மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
கடந்த வியாழன் அன்று, டெக்சாஸின் பிரவுன்ஸ்வில்லியில் உள்ள அமெரிக்க-மெக்சிகோ எல்லைக்கு விஜயம் செய்த ஜோ பைடென், முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு அசாதாரண வேண்டுகோள் விடுத்தார். அதில், புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிராக இரு கட்சிகள் (ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி) மேற்கொண்டுவரும் போரில், தன்னுடன் சேர்ந்துகொள்ளுமாறு குடியரசுக் கட்சியின் ஜனாதிபதித் தேர்தலில் முன்னணியில் இருப்பவருக்கு பைடென் அழைப்பு விடுத்தது, முழு அரசியல் ஸ்தாபனத்தின் முற்றிலும் பிற்போக்குத்தனமான தன்மையின் சமீபத்திய உறுதிப்படுத்தல் ஆகும்.
இது, டிரம்ப் மற்றும் அவரது பாசிச MAGA (Make America Great Again) இயக்கத்திற்கு எதிராக ஜனநாயகத்தின் பாதுகாவலர்கள் என்ற ஜனநாயக கட்சி மற்றும் பைடெனின் பிரச்சாரத்தின் பாசாங்குகளை சிதைக்கிறது. உக்ரேனில், ரஷ்யாவிற்கு எதிரான வாஷிங்டனின் பினாமிப் போருக்காக, பிரதிநிதிகள் சபையிலுள்ள குடியரசுக் கட்சியினர், மற்றொரு $60 பில்லியன் டொலர்களை அங்கீகரிப்பதற்காக, டிரம்ப்புடன் ஐக்கியத்துக்கான வேண்டுகோளை பைடென் மேற்கொண்டுள்ளார்.
செனட்டில் நிறைவேற்றப்பட்டுள்ள பைடெனுடைய குடியேற்ற எதிர்ப்பு மசோதா, பிரதிநிதிகள் சபையில் ஸ்தம்பித்துள்ளது. “இந்த மசோதாவானது, இந்த நாடு இதுவரை கண்டிராத கடினமான, திறமையான, மிகவும் பயனுள்ள எல்லைப் பாதுகாப்பை கொண்டிருக்கின்றது” என்று பைடென் கூறினார்:
எனது முன்னோடி இன்று ஈகிள் பாஸில் இருக்கிறார் என்பதை நான் அறிந்து கொள்கிறேன். எனவே, திரு. டிரம்பிடம் நான் இங்கே சொல்வது, இந்தப் பிரச்சினையில் அரசியல் விளையாடுவதற்குப் பதிலாக, இந்தச் சட்டத்தைத் தடுக்குமாறு காங்கிரஸ் உறுப்பினர்களிடம் கூறுவதற்குப் பதிலாக, என்னுடன் சேருங்கள். அல்லது இந்த இருகட்சி எல்லைப் பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்ற காங்கிரஸிடம் சொல்வதில் நானும் உங்களுடன் இணைந்து கொள்கிறேன்.
டெக்சாஸின் ஈகிள் பாஸிற்கு விஜயம் செய்த ட்ரம்ப், டெக்சாஸ் கவர்னர் கிரெக் அபோட்டின் அரசியலமைப்பிற்கு விரோதமாக எல்லையில் உள்ள கூட்டாட்சி அதிகாரத்தை அபகரிப்பதை ஊக்குவித்த சில நிமிடங்களில் இந்த அழைப்பு வந்தது. ட்ரம்ப் தனது எல்லைப் பயணத்தைப் பயன்படுத்தி, தெற்கு எல்லையில் அமெரிக்க மக்களின் “இரத்தத்தில் விஷத்தை உண்டாக்கும் ஜந்துக்களான புலம்பெயர்ந்தோர் படையெடுப்பிற்கு” பைடென் உடந்தையாக இருக்கின்றார் என்ற தனது கூற்றைத் திரும்பத் திரும்ப பயன்படுத்தினார். யூத-விரோத “பெரிய மாற்றுக் கோட்பாட்டைத்” தழுவுவதற்கு நவ-நாஜிகளைத் தூண்டுவதற்காக புலம்பெயர்ந்தோர் செய்ததாகக் கூறப்படும் பல சமீபத்திய வன்புணர்வுகள் மற்றும் கொலைகளை டிரம்ப் வரைபடமாக விவரித்தார்.
2022 நிதியாண்டில் அமெரிக்க-மெக்சிகோ எல்லையை கடக்க முயன்று இறந்த 850க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோரைப் பற்றி பைடென் தனது எல்லை உரையில் குறிப்பிடவில்லை. இந்த எண்ணிக்கை அமெரிக்காவில் நுழையும் புலம்பெயர்ந்தோருக்கு மிகவும் ஆபத்தான ஆண்டைக் குறிக்கிறது என்று எல்லைக் காவல்படை தெரிவித்துள்ளது.
அதற்கு பதிலாக, டிரம்பின் புலம்பெயர்ந்தோருக்கு எதிரான பேச்சு வாதங்களை ஏற்றுக்கொண்ட பைடென், “எல்லையைப் பாதுகாக்க நாங்கள் இனி காத்திருக்க முடியாது” என்று குறிப்பிட்டார்.
டிரம்பை ஆதரிக்குமாறு பைடென் கேட்டுக் கொண்டிருக்கும் “எல்லைப் பாதுகாப்பு மசோதா”, அமெரிக்காவில் தஞ்சம் கோரும் புலம்பெயர்ந்தோரின் உரிமையை கிட்டத்தட்ட அகற்றுகிறது. இது புலம்பெயர்ந்தோர் தடுப்பு மையங்கள் மற்றும் எல்லை பொலிஸை வியத்தகு முறையில் விரிவுபடுத்துவதுடன், உள்நுழைவுத் துறைமுகங்களை மூடுவதற்கு ஜனாதிபதிகளுக்கு முன்னெப்போதும் இல்லாத நிர்வாக அதிகாரத்தை வழங்கும். ஜனநாயக உரிமைகள் மீதான இந்த பாரிய தாக்குதல், தவிர்க்க முடியாமல் ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தையும் குறிவைக்க பயன்படுத்தப்படும்.
உண்மையில் பைடென் நிர்வாகமானது, ஏற்கனவே காஸாவில் இடம்பெற்றுவரும் இனப்படுகொலை மற்றும் இஸ்ரேலிய போர்க்குற்றங்களில் அமெரிக்கா உடந்தையாக இருப்பதற்கு எதிராக குரல்கொடுக்கும் மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் பொது நபர்களுக்கு எதிராக, இரு கட்சிகளினுடைய மெக்கார்த்திய சூனிய வேட்டையை ஆதரித்து வருகிறது. அவர்கள் “யூத-விரோதிகள்” என இழிவுபடுத்தப்பட்டு பல்கலைக்கழக வளாக வாழ்க்கையில் இருந்து தடை செய்யப்பட்டுள்ளனர் அல்லது அவர்களது பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இந்த சட்டத்தை அங்கீகரிக்கும், வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலின் ஆசிரியர் குழு, இது “பல தசாப்தங்களில் மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட புலம்பெயர்ந்தோர் சட்டம்” என்று கடந்த பிப்ரவரியில் விவரித்தது. “இங்கு அழைத்து வரப்பட்ட கனவு காண்பவர்கள் அனைவருக்கும் எதுவும் இல்லை ... குழந்தைகளுக்கும், குடியுரிமை அல்லது கிரீன் கார்டுகளுக்கான பொதுவான வழி எதுவுமில்லை” என்று ஜேர்னல் குறிப்பிட்டது.
இரண்டு மாதங்களுக்கு முன்பு, ஜனவரி 5 அன்று, பென்சில்வேனியாவின் ஃபோர்ஜ் பள்ளத்தாக்குக்கு வெளியே (1777-1778 குளிர்காலத்தில் கான்டினென்டல் இராணுவத்தின் வரலாற்று படைத்தளம்) தனது மறுதேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கிய பைடென், முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் முன்வைக்கும் ஒற்றை அச்சுறுத்தலில் இருந்து ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கான தனது பிரச்சாரத்தை ஆதரிக்க அமெரிக்கர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
பைடெனின் ஜனவரி மாத உரையில், “ஜனநாயகமும் சுதந்திரமும் வாக்குச்சீட்டில்” இருப்பதாகவும், “அமெரிக்க ஜனநாயகம்” மற்றும் சர்வாதிகாரத்திற்கு இடையே அவரும், அவரது கட்சியான ஜனநாயகக் கட்சியும் மட்டுமே இருப்பதாகவும் அறிவித்தார். அவர் பின்வருமாறு குறிப்பிட்டார்:
இன்று, இந்த புனிதமான உறுதிமொழியை நான் உங்களுக்கு வழங்குகிறேன். எனது ஜனாதிபதி பதவிக்கு மையக் காரணமாக இருக்கும் அமெரிக்க ஜனநாயகத்தின் பாதுகாப்பு, தற்காப்பு, மற்றும் பராமரிப்பு என்பன நிலைத்திருக்கும்.
பதிலுக்கு உலக சோசலிச வலைத்தளம் (WSWS) பின்வருமாறு எழுதியது:
பைடெனின் ஜனாதிபதி பதவிக்கு “மையக் காரணம்” ஏகாதிபத்திய போரின் விரிவாக்கம் ஆகும். அவர் பேசும்போது கூட, அவரது வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், காஸாவில் நடந்து வரும் அமெரிக்க-இஸ்ரேலிய இனப்படுகொலை மற்றும் லெபனான், யேமன் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்குள் போரை விரிவுபடுத்துவதை ஒருங்கிணைப்பதற்காக, மத்திய கிழக்கிற்குச் சென்று கொண்டிருந்தார்.
அணுவாயுத மோதலின் அபாயம் அதிகரித்துள்ள போதிலும், வாஷிங்டன் உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அதன் பினாமிப் போரை ஒரே நேரத்தில் தீவிரப்படுத்தி வருகிறது. உக்ரேன் ஆயுதக் கொள்வனவுகளுக்குக் கூடுதலான 61.4 பில்லியன் டொலர்களுக்கு குடியரசுக் கட்சியின் ஆதரவைப் பெறும் முயற்சியில், தஞ்சம் கோரும் புலம்பெயர்ந்தோரின் ஜனநாயக உரிமையை திறம்பட ஒழிப்பதற்கும், ட்ரம்பின் நாடுகடத்தல் மற்றும் பாரிய தடுப்புமுகாம் பாசிசக் கொள்கைகளைப் பின்பற்றுவதற்கும் பைடென் முன்மொழிகிறார்.
இப்போது டிரம்பிற்கு நேரடி வேண்டுகோள் விடுப்பதன் மூலம், பைடென் இரண்டு விஷயங்களைச் செய்கிறார். முதலாவதாக, ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போருக்கான $60 பில்லியனுக்கும் அதிகமான தொகையை உள்ளடக்கிய $95 பில்லியன் டாலர்களையும், மேலும் காஸாவில் இஸ்ரேலிய இன அழிப்பு தாக்கதலுக்காக $15 பில்லியன் டொலர்கள் இராணுவப் பொதியையும் முன்வைக்க, குடியரசுக் கட்சியின் சபாநாயகர் மைக் ஜோன்சனை அனுமதிக்கும் வகையில், குடியரசுக் கட்சியினருடன் முழுவதுமாக அவர்களின் விதிமுறைகளின்படி ஒரு ஒப்பந்தத்தை எட்ட அவர் நம்புகிறார்.
இரண்டாவதாக, குடியேற்றப் பிரச்சினையில் ட்ரம்பை விஞ்சுவதற்கு முற்படுகின்ற அவர், நவம்பரில் தனது தேர்தல் வெற்றி வாய்ப்புகளை அதிகரிப்பதற்காக குடியேற்ற எதிர்ப்புச் சட்டத்தை ஆதரிக்க மறுத்ததால், “எல்லை முறிவுக்கு” டிரம்ப் தான் பொறுப்பு என்று வாதிடுகிறார்.
புலம்பெயர்ந்து வருபவர்களை தாக்குவதற்கு ட்ரம்புடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற பைடெனின் வேண்டுகோளுக்கு பதிலளித்து, சோசலிச சமத்துவக் கட்சியின் அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் ஜோசப் கிஷோர் ட்விட்டர்/எக்ஸ்சில் வெள்ளியன்று ஒரு அறிக்கையை வெளியிட்டார், அதில் ஒரு பகுதி:
“ஜனநாயகத்தைப்” பாதுகாப்பது பற்றி அவர்கள் எவ்வளவு பேசினாலும்,
அழிவுகரமான அணுஆயுத அபாயத்தை கொண்டிருக்கும் உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போருக்கான இரு கட்சி ஆதரவிற்கு ஈடாக, புலம்பெயர்ந்தவர்கள் மீதான குடியரசுக் கட்சியினரின் பாசிசத் தாக்குதலை பைடெனும் ஜனநாயகக் கட்சியினரும் ஏற்றுக்கொள்வார்கள். அதனால் தான், ஜனநாயகக் கட்சியினர் ஜனவரி 6 பாசிச ஆட்சிக் கவிழ்ப்பை மூடிமறைக்க வேலை செய்ததுடன், ஏன் “வலுவான” குடியரசுக் கட்சி தேவை என்பதை பைடென் வலியுறுத்தினார். ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும் முதலாளித்துவ தன்னலக்குழுவின் இரண்டு பிற்போக்குத்தனமான பிரிவுகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்...
புலம்பெயர்ந்தவர்கள் மீதான குடியரசுக் கட்சியினரின் தாக்குதலை பைடென் அரவணைத்துக் கொள்வதானது, அலெக்ஸாண்ட்ரா ஒகாசியோ-கோர்டெஸ் போன்ற [அமெரிக்காவின் ஜனநாயக சோசலிஸ்ட் உறுப்பினர்] அனைவரையும் அம்பலப்படுத்துகிறது. அவர் புலம்பெயர்ந்தவர்களைப் பாதுகாக்க ஜனநாயகக் கட்சியினரை ஆதரிப்பது அவசியம் என்று கூறுகிறார். பைடெனுக்கு சோசலிஸ்டுக்களின் எதிர்ப்பை “சிறப்புரிமை” என்று ஒகாசியோ-கோர்டெஸ் மற்றும் DSA கண்டனம் செய்தனர். உண்மையில், DSA என்பது ஜனநாயகக் கட்சியின் பிற்சேர்க்கையைத் தவிர வேறில்லை.
ட்ரம்பின் பாசிச குடியேற்ற-எதிர்ப்புக் கொள்கைகளை பைடென் ஏற்றுக்கொண்டது, தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கு ஜனநாயகக் கட்சியுடன் முறித்துக் கொள்வதும் முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான சோசலிச இயக்கத்தைக் கட்டியெழுப்புவதும் அவசியமானது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.