இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
ஜெனரல் மோட்டார்ஸ் (GM) மற்றும் ஸ்டெலான்டிஸ் உதிரிப்பாகங்கள் விநியோக மையங்கள் மட்டுமே வேலைநிறுத்தத்திற்கு அழைக்கப்படும் என்று ஐக்கிய வாகனத் தொழிலாளர் சங்கத்தின் (UAW) தலைவர் ஷான் பெயின் வெள்ளியன்று அறிவித்ததற்கு விடையிறுப்பாக, மாக் டிரக்ஸ் தொழிலாளர் வில் லேமன் பின்வரும் அறிக்கையை வெளியிட்டார். லெஹ்மன் UAW தலைவர் தேர்தலில் சாமானிய தொழிலாளர்களின் வேட்பாளராக இருந்தார். அவர் தற்போது 2022 UAW தேர்தல்களில் தொழிலாளர்களின் அபாரமான வாக்குரிமை பறிப்பு தொடர்பாக தொழிலாளர் இலாகாவிற்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ளார்.
UAW அதிகாரத்துவம் தொழிலாளர்களின் மீது மற்றொரு ஆசை காட்டி மோசம் செய்யும் நடவடிக்கையை செயல்படுத்தி வருகிறது. ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் ஸ்டெல்லாண்டிஸில் உள்ள உதிரிப்பாக விநியோக மையங்கள் இன்று நண்பகலில் வேலைநிறுத்தத்திற்கு அழைக்கப்படும் என்று UAW தலைவர் ஷான் பெயின் ஒரு முகநூல் நேரலையில் அறிவித்தார்.
“உண்மையில் என்ன அர்த்தம் என்பதை தெளிவாக அறிந்து கொள்வோம்: இந்த வேலை நிறுத்தங்களால் உற்பத்தியில் எந்த பாதிப்பும் ஏற்படாது. இவை உதிரிபாகங்களை தரகர்களுக்கு அனுப்பும் உதிரிபாகக் கிடங்குகள், மூன்று பெரிய நிறுவனங்களின் விநியோகஸ்தர்கள் அல்ல.”
UAW தொழிற்சங்கமானது, மூன்று பெரிய நிறுவனங்களின் உறுப்பினர்களில் வெறும் 4 சதவீதத்திற்கும் குறைவான 5,600 தொழிலாளர்கள் மட்டுமே வேலைநிறுத்தத்தில் பங்கெடுக்க அழைப்புவிட்டது. UAW உறுப்பினர்களில் தொண்ணூற்று ஏழு வீதமானவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு வாக்களித்தனர், ஆனால் மொத்தமாக 12 வீதமானவர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டது.
உற்பத்தியில் ஈடுபடும் அல்லது உதிரிப்பாக ஆலைகளுக்கு பெயின் மற்றும் UAW அழைப்பு விடுக்கவில்லை, ஒட்டு மொத்தமாக மூன்று பெரிய நிறுவனங்களின் உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை என்பது ஒருபுறம் இருக்கிறது. ஏனென்றால் அது நிறுவனங்களுக்கு உடனடியாக மற்றும் சக்திவாய்ந்த அடியைக் கொடுக்கும். மற்றும் காலாவதியான ஒப்பந்தங்களின் கீழ் வேலை செய்யும் உதிரிப்பாகங்களை வழங்கும் தொழிலாளர்கள், அதாவது சமீபத்திய மாதங்களில் UAW-அங்கீகரித்த மூன்று காட்டிக்கொடுக்கப்பட்ட ஒப்பந்தங்களை நிராகரித்துள்ள லியர் ஹேமண்ட் தொழிலாளர்கள் போன்றவர்கள் எவருக்கும் UAW அழைப்பு விடுக்கவில்லை.
UAW இன் “தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட வேலைநிறுத்தம்” என்ற கொள்கை ஒரு மோசடியாகும். UAW எந்திரம் அதன் பெரும்பான்மையான உறுப்பினர்களை தொடர்ந்து வேலை செய்யுமாறும் நிறுவனங்களுக்காக இலாபங்களை உற்பத்தி செய்யுமாறும் கட்டளையிடுகிறது. இக்கொள்கை சாமானிய தொழிலாளர்களின் விருப்பத்தையும் மற்றும் வாகனத் தொழில்துறை முழுவதிலும், முழு வேலைநிறுத்த நடவடிக்கைக்கான ஆர்வத்தையும் காட்டிக் கொடுப்பதாகும்.
போர்ட் நிறுவனம் குறித்து “நல்ல முன்னேற்றம்” இருப்பதாக பெயின் மற்றும் UAW கூறுகின்றன. எந்தவொரு தொழிலாளியும் இந்த கூற்றை நம்பகமானதாகக் கருதக்கூடாது.
கனடாவில், யுனிஃபோர் தொழிற்சங்க அதிகாரத்துவம் செவ்வாயன்று இரவு போர்ட்டுடன் ஒரு உடன்படிக்கையை அறிவித்தது மற்றும் சனிக்கிழமை ஒப்புதல் கூட்டங்கள் வரை அதை அதன் உறுப்பினர்களிடமிருந்து மறைக்க முயற்சிக்கிறது. யூனிபோர், போர்டில் ஒரு காட்டிக்கொடுப்பை திணிக்க முயற்சிக்கிறது, மேலும் இதே போல் UAW அதிகாரத்துவம் சரியான தருணம் என்று அவர்கள் உணரும் போது அமெரிக்காவிலும் அதைச் செய்யும்.
இந்த போராட்டங்கள் நாசம் செய்யப்படுவதை நிறுத்த சாமானிய தொழிலாளர்கள் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய நேரம் இது. வாகனத்தொழில் துறை முழுவதும் முழுமையான வேலைநிறுத்த நடவடிக்கையைக் கோரும் தீர்மானங்களை விவாதிப்பதற்கும் அவற்றை நிறைவேற்றுவதற்கும் மூன்று பெரிய நிறுவனங்களின் தொழிலாளர்கள் தங்கள் கிளைகளில் அவசரக் கூட்டங்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டும். இதை ஒருங்கிணைக்கவும், தொழிற்சங்க அதிகாரத்துவங்களின் எதிர்ப்பை சமாளிக்கவும், ஒவ்வொரு தொழிற்சாலை மற்றும் வளாகங்களிலும் சாமானிய குழுக்கள் அமைக்கப்பட வேண்டும்.