இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
மாதாந்த இழப்பீட்டுத் தொகையை (எம்.சி.ஏ.) உயர்த்துமாறு கோரி, பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள், ஏப்ரல் 29 முதல் மீண்டும் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்து, அந்த துறையின் தொழிற்சங்கங்கள் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுக்கு அனுப்பிய கடிதம் அண்மையில் ஊடகங்களில் வெளியானது.
பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த கமிட்டி, இலங்கைப் பல்கலைக்கழக நிர்வாக மற்றும் நிதி அதிகாரிகள் சங்கம், அனைத்துப் பல்கலைக்கழக கல்வி உதவி அதிகாரிகள் சங்கம், அனைத்துப் பல்கலைக்கழக சேவைகள் சங்கம், ஐக்கிய ஊழியர் சங்கம் மற்றும் இலங்கை சுதந்திர ஊழியர் சங்க பல்கலைக்கழக ஒன்றியம் ஆகிய தொழிற்சங்கங்கள் இந்தக் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளன.
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்கக் கோரி, பேராதனைப் பல்கலைக்கழகத்தில் 2024 மார்ச் 13 அன்று நடைபெற்ற போராட்டம்.
எவ்வாறெனினும், அவ்வாறான வேலைநிறுத்தம் குறித்து அந்த சங்கங்களின் பொது உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்படாததால், கடந்த 29ம் தேதி வேலைநிறுத்தம் தொடங்கவில்லை. இதற்கு முன்பும் பலமுறை தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக தொழிற்சங்கத் தலைவர்கள் அறிவித்தனர், ஆனால் இம்முறை நடைபெறும் வேலைநிறுத்தத்தினைப் போல் அந்த வேலைநிறுத்தங்கள் நடைபெறவில்லை.
தொழிற்சங்கத் தலைவர்கள் அமைச்சருக்கு அனுப்பிய கடிதம், தொழிற்சங்கங்கள் தொடர்பாக சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.) உலக சோசலிச வலைத் தளமும் பலமுறை சுட்டிக்காட்டியுள்ள பல பிரதான விடயங்களை உறுதிப்படுத்துகிறது.
1. தொழிற்சங்கங்கள் இன்று எந்தவொரு தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கும் அழைப்பு விடுப்பது, அவற்றின் உறுப்பினர்களின் அழுத்தத்தின் காரணமாகவே அன்றி, அவர்களின் எரியும் தேவைகளுக்காக ஒரு உண்மையான போராட்டத்தை நடத்துவதற்கான விருப்பத்தின் காரணமாக அல்ல.
அந்தக் கடிதத்தில், “உறுப்பினர்களின் நெருக்குவாரம் மற்றும் அழுத்தம் அதிகரித்து வருவதால், தொழில்முறை அமைப்புகளாகிய நாங்கள் இந்த நேரத்தில் அமைதியாக இருக்க முடியாது,” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால்: “நாங்கள் உறுப்பினர்களை அமைதியாக வைக்க முயற்சித்தோம். ஆனால், இனி அவ்வாறு செய்ய முடியாத நிலையை எதிர்கொண்டுள்ளோம்,” என்பதாகும்.
02. சர்வதேச நாணய நிதியத்தின் உத்தரவின் பேரில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் முன்னெடுக்கும் சிக்கன நடவடிக்கைகளின் தாக்குதல்களை, அரசாங்கத்தின் மீது அழுத்தம் கொடுத்து மீளப் பெற்றுக்கொள்ளும் பேச்சுவார்த்தை மூலம் மாற்றியமைக்க முடியும் என்று தொழிலாளர்கள் மத்தியில் தொழிற்சங்க அதிகாரத்துவம் பரப்பும் கதை ஒரு முழுமையான மாயை என்பதை சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.) உலக சோசலிச வலைத் தளமும் சுட்டிக்காட்டியுள்ளன.
குறித்த விடயம் சம்பந்தமாக “உங்கள் தலைமையில் பலமுறை, அனைத்து தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது” என்று கடிதத்தின் துவக்கத்தில் குறிப்பிட்டுள்ள தொழிற்சங்க தலைவர்கள், ‘ஏப்ரல் 26’ வரை காத்திருந்தும் தீர்வு கிடைக்காத நிலையில் வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்ததாக தெரிவித்தனர்.
எவ்வாறாயினும், இந்த கடிதத்தை எழுதுவதற்கு முன்னதாக, தொழிற்சங்க தலைவர்கள் மீண்டும் தங்கள் உறுப்பினர்களிடம் பேச்சுவார்த்தை மிகவும் வெற்றிகரமாக நடந்து வருவதால் பொறுமையாக இருக்க வேண்டும் என்று கூறினார்கள். தங்கள் உறுப்பினர்களுக்கு இந்த மாயையை திணிப்பதற்காக, கல்வி அமைச்சர் சம்பளப் பிரச்சினையைத் தீர்ப்பதில் அர்ப்பணிப்புடன் இருக்கிறார், என்று சித்தரிப்பதற்கு தொடர்ச்சியாக முயற்சித்து வருகிறார்கள். அவர்களின் கடித்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
“பல்கலைக்கழக சமூகத்தினரின் வெட்டப்பட்ட சம்பளம் மற்றும் எம்.சி.ஏ. கொடுப்பனவுகளை வழங்குவதற்கு கௌரவ அமைச்சர் என்ற வகையில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் மற்றும் அர்ப்பணிப்பை நாங்கள் மிகவும் பாராட்டுவதோடு எங்கள் மரியாதையையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.”
சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகள் சம்பந்தமான உத்தரவுகளை ஒன்றுவிடாமல் அமுல்படுத்தும் விக்கிரமசிங்க-பொதுஜன முன்னணி அரசாங்கத்தின் ஒரு அமைச்சரவை அமைச்சரையே தொழிற்சங்க அதிகாரத்துவம் இவ்வாறு மகிமைப்படுத்தப்படுகிறது.
03. அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியப்பட்ட போராட்டத்தை முன்னெடுப்பதற்கு முற்றிலும் எதிராக இருக்கும் தொழிற்சங்க அதிகாரத்துவம், தொழிலாளர் வர்க்கத்தை பிளவுபடுத்துவதற்கு தரப்படுத்தல்வாதம் மற்றும் துறைசார்வாதத்தை அதிகபட்சமாகப் பயன்படுத்துகிறது என்பது சோ.ச.க. வலியுறுத்திய மற்றொரு முக்கியமான விடயமாகும்.
ஒரே நிறுவனத்திற்குள், ஆனால் இரண்டு துறைகளில் பணியாற்றும் பல்கலைக்கழக கல்வி சாரா மற்றும் கல்விசார் ஊழியர்களை ஒருவருக்கொருவர் எதிராக நிறுத்துவதற்காக, கல்வி துறையில் அல்லது விரிவுரையாளர்களின் கொடுப்பனவுகளை அதிகரிப்பதை, பல்கலைக்கழக கல்விசாரா தொழிற்சங்க அதிகாரத்துவம் எப்போதும் தூக்கிப் பிடிக்கின்றது.
“பல்கலைக்கழக அமைப்பின் ஒரு பகுதிக்கு அரசாங்கம் மிக அதிகமான உதவித்தொகையை (நூற்றுக்கு 29 சதவீதத்திலிருந்து 42 சதவீதம் வரை) வழங்குவதால், பல்கலைக்கழக அமைப்பு ஒரு நெருக்கடியிலிருந்து இன்னொரு நெருக்கடிக்கு சென்றுள்ளது” என்று அந்த கடிதம் கூறுகிறது.
இந்த அறிக்கையில், தொழிலாளர்களைப் பிளவுபடுத்துவதற்கும் மேலாக, பிற பிற்போக்கு தாக்கங்களும் உள்ளன. வானுயர உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவை ஒப்பிடும் போது, கல்வி ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்ட கொடுப்பனவு சொற்பமே ஆனாலும், அதை “மிக அதிக அதிகரிப்பு” என சித்தரித்து, இதுபோன்ற அளவிலான கொடுப்பனவு உயர்வு எந்த தொழிலாளர் துறையிலும் கொடுக்கப்படக்கூடாது என்று இந்த தொழிற்சங்க அதிகாரத்துவம் மறைமுகமாகக் கூறுகின்றது.
மறுபுறம், கல்விசார் ஊழியர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பால் பல்கலைக்கழகங்கள் “ஒரு நெருக்கடியில் இருந்து இன்னொரு நெருக்கடிக்கு” சென்றுவிட்டன என்ற வாதம் அபத்தமானது. இதற்கு நேர்மாறாக, அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களின் தொடர்ச்சியான சிக்கனவெட்டு நடவடிக்கைகளால் பல்கலைக்கழகங்கள் ‘ஒரு நெருக்கடியிலிருந்து இன்னொரு நெருக்கடிக்குள்’ தள்ளப்பட்டுள்ளன. சர்வதேச நாணய நிதியத்தின் புதிய சிக்கனவெட்டு உத்தரவுகளால் இந்த நெருக்கடி மேலும் மேலும் ஆழமடையும்.
கல்விசாரா ஊழியர்களின் வேலைநிறுத்தம் தொடங்கி, அது தொடருமெனில், மாணவர் போராட்டங்களும் அதனுடன் இணையலாம், என்பதை ஆட்சியாளர்களுக்குச் சுட்டிக்காட்டி அந்தக் கடிதம் முடிகிறது. “எனவே, இவ்வாறானதொரு நிலை உருவாகி பல்கலைக்கழக அமைப்பில் கடுமையான குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு இடமளிக்காமல் இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் வழங்கப்படும் என நாங்கள் வலுவாக எதிர்பார்ப்பதுடன், இந்த தொழில்முறை நடவடிக்கை உங்களுக்கு எதிராகவோ அல்லது உங்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துவதற்காகவோ அல்ல, என்பதை நாங்கள் உங்களுக்கு கூறி வைப்பதோடு, எங்கள் தொழில்முறை நடவடிக்கை பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக மட்டுமே என்பதை உங்களுக்குத் தெரிவிக்கிறோம்” என அது பிரகடனம் செய்துள்ளது.
கல்விசாரா தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் முழு கடிதமும் தொழிற்சங்கங்கள் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான முதலாளித்துவ வர்க்கத்தின் கருவிகள் என்பதை தெளிவாக நிரூபிக்கிறது.
கல்விசாரா தொழிற்சங்க அதிகாரத்துவத்தினைப் போன்று, ஏனைய துறைகளில் உள்ள தொழிற்சங்க அதிகாரத்துவத்தினரும், தங்களது உறுப்பினர்களுடன் எந்தவித ஜனநாயக ரீதியான விவாதமும் இல்லாமல் முடிவுகளை எடுக்கின்றனர்.
அதிகாரத்துவமானது, உறுப்பினர்களின் அழுத்தத்தை எதிர்கொண்டு சில வரையறுக்கப்பட்ட தொழில்முறை நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுக்கின்றபோதிலும், அது என்ன வகையான தொழில்துறை நடவடிக்கை? அது எப்போது அழைக்கப்படும்? எழுப்பப்பட வேண்டிய கோரிக்கைகள் என்ன? போன்றவை அனைத்தும் அவர்களாலேயே தீர்மானிக்கப்படுகிறன. தொழிற்சங்கங்களில் அதிகாரவர்க்கம் அழைக்கும் போது தொழிற்சங்க நடவடிக்கைகளில் பங்கேற்பதுடன், அது முடிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டவுடன் வேலைக்குத் திரும்புவதைத் தவிர, அதன் உறுப்பினர்களுக்கு அது பற்றி தீர்மானிக்கும் ஜனநாயக ரீதியான விவாதத்திற்கு எந்த இடமும் கிடையாது.
தொழிற்சங்க அதிகாரத்துவம், கடந்த எட்டு ஆண்டுகளாக, “ஊதிய ஏற்றத்தாழ்வை” முடிவுக்குக் கொண்டுவர அரசாங்கங்களுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக அதன் உறுப்பினர்களை தொடர்ச்சியான பயனற்ற தொழிற்சங்க நடவடிக்கைகளுக்காக அழைத்துள்ளது. எவ்வாறாயினும், அமைச்சருடன் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர், தற்போது அந்த கோரிக்கை கைவிடப்பட்டு, எம்.சி.ஏ. கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கான கோரிக்கை மாத்திரமே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது அமைச்சரின் உறுதிப்பாட்டின் ஒரு விளைவு மட்டுமே.
தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் இந்த ஜனநாயக விரோத பொறிமுறைக்கு எதிராக எழுந்து நிற்கும் உறுப்பினர்களின் குரல்களை நசுக்குவது அதிகாரவர்க்கத்தின் கொள்கையாகிவிட்டது. சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் இலங்கைப் பல்கலைக்கழக தொழில்நுட்ப அதிகாரிகள் சங்கத்தின் உறுப்பினரான மொரட்டுவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த எம். தேஹின் வசந்த, கல்விசாரா ஊழியர்களின் சம்பளக் கோரிக்கைகள் உட்பட எரியும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கையைத் தீர்மானிக்க தனது தொழிற்சங்கத்தில் ஜனநாயக ரீதியிலான கலந்துரையாடலை கோரி தலையிட்ட போதெல்லாம், தொழிற்சங்க அதிகாரத்துவம் அதை பலாத்காரமாக தடுத்தது.
தொழிற்சங்கங்களில் அரசியலுக்கு இடமில்லை என்ற பிற்போக்கு வாதத்தை முன்வைத்தே வசந்தவை அவர்கள் தடுத்து வந்துள்ளனர். அரசாங்கத்தின் தாக்குதல்கள் முதலாளித்துவத்தின் அமைப்பு ரீதியான நெருக்கடியில் இருந்தே தோன்றுவதால், முதலாளித்துவ அரசாங்கத்துக்கும் முதலாளித்துவ அமைப்புக்கும் எதிரான தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியப்பட்ட அரசியல் எதிர்த்தாக்குதல் மூலமே அந்தத் தாக்குதல்களை தோற்கடிக்க முடியும். அத்துடன் அந்த எதிர்த்தாக்குதல், ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். இந்த வேலைத் திட்டத்தை சுட்டிக்காட்டி, வசந்த சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோக்கின் அடிப்படையில் தொழிலாளர்கள் மத்தியில் போராடினார்.
தொழிற்சங்க அதிகாரத்துவம் தூக்கிப் பிடிக்கின்ற, அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் திவாலான வேலைத் திட்டத்திற்கு எதிராக, தங்களது கோரிக்கையை வெல்வதற்கான சாத்தியமான வேலைத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக ஒவ்வொரு தரத்திலும் கல்விசாரா தொழிலாளர்களின் ஒன்றிணைந்த மாநாட்டுக்கு அழைப்பு விடுக்குமாறும், மாநாட்டில் முழு ஜனநாயக ரீதியான விவாதத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்றும் ஒவ்வொரு கல்விசாரா தொழிற்சங்க உறுப்பினர்களும் போராட வேண்டும்.
அத்தகைய மாநாட்டில் பின்வரும் கோரிக்கைகள் கலந்துரையாடப்பட்டு நிறைவேற்றப்பட முடியும்:
*கண்ணியமான மற்றும் ஆரோக்கியமாக வாழக்கூடிய மாத சம்பளத்தை உத்தரவாதம் செய்!
*அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப மாதச் சம்பளத்தை அதிகரித்திடு!
*வேலைச் சுமையை குறைத்திடு!
*ஒப்பந்த அடிப்படையில் இருக்கும் அனைத்து ஊழியர்களையும் நிரந்தரமாக்கு!
*பல்கலைக்கழகங்கள், பாடசாலைகள் உட்பட கல்வித் துறைகளில் கடுமையான ஊழியர் பற்றாக்குறை மற்றும் வசதிப் பற்றாக்குறையைப் போக்க பல்லாயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்!
தொழிலாள வர்க்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ், பெரிய அளவிலான தொழிற்சாலைகள், வங்கிகள் மற்றும் பெருந்தோட்டங்களை தேசியமயமாக்குவதன் மூலமும், முதலாளிகளின் இலாபத்திற்காக அன்றி, வெகுஜனங்களின் தேவைகளின் அடிப்படையில் ஒரு சோசலிச உற்பத்தி-பொருளாதார அமைப்பை நிறுவுவதன் மூலமும் மட்டுமே மேற்கண்ட கோரிக்கைகளை அடைய முடியும். சோசலிசக் குடியரசுகளின் சர்வதேச ஒன்றியத்தின் ஒரு பகுதியாக, இலங்கையில் ஒரு தொழிலாளர்-விவசாயிகள் அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டுவருவதன் மூலமே இதைச் செய்ய முடியும்.
முதலாளித்துவ அமைப்புடன் தலை முதல் கால் வரை பிணைக்கப்பட்டிருக்கும் தொழிற்சங்கங்களும் அவற்றின் அதிகாரத்துவமும் அத்தகைய திட்டத்திற்கு முற்றிலும் விரோதமாக இருப்பதால், அந்த தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளித்துவக் கட்சிகளைச் சாராமல், தொழிலாளர்கள் தங்கள் சொந்த சுயாதீன அதிகார நிறுவனங்களைக் கொண்டிருப்பது அவசியமாகும். அத்தகைய அதிகார நிறுவனங்களாக, ஒவ்வொரு தொழிற்சாலையிலும், வேலைத் தளத்திலும், மருத்துவமனையிலும், பாடசாலையிலும், பல்கலைக்கழகத்திலும், பண்ணையிலும் தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்கள் அமைக்கப்பட்டு, சர்வதேச அளவில் அமைக்கப்படும் அத்தகைய குழுக்களுடன் கூட்டணியை அமைக்க வேண்டும்.
இந்தத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களை அமைப்பதற்கு முன்முயற்சி எடுக்குமாறு அனைத்து கல்விசாரா தொழிலாளர்களுக்கும் சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுக்கிறது.