உயிர் அச்சுறுத்தல் காரணமாக இலங்கையின் வடக்கில் நீதிபதி சிங்கள இனவாதிகளின் பிரச்சாரத்திற்கு மத்தியில் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார்

இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கில் தனது உயிருக்கு ”அச்சுறுத்தல் மற்றும் அதிக மன உழைச்சலை” குறிப்பிட்டு கடந்த மாதம் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி. சரவணராஜா தனது அனைத்துப் பதவிகளிலும் இருந்து இராஜிநாமா செய்து நாட்டைவிட்டு இரகசியமாக வெளியேறியுள்ளார். நீதிபதி தனது பதவி விலகலை தெரிவித்து, செப்டம்பர் 23 அன்று நீதிச்சேவைகள் ஆணையகத்திற்கு ஒரு சுருக்கமான கடிதத்தை அனுப்பினார்.

தனக்கு யாரிடம் இருந்து கொலை மிரட்டல் வந்தது என்று சரவணராஜா தனது கடிதத்தில் விளக்கம் அளிக்கவில்லை. எவ்வாறாயினும், குருந்தூர்மலையில் சர்ச்சைக்குரிய தொல்பொருள் பிரதேசம் சம்பந்தமாக அவர் கொடுத்த தீர்ப்பை விலக்கிக்கொள்ளுமாறு, பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவிடம் இருந்து அவருக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டதுடன், குருந்தூர் மலை தொடர்பாக அவர் பிறப்பித்த கட்டளைகளை விலக்கிக்கொள்ளுமாறு கோரி கொழும்பில் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று அவரை மேற்கோள் காட்டி ட்விட்டரில் வெளியான ஒரு செய்தி தெரிவித்துள்ளது.

இந்த நீதிபதி, சர்ச்சைக்குரிய குருந்துார்மலை தொல்லியல் தளத்தில், இனவாத ரீதியாக பதட்டமான வழக்கை கையாண்டார். இந்த இடத்தில், ஏற்கனவே இந்து மத வழிபாட்டை மேற்கொண்டு வந்த தமிழர்களுக்கு எதிராக, சிங்கள-பௌத்த இனவாத குண்டர்கள் ஆத்திரமூட்டல்களை மேற்கொண்டு வந்தனர். அவர்கள், இந்த இடத்தை புராதன பௌத்த விகாரையின் தளம் உள்ளது என கூறுகின்றார்கள். பல நுாற்றாண்டுகளாக, தமிழ் இந்துக்கள் இந்த இடத்தில் வழிபாட்டை மேற்கொண்டு வந்திருந்தபடியால், நீதிபதி, பிரச்சினைக்குரிய இந்த இடத்தில் வழக்கு முடியும் வரை பௌத்த விகாரையை கட்டுவதற்கு தடை விதித்து தீர்ப்பளித்தார்.

வடக்கு மற்றும் கிழக்கில் புராதன பௌத்த இடங்களைத் தேடுவதாகப் பிரச்சாரம் செய்யும் பெளத்த பிக்குகள், சிங்கள தீவிரவாத பிவிதுர கெல உருமய மற்றும் தேசிய சுதந்திர முன்னணி போன்ற இனவாதக் குழுக்கள், இந்திய இராணுவத்தின் ஆக்கிரமிப்பின்போது, 1987 இல் உண்ணாவிரத போராட்டத்தில் உயிரிழந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் திலீபனின் நினைவேந்தலை தடைசெய்ய வேண்டும் என்ற பொலிஸின் கோரிக்கையை நிராகரித்து நீதிபதி கொடுத்த மற்றொரு தீர்ப்பின் காரணமாக அவர் மீது ஆத்திரமடைந்தன.

முல்லைத்தீவு கொக்குத் தொடுவாய் பகுதியில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியைத் தோண்டுவதற்கும் ஜீலை 6 ஆம் திகதி அன்று நீதிபதி உத்தரவிட்டார். இனவாதப் போரின் போது இராணுவத்தால் கொல்லப்பட்ட உறுப்பினர்கள் என நம்பப்படுகின்ற சுமார் 17 பேர்களின் உடல்கள் அங்கு கண்டெடுக்கப்பட்டன.

நீதிபதி பதவி விலகியமைக்கு, அவரையே அரசாங்கம் குற்றம் சாட்டுகிறது. எவ்வாறாயினும், நீதிபதியின் பதவி விலகுதலானது அரசாங்கத்தினதும் இராணுவத்தினதும் ஆதரவுகொண்ட தொடர்சியானதும் தீவிரமனதுமான தமிழர்-விரோத பேரினவாத பிரச்சாரத்தையே அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது.

சிங்கள இனவாதக் குழுக்கள், இராணுவம் மற்றும் அரசாங்க அமைச்சர்களின் ஆதரவுடனேயே செயற்பட்டு வருகின்றன. முல்லைத்தீவு நீதிபதியின் தீர்ப்புகள் தவறான நம்பிக்கையில் வழங்கப்பட்டவை என்று கருத்தில்கொண்டு அதை மாற்றக்கோரி கொழும்பு மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் மூன்று விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டதாக சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிக்கையை மேற்கோள் காட்டி சிலோன் டுடே பத்திரிகை குறிப்பிட்டது.

கடந்த மாதம் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் கொழும்பு உட்பட பல நகரங்களில், நீதித்துறைக்கு எதிரான அச்சுறுத்தல்களை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி, நூற்றுக்கணக்கான சட்டத்தரணிகள் போராட்டங்களை நடத்தினர். அவர்கள் நீதித்துறை மீதான எந்த அச்சுறுத்தலையும் நிறுத்த அழைப்புவிடுத்தனர்.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், ”நீதித்துறை உறுப்பினர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் எந்தவொரு அச்சுறுத்தல்கள் மற்றும் வன்முறைகளையும் கண்டனம் செய்வதாகவும் அதை எதிர்ப்பதாகவும்” அறிவித்து ஒரு அறிக்கையை வெளியிட்டது. அது முல்லைத்தீவு நீதிபதியின் நடத்தை குறித்து நாடாளுமன்றத்தில் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்த விமர்சனத்தையே இவ்வாறு சுட்டிக் கட்டியிருந்தது.

முன்னதாக, தொழிற்சங்கங்களால் அரசாங்கத்தின் உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை பற்றிக் குறிப்பிட்ட ஜனாதிபதி விக்கிரமசிங்க, ”நாடாளுமன்றம் தவிர்ந்த வேறு எந்த தரப்பினரின் உத்தவுகளையோ அல்லது ஆலோசனைகளையோ அரசாங்கம் செவிமடுக்காது” என எச்சரித்தார். இது, முற்றிலும் ஆட்சிக்கு அமையவே செயற்பட வேண்டும் என நீதித்துறைக்கு விடுக்கப்பட்ட ஒரு செய்தி ஆகும்.

இந்த எதிர்ப்புகளுக்கு மத்தியில், பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், நீதிபதியின் பதவி விலகளுக்கான காரணங்களை விசாரிக்க பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு ஒக்டோபர் 3 அன்று உத்தரவிட்டார்.

எவ்வாறாயினும், ஒக்டோபர் 8 ஆம் திகதி அன்று ”எங்களைப் பொறுத்த வரையிலும் இதுவரைக்கும் விசாரணையில் தெரியவந்ததில் இருந்தும், அவருக்கு முற்றிலும் எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லை” என சண்டே மோர்னிங் பத்திரிகைக்கு அலஸ் கூறிப்பிட்டார்.

நீதி மற்றும் அரசியலமைப்பு விவகார அமைச்சர் பியதாச ராஜபக்ஷ, இத்தகைய செல்வாக்கு செலுத்தும் நபர்களுக்கு எதிராக அறிவிப்பு அனுப்பவும், நடவடிக்கை எடுக்கவும் நீதிபதிகளுக்கு அதிகாரம் உள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். சரவணராஜா இந்த நடவடிக்கைகளை பின்பற்றவில்லை ஆகவே ”அவரே தனது பதவி விலகளுக்குப் பொறுப்பு” என்று ராஜபக்ஷ தெரிவித்தார்.

அமைச்சரின் இந்தக் கருத்துக்கள், நீதிபதி பற்றிய எந்தவொரு பொலிஸ் ”விசாரனையின்” முடிவும் பாதிக்கப்பட்டவரையே குற்றம் சாட்டுவதாக அமையும் என்பதே இறுதி முடிவாகும் என்பதையே சுட்டிக்காட்டுகின்றது.

இலங்கையில் ஏறத்தாழ மூன்று தசாப்தகால இனாவாதப் போரானது, தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்வியுடன் 2009 மே மாதம் முடிவடைந்திருந்தாலும் இன்னமும் வடக்கு கிழக்கானது, இலட்சக் கணக்கான இராணுவத்தின் ஆக்கிரமிப்பின் கீழே உள்ளது. பொலிஸ் மற்றும் இராணுவப் புலனாய்வு அதிகாரிகள், அரசியல் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மீது தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். ”புலிகள் தடை செய்யப்பட்ட அமைப்பு” என்ற போர்வையில் பாதுகாப்பு அமைச்சினால் போரின் போது உயிரிழந்த புலி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களின் நினைவேந்தலை நினைவுகூர தடைவிதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு ஆட்சியாளர்களின் ஆதரவுடன் பௌத்த பிக்குகள் மற்றும் இராணுவத்தின் ஆதரவிலான இனவாதக் குண்டர்களும் நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கில் சிங்கள-பௌத்த மேலாதிக்கத்தை திணிக்கும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். புராதன பௌத்த விகாரைகள் என அழைக்கப்படுவதைக் கண்டறியும் மோசடியான ஆய்வுகள் அந்த நடவடிக்கைகளில் ஒன்றாகும்.

ஆளும் கட்சியின் அமைச்சரும், சிங்கள பேரினவாதியாக நன்கு அறியப்பட்டவருமான சரத் வீரசேகர, நீதிபதி சரவணராஜாவினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட குருந்தூர்மலையில், ஜூலை 4 அன்று நடந்த பௌத்த விழாவிற்காக வந்திருந்த கூட்டத்தின் மத்தியில் இருந்தார். ஜுலை 7 அன்று, பாராளுமன்றில் உறையாற்றிய சரத் வீரசேகர, சரவணராஜாவை கடுமையாக விமர்சித்ததோடு ”இது சிங்கள பௌத்த நாடு என்பதை இந்த நீதிபதிக்கு நாம் நினைவூட்ட விரும்புகின்றோம்” என எச்சரித்தார். ”இந்தப் பௌத்த பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கு எமது உயிரையும் தியாகம் செய்யத் தயங்கமாட்டோம்” எனக் கூறிய அவர், தேசப்பற்றுடன் மக்களை ஒன்றிணையுமாறு அழைப்பு விடுத்து தனது உரையை முடித்தார்.

இது அரசாங்கத்தின் ஆதரவுடன் திட்டமிட்டு தீவிரப்படுத்தப்படும் கொடிய இனவாதப் பிரச்சாரம் ஆகும். விக்கிரமசிங்க ஆட்சியும், ஆளும் வர்க்கமும் ஒட்டுமொத்தமாக தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தி பலவீனப்படுத்த விரும்புகின்றன.

முன்னப்போதும் இல்லாத வகையில், சிக்கன நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த உறுதியளித்த பின்னர், கொழும்பு அரசாங்கத்திற்கு சர்வதேச நாணய நிதியம் கடன் பிணையெடுப்பு வழங்கியுள்ளது. கடந்த மாதம், சில நிபந்தனைகளை அரசாங்கம் நடைமுறைப்படுத்த தவறியதால் இரண்டாவது தவணையை வழங்குவதை நாணய நிதியம் நிறுத்தி வைத்துள்ளது. விக்கிரமசிங்க அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைகளை நிறைவேற்ற, வாழ்க்கை மற்றும் சமூக நிலைமைகள் மீதான அதன் தாக்குதல்களை தற்போது தீவிரப்படுத்தியுள்ளது.

அரசாங்கம், நாடு முழுவதும் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் வளர்ந்துவரும் போராட்டங்களையிட்டு விழிப்புடன் உள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல்-ஜூலை மாதத்தில் இடம்பெற்ற வெகுஜன எழுச்சியில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லீம் தொழிலாளர்களின் ஒன்றிணைந்த போராட்டமானது, முன்னாள் ஜனாதிபதி கோடாபய ராஜபக்ஷவை பதவியை துறந்து நாட்டைவிட்டு ஓடுவதற்கு நிர்ப்பந்தித்தது. இந்த வெகுஜனப் போராட்டமானது இடைக்கால முதலாளித்துவ ஆட்சிக்கான எதிர்க்கட்சியின் கோரிக்கைகளுக்கு போராட்டத்தை அடிபணியச் செய்த முன்னிலை சோசலிசக் கட்சி உட்பட போலி இடதுகளின் ஆதரவுடன் தொழிற்சங்களால் காட்டிக்கொடுக்கப்பட்டது.

பொருளாதார இக்கட்டான நிலை மற்றும் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் மத்தியில் வளர்ந்து வரும் எதிர்ப்புக்கு மத்தியில் ஆளும் வர்க்கம் முதலாளித்துவ ஆட்சியைப் பாதுகாக்க சிங்களப் பேரினவாதம் உட்பட ஒவ்வொரு விசமத்தனமான பிற்போக்கு ஆயுதங்களையும் கையில் எடுக்கத் தயாராக உள்ளது.

அதே நேரம், விக்கிரமசிங்க ஆட்சியானது தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை நசுக்க சர்வதிகார ஆட்சியை திணிப்பதற்கு தயாராகும் கொடூரமான இணைய பாதுகாப்பு மாசோதா மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களை முன்வைத்துள்ளது.

பிரதான தமிழ் முதலாளித்துவக் கட்சியான இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர். சம்பந்தன் பதவி விலகிய நீதிபதிக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கைளைக் கண்டித்து ஒரு ”முறையான விசாரணைக்கு” அழைப்பு விடுத்தார். மேலும் அவர், ”சர்வதேச சமூகத்தின் பங்களிப்புடன் இந்த விடயத்தில் அரசாங்கம் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம், அரசாங்கம் அதன் வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்கூறலை உறுதிப்படுத்த முடியும்” என்று தெரிவித்தார்.

ஏனைய தமிழ் கட்சிகளும் இந்த சம்பவம் தொடர்பாக சர்வதேச விசாரணைக்கு அழைப்பு விடுக்கின்றன. சாதாணமாக தமிழ் கட்சிகள், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளுக்கு ”சர்வதேச சமூகம்” என்ற சொல்லைப் பயன்படுத்தி வருகின்றன.

அமெரிக்கா மற்றும் பிற ஏகாதிபத்திய சக்திகளின் உதவியுடன் தமிழ் மக்கள் தமது ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கும் தீர்வை தேடலாம் என்ற மாயையை விதைப்பதற்கும் இந்தச் சம்பவத்தை தமிழ் கட்சிகள் பயன்படுத்துகின்றன.

போர்க்குற்றங்கள் மற்றும் காலனித்துவ ஆக்கிரமிப்பின் கொடூரமான சாதனையைக் கொண்ட இந்த ஏகாதிபத்திய சக்திகள், தங்கள் சொந்த நாடுகளில் உள்ள தொழிலாளர்களின் ஜனநாயக உரிமைகளை நசுக்கி வருகின்றன. இந்த சக்திகள், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தீர்மானங்களை கொண்டு வருவதற்கு போர்க்குற்றங்களையும், ஜனநாயக உரிமைகளை நசுக்குவதையும் சிடுமூஞ்சித்தனமாக பயன்படுத்தி வருவது, இலங்கையில் உள்ள மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக அல்ல, மாறாக அவர்களின் புவிசார் அரசியல் நலன்களை முன்கொண்டு செல்வதற்காகும்.

தமிழ் முதலாளித்துவக் கட்சிகள், கொழும்பு ஆட்சிக்கு அழுத்தம் கொடுப்பதற்கும் தமது நலன்களை முன்னேற்ற மேலதிக அதிகாரப் பகிர்வுகளைப் பெறுவதற்குமே அமெரிக்க மற்றும் ஐரோப்பிய எகாதிபத்திய சக்திகளுக்கு பின்னால் இந்த தீர்மானங்களுடன் அணிவகுக்கின்றன.

தமிழ் தொழிலாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் ஏழை மக்களும், ஏகாதிபத்திய சக்திகள் தமிழ் மக்களின் அல்லது பிற எந்த ஒடுக்கப்பட்ட மக்களினதும் ஜனநாயக உரிமைகளில் அக்கறையாக உள்ளன என்று கட்டவிழ்த்துவிடப்படும் பொய்களை நிராகரிக்கவேண்டும். இதே ஏகாதிபத்திய சக்திகள்தான், காஸா மீதான இஸ்ரேலின் இனப்படுகொலை போருக்கு ஆதரவளித்து வருகின்றன.

தொழிலாள வர்க்கம் அனைத்து வகையான இனவாத அரசியலையும் நிராகரிக்க வேண்டும். தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை, முதலாளித்துவத்திற்கு எதிராக, கிராமப்புற ஏழைகளை அணிதிரட்டிக்கொண்ட தொழிலாளர் வர்க்கத்தின் ஒன்றிணைந்த போராட்டத்தின் மூலமே வென்றெடுக்க முடியும். சோசலிச சமத்துவக் கட்சி, தெற்காசியா மற்றும் சர்வதேச அளவில் சோசலிசத்திற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக ஸ்ரீ-லங்கா ஈழம் சோசலிசக் குடியரசுக்காகப் போராடுவதற்கான மூலோபாயத்தை முன்வைக்கின்றது.

Loading