சீனாவின் மின்சார வாகனங்கள் மீதான வரிகளை நான்கு மடங்காக உயர்த்த அமெரிக்கா முடிவு செய்துள்ளது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

கணினி சில்லுகள் (computers chips) மற்றும் பசுமைத் தொழில்நுட்பத் (green technology) தயாரிப்புகளின் மேம்பாடு தொடர்பாக நடத்தப்படும் பொருளாதாரப் போரின் பெரும் விரிவாக்கத்தில் சீன மின்சார வாகனங்களின் (EV) இறக்குமதிக்கான வரிகளை 25 சதவிகிதத்திலிருந்து 100 சதவிகிதம் வரை நான்கு மடங்காக உயர்த்த பைடென் நிர்வாகம் முடிவெடுத்திருக்கிறது.

சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான Xiaomi தனது Xiaomi SU7 மின்சாரக் காரை பெய்ஜிங்கில், செவ்வாய்க்கிழமை, மார்ச் 26, 2024 அன்று காட்சிப்படுத்துகிறது. [AP Photo/Ng Han Guan]

1974 வர்த்தகச் சட்டத்தின் பிரிவு 301 இன் கீழ் மின்சார வாகன (EV) வரிகளில் முன்மொழியப்பட்ட உயர்வு, சமீபத்திய நாட்களில் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் ப்ளூம்பெர்க் (Bloomberg) மற்றும் பைனான்சியல் டைம்ஸ் ஆகியவற்றின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ள இது இன்று முதல் அமுல்படுத்தப்படலாம்.

இந்தக் கட்டத்தில் அமெரிக்காவிற்கு சீன மின்சார வாகன (EV) ஏற்றுமதிகள் பெரிய அளவில் இல்லை என்றாலும் - அதன் தயாரிப்பாளர்கள் ஐரோப்பிய சந்தையில் அதிக கவனம் செலுத்தி வருவதால் - முன்கூட்டிய வரி உயர்வு என்பது எதிர்காலத்தில் அமெரிக்க சந்தைக்கான அணுகலைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு முன்கூட்டிய தாக்குதலாக இருக்கிறது.

இந்த நடவடிக்கையின் உந்து சக்திகளை கோடிட்டுக் காட்டி, முன்னாள் அமெரிக்க வர்த்தக அதிகாரி, இப்போது ஆசியா சமூக கொள்கை அமைப்பின் (Asia Society Policy Institute) துணைத் தலைவர் வெண்டி கட்லர் (Wendy Cutler) பைன்னாசியல் டைம்ஸ் இடம், “சீன இறக்குமதிகளால் அநியாயமாக வர்த்தகம் செய்யப்பட்டதன் மூலம் கிட்டத்தட்ட அழிந்துபோன அமெரிக்க சூரிய மின்னாற்றல் (solar) தொழில்துறைக்கு ஏற்பட்ட அதே கதியை அமெரிக்க கார் தொழில்துறையும் சந்திக்காமல் இருப்பதை உறுதிசெய்து பைடென் நிர்வாகம் முன்னேற்ற முயற்சிக்கிறது” என்று கூறியுள்ளார்.

சீன உற்பத்தியாளர்கள் தங்களின் அமெரிக்க போட்டியாளர்களை “முடமாக்குவதற்கு” தற்போதுள்ள வரிகளின் விலையை விழுங்குவதற்கு தயாராக இருக்கிறார்கள், ஆனால் இந்த வரிகளின் அதிகரிப்பு அதை மிகவும் கடினமாக்கும் என்று கட்லர் கூறினார்.

“எவ்வாறாயினும், நியாயமற்ற முறையில் வர்த்தகம் செய்யப்படும் சீன வாகனங்கள் அமெரிக்க சந்தையில் காலூன்றுவதற்கு முன், வரி விகிதத்தின் நான்கு மடங்கு அதிகரிப்பு, அமெரிக்க வாகன உற்பத்தியாளர்களை மிகவும் திறம்பட பாதுகாக்கும் என்று அவர் கூறினார்.

இந்த “நியாயமற்ற” நடைமுறைகள் சீன உயர்-தொழில்நுட்ப உற்பத்தியாளர்களுக்கு பெய்ஜிங்கால் கொடுக்கப்பட்ட அரசின் சலுகைகளின் விளைவாகும் என்று அமெரிக்கா கூறுகிறது. இந்தக் குற்றச்சாட்டு முற்றிலும் பாசாங்குத்தனமானது. அமெரிக்கா அரசாங்கத்தால் உயர் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பணவீக்கக் குறைப்புச் சட்டம் (Inflation Reduction Act) மற்றும் சிப்ஸ் சட்டம் (Chips Act) என அழைக்கப்படும் நேரடி மானியங்கள் அல்லது இலாபகரமான வரிச் சலுகைகள் மூலம் பில்லியன் டாலர்கள் வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த மாதம்தான் அமெரிக்க அதிகாரிகள் அமெரிக்காவின் மிகப் பெரிய கணினி சில்லுகள் (computer chips) உற்பத்தி செய்யும் மைக்ரான் டெக்னாலஜிக்கு (Micron Technology) மானியமாக $6.1 பில்லியன் டாலர்கள் திட்டத்தை அறிவித்தனர், உயர் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட $33 பில்லியன் டாலர்களில் இது ஒரு பகுதியாக இருக்கிறது.

ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் “புதிய உற்பத்தி சக்திகளை” உருவாக்குவதற்கான உந்துதலின் ஒரு பகுதியாக, சீன நிறுவனங்களுக்கு அரசு மானியங்கள் வழங்கப்படுகின்றன என்றால், அவர்கள் சந்தேகத்திற்கு இடமின்றி, பெய்ஜிங் ஆனது அமெரிக்கா மற்றும் பிற முக்கிய பொருளாதார நாடுகளில் மேற்கொள்ளப்படுவதில் இருந்து வேறுபட்ட எதையும் செய்யவில்லை.

முதலில் சூரிய மின்சார உற்பத்தி தகடுகள் (solar panels) தயாரிப்பிலும், இப்போது மின்சார வாகனங்களிலும் (EV) சீனாவின் அதிக போட்டி நிலைமைக்கான முக்கிய காரணம் அரசின் மானியங்கள் அல்ல, மாறாக சிறந்த தொழில்நுட்பம் மற்றும் திறமையான உற்பத்தி முறைகளின் வளர்ச்சி ஆகியவைதான்.

ஒரு காலத்தில் உலக அளவில் முன்னணியில் இருந்த அமெரிக்க கார் தொழில்துறைக்கு ஒரு புலம்பலாக, ப்ளூம்பெர்க் கட்டுரையாளர் டேவிட் ஃபிக்லிங், வரிகளும் கோழைத்தனமும் அதை ஒரு பள்ளத்தில் தள்ளுவதாகக் கூறினார். ஃபோர்டு (Ford) நிறுவனம் மின்கலம் (battery) உற்பத்தி செய்து வழங்குபவர்களுக்கு கொள்வனவுகளை குறைத்து வருகிறது மற்றும் மின்சார வாகன (EV) உற்பத்திகளுக்கான செலவை $12 பில்லியன் டாலர்கள் குறைக்க திட்டமிட்டுள்ளது. டெல்சா (Telsa) தனது ஊழியர்களை 10 சதவிகிதம் குறைத்து, வெளிக் கிளைகளுக்கு எரிபொருள் நிரப்பும் சூப்பர்சார்ஜர் (Supercharger) குழுவை கலைத்துள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

டேவிட் ஃபிக்லிங் இந்த வீழ்ச்சிக்கு ‘தைரியத்தை’ இழந்ததே காரணம் என்று கூறியதுடன், அமெரிக்க கார் உற்பத்தியாளர்கள் ‘பெரியதாகவும், ஊதிப்பெருக்கப்பட்டவர்களாகவும்’ ஆவதற்கு உகந்த சூழலில் பரிணமித்து வருகின்றனர் என்றும் கூறினார்.

எவ்வாறாயினும், தொழில்துறையின் நெருக்கடிக்கான காரணங்கள் உற்சாகமின்மை காரணமாக இருக்கவில்லை. அது தொழிலாள வர்க்கத்தின் மீதான அதிகரித்த தாக்குதல்களுடனும், வரி நடவடிக்கைகளுடன் இணைந்து அதிக அளவிலான இலாபத்தைப் பெறுவதற்கு பதிலிறுப்பு செய்கின்றன. அமெரிக்க இலாபக் குவிப்பு முறையின் மையத்தில் வேரூன்றியிருக்கும் இவை, பெருகிய முறையில் உற்பத்தியை அடிப்படையாகக் கொண்டவை அல்ல, மாறாக நிதி ஒட்டுண்ணித்தனத்தை (financial parasitism) அடிப்படையாகக் கொண்டவை. இதன் விளைவுகள் ஒரு காலத்தில் உலகை வழிநடத்திய தொழிற்துறையில் இன்று காணப்படுகின்றன.

ஒரு காலத்தில் உலகின் முக்கிய விமான உற்பத்தியாளராக இருந்த போயிங், பாதுகாப்பு நடவடிக்கைகளின் பற்றாக்குறைக்கு ஒரு வார்த்தையாக மாறிவிட்டது. அடிமட்ட செலவுகளை வெட்டியதன் விளைவாக அதனை விபத்துகளுக்கு இட்டுச் செல்கிறது. அதன் நடைமுறைகள் குறித்த விவரங்களைத் தெரிவித்துக் கொண்டிருந்த இரண்டு முன்னாள் நிறுவன ஊழியர்கள் சமீபத்தில் விவரிக்க முடியாத சூழ்நிலையில் இறந்து கிடந்தனர்.

போயிங் மற்றும் முக்கிய கார் நிறுவனங்கள் பங்குகளை திரும்ப வாங்கும் நடவடிக்கைகளில் (share buyback operations) பெரிதும் ஈடுபட்டுள்ளன. உற்பத்தி நிறுவனங்கள் முதல் மருத்துவமனைகள் மற்றும் மருந்து நிறுவனங்கள் வரையிலான பெரும்பாலான அமெரிக்க தொழில்துறையின் உரிமையாளர்களாக இருக்கும் பெரும் பெருநிறுவனங்களால் ஈட்டப்படும் இலாபங்கள், திருப்தியடையாத தேவைகளைப் பூர்த்தி செய்ய வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் முதலீட்டு நிதி மூலம் வோல் ஸ்ட்ரீட்டில் பங்கு மதிப்புகளை உயர்த்துவதற்காக அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன.

ஜெனரல் மோட்டார்ஸ் (General Motors) இதற்கு ஒரு உதாரணமாக காட்டலாம். கடந்த நவம்பரில், 10 பில்லியன் டாலர் பங்குகளை திரும்ப வாங்கும் நடவடிக்கையை இது அறிவித்தது. அளவு எவ்வளவு பெரியதாக இருந்தாலும், அது ஒரு தொற்றுப் பரவல் போக்கின் ஒரு சிறிய பகுதி மட்டுமே.

2012 மற்றும் 2021 க்கு இடையில், S&P 500 குறியீட்டில் உள்ளடங்கிய 474 நிறுவனங்கள், $5.7 டிரில்லியன் டாலர்கள் பங்குகளை திரும்பப் பெறுவதற்காக முதலீடு செய்துள்ளதாக பொருளாதார வல்லுனர் வில்லம் ஓ. லாசோனிக் (Willam O. Lazonick) கணக்கிட்டுள்ளார். இது அவர்களின் வருமானத்தில் 55 சதவீதமாகும். அவர்கள் மற்றொரு $4.2 டிரில்லியன் டாலர்களை பங்குதாரர்களுக்கு ஈவுத்தொகையில் செலுத்தினர். இது அவர்களின் வருமானத்தில் 41 சதவீதத்தை குறிக்கிறது.

இதர உயர் தொழில்நுட்ப இறக்குமதிகளுடன், மின்சார வாகனங்கள் (EV) மீதான வரிக்கட்டணங்களை சுமத்துவதற்கு தொழிற்சங்க அதிகாரத்துவத்தில் அதன் முட்டுக்கட்டைகளால், குறிப்பாக அமெரிக்க தொழிலாளிக்கு ஆதரவாக இருப்பதுபோல காட்டிக்கொள்ளும் ஐக்கிய வாகன தொழிலாளர் சங்கத் (UAW) தலைவர் ஷான் ஃபைன் (Shawn Fain) ஆதரவுடன் சந்தேகத்திற்கு இடமின்றி பைடென் நிர்வாகத்தால் இது முன்னெடுக்கப்படும்.

இது வேறு வகையானதல்ல. நிதி மூலதனத் துறையில் கார் நிறுவனங்கள் மற்றும் அவற்றின் ஒட்டுண்ணி உரிமையாளர்களின் அடிமட்டத்தை பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

ஆனால் நிதியின் கழுகுகள் இறுதியில் தொழிலாள வர்க்கத்தின் உழைப்பில் இருந்து உபரி மதிப்பைப் பிரித்தெடுப்பதில் தங்கியிருக்கிறது. இதன் பொருள், வரிகள் அவசியமாக பணிநீக்கங்களுடன் சேர்ந்திருக்கிறது, மேலும் சுரண்டல் தீவிரமடைவதால், குறைவான தொழிலாளர்கள் அதிகமாகச் உற்பத்தி செய்யத் தூண்டப்படுவார்கள், மேலும் உண்மையான ஊதியங்கள் வெட்டப்படுகின்றன.

இது மேலும் பொருளாதார போர் நடவடிக்கைகளை ஏற்படுத்தும். சீன மின்சார வாகன (EV) உற்பத்தியாளர்களை அமெரிக்க சந்தையில் இருந்து விலக்குவதானது, அவர்களின் சொந்த வரித் தடைகளை தூக்கி எறிவதற்கு ஐரோப்பா பதிலளிப்பதுடன் சீன மின்சார வாகன மற்றும் பிற உயர் தொழில்நுட்ப ஏற்றுமதிகள் மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சுகிறது.

பொருளாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்பை பாதுகாத்தல் என்ற பதாகையின் கீழ், அதன் சந்தைகளை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்த ஐரோப்பிய ஆணையத்தால் கடந்த அக்டோபரில் தொடங்கப்பட்ட முக்கிய அறிக்கையுடன் இதற்கான திட்டங்கள் ஏற்கனவே தீட்டப்பட்டுள்ளன, அது அடுத்த சில வாரங்களுக்குள் வெளியிடப்படும்.

அங்கு அமெரிக்காவில் உள்ளதைப் போல வரிகள் அதிகமாக இருக்கலாம், ஏனெனில் நடந்த விவாதத்தில் 30 சதவீதமாக உள்ள அளவுகள் சீன உற்பத்தியாளர்களைத் தடுக்க போதுமானதாக இல்லை.

உலகப் பொருளாதாரம் பெருகிய முறையில் 1930களின் பைத்தியக்கார விடுதியை ஒத்ததாக மாறி வருகிறது. கிட்டத்தட்ட தினசரி நடவடிக்கையின் அடிப்படையில், முக்கிய பொருளாதாரங்கள் வரித் தடைகளை உருவாக்குகின்றன மற்றும் சரக்குகள் மற்றும் தொழில்நுட்பங்களை எடுத்துச் செல்வதற்கான சட்ட அனுமதிக்கு எதிராக தடைகளை அறிவிக்கின்றன.

அக்காலப் பொருளாதாரக் குழப்பமானது இரண்டாம் உலகப் போருக்கான சூழ்நிலையை உருவாக்குவதில் ஒரு மையக் காரணியாக இருந்தது. இன்று, இது அணு ஆயுத விளைவுகளுடன் மற்றொரு உலகப் போருக்கான சூழ்நிலையை உருவாக்குவதற்கு பங்களிக்கிறது.

இறுதி ஆய்வில், அதிகரித்து வரும் வரி மற்றும் தொழில்நுட்ப போர்கள் முதலாளித்துவ உற்பத்தி முறையின் —அதாவது ஒரு பூகோளமயமாக்கப்பட்ட பொருளாதாரத்திற்குள்ளாக உற்பத்தி சக்திகளின் அபிவிருத்திக்கும் தேசிய-அரசு அமைப்புமுறைக்கும் இடையிலான ஒரு அடிப்படை முரண்பாட்டின் ஒரு வெளிப்பாடாகும்.

தொழிலாளர்கள் தங்கள் தலைவிதியை, முரண்பட்ட எந்த ஒரு தேசிய முதலாளித்துவ வர்க்கங்களில் எதனுடனும் இணைக்க முடியாது. மாறாக, முதலாளித்துவ அரசியல் ஸ்தாபனத்தின் அனைத்து கட்சிகளுக்கும் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்துக்கும் எதிராக ஒரு சோசலிச வேலைத்திட்டத்திற்கான அரசியல் போராட்டமே முன்னோக்கி செல்லும் வழியாகும்—இது முன்பினும் அதிக அபாயகரமான முதலாளித்துவ குழப்பத்திற்கு ஒரே சாத்தியமான பதிலாகும்.

Loading