மார்ச் 5 அன்று, ஐரோப்பிய ஒன்றிய ஆணையம், பாரிய ஆதார வளங்களை ஆயுதத் தொழில்துறைக்கு திருப்பிவிட்டு, ஐரோப்பிய ஒன்றிய பொருளாதாரத்தை ஒரு போர் நிலைப்பாட்டில் வைக்கும் ஒரு நீண்டகால திட்டத்தை ஏற்றது. இராணுவத்தின் கட்டளையைச் சுற்றி உற்பத்தியை மறுகட்டமைப்பு செய்ய பரந்த அதிகாரங்களை அது வலியுறுத்துகிறது, “புதிய தகைமைகளில் முதலீடு செய்யும் ஒரு தொழில்துறை மற்றும் தேவைப்படும் போதெல்லாம் ஒரு ‘போர்க்கால’ பொருளாதார மாதிரிக்கு மாற தயாராக இருப்பது இன்றியமையாதது,” என்று வாதிடுகிறது.
நேட்டோ ஆதரவிலான உக்ரேனிய இராணுவத்தின் இரத்தந்தோய்ந்த தோல்விக்கு ஐரோப்பிய சக்திகள் விடையிறுக்கையில், நீண்ட தூர ஏவுகணைத் தாக்குதல்கள் மற்றும் ரஷ்யாவை எதிர்த்துப் போராட உக்ரேனுக்கு ஐரோப்பிய துருப்புகளை பகிரங்கமாக அனுப்புவது உட்பட முடிவற்ற இராணுவ தீவிரப்பாட்டைக் கொண்டு ரஷ்யாவை அச்சுறுத்தி வருகின்ற நிலையில் இந்தத் திட்டம் தோன்றியது. அணு ஆயுதங்களுடன் ரஷ்ய நெருப்புடன் விளையாடும் இந்த பொறுப்பற்ற தீவிர நிலைப்பாடு, ஐரோப்பா முழுவதிலும் முதலாளித்துவ வர்க்கத்தின் வர்க்கப் போரைத் தீவிரப்படுத்துவதுடன் பிரிக்கவியலாமல் பின்னிப்பிணைந்துள்ளது என்பதை ஐரோப்பிய ஒன்றியத்தின் திட்டம் எடுத்துக்காட்டுகிறது.
பெயரளவிலான சமாதான காலத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 2 சதவீதத்திற்கு இராணுவச் செலவுகளை உயர்த்துவதற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு இந்தத் திட்டம் அழைப்பு விடுக்கிறது. ஒரு தசாப்தத்திற்கும் அதிகமான காலத்தில், ஐரோப்பிய ஒன்றியம் ஆயுத அமைப்புமுறைகளில் “சுமார் 1.1 ட்ரில்லியன் யூரோ பாதுகாப்புக்காக, இதில் சுமார் 270 பில்லியன் யூரோ முதலீட்டிற்காக” செலவிட முடியும் என்று அது குறிப்பிடுகிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் 100 பில்லியன் யூரோவாக அதிகரிக்கப்படவுள்ள 1.5 பில்லியன் யூரோ அவசரகால அவசரகால நிதியையும் அது ஸ்தாபிப்பதுடன், தனியார் முதலீட்டுக்கு அழைப்பு விடுக்கிறது: “ஐரோப்பிய ஒன்றியத்தின் நீடித்த நிதி கட்டமைப்பின் கீழ், எந்த ஐரோப்பிய ஒன்றிய ஆட்சியும் அல்லது எந்தவொரு ஐரோப்பிய ஒன்றியத் திட்டமிட்ட விதியோ, பாதுகாப்புத் தொழில்துறையில் தனியார் முதலீட்டைத் தடுக்காது.”
இராணுவத்திற்கு ட்ரில்லியன் கணக்கான யூரோக்களை செலவிட, ஐரோப்பிய ஒன்றியமானது சமூக திட்டங்கள் மற்றும் வாழ்க்கை தரங்கள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களுக்கு தயாரிப்பு செய்து வருகிறது. சென்ற ஆண்டு, 2030 வரையில் பிரெஞ்சு இராணுவ செலவினத்தில் 100 பில்லியன் யூரோ அதிகரிப்புக்கு நிதியாதாரம் திரட்டுவதற்காக, மக்ரோன் மிகப் பெரியளவில் மக்கள் மதிப்பிழந்த ஓய்வூதிய வெட்டைத் திணித்தார், இது மில்லியன் கணக்கான தொழிலாளர்களின் பாரிய வேலைநிறுத்தங்களையும் போராட்டங்களையும் தூண்டியது. எவ்வாறிருப்பினும், ஐரோப்பிய ஒன்றியம் இராணுவத்தின் மீது இன்னும் பரந்த ஆதாரவளங்களை செலவிட அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்த நகர்ந்து வருகிறது என்பதால், இதுபோன்ற தொகைகள் வெறுமனே ஒரு ஆரம்ப முற்பணம் மட்டுமே ஆகும்.
ஐரோப்பிய ஒன்றிய ஆயுத உற்பத்தியாளர்களின் விநியோகச் சங்கிலிகள் மற்றும் உற்பத்தியை மேற்பார்வையிடும் ஓர் ஒருங்கிணைப்பு அமைப்பாக ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தை மாற்ற இந்தத் திட்டம் முன்மொழிகிறது. அது இவ்வாறு ஆணையிடுகிறது, “ஆணைக்குழு ... ஐரோப்பிய ஒன்றிய ஆயுத உற்பத்தியாளர்களால் உருவாக்கப்பட்ட பாதுகாப்பு தயாரிப்புகளின் ஒற்றை, மையப்படுத்தப்பட்ட, புதுப்பித்த பட்டியலை நிறுவுவதை நோக்கி செயல்படும். இது “மின்னணு பாகங்கள் மற்றும் மூலப்பொருட்கள் போன்ற அடிப்படை கூறுகளின் தொழில்துறை மூலோபாய கையிருப்புக்கு” நிதியளிக்கவும் உதவும்.
சர்வதேச நெருக்கடிகளின் சம்பவத்தில், படைத்துறைசாரா உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது, ஐரோப்பிய பொருளாதார உற்பத்தியை கட்டுப்படுத்தவும் மற்றும் போரை நோக்கி மறுநோக்கு நிலைப்படுத்தவும் ஐரோப்பிய ஆணையம் மற்றும் கவுன்சிலுக்கு பரந்த அவசரகால அதிகாரங்களை வழங்குவதே திட்டத்தின் மிகவும் கடுமையான விதிகள் ஆகும். ஐரோப்பிய கவுன்சில் என்பது ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் அரசுத் தலைவர்களின் சபையாகும், அதே நேரத்தில் ஆணையம் ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய நிர்வாகக் குழுவாகும்.
இத்திட்டம் இரண்டு வகையான நெருக்கடிகளில் அவசரகால அதிகாரங்கள் செயல்படுத்தப்படும் என்று அடையாளம் கண்டுள்ளது. முதலாவது, மைக்ரோசிப்கள் போன்ற மூலப்பொருட்கள் அல்லது பாகங்களின் முக்கிய விநியோகங்களில் பற்றாக்குறை காரணமாக இராணுவ உற்பத்தியின் நெருக்கடி ஆகும். இந்த நிலைமைகளின் கீழ், திட்டம் குறிப்பிடுகிறது, “ஒரு ‘நெருக்கடி அரசை’ கவுன்சில் செயல்படுத்துவது... சில அல்லது அனைத்து பொதுமக்கள் விநியோகங்களுக்கும் முன்னுரிமை அளிப்பதை உறுதி செய்வதன் மூலம், தேவைப்படும் மற்றும் பொது நலனால் நியாயப்படுத்தப்படும் இடங்களில், பாதுகாப்பு விநியோகச் சங்கிலிகளுக்கான சம்பந்தப்பட்ட கூறுகள் மற்றும் / அல்லது மூலப்பொருட்களின் விநியோகத்தை உறுதி செய்யும்.”
படைத்துறைசாரா உற்பத்தியை விட இராணுவத்திற்கு இன்னும் கடுமையான முன்னுரிமை “பாதுகாப்பு நெருக்கடிகளில்” நடக்கும் என்று அந்த திட்டம் குறிப்பிடுகிறது: “இதுபோன்ற காட்சிகளை முகங்கொடுக்க, நெருக்கடியைத் தீர்ப்பதற்கு அவசியமான மற்றும் விகிதாசார நடவடிக்கைகளை (பெரும்பாலும் இராணுவ பயன்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்ட பொருட்களின் விநியோகத்தின் மீது ஒருங்குவிப்பு) மேற்கொள்ள நெருக்கடி அரசின் இரண்டாவது, உயர்மட்ட நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறு கவுன்சிலுக்கு வழங்கப்பட வேண்டும்.”
போர் உற்பத்திக்காக “படைத்துறைசாரா உற்பத்தி வழிகளை சாத்தியமான வகையில் மறுபயன்பாட்டிற்கு” தயார் செய்வதற்கும், மற்றும் தொழில்துறை “ஐரோப்பிய ஒன்றியத்தில் தயாரிக்கப்பட்ட பாதுகாப்பு தயாரிப்புகளின் விநியோக நேரத்தை விரைவுபடுத்துவதற்கும்” இந்த திட்டம் அழைப்பு விடுக்கிறது. சுருக்கமாக கூறுவதானால், இது, இராணுவ செலவினங்களை பாரியளவில் அதிகரிப்பதற்கும், படைத்துறைசாரா தேவைகளில் இருந்து உற்பத்தியை திசைதிருப்புவதற்கும், தொழிலாளர்கள் மீது சுரண்டலை அதிகரிப்பதற்கும், தீவிரப்படுத்துவதற்கும், மற்றும் பொருளாதாரத்தின் மீதான கட்டுப்பாட்டை அதிகாரிகள் படைப்பிரிவிடம் ஒப்படைப்பதற்குமான ஒரு திட்டமாகும்.
இது பெயரைத் தவிர இராணுவ சர்வாதிகாரத்தைத் திணிப்பதுடன், பரந்த தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்களில் ஒரு பொறிவுக்கான ஒரு செய்முறையாகும். ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழுவின் திட்டம், உக்ரேனில் நேட்டோ-ரஷ்யா போரைக் கையிலெடுப்பதன் மூலமாக அதுபோன்ற கொள்கைகளை சிடுமூஞ்சித்தனமாக நியாயப்படுத்த முயற்சிக்கிறது.
உக்ரேனில் உள்ள நேட்டோ கைப்பாவை ஆட்சியை, “பாதுகாப்பு தொழில்துறை துறையில் ஒன்றியத்தின் ஒரு முக்கிய பங்காளியாக” இந்த திட்டம் பாராட்டுகிறது. உக்ரேனின் ஆயுத தொழில்துறை, “போரின் முடிவில் நாட்டின் பொருளாதார மீட்சிக்கான இயந்திரங்களில் ஒன்றாக எழும் மற்றும் பாதுகாப்பு தொழில்துறை தயார்நிலைக்கான ஒரு சோதனைக் களமாக வெளிப்படும். ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் உக்ரேனிய பாதுகாப்பு தொழில்துறை துறைகளுக்கும் இடையிலான ஒரு நெருக்கமான கூட்டுறவு, உக்ரேனுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிர்கால பாதுகாப்பு கடமைப்பாடுகளின் பாகமாக இருக்கும்.”
ஐரோப்பிய ஒன்றிய திட்டமானது அதன் முடிவில், ஐரோப்பிய ஒன்றிய இராணுவமயமாக்கல் மற்றும் உக்ரேன் மீதான 2022 ரஷ்ய படையெடுப்பு என்று கூறப்படுவதற்கு ஒரு விடையிறுப்பாகும் என்ற அலுத்துப்போன பொய்யை முன்னெடுக்கிறது. “பல தசாப்தங்களாக ஒன்றியத்தின் குடிமக்கள் முன்னெப்போதும் இல்லாத அமைதியான காலத்தை அனுபவித்துள்ளனர். எவ்வாறிருப்பினும், உக்ரேனுக்கு எதிரான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு போரும், அத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் நுழைவாயில்களில் அதிகரித்து வரும் பதட்டங்களும், ஐரோப்பிய ஒன்றியமும் அதன் உறுப்பு நாடுகளும் மூலோபாய பொறுப்பை ஏற்கவும் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய பாதுகாப்புத் தொழில்துறைக்கு பலம் அளிக்கவும் அழைப்பு விடுக்கின்றன,” என்று திட்டம் குறிப்பிடுகிறது.
இது பொய்களின் மூட்டையாகும். யதார்த்தத்தில், 1991 இல் சோவியத் ஒன்றியம் ஸ்ராலினிசத்தால் கலைக்கப்பட்டதற்குப் பிந்தைய தசாப்தங்கள் பெருகிவரும் ஏகாதிபத்தியப் போர் மற்றும் சமூக சிக்கன நடவடிக்கைகளின் ஆண்டுகளாக இருந்தன. ஐரோப்பிய நேட்டோ நாடுகள் அவற்றின் ஆயுதப் படைகளை மிகப் பெரியளவில் அதிகரிக்க நிதிகளை பாய்ச்சிய நிலையில், ஈராக், யூகோஸ்லாவியா, ஆப்கானிஸ்தான், லிபியா, சிரியா, மாலி மற்றும் அதற்கு அப்பாலும் நேட்டோ சூறையாடும் போர்களை நடத்தியது. உக்ரேன் மீதான ரஷ்யாவின் 2022 படையெடுப்பானது, ஐரோப்பா அதன் வருடாந்திர இராணுவ செலவினங்களை கிட்டத்தட்ட 100 பில்லியன் யூரோ அளவுக்கு அதிகரித்து, ரஷ்யா மீதான தாக்குதல்களுக்கான ஒரு இராணுவ தளமாக உக்ரேனை கட்டியெழுப்பிய ஒரு தசாப்தத்திற்குப் பின்னர் வந்தது.
முதலாளித்துவம் ஒரு மூன்றாம் உலக போருக்குள் மூழ்கி வருகின்ற நிலையில், ஏகாதிபத்திய சக்திகள் ரஷ்யாவிடம் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள நோக்கம் கொண்டிருக்கவில்லை, மாறாக உலகப் பொருளாதாரத்தில் இருந்து எவ்வளவு சூறையாட முடியுமோ அவ்வளவு சூறையாடலைக் கைப்பற்ற போட்டியிட்டு வருகின்றன. இதனால் தான், அமெரிக்காவும் பெரும்பாலான ஐரோப்பிய ஒன்றிய அரசுகளும் பெயரளவிற்கு நேட்டோ கூட்டாளிகளாக இருந்தாலும் கூட, ஐரோப்பிய ஒன்றிய இராணுவத் திட்டம் வாஷிங்டனுடன் போட்டியிடும் நோக்கம் கொண்ட ஒரு வரிசையான நடவடிக்கைகளைக் கொண்டிருக்கிறது.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இன்றும் கூட அவற்றின் பிரதான ஆயுத அமைப்புமுறைகளை அமெரிக்காவிடம் இருந்து பெருமளவில் வாங்குகின்றன என்று ஐரோப்பிய ஒன்றியத் திட்டம் புகார் கூறுகிறது. “ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு போர் தொடங்கியதற்கும் ஜூன் 2023 க்கு இடையில் ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடுகளால் கையகப்படுத்தப்பட்ட பாதுகாப்பு கொள்முதல்களில் 78 சதவீதம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியில் இருந்து செய்யப்பட்டவை, அமெரிக்கா மட்டுமே 63 சதவீதத்தை பிரதிநிதித்துவம் செய்தது” என்று அது குறிப்பிடுகிறது.
ஐரோப்பிய ஒன்றிய இராணுவங்கள் அவற்றின் தளவாடங்களில் பெரும்பான்மையை ஐரோப்பிய ஒன்றிய நிறுவனங்களிடம் இருந்து வாங்குவதை உறுதிப்படுத்துவதே ஐரோப்பிய ஒன்றிய இராணுவத் திட்டத்தின் ஒரு முக்கிய கூறுபாடாக உள்ளது. “2030 க்குள் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் அவற்றின் பாதுகாப்பு முதலீடுகளில் குறைந்தபட்சம் 50 சதவீதத்தையும் 2035 க்குள் 60 சதவீதத்தையும் கொள்முதல் செய்வதை நோக்கி நிலையான முன்னேற்றத்தை எட்டுவதற்கு உறுப்பு நாடுகள் அழைக்கப்படுகின்றன” என்று அந்தத் திட்டம் குறிப்பிடுகிறது. இது நடைமுறையில் அமெரிக்க ஆயுத உற்பத்தியாளர்களை —அல்லது, பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறியதற்குப் பின்னர், அதன் ஆயுத உற்பத்தியாளர்களை— ஐரோப்பிய பாதுகாப்புச் சந்தையின் பெரும்பகுதியில் இருந்து வெட்டுவதற்கான ஒரு கொள்கையாகும்.
குறிப்பாக இந்தாண்டின் அமெரிக்க தேர்தல் மீது நிச்சயமற்ற தன்மை தொங்கிக் கொண்டிருக்கையில், இந்தக் கொள்கையானது அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்திற்கு இடையே ஆழமான, புறநிலைரீதியில் வேரூன்றிய மோதல்களைப் பிரதிபலிக்கிறது. முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து முதல்நிலைத் தேர்தல்களில் வெற்றி பெற்று வருகின்ற நிலையில், ட்ரம்ப் தேர்தலை நடத்துவாரா என்பதையும், இரண்டாவது பதவிக்காலத்திற்கு பதவியில் இருப்பாரா என்பதையும், அவர் தனது முதல் பதவிக்காலத்தில் செய்ததைப் போலவே ஐரோப்பா மீது வர்த்தக தடையாணைகளைத் திணிப்பதற்கு திரும்புவாரா என்பதிலும் ஐரோப்பிய ஆளும் வட்டாரங்களில் கேள்விகள் அதிகரித்து வருகின்றன.
இது, வாஷிங்டனிடம் இருந்து ஐரோப்பா இன்னும் சுதந்திரமான இராணுவக் கொள்கையைக் கோருவதற்கான ஐரோப்பிய ஒன்றிய ஆளும் ஸ்தாபகத்தில் அழைப்புகளைத் துரிதப்படுத்தி உள்ளது. நேற்று, ஜேர்மன் நிதி அமைச்சர் கிறிஸ்டியான் லிண்ட்னர் ட்ரம்பின் முதன்மை வெற்றிகளுக்கு இவ்வாறு கூறி எதிர்வினையாற்றினார்: “நாம் பாதுகாப்பில் சிறந்தவர்களாக இருக்க வேண்டும். ... வெள்ளை மாளிகையில் யார் அமர்ந்திருக்கிறார்கள் என்பதிலிருந்து முற்றிலும் சுயாதீனமாக, நேட்டோவின் உள்ளடக்கத்தில் நமது பாதுகாப்பு தகைமைகளில் நாம் முதலீடு செய்ய வேண்டும்,” என்றார்.
பிரெஞ்சு நிதியியல் நாளேடான லே எக்கோ (les Echos), பிரிட்டனின் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியின் ஒரு அறிக்கையை மேற்கோளிட்டு, அமெரிக்காவுக்கான அதன் ஏற்றுமதிகள் மீதான சுங்கவரி விதிப்பு குறித்த ட்ரம்பின் அச்சுறுத்தல்களுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் பலவீனத்தை சுட்டிக்காட்டியது. 2008 வோல் ஸ்ட்ரீட் பொறிவுக்குப் பின்னர், ஐரோப்பிய ஒன்றியத்துடனான அமெரிக்க வர்த்தக பற்றாக்குறைகள் தொடர்ந்து அதிகரித்து, 2023 இல் 215 பில்லியன் யூரோவை எட்ட இரண்டு மடங்கிற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. ரஷ்ய இயற்கை எரிவாயு கொள்முதல் செய்வதை நிறுத்தியதன் மூலமாக உக்ரேனிய போருக்கு ஐரோப்பிய ஒன்றியம் எதிர்வினையாற்றிய பின்னர், நெருக்கடி நிலைமைகளின் கீழ் அமெரிக்க திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவுக்கு வாஷிங்டனால் ஐரோப்பாவிடம் பத்து பில்லியன் கணக்கான யூரோக்களை மிக உயர்ந்த விலையில் வசூலிக்க முடியாமல் போயிருந்தால் இந்த தொகை இன்னும் அதிகமாக இருந்திருக்கும்.
“டொனால்ட் டிரம்ப் தனது முதல் பதவிக்காலத்தில், அமெரிக்க வர்த்தக பற்றாக்குறையைக் குறைப்பதை முன்னுரிமையாகவும், ஐரோப்பாவை ஒரு முக்கிய இலக்காகவும் ஆக்கினார்” என்று லே எக்கோ எழுதியது. ஐரோப்பாவுடனான அமெரிக்க வர்த்தக பற்றாக்குறை தொடர்ந்து அதிகரித்து வருகின்ற நிலையில், சுங்கவரி விதிப்பைக் கொண்டு, குறிப்பாக அமெரிக்காவுக்கான ஜேர்மன் ஏற்றுமதிகளை இலக்கில் வைப்பதன் மூலமாக, “ட்ரம்ப் மீண்டும் இந்த சமநிலையின்மையை சரிசெய்ய விரும்புவார் என்றே தெரிகிறது” என்பதையும் அது சேர்த்துக் கொண்டது.
எவ்வாறிருப்பினும், அனைத்து திசைகளிலும் போர் தொடுக்க தயாராக இருக்கும் ஒரு இராணுவமயப்பட்ட ஆட்சியை நிறுவுவதற்கு தயாரிப்பு செய்ய, ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கத்தின் விடையிறுப்பு, முற்றிலும் பிற்போக்குத்தனமானதாகும். மனிதகுலத்தை அணு ஆயுதப் போரின் விளிம்பிற்கு அழுத்துவதில் அது ஒரு முக்கிய பாத்திரம் வகிக்கிறது. மூன்றாம் உலகப் போருக்குள் ஐரோப்பா தீவிரமடைந்து உருக்குலைந்து வருவதையும், ஒரு இராணுவ-பொலிஸ் அரசு ஆட்சி தீவிரமடைந்து வருவதையும் எதிர்த்து, போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்கள் மூலம் சாத்தியமானளவுக்கு பரந்த எதிர்ப்புக்களை அணிதிரட்ட வேண்டும்.