முன்னோக்கு

கோவிட் தடுப்பூசியை உருவாக்க உதவிய முன்னோடி mRNA விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம் 

கத்தலின் கரிகோ (Katalin Karikó) மற்றும் ட்ரூ வெய்ஸ்மேன் (Drew Weissman) ஆகியோருக்கு கூட்டாக வழங்கப்பட்ட உடலியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு தகுதியானதாக இருக்கிறது. 1997 ஆம் ஆண்டில் தொடங்கி பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் பல ஆண்டுகள் நீடித்த ஒத்துழைப்பு மூலம், கரிகோ மற்றும் வெய்ஸ்மேன் ஆகியோர் முன்னோடி ஆராய்ச்சியை மேற்கொண்டனர், இது 2020 ஆம் ஆண்டில் கோவிட் எதிர்ப்பு mRNA (செய்திப்பரிமாற்ற இரைபோ கருவமிலம்) தடுப்பூசிகளை விரைவாக உருவாக்குவதை சாத்தியமாக்கியது, இது உலகளவில் மில்லியன் கணக்கான மக்களின் உயிர்களைக் காப்பாற்றியது.

குறிப்பாக mRNA தடுப்பூசிகளை குறிவைத்து ஒரு பரந்த வலதுசாரி விஞ்ஞான எதிர்ப்பு பிரச்சாரத்தின் நிலைமைகளின் கீழ் இந்த விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு வழங்கப்படுவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

பாதுகாப்பான நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்க தேவையான mRNA இல் நியூக்ளியோசைடு மாற்றங்களைக் (நியூக்ளியோசைடு மாற்றங்கள் என்பது DNA மற்றும் RNA இன் அடிப்படை அலகுகளில் செய்யப்படும் மாற்றங்கள் ஆகும்) கண்டறிந்ததே கரிகோ மற்றும் வெய்ஸ்மேனின் மாபெரும் திருப்புமுனையாகும். ஆரம்பத்தில் 2005 இல் வெளியிடப்பட்ட அவர்களின் கண்டுபிடிப்புகள், செல்கள் வெவ்வேறு வகையான mRNA களை எவ்வாறு அடையாளம் கண்டு பதிலளிக்கின்றன என்பதற்கான விஞ்ஞானப் புரிதலை அடிப்படையாக மாற்றியது.

ஹங்கேரிய-அமெரிக்க உயிர்வேதியியலாளர் கத்தலின் கரிகோ மற்றும் அமெரிக்க மருத்துவ நிபுணர்-விஞ்ஞானி ட்ரூ வெய்ஸ்மேன் ஆகியோர் பிலடெல்பியாவிலுள்ள பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் உரையாற்றுகிறார்கள். [AP Photo/Matt Rourke]

தங்கள் பல தசாப்த கால ஆராய்ச்சியில், கரிகோ மற்றும் வெய்ஸ்மேன் இருவரும் சகாக்களிடமிருந்து பல சவால்களையும் சந்தேகங்களையும் கடந்து வந்தனர். 1955 ஆம் ஆண்டில் ஹங்கேரியில் பிறந்த கரிகோ, 1985 ஆம் ஆண்டில் தனது கணவர் மற்றும் இரண்டு வயது மகளுடன் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார். அவர் விரைவில் mRNA ஆராய்ச்சிக்காக, இரவு வேலை மற்றும் வார இறுதிகளில் ஆர்வத்தை இதில் வளர்த்துக் கொண்டார், ஆனால் மானியங்கள் அல்லது ஒரு நிரந்தரப் பதவியைப் பெற பல தசாப்தங்களாக போராடினார். ஒரு சிறந்த விஞ்ஞானியாக தனது துறையில் நன்கு அறியப்பட்ட வெய்ஸ்மேன், நோயெதிர்ப்பு மற்றும் டென்ட்ரிடிக் உயிரணுக்களின் (மனித உடலில் உள்ள ஒரு வகை நோயெதிர்ப்பு உயிரணு ஆகும்) பங்கு குறித்த தனது சொந்த நுண்ணறிவுகளுடன் இணைந்தபோது mRNA தொழில்நுட்பத்தின் திறனைப் புரிந்துகொண்டார்.

மனிதகுலத்தின் அனைத்து விஞ்ஞான மற்றும் கலாச்சார சாதனைகளைப் போலவே, கரிகோ மற்றும் வெய்ஸ்மேன் ஆகியோரின் பணியானது உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகளின் பரந்த கூட்டு உழைப்பின் விளைவாகும்.

1800 களின் நடுப்பகுதியில் சார்லஸ் டார்வினின் (Charles Darwin) பரிணாம வளர்ச்சி மற்றும் கிரிகோர் ஜோஹன் மெண்டலின் (Gregor Johann Mendel) பரம்பரைப் பண்பு பற்றிய முன்னோடி பணிகள், 1869 ஆம் ஆண்டில் சுவிஸ் வேதியியலாளர் பிரெட்ரிக் மிஷெர் (Friedrich Miescher) நியூக்ளிக் அமிலத்தை தனிமைப்படுத்தியது, 1910 ஆம் ஆண்டில் ஜேர்மன் உயிர் வேதியியலாளர் ஆல்பிரெக்ட் கோசல் (Albrecht Kossel) நியூக்ளிக் அமிலத்தின் கரிம சேர்மங்களின் விளக்கம், 1940 களில் ஆஸ்வால்ட் அவெரி மற்றும் எர்வின் சார்காஃப் (Oswald Avery மற்றும் Erwin Chargaff) ஆகியோரால் உயிர் வேதியியலின் வளர்ச்சி ஆகியவை இந்த செயல்முறையின் சிறந்த மைல்கற்களில் அடங்கும். 1950 களில் ஜேம்ஸ் வாட்சன், பிரான்சிஸ் கிரிக் மற்றும் ரோசலிண்ட் பிராங்க்ளின் (James Watson, Francis Crick மற்றும் Rosalind Franklin) ஆகியோரால் DNA விஞ்ஞானத்தில் ஏற்பட்ட முன்னேற்றங்கள், 1961 ஆம் ஆண்டில் விஞ்ஞானிகளின் பல குழுக்களால் mRNA கண்டுபிடிக்கப்பட்டது. மற்றும் 1970 களில் இருந்து மரபியல் மற்றும் உயிரியல் விஞ்ஞானத்தில் அதிகரித்து வரும் விரைவான முன்னேற்றங்கள் ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகளின் கூட்டுப் பணியை உள்ளடக்கியது.

கரிகோ மற்றும் வெய்ஸ்மேனின் 2005 ஆண்டு கட்டுரையும், 2008 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் அவர்கள் வெளியிட்ட மேலும் முக்கியமான கண்டுபிடிப்புகளும் விஞ்ஞான சமூகத்தில் கிட்டத்தட்ட முழுமையான மௌனத்தை எதிர்கொண்டனர். 2013 ஆம் ஆண்டில், பென்னிடமிருந்து (Penn) நிதியுதவி மறுக்கப்பட்ட, கரிகோ பயோஎன்டெக் நிறுவனத்தை இணைந்து நிறுவினார். நிறுவனமானது 2019 ஆம் ஆண்டில் mRNA இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசி ஆராய்ச்சியைத் தொடங்கியது, இது அந்த ஆண்டு டிசம்பரில் சீனாவில் கோவிட்-19 பெருந்தொற்று நோய் வெடித்ததால் அதற்கு பதிலீடாக மாற்றப்பட்டது.

மருத்துவ, தொழில்நுட்ப மற்றும் விஞ்ஞான வளர்ச்சியை விரைவுபடுத்தும் நெருக்கடியின் பல எடுத்துக்காட்டுகளைப் போலவே, பெருந்தொற்று நோய் அவசரநிலையானது நீண்ட காலமாக நடைபெற்று வந்த ஆராய்ச்சியில் செயல்படுவதற்கான உந்துதலை உருவாக்கியது. 'தேவையே கண்டுபிடிப்பின் தாய்' என்ற பழமொழி மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டது.

சீனாவின் வுஹானில் உள்ள ஒரு திறந்தவெளிச் சந்தையில் SARS-CoV-2 இன் ஆரம்ப கசிவுக்குப் பிறகு, வைரஸ் வரிசைப்படுத்தப்பட்டு அதன் மரபணு ஜனவரி 11, 2020 அன்று பொதுவில் அணுகக்கூடியதாக கிடைத்தது. சில நாட்களுக்குள், ஃபைசர்-பயோஎன்டெக் (Pfizer-BioNTech) மற்றும் மோடர்னா இரண்டும் முன்மாதிரி mRNA தடுப்பூசிகளை உருவாக்கின, அவைகள் விரைவில் மருத்துவ பரிசோதனைகளில் நுழைந்தன. இந்த முன்னெப்போதும் இல்லாத வேகம் கரிகோ, வெய்ஸ்மேன் மற்றும் பிற விஞ்ஞானிகளின் முந்தைய ஆராய்ச்சியால் சாத்தியமானது.

டிசம்பர் 11, 2020 அன்று, ஃபைசர்-பயோஎன்டெக் mRNA தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் (FDA) அவசரகால பயன்பாட்டு அங்கீகாரம் வழங்கப்பட்டது, அதைத் தொடர்ந்து ஒரு வாரம் கழித்து மோடர்னவால் mRNA தடுப்பூசி வழங்கப்பட்டது. இந்த மற்றும் பிற தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதிலிருந்து கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளில், உலகளவில் 13.4 பில்லியனுக்கும் அதிகமான டோஸ்கள் பாதுகாப்பாக வழங்கப்பட்டுள்ளன.

தடுப்பூசிகளின் உயிர் காக்கும் விளைவுகள் மறுக்க முடியாதவை, இது நவீன விஞ்ஞானத்தின் இந்த வரலாற்று சாதனையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ஜூன் 2022 இல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், டிசம்பர் 8, 2020 முதல் டிசம்பர் 8, 2021 வரை, கோவிட்-19 தடுப்பூசிகள் உலகம் முழுவதும் கூடுதலாக 14.4 முதல் 19.8 மில்லியன் இறப்புகளைத் தடுத்தன. அடுத்த இரண்டு ஆண்டுகளில், மேலும் மில்லியன் கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன, அதே நேரத்தில் உலகளவில் மில்லியன் கணக்கான மக்கள் கோவிட் -19 காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதைத் தவிர்த்துள்ளனர்.

எவ்வாறாயினும், கோவிட் எதிர்ப்பு தடுப்பூசிகளின் வெளியீடு உடனடியாக இலாபத்தை உந்திய முதலாளித்துவ சந்தையின் அராஜகத் தன்மையால் கட்டுப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு கண்டத்திலும் உற்பத்தி மற்றும் விநியோக வலையமைப்புகளை விரைவாகக் கட்டியெழுப்புவதற்குப் பதிலாக, வரையறுக்கப்பட்ட தடுப்பூசிகளை அணுகுவதற்கான ஏலமெடுக்கும் போர்களில் நாடுகள் ஒருவருக்கொருவர் போட்டியிட்டன, அதே நேரத்தில் மருந்து ஏகபோக நிறுவனங்கள் மிக மோசமான பெருந்தொற்று நோய் இலாப வேட்டையில் ஈடுபட்டன. மோடர்னாவின் நாஸ்டாக் பங்கு விலை ஜனவரி 2020 இல் 20 டாலரிலிருந்து ஆகஸ்ட் 2021 இல் 484 டாலர்களாக உயர்ந்தது, இது 24 மடங்கு அதிகரிப்பு, முன்னணி பங்குதாரர்கள் பில்லியன்களை குவித்தனர்.

இன்றுவரை, தடுப்பூசி சமத்துவமின்மை தொடர்கிறது, குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகளிலுள்ள பில்லியன் கணக்கான மக்கள் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற செல்வந்த நாடுகளில் கூட சமீபத்திய புதுப்பிக்கப்பட்ட பூஸ்டர் தடுப்பூசிகளுக்கு அணுகல் மறுக்கப்படுகிறது. உலகின் ஏழ்மையான நாடுகளில் சுமார் 2.4 பில்லியன் மக்கள் முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் உள்ளனர். அதிக வருமானம் கொண்ட நாடுகளில் 66.4 சதவீத மக்கள் குறைந்தபட்சம் ஒரு பூஸ்டர் டோஸைப் பெற்றிருந்தாலும், குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் மக்கள்தொகையில் 4 சதவீதம் பேர் மட்டுமே பெற்றுள்ளனர்.

[Photo by Our World In Data / CC BY 4.0]

மேலும், தடுப்பூசிகள் பெருந்தொற்று நோயை தாங்களாகவே முடிவுக்குக் கொண்டுவரும் ஒரு 'மாயாஜால குண்டு' என்று தவறான கூற்றுக்களுடன் தடுப்பூசிகளின் வெளியீடு இணைந்து இருந்தது. இந்த கூற்றுக்கள் முதலில் டெல்டா திரிபு வைரசால், பின்னர் ஓமிக்ரான் திரிபு வைரசுகளின் அடுத்தடுத்த அலைகளால் விரைவாக முறியடிக்கப்பட்டன. உலகளவில் சார்ஸ்-கோவ்-2 (SARS-CoV-2,) ஐ விரைவாக அகற்ற கிடைக்கக்கூடிய அனைத்து பொது சுகாதார நடவடிக்கைகளையும் பயன்படுத்தும் ஒரு பரந்த மூலோபாயத்திலிருந்து பிரிக்கப்பட்ட தடுப்பூசிகள் பரவலான வைரஸ் பரவல் மற்றும் பரிணாம வளர்ச்சிக்கு எதிராக விரைவில் குறைந்த செயல்திறன் கொண்டவையாக மாறின.

2021 முதல் உலகம் முழுவதும் அதிகாரப்பூர்வ கொள்கையான 'தடுப்பூசி மட்டுமே' மூலோபாயம் உறுதியாக தோல்வியடைந்துள்ளது. உலகம் முழுவதும் பெருந்தொற்று நோயால் இப்போது 28 மில்லியன் அதிகப்படியான இறப்புகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது, உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான மில்லியன் மக்கள் நெடுங் கோவிட் நோயால் (Long COVID) பாதிக்கப்பட்டுள்ளனர்.

mRNA தடுப்பூசிகளின் முதன்மை நன்மைகள் என்னவென்றால், அவை அளவிடக்கூடியவை, உற்பத்தி செய்ய வேகமானவை மற்றும் நெகிழ்வானவை, ஆனால் சார்ஸ்-கோவ்-2 (SARS-CoV-2) இன் புதிய திரிபு வகைகளுடன் பொருந்தக்கூடிய இந்த திறன் எந்த வகையிலும் உணரப்படவில்லை. ஆரம்ப தடுப்பூசிகள் வடிவமைக்கப்பட்டு கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, பெரும்பாலான நாடுகள் ஆதிக்கம் செலுத்தும் எட்டு அல்லது அதற்கு மேற்பட்ட வெவ்வேறு வகைகளுடன் வெகுஜன பெருந்தொற்று நோயை அனுபவித்துள்ளன, mRNA தடுப்பூசிகள் இரண்டு முறை மட்டுமே புதுப்பிக்கப்பட்டு, அவை வடிவமைக்கப்பட்ட திரிபு வகைகள் வைரஸ் சூழலில் இருந்து விலகிய நீண்ட காலத்திற்குப் பிறகே கிடைக்கின்றன.

மேம்படுத்தப்பட்ட பூஸ்டர்களின் மந்தமான வெளியீடு முதலாளித்துவ சந்தையின் விளைபொருளாகும், ஏனெனில் உற்பத்தியாளர்கள் கூடுதல் இலாபங்களை ஈட்ட முடியாது என்று கணக்கிட்டுள்ளனர்.

அதே நேரத்தில், ஆளும் வர்க்கத்தின் கணிசமான பிரிவுகள் பெருந்தொற்று நோயால் தூண்டப்பட்ட சமூக மற்றும் பொருளாதார நெருக்கடியைப் பயன்படுத்தி, தீவிர வலது மற்றும் பாசிச சக்திகளை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட காட்டுமிராண்டித்தனமான தடுப்பூசி எதிர்ப்பு தவறான தகவல் பிரச்சாரங்களை கட்டவிழ்த்துவிட்டுள்ளன. எலான் மஸ்க் போன்ற செல்வந்தர்களின் ஆதரவுடன் இவைகள் சமூக ஊடகங்கள் மூலம் ஒட்டு மொத்தமாக பரப்பப்பட்டு வருகின்றன.

இந்த பிரச்சாரத்தின் பெரும்பகுதி mRNA தடுப்பூசிகளை மையமாகக் கொண்டுள்ளது, அவைகள் வலதுசாரி ஜனரஞ்சக மற்றும் விஞ்ஞான-விரோத பயத்தை ஏற்படுத்தும் நிலைப்படுத்தலாக மாறிவிட்டன. 'மரபணு சிகிச்சை' என்று கூறப்படும் mRNA தடுப்பூசிகள் மூலம் தங்களையும் தங்கள் குழந்தைகளையும் கொல்ல ஒரு பரந்த சதி இருப்பதாகவும், ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் (hydroxychloroquine) மற்றும் ஐவர்மெக்டின் (ivermectin) போன்ற மருந்துகள் மட்டுமே அவர்களுக்குத் தேவை என்றும் மில்லியன் கணக்கான மக்கள் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளனர்.

இந்த தடுப்பூசி எதிர்ப்பு போலி விஞ்ஞானத்தின் இருளில் இருந்து பிரதான அரசியலுக்குள் தள்ளப்பட்டுள்ளது. தடுப்பூசிகள் ஆட்டிசத்தை (autism-தொடர்புத்திறன் குறைபாடு) ஏற்படுத்துகின்றன என்ற பொய்யை பரப்பும் ஒரு போலி விஞ்ஞான சதி கோட்பாட்டாளர் என்று நீண்ட காலமாக கேலி செய்யப்பட்ட ராபர்ட் எஃப் கென்னடி ஜூனியர், இப்போது 2024 தேர்தலில் அமெரிக்க ஜனாதிபதிக்கான போட்டியாளராக உள்ளார். அவரது தடுப்பூசி எதிர்ப்பு அமைப்பான குழந்தைகள் சுகாதார பாதுகாப்பு (Children’s Health Defense) க்கான நிதியானது, 2018 இல் 1.1 மில்லியனில் இருந்து 2021 இல் 15.7 மில்லியன் டாலராக உயர்ந்தது, அதே நேரத்தில் இதேபோன்ற தடுப்பூசி எதிர்ப்பு குழுக்கள் பாரிய அளவில் பணம் உட்செலுத்துவதைக் கண்டுள்ளன.

அமெரிக்கா, ஜேர்மனி மற்றும் உலகெங்கிலும் உள்ள நாடுகளில், இது யூத எதிர்ப்பு மற்றும் பிற பிற்போக்குத்தனமான அரசியலின் மீளெழுச்சியுடன் நெருக்கமாக இது தொடர்புடையது. இந்த பாசிச சக்திகள், டாக்டர் பீட்டர் ஹோடெஸ் (Drs. Peter Hotez), பீட்டர் டசாக் (Peter Daszak) மற்றும் பலரைக் குறிவைத்து, ஒரு வெறித்தனமான யூத எதிர்ப்பு மற்றும் சோசலிச-விரோத மறை உட்கருத்துடன், வெறித்தனம் தூண்டப்பட்டுள்ளன.

உண்மையில், கோவிட் மறுப்பு மற்றும் தடுப்பூசி எதிர்ப்பு இயக்கம் 1920 கள் மற்றும் 1930 களில், யூத எதிர்ப்பில் செய்ததைப் போலவே சமகால பாசிச அரசியலில் ஒரு பெரிய பாத்திரத்தை வகிக்கிறது, இது 'யூத இயற்பியலுக்கு' எதிரான நாஜி பிரச்சாரத்துடன் குறிப்பிடத்தக்க ஒற்றுமைகளைக் கொண்டுள்ளது.

ஜூன் 1933ல், ஜேர்மனியில் ஹிட்லர் அதிகாரத்திற்கு வந்த சில மாதங்களுக்குப் பின்னர், ரஷ்யப் புரட்சியின் மாபெரும் இணைத் தலைவரான லியோன் ட்ரொட்ஸ்கி, விரைவான தொழில்நுட்ப வளர்ச்சியின் ஒரு யுகத்திலும் மிகவும் பின்தங்கிய கருத்தாக்கங்கள் தழைத்தோங்க முடியும் என்ற உண்மையை கவனத்திற்குக் கொண்டுவந்தார். முதலாளித்துவத்தின் மரண ஓலத்திற்கு மத்தியில் விஞ்ஞான முன்னேற்றத்திற்கும் சமூக பிற்போக்குத்தனத்திற்கும் இடையிலான இந்த முரண்பாடு குறித்து ட்ரொட்ஸ்கி பின்வருமாறு எழுதினார்:

இன்று விவசாயி இல்லங்களில் மட்டுமல்ல, நகர வானளாவிய கட்டிடங்களிலும் இருபதாம் நூற்றாண்டில் பத்தாவது அல்லது பதின்மூன்றாம் நூற்றாண்டோடு சேர்ந்து வாழ்கின்றனர். நூறு மில்லியன் மக்கள் மின்சாரத்தைப் பயன்படுத்துகிறார்கள், இன்னும் பேயோட்டிகளின் மந்திர சக்தியையும் மற்றும் அறிகுறிகளையும் நம்புகிறார்கள். தண்ணீர் வைனாக மாறியது குறித்து ரோம் போப் ரேடியோ மூலம் ஒலிபரப்புகிறார். சினிமா நட்சத்திரங்கள் சூனியக்காரர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்கள். மனிதனின் மேதைமையால் உருவாக்கப்பட்ட அற்புத வழிமுறைகளை இயக்கும் விமானிகள் தங்கள் ஸ்வெட்டர்களில் தாயத்துகளை அணிகிறார்கள். இருளும், அறியாமையும், காட்டுமிராண்டித்தனமும் அவர்களிடம் எவ்வளவு வற்றாத வளங்களாக இருக்கின்றன!

இன்றைய காலகட்டத்தின் விசித்திரமான கூறுகளில் ஒன்று, மனிதகுலத்தின் பரந்த தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் விஞ்ஞான முறையைப் பற்றிய அடிப்படை புரிதலை இழந்த மக்களில் ஒரு குறிப்பிடத்தக்க பிரிவினரால் புரிந்து கொள்ளப்படுவதில்லை. முதலாளித்துவ ஆளும் உயரடுக்குகள் இந்த அச்சங்களையும் அறியாமையையும் வேட்டையாடி வளர்க்கின்றன.

ஆயினும்கூட, விஞ்ஞானம் தொழிலாள வர்க்கத்தில் வேரூன்றிவிடும் அளவிற்கு, மனித முன்னேற்றத்தின் சக்தி மிக அதிகமாக உள்ளது. மனித குலத்தின் விஞ்ஞான சாதனைகள் வற்றாதவை, நாம் எதிர்கொள்ளும் அனைத்து பிரச்சினைகளையும் சமாளிக்க முடியும். உற்பத்திச் சாதனங்களின் மீது தனியுடைமை மற்றும் போட்டி தேசிய அரசுகளாக உலகம் பிளவுபட்டிருப்பதை அடிப்படையாகக் கொண்ட தற்போதைய சமூக உறவுகள், மனித முன்னேற்றத்திற்கு மிகப் பெரிய தடையாகும்.

தடுப்பூசி எதிர்ப்பு கூறுகளுடனான மோதல் விஞ்ஞான சமூகத்திற்குள் ஒரு விவாதம் அல்ல. அறியாமை, அச்சம், கலாச்சார பின்தங்கிய நிலை மற்றும் சமகால அரசியல் பிற்போக்குத்தனத்தின் மிகவும் ஆபத்தான வடிவங்களுக்கு எதிராக உண்மையான விஞ்ஞானிகள் மற்றும் முற்போக்கு சிந்தனையின் அனைத்து பிரதிநிதிகளின் போராட்டமாகும்.

விஞ்ஞான முன்னேற்றம் மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான மார்க்சிய அணுகுமுறை மனித முன்னேற்றத்தின் மீதான நம்பிக்கையை ஊட்டுகிறது. mRNA தொழில்நுட்பத்தின் பரந்த திறன் இப்போதுதான் வெளிப்படத் தொடங்கியுள்ளது. மதிப்புமிக்க விஞ்ஞான இதழான Nature  இல் மே 2022 அறிக்கை இவ்வாறு குறிப்பிட்டது, 'mRNA அடிப்படையிலான சிகிச்சைகளானது தொற்று நோய்கள், வளர்சிதை மாற்ற மரபணு நோய்கள் (metabolic genetic diseases), புற்றுநோய், இருதய மற்றும் பெருமூளை நோய்கள் மற்றும் பிற நோய்கள் உள்ளிட்ட பல்வேறு தீராத நோய்களுக்கு ஒரு சக்திவாய்ந்த சிகிச்சையாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.'

இந்த ஆற்றல் திறன் முழுமையாக வளர்ச்சியடைய, ஒவ்வொரு விஞ்ஞானத் துறையையும் வளர்ப்பதோடு, உலகப் பொருளாதாரத்தையும் ஒட்டுமொத்த சமூகத்தையும் சோசலிச முறையில் மறுசீரமைக்க வேண்டும். ஃபைசர், மோடர்னா மற்றும் பிற அனைத்து மருந்து பெருநிறுவனங்களும் சர்வதேசமயமாக்கப்பட்டு அனைவருக்கும் இலவச சிகிச்சைகளை வழங்க மறுசீரமைக்கப்பட வேண்டும். யுத்தத்திற்காகவும் நிதிய தன்னலக்குழுவிற்காகவும் வீணடிக்கப்படும் டிரில்லியன் கணக்கான பணம் கைப்பற்றப்பட்டு, சமூகத் தேவைகளை வழங்குவதற்கும், எல்லாவற்றிற்கும் மேலாக பொது சுகாதாரத்தை வழங்குவதற்கும், காலநிலை மாற்றத்தை மாற்றியமைப்பதற்கும், மனிதகுலம் முழுவதற்கும் உயர்தர கல்வி மற்றும் வாழ்க்கைத் தரங்களை உத்தரவாதம் செய்வதற்கும் மறுபங்கீடு செய்யப்பட வேண்டும்.

Loading