பிராக்கில், பிரெஞ்சு ஜனாதிபதி மக்ரோன் உக்ரேனுக்கு ஐரோப்பிய துருப்புக்களை அனுப்புவதற்கு மீண்டும் அழைப்பு விடுகிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

செக் குடியரசின் ஜனாதிபதி பீட்டர் பாவெல், இடதுபக்கத்தில், செக் குடியரசின் பிராக்கில் உள்ள பிராக் கோட்டையில் தனது பிரெஞ்சு சகாவான இம்மானுவேல் மக்ரோனை வரவேற்கிறார். [AP Photo/Petr David Josek]

நேற்று, பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் அணு சக்தி மீதும் மற்றும் உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான நேட்டோ போரைத் தீவிரப்படுத்துவது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்த செக் தலைநகருக்கு பயணித்தார்.

உக்ரேனில் ரஷ்யாவை எதிர்த்துப் போராட ஐரோப்பிய துருப்புகளை அனுப்புவதற்கான மக்ரோனின் அழைப்புக்கு, ஐரோப்பாவில், பிரெஞ்சு மக்களில் 68 சதவீதத்தினரும் 80 சதவீத ஜேர்மனியர்களும் பாரிய மக்கள் எதிர்ப்பைக் காட்டுகின்றனர். ரஷ்யாவில் உள்ள இலக்குகள் மீது தாக்குதல் நடத்துவதற்காக நீண்ட தூர டாரஸ் கப்பல் ஏவுகணைகளை உக்ரைனுக்கு அனுப்ப ஜேர்மன் இராணுவம் திட்டமிட்டுள்ளதாக வெளியான பின்னர் இது வந்துள்ளது. எவ்வாறிருந்த போதினும், மக்ரோன் இந்த மலைப்பூட்டும் பொறுப்பற்ற முன்மொழிவுகளை இரட்டிப்பாக்கினார், இவை அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது உட்பட நேட்டோ மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான மூன்றாம் உலகப் போரைத் தீவிரப்படுத்துவதற்கான பாதையைத் திறந்து விடுகின்றன.

செக் குடியரசு ஜனாதிபதி பீட்டர் பாவெலுடன் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எனது கருத்துக்கள் தெளிவானவை, சிந்திக்கப்பட்டவை மற்றும் துல்லியமானவை. ... ஐரோப்பிய மண்ணில் போர் மீண்டும் வந்துள்ளது என்பதை இரண்டு ஆண்டுகளாக ஒவ்வொரு பத்திரிகையாளர் கூட்டத்திலும் நாங்கள் மீண்டும் கூறி வந்திருக்கிறோம். நாங்கள் ஏற்கனவே எவ்வளவு இராணுவ தளவாடங்களை வழங்கியுள்ளோம், ஏற்கனவே எவ்வளவு செலவழித்துள்ளோம் என்பதை வெளிப்படுத்தியுள்ளோம். இது நமது போரா, இல்லையா?”

உண்மையில், பிரெஞ்சு மக்களில் மிகப் பெரும்பான்மையினர் இது தங்கள் போர் என்று நினைக்கவில்லை. ஆனால் மக்ரோன் பொதுமக்கள் கருத்தை அலட்சியமாக நிராகரித்தார், அதற்கு பதிலாக உக்ரேனுக்கு பீரங்கிகள் மற்றும் குண்டுகளை அனுப்ப அமெரிக்கா மற்றும் செக் குடியரசுடன் பிரான்ஸ் இப்போதிருக்கும் பங்காண்மையைத் தீவிரப்படுத்த அழைப்பு விடுத்தார். அவர் கூறினார், “கோழைத்தனமாக இருக்காமல் இருப்பது பொருத்தமாக இருக்கும் ஐரோப்பாவில் நாம் ஒரு காலகட்டத்தில் இருக்கிறோம்.”

அவரது கொள்கையானது அணு ஆயுத போர் அபாயத்தை கொண்டிருப்பதாக மக்ரோன் ஒப்புக் கொண்டார், ஆனால் சிடுமூஞ்சித்தனமாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் மீது பழி சுமத்தினார். “நாம் என்ன சொன்னாலும், என்ன செய்தாலும், அணு ஆயுதங்களைப் பயன்படுத்த யார் அச்சுறுத்துகிறார்கள்? ஜனாதிபதி புட்டின் ஆவார். நீங்கள் அனைவரும், அவரிடம் திரும்பி, அவரது மூலோபாய வரம்புகள் என்ன என்று கேளுங்கள். ஆனால் ஒவ்வொரு நாளும் நமது வரம்புகள் என்ன என்பதை விளக்கினால், எதுவுமே இல்லாத மற்றும் போரைத் தொடங்கிய ஒருவரை எதிர்கொண்டால், தோல்விவாதம் நம்மைத் துரத்துகிறது என்பதை நான் உங்களுக்குச் சொல்ல முடியும். ... நம்மைப் பின்தொடரும் செய்தியைப் பற்றி கவனமாக இருங்கள்” என்று கூறினார்.

மக்ரோனையும் ஏனைய நேட்டோ தலைவர்களையும் “பின்தொடர்வது” என்ன? ரஷ்யாவிற்கு எதிராக அவர்கள் ஆயுதமேந்திய உக்ரேனிய கைப்பாவை ஆட்சியானது ஒரு இராணுவப் படுதோல்வியால் பாதிக்கப்பட்டு நூறாயிரக்கணக்கான உக்ரேனியர்கள் இறந்துள்ளனர், உக்ரேனிய இராணுவம் அவ்டிவ்காவை இழந்தபின் பின்வாங்கியுள்ளது. மேலும், அவர்கள் அனைவரும் போரை விரிவாக்கும் தங்கள் திட்டங்கள் வெடிக்கும் மக்கள் எதிர்ப்பை எதிர்கொள்கின்றனர் என்பதை அவர்கள் அனைவரும் அறிவார்கள்.

ஆனால் எவ்வாறிருப்பினும், கிரெம்ளின் இறுதியில் மிரட்டப்பட்டு பின்வாங்கக்கூடும் என்று பந்தயம் கட்டி, அவர்கள் ரஷ்யா மீதான தாக்குதல்களைத் தீவிரப்படுத்த சதி செய்து வருகின்றனர். அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான புட்டினின் மூலோபாய வரம்புகள் பற்றி தனக்குத் தெரியாது என்று மக்ரோன் ஒப்புக் கொள்வதும், அத்துடன் ஐரோப்பிய சக்திகள் என்ன மூலோபாய வரம்புகளைக் கொண்டிருக்கக்கூடும் என்பதைக் குறிப்பிட வேண்டாம் என்ற அவரது அழைப்பும், இந்த கொள்கையின் மலைப்பூட்டும் பொறுப்பற்ற தன்மையை மட்டுமே அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

போருக்கு முற்றிலுமாக ரஷ்ய ஆக்கிரமிப்பைக் குற்றஞ்சாட்டும் மக்ரோனின் முயற்சி ஒரு பொய்யாகும், உக்ரேனில் ரஷ்யாவை எதிர்த்துப் போராட ஐரோப்பிய தரைப்படை துருப்புகளை அனுப்புவது குறித்த அவரது கருத்துக்களுடன் இது அப்பட்டமாக முரண்படுகிறது. உண்மையில், நேட்டோ நாடுகள் கியேவுக்கு அவற்றின் ஆயுத விநியோகங்களில் நடத்திய பல தீவிரப்படுத்தல்களை அவர் மேற்கோளிட்டார், அவற்றில் எதுவுமே நேட்டோவுக்கு எதிராக ரஷ்ய இராணுவ நடவடிக்கையில் முடிவடையவில்லை. இந்த அடிப்படையில், போர் தீவிரப்பாடு எவ்வாறு முன்னெடுக்கப்படுகிறது என்பதை —அதாவது, ரஷ்யா அல்ல, நேட்டோ ஏகாதிபத்திய சக்திகள் தான் போரை உந்துகின்றன என்பதை ரஷ்யா தீர்மானிக்காது என்று அவர் வாதிட்டார்.

மக்ரோன் கூறினார்: அதாவது “கடந்த இரண்டு ஆண்டுகளில் ஒவ்வொரு கட்டத்திலும், நீங்கள் டாங்கிகளை அனுப்பினால், பதிலடி கொடுக்கப்படும் என்று மக்களுக்கு கூறி வந்துள்ளனர். விமானங்களை அனுப்பினால் பதிலடி கொடுக்கப்படும். நீங்கள் நடுத்தர தூர ஆட்டிலறி குண்டுகளை அனுப்பினால், பதிலடி இருக்கும். நாங்கள் அனைவரும் இதைச் செய்தோம், நாங்கள் அதை செய்ய மாட்டோம் என்று சொன்னோம். விரிவாக்கத்தின் வேகம் ரஷ்ய தரப்பால் வரையறுக்கப்படவில்லை, இது அனைவரிடையேயும் ஒருமித்த கருத்தால் வரையறுக்கப்படுகிறது.

இது, மேலதிக நேட்டோ தீவிரத்தன்மையான விரிவாக்கமானது நாகரீகத்தை முடிவுக்குக் கொண்டுவரும் அணு ஆயுத போரின் அபாயத்தைக் கொண்டுள்ளது என்று எச்சரித்துள்ள புட்டின், வெறுமனே உளறுகிறார் என்று கூறுவதற்கு நிகரானதாகும். ரஷ்ய மூர்க்கத்தனமே போருக்கு பொறுப்பு என்று மக்ரோன் பொதுமக்களிடம் கூறுகின்ற அதேவேளையில், ரஷ்யா கடுமையான நடவடிக்கை எடுக்காது என்பதையும், நேட்டோ சக்திகளுக்கு இடையிலான ஒரு கருத்தொற்றுமை அவை தூண்டும் எந்த தீவிரப்பாட்டின் அளவையும் கட்டுப்படுத்த முடியும் என்பதையும் எந்த ஆதாரமும் இல்லாமல் வலியுறுத்துகிறார். ஆனால் இந்தப் பொய்யான தூண்டுதலுக்கு எந்த நியாயமும் இல்லை.

முழுமையான போர் அபாயத்தை மக்களிடம் இருந்து மறைப்பதற்கான நேட்டோ தலைவர்களின் நகர்வுகளுக்கு ஊடகங்கள் முழுமையாக உடந்தையாக உள்ளன. உக்ரேனுக்குள் இருந்து ஜேர்மன் டாரஸ் அல்லது பிரெஞ்சு SCALP ஏவுகணைகளை பேர்லின் அல்லது பாரீஸ் மீது குண்டுவீசி ஏவுவதற்கு கிரெம்ளின் விடையிறுத்தால் அவர் என்ன செய்வார் என்று பாவெல் உடனான மக்ரோனின் பத்திரிகையாளர் சந்திப்பில் இருந்த பத்திரிகையாளர்களில் யாரும் கேட்கவில்லை. மக்ரோன் கட்டவிழ்த்து விட்டு வரும் தீவிரப்படையில் எத்தனை மில்லியன் பிரெஞ்சு உயிர்களை ஆபத்திற்கு உட்படுத்த திட்டமிட்டுள்ளார் என்றும் அவர்களில் யாரும் கேட்கவில்லை.

எவ்வாறிருப்பினும், 50 மில்லியன் டன்கள் வரை மொத்த வெடிக்கும் சக்தி வாய்ந்த 15 அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் ரஷ்ய RS-28 கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணை, பரப்பளவில் ஐரோப்பிய ஒன்றியத்தின் மிகப் பெரிய நாடான பிரான்ஸ் அல்லது அமெரிக்க மாநிலமான டெக்சாஸ் அளவுள்ள ஒரு பிராந்தியத்தை அழிக்க முடியும் என்பது அனைவரும் அறிந்ததே.

நேட்டோ சக்திகளுக்கு இடையிலான ஒரு “கருத்தொற்றுமை” போரைக் கட்டுப்படுத்த முடியும் என்று மக்ரோன் அவரது பார்வையாளர்களுக்கு உறுதியளித்த அதேவேளையில், ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையே அதிகரித்து வரும் பிளவுகள் பிராக் உச்சிமாநாட்டில், குறிப்பாக பிரான்ஸ் மற்றும் ஜேர்மனிக்கு இடையில், கண்கூடாக தெரிந்தன.

செக் குடியரசில் அணு ஆலைகளைக் கட்டுவதற்கு பிரெஞ்சு அரசு மின்சார ஏகபோக நிறுவனமான EDF இன் முன்மொழிவை ஊக்குவிப்பதில் மக்ரோன் தனது நேரத்தின் பெரும்பகுதியை பிராக்கில் செலவிட்டார். EDF ஆனது அணுசக்தி ஆலைகளை கிழக்கு ஐரோப்பா முழுவதிலும் ஏற்றுமதி செய்யும் பிரெஞ்சு திட்டங்களின் மையமாக பிராக் உள்ளது. இப்பிராந்தியத்தில் ஜேர்மன் மூலதனம் பொருளாதார ரீதியாக மேலாதிக்கம் செலுத்துகிறது. போலந்தில் இருந்து சுலோவேனியா, பல்கேரியா மற்றும் ருமேனியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. மக்ரோனின் பிராக் விஜயத்தின் போது, செக் அதிகாரிகள் பிரெஞ்சு நிறுவனமான ஓரனோவுடன் (முன்னர் அரேவா) அவர்களின் அணுசக்தி ஆலைகளுக்கு யுரேனியத்தைப் பெறுவதற்கான ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இந்த முன்முயற்சி தொடர்பாக பாரிஸுக்கும் பேர்லினுக்கும் இடையிலான குறிப்பிடத்தக்க பதட்டங்களை மக்ரோன் எடுத்துக்காட்டினார். போலாந்து, நெதர்லாந்து மற்றும் சுவீடன் உட்பட 12 நாடுகளின் “ஐரோப்பிய அணுசக்தி கூட்டணியில்” செக் குடியரசின் பாத்திரத்திற்காக அவர் அதைப் பாராட்டினார். கடந்த ஆண்டு அமைக்கப்பட்ட இந்த கூட்டணியானது, ஐரோப்பிய ஒன்றிய பசுமை எரிசக்தி சட்டத்தில் அணு சக்தியை குறைந்த கார்பன் எரிசக்தி ஆதாரமாக அடைவதைத் தடுக்கும் பேர்லினின் முயற்சிகளை வெற்றிகரமாக எதிர்த்தது. மக்ரோன் கூறினார்: “இது வெறுமனே எரிசக்தி சம்பந்தப்பட்டதல்ல, இது வெறுமனே வணிகம் சம்பந்தப்பட்டதல்ல. இது தெளிவாக மூலோபாயம், சுயாட்சி பற்றிய கேள்வி. ... காலநிலை மாற்றத்தை நிவர்த்தி செய்து நமது பொருளாதாரத்தை கார்பன் டை ஆக்சைடை நீக்கம் செய்ய வேண்டும்.

அவர் பெருமைபீற்றினார்: “பிரெஞ்சு மூலோபாயம் அதிக செயல்திறன், அதிக புதுப்பிக்கத்தக்க ஆற்றல், அதிக அணு சக்தி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இந்த மூலோபாயம் இப்போது ஐரோப்பிய மூலோபாயமாக உள்ளது.”

எவ்வாறிருப்பினும், முதலாளித்துவ தேசிய-அரசு அமைப்புமுறையின் திவாலான கட்டமைப்பிற்குள் காலநிலை மாற்ற பிரச்சினை தீர்க்கப்பட முடியாது. மிகவும் சக்திவாய்ந்த அரசுகள் காலநிலை நெருக்கடியைத் தீர்க்க ஒத்துழைக்கவில்லை, ஆனால் ஒருவருக்கொருவர் போர் தொடுத்து வருகின்றன.

மக்ரோனும் ஏனைய நேட்டோ அரசு தலைவர்களும் தொடங்கி வைத்துள்ள இராணுவத் தீவிரப்படுத்தலுக்கு தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே ஆழமாக வேரூன்றிய எதிர்ப்பு நிலவுகிறது. ஜேர்மன் மற்றும் பிரெஞ்சு மக்களின் பரந்த பெரும்பான்மையினரின் எதிர்ப்பு ஒரு அறிகுறியாகும். பிரெஞ்சு இளைஞர்களில் வெறும் 29 சதவீதத்தினர் மட்டுமே அவர்களின் நாட்டிற்காக போராடுவதை ஏற்றுக் கொள்வார்கள் என்றும், அதேவேளையில் 62 சதவீதத்தினர் ஒரு பாரிய மேலெழுச்சியில் பங்கெடுக்க விரும்புவதாகவும் 2015 கருத்துக்கணிப்புகள் கண்டறிந்தன என்பதையும் நினைவுகூர்வது மதிப்புடையதாகும்.

ஐரோப்பா முழுவதிலும் மற்றும் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களும் இளைஞர்களும் ஒரு பேரழிவுகரமான இராணுவ தீவிரப்பாட்டின் அபாயம் குறித்து விழிப்பூட்டப்பட வேண்டும் என்பதோடு, அதற்கு எதிராக அணிதிரள வேண்டும். உலக சோசலிச வலைத் தளம் அதன் சமீபத்திய அறிக்கையில் எழுதியதைப் போல, “அமெரிக்காவும் நேட்டோவும் ரஷ்யா மீதான தாக்குதல்களுக்கான திட்டங்களுடன் அணு ஆயுதப் போர் அபாயத்தில் ஆழ்த்துகின்றன“:

உலக சோசலிச வலைத் தளமானது, அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் நேட்டோ சக்திகள், மனித இனத்தை அணுவாயுத பேரழிவிற்கு இழுக்கும் சதியை கண்டனம் செய்கிறது. இந்த போர்வெறியர்களின் கைகளில் இருந்து அதிகாரம் பறிக்கப்பட வேண்டும். அவர்களின் நடவடிக்கைகள் மனித நாகரீகத்தை அழிவுக்கு அச்சுறுத்துகின்றன.

உக்ரேனில் இருந்து அனைத்து நேட்டோ படைகளும் ஒட்டுமொத்தமாக திரும்பப் பெறவும், மோதலுக்கு உடனடியாக முடிவு கட்டவும் கோருவதற்கு ஒவ்வொரு நாட்டிலும் பாரிய போராட்டங்கள் நடத்தப்பட வேண்டும். இது உலக சோசலிசப் புரட்சியின் வேலைத்திட்டத்துடன் முதலாளித்துவ காட்டுமிராண்டித்தனத்தை எதிர்ப்பதற்கு, சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்குள் ஒரு ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தின் வளர்ச்சியுடன் இணைக்கப்பட வேண்டும்.

Loading