு பதிலடி கொடுக்க புட்டினுக்கு தைரியத்தையும் இரட்டை தைரியத்தையும் காட்டுகிறது. அவர் அதைச் செய்வார் என்று தெரிகிறது. பின்னர் இந்த மோதல்கள் அணு ஆயுதங்களை பயன்படுத்த தீவிரமடைவதற்கு சிறிது நேரம் மட்டுமே ஆகும்.

[twitter]

https://twitter.com/DavidNorthWSWS?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1796011902209835450%7Ctwgr%5Ee1e91137b87d5449e7b17cb48de8bd9fcfbbd8f8%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.wsws.org%2Fen%2Farticles%2F2024%2F05%2F31%2Fhfed-m31.html

[twitter]

புட்டினின் பிற்போக்கு தேசியவாத ஆட்சி நேட்டோவின் தாக்குதலுக்கு உள்ளாகினால், அது பதிலடி கொடுக்காது என்ற வாஷிங்டன் மற்றும் ஐரோப்பாவின் தலைநகரங்களில் “முற்றிலும் பொறுப்பற்ற” மனநிலையும், “மாயையான” நம்பிக்கையால் அது உந்தப்பட்டுள்ளதையும் நோர்த் கவனித்தார். போர் வெடித்ததில் இருந்து பைடென், ஜேர்மன் அதிபர் ஷோல்ஸ், மக்ரோன் மற்றும் பிரிட்டிஷ் பிரதம மந்திரி சுனக் ஆகியோரின் தொடர்ச்சியான பேரழிவுகரமான தவறான கணக்கீடுகளில் இது சமீபத்தியதாகும்.

போரின் தொடக்கத்தில் ரஷ்யாவிற்கு எதிராக விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகள் அதன் பொருளாதாரத்தின் சரிவைக் கொண்டுவரும் என்று கருதப்பட்டது, ஆனால் அவை அவ்வாறு நடக்கவில்லை. மேற்கத்திய ஊடகங்களால் போரில் ஒரு திருப்புமுனையாகக் கூறப்பட்ட மாபெரும் உக்ரேனிய “எதிர்-தாக்குதல்” ஒரு தோல்வியாகும். ஏகாதிபத்திய சக்திகளால் பீரங்கித் தீவனமாக தியாகம் செய்யப்பட்ட 500,000 உக்ரேனிய உயிர்களுக்கு இது பெரிதும் பங்களிப்பு செய்தது.

இந்த வாரம் நியூயார்க் டைம்ஸ் கட்டுரையில் எழுதிய பிரட் ஸ்டீபன்ஸ், தலைவர்கள் தங்கள் செயல்களின் மீதான அனைத்து வரம்புகளையும் நீக்கி, போர்களில் “தார்மீக ரீதியாக சமரசம் செய்து வெற்றிகளைப் பெற்றால்” அவர்கள் புனிதர்களாக அறிவிக்கப்படுவார்கள் என்று வாதிட்டார். உக்ரேனிய எதிர் தாக்குதல் ரஷ்யாவிற்கு “இறுதி” ஆட்டமாக இருக்கும் மற்றும் நசுக்கும் மற்றும் தவிர்க்க முடியாத தோல்வியை ஏற்படுத்தும் என்று கடந்த ஆண்டு எழுதினார்.

ரஷ்யாவுடனான போரில் கட்டுப்பாடற்ற ஆக்கிரமிப்பு மற்றும் மிருகத்தனம் பற்றிய பரந்த ஒருமித்த கருத்து என்பது தலையை இழந்த ஒரு ஆளும் வர்க்கத்தை குறிக்கிறது என்ற அர்த்தமாகும்.

பனிப்போரின் போது, ​​அமெரிக்க ஏகாதிபத்தியம் அணு ஆயுத பிரளயத்தை தூண்டுவதைத் தவிர்ப்பதற்காக, அதன் நடவடிக்கைகளில் சில வரம்புகளை அங்கீகரித்தது. கொரியப் போரின் போது சீனப் படைகளுக்கு எதிராக அணுகுண்டைப் பயன்படுத்துவதை ஆதரித்ததற்காக ஜெனரல் டக்ளஸ் மெக்ஆர்தர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். 1962 ஆம் ஆண்டு கியூபா ஏவுகணை நெருக்கடியின் போது, ​​கியூபா மீது குண்டு வீசும் உயர் இராணுவத் தளபதிகளின் விருப்பம் ஓரங்கட்டப்பட்டது. ஆனால் இப்போது, முற்போக்கான பதில்கள் இல்லாத உள்நாட்டு மற்றும் உலகளாவிய நெருக்கடிகளை எதிர்கொள்ளும் நிலையில், முதலாளித்துவ வர்க்கம் முழுமையான போருக்கு வழிவகுக்கும் ஒரு போக்கை கடைப்பிடிக்க முடிவு செய்துள்ளது.

தீர்க்கமான கேள்வியைக் கேட்ட நோர்த் பின்வருமாறு தொடர்ந்தார், “எல்லாவற்றிலும் மிகப் பெரிய மற்றும் பேரழிவுகரமான தவறான கணக்கீடு இப்போது வருகிறது: நேட்டோ எதிர்த்தாக்குதல்களுக்கு ஆளாகாமல் ரஷ்ய பிரதேசத்தின் மீது தாக்குதல்களை நடத்த முடியும். பைடென், ஷோல்ஸ், மேக்ரான், சுனக் அல்லது ஸ்டார்மர் ஆகியோர் தவறாக நிரூபிக்கப்பட்டால் இதற்கு எப்படி பதிலளிப்பார்கள்?

வோல் ஸ்ட்ரீட் மற்றும் பிராங்பேர்ட், பாரிஸ் மற்றும் லண்டனில் உள்ள பங்குச் சந்தைகளுக்காக இன்னும் எத்தனை உயிர்களை தியாகம் செய்யத் தயாராக இருக்கிறார்கள் என்பதை மக்களுக்குச் சொல்ல வேண்டிய கடமை தமக்கு இருப்பதாக வட அமெரிக்கா அல்லது ஐரோப்பாவில் உள்ள ஏகாதிபத்திய தலைவர்கள் எவரும் நினைக்கவில்லை. பைடெனின் முடிவிற்கு முன் வெளியிடப்பட்ட நியூயோர்க் டைம்ஸ் கட்டுரையில் இருந்து ஒரு அசாதாரண பத்தியில், டேவிட் சாங்கர் பின்வருமாறு எழுதினார், “ஆனால் திரு. பைடென் போக்கை மாற்றினால், அவர் அதை ஒருபோதும் அறிவிக்க மாட்டார் என்று அதிகாரிகள் ஒப்புக்கொள்கிறார்கள்: அதற்கு பதிலாக, அமெரிக்க பீரங்கிக் குண்டுகள் மற்றும் ஏவுகணைகள் ரஷ்ய இராணுவ இலக்குகள் மீது இறங்கத் தொடங்கும்”.

ஏகாதிபத்திய கொள்கையின் பைத்தியக்காரத்தனம் மிகவும் துல்லியமான புறநிலை வேர்களைக் கொண்டுள்ளது. உலக முதலாளித்துவத்தின் வரலாற்று ரீதியான திவால்நிலையைத் தொடர்ந்து, எந்தத் தீர்வும் இல்லாத முரண்பாடுகளால் பிளவுபட்டுள்ள நிலையில், அவர்கள் உலகினை ஒட்டுமொத்தமாக மறுபங்கீடு செய்வதன் ஒரு பகுதியாக, ரஷ்யாவுடனான போரை பாரியளவில் தீவிரப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

20 ஆம் நூற்றாண்டில், முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போர்களின் ஏகாதிபத்திய பைத்தியக்காரர்கள், ஒவ்வொரு நாட்டின் ஆளும் வர்க்கத்தின் தேசிய பொருளாதார மற்றும் பூகோள மூலோபாய நலன்களுக்கும் பொருளாதார வாழ்வின் உலகளாவிய தன்மைக்கும் இடையிலான மோதலைக் கடக்கும் முயற்சியில் மனிதகுலத்தை முன்னெப்போதும் இல்லாத வகையில் காட்டுமிராண்டித்தனத்தில் மூழ்கடித்தனர்.

இரண்டாம் உலகப் போரில் இன அழிப்பின் போது மேற்கு போர் முனையில் இருந்த அகழிகளிலும் நாசிக்களின் எரிவாயு அறைகளிலும் மில்லியன் கணக்கான மரணங்களை ஏற்படுத்திய அதே வர்க்க நலன்கள், இன்று ஏகாதிபத்திய சக்திகளை அணு ஆயுத மோதலில் மனிதகுலத்தின் உயிர்வாழும் அபாயத்தை தங்கள் உலகளாவிய சூறையாடும் அபிலாஷைகளின் பெயரில் தள்ளுகின்றன.

ஏகாதிபத்திய சக்திகள் இந்த நலன்களுக்காக, ரஷ்யாவின் இயற்கை வளங்களைக் கொள்ளையடிப்பதற்காக அதனை அரைக் காலனி நிலைக்கு அடிபணிய வைப்பதும், ஈரானுக்கு எதிரான போருக்கான தயாரிப்புகளின் ஒரு பகுதியாக பாலஸ்தீனப் பிரச்சினைக்கான இஸ்ரேலின் “இறுதித் தீர்வை” ஆதரிப்பதும், அத்தோடு, யூரேசிய நிலப்பரப்பின் மீதான கட்டுப்பாட்டிற்காக சீனாவுடனான போருக்கான களத்தையும் அமைத்து வருகிறது.

ரஷ்யாவிற்கு எதிரான ஏகாதிபத்தியப் போரின் இடைவிடாத விரிவாக்கம், போருக்கும் அதை உற்பத்தி செய்யும் முதலாளித்துவ இலாப அமைப்பு முறைக்கும் எதிராக தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன அரசியல் அணிதிரட்டலுக்கான போராட்டத்தின் மூலம் ஒழிக்கப்பட வேண்டும். உலக சோசலிச வலைத் தளம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் எழுதியது போல்:

வரலாற்று ரீதியாக சரிபார்க்கப்பட்ட உண்மை இல்லாவிட்டால் மனிதகுலத்திற்கான வாய்ப்புகள் இருண்டதாக இருக்கும். முதலாளித்துவத்தை அழிவுக்கு இட்டுச்செல்லும் முரண்பாடுகள், அதனைத் தூக்கியெறிந்து, ஒரு புதிய மற்றும் முற்போக்கான அதாவது சோசலிச அடித்தளத்தில் சமூகத்தை மறு ஒழுங்கமைப்பதற்கான நிலைமைகளையும் உருவாக்குகிறது. இந்த மறு ஒழுங்கமைப்பதற்கான சாத்தியம் தொழிலாள வர்க்கத்தின் புறநிலை இருப்பில் வேரூன்றியுள்ளது. வர்க்கப் போராட்டம் என்பது சோசலிச மறு ஒழுங்கமைப்பின் புறநிலை சாத்தியத்தை நடைமுறையில் செயல்படுத்தும் வழிமுறையாகும்.

இந்த பகுப்பாய்வின் துல்லியமான தன்மை, இனப்படுகொலைக்கு எதிரான போராட்டக்காரர்கள் மீது பொலிஸ் நடத்திய அடக்குமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் கல்வித்துறை தொழிலாளர்கள் நடத்தி வரும் வேலைநிறுத்தம் உட்பட, காஸா இனப்படுகொலைக்கு எதிரான விரைவான வளர்ச்சியால் நிரூபிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் அவசர அரசியல் பணியானது, முதலாளித்துவ சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான அவர்களின் போராட்டங்களையும், போருக்கு நிதியளிப்பதற்காக ஊதியங்கள் மற்றும் வாழ்க்கை நிலைமைகள் மீதான தாக்குதல்களுக்கு எதிரான அவர்களின் போராட்டங்களையும், பல்கலைக்கழக வளாகங்களிலும் அதற்கு அப்பாலும் வளர்ந்து வரும் போர் எதிர்ப்பு போராட்டங்களுடன் ஒன்றிணைப்பதாகும்.

சமூகத்தின் அனைத்து செல்வங்களையும் உற்பத்தி செய்யும் தொழிலாள வர்க்கம், சமூகத்தின் சோசலிச மாற்றத்திற்கான அரசியல் போராட்டத்தில் ரஷ்யா மற்றும் உக்ரேன் உட்பட அனைத்து நாடுகளிலும் உள்ள தொழிலாளர்களை ஒன்றிணைத்து, ஆயுத உற்பத்தியை நிறுத்துவதன் மூலம் ஏகாதிபத்திய போர் இயந்திரத்தை அதன் பாதையில் நிறுத்த முடியும் மற்றும் நிறுத்த வேண்டும்.

இப்போது நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவைக் கட்டியெழுப்புவதில்தான் இவை எல்லாம் தங்கியுள்ளது. இது தொழிலாள வர்க்கத்தில் வளர்ந்து வரும் சமூக எதிர்ப்பை சோசலிசத்திற்கான ஒரு நனவான இயக்கமாக வளர்க்க போராடும் புரட்சிகர சோசலிச அரசியல் தலைமை ஆகும்.

Loading