மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
ஏப்பிரல் 15 அன்று, சூடானின் தலைநகரமான கார்ட்டூம், மற்றும் பிற நகரங்கள் எங்கிலும் சூடானின் ஆயுதப் படைகளின் போட்டிப் பிரிவுகளுக்கு இடையை மோதல் வெடித்தது.
பல மாதங்களாக அதிகரித்து வரும் பதட்டங்கள் நாட்டைக் கட்டுப்படுத்துவதற்கான முழுமையான போராக உருவெடுத்த பின்னரே இந்த சண்டை நடக்கிறது. ஆளும் இறையாண்மைக் குழுவின் (Sovereign Council) துணைத் தலைவரான போர்க்குழுத் தலைவன் மொஹமத் ஹம்டன் டகாலோவின் தலைமையிலானதும், 100,000 ஆயுததாரிகள் இருப்பதாக நம்பப்படுவதுமான விரைவு ஆதரவுப் படையின் (Rapid Support Force-RSF) துணை இராணுவப் படைகளானது, ஜனாதிபதி மாளிகை, அரசு தொலைக்காட்சி நிலையம், இரண்டு சவுதி ஜெட் விமானங்கள் தாக்கப்பட்ட கார்ட்டூம் விமான நிலையம் மற்றும் பிற முக்கிய கட்டிடங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதாக கூறியுள்ளன. இராணுவத் தலைவர், இறையாண்மைக் குழுவின் தலைவர் மற்றும் தற்போது ஆட்சி செய்து வரும் தளபதி அப்தெல் ஃபத்தா அல்-புர்ஹான் ஆகியோரின் தலைமையிலான இராணுவம் இக்கூற்றுக்களை மறுத்துள்ளது.
செங்கடலில் உள்ள சூடான் துறைமுகம், மேற்கு டர்பூர், மெரோ மற்றும் தெற்கு மாகாணங்கள் உட்பட நாடு முழுவதும் ஆயுத மோதல்கள் பதிவாகியுள்ளன. இரு தரப்பினரும் முக்கிய நிலையங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகக் கூறியதுடன், ஒருவருக்கொருவர் சதி செய்வதாக குற்றம் சாட்டுகின்றனர். கெய்ரோவில் 2020 இல் கூட்டுப் பயிற்சிகளில் பயன்படுத்தப்பட்ட போர் விமானங்களுக்கான தளமாகவுள்ள மெரோவில் சூடான் இராணுவத்துடன் எகிப்தியப் படைகள் சண்டையிடும் செய்திகளுக்கு மத்தியில் அண்டை நாடுகளை அதனுள் சிக்கவைக்கும் பரந்த உள்நாட்டுப் போர் வெடிப்பதற்கான அச்சங்கள் நிலவுகின்றன.
கார்ட்டூமின் இரட்டை நகரமான ஓம்டுர்மானில் உள்ள RSF தளத்தின் மீது வான்வழித் தாக்குதல்கள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், விமான நிலையமும் பிற தளங்களும் தனது “முழுக் கட்டுப்பாட்டில்” இருப்பதாக சூடான் இராணுவம் கூறியதையடுத்து, மக்களை விட்டிற்குள்ளேயே இருக்குமாறு விமானப்படை கூறியுள்ளது. இரு தரப்பும் அலுவலகங்களையும் தளங்களையும் கொண்ட குடியிருப்புப் பகுதிகளில் நடத்தும் இந்த மோதலில், குறைந்தது 56 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் மற்றும் ஆயுததாரிகள் உட்பட 600 பேர் காயமடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வேலை நாளான ஞாயிற்றுக்கிழமை, கார்ட்டூம் மாநிலத்தில் பள்ளிகள், வங்கிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு அதிகாரிகள் விடுமுறை அறிவித்தனர்.
2003 முதல் 2008 வரை நடந்த சண்டையில் 300,000 பேர் கொல்லப்பட்ட மற்றும் 2.5 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்த மேற்கு சூடானில் உள்ள டர்பூரில் நடந்த போரின் போது இரு தலைவர்களும் பிரபல்யமானார்கள். அப்போது அல்-புர்ஹான் ஒரு இராணுவத் தலைவராக இருந்தார், அதே சமயம் டகாலோ (ஹெமெட்டி என்று பரவலாக அறியப்படுபவர்), மோதலின் போதான மோசமான அட்டூழியங்களுக்குப் பொறுப்பான இழிவான ஜான்ஜாவிட் ஆயுதக்குழுவை வழிநடத்துகிறார்.
அல்-புர்ஹான், எகிப்தின் மிருகத்தனமான சர்வாதிகாரியான அப்தெல் ஃபத்தாக் அல்-சிசியாலும், சூடானின் பரந்த இராணுவ தொழில்துறை வளாகத்தை நீண்டகாலமாக கட்டுப்படுத்தி வரும் இராணுவத்திற்கு நெருக்கமான அடுக்குகளாலும் ஆதரிக்கப்படுகிறார். உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க/நேட்டோ போரில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சக்திகளுக்கு அவர் ஆதரவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. டர்பூரில் இருக்கும் தங்கத்தின் அடிப்படையில் பெரும் பணக்காரரான டகாலோவுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) மற்றும் சவுதி அரேபியாவின் ஆதரவு உள்ளது. தங்கத்தின் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தும் அவர், சூடானிலும் அண்டை நாடான மத்திய ஆபிரிக்கக் குடியரசிலும் இயங்கும் கூலிப்படையைச் சேர்ந்த வாக்னர் ரஷ்யாவுடன் நெருங்கிய உறவுகளைக் கொண்டுள்ளார்.
இந்த மோதல் வெடிப்பானது, அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ஆண்டனி பிளிங்கென், ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், சவுதி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வெளியுறவு அமைச்சர்கள், ரஷ்யா, சீனா, அரபு லீக் மற்றும் ஆபிரிக்க ஒன்றியம் ஆகியவை மோதலில் பாதிக்கப்பட்ட ஒரு நாட்டில் அமைதியை கொண்டுவருவதை கோருவது, பன்முகத்தன்மையான போட்டி நலன்கள் அங்கு இருப்பதற்கான சாட்சியாகும். ஞாயிற்றுக்கிழமை பிற்பகல், கார்ட்டூமில் அல்-புர்ஹானின் படைகள் வெளிப்படையாக கையோங்கி நின்ற நிலையில், மூன்று மணி நேர மனிதாபிமான மோதல் இடைநிறுத்தத்திற்கு ஐக்கிய நாடுகள் சபை முன்மொழிந்ததை இருதரப்பும் ஒப்புக்கொண்டுள்ளன.
நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட அதிகாரப் போராட்டமானது, சூடானை மட்டுமல்லாது, வறட்சி மற்றும் பஞ்சத்திற்கு மத்தியில் பல மோதல்களால் சூழப்பட்டுள்ளதும், வளைகுடா சக்திகள், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ரஷ்யா ஆகியவற்றின் செல்வாக்கிற்கான போரின் களமாகவும் உள்ள ஆபிரிக்காவின் முனைப்பகுதியின் பெரும்பகுதியையும் நிர்மூலமாக்க அச்சுறுத்துகிறது.
சூடானின் இராணுவம் ரஷ்யாவுடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டுள்ளது. ரஷ்யா செங்கடலில் சூடான் துறைமுகத்தில் ஒரு தளத்தை நிறுவ முயற்சிக்கிறது. சூடான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வழியாக நாட்டின் ஏற்றுமதியில் 40 சதவீத அளவிற்கு அதன் தங்கத்தின் பெரும்பகுதியை ரஷ்யாவிற்கு விற்பனை செய்கிறது. மேலும் இது உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பைக் கண்டிக்கும் வகையிலும், பைடென் நிர்வாகத்தை கோபப்படுத்தும் வகையிலும் ஐ.நா. தீர்மானத்தை புறக்கணித்துள்ளது. ஈரான், ரஷ்யா மற்றும் சீனாவுடனான சூடானின் உறவைத் துண்டிக்கவும், ரஷ்ய கடற்படைக்கு சூடான் துறைமுகத்தை மூடவும், மற்றும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் சூடான் கையெழுத்திட்டுள்ள அதன் பிராந்திய ஈரான் எதிர்ப்பு கூட்டணியை வலுப்படுத்தவும் வாஷிங்டன் உறுதியாகவுள்ளது.
செங்கடல் மற்றும் சூயஸ் கால்வாயின் நுழைவாயிலுக்கு அருகில் ஆபிரிக்காவின் முனைப்பகுதியில் மூலோபாய ரீதியாக அமைந்துள்ள சூடானில் நிலவும் எவ்விதமான ஸ்திரமற்ற தன்மையையும் தவிர்க்க, ஐரோப்பிய சக்திகள் ஆர்வமாக உள்ளன. ஏனென்றால், அது எண்ணெய் விநியோகத்தை சீர்குலைக்கலாம் அல்லது அகதிகளின் புதிய அலையை உருவாக்கலாம். ஆபிரிக்காவின் இரண்டாவது அதிக மக்கள்தொகை கொண்டதும், முனைப்பகுதியின் அதிகார மையமுமான எத்தியோப்பியா, திக்ராயன்(Tigrayan) கிளர்ச்சியாளர்களுடன் இரண்டு ஆண்டுகளாக நடத்தி வரும் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒப்பந்தத்தை எட்டியுள்ள நிலையிலும், அம்ஹாரா (Amhara) மாகாணத்தில் அதன் பிராந்திய ஆயுதப் படையை தேசிய இராணுவத்தில் ஒருங்கிணைக்கும் திட்டங்களால் பாரிய அமைதியின்மையை எதிர்கொண்டுள்ள நிலையிலும், இது நடக்கிறது. அம்ஹாரா படைகள், பிராந்திய மோதல்களைக் கொண்டுள்ள திக்ராயன்களை தோற்கடிப்பதில் முக்கிய பங்கு வகித்தன.
பல வாரங்களாக அதிகரித்து வரும் பதட்டங்கள், அதிகரித்தளவில் மேற்கொள்ளப்படும் இராணுவ நிலைநிறுத்தல் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள், மற்றும் முன்னாள் கிளர்ச்சி ஆயுதக்கும்பல்களுடன் சேர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் கிளர்ச்சிகளில் ஈடுபட்டுள்ள RSF சூடான் இராணுவத்தில் திட்டமிட்டு ஒருங்கிணைவது பற்றி பொது மற்றும் சர்வதேச ஆதரவிற்காக தீவிரப்படுதல் ஆகியவற்றுக்குப் பிறகு வார இறுதியில் இந்த வன்முறை வெடித்துள்ளது. நாட்டை பொது ஆட்சிக்கு திரும்பச் செய்வதும், டிசம்பர் 2018 இல் இருந்து நாட்டை மூழ்கடித்துள்ள அரசியல் மற்றும் பொருளாதார கொந்தளிப்பை முடிவுக்குக் கொண்டு வருவதும் இந்த மாதம் முடிவடையவுள்ள பேச்சுவார்த்தைகளில் அல்-புர்ஹானின் பிரிவினரின் முக்கிய கோரிக்கையாக இருந்தது. அல்-பஷீர் காலத்தில் இருந்து உள்ள திறன்மிக்க இஸ்லாமிய தரகர்களை அகற்றுவதற்கும், இராணுவம் பொதுமக்களை கட்டுப்படுத்துவதற்கும் டகாலோ அழைப்பு விடுத்துள்ளார்.
ஏப்ரல் 2019 இல், கட்டார் மற்றும் துருக்கியின் ஆதரவைப் பெற்ற ஜனாதிபதி ஒமர் அல்-பஷீரின் முஸ்லீம் சகோதரத்துவத்தின் ஆதரவு சர்வாதிகாரத்திற்கு எதிராக பல மாதங்களாக நடந்துவரும் பாரிய ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) மற்றும் சவுதி அரேபியாவின் ஆதரவுடன் இராணுவத் தலைவர் அல்-புர்ஹான் அல்-பஷீரை தூக்கியெறியும் ஒரு முன்கூட்டிய சதியை நடத்தினார். முழு அரசு எந்திரமும் தூக்கியெறியப்படுவதைத் தடுப்பதும், அவர்களின் கணிசமான நிதியும் மற்றும் சூடான் பொருளாதாரத்தின் பெரும்பகுதியைக் கட்டுப்படுத்தும் பெருநிறுவனங்களும் கையகப்படுத்தப்படுவதைத் தடுப்பதும் தான் அவரது நோக்கமாக இருந்தது.
கடந்த மாதங்களில், 1,000 இற்கும் மேற்பட்ட நிராயுதபாணி எதிர்ப்பாளர்கள் இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டுள்ள போதிலும், தொழில்முறை தொழிற்சங்கங்கள் மற்றும் சூடானிய கம்யூனிஸ்ட் கட்சி உட்பட 22 முதலாளித்துவ மற்றும் குட்டி முதலாளித்துவ குழுக்களின் குடைக் குழுவான சுதந்திரத்திற்கும் மாற்றத்திற்குமான படைகள் (FFC) போன்ற போராட்ட இயக்கத்தின் தலைவர்கள் மீண்டும் பொதுமக்கள் ஆட்சிக்கு திரும்புவது தொடர்பாக இராணுவத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான வாய்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். 1956 ஆட்சிக்கவிழ்ப்பு மற்றும் இராணுவ ஆட்சியில் பிரிட்டனில் இருந்து சுதந்திரம் பெற்ற சூடானின் நீண்ட வரலாற்றைக் கருத்தில் கொள்கையில், அத்தகைய துரோகப் பாதையானது, நாட்டை முடக்கிய அமெரிக்க பொருளாதாரத் தடைகளை அகற்றுவதற்கும் சர்வதேசக் கடன்களை அணுகுவதற்கும் தேவையான பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள இராணுவத்திற்கு ஒரு மூடிமறைப்பை மட்டுமே வழங்க முடியும்.
இந்த நிகழ்வில், பிரிட்டிஷ் பயிற்சி பெற்ற பொருளாதார நிபுணரும், சூடான் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் உறுப்பினருமான பிரதமர் அப்தல்லா ஹம்டோக்கின் அரசாங்கம், ஒரு இடைநிலை “தொழில்நுட்பவாத” அரசாங்கத்தின் தலைமையகமாக, அல்-புர்ஹானின் இறையாண்மைக் குழுவின் உண்மையான அதிகாரத்துடன், ஓரிரு ஆண்டுகளுக்கு மேல் நீடித்தது.
எரிபொருள் மானியங்களை ஒழித்தல், நூற்றுக்கணக்கான அரசு நிறுவனங்களை தனியார்மயமாக்குதல், மற்றும் அல்-பஷீர் மற்றும் இராணுவத்துடன் தொடர்புடைய நிறுவனங்களின் ஊழலுக்கும் மற்றும் அவை அரசு வருவாயைக் கொள்ளையடிப்பதற்கும் எதிரான ஒடுக்குமுறை உட்பட தடையற்ற சந்தை மற்றும் அரசியல் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட போது, அவை இராணுவத்தின் கணிசமான வணிக, அரசியல் மற்றும் இராஜதந்திர நலன்களை அச்சுறுத்தின.
ஹம்டோக் மற்றும் அவரது “தொழில்நுட்பவாதிகளின்” அரசாங்கத்தை அல்-புர்ஹான் பதவி நீக்கம் செய்து அக்டோபர் 2021 இல் இராணுவ ஆட்சியை மீண்டும் தொடங்கினார். அவர் ஆளும் மற்றும் அரசுக்கு சொந்தமான அமைப்புகளை தளபதிகள், இஸ்லாமியர்கள் மற்றும் அல்-பஷீர் ஆட்சியின் மற்ற நம்பகமான கூட்டாளிகளுடன் ஒருங்கிணைத்து, ஒடுக்குமுறையை தீவிரப்படுத்தி, மறுமலர்ச்சி எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டுப்படுத்தினார். எவ்வித அச்சமுமின்றி, பிரதான எதிர்க்கட்சிகள் இராணுவத்துடன் மற்றொரு துரோகம் நிறைந்த மற்றும் செல்வாக்கற்ற ஒப்பந்தத்தை ஒப்புக்கொண்டன. அது ஹம்டோக்கை மீண்டும் பதவிக்குக் கொண்டுவந்தது. மேலும், சில வாரங்களுக்குப் பிறகு அது முறிவடைந்து அல்-புர்ஹானை ஆட்சியில் அமர்த்தியது.
அப்போதிருந்து, 120 இற்கும் மேற்பட்ட பொதுமக்களின் இறப்புக்கு வழிவகுத்ததான நடந்துகொண்டிருக்கும் சமூகப் போராட்டங்கள் மீதான ஒடுக்குமுறைக்கு மத்தியில், புர்ஹானும் ஹெமெட்டியும் பெருகிய முறையில் பிளவுபட்ட உறவுகளைக் கொண்டிருந்தனர். உணவு மற்றும் எரிபொருள் விலைகள் அதிகரித்து வருவது, 2011 இல் எண்ணெய் வளம் மிக்க தெற்கு சூடான் பிரிந்ததால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, அரசியல் ஸ்திரமின்மை, மோதல்கள் மற்றும் சுமார் 3 மில்லியன் மக்களின் இடம்பெயர்வு, மோசமான அறுவடை மற்றும் வெள்ளம் ஆகிய காரணங்களால் சூடானின் 46 மில்லியன் மக்களில் 15 மில்லியன் மக்கள் கடுமையான உணவுப் பஞ்சத்தை எதிர்கொள்கின்றனர்.
இஸ்லாமியர்களின் எதிர்ப்பாளராக அவர்கள் கருதும் டகாலோவை சுதந்திரத்திற்கும் மாற்றத்திற்குமான படைகள் ஆதரித்துள்ளது. மேலும், உள்ளூர் எதிர்ப்புக் குழுக்கள் இந்த ஒப்பந்தத்தை எதிர்த்த போதிலும், பொது ஆட்சிக்குத் திரும்புவதற்கான புதுப்பிக்கப்பட்ட கட்டமைப்பு ஒப்பந்தத்தில் அது டிசம்பரில் கையெழுத்திட்டது. முன்னாள் ஆட்சியை அகற்றுவது, மோதல்களைத் தீர்க்கத் தவறிய பல்வேறு கிளர்ச்சி இயக்கங்களுடன் எட்டப்பட்ட ஜூபா அமைதி ஒப்பந்தம் மற்றும் வைரம் மற்றும் தங்கச் சுரங்கங்களின் தாயகமாக உள்ள சூடானின் வளங்கள் நிறைந்த கிழக்கிலும், அத்துடன் ஆயுதக் குழுக்கள் நாட்டின் துறைமுகங்களைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து மேலதிக சுயாட்சி உரிமை கோரும் முக்கியத்துவம் வாய்ந்த சூடான் துறைமுகத்திலும் நிலவும் நெருக்கடி ஆகிய விவகாரங்கள் பற்றி இந்த ஒப்பந்தம் எதுவும் குறிப்பிடவில்லை.
அத்தகைய சக்திகளால் ஒன்றிணைக்கப்பட்ட எந்தவொரு பொது அரசாங்கமும் சூடான் தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற மக்கள் எதிர்கொள்ளும் மாபெரும் சமூக மற்றும் பொருளாதார பிரச்சினைகளைத் தீர்க்கும் திறன் கொண்டதாக இருக்கும் என்ற கூற்று ஒரு ஆபத்தான பொறியாகும். இந்த நடுத்தர வர்க்க சக்திகள், தாராளவாத அடுக்குகள் மற்றும் அவர்களின் போலி இடது ஆதரவாளர்களின் நோக்கம், மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவின் வரலாறு காட்டுவது போல், ஒரு சமூகப் புரட்சியைத் தடுப்பதாகும்.
இராணுவத்தின் தாக்குதலையும் ஏகாதிபத்திய மற்றும் பிராந்திய சக்திகளின் சூழ்ச்சிகளையும் எதிர்த்துப் போராடுவதற்கும் சூடானில் ஜனநாயக ஆட்சியை ஸ்தாபிப்பதற்கும், ஒரு புரட்சிகர சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் தலைமையில் நடத்தப்படும் ஒரு போராட்டம் மட்டுமே ஒரேயொரு வழியாகும். இது, முதலாளித்துவத்திற்கு எதிரான மற்றும் சோசலிசத்தைக் கட்டியெழுப்புவதற்கான தொழிலாள வர்க்கத்தின் பரந்த சர்வதேசப் போராட்டத்தினால் ஆட்சியினால் தவறான முறையில் பெறப்பட்ட செல்வங்களை கைப்பற்றி, அதிகாரத்தை கையிலெடுப்பதிலிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும். இதற்கு சூடானிலும், எகிப்திலும், வட ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கின் அனைத்து நாடுகளிலும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) பிரிவுகளை கட்டியெழுப்ப வேண்டும்.