ஸ்பெயினின் PSOE-பொடமோஸ் அரசாங்கம், பிராந்திய தேர்தல் தோல்விக்குப் பிறகு முன்கூட்டிய தேர்தலுக்கு அழைப்பு விடுக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

ஸ்பெயின் சோசலிஸ்ட் தொழிலாளர் கட்சி (PSOE-Podemos) மற்றும் பொடமோஸ் அரசாங்கத்தின் பிரதம மந்திரி பெட்ரோ சான்செஸ், ஞாயிற்றுக்கிழமை நடந்த பிராந்திய மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலளித்து, 2023 டிசம்பரில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்ட பொதுத் தேர்தலை, நேற்று திடீரென ஜூலை 23-ஆம் தேதி நடத்துவதாக அறிவித்துள்ளார்.

ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் கட்காவில் உள்ள அடாசி இராணுவ தளத்திற்கு தனது விஜயத்தின் போது ஸ்பெயின் துருப்புக்களுடன் பேசுகிறார், லாட்வியா, செவ்வாய், மார்ச். 8, 2022. [AP Photo/Roman Koksarov]

பதவியில் இருப்பதைப் போலவே தோல்வியிலும், ஸ்பானிய சோசலிஸ்ட் தொழிலாளர் கட்சி மற்றும் அதன் போலி-இடது கூட்டணி பங்காளியான பொடமோஸ் ஆகியவை முற்றிலும் பிற்போக்குத்தனமான நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டுள்ளன. அரசாங்கம் தொழிலாள வர்க்கத்தின் மீது மிக அவசரமாகத் தேவையான தாக்குதல்களை திணித்துள்ளதாகவும், வலதுசாரி மக்கள் கட்சி (PP) மற்றும் பாசிச வோக்ஸ் (Vox) கட்சியை இப்போது ஆட்சி செய்ய அனுமதிக்கலாம் என்றும் சான்செஸ் கூறினார்.

‘’பல சோசலிஸ்ட் கட்சியின் [பிராந்திய] முதல்வர்கள் மற்றும் மேயர்களின் குறைபாடற்ற நிர்வாகத்தில், அவர்களின் ஆதரவு அதிகரிப்பதைக் கண்டாலும், பதவியிலிருந்து இடம்மாறுவார்கள். இந்த நிர்வாக அமைப்புகள், மக்கள் கட்சி (Parti Populaire) மற்றும் வோக்ஸ் (Vox) கட்சிகளால் நிர்வகிக்கப்படும். தேர்தல் வாக்குகளின் பொருள் மேலும் ஒரு செய்தியைத் தெரிவிக்கிறது. தேர்தல் முடிவுகளுக்கு நான் முதலில் பொறுப்பேற்கிறேன் மற்றும் மக்கள் விருப்பத்திற்கு பதில் அளித்து நமது ஆணையை சமர்ப்பிக்க வேண்டியது அவசியம் என்று நான் நம்புகிறேன். அரசாங்கம் ஏற்கனவே உறுதியளித்த முக்கிய சீர்திருத்தங்களை நிறைவேற்றியுள்ளது’’ என்று சான்செஸ் கூறினார். 

PSOE-Podemos அரசாங்கத்தின் தோல்வி என்பது, வெளிநாட்டில் ஏகாதிபத்திய போர் மற்றும் உள்நாட்டில் தொழிலாளர்கள் மீதான வர்க்கப் போர் ஆகிய கொள்கையின் விளைவாக ஏற்பட்டதாகும். சான்செஸின் 'சீர்திருத்தங்கள்' தொழிலாள வர்க்கத்தின் மீதான மிருகத்தனமான தாக்குதல்கள் ஆகும். அவரது அரசாங்கம், ஓய்வூதிய வெட்டுக்களின் பாகமாக, ஓய்வூதிய வயதை 67 ஆக உயர்த்தியதோடு, பணவீக்கத்திற்குக் கீழே ஊதிய உயர்வுகளை பரந்த தொழிலாளர்களின் மீது சுமத்தி, தொழிலாளர் சட்டச் சீர்திருத்தத்தை நிறைவேற்றி, பணியிடத்தில் தொழிலாளர்களின் சட்டப் பாதுகாப்புகளைக் குறைக்கிறது. இது ஸ்பானிய வரலாற்றில் மிகப்பெரிய இராணுவ செலவின அதிகரிப்பை, ஆண்டுக்கு €27 பில்லியனுக்கு மேல் திணித்துள்ளது.

PSOE-பொடமோஸ் அரசாங்கத்தின் மனித வாழ்வின் மீதான பாசிசம் என்ற அலட்சியக் கொள்கை, கோவிட்-19 பெருந்தொற்றில் மனித உயிர்களுக்கு மேல் இலாபம் என்ற அதன் கொள்கையில் வெளிப்படுத்தப்பட்டது. இதன் விளைவாக, 160,000 க்கும் அதிகமான கோவிட் இறப்புகள் மற்றும் மில்லியன் கணக்கான நோய்த்தொற்றுகள் ஏற்பட்டுள்ளன. மற்றும் புலம்பெயர்ந்தவர்கள் மீதான காட்டுமிராண்டித்தனமான சிறைத்தண்டனை மற்றும் கொலை, இதில் 37 அகதிகள் ஆபிரிக்காவில் உள்ள ஸ்பானியப் பகுதியான மெலிலாவின் எல்லையில் படுகொலை செய்யப்பட்டனர்.

PSOE - பொடமோஸ் அரசாங்கம், உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோவின் போரில் ஆக்ரோஷமாக இணைந்து கொண்டு, ராக்கெட் லோஞ்சர்கள், கவச வாகனங்கள் மற்றும் டாங்கிகளை அனுப்பியதோடு, ஸ்பெயின் மண்ணில் 850 க்கும் மேற்பட்ட உக்ரேனிய துருப்புகளுக்கு பயிற்சியும் அளித்துள்ளது. இந்த அரசாங்கம் உக்ரேனுக்கு அனுப்பிய ஆயுதங்கள் நவ-நாஜி அசோவ் பட்டாலியனுக்கு சென்றன. இந்த மோதலும், நேட்டோ மற்றும் ரஷ்யப் படைகளுக்கு இடையே நேரடி மோதலின் அதிகரித்து வரும் ஆபத்தும், 2023 ம் ஆண்டின் இரண்டாம் பாதியில் ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) சுழற்சிமுறை தலைமைப் பதவியில் ஸ்பெயினின் ஆறு மாத காலத்தின் மையத்தில் இருக்கும்.

உண்மையில், தனது அரசாங்கத்தை கலைத்தவுடன், சான்செஸ் பின்வருமாறு அறிவித்தார்: ''ஐரோப்பிய ஒன்றிய கவுன்சிலின் சுழற்சிமுறை தலைமைப் பொறுப்பை, மிக முக்கியமான பொறுப்பை நிறைவேற்ற நம் நாடு தயாராகி வருகிறது. இதற்கெல்லாம் இந்த கட்டத்தில் வழிநடத்த வேண்டிய அரசியல் சக்திகள் மற்றும் பயன்படுத்தப்பட வேண்டிய கொள்கைகள் குறித்து ஸ்பானியர்களுக்கு தெளிவு தேவை.''

ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோவின் போரில் ஸ்பானிய மற்றும் ஐரோப்பிய பங்கேற்பிற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பதை 'தெளிவுபடுத்துவது' சான்செஸின் இந்த முன்மொழிவாகும். 1936-1939 ஸ்பெயினின் உள்நாட்டுப் போரின் போது, உழைக்கும் மக்களை நசுக்கிய ஜெனரல் பிரான்சிஸ்கோ பிராங்கோவின் இரத்தம் தோய்ந்த 40 ஆண்டுகால ஆட்சியின் வெளிப்படையான அபிமானிகளான பாசிச வோக்ஸ் கட்சி இடையேயான கூட்டணி, சோவியத் யூனியனுக்கு எதிரான ஹிட்லரின் போருக்கு உதவ அதன் நீலப் படைப்பிரிவையும், பிராங்கோவின் மந்திரிகளால் நிறுவப்பட்ட மக்கள் கட்சியையும் (PP) அனுப்பியது. அத்தோடு, 1978ல் பிராங்கோவாதிகளுடன் இணைந்து பணியாற்றிய சமூக ஜனநாயகவாதிகள் மற்றும் ஸ்ராலினிஸ்டுகளின் மதிப்பிழந்த இன்றைய சந்ததிகளான PSOE மற்றும் பொடமோஸ் தான், ஸ்பெயினின் தற்போதைய பாராளுமன்ற ஆட்சியை அமைத்துள்ளன.

இந்த திடீர் தேர்தல் அழைப்பை ஸ்பெயின் வலதுசாரிகள் கொண்டாடினர். மக்கள் கட்சியின் தலைவர் ஆல்பேட்டோ நூனெஸ் ஃபீஜோ, 'விரைவில் (தேர்தல்) சிறந்தது' என்று கூறினார், அதே நேரத்தில் பாசிச வோக்ஸ் கட்சியின் தலைவர் சாண்டியாகோ அபாஸ்கல், 'பெட்ரோ சான்செஸ்சை உதைத்து அவரது ஒவ்வொரு கொள்கைகளையும் ரத்து செய்ய' வோக்ஸின் அரசியலில் மையமாக இருக்கும் என்று உறுதியளித்தார்.

'நாங்கள் சோகமாக இருக்கிறோம்' என்று பொடமோசின் செய்தித் தொடர்பாளர் பாப்லோ எச்செனிக் அறிவித்தார். PSOE மீது தேர்தல் படுதோல்வியைக் குற்றம்சாட்டும் முயற்சியில், ‘‘உரிமைகளை விரிவுபடுத்தும் போது ஒட்டுமொத்த முற்போக்குக் கூட்டமும் இன்னும் தைரியமாக இருந்திருந்தால்... நிச்சயமாக நாம் இந்த நிலையை அடைந்திருக்க மாட்டோம்.‘‘ ஆனால், PSOE-பொடமோஸ் அரசாங்கம் 'பிரச்சினைகளைத் தீர்க்கவில்லை' என்று அவர் கூறினார்.

உண்மையில், PSOE-Podemos அரசாங்கம் ஒரு உடனடித் தேர்தலுக்கு அழைப்பு விடுத்ததிற்கான காரணம், வலதுசாரிகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்வதற்கும், வாக்காளர்களை அணிதிரட்டவும் அல்ல. மாறாக, முழு அரசியல் ஸ்தாபனத்தால் ஒப்புக்கொள்ளப்பட்ட கொள்கைகளைத் தொடரும் வகையில், அதிகாரத்தை வலதுசாரிகளிடம் ஒப்படைக்கவே, இந்த அவசரத் தேர்தல்களுக்கு அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

ஜூலை 2023 ஸ்பானிய தேர்தல்களில் எந்தக் கட்சி வெற்றிபெற்று, ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோவின் போரில் ஐரோப்பிய முக்கியஸ்தர் ஆகிறதோ, அந்தக் கட்சி உள்நாட்டில் தொழிலாள வர்க்கத்தை கொடூரமாகத் தாக்கும். இது, PSOE-பொடமோஸ் அரசாங்கத்தின் கொள்கைகளின் நேரடித் தொடர்ச்சியாக செயல்படும். உண்மையில், பாசிசம் மற்றும் போரின் ஆபத்துக்கு எதிராக மக்களை அணிதிரட்டுவதற்காக சான்செஸ் திடீரென டிசம்பரில் நடக்க வேண்டிய தேர்தல்களை ஜூலை மாதத்திற்கு கொண்டு வரவில்லை. மாறாக, முழு அரசியல் ஸ்தாபனத்தின் ஆதரவுடன், இதே கொள்கைகளை தொடருவதற்கு, அதிகாரத்தை விட்டுக்கொடுக்கும் வாய்ப்பாக இதனை அவர் கண்டார். 

பிராந்தியத் தேர்தல்களில், மக்கள் கட்சி 31.5 சதவீத வாக்குகளைப் பெற்றது, PSOE க்கு 28.2 சதவீத வாக்குகள் கிடைத்தது. 2019 இல் இதே தேர்தல்களுடன் ஒப்பிடும்போது, ​​PSOEக்கான ஆதரவு 1.2 சதவீதம் சரிந்துள்ளது. அதே நேரத்தில், கிட்டத்தட்ட 9 சதவீத வாக்குகளை அதிகரித்துள்ள மக்கள் கட்சி, மாட்ரிட் பிராந்தியத்திலும் தலைநகர் மாட்ரிட்டிலும்  முழுமையான பெரும்பான்மையைப் பெற்றதோடு, அரகோன், வலென்சியா மற்றும் பலேரிக் பிராந்தியங்களையும் கைப்பற்றியது. 47 பிராந்திய சட்டமியற்றுபவர்களைக் கொண்டிருந்த பாசிச வோக்ஸ் கட்சியானது, தனது வாக்குகளை இரட்டிப்பாக்கி 119 ஆக உயர்த்தியுள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக, பொடமோஸ் 47 பிராந்திய சட்டமியற்றுபவர்களில் இருந்து 15 ஆக தேர்தல் சரிவை சந்தித்து, மாட்ரிட், வலென்சியா மற்றும் கேனரி தீவுகளிலிருந்து துடைத்துக்கட்டப்பட்டது.

சான்செஸ், அடுத்த தேர்தல்களில் இந்தத் தோல்வியை மாற்றியமைக்க பிரச்சாரம் செய்யவில்லை. மாறாக, பொடமோஸ், மக்கள் கட்சி மற்றும் பாசிச வொக்ஸ் கட்சியுடன் ஒரு பொதுவான போர்க் கொள்கையை அவர் தயார் செய்கிறார். 1958 ஆம் ஆண்டு பிராங்கோ சர்வாதிகாரத்தின் போது ஸ்பெயினை சர்வதேச மூலதனத்திற்கு திறப்பதற்காக உருவாக்கப்பட்ட கட்டலான் வணிக அமைப்பான Cercle d'Economia, முன்கூட்டிய தேர்தல்கள் அறிவிக்கப்பட்ட பின்னர் சான்செஸ் கலந்துகொள்ளும் முதல் பொதுக்கூட்டத்தை புதனன்று ஏற்பாடு செய்துள்ளது. கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலின்படி, விவாதத்தின் மையப் பொருளானது உக்ரேனில் நடக்கும் போராகும்.

இந்தக் கூட்டத்தின் பங்கேற்பாளர்களில், மக்கள் கட்சியின் தலைவரும் எதிர்கால பிரதம மந்திரியுமான அல்பேட்டோ ஃபீஜூ, பொடமோஸ் ஆதரவு பெற்ற பார்சிலோனாவின் இடைக்கால மேயர் அடா கொலாவ், ஸ்பெயின் மன்னர் பிலிப் VI, சோசலிஸ்ட் கட்சியின் அதிகாரியும், ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு ஆணையாளருமான ஜோசப் பொரெல், ஏகாதிபத்திய சார்பு சாட்மேன் ஹவுஸ் சிந்தனைக் குழுவின் மூத்த புலனாய்வாளர் யூஜி மற்றும் நேட்டோ பொது இராஜதந்திரத்திற்கான துணை பொதுச் செயலாளர் கார்மென் ரோமெரோ ஆகியோர் பங்கேற்கின்றனர்.

ஸ்பெயின் பங்குச் சந்தைக்கு எதிர்வினையாற்றிய வலதுசாரி நாளிதழான ABC, சான்செஸின் ஆச்சரிய தேர்தல் அறிவிப்பை ''அக்கறையின்மை'' என்று விவரித்தது. இந்த அறிவிப்பு முன்கூட்டியே வங்கிகளுடன் கவனமாக விவாதிக்கப்பட்டது என்பதில் சந்தேகமில்லை. ஜூலை 23 தேர்தலுக்கு பிறகு, சான்செஸ் இருந்தாலும் அல்லது இல்லாவிட்டாலும், அவர்கள் தொடர்ந்து சாதனை லாபத்தைப் பெறுவார்கள் என்று வங்கியாளர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். PSOE- பொடமோஸ் அரசாங்கத்தின் கீழ், 629 பில்லியன் யூரோக்கள் வருவாயில் பெருநிறுவன இலாபங்கள் 2022 இல் 56 பில்லியன் யூரோக்களை எட்டியது. இது 2021ல் இருந்து 35சதவீதம் அதிகமாகும்.

அரசியல் ஸ்தாபனத்தின் பிற்போக்குத்தனமான சூழ்ச்சிகளுக்கு எதிராக வெளிப்படும் சக்தி ஐரோப்பிய மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கமாகும். நேட்டோ ரஷ்யாவிற்கு எதிரான அதன் போரை தீவிரப்படுத்தியிருக்கும் நிலையில், ஜேர்மனி மற்றும் பிரிட்டனில் பணவீக்கத்திற்கு எதிரான பாரிய வேலைநிறுத்தங்கள் மற்றும் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிராக பிரனே (Pyrenees என்பது ஸ்பெயினுக்கும் பிரான்ஸுக்கும் இடைப்பட்ட பிராந்தியம்) முழுவதும் பிரெஞ்சு தொழிலாளர்கள் நடத்திய போராட்டங்களில் இருந்து ஐரோப்பா முழுவதும் வர்க்கப் போராட்ட அலை விரிவடைந்து வருகிறது. ஸ்பெயினில், உலோகத் தொழிலாளர்களின் பாரிய வேலைநிறுத்தங்கள் மற்றும் பார ஊர்தி சாரதிகளின் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தைத் தாக்குவதற்கு பல்லாயிரக்கணக்கான கலகத் தடுப்புப் பொலிஸை PSOE-பொடமோஸ் அரசாங்கம் அனுப்பியது.

முதலாளித்துவம் மற்றும் பொடமோஸ் போன்ற அதன் போலி-இடது பாதுகாவலர்களுக்கு எதிரான போராட்டத்தில், தொழிலாள வர்க்கத்தை வழிநடத்த ஒரு புரட்சிகர தலைமையை கட்டியெழுப்புவதுதான் முக்கியமான கேள்வியாகும். ஸ்பெயினிலும் உலகம் முழுவதிலும், உலகளாவிய ட்ரொட்ஸ்கிச இயக்கமான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின்​​ (ICFI) பிரிவுகள் கட்டியெழுப்பப்பட வேண்டும். அதுவே, பொடமோஸை நிறுவிய ஸ்ராலினிச மற்றும் பப்லோவாத அதிகாரத்துவங்கள் வகிக்கும் பிற்போக்குத்தனமான பாத்திரத்தையிட்டு தொழிலாள வர்க்கத்திற்கு எச்சரிக்கை விடுத்தது. பொடமோஸ் 2019 இல் PSOE உடன் ஒரு கூட்டணியை அமைத்து, ​​2020 இல் PSOE உடன் பதவிக்கு செல்லத் தயாராக இருந்தபோது, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு பின்வருமாறு எச்சரிக்கை விடுத்தது:

1978ல் பாசிச பிராங்கோவின் ஆட்சியுடன் பாராளுமன்ற ஆட்சிக்கு மாறுவதற்கு பேச்சுவார்த்தை நடத்தியதில் இருந்து, ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன நடவடிக்கைகளை திணிப்பதற்கும் ஆப்கானிஸ்தானில் இருந்து லிபியா வரை ஏகாதிபத்திய போர்களை நடத்துவதற்கும் முதலாளித்துவத்தின் முக்கிய கருவியாக PSOE இருந்து வருகிறது. PSOE தொடர்கின்ற பிற்போக்குத்தனமான கொள்கைகளை பொடமோஸ் இப்போது அங்கீகரிக்கிறது.

செல்வந்த பல்கலைக்கழக பேராசிரியர்கள், அரசு அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவம் ஆகியவற்றில் இருந்து, பொடமோஸைக் குறைந்த பிற்போக்குக் கொள்கையைத் தொடர அழைப்பது என்பது பயனற்றதாக இருக்கும். பொடமோஸ், எந்த வகையிலும் அதன் வசதியான நடுத்தர வர்க்க அடித்தளத்தின் செல்வம், சொத்து மற்றும் பொருள் நலன்களை பாதிக்கும் தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு முன்முயற்சியையும் எதிர்க்கிறது.

1930களின் படிப்பினைகளைக் கற்றுக்கொள்ள வேண்டும். இன்று பாசிசத்திற்கு எதிரான போராட்டத்திற்கு, நிதிய பிரபுத்துவத்தை அபகரிப்பதை இலக்காகக் கொண்ட, முதலாளித்துவ சொத்துக்களுக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் தாக்குதலை அவசியமாக்குகிறது.

போர் மற்றும் சிக்கன நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதற்காக PSOE-பொடமோஸ் அரசாங்கத்தை சான்செஸ் கலைத்தது, இந்த மதிப்பீட்டை முழுமையாக நிரூபிக்கிறது.