ஸ்பெயினின் PSOE பொடேமோஸ் அரசாங்கம் லியோபாட் 2 ரக டாங்கிகளை உக்ரேனுக்கு அனுப்புகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஏப்ரல் 21 அன்று, ஸ்பெயின் சோசலிசக் கட்சி (PSOE) பொடேமோஸ் அரசாங்கம் அதன் முதல் கட்ட லியோபாட் 2 ரக டாங்கிகளை உக்ரேனுக்கு அனுப்புவதாக அறிவித்துள்ளது. நேட்டோவின் உக்ரேன் போர்முனைக்கு செல்லக்கூடிய ஆறு லியோபாட் 2A4 டாங்கிகள் வடக்கு ஸ்பெயினின் சான்டாண்டர் துறைமுகத்தை இந்த வாரம் வந்தடைந்தன. இந்த டாங்கிகள் மாட்ரிட்டில் இருந்து வந்த கவச வாகனங்களுடன் சேர்ந்து, ஏப்ரல் இறுதிக்குள் பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தற்போது பழுதுபார்க்கப்பட்டு வரும் நான்கு டாங்கிகள் பின்னர் அனுப்பப்படும். 

செப்டம்பர் 28, 2011, புதன்கிழமை, ஜேர்மனியின் ஹனோவர் அருகே முன்ஸ்டர் நகரில் ஜேர்மன் இராணுவம் ஊடகங்களுக்காக நடத்திய ஒரு ஒத்திகை நிகழ்ச்சியின் போது படம்பிடிக்கப்பட்ட ஒரு லியோபாட் 2 டாங்கியின் காட்சி [AP Photo/Michael Sohn]

ஸராகோஸாவில் உள்ள இராணுவத் தளத்தில் பயிற்சி பெற்ற 40 பணிக்குழுவினரும் மற்றும் 15 இயந்திர வல்லுநர்களும் இந்த டாங்கிகளை நிர்வகிப்பார்கள்.

நேட்டோ சக்திகளின் ஒரு விரிவான போர் விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக, உக்ரேனுக்கு 150 லியோபாட் டாங்கிகளை அனுப்பும் ஒன்பது நாடுகளின் திட்டத்தின் ஒரு பகுதியாக ஸ்பெயின் அதன் பங்கை அனுப்புகிறது. டென்மார்க், ஜேர்மனி மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் குறைந்தது 100 லியோபாட் 1 டாங்கிகளை புதுப்பித்து அனுப்ப உறுதிபூண்டுள்ளன.

ஏகாதிபத்திய சக்திகளானது, டாங்கிகளை விநியோகித்து கிழக்கு உக்ரேனில் முன்னணியில் நிற்கும் ரஷ்ய துருப்புகளுக்கு எதிராக அதன் பினாமி உக்ரேனிய இராணுவத்தை வலுப்படுத்தும் இலக்கைத் தொடர்கின்றன. மேலும், இது பரவலாக ஊடகங்களால் புகழப்பட்ட எதிர்த்தாக்குதலாக கூட நடக்கலாம்.

எவ்வாறாயினும், சமீபத்தில் கசிந்த பென்டகன் ஆவணங்கள், கியேவின் எந்தவொரு இராணுவ உந்துதலும் பேரழிவுகரமானதாக இருக்கும் என்பதை வெளிப்படுத்தியுள்ளன. உக்ரேனிய இராணுவம் கடுமையாக பலவீனமான விமானப்படையைக் கொண்டிருப்பதுடன், அமெரிக்காவும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகளும் வெடிபொருட்களையும் பீரங்கிகளையும் வழங்க உறுதியாக ஒப்புக்கொள்ளாத நிலையில் அவற்றின் பற்றாக்குறையும் அதற்கு உள்ளது.    

நேட்டோ தாக்குதலுக்கு முன்னோக்கிச் சென்றாலும், வாஷிங்டனும் ஐரோப்பிய நேட்டோ சக்திகளும் மோதலில் இன்னும் தீவிரமாக ஈடுபடுவதற்கு தயாரிப்பு செய்கின்றன. ரஷ்யாவை அடிபணிய வைக்கவும், அதன் ஏராளமான வளங்களைக் கொள்ளையடிக்கவும், அதன் மூலம் சீனாவை இராணுவ-மூலோபாய ரீதியாக சுற்றிவளைப்பதை மேலும் இறுக்கவும் அவர்கள் உறுதியாக உள்ளனர். பின்லாந்து கூட்டணியில் இணைந்ததைத் தொடர்ந்து, நேட்டோ தற்போது ரஷ்யாவின் எல்லையில் உள்ள நேட்டோ அங்கத்துவ நாடுகளுக்கு பாரிய படைகளை அனுப்ப திட்டமிட்டுள்ளது.

போரில் டாங்கிகளை நிலைகொள்ள வைப்பது என்பது, ரஷ்யாவிற்கு எதிரான போரில் நேரடியாக ஸ்பானிய மற்றும் நேட்டோ ஈடுபாட்டின் அபாயத்தை தீவிரப்படுத்துவதுடன், ஒரு பாரிய இராணுவ விரிவாக்கத்திற்கு வழிவகுக்கிறது. கியேவிடம் டாங்கிகளை பழுதுபார்க்கும் திறன் குறைவாக இருக்கும் நிலையில், நேட்டோ களத்தில் அதன் இருப்பை அதிகரிக்க வேண்டும், மேலும் விநியோக வழிகளையும் பழுதுபார்க்கும் செயல்பாடுகளையும் மேம்படுத்த வேண்டும். இது உக்ரேனுக்குள் அனுப்பப்படும் ஆயுத அமைப்புகள் மீதான ரஷ்ய தாக்குதல்களின் இலக்குகளாக மாறும். 

உக்ரேனுக்கு அரசாங்கங்கள் வாக்குறுதியளித்துள்ள இராணுவ, நிதி மற்றும் மனிதாபிமான உதவிகளை பட்டியலிட்டு அளவிடுகிற Ukraine Support Tracker தரவு தளத்தின்படி, போர் பங்களிப்பு குறித்து PSOE பொடேமோஸ் அரசாங்கத்திடம் வெளிப்படைத்தன்மை இல்லாவிட்டாலும், இந்த அரசாங்கம் இதுவரை 320 மில்லியன் யூரோ மதிப்பிலான இராணுவ உதவிகளை வழங்கியுள்ளது.  

இதில், துப்பாக்கிகள், இயந்திர துப்பாக்கி தோட்டாக்கள், கையெறிகுண்டு வீசிகள், ஹாக் ஏவுகணை அமைப்புகள், ஆஸ்பைட் விமான எதிர்ப்பு ஏவுகணை அமைப்புகள், குளிர்கால உடைகள் மற்றும் உபகரணங்கள், எரிபொருள், குண்டு துளைக்காத தலைக்கவசங்கள், கவச பணியாளர் வாகனங்கள், தானியங்கி ஹோவிட்சர் பீரங்கிகள் மற்றும் இலகுரக வாகனங்கள் ஆகியவை அடங்கும். இவற்றில் பெரும்பகுதி உக்ரேன் நவ நாஜி அசோவ் படையணிக்கு அனுப்பப்பட்டுள்ளன. மாட்ரிட், ஸ்பெயின் மண்ணில் 850 உக்ரேனிய படையினருக்கு பயிற்சி அளித்துள்ளது.

PSOE பொடேமோஸ் அரசாங்கம் ரஷ்யாவிற்கு எதிரான ஏகாதிபத்தியப் போரின் ஒரு பினாமியாக தொடர்ந்து செயலாற்ற உக்ரேனிய அரசுக்கு 350 மில்லியன் யூரோவுக்கு அதிகமாக நிதியுதவி அளித்துள்ளது.

நேட்டோ சக்திகள் தங்கள் போர் முயற்சியை தொடர்ந்து அதிகரித்தால் மட்டுமே அவர்கள் தங்களின் இலக்கை அடைய முடியும் என்பது தெளிவாகியுள்ளது. இந்த வெடிப்பான சூழலில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென், பிரதமர் பெட்ரோ சான்செஸை மே 12 ஆம் திகதி வெள்ளை மாளிகையில் சந்திக்க உள்ளார்.

கடந்த வாரம், வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கொரீன் ஜோன் பியர், “உக்ரேனுக்கான தங்கள் உறுதியான ஆதரவு குறித்தும், ரஷ்யா அதன் மிருகத்தனமான ஆக்கிரமிப்புப் போரைத் தொடரும் பட்சத்தில் கிரெம்ளின் மீது கடும் பொருளாதாரத் தடைகளை சுமத்துவதற்கான தங்கள் முயற்சிகள் குறித்தும் விவாதிப்பார்கள்” என்று அறிவித்தார்.

ஸ்பெயினின் ரோட்டா கடற்படை தளத்தில் இரண்டு கூடுதல் அமெரிக்க அழிப்புக் கப்பல்களை நிலைநிறுத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட மாட்ரிட் திட்டமிட்டுள்ளது. இந்த இரண்டு போர்க்கப்பல்களும் தெற்கு ஐரோப்பாவில் நேட்டோவின் ஏவுகணை எதிர்ப்புக் கவசத்தை பூர்த்தி செய்யும் வகையில் அமெரிக்கா ஏற்கனவே தளத்தில் நிறுத்தியுள்ள மற்ற நான்கு கப்பல்களுடன் சேர்ந்து கொள்ளும்.

கடந்த ஜனவரியில், PSOE பொடேமோஸ் அரசாங்கம் வாஷிங்டனுடன் வலுவூட்டப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பை அங்கீகரித்தது. இது ஐபீரிய தீபகற்பத்தை மத்தியதரைக் கடல், ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் அமெரிக்க நடவடிக்கைகளுக்கான மாபெரும் தளமாக மாற்றுகிறது. 

ஜூலை மாதம் ஐரோப்பிய ஒன்றியக் குழுவின் ஆறு மாத கால சுழற்சிமுறை தலைமையை மாட்ரிட் ஏற்கும் போது பைடென் சான்செஸை சந்திக்க உள்ளார். அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையே, மற்றும் போட்டி ஐரோப்பிய சக்திகளுக்கு இடையே, அதிலும் குறிப்பாக பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகளுக்கு இடையே என ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையேயான கடுமையான மோதல்களுக்கு இட்டுச் செல்லும் ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில் இந்த சந்திப்பு நடைபெறும். 

பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் சீனப் பயணம், சீனாவுக்கு எதிரான தாக்குதல் தொடர்பாக வாஷிங்டனுடனான பதட்டங்களை வெளிப்படுத்திய சில வாரங்களுக்குப் பிறகு இது நடத்தப்படவுள்ளது. பயணம் முடிந்து திரும்புகையில், பிரெஞ்சு ஜனாதிபதி அமெரிக்காவின் சீன கொள்கையில் இருந்து தீவிரமாக விலகிக் கொண்டார். “ஐரோப்பா உண்மையான மூலோபாய சுயாட்சியின் கூறுகளை உருவாக்கும் செயல்பாட்டில் உள்ளது. இந்நிலையில், ஒரு வகையான பீதியில் விழுந்து அது அமெரிக்கக் கொள்கையைப் பின்பற்றக்கூடாது,” என்று அவர் கூறினார். ஐரோப்பா அமெரிக்காவிற்கு “சிற்றரசாக” மாறக்கூடாது. மாறாக, அதற்கு “மூன்றாம் துருவமாக” அது இருக்க வேண்டும் என்று மக்ரோன் குறிப்பிட்டார்.  

பெப்ரவரியில், 27 ஐரோப்பிய நாடுகளின் அரசாங்க பிரதிநிதிகள் மற்றும் 50 நிறுவனங்களின் பிரதிநிதிகள் உட்பட பெரும் பார்வையாளர்கள் முன்னிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிர்கால ஸ்பானிய தலைமை “மாறும் சர்வதேச ஒழுங்கிற்கு” மத்தியில் கூடுதலான மூலோபாய சுயாட்சியைக் கோரும் என்று சான்செஸ் அறிவித்தார்.

சான்செஸ் மேலும், “இந்த சவாலுக்கு நாம் பதிலளிக்க வேண்டும் என்பதோடு, அதை நாம் வலுக்கட்டாயமாகவும் நம்பிக்கையுடனும் செய்ய வேண்டும். நமக்கும் கடுமையான பாதிப்புகள் உள்ளன என்பதை நாம் அறிந்திருந்தாலும், ஐரோப்பியர்களாகிய நாமும் பெரும் வலிமை கொண்ட பூகோள அரசியல் நிலையை கொண்டுள்ளோம்” என்று கூறினார். “திறந்த மூலோபாய சுயாட்சியின்” மற்றும் பிற ஐரோப்பிய ஒன்றிய மூலோபாய முன்னுரிமைகளின் எதிர்காலத்தைப் பற்றி விவாதிக்க அக்டோபர் மாதம் ஸ்பெயின் நகரமான கிரனாடாவில் நடைபெறவுள்ள ஐரோப்பிய குழுவின் கூட்டம் இதற்கு முக்கியமானதாக இருக்கும்.   

மூலோபாய சுயாட்சி எண்ணத்திற்கான விருப்பத்தை அறிவித்தாலும், வாஷிங்டனுடனான உறவுகளை முறித்துக் கொள்ள சான்செஸ் விரும்பவில்லை. சான்செஸ் மக்ரோனிடமிருந்து விலகி, “அளவுக்கு அதிகமாக செயல்படும்” ஆபத்து பற்றி எச்சரித்ததோடு, “சர்வதேச பிளவு யாருக்கும் பயனளிக்காது” என்று நினைவு கூர்ந்தார்.  

எல்லாவற்றிற்கும் மேலாக, ஸ்பானிய ஆளும் வர்க்கத்தின் அனைத்துப் பிரிவுகளாலும் பகிரப்பட்ட இந்த பொறுப்பற்ற போர்க் கொள்கையானது, சர்வதேச அளவில் பொடேமோஸினதும் மற்றும் அதன் சகோதரத்துவ போலி-இடது கட்சிகளின் ஏகாதிபத்திய-சார்பு, தொழிலாளர்-விரோத தன்மையை மீண்டும் ஒருமுறை அம்பலப்படுத்துகிறது. இதில், ஜேர்மன் இடது கட்சிகள், ஜோன் லூக் மெலோன்சோனின் அடிபணியா பிரான்ஸ் கட்சி மற்றும் அமெரிக்காவின் ஜனநாயக சோசலிஸ்டுகள் ஆகிய கட்சிகள் அடங்கும். இந்த போலி-இடது குழுக்கள் அனைத்தும் ஏகாதிபத்திய போருக்கான சமூக அடித்தளத்தை உருவாக்கும் சலுகை பெற்ற உயர் நடுத்தர வர்க்க அடுக்குகளை பிரதிநிதித்துவம் செய்கின்றன. 

கடந்த ஆண்டு, பொடேமோசின் டாங்கிகள் விநியோகமானது இராணுவ விரிவாக்கத்திற்கு தூண்டுதலளிக்கும் மற்றும் அணுசக்தி மோதலைத் தூண்ட அச்சுறுத்தும் என்றாலும் போர் முயற்சிக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக உறுதியளித்து அதை அங்கீகரித்தது. ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோ போரின் முன்வரிசையில் நிற்கும் ஒரு ஏகாதிபத்திய அரசாங்கத்தின் அங்கத்தினராக அதன் பங்கை மூடிமறைக்க முற்படும் பொடேமோஸின் எதிர்ப்புகள் வெற்று வார்த்தையாடல்களாக இருந்தன. இருப்பினும், இந்த முறை, பொடேமோஸ் முற்றிலும் மௌனம் சாதித்துள்ளது.

இது, வெளிநாடுகளில் ஏகாதிபத்திய போர் மற்றும் உள்நாட்டில் தொழிலாள வர்க்கத்தின் மீதான போர் என்பதான ஒட்டுமொத்த ஸ்பானிய அரசியல் ஸ்தாபனத்தின் கொள்கையில் இணைந்துள்ள பொடேமோஸின் மற்றொரு அரசியல் அம்பலப்படுத்தலாகும். இந்த அரசாங்கம் மூன்று ஆண்டுகளாக இரக்கமற்ற வகையிலான சிக்கன நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தியுள்ளது, கோவிட்-19 தொற்றுநோய்களின் போது உயிர்களை விட இலாபத்திற்கு முன்னுரிமை அளிக்கும் கொள்கையை அமல்படுத்தியது. இது 160,000 இற்கும் மேற்பட்ட இறப்புகளுக்கு வழிவகுத்தது, அதன் எல்லைகளில் குடியேறியவர்களைக் கொன்றது. மேலும், இந்த அரசாங்கம் வேலைநிறுத்தங்களை வன்முறை கொண்டு ஒடுக்கத் தொடங்கியது மற்றும் உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோ போரின் விரிவாக்கத்திற்கு ஆதரவளித்தது.

ஒரு பேரழிவுகரமான இராணுவ விரிவாக்கத்தை தடுத்து நிறுத்துவதற்கு, நேட்டோவிற்கும் மற்றும் சர்வதேச அளவில் பொடேமோஸ் மற்றும் அதுபோன்ற போலி-இடது கட்சிகளுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்ட வேண்டும். இந்த இயக்கத்தை கட்டியெழுப்புவதில் 2023 மே தினம் ஒரு முக்கிய அடியெடுப்பாக இருக்கும். அதாவது, ஏப்ரல் 30, ஞாயிற்றுக்கிழமை அன்று, உலக சோசலிச வலைத் தளமானது, உக்ரேன் போருக்கு எதிராக உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்களையும் இளைஞர்களையும் அணிதிரட்ட இணையவழி உலகளாவிய மே தின பேரணியை நடத்தவிருக்கிறது. போரை எதிர்க்க நினைக்கும் அனைவரையும் இன்றே பேரணியில் கலந்து கொள்ள பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.  

Loading