பிரான்சின் கடும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில் நியூ கலிடோனியாவில் அமைதியின்மை தொடர்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

கடந்த 8 நாட்களாக நியூ கலிடோனியாவில் சூழ்ந்துள்ள கலவரம் மற்றும் அமைதியின்மைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நேரடி முயற்சியாக, பிரான்சின் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் அதன் காலனிக்கு விமானம் மூலம் பயணம் மேற்கொண்டுள்ளார்.

பிரான்ஸ் அதிபர் மக்ரோன், 2வது வலது, பாரிஸில் உள்ள எலிசே அரண்மனையில் பாதுகாப்பு மற்றும் தற்காப்பு கவுன்சிலுக்கு திங்கள்கிழமை தலைமை தாங்குகிறார். May 20, 2024 [AP Photo/Benoit Tessier]

அனைத்து பங்குதாரர்களுடன் அரசியல் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கும், இந்த நெருக்கடிக்கு “அரசியல் தீர்வு” காண்பதற்கும் ஒரு “பேச்சுவார்த்தை பணியை” “ஸ்தாபிப்பது” முக்கிய நோக்கம் என்று மக்ரோன் கூறினார். மக்ரோனின் செய்தித் தொடர்பாளர் ப்ரிஸ்கா தெவெனோட், எந்தவொரு பேச்சுவார்த்தைக்கும் நிலைமை “ஒழுங்கிற்குத் திரும்புவது” என்பது ஒரு ஆரம்ப நிபந்தனையாக இருக்கும் என்று கூறினார்.

கடந்த புதன்கிழமை மக்ரோன் அவசரகால ஆணையை பிறப்பித்த போதிலும், பிரான்சின் காலனியாக இருக்கும் பசிபிக் பிரதேசம் அமைதியின்மையின் இரண்டாவது வாரத்திற்குள் நுழைந்துள்ளது. பெரும்பாலும் பழங்குடியினரான கனக் இளைஞர்களால் ஏற்பட்ட கலவரம், தீவின் தலைநகரான நௌமியாவை அழித்தது. கடந்த வெள்ளிக்கிழமைக்குள், மூன்று இளம் கனக்ஸ் மக்கள் மற்றும் இரண்டு கலகம் அடக்கும் ஜென்டார்ம் பொலிசார் உட்பட ஐந்து பேர்கள் கொல்லப்பட்டனர்.

1998 முதல் 10 ஆண்டுகளாக நியூ கலிடோனியாவில் வசிக்கும் பிரெஞ்சு குடியிருப்பாளர்களுக்கு மாகாண தேர்தல்களிலும் 54 உறுப்பினர்களைக் கொண்ட காங்கிரசிலும் வாக்களிக்கும் உரிமையை வழங்குவதற்கான அரசியலமைப்புத் திருத்தத்தை பிரெஞ்சு பாராளுமன்றம் முன்வைத்ததால் கலவரம் வெடித்தது. மக்கள்தொகையில் 40 சதவீதத்திற்கும் மேலான பழங்குடி கனாக்ஸின் வாக்குகளை இது நீர்த்துப்போகச் செய்யும் என்று கூறும் தீவின் சுதந்திரத்துக்கு சார்பான தலைவர்களின் எதிர்ப்பை இந்த நடவடிக்கை எதிர்கொள்கிறது.

ஆயிரக்கணக்கான கனக்ஸ் மக்களை உள்ளடக்கிய எதிர்ப்பு போராட்டங்கள், பிரெஞ்சு அரசு மற்றும் ஆயுதமேந்திய பிரான்ஸ் சார்பு தற்காப்புக் குழுக்களின் கடுமையான அடக்குமுறையை எதிர்கொண்டன. இதுவரை 230 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 12 நாள் அமுல்படுத்தப்பட்ட அவசரகாலச் சட்டமானது, மக்கள் ஒன்றுகூடுவதைத் தடைசெய்யவும், பயணத் தடைகளை விதிக்கவும், வீட்டுக் கைதுகள் மற்றும் சோதனைகளை மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு பரந்த அதிகாரங்களை வழங்குகிறது.

1,000 பிரெஞ்சு பொலீஸ் மற்றும் இராணுவத்தினரைக் கொண்ட ஒரு குழு வெள்ளிக்கிழமை இந்த தீவுக்கு வந்தடைந்தது. இது, கலவரம் மற்றும் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் படைகள் உட்பட ஆயுதமேந்திய பாதுகாப்புப் பணியாளர்களின் எண்ணிக்கையை 2,700 ஆக உயர்த்தியுள்ளது.

வார இறுதியில், தலைநகர் நௌமியாவின் புறநகர்ப் பகுதிகளில் “கவலையளிக்கும் அமைதி” நிலவியதாகவும், அங்கு வெள்ளிக்கிழமை முழுவதும் வன்முறை, தீவைப்பு மற்றும் மோதல்களின் காட்சிகள் தொடர்ந்தன என்றும் ஊடகங்கள் தெரிவித்தன. இராணுவ பொலிஸ் அடக்குமுறை இருந்தபோதிலும், தலைநகரின் மத்திய பகுதிகளின் கட்டுப்பாட்டை சட்ட அமலாக்க முகவர்கள் இன்னும் மீட்டெடுக்கவில்லை. அத்துடன், சனிக்கிழமை இரவு தீ மற்றும் பிற சேதங்கள் நிகழ்ந்துள்ளன.

“பாரிய படையை குவிப்பதன் மூலம், இந்த பகுதிகளின் கட்டுப்பாட்டை எங்களால் விரைவில் மீட்டெடுக்க முடியும்” என்று பிரான்சின் உயர் ஸ்தானிகர் லூயிஸ் லு ஃபிராங்க் கூறினார். ஆனால், தலைநகர் நௌமியாவின் மேயர் சோனியா லகார்ட், மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரையிலான ஊரடங்கு உத்தரவு காரணமாக ஒரே இரவில் வன்முறைகள் தணிந்த நிலையில், “நாங்கள் இயல்பு நிலைக்கு திரும்புவதில் இருந்து வெகு தொலைவில் இருக்கிறோம்” என்றார். “அமைதிக்கான அனைத்து முறையீடுகளும் இருந்தபோதிலும், நிலைமை மேம்படவில்லை - மாறாக, நௌமியா “முற்றுகையின் கீழ்” இருப்பதாகவும் அவர் கூறினார்.

இந்தக் கலவரம் கிராமப்புறங்களுக்கும் பரவியது. சனிக்கிழமையன்று, தலைநகருக்கு வடக்கே சுமார் 355 கி.மீ தொலைவில் உள்ள காலா-கோமென் நகருக்கு அருகே, தீவின் சாலைகளைத் தடுக்கும் பல தடுப்புகளில் ஒன்றில் நிழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்ட பின்னர் ஆறாவது மரணம் பதிவாகியுள்ளது. சுதந்திரத்திற்கு ஆதரவான குழுக்களின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசத்தின் இதர பகுதிகளை மீட்க பாதுகாப்புப் படைகள் “கடுமையான” தாக்குதல்களை நடத்தும் என்று லு ஃபிராங்க் கூறினார்.

தலைநகர் நௌமியா மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள முக்கிய சாலைகளின் கட்டுப்பாட்டை மீண்டும் கொண்டு வருவதற்காக ஞாயிற்றுக்கிழமை ஒரு பெரிய ஆயுதமேந்திய போலீஸ் நடவடிக்கை ஏற்பாடு செய்யப்பட்டது. “என்ன விலை கொடுத்தும் குடியரசின் ஒழுங்கு மீண்டும் நிறுவப்படும்” என்று லு ஃபிராங்க் எச்சரித்தார். 600 க்கும் மேற்பட்ட கலகம் அடக்கும் ஜென்டார்ம் பொலிசார், டாங்கிகளை பயன்படுத்தி எதிர்ப்பாளர்கள் மற்றும் டோன்டூடா சர்வதேச விமான நிலையத்துடன் நௌமியாவை இணைக்கும் சாலையில் போடப்பட்டிருந்த சாலைத் தடைகளை அகற்றினர். இந்த விமான நிலையம், மறு அறிவிப்பு வரும் வரை வணிக விமானங்களுக்கு மூடப்பட்டிருக்கும்.

கடந்த திங்களன்று, “ஒழுங்கை மீட்டெடுப்பதில் தெளிவான முன்னேற்றம்” இருப்பதாகக் கூறிய மக்ரோன் அதே வேளை, நௌமியாவில் உள்ள பொதுக் கட்டிடங்களைப் பாதுகாக்கும் பொலிஸாரை வலுப்படுத்துவதற்கு இராணுவத்திற்கு அதிகாரம் அளித்தார். இந்த தீவுப் பகுதிகளின் வணிக நிருபரான நிக் மேக்லெலன், கடைகள் மற்றும் வணிகங்கள் உட்பட தலைநகரைச் சுற்றி இன்னும் ஆங்காங்கே தாக்குதல்கள் நிகழ்ந்து வருவதாகத் தெரிவித்தார். வடக்கு மாகாணத்தில் சுதந்திரத்திற்கு ஆதரவான படையினரால் வீதித் தடைகளும் போடப்பட்டிருந்தன.

உள்நாட்டு விமான நிலையத்தில் விமானங்களை தரையிறக்க பிரெஞ்சு அதிகாரிகள் அனுமதித்ததை அடுத்து, ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து அரசாங்கங்கள் நேற்று தங்கள் குடிமக்களை வெளியேற்ற இராணுவ விமானங்களை அனுப்பத் தொடங்கின. மெக்லெல்லனின் கூற்றுப்படி, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து வெளியுறவு மந்திரிகள் தாமதம் குறித்து “பத்திரிகை நடவடிக்கை” எடுப்பதற்காக தங்கள் பிரெஞ்சு வெளியுறவு மந்திரியை தொடர்பு கொண்டனர்.

பிரான்ஸ், தனது காலனியில் பிடியை இறுக்கமாக வைத்திருப்பதற்கு உறுதியுடன் உள்ளது. அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் சீனாவிற்கு எதிரான போருக்குத் தயாராகி வரும் நிலையில், பிரெஞ்சு ஏகாதிபத்தியம் பசிபிக் இராணுவமயமாக்கலில் பங்கு வகிக்க முயல்கிறது. நியூ கலிடோனியாவில் பிரான்ஸ் ஒரு பெரிய இராணுவத் தளத்தை வைத்திருக்கிறது. மற்றும் துருப்பிடிக்காத எஃகு உற்பத்தி மற்றும் ஆயுதத் தொழிலிலுக்கு இன்றியமையாத உலகின் நிக்கல் இருப்புகளில் கிட்டத்தட்ட கால் பங்கைக் நியூ கலிடோனியா கொண்டுள்ளது.

உள்துறை மற்றும் கடல் கடந்த வெளி மாநில மந்திரி ஜெரால்ட் டார்மானின், அவரது துணை மந்திரி மேரி குவெனோக்ஸ், இராணுவ மந்திரி செபாஸ்டின் லெகோர்னு மற்றும் நீதி மந்திரி எரிக் டுபோன்ட்-மோரெட்டி ஆகியோரை உள்ளடக்கிய “அமைச்சர்களுக்கு இடையேயான நெருக்கடி குழுவின்” தினசரி கூட்டங்களுக்கு பிரெஞ்சு பிரதம மந்திரி கேப்ரியல் அட்டல் தலைமை தாங்குகிறார். வெள்ளிக்கிழமை, அட்டால் நாடாளுமன்றக் கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்து அவசரகாலச் சட்டத்தை 12 நாட்களுக்கு மேல் நீட்டிக்க வேண்டுமா என்று விவாதித்தார். இதற்கு பாராளுமன்றத்தின் கீழ்சபை மற்றும் செனட் ஆகிய இரண்டின் ஒப்புதல் தேவை.

நியூ கலிடோனியாவிலுள்ள பிரான்சுக்கு சார்பான இரண்டு கட்சிகளான விசுவாசக் கட்சி (Les Loyalistes) மற்றும் பேரணிக் கட்சி (Rassemblement) செவ்வாயன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் அரசியலமைப்பு திருத்தத்தை திரும்பப் பெறுவது என்பது “கலவரக்காரர்கள் மற்றும் கொள்ளையர்களின் நடவடிக்கைகளை மன்னிப்பதற்கு சமம்” என்று அறிவித்தது. “பயங்கரவாதமும் வன்முறையும் வெற்றி பெறக்கூடாது (...) சட்டம் ஒழுங்கை மீட்டெடுக்க பிரான்ஸ் அரசை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்” என்று பிரான்ஸ் சார்பு அரசியல்வாதியான விர்ஜினி ருஃபெனாச் அறிவித்தார்.

கனக் சோசலிஸ்ட் தேசிய விடுதலை முன்னணி (FLNKS) தலைமையிலான சுதந்திரத்திற்கு சார்பான பிரமுகர்கள், இந்த நடவடிக்கையை கைவிட வேண்டும் என்றும், (1998 நௌமியா உடன்படிக்கையில் கையெழுத்திடுவதற்கு முன்பு பாரிஸ் அனுப்பிய தூதுக்குழுக்களைப் போலவே) ஒரு உயர், அங்கீகரிக்கப்பட்ட மற்றும் சுதந்திரமான அதிகாரி தலைமையில், ஒரு பிரெஞ்சு பேச்சுவார்த்தை அணி வந்து சமரச பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தனர்.

ஒரு சுதேசி உயரடுக்கை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற சுதந்திர-சார்பு ஐந்து கட்சிகளின் கூட்டணியான FLNKS, ஏகாதிபத்திய மேலாதிக்க அமைப்பிற்கு உண்மையான மாற்றீட்டை முன்வைக்காத அதே வேளையில், தற்போதுள்ள வாக்குப்பதிவு ஏற்பாடுகளை தக்கவைத்துக்கொள்வதில் ஒரு தனி ஆர்வத்தை கொண்டுள்ளது.

நியூ கலிடோனியா ஜனாதிபதி லூயிஸ் மாபூ, (FLNKS இன் ஒரு பகுதியான சுதந்திரத்திற்கான தேசிய ஒன்றியத்தைச் சேர்ந்த கனக் அரசியல்வாதி) கலவரக்காரர்களின் செயல்களை அப்பட்டமாக கண்டனம் செய்தார். “இந்த நாடு பல தசாப்தங்களாக கட்டியெழுப்பிய பொதுச் சொத்துக்கள் மற்றும் உற்பத்திக் கருவிகளின் அழிவு அல்லது அழிப்பதை கோபத்தால் நியாயப்படுத்த முடியாது” என்றார்.

நியூ கலிடோனியாவில் வெடித்துள்ள கலவரமானது, கனக் தொழிலாளர்கள் மற்றும் குறிப்பாக இளைஞர்கள் மற்றும் காலனியின் செல்வந்த அடுக்குகளுக்கு இடையே உள்ள பரந்த வர்க்கப் பிளவை அம்பலப்படுத்தியுள்ளது. பத்திரிகையாளர் மேக்லெல்லன் X/Twitter இல், இளைஞர்கள் “செல்வத்தின் சின்னங்களை எரித்தனர் மற்றும் பெரிய வணிக மையங்கள் மற்றும் வணிகங்களை குறிவைத்தனர். நகர்ப்புறங்களில் வசிக்கும் அவர்கள் அன்றாட சிரமங்களை எதிர்கொள்கின்றனர். தமது குடும்பத்துடன், வறுமையில் வாடுகின்றனர். அவர்களுக்கு வேலை இல்லை” என்று பதிவிட்டுள்ளார்.

நௌமியாவின் ரேடியோ djiido வில் இருந்து ஆண்ட்ரே கெய்ஸ் இதேபோல் ரேடியோ நியூசிலாந்து (RNZ) பசிபிக் இடம், கனக் இளைஞர்களுக்கு “எந்தப் பயிற்சியும் இல்லை, அவர்கள் எந்த வேலையும் இல்லாமல் பள்ளியை விட்டு வெளியேறுகிறார்கள்... பணக்காரர்கள் பணக்காரர்களாகி வருகின்றனர், ஏழைகள் மேலும் ஏழைகளாகி வருகின்றனர், மேலும் அவர்கள் இது வேண்டாம், இந்த பொருளாதார பகிர்வு மாதிரியை மாற்ற வேண்டும் என்று கூறுகிறார்கள், இதுதான் முக்கிய பிரச்சனை என்று நான் நினைக்கிறேன்” என்று அவர் கூறினார்.

உக்கிரமடைந்து வரும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், முக்கிய நிக்கல் தொழில்துறை கொந்தளிப்பில் உள்ளது மற்றும் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகளால் மக்கள் தத்தளித்து வருகின்றனர். சுதந்திரத்திற்கு ஆதரவான மற்றும் போட்டி சுதந்திர எதிர்ப்பு சக்திகளை பிரதிநிதித்துவப்படுத்தும் உத்தியோகபூர்வ கட்சிகள் வணிக உயரடுக்கின் பக்கம் நிற்கின்றன. வறுமை மற்றும் சமூக சமத்துவமின்மையை முடிவுக்கு கொண்டுவருவதற்கான எந்தவொரு அர்த்தமுள்ள நடவடிக்கைகளையும் அவை எதிர்த்து வருகின்றன.

இதற்கிடையில், பிராந்தியம் முழுவதும், பிரெஞ்சு அடக்குமுறை மீதான சீற்றம் அதிகரித்து வருகிறது. 1986 ஆம் ஆண்டு பப்புவா நியூ கினியா, பிஜி, வனுவாட்டு மற்றும் சாலமன் தீவுகளால் உருவாக்கப்பட்ட மெலனேசியன் ஸ்பியர்ஹெட் குழு, காலனித்துவத்தை ஆதரிப்பதற்காக பிரான்ஸ் மீது குற்றம் சாட்டி, தேர்தல் சீர்திருத்தத்தை கைவிடுமாறு அழைப்பு விடுத்தது.

இரண்டு டசினுக்கும் மேற்பட்ட பசிபிக் அரசு சாரா அமைப்புகளின் கூட்டணி, பிரான்ஸ் நியூ கலிடோனியாவின் கனாக் மக்களுக்கு “துரோகம்” செய்வதாக கண்டித்தது. பசிபிக் பிராந்திய அரசு சாரா நிறுவனங்கள் (PRNGOக்கள்) “மக்ரோன் அரசாங்கத்தின் மோசமான மறைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்காக, காலனித்துவ கட்டுப்பாட்டை நீட்டிப்பதற்காக” கண்டனம் தெரிவித்தன.

18 உறுப்பினர்களைக் கொண்ட பசிபிக் தீவுகள் மன்றத்தின் வெளியேறும் தலைவரும், குக் தீவுகளின் பிரதமருமான மார்க் பிரவுன், பழங்குடியின கனாக் மக்களுக்கு “அதிக தன்னாட்சி” தேவை என்று கூறினார். பல மன்ற உறுப்பினர்கள் முன்னாள் காலனிகள் என்று சுட்டிக்காட்டிய பிரவுன், பசிபிக் மக்கள் “இறையாண்மையை” மதிக்கிறார்கள் என்றும், அதற்குப் பதிலளிக்கும் விதமாகவே இந்த எதிர்ப்புகள் என்றும் கூறினார்.

உண்மை என்னவென்றால், வறுமையில் வாடும் பசிபிக் தீவு நாடுகள் எதுவும் முழு சுதந்திரம் பெற்றவை அல்ல. அவர்கள் அனைவரும் ஏகாதிபத்திய சக்திகளின் உதவியை பெரிதும் சார்ந்துள்ளனர் மற்றும் அவர்களின் அரசாங்கங்கள் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, அமெரிக்கா மற்றும் பிரான்சின் வழக்கமான தலையீட்டிற்கு உட்பட்டுள்ளன. எவ்வாறாயினும், பிரான்சின் பொலிஸ் அடக்குமுறையானது, பிராந்தியத்தில் “எதேச்சதிகார” சீனச் செல்வாக்கிற்கு எதிராகப் பின்னுக்குத் தள்ள விரும்பும் “ஜனநாயகங்களின்” கூட்டணி பற்றிய பிரச்சாரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தக்கூடும் என்று சில ஆய்வாளர்கள் அஞ்சுகின்றனர்.

சிட்னியை தளமாகக் கொண்ட லோவி இன்ஸ்டிட்யூட்டின் வர்ணனையாளர் ஆலிவர் நோபெடாவ் அறிவித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. எதிர்ப்பு போராட்டங்களுக்கு பிரான்சின் “கடுமையான” பிரதிபலிப்பானது காலனித்துவ நீக்கம் “எதிர்பார்க்கப்பட்ட” பிராந்தியத்தில் பின்னடைவை ஏற்படுத்தும். “பிரான்ஸ் ஒரு பசிபிக் கூட்டாளியாக மீண்டும் வெளிவர முயற்சிக்கிறது, இது வெளிப்படையாக அதன் உருவகத்தை மேம்படுத்த உதவாது” என்று அவர் எச்சரித்தார்.

Loading