மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
2023 தேர்தலுக்கு முன்பாக, வழக்கமான தேர்தல் குதிரை பேரம் மற்றும் தேசியவாத பிரச்சார அறிக்கைகளுக்கு மத்தியில், ஆர்ஜென்டினாவில் இடது தொழிலாளர் முன்னணி-ஒற்றுமை (FIT-U அல்லது FIT) என்று அழைக்கப்படும் முன்னணி, உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போரின் தீவிர ஆதரவாளர்களுக்கு ஒரு அரசியல் தளத்தை வழங்குகிறது.
உக்ரேனில் நேட்டோ படைகள் போரைத் தூண்டிவிட்டு, அதனை நடத்துவதில் அவர்களின் பங்கு மறுக்க முடியாததாகி விட்டாலும், ஆர்ஜென்டினாவின் போலி-இடது தேர்தல் கூட்டணியின் இரண்டு முன்னணி பங்காளிகளான சோசலிச இடது (IS) மற்றும் சோசலிச தொழிலாளர் இயக்கம் (MST) ஆகியவை, ரஷ்யாவிற்கு எதிராக அதிக பணம், ஆயுதங்கள் மற்றும் தன்னார்வலர்களை அனுப்புவதற்கான பிரச்சாரத்தை தொடர்ந்து செய்து வருகின்றன.
இடது தொழிலாளர் முன்னணியின் மற்ற இரண்டு முன்னணி பங்காளிகளான சோசலிஸ்ட் தொழிலாளர் கட்சி (PTS) மற்றும் தொழிலாளர் கட்சி (PO) ஆகியன நேட்டோவின் ஏகாதிபத்திய போரை எதிர்ப்பதாகக் கூறுகின்றன. அதே நேரத்தில், சோசலிச இடது மற்றும் சோசலிச தொழிலாளர் இயக்கத்தில் உள்ள தங்கள் 'தோழர்களிடம்' அவர்கள் அனைவரும் முரண்படுவதுடன் உடன்பட முடியும் என்று மரியாதையுடன் கூறுகின்றனர். இந்த சக்திகள் அனைத்தும் ஏகாதிபத்தியத்துக்கு வெளிப்படையான ஆதரவு அளிப்பது என்பது எந்த வகையிலும் அதே பதாகையின் கீழ் தேர்தலில் போட்டியிடுவதற்கு தடையாக இல்லை.
இந்தக் கட்சிகளின் போக்குகள் அனைத்தையும் ஒன்றிணைப்பது அவர்களின் தேசியவாத முன்னோக்கின் நோக்குநிலையாகும், இந்த முன்னோக்கு அவர்களின் சொந்த தேசிய முதலாளித்துவத்துடன் பிரிக்க முடியாத வகையில் அவர்களை பிணைக்கிறது. அவர்கள் இப்போது உக்ரேன் போரில் பிளவுபட்டிருப்பதை பார்க்கும் போது, இது ஆர்ஜென்டினா முதலாளித்துவ ஆளும் வர்க்கத்திற்குள் உள்ள பிளவுகளை பிரதிபலிப்பதாக இருக்கிறது. இது ஒரு புறம் அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்துக்கு தொடர்ந்து அடிபணிந்து வருவதற்கும் மறுபுறம் அப்பிராந்தியத்தில் வளர்ச்சி அடையும் சீனா மற்றும் குறைந்த அளவிற்கு ரஷ்யாவின் பொருளாதார மற்றும் அரசியல் செல்வாக்கிற்கும் இடையே சமன் செய்து செல்வதற்கான வழியை தேடுகிறது.
இதேபோன்ற கணக்கீடுகள் தென் அமெரிக்கா முழுவதும் செய்யப்பட்டு வருகின்றன, பிரேசிலிய ஜனாதிபதி லூலாவின் பெய்ஜிங்கிற்கான பயணம் மற்றும் சர்வதேச வர்த்தகத்தில் அமெரிக்க டொலர் தேவையா என்பது குறித்து அவர் கேள்வி எழுப்பியதற்கு சான்றாகும். உக்ரேனில் ரஷ்யா தனது 'சிறப்பு இராணுவ நடவடிக்கையை' தொடங்குவதற்கு முன்னதாக ஆர்ஜென்டினாவின் ஜனாதிபதி பெர்னாண்டஸ் மாஸ்கோவில் விளாடிமிர் புட்டினை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதலாளித்துவ தேசிய அரசியல் சூழலுக்கு அவர்கள் கீழ்ப்படிந்திருக்கும் நிலையில், சர்வதேச பிரச்சினைகளில் கொள்கையற்ற நிலைப்பாடுகள், பொதுவாக ஆர்ஜென்டினாவில் உள்ள போலி-இடது வட்டத்துக்குள் புருவத்தை உயர்த்துவதில்லை. ஆனால் இம்முறை, இடது தொழிலாளர் முன்னணியின் நிறுவன உறுப்பினராக இருந்த ஜார்ஜ் அல்டமிரா தலைமையிலான தொழிலாளர் அரசியல் குழு 2023 தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது. எனவே, இடது தொழிலாளர் முன்னணி தனது 'நேட்டோவுக்கான ஆதரவிற்காக' கண்டனம் செய்வது அரசியல் ரீதியாக உகந்தது என்று கருதுகிறது.
சமீபத்திய கட்டுரை ஒன்று, 'நேட்டோவின் நேரடி முகவரான செலென்ஸ்கியின் ரஷ்யாவிற்கு எதிரான போரை ஆதரித்ததற்காக' மொரோனோவாத சோசலிஸ்ட் தொழிலாளர் கட்சியில் (PTS) உள்ள அதன் முன்னாள் கூட்டாளிகளை, தொழிலாளர் அரசியல் குழு கண்டனம் செய்தது. பிரான்சில் உள்ள PTS இன் கூட்டாளியான நிரந்திர புரட்சி குழு, (Revolution Permanente) 'உக்ரேனின் சுதந்திரத்தை' ஆதரிப்பது பற்றிய நேட்டோவின் பிரச்சாரத்தை ஊக்குவித்ததாக இக்கட்டுரை குற்றம் சாட்டுகிறது.
இடது தொழிலாளர் முன்னணியின் மற்ற பகுதிகளுடன் சேர்ந்து, PTS 'நேட்டோவை கலைக்க வேண்டும்' என்ற கோரிக்கையை, போரை ஆதரிப்பதற்கான ஒரு மறைப்பாக பயன்படுத்துகிறது.
கடந்த ஆண்டு ஒரு வானொலி நேர்காணலில் அல்டமிரா, இடது தொழிலாளர் முன்னணியின் 'சோசலிச அரசியலின் பற்றாக்குறையால்' பாதிக்கப்பட்டதாகக் கூறினார். இது 'நேட்டோவுக்கான ஆதரவின்' சான்றாகும். இடது தொழிலாளர் முன்னணி கூட்டாக ரஷ்யா உக்ரேனை விட்டு வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்புகிறது. 'இது போரில் நேட்டோவின் நோக்கம்' என்று நேர்காணலில் அல்டமிரா கூறுகிறார். இந்த நிலைமைகளின் கீழ் அமைதிக்கான அழைப்பு, மேலும், நேட்டோவின் வெற்றியைக் குறிக்கும் மற்றும் ரஷ்யாவை 'பிராந்தியப் பிளவுகளுக்கு' உட்படுத்தும்.
இடது தொழிலாளர் முன்னணியின் மாநாட்டில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான எந்த முன்முயற்சியையும் மேற்கொள்ளவில்லை என்றும், நேட்டோவை எதிர்ப்பதாகக் கூறிய போதிலும் 'ஏகாதிபத்திய சார்புக் கண்ணோட்டத்திற்கு' பின்னால் 'இந்த இடதுகள் உறுதியாக ஒன்றுபட்டுள்ளது' என்று ஒரு அறிக்கை புகார் கூறுகிறது.
நேட்டோ பிரச்சாரத்திற்கான 'இடது' ஆர்ஜென்டினாவின் வழித்தடங்கள்
இடது தொழிலாளர் முன்னணியின் (FIT-U) வலதுசாரி குணாதிசயத்தை பளிச்சென்று காட்டிய போதிலும் இந்த விமர்சனங்கள் பாசாங்குத்தனமானவை மற்றும் 'சோசலிச அரசியலுடன்' எந்த சம்பந்தமும் அற்றவை ஆகும். சோசலிச இடது (IS) மற்றும் சோசலிச தொழிலாளர் இயக்கம் (MST) ஆகியவை நேட்டோ பிரச்சாரத்திற்கான 'இடது' ஆர்ஜென்டினாவின் வழித்தடங்களாக மாறியுள்ளன. மேலும் ரஷ்யாவை, ஏகாதிபத்தியம் கூறு போடும் நோக்கத்துடன் நடத்தும் பினாமிப் போரில் உக்ரேனிய தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை பீரங்கித் தீவனமாக ஆக்கவும் மற்றும் சீனாவுடன் ஒரு பரந்த மோதலுக்காக தயார் செய்வதையும் இவை நியாயப்படுத்துகின்றன.
ரஷ்ய 'ஏகாதிபத்தியம்' மற்றும் 'சர்வாதிகாரம்' ஆகியவற்றிற்கு எதிராக 'ஜனநாயகத்தை' பாதுகாப்பது என்ற பெயரில் உக்ரேன் போருக்கு ஆதரவாக இவர்கள் பிரச்சாரம் செய்வதுடன் மட்டும் திருப்தியடையாமல், உக்ரேனில் உள்ள போக்குகள் மற்றும் அவர்களின் பங்காளிகள் ஆயுதங்கள் மற்றும் தன்னார்வலர்களுக்காக பணம் திரட்டுகிறார்கள். அதே சமயம், இராணுவம் மற்றும் செலென்ஸ்கி அரசாங்கத்தில் ஆதிக்கம் செலுத்தும் பாசிச சக்திகளுக்கு வக்காலத்து வாங்குபவர்களாகவும் இவர்கள் இருக்கின்றனர்.
ஆர்ஜென்டினா சோசலிச தொழிலாளர் இயக்கத்தின் தலைமையில் இயங்கும் சர்வதேச சோசலிஸ்ட் லீக்கின் (ISL) உக்ரேனிலில் இருக்கும் முன்னணி நபர் ஓலெக் வெர்னிக், ஒரு தொழிற்சங்க அலுவலர் ஆவார். இவர் செலென்ஸ்கியின் கைப்பாவை ஆட்சிக்கு ஆதரவாக பணியாற்றுவதோடு, போர் முனையில் நேட்டோவின் உத்தரவுகளைப் பின்பற்றும் தன்னார்வலர்களைத் திரட்டினார். இந்தக் கொள்கைகளையும், தீவிர வலதுசாரி உக்ரேனிய தேசியவாதிகளை நோக்கிய அவரது நிலைப்பாட்டையும் நியாயப்படுத்த முற்பட்ட வெர்னிக், அதற்காக அவர் இன அழிப்பு மற்றும் இரண்டாம் உலகப்போரின் போது நாஜிக்களுடன் ஒத்துழைத்த உக்ரேனிய தேசியவாதிகளின் பாசிச அமைப்பை (OUN) புனருத்தாரணம் செய்தார்.
ஜனநாயகம் மற்றும் தேசிய சுயநிர்ணயத்திற்காக தீவிர வலது மற்றும் இடது போக்குகளுக்கு இடையே பாசிச OUN ஒருவித கூட்டணியை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்று கூறி வெர்னிக் வரலாற்றை பொய்யாக்கியுள்ளார்
அதன் பங்கிற்கு, சோசலிச இடது அதன் பாராளுமன்ற உறுப்பினர் ஜுவான் கார்லோஸ் ஜியோர்டானோவை சர்வதேச தொழிலாளர் ஒற்றுமையின் (UIT) குழுவின் தலைவராக கியேவிற்கு 'பொருள் மற்றும் அரசியல் உதவிகளை வழங்குவதற்காக' அனுப்பியது. அந்த உதவியைப் பெற்றுக்கொண்ட அவர்களின் உக்ரேனிய தொடர்பாக இருந்தவர் செர்ஜி மோவ்சான். அவர் தொண்டர் இராணுவத்துக்கு ஆயுதம் அளிப்பதில் கவனம் செலுத்தும் ஒரு அமைப்பான 'ஒற்றுமைக் கூட்டங்களின்' தலைவராவார்.
பெப்ரவரியில், ஜேர்மனியில் ஏகாதிபத்திய சார்பு இடது கட்சியுடன் தொடர்புடைய ரோசா லக்சம்பர்க் அறக்கட்டளைக்கு முன்பாக மோவ்சான் பேசினார். '[உக்ரேனில்] அதி தீவிர வலதுசாரி வன்முறை பொதுவாக முக்கியத்துவமற்றது” என்று வலியுறுத்திய அவர், மேலும் தனது குழு நாட்டில் தீவிர வலதுசாரிகளுடன் ஒரு 'போர் நிறுத்தத்தை' அனுபவித்து வருவதாகவும் கூறினார். “சமீபத்தில் எனக்கு முன்பு அறிமுகமான ஒரு தீவிர வலதுசாரி ஆர்வலரான ஒருவரை நான் தெருவில் சந்தித்தேன். நாங்கள் நன்றாக உரையாடினோம், சில விஷயங்களில் அவர் எனக்கு உதவ முன்வந்தார்,” என்று அவர் கூறினார்.
அதே பதாகையின் கீழ் பல வருட ஒத்துழைப்பு மற்றும் பிரச்சாரம் செய்த பிறகு அல்டாமிராவும் கூட்டாளிகளும் இந்த வலதுசாரிக் கொள்கைகளுக்கான பொறுப்பை பகிர்ந்து கொள்கின்றன, இன்று அவர்களின் விமர்சனங்கள் இதை மூடிமறைக்கும் ஒரு முயற்சி மட்டுமே ஆகும்.
அல்டாமிராவின் தொழிலாளர் அரசியலின் தற்போதைய தேர்தல் பிரச்சாரம் அடிப்படையில் இடது தொழிலாளர் முன்னணியின் அல்லது அந்த விஷயத்தில் மற்ற முதலாளித்துவக் கட்சிகளுடன் ஒத்துப்போகிறது. இது தெளிவற்ற மாகாணவாத முன்மொழிவுகளில் கவனம் செலுத்துகிறது மேலும் போர் மற்றும் பூகோள வர்க்கப் போராட்டத்தின் மீள் எழுச்சியை இரண்டாம் நிலை விஷயங்களுக்குத் தள்ளுகிறது.
'இடது தொழிலாளர் முன்னணியுடன் முறித்துக்கொள்பவர் யாராக இருந்தாலும் அவர் தற்கொலை செய்து கொள்கிறார்'
'இடது தொழிலாளர் முன்னணியுடன் முறித்துக்கொள்பவர் தற்கொலை செய்து கொள்கிறார்' என்று, அதன் முதல் ஜனாதிபதி வேட்பாளர் அல்டாமிரா கூறினார். இப்போது அவரது கூட்டணி என்பது ஆளும் முதலாளித்துவ பெரோனிசப் போக்கான 'கிர்ச்னரிசத்தின் ஒரு மாறுபாடு' என்று கூறுகிறார். இருப்பினும், இது அல்டாமிரா அவர்களுடன் கூட்டு சேர்வதை இது ஒருபோதும் நிறுத்தவில்லை.
சிரியாவில் பஷர் அல்-அசாத் மற்றும் லிபியாவில் மும்மர் கடாபிக்கு எதிரான CIA-ஆதரவு ஆட்சி மாற்ற நடவடிக்கைகளுக்கு, அல்டாமிராவின் கூட்டணி பங்காளிகள் உற்சாகமான ஆதரவு அளித்த பிறகும் அவர் இந்தக் கூட்டணியில் தொடர்ந்தார், இதில் ‘வெகுஜன கிளர்ச்சி” மற்றும் 'ஜனநாயகப் புரட்சி' ஆகியவற்றுக்கு ஆயுத உதவி அளிக்கப்படவேண்டும் என்ற அவரது அறைகூவலும் உள்ளடங்கும். .
2014 இல், தேர்ந்தெடுக்கப்பட்ட ரஷ்ய-சார்பு விக்டர் யானுகோவிச்சின் அரசாங்கத்தை தூக்கியெறிவதற்கு பாசிச தலைமையிலான மற்றும் வெளியுறவுத்துறை நிதியுதவி இயக்கம் 'ஜனநாயகப் புரட்சி' என்று IS கொண்டாடிய போதும், அல்டமிரா மற்றும் PTS தலைமையிலான PO, அவர்களின் கூட்டணியை உடைக்க எந்த காரணத்தையும் பார்க்கவில்லை. இந்த சதிதான் கியேவில் அமெரிக்க சார்பு பொம்மை ஆட்சியை அதிகாரத்திற்கு கொண்டு வந்தது மற்றும் ரஷ்யாவிற்கு எதிரான தற்போதைய போரை திறம்பட துவக்கியுள்ளது.
அல்டாமிரா IS மற்றும் MST உடன் தோளோடு தோள் நின்று மறுபடியும் பிரச்சாரம் செய்ய மாட்டார் என்று நம்புவதற்கு எந்த காரணமும் இல்லை. மேலும் ஜூன் 2019 இல் PO இல் இருந்து ஒரு கொள்கையற்ற மற்றும் அரசியல் ரீதியாக தெளிவுபடுத்தப்படாத பிளவுக்கு பிறகு அவரது போக்கு வெளியேற்றப்படவில்லை என்றால் இடது தொழிலாளர் முன்னணி மீதான எந்தவொரு விமர்சனத்தையும் 'குறுங்குழுவாதம்' என்று கண்டனம் செய்திருப்பார்.
இந்த பிளவுக்கு சில நாட்களுக்கு முன்பு தான், அல்டாமிரா, PTS ஆல் முன்மொழியப்பட்ட 'ஒரு சந்தர்ப்பவாத வழி முறை' மூலமாக FIT-U உருவாக்கப்பட்டது என்று எழுதினார், அவர் அதற்கு முன்பு 'குழந்தை இடைத்துணி கோலத்தில் பொடமோஸ்' என்று அதனை விவரித்தார், அவர் குறிப்பிடுவது தற்போது ஸ்பெயினில் முதலாளித்துவ கட்சி அதிகாரத்தை பகிர்ந்து கொள்கிறது.
'MSTயின் வர்க்க ஒத்துழைப்பின் நீண்ட பதிவை FIT பூசி மெழுகுகிறது.' கூட்டணியின் 'செயல்திட்ட அறிக்கை', 'வர்க்க-ஒத்துழைப்பு மக்கள் முன்னணி'க்கான அழைப்பை பிரதிபலிக்கிறது என்று அல்டமிரா கூறினார். 'மூலதனப் பயணத்தைத் தடுப்பது' மற்றும் 'மலிவான கடன்களை வழங்குதல்' உள்ளிட்ட அந்த மேடையின் கோரிக்கைகளை 'முதலாளித்துவம்' என்று அவர் விவரித்தார்.
இடது தொழிலாளர் முன்னணி என்பது இடதுசாரி அல்லது தொழிலாளர் அமைப்பு அல்ல என்பதை திறம்பட நிரூபிக்கும் இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்த பிறகு, அல்டாமிரா, PO கூட்டணிக்குள் இருக்க வேண்டும் என்றும், 'அதிக நாடாளுமன்ற இடங்களைப் பெறுவதற்கு' பிரச்சாரம் செய்ய வேண்டும் என்றும் விளக்கினார். அவரது வெற்று 'இடதுவாதம்' மற்றும் பாசாங்குத்தனமான தத்துவார்த்த விவாதங்களுக்கு இது மிகவும் அதிகமாக இருக்கிறது.
குறிப்பிடத்தக்க வகையில், 1985 இல் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் நஹுவேல் மோரேனோ நிறுவிய சோசலிஸ்ட் நோக்கிய இயக்கம் (MAS) ஆகியவற்றுக்கு இடையேயான தேர்தல் கூட்டணியாக 1985 இல் உருவாக்கப்பட்ட மக்கள் முன்னணியை (FREPU) மறுபடியும் FIT-U ஐ சோசலிஸ்ட் இடது (IS) என்று கருதுவதாக அல்டமிரா ஒப்புக்கொண்டார். 1987 இல் மோரேனோவின் மரணத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட பிளவுகளில், PTS, MST, IS, PSTU மற்றும் பல குழுக்கள் தோன்றின.
உக்ரேனில் சர்வாதிகார மற்றும் அதிதீவிர வலதுசாரி சக்திகளுடன் கூட்டணிக்கு போலி-இடதுகள் அளிக்கும் ஆதரவு ஆர்ஜென்டினாவிலும் செயல்படுத்தப்படலாம் என்று கூறுவது வெறும் ஊகம் அல்ல. பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களைக் கொன்ற பாசிச ஆர்ஜென்டினா இராணுவ ஆட்சியை ஆதரித்த ஸ்ராலினிஸ்டுகளுடன் வைத்திருந்த முந்தைய கூட்டணியை இடது தொழிலாளர் முன்னணியில் உள்ள மொரேனாவாதிகள் வெளிப்படையாகவே பாதுகாக்கின்றனர். FREPU நிறுவப்படுவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே சர்வாதிகாரம் அதிகாரத்தை கைவிட்டது.
ஸ்ராலினிசத்துடன் கூட்டணியில் 'நான்காம் அகிலத்தை மீண்டும் நிறுவுதல்'
அல்டாமிராவுக்கும் இது பொருந்தும். ஏப்ரல் 2018 இல், வெடிப்பதற்கு ஒரு வருடத்திற்கு முன்பு, 'நான்காம் அகிலத்தை மீண்டும் நிறுவ' ரஷ்யாவிலும் சர்வதேச அளவிலும் பாசிச சக்திகளுடன் இணைந்து புட்டின் அரசாங்கத்தை ஆதரிக்கும் ஸ்ராலினிச ரஷ்யா ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி (OKP) உடன் சேர்ந்து ஒரு மாநாட்டை தொழிலாளர் கட்சி (PO) ஏற்பாடு செய்தது.
உலக சோசலிச வலைத் தளம் இந்த பிற்போக்கு நிகழ்வை முறைப்படியாக அம்பலப்படுத்தியது, இந்த நிகழ்வு அல்டமிராவால் கிரேக்க தொழிலாளர் புரட்சிக் கட்சியின் (EEK) சவேஸ் மைக்கேல்-மட்சாஸ் உடன் இணைந்து வலதுசாரி தேசியவாத அரசியலின் அடிப்படையிலும், நான்காம் அகிலத்தின் வரலாற்றை முழுமையாக நிராகரிக்கும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நிகழ்வில், ரஷ்யா ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான செயலாளரான தர்யா மிட்டினா ஒரு முக்கிய பேச்சாளராக இருந்ததை அல்டமிரா தானே நியாயப்படுத்தினார். 'ரஷ்யாவில் கம்யூனிசத்தின் பாரம்பரியத்தின் சார்பாகப் பேசும் ஒரு தோழர் உங்களிடம் இருந்தார், அது அவருக்கு ஸ்ராலினிசமாக இருக்கும்... நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு படி முன்னேற முடியுமா என்பது பற்றியும், ஒரு சர்வதேச கட்டுமானத்தை நோக்கியும் இந்தத் தோழர்களுடன் அரசியல் விவாதங்களை நடத்தி வருகிறோம். …” என்று அல்டமிரா கூறினார்.
ரஷ்ய ஸ்ராலினிஸ்டுகளுடன் PO செய்த உடன்படிக்கைக்கு பின்னால், 'முதலாளித்துவ தேசியவாத மற்றும் வலதுசாரி நீரோட்டங்களுடனும் கூட ஒரு கூட்டணியை உள்ளடக்கிய ஒரு ஆழமான பிற்போக்கு அச்சாணி தயாரிக்கப்படுகிறது' என்று WSWS எச்சரித்தது, அதன் நோக்கம் 'தொழிலாளர் வர்க்கத்தை முதலாளித்துவத்திற்கு துல்லியமாக அடிபணிய வைப்பதாகும். அது திட்டவட்டமாக ஒவ்வொரு கண்டத்திலும் வர்க்கப் போராட்டத்தின் மீள் எழுச்சி தோன்றிவரும் ஒரு புள்ளியில் தான் நிகழ்கிறது..
அல்டாமிரிஸ்டுகள் 'ரஷ்ய சார்பு' என்பதற்கு ஆதாரமாக PTS சமீபத்தில் இந்த சம்பவத்தை எழுப்பியது. இருப்பினும், PO பிளவுக்கு பிறகு வரையிலும் PTS இந்த நிகழ்வு குறித்து எந்தப் பிரச்சினையும் எழுப்பவில்லை. இந்தப் போக்குகளுக்கு இடையே உள்ள போலியான விவாதங்களை, 'கவனி, நீங்கள் எங்களை விட மிகவும் பிற்போக்காளர்கள்' என்று சுருக்கமாகக் கூறலாம்.
அல்டமிராவின் தொழிலாளர் அரசியல் PTS க்கு கடந்த வாரம் ஒரு கட்டுரையின் மூலமாக பதிலளித்தது, அதன் 2018 'மீண்டும் நிறுவும்' மாநாடு குறித்து வெட்கமின்றி அதன் வாசகர்களிடம் பொய் சொல்லி பாதுகாக்க முயன்றது. 'ரஷ்யாவிற்குள்ளேயே எதிர்ப்பின் ஒரு சிறுபான்மைக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் ஸ்ராலினிஸ்டுடன் விவாதம் நடத்துவது 'சுவாரஸ்யமாக இருந்தது' என்று அவர்கள் எழுதினர். 'முன்னாள் ஸ்டாலினிஸ்ட்' மிட்டினா ஆண்டுக்கு இரண்டு முறை ஸ்டாலினின் கல்லறைக்கு பூக்களை எடுத்துச் செல்வதாக பெருமையுடன் எழுதுகிறார். தனது அரசியலை மூடிமறைக்கும் முயற்சியை, அத்தகைய சக்திகளுடன் ஒரு அரசியல் கூட்டணியை பராமரித்து வருவதற்கான அவர்களின் நோக்கத்தை வைத்துத்தான் விளக்க முடியும்.
உண்மையில், ஜூன் 2022 இல், PO உடன் முறித்துக் கொண்டபோது அல்டாமிரா பிரிவைப் பின்பற்றிய வரலாற்றாசிரியரான Osvaldo Coggiola, EEK தலைமையில் 'கிறிஸ்டியன் ரகோவ்ஸ்கி சர்வதேச மையம்' ஏற்பாடு செய்த 'அவசரகால சர்வதேச போர் எதிர்ப்பு மாநாட்டில்' பங்கேற்றார். அது EEK தலைவர் சவாஸ் மைக்கேல்-மட்சாஸ் மற்றும் தர்யா மிட்டினாவால் இணைந்து நடத்தப்பட்டது. இதில் முன்னாள் புட்டின் ஆலோசகரான மிட்டினாவின் கணவர் சைட் கஃபுரோவின் பிரபலமான பங்கேற்பும் உள்ளடங்கி இருந்தது.
”பூகோள மூலதனத்திற்கு' எதிரான போராட்டத்தில் 'புட்டின் எங்கள் கூட்டாளி, அதற்கு கூடுதலாகவும் இல்லை, குறைவாகவும் இல்லை' என்பதே ரஷ்யா ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு என்று கஃபுரோவ் விளக்கினார். 'உக்ரேன் மற்றும் ரஷ்யாவில் உள்ள தொழிலாள வர்க்கம் ஒன்று சேர்ந்து புட்டின் மீது அழுத்தம் கொடுத்தது' தான், அவர் இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள அவரை கட்டாயப்படுத்தியது. இது, 'உக்ரேன் மற்றும் ரஷ்யாவில் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான பாத்திரமாக இருந்தது... நாம் சர்வதேச வர்க்கப் போராட்டத்தின் ஒரு பகுதியாக அவரை [புட்டினை] பயன்படுத்த வேண்டும்' என்று அவர் மேலும் கூறினார்.
மாநாட்டிற்கு முன்பே, ரகோவ்ஸ்கி மையம் தொழிலாளர்களிடம் 'நடுநிலையாக இருக்க வேண்டாம்' என்றும் போரில் ரஷ்யாவின் இராணுவ வெற்றிக்காக போராடுமாறும் அழைப்பு விடுத்தது, அதை 'ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டம்' என்றவாறாக காண்பித்தது.
உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பை ஒரு 'ஏகாதிபத்திய எதிர்ப்பு' போராட்டமாக சித்தரிக்கும் இந்த முயற்சிகள், லத்தீன் அமெரிக்காவிலும் பிற இடங்களிலும் உள்ள எவ்வகையிலும் முக்கியத்துவம் குறையாத குட்டி முதலாளித்துவ தேசியவாத தட்டுக்களின் கண்ணோட்டத்துடன் ஒன்றாக இணைகிறது, அவர்கள் அமெரிக்க எதிர்ப்பு மற்றும் ஒரு புதிய 'பன்முக' உலக ஒழுங்கு குறித்த மாயையில் உள்ளனர். ஏகாதிபத்திய போருக்கான ஒரே பதிலாக இருக்கக்கூடிய தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரமான பாத்திரத்தை நிராகரிப்பதில் அவர்கள் ஒன்றுபட்டுள்ளனர்.
உக்ரேனில் புட்டினின் 'சிறப்பு இராணுவ நடவடிக்கையில்' முற்போக்கானதாக எதுவும் கிடையாது. மேலும் அதை ஏகாதிபத்திய எதிர்ப்பு என்று கூட கூற முடியாது. அது, அமெரிக்கா மற்றும் நேட்டோவின் வளர்ந்து வரும் இராணுவ அழுத்தத்திற்கு அவர் தலைமை தாங்கும் முதலாளித்துவ அரசின் பிற்போக்குத்தனமான பதிலாக இருக்கிறது. இது ஏகாதிபத்தியத்தை தோற்கடிக்கும் திசையில் அல்லாமல் ரஷ்ய நிதிய தன்னலக்குழுக்களை கொண்ட ஆளும் வர்க்கத்தின் பொருளாதார நலன்களைப் பாதுகாப்பதில் உள்ளது. அவர்கள் சோவியத் ஒன்றியத்தின் முன்னைய தேசியமயமாக்கப்பட்ட சொத்துக்களை சூறையாடியதன் மூலம் தங்களை வளப்படுத்திக் கொண்டவர்கள் ஆவர். இந்த விஷயத்தில் ரஷ்யா மற்றும் உக்ரேனின் ஆளும் வர்க்கங்கள் ஒரே குற்றவியல் வேர்களைப் பகிர்ந்து கொள்கின்றன.
'ஐரோப்பாவிற்கு உண்மையான தேசிய சுயநிர்ணயம்'
அல்டாமிரா பிரிவில் இணைந்த மற்றொரு வரலாற்றாசிரியரான டானியல் கைடோ, “ஐரோப்பிய நாடுகளை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சிற்றரசுகளாக மாற்றும் இராணுவ மற்றும் அரசியல் அமைப்புகளை அகற்றிய பின்னரே உண்மையான தேசிய சுயநிர்ணயம் குறித்தும் மற்றும் ஐரோப்பாவில், எதிர்கால போர்கள் வெடிப்பதைத் தடுக்க ஒரு கண்டம் தழுவிய கூட்டமைப்பை உருவாக்கும் சாத்தியம் உட்பட பேச முடியும்' என்று குறிப்பிட்டார்.
மார்ச் மாதம் சர்வதேச விமர்சன சிந்தனை இதழில் அவர் வெளியிட்ட இந்த நிலைப்பாட்டின்படி, போர்களுக்கான உண்மையான தோற்றுவாயாக இருக்கும், முதலாளித்துவத்தையும் அதன் தேசிய-அரசு அமைப்பையும் தூக்கியெறிவதற்கு தொழிலாளர்கள் மேற்கொள்ள வேண்டிய எந்தவொரு சுயாதீனமான போராட்டமும், நிகழ்ச்சி நிரலில் இல்லை என்பதாகும். பதிலாக பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் மற்ற ஐரோப்பாவில் உள்ள தொழிலாளர்கள் 'உண்மையான தேசிய சுயநிர்ணயத்தை' நிறுவுவதில் அந்தந்த முதலாளித்துவ வர்க்கங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று கைடோ அர்த்தப்படுத்திக் கூறுகிறார்.
இவரின் கருத்துப்படி தற்போதைய சூழலில், ஐரோப்பாவில் அமெரிக்க ஆதிக்கத்துக்கு சவால் விடும் வகையில் இராணுவக் கட்டமைப்பிற்கு நிதியளிப்பதற்காகவும் சமூக வெட்டுக்கள் மற்றும் வாழ்க்கைத் தரங்கள் மீதான பிற தாக்குதல்களுக்காகவும் இந்த ஆளும் வர்க்கங்கள் வைக்கும் கோரிக்கைகளுக்கு அடிபணிவதாகும். இது வெளிப்படையாக பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் கொள்கையாகும், அவர் சமீபத்தில் தனது சிக்கன ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்து வீதிகளில் திரண்ட மக்களுக்கு எதிராக இராணுவமயமாக்கப்பட்ட கலகத் தடுப்புப் பொலிஸைத் திருப்பியிருந்தாலும் கூட, ஐரோப்பா வாஷிங்டனுக்கு ஒரு 'சிற்றரசாக' இருக்க முடியாது என்று வலியுறுத்தினார்.
உலக சோசலிச வலைத்தளத்தின் ஆசிரியர் டேவிட் நோர்த் தனது நாம் காக்கும் மரபு என்ற நூலிற்கான 2018ம் ஆண்டு முன்னுரையில் அம்பலப்படுத்தியது போல், கெய்டோ ஏற்கனவே வேலியா லுபரெல்லோவுடன் இணைந்து 'ஒரு புரட்சிகர காலத்தில் வியூகம் மற்றும் தந்திரோபாயங்கள்: அமெரிக்க ட்ரொட்ஸ்கிசம் மற்றும் ஐரோப்பிய புரட்சி, 1943-1946' என்ற தலைப்பில் இதேபோன்ற வாதத்தை வைத்திருந்தார். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அமெரிக்க சோசலிஸ்ட் தொழிலாளர் கட்சிக்குள் பீலிக்ஸ் மோரோ மற்றும் ஆல்பர்ட் கோல்ட்மேன் தலைமையிலான பிரிவு முன்னெடுத்த நிலைப்பாட்டை நான்காம் அகிலம் பின்பற்றியிருக்க வேண்டும் என்று இந்தக் கட்டுரை வலியுறுத்தியது: ‘’கண்டம் முழுவதும் தொழிலாளர்கள் ஆயுதம் ஏந்திய போதும் முதலாளித்துவத்தின் காட்டுமிராண்டித்தனமான குற்றங்களால் தீவிரமயமாக்கப்பட்ட போதிலும் கூட ஐரோப்பாவில் எந்த புரட்சிகர சூழ்நிலையும் இருக்கவில்லை. ட்ரொட்ஸ்கிச இயக்கம் முதலாளித்துவ ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான இயக்கமாக தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும்’’ என்று இக்கட்டுரை மேலும் தெரிவித்தது.
நான்காம் அகிலத்தை முதலாளித்துவ ஜனநாயகத்தின் பிற்சேர்க்கையாக மாற்றத் தவறியதே நான்காம் அகிலத்தில் இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய நெருக்கடிகளுக்கு உண்மையான ஆதாரம் என்றும், ஒரு பத்தாண்டுக்கு பின்னர் ஸ்ராலினிசம், முதலாளித்துவ ஜனநாயகம் மற்றும் குட்டி முதலாளித்துவ தேசியவாதத்திற்குள் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தை கலைப்பதற்கு மைக்கேல் பாப்லோ தலைமையிலான திருத்தல்வாத போக்கு எடுத்த முயற்சிகள் அல்ல என்றும் கைடோ வாதிட்டார்.
'இந்த வாதத்தின் சாராம்சம் என்னவென்றால், ட்ரொட்ஸ்கிச இயக்கம் 1940களில் தன்னைத் தானே கலைத்திருக்க வேண்டும்' என்று நோர்த் எழுதினார். 'ஒரு நம்பத்தகாத புரட்சிகர வேலைத்திட்டத்தை நிலைநிறுத்துவதற்கான அதன் தவறான முயற்சிகள் அதை அரசியல் இயலாமைக்கு ஆழ்த்தின. மேலும் இது தான் நான்காம் அகிலத்தின் பிற்கால நெருக்கடிகளுக்கு ஆதாரமாக இருந்தது. கெய்டோ மற்றும் லுபரெல்லோ முன்மொழிந்த புதிய கதையின் உண்மையான நோக்கம், நான்காம் அகிலத்தின் நெருக்கடிகளுக்கான பொறுப்பை ட்ரொட்ஸ்கிச இயக்கத்தை கலைக்க முற்பட்டவர்களின் பக்கத்திலிருந்து அதைக் காக்க முற்பட்டவர்களின் தோள்களின் மீது மாற்றுவதாகும்.'
நோர்த் விளக்கியபடி, சோசலிசத்திற்கான போராட்டத்தை விரைவாக நிராகரித்து, பனிப்போரின் போது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பின்னால் திரும்பிய மோரோ மற்றும் கோல்ட்மேன் ஆகியோரால் வெளிப்படுத்தப்பட்ட வர்க்கக் கண்ணோட்டம் குறித்து கெய்டோ பாராமுகமாக இருந்தார். அவர்களின் அரசியலும் மற்றும் அல்டாமிரா, இடது தொழிலாளர் முன்னணி மற்றும் நான்காம் அகிலத்துடன் முறித்துக் கொண்ட மற்ற எல்லாப் போக்குகளும் பொதுவாகக் கொண்டிருப்பது சோசலிசப் புரட்சியின் மீதான அவர்களின் வர்க்க விரோதமாகும்.
ஏகாதிபத்திய சார்பு கொள்கையின் 'தவறு'
இது மே 2022 இல் இடது தொழிலாளர் முன்னணியால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒற்றை விவாதத்தில் தொகுக்கப்பட்டது, உக்ரேன் போரில் அவர்களின் முரண்பாடான நிலைப்பாடுகள் பொருத்தமற்றவை என்று என்றென்றுக்குமாக நிராகரிக்கப்பட்டது. அங்கு, PO இன் பிரதிநிதி பாப்லோ கியாச்செல்லோ MST மற்றும் IS இன் 'ஏகாதிபத்திய சார்பு கொள்கையை' விமர்சித்தார்: 'கவனம் செலுத்துங்கள், ஏனென்றால் அவர்கள் எப்போதும் தங்களது அதே பக்கத்தை நோக்கி தவறு செய்கிறார்கள் என்றாகி விட்டது. எனவே, தொழிலாளர் இயக்கத்தினுள்ளேயே வலுவான ஏகாதிபத்திய அழுத்தங்கள் பாய்கின்றன என்பது தெளிவாகிறது மற்றும் அதன் விளைவாக அவை இடதுக்குள்ளேயும் பாய்கின்றன.”
ஒரு கட்சி எப்போதும் ஏகாதிபத்தியத்தை ஆதரிப்பதாக இருந்தால், அது ஒரு 'தவறு' அல்ல என்பது ஏகாதிபத்தியத்தின் போர்-சார்பு கருவியாக அவர்களின் வர்க்க நோக்குநிலையாகும். இந்த சக்திகளை 'தோழர்கள்' என்று அழைத்து 'இடது' என்று வர்ணிக்கும் கட்சிகள் அதேவேளை பாராளுமன்ற மற்றும் தொழிற்சங்க பதவிகளுக்காக அவர்களுடன் இணைந்து இயங்கும் போது அவர்களே ஏகாதிபத்திய போருக்கு ஆதரவான கருவிகளாக உள்ளனர் என்றாகிறது.
உக்ரேன் போர் குறித்து ஆர்ஜென்டினா மற்றும் சர்வதேச அளவில் அவர்களது பங்காளிகளாக இருக்கும் இந்த அனைத்து போலி-இடது போக்குகளின் பதிலிறுப்பு முதலாளித்துவத்தை பாதுகாப்பதில் அவர்களின் நிபந்தனையற்ற அர்ப்பணிப்பை நிரூபித்துள்ளது, அது மனிதகுலத்தை அணுசக்தி போரினால் அச்சுறுத்திய போதிலும் கூட தொழிலாள வர்க்கத்தை அரசியல்ரீதியாக நிராயுதபாணியாக்கி தேசியவாத வழிகளில் பிளவுபடுத்துகிறது. .
அவர்களின் 'சோசலிச' சொற்களை நீக்கி விட்டு பார்த்தால் அங்கு விடப்பட்டிருக்கும் அமைப்புகளும் வெளியீடுகளும், தொழிற்சங்க அலுவலர்கள், கல்வியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் செல்வந்த நடுத்தர வர்க்கத்திற்காக பேசுபவையாக இருக்கும், அவர்கள். போர், விலைவாசி உயர்வு மற்றும் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக பூகோளரீதியாக வளர்ச்சி அடையும் தொழிலாள வர்க்க போராட்டங்களை அவர்களின் செல்வம் மற்றும் வசதியான நிலைமைகளுக்கு ஒரு அச்சுறுத்தலாக பார்க்கின்றனர்.
1960 களின் முற்பகுதியில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிலிருந்து பிரிந்து, தொழிலாள வர்க்கத்தில் ஒரு நனவான புரட்சிகரத் தலைமையைக் கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியத்தை நிராகரித்து, மாற்றுத் திறனாளிகளை நாடும் நஹுவேல் மொரேனோவின் தேசிய சந்தர்ப்பவாதத்தில் வரலாற்று ரீதியாக வேரூன்றிய அரசியலில் ஈர்க்கப்பட்ட பிற்போக்குத்தனமான சமூக அடுக்குகளே இவையாகும். ஜுவான் டொமிங்கோ பெரோன் போன்ற முதலாளித்துவ தேசியவாத காடிலோக்கள் முதல் குட்டி முதலாளித்துவ காஸ்ட்ரோவாத கெரில்லாவாதம் மற்றும் ஸ்ராலினிஸ்டுகளுடன் மக்கள் முன்னணி பாணியிலான கூட்டணிகள் வரை இவை மாற்றாக நாடுகின்றன. இவை அனைத்தும் பேரழிவான முடிவுகளை ஏற்படுத்தியுள்ளன.
மோரேனோயிஸ்டுகளும் அவர்களது அல்டாமிரிஸ்ட் கூட்டாளிகளும் சோசலிசத்திற்காக போராடுவதற்கான அமைப்புகளை உருவாக்கவில்லை. மாறாக தொழிலாள வர்க்கத்தை தேசியவாத மற்றும் முதலாளித்துவ சார்பு தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் மற்றும் முதலாளித்துவ பிரிவுகளுடன் இணைக்க வேலை செய்கிறார்கள். இன்று, இந்த போலி-இடது போக்குகள் லத்தீன் அமெரிக்காவில் உள்ள தொழிலாளர்களுக்கும் போரை எதிர்த்துப் போராடுவதற்கான வழியை வழங்கும் ஒரே முன்னோக்கான ட்ரொட்ஸ்கிசத்திற்கும் இடையே பிரதான தடையை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.
1939 இல், ட்ரொட்ஸ்கி தனது 'உக்ரேனின் பிரச்சனை' என்ற கட்டுரையில் 'இடது சொற்றொடர்களை' பயன்படுத்தி உக்ரேனில் உள்ள தேசியவாதிகள் மற்றும் 'மக்கள் முன்னணிகளுக்கு' ஆதரவளிக்கும் சந்தர்ப்பவாதிகளை 'தொழிலாளர் இயக்கத்தின் பீரங்கி எல்லைக்குள் அனுமதிக்கப்படக்கூடாது' என்று எழுதினார். இன்று உக்ரேன், ரஷ்யா, ஆர்ஜென்டினா மற்றும் எல்லா இடங்களுக்கும் இந்த கருத்து பொருந்தும்.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மட்டுமே உலகில் ஒரு சோசலிச மற்றும் சர்வதேச அடிப்படையில் போருக்கு எதிராக தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களின் வெகுஜன அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்ப போராடும் ஒரே அரசியல் போக்கு ஆகும். லத்தீன் அமெரிக்கா மற்றும் உலகம் முழுவதும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிவுகளை இந்தப் போராட்டத்திற்குத் தேவையான தலைமையாகக் கட்டியெழுப்புவதுதான் இன்றைய மிக அவசரப் பணியாகும்.