நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் விசாரணை ட்ரொட்ஸ்கியை கொலை செய்வதற்கான GPU சதியை அம்பலப்படுத்தியது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

ஆகஸ்ட் 20, ஞாயிற்றுக்கிழமை “உலக வரலாற்றின் மையத்தில் ஒரு தீவு: பிரின்கிபோவில் ட்ரொட்ஸ்கி” என்ற தலைப்பில் எரிக் லண்டன் ஆற்றிய உரை பின்வருமாறு. துருக்கியின் இஸ்தான்புல் கடற்கரையில் உள்ள மர்மாரா கடலில் உள்ள பிரிங்கிபோ என்ற தீவில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வு 1929 முதல் 1933 வரை, ட்ரொட்ஸ்கி நாடுகடத்தப்பட்டிருந்த போதான அவரது நான்கு ஆண்டுகால வாழ்க்கையை கௌரவிப்பதற்காக நடத்தப்பட்டது.

லியோன் ட்ரொட்ஸ்கியின் படுகொலை பற்றி விரிவான ஆக்கங்களை எழுதியுள்ள எரிக் லண்டன், உலக சோசலிச வலைத் தளத்தின் ஆசிரியர் குழு உறுப்பினர் ஆவார். முகவர்கள்: ட்ரொட்ஸ்கிச இயக்கத்தினுள் FBI மற்றும் GPU ஊடுருவல் என்ற நூலும் அவர் எழுதியவற்றில் அடங்கும்.

இந்த நினைவு நிகழ்வு பற்றிய உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவர் டேவிட் நோர்த்தின் கருத்துக்கள் இங்கே வெளியிடப்பட்டுள்ளன. முழுப் பதிவையும் Trotsky.com இல் காணலாம்.

“உலக வரலாற்றின் மையத்தில் ஒரு தீவு: பிரிங்கிபோவில் லியோன் ட்ரொட்ஸ்கி” நிகழ்வில் எரிக் லண்டனின் கருத்துக்கள்

ரஷ்யப் புரட்சியின் இணைத் தலைவரான லியோன் ட்ரொட்ஸ்கி, இன்றிலிருந்து எண்பத்தி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, மெக்சிகோ நகரின் புறநகர்ப் பகுதியான கோயோகானில் அவர் நாடுகடத்தப்பட்டு வாழ்ந்த அவரது வீட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்பட்ட ஸ்டாலினின் இரகசியப் பொலிஸின் முகவரால் தாக்கப்பட்டார். ரமோன் மெர்கேடர் என்ற உண்மையான பெயர் கொண்ட கொலையாளி, காவலர்களால் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டிருக்காவிட்டால், இன்னும் ஒரு தசாப்தத்திற்கு அடையாளம் காணப்பட்டிருக்க மாட்டார். கொலையாளியை தனது கணவர் என்று பொய்யாகக் கூறி, ட்ரொட்ஸ்கி தங்கியிருந்த வீட்டு உரிமையாளருக்கு அறிமுகப்படுத்தியதோடு அன்றிரவு ட்ரொட்ஸ்கியின் காவலர்களில் ஒருவரை வீட்டை விட்டு வெளியே அழைத்துச் சென்றவருமான சில்வியா அகலோஃப் என்ற அமெரிக்கப் பெண்மனி கைது செய்யப்பட்டார். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்த ட்ரொட்ஸ்கி 21 ஆகஸ்ட் 1940 அன்று மாலை 7:30 மணிக்கு இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டார்.

ட்ரொட்ஸ்கியின் படுகொலையானது 20 ஆம் நூற்றாண்டின் மிகவும் பின்விளைவுடன் கூடிய அரசியல் படுகொலையாகும். இது ஸ்டாலினிச பெரும் பயங்கரவாதத்தின் உச்சக்கட்டமும், உலக வரலாற்றின் இருண்ட மற்றும் இரத்தக்களரி சதித்திட்டங்களில் ஒன்றினது விளைவுமாகும். ட்ரொட்ஸ்கி எந்த இராணுவத்திற்கும் தளபதியாக இருக்கவில்லை என்றாலும், உத்தியோகபூர்வ அரச பதவியை வகித்திருக்காவிட்டாலும், அவரது குடியுரிமையும் பறிக்கப்பட்டிருந்தாலும், ஸ்டாலினிச அதிகாரத்துவம் சோவியத் அரசின் முழு அதிகாரத்தையும் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு, ட்ரொட்ஸ்கியை நிரந்தரமாக மௌனமாக்கும் ஒரு ஈவிரக்கமற்ற மற்றும் அவநம்பிக்கையான முயற்சிக்கு அதைப் பயன்படுத்தியது.

ஸ்டாலினிச அதிகாரத்துவத்தால் இட்டுக்கட்டப்பட்ட பொய்கள் மற்றும் பொய்மைப்படுத்தல்களின் சர்வதேச பிரச்சாரத்தால் இந்த படுகொலை சதிக்கான அரசியல் களம் தயாரிக்கப்பட்டது. 1936, 1937 மற்றும் 1938 இன் கொடூரமான மொஸ்கோ விசாரணைகள் மூலம், அக்டோபர் புரட்சியின் போது தலைமைதாங்கிய கட்சியின் தலைமைத்துவத்தை அழித்த ஸ்டாலின், ட்ரொட்ஸ்கிக்கு மரண தண்டனை விதித்தார். 1936-39 இன் பெரும் பயங்கரவாதத்தை நியாயப்படுத்தவும், அதை கட்டவிழ்த்துவிடவும் இந்த போலி விசாரணைகள் பயன்படுத்தப்பட்டன. இந்த பயங்கரத்தின் போது ஸ்டாலினும் ரஷ்ய உளவுத் துறையும் (GPU) இலட்சக்கணக்கான பழைய போல்ஷிவிக்குகள், ட்ரொட்ஸ்கிஸ்டுகள், விஞ்ஞானிகள், கலைஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் இராணுவத் தலைவர்களையும் கொன்றனர்.

மாஸ்கோவின் லுபியங்காவில் உள்ள நிர்வாக அலுவலகங்களில் இருந்து, பாவெல் சுடோபிளாடோவின் கீழ் ஸ்டாலினின் உத்தரவின் பேரில் பணிபுரியும் உயர்மட்ட ஜி.பி.யூ. அதிகாரிகள் ட்ரொட்ஸ்கியைக் கொல்லும் நடவடிக்கையை நெறிப்படுத்தினர். இந்த பெரும் பயங்கரவாதத்தின் மோப்பம்பிடிக்கும் நரம்புகள் சோவியத் ஒன்றியத்தின் எல்லைகளுக்கு அப்பாலும் நீண்டிருந்தன. 1937 ஜூலையில், ட்ரொட்ஸ்கியின் முக்கியமான அரசியல் செயலாளரான எர்வின் வுல்பை ஜி.பி.யூ. கடத்தி கொலை செய்தது. ஜி.பி.யூ.வில் இருந்து விலகி நான்காம் அகிலத்திற்கு தனது ஆதரவை அறிவித்த இக்னாட்ஸ் ரெய்ஸை, ஜி.பி.யூ. 1937 செப்டம்பரில் படுகொலை செய்தது. 1938 பெப்ரவரியில் ஜி.பி.யூ. ட்ரொட்ஸ்கியின் மகன் லியோன் செடோவை பாரிஸில் கொன்றது. அந்த ஆண்டின் பிற்பகுதியில், 1938 ஜூலையில், ஸ்டாலினின் முகவர்கள் நான்காம் அகிலத்தின் செயலாளரான ருடால்ஃப் க்ளெமெண்டைக் கடத்திச் சென்றனர். அவருடைய தலையில்லாத மற்றும் கை கால்கள் இல்லாத உடல் செயின் கால்வாயில் கண்டுபிடிக்கப்பட்டது.

ட்ரொட்ஸ்கி, தானே எழுதியது போல், “இந்த பூமியில் விதியின்படி அன்றி, விதிக்கு விதிவிலக்காக” வாழ்ந்தார் என்பதை நன்கு அறிந்திருந்தார். தன் மீதும் தனது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய ஆதரவாளர்கள் மீதும் அழுத்தம் இருந்தாலும், அவர் ஸ்டாலினிச அதிகாரத்துவத்தின் உண்மையான பாத்திரத்தை வெளிக்கொணரும் மற்றும் அம்பலப்படுத்தும் நிலைப்பாட்டில் இருந்தே தனக்கு எதிரான சதியை அவர் ஆய்வு செய்தார். இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு எழுதி முடித்திருந்த ஒரு கட்டுரையில், தனக்கு எதிரான ஸ்டாலினிச சதியின் தோற்றுவாய், ரஷ்யாவில் அதிகாரத்தை அபகரித்துக்கொண்டுள்ள அதிகாரத்துவத்தின் எதிர்ப்புரட்சிகர தன்மையிலேயே உள்ளது என்பதை அவர் தெளிவாக விளக்கினார். அவர் எழுதியதாவது:

என் மீது மொஸ்கோ ஆளும் கும்பல் கொண்டுள்ள வெறுப்பு, நான் அதை “காட்டிக்கொடுத்துவிட்டேன்” என்ற ஆழமாக வேரூன்றிய அதன் நம்பிக்கையினால் உருவானது. இந்தக் குற்றச்சாட்டுக்கு ஒரு வரலாற்று அர்த்தம் உண்டு. … உழைக்கும் மக்களுக்கு எதிராக, அதிகாரத்துவத்தின் நலன்களைப் பாதுகாக்கும் எண்ணம் எனக்கு இல்லை, மாறாக புதிய பிரபுத்துவத்திற்கு எதிராக உழைப்பாளர்களின் நலன்களையே நான் பாதுகாக்கின்றேன் என்பதை அதிகாரத்துவம் புரிந்துகொண்ட பின்னரே, ஸ்டாலின் என்னை நோக்கி முழுமையாக திரும்பியதோடு நான் “துரோகி” என்று அறிவிக்கப்பட்டேன். சலுகை பெற்ற தட்டினரின் உதடுகளில் இந்த அடைமொழி உழைக்கும் வர்க்கத்திற்கான எனது விசுவாசத்திற்கு சான்றாக அமைகிறது.

1929 ஜனவரியில் சோவியத் யூனியனில் இருந்து துருக்கிக்கு நாடு கடத்தப்பட்ட தருணத்தில், ட்ரொட்ஸ்கிக்கு கதவுகளை மூடிய உலகின் மிக சக்திவாய்ந்த ஏகாதிபத்திய அரசாங்கங்களின் உதவியுடன், ஸ்டாலினால் ட்ரொட்ஸ்கியை இறுதியில் படுகொலை செய்ய முடிந்தது. தஞ்சம் அடைவதற்கான ஜனநாயக உரிமையை வழங்கக் கோரி எதிர்ப்புகள் பெருகியபோதும், “ஜனநாயக” ஐரோப்பாவின் அரசாங்கங்கள் ஒவ்வொன்றாக ட்ரொட்ஸ்கியின் முகத்தில் அடிக்கும் வகையில் தங்கள் கதவுகளை இழுத்து அடித்தன. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, 14 மார்ச் 1929 அன்று ஜேர்மன் சமூக ஜனநாயக நிதியமைச்சர் ருடால்ப் ஹில்ஃபர்டிங்கிற்கு அல்பர்ட் ஐன்ஸ்டீன் கடிதமொன்றை எழுதினார். “ஹெர் மந்திரி காயமடைந்த சிங்கமான ட்ரொட்ஸ்கியை உள்ளே நுழைய அனுமதிக்கவில்லையெனில், அவருக்கு அடைக்கலம் கொடுக்கவில்லையெனில். அவர் அமைச்சராக இல்லாவிட்டால், நான் அவரது காதைத் திருகுவேன்...” என ஐன்ஸ்டீன் எழுதினார்.

உலாஸ் அட்டெஸ்ஸி, டேவிட் நோர்த், கலாநிதி மெஹ்மட் அல்கான், மற்றும் எரிக் லண்டன்

ஜேர்மனி, பெரிய பிரித்தானியா, லக்சம்பர்க், பிரான்ஸ், நோர்வே மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளின் மாபெரும் “ஜனநாயக” அரசாங்கங்கள், ட்ரொட்ஸ்கி தஞ்சமடைவதற்கான ஜனநாயக உரிமையை மறுத்தன. பிற்போக்கு அரசாங்கம் தன்னை ஏற்க மறுக்கும் என்று தெரிந்திருந்ததால் அவர் அமெரிக்காவில் புகலிடம் கோருவது பற்றி அக்கறை காட்டவில்லை. புகழிடம் வழங்குவதானது “ஜேர்மனியின் நிதிக் கடனின் ஸ்திரத்தன்மையில் அக்கறை கொண்ட வெளிநாடுகளில் சில பகுதிகளில் மிகவும் சாதகமற்ற தாக்கத்தை ஏற்படுத்தும்,” என கூறிய ஜேர்மன் பத்திரிகையான டொய்சர் அல்கமைன் சைடோங் (Deutsche Allgemeine Zeitung) தஞ்சம் வழங்குவதை எதிர்த்தது.

சோசலிசத்திற்கான ட்ரொட்ஸ்கியின் வாழ்நாள் போராட்டத்தில் உள்ளடங்கியுள்ள புரட்சிகரக் கருத்துக்களின் சக்திக்கு ஏகாதிபத்திய அரசாங்கங்கள் அஞ்சின. தொழிற்கட்சி பிரதமர் ராம்சே மக்டொனால்டின் அமைச்சரவைக் கூட்டத்தில், ட்ரொட்ஸ்கியின் புகலிடம் பற்றிய விடயம் விவாதிக்கப்பட்டபோது, “பிரதமர், வெளியுறவுச் செயலாளர் [ஜே.ஆர். க்ளைன்ஸ்] மற்றும் உள்துறைச் செயலாளரும் [ஆர்தர் ஹென்டர்சன்], ‘அவர் தொலைதூரத்தில் கன்ஸ்டன்டினோப்பிளில் இருக்கிறார், அவர் எங்காவது இருக்க வேண்டும் என்பதில் யாருக்கும் விருப்பமில்லை. நாங்கள் அனைவரும் அவருக்கு பயப்படுகிறோம்,’ என பதிலளித்தமையை, பிரிட்டிஷ் தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜார்ஜ் லான்ஸ்பரி நினைவு கூர்வார்.

24 ஜூன் 1929 திகதியிடப்பட்ட ஒரு ஆவணத்தை 2000ம் ஆண்டில் த கார்டியன் வெளியிட்டது. அது, “பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி போன்ற ஏனைய நாடுகளில் உள்ள ட்ரொட்ஸ்கியின் ஆதரவாளர்கள் ஊக்குவிக்கப்படுவதோடு அது அவர்களின் கம்யூனிஸ்ட் கட்சிகளில் தாக்கத்தை ஏற்படுத்தும்” என்பதால், ட்ரொட்ஸ்கிக்கு அனுமதி வழங்குவதை உள்துறை செயலாளர் க்ளைன்ஸ் எதிர்த்தார் என்பதை வெளிப்படுத்தியது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ட்ரொட்ஸ்கியின் இருப்பே முதலாளித்துவத்தை அச்சுறுத்தியது.

ட்ரொட்ஸ்கி நாடுகடத்தப்பட்டு துருக்கியில் வாழ்ந்த காலம், ட்ரொட்ஸ்கி மற்றும் இடது எதிர்ப்பிற்கு எதிரான ஜி.பி.யூ.யின் நடவடிக்கையின் தீவிர விரிவாக்கத்தைக் குறித்தது. சோப்லெவிசியஸ் சகோதரர்கள் உட்பட, ஜி.பி.யூ. முகவர்கள் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் முக்கிய பதவிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டனர். செனின் மற்றும் வெல் என்ற கட்சிப் பெயர்களான மூலம் அறியப்பட்ட சோப்லெவிசியஸ் சகோதரர்கள், ஜேர்மன் இடது எதிர்ப்பில் முன்னணி பாத்திரங்களை வகித்தனர். பிற்காலத்தில் ஜக் சோபிள் என்று அறியப்பட்ட ஆபிரகாம் சோப்லெவிசியஸ், ப்ரின்கிபோவில் ட்ரொட்ஸ்கியை சந்தித்திருந்தார். பின்னர் அமெரிக்க பெடரல் நீதிமன்றத்தில் தான் நீண்டகால ஜி.பி.யூ. முகவர் என ஒப்புக்கொண்டார்.

பிரிங்கிபோவில் ட்ரொட்ஸ்கியின் காலத்தில் நடந்த ஒரு தீர்க்கமான நிகழ்வு, ட்ரொட்ஸ்கிக்கு எதிரான ஜி.பி.யூ. சதியில் ஒரு மைல்கல்லைக் குறிப்பிடுகிறது. 1929 கோடையில், ட்ரொட்ஸ்கியின் முன்னாள் செயலாளர் ஜேக்கப் ப்ளூம்கின், பிரிங்கிபோவுக்கு வந்து ட்ரொட்ஸ்கியைச் சந்தித்தார். அவர் ரஷ்ய எதிர்க் கட்சிக்கு அரசியல் ஆதரவு தரும் செய்தியுடன் மீண்டும் சோவியத் ஒன்றியத்துக்கு செல்ல ஒப்புக்கொண்டார். ப்ளூம்கின் கண்டுபிடிக்கப்பட்டு ஜி.பி.யூ.விடம் ஒப்படைக்கப்பட்டதை அடுத்து, அவர் 3 நவம்பர் 1929 அன்று சுட்டுக் கொல்லப்பட்டார். வரலாற்றாசிரியர் வாடிம் ரொகோவின், ப்ளூம்கின் படுகொலை செய்யப்பட்டமை “எதிர்க்கட்சிக்காரருக்கு எதிரான முதல் இரத்தக்களரி பழிவாங்கல்” என்று எழுதினார். இவ்வாறு எடுத்துக்காட்டு அமைக்கப்பட்டது.

ட்ரொட்ஸ்கியை ஜி.பி.யூ. சுற்றிவளைத்தமை, உண்மையில், அவர் துருக்கியில் இருந்த காலத்தின் கதையின் ஒரு பக்கம் மட்டுமே. டேவிட் நோர்த் விளக்கியது போல், ட்ரொட்ஸ்கி இந்தத் தீவில் இருந்தபோது அவரது மிக அசாதாரணமான அரசியல் படைப்புக்களை உருவாக்கினார். இங்கிருந்துதான் அவர் என் வாழ்க்கை மற்றும் ரஷ்யப் புரட்சியின் வரலாறு ஆகிய நூல்களை எழுதியதுடன் ஹிட்லர் அதிகாரத்திற்கு வரக்கூடிய பேரழிவு நிலைமைக்கு எதிராக, ஜேர்மன் மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்ட திட்டமிட்ட முறையில் போராடினார். 1933 இல் அவர் பிரான்சிற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டார், பின்னர் 1935 இல் அவர் நோர்வேக்கு நுழைய அனுமதிக்கப்பட்டார். பின்னர் நோர்வே அவரை 1936 டிசம்பரில் மெக்சிகோவிற்கு நாடு கடத்தியது. மெக்சிகோ, துருக்கி ஆகிய இரண்டு நாடுகள் மட்டுமே ட்ரொட்ஸ்கியை வரவேற்றன மற்றும் அவரை நாடு கடத்துவதற்கான அழுத்தத்திற்கு ஒருபோதும் அடிபணியவில்லை.

ட்ரொட்ஸ்கியின் படுகொலையைத் தொடர்ந்து பல தசாப்தங்களாக, ஜி.பி.யூ. எவ்வாறு அவரை கொலை செய்தது என்பது பற்றி எதுவும் தெரியவில்லை. 35 ஆண்டுகளுக்குப் பிறகு, 1975 மே மாதம், அனைத்துலகக் குழு இந்தப் படுகொலை தொடர்பான விசாரணையைத் தொடங்கய பின்னரே, படுகொலையின் உண்மை விவரங்கள் பகிரங்கமாகத் தெரிய வந்தன.

1940 முதல் 1975 வரையான அந்த 35 ஆண்டு காலப்பகுதியில், ட்ரொட்ஸ்கி, அவரது குடும்பத்தினர் அல்லது நான்காம் அகிலத்தின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களின் படுகொலைக்கு பொறுப்பானவர்கள் எவரும் அவர்களின் குற்றங்களுக்காக தண்டிக்கப்படவில்லை. கொலையாளியான ரமோன் மெர்கேடர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு, சோவியத் ஒன்றியத்துக்குச் செல்வதற்கு முன்பு சே குவேராவால் கியூபாவிற்கு வரவேற்கப்பட்டார். அங்கு இந்தக் கொலையாளியை சோவியத் அதிகாரத்துவத்தினர் கொண்டாடினர்.

ஆனால் பாதுகாப்பு மற்றும் நான்காம் அகிலமும் என்ற ஆவணம் உண்மையை வெளிப்படுத்த ஆரம்பித்தன.

இந்த விசாரணையானது நூற்றுக்கணக்கான மணிநேர நேர்காணல்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்கங்களை கொண்ட வரலாற்று ஆவணங்களுடன் பல கண்டங்களில் விரிவுபடுத்தப்பட்ட ஒரு பெரிய அளவிலான வேலைகளை உள்ளடக்கியதாகும். முதன்முறையாக, ஜி.பி.யூ. மற்றும் அமெரிக்க ஏகாதிபத்திய அரசாங்கத்தின் முகவர்கள் ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்குள் ஊடுருவி இருந்தமை குறித்து முறையான விசாரணை நடத்தப்பட்டது. எழுப்பப்பட்ட கேள்விகள், பல தசாப்தங்களுக்கு முன்னரே அவர்களிடம் கேட்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டிருந்தால், இயக்கத்திற்கும் அதன் உறுப்பினர்களுக்கும் ஏற்படவிருந்த கணிசமான சேதத்தைத் தடுத்திருக்க முடியும் மற்றும் ட்ரொட்ஸ்கி உட்பட தலைமைத்துவத்தின் ஆயுளைக் காப்பாற்றியிருக்கலாம் அல்லது நீடித்திருக்கலாம். இந்த விசாரணையின் தொடக்கத்தில் இருந்து டேவிட் நோர்த் முக்கிய பங்கு வகித்தார்.

பாதுகாப்பும் நான்காம் அகிலமும் என்ற விசரணை இப்போது அரை நூற்றாண்டைக் கடந்துள்ளது. இந்த விசாரணையின் விளைவாக, ட்ரொட்ஸ்கிச இயக்கத்தினுள் இருந்த ஜி.பி.யூ. வலையமைப்பின் ஆழம் பற்றி இப்போது நாம் அதிகம் அறிந்திருக்கிறோம். மெக்ஸிகோவில் ட்ரொட்ஸ்கியின் பாதுகாப்பிற்குப் பொறுப்பான கட்சியான, ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் அமெரிக்கப் பிரிவின் தலைவரான ஜேம்ஸ் பி. கனனின் தனிப்பட்ட செயலாளரான சில்வியா காலன், ஒரு உளவு முகவராக இருந்ததை நாம் அறிந்துள்ளோம். காலன் அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றத்தில் தான் ஜி.பி.யூ. முகவராக இருந்ததை ஒப்புக்கொண்டதையும், 1939 முதல் 1947 வரையான தீர்க்கமான ஆண்டுகளில், ஜேம்ஸ் கனனின் மேசையிலிருந்து நான்காம் அகிலத்தின் உறுப்பினர்கள் தொடர்பான அனைத்து முக்கியமான ஆவணங்களையும், நியூ யோர்க் நகரின் மையத்தில் இருந்து சில பகுதிகளுக்கு அப்பால் இருந்த ஜி.பி.யூ. ஒருங்கிணைப்பாளர்களுக்கு அவர் அனுப்பியிருந்தார் என்பதையும் பாதுகாப்பும் நான்காம் அகிலமும் வெளிப்படுத்தியது.

மெக்சிகோ நகரில் ட்ரொட்ஸ்கியின் செயலாளராக இருந்த ஜோசப் ஹன்சன் ஜி.பி.யூ. முகவராக இருந்ததையும் நாம் இப்போது அறிவோம். அமெரிக்க தேசிய ஆவணக் காப்பகத்திலிருந்து வெளியிடப்பட்ட ஆவணங்கள், ட்ரொட்ஸ்கி படுகொலை செய்யப்பட்ட உடனேயே, ஹன்சன் அமெரிக்க தூதரகத்துடன் சந்திப்புகளை நடத்தினார் என்பதை காட்டுகின்றன. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 1938 இல், தான் அமெரிக்காவில் இருந்த ஜி.பி.யூ. உளவுப் பிரிவின் தலைவர் டாக்டர். கிரிகரி ராபினோவிட்ஸை சந்தித்ததாக அந்த கூட்டத்தில் அவர் அறிவித்திருந்தார். பின்னர் அமெரிக்க அரசாங்கத்தின் முகவராக ஆன ஹன்சன், அதே நேரத்தில் 1979 இல் அவர் இறக்கும் வரை நான்காம் அகிலத்தின் அமெரிக்கப் பிரிவின் தலைமைப் பதவிக்கு உயர்ந்தார். பாதுகாப்பும் நான்காம் அகிலமும் வெளிப்படுத்திய ஆவணங்கள், அவர் “தண்டனையின்மைக்கு” ஈடாக, FBI க்கு “தகவல்களை” வழங்க ஒப்புக்கொண்டதைக் காட்டுகின்றன. அமெரிக்க ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் தலைமைக்கு தெரியாமல் அவர் இந்தக் கூட்டங்களை நடத்தினார்.

பாதுகாப்பும் நான்காம் அகிலமும் கண்டுபிடித்த மற்றொரு ஜி.பி.யூ. முகவர் சில்வியா அகலோஃப் ஆவார். படுகொலை செய்யப்பட்ட சிறிது நேரத்துக்குப் பிறகு, ஜி.பி.யூ, ரமோன் மெர்கேடர் மற்றும் ஜோசப் ஹேன்சன் ஆகியோர், அவளை மெர்கேடரால் ஏமாற்றப்பட்ட அப்பாவியாக காட்ட வேலை செய்தனர். ஒரு வெகுளித்தனமான இளம் பெண்ணான அவள் ஏமாற்றப்பட்டு, கொயோகானில் உள்ள ட்ரொட்ஸ்கியின் வளாகத்திற்குள் நுழைய பயன்படுத்தப்பட்டிருக்கலாம், என அவர்கள் காட்டினர். துரதிஷ்டவசமாக இந்தப் பொய்யான கட்டுக்கதை, படுகொலை பற்றிய திரைப்படங்கள் மற்றும் விவரணப்படங்களில் விமர்சனமின்றி ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால், இந்த மாயை உருவாக்கிய முழு கதையும் பொய்யானது என்பதை நாம் இப்போது அறிவோம். அகலோஃப்பின் சகோதரிகள் 1931 இல் சோவியத் ஒன்றியத்துக்குச் சென்று லெனினின் மனைவி க்ருப்ஸ்காயாவைச் சந்தித்தனர். அந்த சமயத்தில், அத்தகைய சந்திப்புக்கு ஸ்டாலினிச அதிகாரத்துவத்துடனான உயர்மட்ட தொடர்புகள் அவசியமாகும். அகலோஃப் எளிதில் ஏமாற்றப்படக் கூடிய ஒரு அப்பாவி பெண் அல்ல. கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உளவியலில் உயர் பட்டம் பெற்ற அவள், மக்கள் அவர்கள் நம்புபவர்களால் ஏமாற்றப்படுவதற்கான வாய்ப்புகள் என்ற தலைப்பில் தனது ஆய்வறிக்கையை எழுதினார்.

இப்போது கிடைத்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில், அகலோஃப் ஒரு ஜி.பி.யூ. முகவர் மட்டுமல்ல, மெர்கேடர் இறுதி தாக்குதலை நடத்தவும், படுகொலையை தானே செய்யவும் தயங்கிய நிலையிலே 1940 கோடையில் மெக்சிகோ நகருக்கு ஜி.பி.யூ.வால் அனுப்பப்பட்டார் என்பது தெளிவாகிறது. படுகொலைக்குப் பிறகு, அவர் மெக்சிகன் பொலிசாரால் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டார். மேலும் இரண்டு வருடங்களுக்கும் மேலாக அவர்கள் ஒன்றாக உறவில் கழித்ததாகக் கூறப்படும் மேர்கேடர் உண்மையில் யார் என்பதை தன்னால் அடையாளம் காண முடியாது என்ற அவளது கூற்றையும் பொலிஸ் நம்ப மறுத்துவிட்டது.

மெக்சிகன் பொலிஸின் முடிவு FBI ஆல் பகிர்ந்து கொள்ளப்பட்டது. “ட்ரொட்ஸ்கி கொலை செய்யப்பட்டதற்குப் பின்னால் இருந்த நோக்கம் என்ன என்பதைத் தீர்மானிக்க பயனுள்ளதாக இருக்கக் கூடிய, அவள் அறிந்திருந்த எல்லா விடயங்களையும் சொல்லவே சொல்லாத” ஒரு “கடுமையான வாடிக்கையாளர்” என அகலோஃப்பைப் பற்றி FBI குறிப்பிட்டிருந்தமை, பாதுகாப்பும் நான்காம் அகிலமும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்ட அறிக்கைகளில் வெளிப்படுத்தப்பட்டது. அகலோஃப் குற்றவாளி என்று வாதிட்ட மெக்சிகன் வக்கீல் பிரான்சிஸ்கோ கபேசா டி வாகா (Francisco Cabeza de Vaca), ஜி.பி.யூ.வின் மரண அச்சுறுத்தல்களை எதிர்கொண்டார். குறிப்பாக அகலோஃப்பின் பாத்திரத்தை சுட்டிக்காட்டியே அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. மேலும் அவர் மேகேடரின் தண்டனைக்குப் பிறகு தெருவில் வைத்து ஜி.பி.யூ.வால் கொலை செய்யப்பட்டார். மெக்சிகன் தேசிய குற்றவியல் அறிவியல் நிறுவனம் (Mexican Instituto Nacional de Ciencias Penales), மற்றும் மறைந்த குற்றவியல் நிபுணர் மார்டின் கேப்ரியல் பாரோன் குரூஸ் எடுத்த நடவடிக்கைகள் மூலம் இது தொடர்பாக தீர்க்கமான வரலாற்றுப் வேலைகள் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டன.

அகலோஃப்பின் குற்றத்தை வெளிப்படுத்தும் அனைத்து உண்மைகளையும் இங்கே மீண்டும் கூற முடியாத போதிலும், கடந்த இரண்டரை ஆண்டுகளில் உலக சோசலிச வலைத் தளம் அந்த உண்மைகளை விவரிக்கும் நான்கு பாகங்கள் அடங்கிய கட்டுரையை வெளியிட்டது. யாரும் அதற்கு முரணாக இதுவரையும் எந்த ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை.

ட்ரொட்ஸ்கி தனது உடல் பாதுகாப்பு குறித்து விதியை நம்பவில்லை. ஸ்ராலினிஸ்டுகளின் அதிகாரங்கள் பிரமாண்டமானவையாக இருந்தாலும், 83 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த படுகொலை தவிர்க்க கூடியதாக இருந்தது. அசாதாரணமான தனிமைப்படுத்தப்பட்ட நிலைமைகளின் கீழ், ஜி.பி.யூ. தனது முழு குடும்பத்தையும் கொலை செய்தபோது அல்லது மரணத்திற்கு தள்ளிய போது, ட்ரொட்ஸ்கி தனது சொந்த வாழ்க்கை மற்றும் வரலாற்றில் அவரது பாத்திரம் பற்றி முற்றிலும் புறநிலையான மற்றும் புரட்சிகர அணுகுமுறையைப் பேணினார். அவர் என் வாழ்க்கை நூலின் இறுதிப் பத்திகளில் எழுதியதாவது:

நான் நாடுகடத்தப்பட்டதிலிருந்து, எனக்கு நேர்ந்த “துன்பம்” என்ற விடயத்தைப் பற்றி செய்தித்தாள்களில் நான் ஒன்றுக்கு மேற்பட்ட முறை படித்திருக்கிறேன். தனிப்பட்ட துன்பம் இல்லை என்பது எனக்குத் தெரியும். புரட்சியின் இரண்டு அத்தியாயங்களின் மாற்றம் எனக்குத் தெரியும். என்னுடைய ஒரு கட்டுரையை வெளியிட்ட அமெரிக்கப் பத்திரிகை ஒன்று அதனுடன் ஒரு ஆழமான குறிப்பையும் இணைத்திருந்தது. அதன் ஆசிரியர் எதிர் தாக்குதல்களை சந்தித்திருந்தாலும், அவரது கட்டுரை சாட்சி பகர்வது போல், அவர் உண்மையின் தெளிவைத் தக்கவைத்திருந்தார். நியாயத்தின் சக்திக்கும் அரசாங்க பதவிக்கும் இடையே, உளவியல் சமநிலைக்கும் தற்போதைய சூழ்நிலைக்கும் இடையே ஒரு தொடர்பை ஏற்படுத்துவதற்கான பிலிஸ்தீனிய முயற்சியையிட்டு எனது ஆச்சரியத்தை மட்டுமே வெளிப்படுத்த முடியும். எனக்குத் தெரியாது, எனக்கு அப்படி எந்த தொடர்பும் இல்லை. சிறையில், கையில் புத்தகம் அல்லது பேனாவுடன், புரட்சியின் வெகுஜனக் கூட்டங்களில் நான் அனுபவித்த அதே ஆழ்ந்த திருப்தியை நான் அனுபவித்தேன்.

இந்த தீவில் எழுதப்பட்ட இந்த நகரும் வார்த்தைகள், புரட்சிகரப் போராட்டத்திற்காகவும், முதலாளித்துவத்திலிருந்து மனிதகுலத்தின் விடுதலைக்காகவும் அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கையை வெளிப்படுத்துகின்றன. ட்ரொட்ஸ்கியின் நம்பிக்கைகள், நமது நம்பிக்கைகள், இன்று மிக மிக பொருத்தமானவையாக இருப்பது மட்டுமல்லாமல், ஏகாதிபத்தியப் போர், காலநிலைப் பேரழிவு, துரிதமாக பரவி வரும் தொற்றுநோய் மற்றும் சமூக சமத்துவமின்மையின் சாதனை நிலைகளை எதிர்கொள்ளும் ஒரு உலகில், தற்போதைய நெருக்கடியைப் புரிந்துகொள்வதற்கும் பதிலளிப்பதற்கும் அவசியமானவை ஆகும். லியோன் ட்ரொட்ஸ்கியின் பாதுகாப்புக்காக (In Defense of Leon Trotsky) நூலின் முன்னுரையில் டேவிட் எழுதியது போல், ட்ரொட்ஸ்கி, முற்றிலும் தனித்துவமான வரலாற்றுப் பாத்திரம் ஆற்றிய தனி நபராவார். டேவிட் எழுதியதாவது:

ட்ரொட்ஸ்கி, சோசலிசப் புரட்சியின் தலைவராகவும், பின்னர் அந்தப் புரட்சியைக் காட்டிக் கொடுத்த ஸ்டாலினிச ஆட்சியின் உறுதியான எதிர்ப்பாளராகவும் இருந்தார். சோவியத் ஒன்றியம் இப்போது இல்லாததோடு ஸ்டாலினிச ஆட்சி “வரலாற்றின் குப்பைத் தொட்டியில்” மறைந்துபோய்விட்டது. ஆனால் ட்ரொட்ஸ்கி இடைவிடாமல் சமகால அரசியல் பிரமுகராக இருக்கிறார். உலக வரலாற்றில் அவரது வாழ்க்கையின் முக்கியத்துவம் ரஷ்யப் புரட்சியில் அவரது பாத்திரத்தை கடந்ததாகும். லியோன் ட்ரொட்ஸ்கி, எல்லாவற்றிற்கும் மேலாக, உலக சோசலிசப் புரட்சியின் மாபெரும் உரிமைக் காவலராகவும், கோட்பாட்டாளராகவும் இருந்தார். அவரது பெயரால் தூண்டப்பட்ட பேரார்வம் ட்ரொட்ஸ்கியின் கருத்துக்களின் நீடித்த முக்கியத்துவத்திற்கு சாட்சியமளிக்கின்றன. ட்ரொட்ஸ்கி பற்றிய வாதங்கள் கடந்த காலத்தில் நடந்தவற்றைப் பற்றியவை அல்ல. அவை இன்று உலகில் என்ன நடக்கிறது, எதிர்காலத்தில் என்ன நடக்கக்கூடும் என்பதைப் பற்றியவை ஆகும்.

இன்று ட்ரொட்ஸ்கிச இயக்கமான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, லியோன் ட்ரொட்ஸ்கியின் வாழ்க்கையை நினைவுகூருவதற்கு மட்டுமன்றி, அவர் முழுக்க முழுக்க தன்னை அர்ப்பணித்துக்கொண்ட காரணத்தை முன்னோக்கி எடுத்துச் செல்வதற்காக, இங்கு பிரின்கிபோவில் இருப்பதில் பெருமை கொள்கிறது. ட்ரொட்ஸ்கியின் வாழ்க்கை மற்றும் அவரது அரசியல் மீதான ஆர்வம், இன்றைய வரலாற்று நிகழ்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது போல், இன்று உலகெங்கிலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பரந்த பார்வையாளர்களை வென்றுள்ளது என்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

ட்ரொட்ஸ்கியின் நாடுகடத்தல் குறித்த பிரின்கிபோ நினைவேந்தலும் தொழிலாள வர்க்கத்தின் பூகோள மீள் எழுச்சியும்

பிரிங்கிபோவில் லியோன் ட்ரொட்ஸ்கியின் ஆண்டுகள்

உலக வரலாற்றின் மையத்தில் ஒரு தீவு: பிரிங்கிபோவில் ட்ரொட்ஸ்கி

சில்வியா அகலோஃப் மற்றும் லியோன் ட்ரொட்ஸ்கியின் படுகொலை

Loading