முன்னோக்கு

பால்டிமோர் பாலம் பேரழிவு: இலாப உந்துதல் செலவுக் குறைப்பின் விளைவு

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

பால்டிமோரில் உள்ள  Francis Scott Key பாலம் இடிந்து விழுந்த சம்பவம் உலக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஒரு சில நொடிகளில், கொள்கலன்களை ஏற்றிச்சென்ற கப்பலான எம்.வி.டாலி மின்சார சக்தியை இழந்து பாலத்தின் நெடுவரிசை தூண் ஒன்றில் மோதியதில், ஒரு பெரிய அமெரிக்க நகரத்தின் மிகப்பெரிய பாலங்களில் ஒன்று படாப்ஸ்கோ ஆற்றில் விழுந்து நொறுங்கியது.

பால்டிமோர், எம்.டி.யில் பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலத்தின் இடிபாடுகளுக்கு இடையில் ஒரு கொள்கலன் கப்பல் நிற்கிறது. மார்ச் 27, 2024 புதன்கிழமை. [AP Photo/Matt Rourke]

இதை எழுதிக் கொண்டிருக்கையில், செவ்வாய்க்கிழமை இரவு தேடுதல் மற்றும் மீட்புக் குழுக்கள் அழைக்கப்பட்டிருந்தன. அதே நேரம் பாலத்தில் இருந்த ஆறு பராமரிப்புப் பணியாளர்கள் இறந்துவிட்டதாகக் கருதப்படுகிறது. இவர்கள் அனைவரும் மத்திய அமெரிக்காவிலிருந்து குடியேறிய தொழிலாளர்களாவர். இந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பங்களுக்கு பெருக்கெடுத்து வரும் பெருமளவிலான துயரமும் பரிவுணர்வும் உத்தியோகபூர்வ அரசியல் வட்டாரங்களில் தொடர்ந்து தூண்டிவிடப்படும் புலம்பெயர்ந்தோர்-விரோத தீய சூழ்நிலையுடன் கூர்மையாக முரண்படுகிறது.

இந்தப் பேரழிவு என்பது ஆழமான சமூக யதார்த்தத்தை அம்பலப்படுத்தும் நிகழ்வின் வகையாகும். கொள்கலன்களை ஏற்றிச்செல்லும் கப்பலுக்கும் பாலத்திற்கும் இடையிலான மோதல், தனியார் இலாபத்திற்கும் அத்தகைய பேரழிவுகளைத் தடுப்பதற்கான தொழில்நுட்ப மற்றும் பொருளாதார வளங்களை தன் கைவசம் கொண்டுள்ள ஒரு நவீன சமுதாயத்தின் தேவைகளுக்கும் இடையிலான மோதலையும் அம்பலப்படுத்தியுள்ளது.

கடந்த அரை நூற்றாண்டில் உலக வணிகத்தில் ஏற்பட்டுள்ள மகத்தான வளர்ச்சியானது, ஒரு ஒருங்கிணைந்த உலகப் பொருளாதாரத்தின் தோற்றத்திற்கு வழிவகுத்தது. அது உற்பத்தியில் சர்வதேச ஒருங்கிணைப்பின் மூலம் உற்பத்தித்திறனில் மகத்தான அதிகரிப்பை சாத்தியமாக்கியுள்ளது. இந்த பொருளாதாரத்தின் முக்கிய முதுகெலும்புகளில் ஒன்று கப்பல் போக்குவரத்து ஆகும். இதில், தானியங்கு, கொள்கலன்மயமாக்கல் மற்றும் வரலாற்றில் மிகப்பெரிய கப்பல்களின் கட்டுமானம் போன்ற தொழில்நுட்ப முன்னேற்றங்கள் முன்பை விட மலிவானது. நவீன தரத்தின்படி “மட்டுமே” 95,000 மொத்த டன்கள் கொண்ட ஒப்பீட்டளவில் மிதமான அளவைக் கொண்ட கப்பலான டாலி, பூகோளத்தின் மறுபக்கத்தில் உள்ள இலங்கையின் கொழும்புக்கு சென்று கொண்டிருந்தது.

பத்திரிகைகளுக்கு கருத்துரைக்கையில், போக்குவரத்து செயலர் பீட் பட்டிகீக், “1970 களின் பிற்பகுதியில் கட்டி முடிக்கப்பட்ட இது போன்ற ஒரு பாலம், [இந்த அளவிலான] ஒரு கப்பலில் இருந்து, ஒரு முக்கியமான ஆதரவு தூண் மீது நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்போது, அதனைத் தாங்கும் வகையில் உருவாக்கப்படவில்லை. பாலம் முதலில் கட்டப்பட்ட நேரத்தில் அந்த பகுதியில் சேவையில் இருந்த சரக்கு கப்பல்களை விட பெரிய அளவிலான கப்பல்கள் தற்போது சேவையில் ஈடுபடுகின்றன” என்று அறிவித்தார்.

இது உண்மைதான், ஆனால் டாலி அளவுள்ள கப்பல்கள் தினமும் கடந்து செல்லும் பாலம் ஏன் இந்த ஆபத்தை சமாளிக்க மேம்படுத்தப்படவில்லை என்ற கேள்வியை எழுப்புகிறது. உலகெங்கிலும் உள்ள பாலங்கள் வாடிக்கையாக நீரில் மூழ்கி தூண்களை மூழ்கடிக்கின்றன, அல்லது அத்தகைய தாக்கங்களை கட்டுப்படுத்த அல்லது திசைதிருப்ப “டால்பின்கள்” மற்றும் பிற தடைகளை பயன்படுத்துகின்றன. 1980 ஆம் ஆண்டில் புளோரிடாவின் தம்பாவில் உள்ள ஸ்கைவே பாலத்தை தகர்த்து 35 பேரைக் கொன்ற இதேபோன்ற மோதலைத் தொடர்ந்து, பொறியாளர்கள் அத்தகைய எதிர் நடவடிக்கைகளுடன் பாலத்தை மீண்டும் கட்டினார்கள்.

பிரச்சனை தொழில்நுட்ப திறனின் பற்றாக்குறை அல்ல. ஆனால் அதற்கு பதிலாக, இந்த உலகளாவிய உள்கட்டமைப்பின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான ஆதாரவளங்கள், அதை கட்டுப்படுத்தும் நிதியியல் செல்வந்த தன்னலக்குழுவை பாதுகாக்கவும் செழிப்பாக்கவும் வளப்படுத்தவும் பயன்படுத்தப்படுகின்றன. கட்டிடத்துறை சார்ந்த பொறியியலாளர்களின் அமெரிக்க சமூகத்தின் 2021 மதிப்பீட்டின்படி, பாலங்களை பழுதுபார்ப்பதில் அமெரிக்கா $125 பில்லியன் டாலர்கள் நிலுவையை எதிர்கொள்கிறது. அமெரிக்காவின் பாலங்களில் கிட்டத்தட்ட பாதி 50 ஆண்டுகளுக்கும் மேலானவை மற்றும் 7 சதவீதத்திற்கும் அதிகமானவை மற்றும் பழுதடைந்த நிலையில் உள்ளன.

ஆனால், இந்த சனிக்கிழமை தான், ஜனாதிபதி பைடென் 1.2 ட்ரில்லியன் டாலர் செலவின மசோதாவில் கையெழுத்திட்டார், இதில் மூன்றில் இரண்டு பங்கு, அல்லது 825 பில்லியன் டாலர் இராணுவத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. காஸாவில் பத்தாயிரக் கணக்கானவர்கள் மற்றும் உக்ரேனில் நூறாயிரக் கணக்கானவர்கள் உட்பட உலகெங்கிலும் மில்லியன் கணக்கானவர்களைக் கொன்று தள்ளுகின்ற அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் குற்றகரமான நிறுவனங்கள் என்று வரும்போது எந்த செலவையும் அவை விட்டுவைக்கப்படவில்லை. எந்த நேரத்திலும் வோல் ஸ்ட்ரீட்டில் பணம் தீர்ந்துவிடும் போதெல்லாம், அரசாங்கம் கிட்டத்தட்ட ஒரே இரவில் டிரில்லியன் கணக்கான டாலர்களை அதற்குள் பாய்ச்சுகிறது.

எப்பொழுதும் போல, இரக்கமற்ற செலவு-வெட்டுக்கள் மற்றும் அப்பட்டமான பெருநிறுவன குற்றகரத்தன்மை கூட இந்த மோதலில் உடனடி பாத்திரம் வகித்திருக்கலாம். டாலியின் திடீர் மின்சார சக்தி இழப்பு கப்பலின் நிலை குறித்து கடுமையான கேள்விகளை எழுப்புகிறது. ஏற்கனவே 2016 இல் இந்தக் கப்பல் விபத்துக்கு உள்ளாகியதுடன், சமீபத்தில்தான் கப்பலின் உந்துவிசை சிக்கல்கள் சுட்டிக் காட்டப்பட்டது.

இந்த கப்பலை ஒப்பந்தம் செய்த உலகளாவிய கப்பல் நிறுவனமான மெர்ஸ்க், இரகசியங்களை அம்பலப்படுத்துபவர்களை மௌனமாக்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு சட்டவிரோத கொள்கைக்காக, தொழிற் துறையால் சமீபத்தில் சுட்டிக்காட்டப்பட்டது என்று ஜனநாயக சார்பு செய்தி தளமான தி லீவர் தெரிவித்துள்ளது. போயிங் 737-மேக்ஸ் விமானங்கள் சம்பந்தப்பட்ட பல பேரழிவுகளுக்கு வழிவகுத்த உற்பத்தி மற்றும் வடிவமைப்பு குறைபாடுகள் தொடர்பாக போயிங் நிறுவனத்தில் நடந்து வரும் பாரிய ஊழலுக்கு மத்தியில், இந்த மோதல் விபத்து வந்துள்ளது. இம்மாத தொடக்கத்தில் போயிங் இரகசியங்களை அம்பலப்படுத்திய ஜோன் பார்னெட்டின் விளக்கப்படாத “தற்கொலை”யானது, ஆளும் வர்க்கம் அதன் நலன்களைப் பாதுகாக்க எந்த அளவிற்கு ஈவிரக்கமற்ற தன்மையுடன் தயாரிப்பு செய்து வருகிறது என்பதற்கான ஒரு அறிகுறியாகும்.

அதன் செல்வவளத்தின் பெரும்பகுதி பெருநிறுவன செல்வந்த தட்டுக்களால் வீணடிக்கப்படுவதால், பால்டிமோரில் நடந்ததைப் போன்ற பேரழிவுகள் “பூமியின் பணக்கார நாட்டில்” அன்றாட யதார்த்தமாக உள்ளன. 2005 இல் கத்ரீனா சூறாவளி முதல், 2010 இல் பிரிட்டிஷ் பெட்ரோலிய எண்ணெய்க் கசிவு, 2014 இல் தொடங்கிய பிளின்ட் நீர் நெருக்கடி, 2023 இல் கிழக்கு பாலஸ்தீனத்தில் ரயில் தடம் புரண்டது மற்றும் போயிங் நிறுவனத்தில் நடந்து வரும் ஊழல் வரை, பெருநிறுவன லாபவெறி மற்றும் உள்கட்டமைப்பை புறக்கணித்தல் என்பன ஒன்றன் பின் ஒன்றாக பேரழிவுக்கு வழிவகுத்துள்ளன. ஒவ்வொரு முறையும், தொழிலாள வர்க்கம் இதற்கான செலவைத் தோளில் சுமக்க தள்ளப்படுகிறது. அதே நேரத்தில், அரசாங்கம் கார்ப்பரேட் குற்றவாளிகளை எந்தப் பொறுப்பிலிருந்தும் பாதுகாக்க நகர்கிறது.

இதன் மிகவும் கொடூரமான வெளிப்பாடு தற்போதைய கொரோனா வைரஸ் தொற்றுநோய் ஆகும். “சிகிச்சை நோயை விட மோசமாக இருக்க முடியாது” என்ற மந்திரத்தின் கீழ், கோவிட்-19 க்கு விடையிறுப்பாக, போதிய பொது சுகாதார நடவடிக்கைகள் 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தொடங்கிய உடனேயே அரசியல் ஸ்தாபகம் அவற்றை மூடத் தொடங்கியது. கடந்த ஆகஸ்டில் இருந்து ஒவ்வொரு வாரமும் கோவிட்-19 பெரும்தொற்று, குறைந்தது 1,000 அமெரிக்கர்களைக் கொன்று வருகின்ற போதிலும், அரசாங்கமும் பெருநிறுவன ஊடகங்களும் இந்த தொற்றுநோய் எப்போதோ முடிந்து விட்டதாக பொய்யாக கூறுகின்றன.

விபத்திலிருந்து பாதுகாக்கும் செலவினங்களுக்கு நிதியை ஒதுக்காத நிலையில், ஆளும் வர்க்கம் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் விநியோகச் சங்கிலிகளில் தானியங்கிமயமாக்கல் மூலம் வேலைகளை அகற்றுவதை நோக்கமாகக் கொண்டு பல்லாயிரக்கணக்கான பில்லியன்களை முதலீடு செய்கிறது. கப்பல் துறையில், துறைமுக வசதிகளில் பாரிய முதலீடுகள், செலவுக் குறைப்பினால் தவிர்க்க முடியாத விபத்துக்களால் அச்சுறுத்தப்படுவது மட்டுமல்லாமல், வேலை நிறுத்தங்களின் போது தொழிலாள வர்க்கத்தால் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தக்கூடிய விநியோகச் சங்கிலித் தடைகளை நீக்குவதையும் ஆளும் வர்க்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஜோர்ஜியாவின் பிரன்ஸ்விக் துறைமுகத்தில் தற்போது பாரிய முதலீடுகள் நடந்து வருகின்றன. இது, இந்த சிறிய நகரத்திற்கு பதிலாக பால்டிமோரை நாட்டின் மிகப்பெரிய வாகன துறைமுகமாக மாற்றுவதற்கு இட்டுச் செல்லும். இதேபோன்ற முதலீடுகள் நாடெங்கிலும் உள்ள துறைமுகங்களில், குறிப்பாக அட்லாண்டிக் தெற்கில் செய்யப்படுகின்றன.

தொற்றுநோயைப் போலவே, ஆளும் வர்க்கமும் பால்டிமோர் பால உடைவை ஒரு பிரத்யேக பொருளாதார நிகழ்வாக பார்க்கும். பால்டிமோர் துறைமுகம் மூடப்படுவது அமெரிக்க வாகன நிறுவனங்களின் உலகளாவிய செயல்பாடுகளை ஆபத்திற்கு உட்படுத்துகிறது. இவை வளர்ந்து வரும் மின்சார வாகன சந்தையின் மீதான கட்டுப்பாட்டின் மீது அவற்றின் சீன போட்டியாளர்களுடன் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இந்தப் பாலம் பிராந்தியத்தின் பொருளாதாரத்தில் ஒரு முக்கியமான நாடியாகவும், முக்கியமான ஸ்பாரோஸ் தொழில்துறை பகுதியுடன் இணைக்கப்பட்டதாகவும் இருந்தது.

ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை வெளிநாடுகளுக்கு நகர்த்துவதற்கு முக்கியமான அமெரிக்க துறைமுகத்தை மூடுவதற்கு இராணுவ தாக்கங்களும் உள்ளன. பைடென் நிர்வாகம் இரண்டாம் உலகப் போரின் போது பொருளாதார அணிதிரட்டலை பலமுறையும் மேற்கோள் காட்டி, ரஷ்யா மற்றும் சீனாவிற்கு எதிராக இயக்கப்படும் ஒரு புதிய உலகப் போருக்காக ஒட்டுமொத்த அமெரிக்க பொருளாதாரத்தையும் ஒரு போர் நிலைப்பாட்டில் வைக்கும் நோக்கத்தை கொண்டுள்ளது என்பதை வலியுறுத்துகிறது.

தொழிற்சங்க அதிகாரத்துவம் இராணுவ-தொழில்துறை கூட்டின் ஒரு முக்கிய விரிவாக்கமாக உள்ளது. பால்டிமோர் உட்பட கிழக்கு கடற்கரையில் 40,000 க்கும் மேற்பட்ட துறைமுகத் தொழிலாளர்களுக்கான ஒப்பந்தம் செப்டம்பர் இறுதியில் காலாவதியாகிறது. சர்வதேச நெடுங்கடலோர தொழிலாளர்கள் சங்கம் (ILA), ஆழ்ந்த கோபத்தை எதிர்கொள்ளும் பொருட்டு, அதற்குள் ஒரு புதிய ஒப்பந்தம் இல்லை என்றால் வேலைநிறுத்தம் செய்வதாக சூளுரைத்துள்ளது. ஆனால், கடந்த ஆண்டு மேற்கு கடற்கரை துறைமுகங்களில் நடந்தது போல் மற்றொரு விற்றுத்தள்ளலை சுமத்த பைடென் நிர்வாகத்துடன் தொழிற்சங்க அதிகாரத்துவம் ஒத்துழைக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. அவர்களது தீவிரமான தோரணையானது, டீம்ஸ்டர்ஸ் மற்றும் ஐக்கிய வாகன தொழிலாளர்கள் சங்கம் கடந்த ஆண்டு பெரும் வேலை வெட்டுக்களுக்கு வழிவகுத்த உடன்பாடுகளை திணிப்பதற்கு முன்னர் கூறிய கூற்றுக்களையும் பிரதிபலிக்கிறது.

எதையும் செய்து முடிக்கும் அளவிற்கு, பொருளாதார நடவடிக்கைகளை விரைவாக இயல்பு நிலைக்குத் திரும்பச் செய்வதே அதன் இலக்காக இருக்கும். உடனடி நிகழ்வில், பால்டிமோரில் இருந்து மற்ற துறைமுகங்களுக்கு பாரிய வேகம் மற்றும் தொழிலாளர்களின் கட்டாய கூடுதல் வேலை நேரம் மூலம் சரக்குகள் மாற்றியமைக்கப்படும்.

இதற்கு மாறாக, இந்த பேரழிவுக்கு தொழிலாள வர்க்கத்தின் விடையிறுப்பு, வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களின் மேலாதிக்கத்திற்கு எதிராகப் போராடுவதாக இருக்க வேண்டும். இதுபோன்ற பேரழிவுகள் முதலாளித்துவ சந்தையின் அராஜகத்தால் தவிர்க்க முடியாத வகையில் ஏற்படுகின்றன. அவை சமூகத் தேவைகளால் அல்லாமல் தனியார் இலாப நலன்களால் உந்தப்படுகின்றன. போர் மற்றும் வோல் ஸ்ட்ரீட்டில் வீணடிக்கப்படும் டிரில்லியன் கணக்கான பணம் அனைவருடைய தேவைகளையும் பூர்த்தி செய்ய பயன்படுத்தப்பட வேண்டும்.

அதற்கு சமூகத்தை சோசலிச ரீதியில் மறுஒழுங்கமைப்பதற்கான தொழிலாள வர்க்கத்தின் போராட்டம் தேவைப்படுகிறது. பெருநிறுவனங்கள் மீதான தனியார் உடைமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். மாறாக, அவை தொழிலாள வர்க்கத்தாலேயே ஜனநாயக ரீதியில் பொது பயன்பாடுகளாக நடத்தப்பட வேண்டும்.

சோசலிசத்திற்கான போராட்டமும் அடிப்படையில் ஒரு சர்வதேச போராட்டமாகும். இன்று அனைத்து சமூக பிரச்சனைகளும் சர்வதேச பிரச்சனைகள், உலகளாவிய பிரச்சனைகள், தேசிய தீர்வுகள் அல்ல என்ற உண்மையை டாலி கப்பல் (சிங்கப்பூர் நிறுவனத்தால் நடத்தப்படும் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள், டென்மார்க் நிறுவனமான மார்ஸ்க் மூலம் ஒப்பந்தம் செய்யப்பட்டு, அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு பயணித்தது) வெளிப்படுத்துகிறது. ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்தின் மூலம் மட்டுமே இத்தகைய பேரழிவுகளுக்கு முடிவுகட்ட முடியும்.

Loading