வேலைநிறுத்தங்கள் பரவும் போது சாமானிய இயக்கத்தை கட்டுப்படுத்த பைடென் மற்றும் ஐக்கிய வாகன தொழிலாளர் சங்கத்தினர் பாடுபடுகின்றனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

(866) 847-1086 க்கு AUTO க்கு குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலம் வாகன ஒப்பந்த சண்டை குறித்த உரை செய்தி புதுப்பிப்புகளுக்கு பதிவு செய்யவும். வாகனத் தொழிலாளர்கள் சாமானிய குழு வலையமைப்பின் அடுத்த இணையவழி கூட்டத்தில், வாகன தொழிற்துறை முழுவதும் தொழிலாளர்களை ஒன்றிணைத்து வேலைநிறுத்தம் செய்வது பற்றி விவாதிக்கவும். இதில் கலந்துகொள்ள இங்கே பதிவு செய்யவும்.

கடந்த புதனன்று, வாகனப் பெருநிறுவனங்களுக்கு எதிரான சாமானிய தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம், மூன்று பாரிய (Big Three) கம்பெனிகளில் இருந்து விநியோகஸ்தர்கள் வரையிலும், தொழில்துறை மத்திய மேற்கு முதல் தொலைதூர தெற்கு வரையிலும் பரவியது. அப்போது அலபாமாவில் உள்ள டஸ்கலூசாவில் உள்ள ஆலையில் 200 ZF அடிக்கட்டமைப்பு தொழிலாளர்கள் வெளியேறினர். தொழிலாளர்கள் UAW உறுப்பினர்களாவார், அவர்கள் மேர்சிடிஸ் -பென்ஸ் விநியோகஸ்தர்கள், மற்றும் UAW அதிகாரத்துவம் முன்வைத்த மூன்றாவது விற்றுத்தள்ளும் ஒப்பந்தத்தை நிராகரித்த பிறகு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். ZF இன் டஸ்கலூசா வளாகத்தில் உற்பத்தி நிறுத்தப்பட்டால், அருகிலுள்ள மேர்சிடிஸ் -பென்ஸ் இன் மிகப்பெரிய யூனியன் அல்லாத அசெம்பிளி ஆலையில் உற்பத்தி நிறுத்தப்படலாம்.

அலபாமாவின் டஸ்கலூசாவில் வேலைநிறுத்தம் செய்யும் ZF வாகன உதிரி பாகங்கள் தொழிலாளர்கள் [Photo: UAW]

ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக, பெருநிறுவனங்கள் டெட்ராய்ட், சிகாகோ, செயின்ட் லூயிஸ் மற்றும் பிற தொழில்துறை மையங்களில் உள்ள தொழிலாளர்களை கீழறுக்கவும் பலவீனப்படுத்தவும் தெற்கைப் பயன்படுத்தியுள்ளன. ஆனால் ZF இல் வேலைநிறுத்தம் இப்போது அது உடைந்து வருவதைக் காட்டுகிறது. பிரிட்டிஷ் பைனான்சியல் டைம்ஸ் இந்த வேலைநிறுத்தம் என்பது “மேர்சிடிஸ்-பென்ஸ் அமெரிக்க வாகனத் தொழில்துறை முழுவதும் பரவியுள்ள தொழில்துறை நடவடிக்கை அலைக்குள் இழுக்கப்பட்டுள்ளது” என்றும் மற்றும் “மூன்று பாரிய நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவது போல் அலபாமா தொழிலாளர்கள் தங்களுக்கும் உயர்ந்த ஊதிய உயர்வுகள் மற்றும் சிறந்த சுகாதார நல நன்மைகள் வேண்டும் என்றும் கூறுகிறார்கள்” என்று எழுதியுள்ளது.

மிச்சிகனின் ப்ளூ கிராஸ் ப்ளூ ஷீல்டுக்கு எதிராக 1,400 UAW உறுப்பினர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையிலும், பென்சில்வேனியாவின் பாட்ஸ்டவுனில் டோமெடிக்கிற்கு எதிராக 200 வாகன உதிரிபாக தொழிலாளர்கள் தங்கள் வேலைநிறுத்தத்தை தொடரும் நிலையிலும் ZF வேலைநிறுத்தம் வந்துள்ளது. எல்லா இடங்களிலும் தொழிலாளர்கள் ஒரே கோரிக்கைகளுக்காக போராடுகின்றனர்: சம்பள உயர்வுகள் மற்றும் அடுக்குகள் மற்றும் பணிநீக்கங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தல், தற்காலிக தொழிலாளர்களை பணியமர்த்துதல், முழுமையாக நிதியளிக்கப்பட்ட ஓய்வூதியங்கள் மற்றும் போதுமான சுகாதார வசதிகள் ஆகியவை ஆகும்.

இந்த பெருகிவரும் கிளர்ச்சியானது, வெள்ளை மாளிகையிலும் வோல் ஸ்ட்ரீட்டிலும் ஆழமான கவலைகளைத் தூண்டியுள்ளது, ஏனெனில் இது UAW அதிகாரத்துவத்தின் கட்டுப்பாட்டை மீறிச்செல்லும் ஆற்றலைக் கொண்டுள்ளது, கடந்த வார ஒப்பந்தத்திற்குப் பிறகு UAW இன் 146,000 மூன்று பாரிய நிறுவனங்களின் உறுப்பினர்களில் 12,000 பேரைத் தவிர மற்ற அனைவரையும் அது பணியில் வைத்துள்ளது. நாடு முழுவதும் வரும் வாரங்களில் வாகன உதிரிபாகங்கள் மற்றும் பிற தொழில்களில் பல்லாயிரக்கணக்கான UAW உறுப்பினர்களுக்கான ஒப்பந்தங்கள் காலாவதியாகின்றன.

கடந்த புதனன்று, பைடென் நிர்வாகம் தொழிற்துறை செயலர் ஜூலி சு அல்லது பைடென் ஆலோசகர் ஜீன் ஸ்பெர்லிங்கை டெட்ராய்ட்டுக்கு அனுப்பப் போவதில்லை என்று அறிவித்தது, இது வரவிருக்கும் காட்டிக்கொடுப்பை பற்றி தொழிலாளர்களுக்குத் தெரியப்படுத்துவதுடன் மற்றும் பரந்த எதிர்ப்பைத் தூண்டும் என்ற அச்சத்தினலாகும். வாஷிங்டன் போஸ்ட்டின் படி, கடந்த வெள்ளியன்று பைடென் தனது இரண்டு தூதர்களை டெட்ராய்ட்டுக்கு அனுப்புவதாக அறிவித்ததை அடுத்து அது “UAW அதிகாரிகள்” மத்தியில் கவலையைத் தூண்டியது, ஏனென்றால் சு மற்றும் ஸ்பெர்லிங்கின் பிரசன்னம் நிர்வாகம் பேச்சுவார்த்தைகளை கட்டுப்படுத்துவதற்காக எடுக்கும் திடீர் நடவடிக்கைக்கான அறிகுறியாக சில தொழிலாளர்களினால் பார்க்கப்படும் என்பதினாலாகும்.”

கார்னெல் பல்கலைக்கழகத்தின் தொழில்துறை மற்றும் தொழிலாளர் உறவுகள் துறையின் இயக்குனர் கேட் ப்ரோன்ஃபென்ப்ரென்னரை மேற்கோள் காட்டிய போஸ்ட், “வெள்ளை மாளிகையின் குறுக்கீடு, நல்ல நோக்கத்துடன் இருந்தாலும், சில தொழிலாளர்கள் தங்கள் பிரச்சாரத்தினால் ஏற்பட்ட பலவீனத்தின் அறிகுறியாகவோ அல்லது சலுகைகள் (நிர்வாகத்திற்கு) வழங்கப்பட போகிறது என்பதற்கான அடையாளமாகவோ தான் பார்க்க முடியும்.”

கடந்த ஆண்டு 110,000 ரயில்வே தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை நிறுத்த பைடென் தலையிட்டதை தொழிலாளர்கள் அறிவார்கள். ஜனாதிபதியும் காங்கிரஸில் உள்ள ஜனநாயகக் கட்சியினரும் மற்றும் குடியரசுக் கட்சியினரும் ஒன்று சேர்ந்து வேலைநிறுத்தத்தை சட்டவிரோதமாக்குவதற்கும், வெள்ளை மாளிகையால் முன்மொழியப்பட்ட ஒரு நிறுவன சார்பு ஒப்பந்தத்தை ஏற்குமாறு தொழிலாளர்களை கட்டாயப்படுத்துவதற்கும் ஒன்றாக வந்தனர், அதை ரயில்வே தொழிலாளர்கள் ஏற்கனவே நிராகரித்திருந்தனர்.

வெள்ளை மாளிகை அதிகாரிகள் பல மாதங்களாக UAW அதிகாரத்துவத்துடன் ஒழுங்கு முறையான தொடர்பில் உள்ளனர். பைடென் இப்போது ஒரு பகிரங்கமான தலையீட்டை ஒத்திவைக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்திருப்பாராயின், அதற்கு காரணம் சாமானிய தொழிலாளர்களின் எதிர்ப்பை ஒரு காட்டிக்கொடுப்பு ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள செய்யுமளவுக்கு பெயினால் போதுமான அளவு கட்டுப்படுத்த முடியும் என்று நிர்வாகம் நம்பவில்லை. வெள்ளை மாளிகையின் மேலும் ஒரு தலையீடு, பரந்த வெளிநடப்புகளைத் தூண்டும் மற்றும் ஜனாதிபதி ஆதரவளிக்கும் எந்த ஒப்பந்தமும் நிராகரிக்கப்படும் அபாயத்தைக் கொண்டுள்ளது. அதனால்தான், குறைந்தபட்சம் இப்போதைக்கு தொழிலாளர்களின் போர்க்குணத்தை முறியடிக்க பைடென், UAW அதிகாரத்துவத்தை நம்பியிருக்கிறார்.

UAW “தொழிற்சங்கம் முடிவெடுக்கும் குறிப்பிட்ட ஆலைகளிலுள்ள தொழிலாளர்களை மட்டுமே ஈடுபடுத்தும் வேலை நிறுத்தத்தின” முழு நோக்கமும் தொழிலாளர்களை இருட்டில் வைத்திருப்பது மற்றும் அவர்களை சோர்வடையச் செய்வது, மூன்று பாரிய நிறுவனங்களின் உதிரிபாகங்கள் துறையில் பணிநீக்கங்களை கட்டாயப்படுத்துவது ஆகும். அதே நேரத்தில் பெருநிறுவன கருவூலங்களுக்கு லாபத்தை இறைப்பது மற்றும் உதிரி பாகங்களை சேமித்து வைக்கும் நிறுவனங்களின் முயற்சிகளை எளிதாக்குவது ஆகும். இது ஒரு “வேலைநிறுத்தம்” அல்ல, இது சாமானியர்களை தோற்கடிப்பதற்கான ஒரு தந்திரம் ஆகும்.

தொழிலாள வர்க்கத்தின் வளர்ந்து வரும் இயக்கம், குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சிகளின் கோபமான கருத்துக்களுக்கு வழிவகுத்தது. குடியரசுக் கட்சியின் செனட்டர் டிம் ஸ்காட், 1981 PATCO வேலைநிறுத்தத்தின் போது வேலைநிறுத்தம் செய்த விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு ஊழியர்களை ரொனால்ட் ரீகன் பணிநீக்கம் செய்ததன் மூலம் “எங்களுக்கு ஒரு சிறந்த உதாரணத்தைக் கொடுத்தார்” என்று கூறினார். முன்னணி ஜனநாயகக் கட்சி பிரமுகர்களும் சலுகைகளை கோருகின்றனர், முன்னாள் ஒபாமா “ஆட்டோ ஜார்” மற்றும் முதலீட்டு வங்கியாளர் ஸ்டீவன் ராட்னர் நியூயார்க் டைம்ஸில் “பொருளாதாரத்தின்” நன்மைக்காக மேலும் சலுகைகளை (நிர்வாக சார்பு) ஏற்றுக்கொள்ளுமாறு தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுத்தார், அதன் மூலம் அவர் அர்த்தப்படுத்துவது அவரை போன்ற செல்வந்த பங்குதாரர்களின் நன்மைக்காக அவ்வாறு செய்யவேண்டும் என்பதுதான்.

டைம்ஸ் மற்றும் முன்னணி ஜனநாயகக் கட்சியினர், வாகனத் தொழிலாளர்களின் இயக்கம் மூன்று பாரிய நிறுவனங்களுக்கு எதிராக மட்டும் குறிவைக்கவில்லை, மாறாக வோல் ஸ்ட்ரீட்டின் இரு கட்சிகளுக்கு எதிராகவும் கோபம் அதிகரித்து வருவதால், அது பெருகிய முறையில் அரசியல் தன்மையைப் பெறுகிறது என்று கவலைப்படுகின்றனர்.

செவ்வாயன்று டைம்ஸில், “வேலைநிறுத்தம் செய்யும் வாகனத் தொழிலாளர்கள் பைடெனின் அரவணைப்புக்கு குளிர்ச்சியாக இருக்கிறார்கள்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளி வந்தது. பைடெனும் ஜனநாயகக் கட்சியினரும் “அவரது நன்கு ஒலிக்கும் வார்த்தைகளை விட அவரது உணர்வுகள் அதிகமானது என்றும் அவர் இன்னும் பல சாமானிய UAW உறுப்பினர்களை நம்ப வைக்கவில்லை” என்றும் கட்டுரை குறிப்பிடுகிறது. “இந்த வார இறுதியில் மிச்சிகன் மற்றும் ஓஹியோவில் ஃபோர்டு மற்றும் ஜீப்பில் வேலைநிறுத்தம் செய்யும் இரண்டு டசின் தொழிலாளர்களுடனான நேர்காணல்களில் அதுவே அங்கு நிலவிய பார்வையாக இருந்தது” என்று மேலும் அது குறிப்பிட்டது.

டைம்ஸ் மற்றும் பைடென் நிர்வாகத்தின் முதன்மையான கவலை என்னவென்றால், உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிராக நடந்து வரும் அமெரிக்க/நேட்டோ போரையும், சீனாவிற்கு எதிரான போருக்கான திட்டங்களையும் சாமானிய தொழிலாளர் எதிர்ப்பு அச்சுறுத்துகிறது. இந்தப் போர்களுக்கு பில்லியன் கணக்கான டாலர்கள் தேவைப்படுகின்றன மற்றும் அமெரிக்காவில் போர் உற்பத்திக்காக தொழிலாளர்களை ஒழுங்குபடுத்த வேண்டும். ஷான் பெயினின் கீழ் உள்ள UAW அதிகாரத்துவம் முதலாளித்துவ ஜனநாயகக் கட்சியை ஊக்குவிப்பதற்காக தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறது, முன்னணி ஜனநாயகக் கட்சியினரை பேரணிகளில் பேச அழைக்கிறது மற்றும் அவர்களை தொழிலாளர்களின் “நண்பர்கள்” என்று பொய்யாகக் காட்டுகிறது. வாஷிங்டன் போஸ்ட் புதனன்று இது பிரபலமடையவில்லை என்பதை ஒப்புக்கொண்டது: “உதாரணத்திற்கு ட்விட்டர் என முன்னர் அறியப்பட்ட சமூக ஊடகத் தளமான X இல் UAW இன் கணக்கு, தொழிற்சங்கத்தின் கோரிக்கைகளை ஆதரித்த ஏராளமான ஜனநாயகக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை மறு ட்வீட் செய்துள்ளது” என்று அது தெரிவிக்கிறது.

பாசிச டொனால்ட் டிரம்ப், ஜனநாயகக் கட்சியினருக்கு எதிராக வளர்ந்து வரும் எதிர்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறார், அன்று மாலை திட்டமிடப்பட்ட குடியரசுக் கட்சி விவாதத்தில் கலந்து கொள்வதற்குப் பதிலாக, அடுத்த புதன் கிழமை தொழிலாளர்கள் குழுவுடன் பேசப் போவதாக அறிவித்தார். டிரம்பின் வருகை பற்றிய விவரங்கள் தெரியவில்லை, ஆனால் டிரம்பின் நிகழ்வு, மின்சார வாகனங்களுக்கு மாறுவதற்கான பைடெனின் திட்டத்தை எதிர்க்கும் மற்றும் பெருநிறுவன லாபம் மற்றும் சுரண்டல் மீதான கூடுதல் விதிமுறைகளை நீக்குவதற்கு அழைப்பு விடுக்கும் ஒரு பெரிய – நன்கு தயார் செய்யப்பட்ட ஒரு முயற்சியாக இருக்கும். தொழிலாளர்கள் தங்கள் கோபத்தை பெருநிறுவனங்களுக்கு எதிராக அல்லாமல், மாறாக மெக்சிகோ மற்றும் கனடா போன்ற நாடுகளில் உள்ள தொழிலாளர்களுக்கு எதிராக செலுத்துமாறு டிரம்ப் கூறுகிறார். கடந்த வார இறுதியில் NBC இல் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிரான வாகனத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஆதரிக்கிறீர்களா என்று கேட்டபோது, ட்ரம்ப் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும் சாமானிய தொழிலாளர்களின் எழுச்சியை நசுக்கப் போராடுகையில், வோல் ஸ்ட்ரீட் மற்றும் பெருநிறுவனங்கள் அனைத்தும் தற்போதைய “தொழிற்சங்கம் முடிவெடுக்கும் குறிப்பிட்ட ஆலைகளிலுள்ள தொழிலாளர்களை மட்டுமே ஈடுபடுத்தும் வேலை நிறுத்தம்” எந்தப் பொருளாதாரப் பாதிப்பையும் கொண்டிருக்கவில்லை, ஏனெனில் அது உற்பத்தியை நிறுத்தவில்லை என்பதில் அனைவரும் உடன்படுகின்றன.

கடன் மதிப்பீட்டு நிறுவனத்தின் மூத்த இயக்குனர் ஸ்டீபன் பிரவுன் எழுத்துப்பூர்வ அறிக்கையில், “இந்த முதல் சுற்று வேலைநிறுத்தங்கள் வரையறுக்கப்பட்டதாக இருக்கும் என்பதால், ஆரம்ப நிதி தாக்கம் குறைவாக இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம், ஏனெனில் Ford, GM மற்றும் Stellantis ஆகியவற்றில் தலா ஒரு ஆலையில் மட்டுமே, UAW வேலைநிறுத்தம் செய்கிறது” என்று குறிப்பிட்டார்.

வேலை நிறுத்தம் பரவினால் இந்நிலை மாறும். பைடென் நிர்வாகத்திற்கு நெருக்கமான ஒரு பொருளாதார நிபுணர் டீன் பேக்கர், “இது பொருளாதாரத்திற்கு பெரும் சேதம் விளைவித்தது போல் தெரியவில்லை. ஆனால், இது வாரக்கணக்கில் தொடர்ந்து விரிவடைந்தால், அது உண்மையில் சேதம் விளைவிக்கலாம் “ என்று போஸ்ட்டிடம் கூறினார்.

வேலைநிறுத்தத்தை இந்த மூன்று பாரிய நிறுவனங்கள் முழுவதும் விரிவுபடுத்தவும், கனடாவில் உள்ள தொழிலாளர்களுடன் ஐக்கியப்படவும் சாமானிய தொழிலாளர்கள் போராடுவது அவசரமானது. அங்கு யூனிஃபோர் தொழிற்சங்கம் செவ்வாய் இரவு கடைசி நிமிடத்தில் வேலைநிறுத்தத்தை கைவிட்டு தொழிலாளர்களை வேலை செய்யும்படி உத்தரவிட்டது. ஒன்டாறியோவில் 5,600 தொழிலாளர்கள் பணிபுரியும் போர்டுடன் ஒரு தற்காலிக உடன்பாட்டை எட்டியதாக தொழிற்சங்கம் கூறியது, ஆனால் இதுபற்றி தொழிலாளர்களுக்கு எந்தத் தகவலும் வழங்கவில்லை.

அலபாமாவில் வேலைநிறுத்தம் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் கவலைக்குரிய கருத்துக்கள் போராடுவதற்கான ஒரு சக்திவாய்ந்த மனநிலை இருப்பதை எடுத்துக் காட்டுகின்றன. ஆனால், பெருநிறுவனங்கள், அரசியல் கட்சிகள் மற்றும் UAW மற்றும் Unifor அதிகாரத்துவங்கள், சாமானிய தொழிலாளர்களை பின்னிழுத்து வைத்திருப்பதற்கான அனைத்தையும் செய்கின்றன.

சாமானிய தொழிலாளர்களின் நிலைப்பாட்டில் இருந்து, ஒட்டுமொத்தமான வேலைநிறுத்தத்தைத் தொடங்குவதற்கு எதிராக எந்த நியாயமான வாதமும் இல்லை. தொழிலாளர்கள் தங்கள் பணியிடத்திலும் சமூக ஊடகங்களிலும் தங்கள் சக ஊழியர்களிடம் பேசுவதன் மூலம் இதற்காக போராட வேண்டும். ஒவ்வொரு ஆலைக்குள்ளும் தொடர்புகொள்வது, விவாதங்கள் நடத்துவது மற்றும் வலையமைப்புகளை உருவாக்குவதன் மூலம், தொழிலாளர்கள் முடிந்தவரை விரைவாக முழு வேலைநிறுத்தத்தைத் தொடங்குவதற்கான ஆதரவை உருவாக்க முடியும்.