மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
“தந்திரத்தாலும், வன்முறையாலும் ஒரு அடிமையை சங்கிலியால் பிணைக்கும் அடிமை உரிமையாளரும், தந்திரத்தினாலோ அல்லது வன்முறையினாலோ சங்கிலிகளை உடைத்தெறியும் ஒரு அடிமையும், அறநெறி நீதிமன்றத்தில் சமமானவர்கள் என்று இழிவான அயோக்கியர்கள் எமக்கு சொல்ல வேண்டாம்! ” - லியோன் ட்ரொட்ஸ்கி, 1938.
காசா பகுதியில் பாலஸ்தீனப் படைகள் திடீர் தாக்குதல் நடத்தி, சரமாரியாக ராக்கெட்டுக்களை ஏவி, காசா பகுதியை சுற்றி வளைத்து நிற்கும் இஸ்ரேலிய படைகள் மீது கடும் தாக்குதலை நடத்தினர். சனிக்கிழமை இரவு நிலவரப்படி, 200 இஸ்ரேலியர்கள் இறந்துள்ளதோடு 1,100 பேர் காயமடைந்துள்ளனர், அதேபோல், 232 பாலஸ்தீனியர்கள் இறந்துள்ளதோடு, 1,697 பேர் காயமடைந்துள்ளனர். ஆரம்பத்தில் தயார் நிலையில் இல்லாமல் இருந்து பிடிபட்ட, இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF) தற்போது எதிர்த்தாக்குதலில் ஈடுபட்டுள்ளன. இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு “முன்னெப்போதும் இல்லாத அளவில்”, காசா இரத்த விலையை செலுத்தவிருப்பதாக உறுதியளித்துள்ளார்.
காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு எந்தவிதமான தடையின்றி ஆதரவளித்து, பாலஸ்தீனிய எதிர்ப்பை “பயங்கரவாதம்” என்று கண்டிக்கும் ஜனாதிபதி ஜோ பைடென் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்களின் மோசமான மற்றும் அருவருப்பான பாசாங்குத்தனமான அறிக்கைகளை உலக சோசலிச வலைத் தளம் கண்டனம் செய்கிறது.
காஸாவிற்கு எதிரான இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகளுக்கு வலுவான மற்றும் அசைக்க முடியாத ஆதரவை உறுதியளித்த பைடென், “காசாவிலிருந்து ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் மீது நடத்திய பயங்கரமான தாக்குதலை அமெரிக்கா சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கிறது. மேலும், அதற்கான அனைத்து விதமான உதவிகளையும், இஸ்ரேல் அரசாங்கம் மற்றும் அதன் மக்களுக்கு ஆதரவு வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்பதை நான் பிரதமர் நெதன்யாகுவிற்கு தெளிவுபடுத்தியுள்ளேன். பயங்கரவாதத்தை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது. ஆதலால், தன்னையும் தன் மக்களையும் பாதுகாக்க இஸ்ரேலுக்கு உரிமை உண்டு” என்று அவர் கூறினார்.
“இஸ்ரேலில் பொதுமக்களுக்கு எதிரான ஹமாஸின் கொடூரமான வன்முறை முன்னெப்போதும் இல்லாதது மற்றும் நியாயப்படுத்த முடியாதது. இந்த பயங்கரவாதம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இஸ்ரேலுக்கு எமது முழு ஒற்றுமையான ஆதரவு உண்டு” என்று ஜேர்மன் வெளியுறவு அமைச்சர் அன்னலெனா பேர்பாக் கூறினார்.
இந்த அறிக்கைகளின் பாசாங்குத்தனம் திகைக்க வைக்கிறது. எப்பொழுதும் போல, ஏகாதிபத்திய சக்திகளின் அனுதாபங்கள் அடக்குமுறையாளர்களுக்கே கிடைக்கிறது. ஒடுக்கப்பட்டவர்களின் எதிர்ப்பின் எந்த வெளிப்பாடும் வெறித்தனமான கண்டனங்களுக்கு உள்ளாக்கப்படுகின்றது. பாசிச இனவாதிகளால் ஆதிக்கம் செலுத்தப்படுகின்ற, ஒரு குற்றவாளியால் வழிநடத்தப்படுகின்ற இஸ்ரேலிய கூட்டணி அரசாங்கம், அரசியலமைப்பை நசுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது என்ற உண்மையை ஊடகங்கள் புறக்கணிக்கின்றன.
உக்ரேன் போர் பற்றிய செய்திகளில், “கிரிமியாவை ரஷ்யா சட்டவிரோதமாக இணைத்ததை” வழக்கமாகக் குறிப்பிடுகின்ற ஊடகங்கள், அதனை கண்டிக்கத் தவறுவதில்லை. கிரிமியாவை மீட்பதற்கான உக்ரேனின் போருக்கு, “எவ்வளவு காலம் சென்றாலும்”, அதுவரை ஆதரவளிப்பதாக அமெரிக்கா மீண்டும் மீண்டும் அறிவித்துள்ளது. ஆனால், பாலஸ்தீனிய நிலத்தின் பரந்த பகுதிகளை இஸ்ரேல் சட்டவிரோதமாக இணைத்ததை இந்த ஊடங்கங்கள் ஒருபோதும் கண்டிப்பதில்லை.
காசாவில் வாழும் பாலஸ்தீனிய மக்களிடமும் ஹமாஸ் அரசாங்கத்திடமும் நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்கள் பெறுமதியான ஆயுதம் ஏந்திய சக்திவாய்ந்த ஏகாதிபத்திய ஆதரவாளர்கள் இல்லை. மாறாக, இஸ்ரேலிய இராணுவ ஆக்கிரமிப்புக்கு எதிராக பாலஸ்தீனியர்கள் ஆயுதம் ஏந்தும்போது, ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்க இராணுவ உதவியில் பில்லியன் கணக்கான டாலர்களை இஸ்ரேலிய அரசாங்கம் பெறுகிறது. அவர்கள் சமாளிக்க முடியாத பெரும் முரண்பாடுகளை எதிர்கொள்வதை அறிவார்கள்.
ஆனாலும், பாலஸ்தீனப் படைகள் ஹீரோக்களாகப் போற்றப்படவில்லை. மாறாக, பிற்போக்கு அரசியல்வாதிகள் மற்றும் நேட்டோ நாடுகளின் அடிமை ஊடகங்களால் பயங்கரவாதிகள் என்று அவர்கள் கண்டனம் செய்யப்படுகின்றார்கள். உண்மையில், பல ஆண்டுகளாக இஸ்ரேலிய அரசு, நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான பாலஸ்தீனிய பொதுமக்களை, மக்கள் அடர்த்தியாக வசிக்கும் காசா பகுதியில் கண்மூடித்தனமான தாக்குதல்களினால், பலமுறை குறிவைத்து கொன்றுள்ளது.
சனிக்கிழமை இரவு, இரத்தத்தை உறைய வைக்கும் வகையில் நாட்டுக்கு ஆற்றிய உரையில், “நாங்கள் எல்லா இடங்களிலும் முழுப் பலத்துடன் செயல்படுவோம், காசாவில் வசிப்பவர்கள் இப்போதே அங்கிருந்து வெளியேறுமாறு” நெதன்யாகு சூளுரைத்தார். அவரது அரசாங்கம் காசாவை முடக்கி, யாரையும் வெளியே விடாமல் தடுத்து இருப்பதால், நெதன்யாகு காசாவின் ஒட்டுமொத்த மக்களையும் ஒரு முறையான இலக்காகக் கருதுகிறார். “ஹமாஸ் நம் அனைவரையும் கொலை செய்ய விரும்புவதாகக்” கூறி, நெதன்யாகு “இறுதிவரை போராடுவதாகவும்”, ஹமாஸ் செயல்படும் நகரங்கள் “பாழடைந்த நகரங்களாக” மாறும் என்றும் சபதம் செய்தார்.
காசா பகுதியை அழிக்கும் இந்த காட்டுமிராண்டித்தனமான அச்சுறுத்தல் நெதன்யாகு ஆட்சியின் பாசிச தன்மைக்கு சாட்சியமளிக்கிறது. சியோனிச ஆட்சியின் பல தசாப்த கால வலதுசாரி மாற்றத்தின் இறுதி விளைவு, மத சியோனிஸ்ட் கட்சி போன்ற வன்முறையான தீவிர வலதுசாரி குழுக்களை அதன் அரசாங்கத்தில் இணைத்துக் கொள்வததற்கு இட்டுச் சென்றுள்ளது. சியோனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து பாலஸ்தீனியர்களை வெளியேற்றவும், 1994 தேசபக்தர்களின் பாதாள படுகொலை போன்ற பாலஸ்தீனியர்களின் கொலைகளை ஊக்குவிக்கவும், அல் அக்ஸா மசூதியை அழிக்கக் கோரவும் மற்றும் அமெரிக்காவில் பிறந்த பாசிஸ்ட் மீர் கஹானேவின் பாரம்பரியத்தை ஊக்குவிக்கவும் அழைப்பு விடுக்கின்றனர்.
நெதன்யாகு தனது போரை நியாயப்படுத்துவது, ஹமாஸின் இலக்குகளை பொய்யாக்குவதை அடிப்படையாகக் கொண்டதாகும். அதை அவர் ஒரு இனப்படுகொலை அமைப்பாகக் கருதுகிறார். உண்மையில், ஹமாஸின் இராணுவப் பிரிவான அல்-கஸ்ஸாம் படைப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையானது, யூதர்களுக்கு எதிராக அல்ல மாறாக இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிற்கு அதன் எதிர்ப்பை வலியுறுத்துகிறது. அந்த அறிக்கையானது, இஸ்ரேலிய துருப்புக்கள் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் குடியேறியவர்களால் பாலஸ்தீனியர்கள் கொலை செய்யப்படுவதைக் கண்டித்து, பாலஸ்தீனியர்களின் நீண்டகால சிறைவாசம், பாலஸ்தீனிய நிலங்களை திருடுதல் மற்றும் அல் அக்ஸா மசூதியில் மேற்கொள்ளப்படும் ஆத்திரமூட்டல்கள் ஆகியவற்றைக் கண்டிக்கிறது.
மேலும் அந்த அறிக்கையானது, “இஸ்ரேல் காசா பகுதியை ஆக்கிரமித்து, முற்றுகையைத் தக்கவைத்து, எமது பாலஸ்தீன மக்களுக்கு எதிரான குற்றங்களைத் தொடர்கிறது. அமெரிக்கா மற்றும் மேற்கத்திய ஆதரவு மற்றும் சர்வதேச மௌனத்தின் மத்தியில், இஸ்ரேல் சர்வதேச சட்டங்கள் மற்றும் தீர்மானங்களை மிகவும் அலட்சியம் காட்டும் அதே வேளையில், அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க நாம் முடிவு செய்துள்ளோம். இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை நாங்கள் அறிவிக்கிறோம், இது பாலஸ்தீனிய மக்களுக்கு எதிரான இஸ்ரேலிய குற்றங்கள் மற்றும் அல்-அக்ஸா மசூதியில் அத்துமீறல்களுக்கு விடையிறுக்கும் வகையில் வருகிறது” என்று தெரிவிக்கிறது.
இத்தகைய நடவடிக்கையை இரகசியமாக தயாரித்து அக்டோபர் 6 அன்று (அரபு-இஸ்ரேலியப் போருக்கு 50 ஆண்டுகளுக்குப் பிறகு) தொடங்கிய தாக்குதலில், ஹமாஸின் திறன் இஸ்ரேலிய அரசின் நெருக்கடியின் ஆழத்தை அம்பலப்படுத்தியுள்ளது. பாசிச கூறுகளை அதிகமாக கொண்டுள்ள நெத்தன்யாஹு, ஊழல் குற்றச்சாட்டின் பேரில் பல வருடங்கள் நீடித்த விசாரணை மற்றும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் வெகுஜன எதிர்ப்புகளை எதிர்கொண்டார். அவர் நீதித்துறையின் சட்டரீதியான சுதந்திரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் வகையில், அரசியலமைப்பு சீர்திருத்தத்தை மேற்கொள்ள முயன்று தோல்வியடைந்தார்.
ஆக்கிரமிக்கப்பட்ட போலந்தில், 1943 ம் ஆண்டு வார்சோ கெட்டோவில் நடந்த யூதர்களின் எழுச்சி மற்றும் 1944ல் வார்சோ எழுச்சியால் நாஜி தளபதிகள் அதிர்ச்சிக்குள்ளானதை போலவே, பாலஸ்தீனிய எழுச்சியால் நெதன்யாகு அரசாங்கம் அதிர்ச்சிக்குள்ளாகியது. அதன் ஆணவம் மற்றும் இன வெறுப்புகளுடன், கண்மூடித்தனமான அடக்குமுறைகள் மூலம் பாலஸ்தீனியர்களின் முதுகை உடைத்து, எதிர்ப்பை சாத்தியமற்றதாக்கியதாக நம்பியது. அதன் பிழை இப்போது அம்பலமாகியுள்ளதுடன், அது இரத்தக்களரியை (ஆக்கிரமிக்கப்பட்ட போலந்தில், நாஜிக்கள் பல்லாயிரக்கணக்கான அல்லது நூறாயிரக்கணக்கானவர்களை படுகொலை செய்வதன் மூலம் எழுச்சிகளுக்கு எதிர்வினையாற்றினர்) நோக்கி நகர்கிறது.
இந்தக் கொள்கை அரேபிய மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்குள் பாரிய எதிர்ப்பை எதிர்கொள்கிறது. ஏகாதிபத்திய சக்திகளின் வெட்கமற்ற பொய்கள் இருந்தபோதிலும், உலகெங்கிலும் உள்ள பில்லியன் கணக்கான மக்களிடையே பாலஸ்தீனியர்களுக்கு பரவலான அனுதாபம் உள்ளது.
எவ்வாறாயினும், இந்த அனுதாபமும் எதிர்ப்பும் அரசியல் ரீதியாக அணிதிரட்டப்பட வேண்டும். குறிப்பாக, இஸ்ரேலில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் தனித்து நின்று நெதன்யாகு அரசாங்கத்தின் கொலைகாரக் கொள்கைகளை எதிர்க்க வேண்டும், மற்றும் ஒடுக்குமுறை மற்றும் ஆக்கிரமிப்புக்கு எதிரான பாலஸ்தீனிய போராட்டத்தை அவர்கள் ஆதரிக்க வேண்டும்.
அரபு நாடுகள் மற்றும் மத்திய கிழக்கில் உள்ள ஊழல் நிறைந்த முதலாளித்துவ ஆட்சிகள், இரத்தம் தோய்ந்த, ஏகாதிபத்திய ஆதரவு அடக்குமுறையைத் தொடங்க நெதன்யாகுவின் முயற்சிக்கு உடந்தையாக உள்ளன. துருக்கி, எகிப்து, சவூதி அரேபியா மற்றும் இப்பிராந்தியத்தின் பிற இடங்களில் உள்ள முதலாளித்துவ அரசாங்கங்கள், கட்டுப்பாட்டுடன் போர் விரிவாக்கத்தை தணிக்க அழைப்பு விடுப்பதை நெதன்யாகு புறக்கணிப்பார். அதே நேரத்தில், இவர்கள் அனைவரும் தங்கள் சொந்த இராணுவ மற்றும் மூலோபாய காரணங்களுக்காக, இஸ்ரேலிய ஆட்சியுடன் நெருக்கமான உறவுகளை வளர்த்துக் கொள்வதற்கு முயன்று வருகின்றனர்.
இஸ்ரேலில் நெதன்யாகுவின் தாக்குதலை நிறுத்தக்கூடிய ஒரே சக்தி இஸ்ரேலிய, பாலஸ்தீனிய மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கம் ஆகும். இது, காசா மீதான தாக்குதலை நிறுத்தவும், நெதன்யாகு ஆட்சியை வீழ்த்தவும், காசா மற்றும் மேற்குக்கரையில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவரவும், ஐக்கியப்பட்ட போராட்டத்தை முன்னெடுத்துச் செல்கிறது.