முன்னோக்கு

பாசிசமும் ஏகாதிபத்தியப் போரும்: கனேடிய பாராளுமன்றம் ஏன் நாஜி SS இன் உக்ரேனிய மூத்த உறுப்பினருக்கு வணக்கம் செலுத்தியது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

கடந்த வெள்ளிக்கிழமை, அடோல்ஃப் ஹிட்லரின் Waffen SS சிறப்பு பொலிசின், 98 வயதான உக்ரேனிய மூத்த படையினரான யாரோஸ்லாவ் ஹன்காவிற்கு (பிரதம மந்திரி ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அவரது கெளரவ விருந்தினரான உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி தலைமையில்) கனடாவின் முழு பாராளுமன்றமும் எழுந்து நின்று கைத்தட்டல் வழங்கியது. 1941 மற்றும் 1945 க்கு இடையில் ஐரோப்பாவில் இருந்த யூதர்களை அழிப்பதில் Waffen SS ஆனது, முக்கிய பங்கு வகித்துள்ளது.

அரசாங்க பாராளுமன்ற தலைவர் கரினா கோல்ட் (இடது), பாராளுமன்ற சபாநாயகர் அந்தோனி மற்றும் கீழ் சபையின் சபாநாயகர் அந்தோனி ரோட்டா (வலது) ஆகியோர் அடால்ஃப் ஹிட்லரின் Waffen SSன் முன்னாள் உக்ரேனிய உறுப்பினரான யாரோஸ்லாவ் ஹன்காவைத் தழுவிக் கொள்கிறார்கள். [Photo: @karinagould]

பொதுமக்களின் கண்டன அலைக்கு விடையிறுக்கும் வகையில், கனேடிய அரசியல் ஸ்தாபனம் பத்திரிக்கையின் முதல் பக்க கட்டுரையின் பின்னால் அணிதிரண்டது. ஹன்காவை கெளரவித்தது ஒரு அப்பாவித்தனமான தவறு என்றும், இதற்கு கீழ் சபையின் சபாநாயகர் அந்தோனி ரோட்டா மட்டுமே பொறுப்பு என்றும் எங்களுக்கு இப்போது சொல்லப்படுகிறது.

“எனது முடிவிற்கு வருத்தம் தெரிவிக்கும் கூடுதல் தகவல்களை நான் பின்னர் அறிந்தேன்” என்று ரோட்டா கூறினார்.

“எனது பாராளுமன்ற சகாக்கள் மற்றும் உக்ரேனிய பிரதிநிதிகள் உட்பட எவருக்கும் எனது எண்ணம் அல்லது எனது கருத்துக்கள் பற்றி (அதில் அவர் ஹன்காவை உக்ரேனிய மற்றும் கனேடிய ஹீரோ என்று பாராட்டினார்) நான் கூறுவதற்கு முன்னர் அறிந்திருக்கவில்லை” என்று அவர் மேலும் கூறினார்.

ரோட்டாவும் ட்ரூடோவும் ஹன்காவின் கடந்த காலத்தைப் பற்றி தெரிவிக்கவில்லை என்ற கூற்று அபத்தமானது. செலென்ஸ்கியின் உரையைக் கேட்பதற்காக பாராளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டுவது ஒரு முக்கிய அரசியல் நிகழ்வாகும். அது கவனமாகத் திட்டமிடப்பட்டிருக்கும். செலென்ஸ்கியின் உரையைக் கேட்க அழைக்கப்பட்டவர்கள், அதைச் சுற்றியுள்ள நடவடிக்கைகளில் கௌரவிக்கப்படுவது ஒருபுறம் இருக்க, அவர்கள் விரிவாக ஆராயப்பட்டிருப்பார்கள்.

ஒரு நாஜி போர்க் குற்றவாளிக்கு கனேடிய பாராளுமன்றம் கைதட்டுவது வேண்டுமென்றே விடுக்கப்பட்ட ஆத்திரமூட்டலாகும். இது ஒரு வாரம் நடந்த போர் சதித்திட்டம் முடிவில் வந்ததுடன் இதில் செலென்ஸ்கி, அமெரிக்க ஜனாதிபதி பைடென் மற்றும் பிற உயர் அமெரிக்க அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். பைடென், செலென்ஸ்கி மற்றும் ஜேர்மன் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ் ஆகியோரால் ஐக்கிய நாடுகள் சபையின் தளத்திலிருந்து போர்வெறிமிக்க உரைகள் வழங்கப்பட்டன.

உக்ரேனின் வசந்தகால/கோடைக்காலத் தாக்குதலின் வெளிப்படையான தோல்விக்கு விடையிறுக்கும் வகையில், வாஷிங்டனும் அதன் நேட்டோ நட்பு நாடுகளும் இப்போது போரைத் தீவிரப்படுத்த எடுத்த முடிவுகளின் மோசமான விளைவுதான் இந்த வெள்ளிக்கிழமை நிகழ்வுகளாகும்.

பைடென், ட்ரூடோ மற்றும் இதர நேட்டோ ஏகாதிபத்திய சக்திகளின் தலைவர்கள், இப்போது பகிரங்கமாக ஒரு “நீடித்த போரைப்” பற்றி, அது “எவ்வளவு காலம் எடுக்கும்” என்பதுபற்றி பேசுகிறார்கள். ரஷ்யாவிற்கு (இது மாஸ்கோவில் ஆட்சி மாற்றம் மற்றும் அரைக் காலனித்துவ மட்டத்திற்கு அடிபணிய வைப்பதாகும்) “மூலோபாய தோல்வி” என்று அவர்கள் அழைப்பதை ஏற்படுத்த, அது நேட்டோ துருப்புக்களை உக்ரேனுக்குள் அறிமுகப்படுத்தவும், ரஷ்யாவுடன் நேரடி மோதலைத் தொடங்கவும் விரைவாக செயல்பட வேண்டும்.

உக்ரேனிய SS உறுப்பினர் ஹன்காவிற்கு எழுந்து நின்று கரகோஷம் வழங்கியது என்பது, நேட்டோ சக்திகள் கடக்கத் தயாராக இல்லை என்பதற்கு “எந்த வரம்புகளும் இல்லை” என்ற செய்தியை ரஷ்ய அரசாங்கத்திற்கு அனுப்பும் நோக்கத்துடன் இருந்தது.

பல்லாயிரக்கணக்கான உக்ரேனிய நாஜி ஒத்துழைப்பாளர்களுக்கு கனடா அதன் கதவுகளைத் திறந்தது. ​​இந்த நிகழ்வு இரண்டாம் உலகப் போருக்குப் பின் உடனடியாக உறுதிப்படுத்தப்பட்ட கனேடிய அரசுக்கும் உக்ரேனிய அதிதீவிர வலதுசாரிகளுக்கும் இடையிலான கூட்டணியின் உச்சக்கட்டமாகும். இதில் Waffen SS இன் சிறப்பாக உருவாக்கப்பட்ட 14வது கலிசியன் பிரிவின் (மூத்த அதிகாரிகள் தவிர) ஹன்கா உட்பட 2,000ம் படையினர்கள் மற்றும் உக்ரேனிய தேசியவாதிகள் அமைப்பின் (OUN) இரு பிரிவுகளின் ஆதரவாளர்களும் அடங்குவர்.

Waffen-SS கலீசியா படைப்பிரிவின் நாஜி துருப்புக்களில் யாரோஸ்லாவ் ஹன்கா (முன் மையம்). [Photo: Ivan Katchanovski/Twitter or X]

இரண்டாம் உலகப் போரின் தொடக்கத்தில் ஸ்தாபிக்கப்பட்ட உக்ரேனிய கனடிய காங்கிரஸுடன் (UCC) இணைந்து பணியாற்றும் ஒட்டாவா, உக்ரேனிய பாசிஸ்டுகளை அதன் பனிப்போர் கொள்கையின் கருவிகளாகப் பயன்படுத்தியது.

சமீபத்திய தசாப்தங்களில், கனேடிய அரசாங்கம், வாஷிங்டன் மற்றும் அதன் நேட்டோ பங்காளிகளுடன் சேர்ந்து, உக்ரேனை நேட்டோ மற்றும் ஐரோப்பிய யூனியனுடன் இணைத்துக் கொள்வதற்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஆக்ரோஷமாக உழைத்துள்ளதால், UCC மற்றும் உக்ரேனிய அதிதீவிர வலதுசாரிகளுடனான கூட்டணி கனேடிய வெளியுறவுக் கொள்கைக்கு மிகவும் முக்கியமானது.

இது துணைப் பிரதமரும் மற்றும் நிதியமைச்சருமான கிறிஸ்டியா பிரீலேண்ட் என்ற நபரில் பொதிந்துள்ளது. அரசாங்கத்தின் முன்னணி போர் கழுகான பிரீலேண்ட், தனது இளமைப் பருவத்திலிருந்தே UCC உடன் தொடர்பைக் கொண்டிருந்தார். அவரது தாய்வழி தாத்தா, நாஜி ஆக்கிரமிப்பின் கீழ் வெளியிட அனுமதிக்கப்பட்ட ஒரே உக்ரேனிய செய்தித்தாளான கிராகிவ்ஸ்கி விஸ்டியின் தலைமை ஆசிரியராக இருந்தார். Waffen SSன் 14வது கலிசியன் படைப்பிரிவை உருவாக்குவதை அவர் ஆதரித்தார்.

உக்ரேனிய பாசிசத்தை மறுவாழ்வு செய்வதற்கான ஒரு முறையான முயற்சியுடன் எப்படி போர் தீவிரமடைகிறது என்பதற்கு கனேடிய பாராளுமன்றத்தில் ஹன்காவிற்கான கைதட்டல் மிக மோசமான உதாரணம் மட்டுமே ஆகும்.

கடந்த ஜூன் 29 அன்று, ஸ்லாவிக் மொழிகள் மற்றும் இலக்கியத் துறை மற்றும் உக்ரேனிய மாணவர் சங்கம் நிதியுதவி செய்த நிகழ்வில் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் நவ-நாஜி உக்ரேனிய அசோவ் பட்டாலியனுக்கு ஒரு தளத்தை வழங்கியது. பாசிசத்துடன் தொடர்புடைய சின்னங்கள், அசோவ் பட்டாலியனின் உத்தியோகபூர்வ முத்திரை, இது வேண்டுமென்றே நாஜிகளின் வொல்ப்சாங்கல் சின்னத்தின் மாதிரியாக வடிவமைக்கப்பட்டது. இது,வளாகத்தில் நிகழ்வை விளம்பரப்படுத்த பயன்படுத்தப்பட்டது.

கடந்த ஆண்டு, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இரண்டு முக்கிய கட்சிகளின் முன்னணி உறுப்பினர்கள் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள கேபிடலில் உயர் பதவியில் இருக்கும் அசோவ் பட்டாலியன் சிப்பாய்களை சந்தித்தனர்.

ஏகாதிபத்திய இராணுவவாதத்தின் வெடிப்பு தொடர்பாக பாசிசத்தின் மறுவாழ்வு குறிப்பாக ஜேர்மனியில் முன்னேறியுள்ளது. 2014 இல் தொடங்கி, முன்னணி கல்வியாளர்கள், அரசியல் உயரடுக்குகள் மற்றும் ஊடக நிறுவனங்களின் ஆதரவுடன், இரண்டு உலகப் போர்களில் ஜேர்மன் ஏகாதிபத்தியம் செய்த கொடூரமான குற்றங்களை மறைத்து வெள்ளையடிக்க ஒரு பிரச்சாரத்தை ஆரம்பித்தனர், இதில் ஆறு மில்லியன் யூதர்களை அழித்தது மற்றும் சோவியத் ஒன்றியத்துக்கு எதிரான “அழிப்புப் போர்” நடத்தியதும ஆகியவையும் அடங்கும்.

ஆரம்பத்தில் இருந்தே, ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் குற்றங்களின் சார்பியல்மயமாக்கல், ஒரு கொள்ளையடிக்கும் உலகக் கொள்கையான ஜேர்மன் 'சர்வதேச அரசியலை' புதுப்பிக்கும் உந்துதல் மூலம் உயிர்ப்பிக்கப்பட்டது. உக்ரேன் போருடன், பேர்லின் மீண்டும் அதன் கோரமான பற்களை காட்டியுள்ளது. ஜேர்மன் ஏகாதிபத்தியம் ரஷ்யாவை அடிபணியச் செய்து அதன் இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்கும் உந்துதலில் முன்னணிப் பாத்திரத்தை உறுதி செய்வதால், அதன் இராணுவச் செலவுகள் வெடித்துச் சிதறியுள்ளன.

ஏகாதிபத்திய வல்லரசுகளின் ஆளும் உயரடுக்கிற்கு உந்தும் அதே முதலாளித்துவ முரண்பாடுகள், ஹன்கா போன்ற பாசிச வெகுஜன கொலைகாரர்களை தங்கள் கொள்ளையடிக்கும் அபிலாஷைகளைப் பின்தொடர்ந்து அரவணைத்துக்கொள்ள தூண்டுகிறது. இந்த பைத்தியக்காரத்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் திறன் கொண்ட, ஒரே சமூக சக்தியான சர்வதேச தொழிலாள வர்க்கமும் புரட்சிகர போராட்டத்திற்கு உந்துவிக்கிறது.

ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தொழிலாளர்கள், தசாப்தங்களில் மிகப்பெரும் எண்ணிக்கையிலான பெரிய வேலைநிறுத்தங்கள் மற்றும் வெகுஜன எதிர்ப்புக்களின் விளைவாக, போருக்காகவும், நிதிய தன்னலக்குழுவை வளப்படுத்தவும் ஆளும் உயரடுக்கின் உறுதிப்பாட்டிற்கு எதிராக கிளர்ச்சி செய்து வருகின்றனர்.

ஏகாதிபத்தியப் போர் மற்றும் பாசிசத்தின் அச்சுறுத்தல் மற்றும் அவற்றை உற்பத்தி செய்யும் முதலாளித்துவ அமைப்பு ஆகியவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஒரு சோசலிச மற்றும் சர்வதேச வேலைத்திட்டத்தின் அடிப்படையில், உலகளாவிய போர் எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கான போராட்டத்துடன், இந்த சமூகப் போராட்டங்களை இணைப்பதே அவசர பணியாகும்.

Loading