மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
கடந்த வாரம் சிறியதாக அறிவிக்கப்பட்ட ஒரு கூட்டத்தில், உயர்மட்ட பைடென் நிர்வாக அதிகாரிகள், அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களைப் பெறுவதற்கான ஆஸ்திரேலியாவிற்கான AUKUS உடன்படிக்கையானது, அவர்கள் “தங்கள் வாழ்நாள் அச்சுறுத்தலாக” விவரிக்கும் சீனாவை “தோற்கடிப்பதை” இலக்காகக் கொண்டது என்று அறிவித்தனர்.
கடந்த திங்கட்கிழமை வாஷிங்டனில் நடைபெற்ற ஒரு விழாவில், அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள், மற்றும் ஆயுத உற்பத்தியாளர்களின் பிரதிநிதிகள் உட்பட ஆஸ்திரேலிய பிரதிநிதிகள் கலந்து கொண்ட போது போர்வெறிமிக்க கருத்துக்கள் அங்கு தெரிவிக்கப்பட்டன.
கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட 368 பில்லியன் டாலர் மதிப்பு கொண்ட நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவது பற்றி விவாதிக்க, தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மெரில் ஸ்வான்சன் மற்றும் தாராளவாதக் கட்சி செனட்டர் ஜேம்ஸ் பேட்டர்சன் ஆகிய ஆஸ்திரேலியர்கள் வாஷிங்டனில் இருந்தனர். இந்த ஒப்பந்தத்தின் கீழ், பிரிட்டனுடன் இணைந்து புதிய நீர்மூழ்கிக் கப்பலின் கூட்டுக் கட்டுமானத்தைத் தொடங்குவதற்கு முன், அடுத்த தசாப்தத்தில் அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை அமெரிக்க கடற்படையிடமிருந்து ஆஸ்திரேலியா வாங்குகிறது.
ஸ்வான்சனினதும், பேட்டர்சனினதும் பயணம் தொடர்பான ஊடகச் செய்திகள் அல்லது அரசாங்கத்தின் தகவல்கள் வழமைக்கு மாறாக, அரிதாக, குறைந்த விபரங்களை மட்டும் கொண்டிருந்தது. சந்தேகத்திற்கிடமின்றி AUKUS உடன்படிக்கை ஆஸ்திரேலியாவிற்குள் பரவலான எதிர்ப்பைத் தூண்டியுள்ளதே இதற்கு காரணமாகும். மேலும், தொழிற்கட்சி அரசாங்கம் வலியுறுத்தியுள்ளபடி, “தடுப்பு” நோக்கத்துடன் ஆஸ்திரேலியா நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்குவது எந்த வகையிலும் ஒரு தற்காப்பு நடவடிக்கைக்காகத்தான் என்று கூறப்படுவதை குறைமதிப்பிற்குட்படுத்தியுள்ளது.
மாறாக, உயர்மட்ட அமெரிக்க அதிகாரிகள், பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியா உடனான அமெரிக்க இராணுவ உடன்படிக்கையான AUKUS உடன்படிக்கையையும், அத்துடன் நீர்மூழ்கிக் கப்பல்களையும், அமெரிக்க வெளியுறவுக் கொள்கைக்கான ஆக்கிரமிப்பு கருவியாக முன்வைத்துள்ளனர்.
ஒரு இரவு விருந்தில் கலந்துகொண்டு பேசுகையில் அமெரிக்க கடற்படை செயலாளர் கார்லோஸ் டெல் டோரோ இவ்வாறு அறிவித்தார்: “கியூபாவில் பிறந்த நான் தனிப்பட்ட முறையில் கம்யூனிசம் என்றால் என்னவென்று புரிந்துகொண்டேன். மேலும், சீனாவின் அச்சுறுத்தல் மற்றும் உலக ஒழுங்கை அழிப்பதற்கான அதன் போக்கை வைத்து உண்மையில் நாங்கள் மூன்று நாடுகளும் சாத்தியமான எல்லா வழிகளிலும் அதைத் தோற்கடிக்க உறுதிபூண்டுள்ளோம்.'
பல தசாப்தங்களுக்கு முன்னர் முதலாளித்துவத்தை மறுசீரமைத்தசீன ஆட்சியைப் பற்றிய டெல் டோரோவின் வெறித்தனமான கம்யூனிய எதிர்ப்பானது, அமெரிக்காவில் உள்ள பாசிச கியூபா குடியேற்ற சமூகத்தின் பின்னணியுடன் சந்தேகத்திற்கு இடமின்றி பிணைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், உள்நாட்டு ஆயுத சேவைகள் குழுவின் துணைத் தலைவரான குடியரசுக் கட்சியின் காங்கிரஸ் உறுப்பினர் ரோப் விட்மேனும் இதே கருத்தைக் கூறியுள்ளார். அதாவது, “இதில் தவறில்லை, எங்களின் வாழ்நாள் அச்சுறுத்தலாக சீன கம்யூனிஸ்ட் கட்சி உள்ளது. இதில் இரண்டு வழிகள் இல்லை. நாடுகளாக நாங்கள் யார் என்பதை ஒவ்வொரு அம்சத்திலும் அது பரிசோதிக்கும்” என்று அவர் கூறியுள்ளார்.
முக்கியமாக ஆயுத வியாபாரிகள் கலந்து கொள்ளும் கூட்டத்தில், சீனாவின் “தோல்வி” பற்றி பேசுவதற்கும் பெய்ஜிங்கை “எங்கள் வாழ்நாள் அச்சுறுத்தல்” என்று குறிப்பிடுவதற்கும் ஒரே ஒரு அர்த்தம் மட்டுமே இருக்க முடியும். அதாவது, AUKUS மற்றும் நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தமானது, சீனாவுடனான போருக்கான தயாரிப்பு தான் என்பதை டெல் டோரோவும் விட்மேனும் தெளிவாகக் கூறியுள்ளனர்.
இக் கூட்டத்தைப் பற்றி, பெருநிறுவன ஆஸ்திரேலியன் என்ற பத்திரிகையில் வந்த ஒரு கட்டுரை இதை கிட்டத்தட்ட ஒப்புக்கொண்டுள்ளது.
“பெய்ஜிங்கையும் மாஸ்கோவையும் குறிவைத்து, 2040 களில் குறைந்தது எட்டு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களுடன் ஆஸ்திரேலியாவைத் தயார்படுத்துவதற்கு மூன்று நாடுகளின் இராணுவக் கூட்டணி முனைந்து வருவதாக கூறப்படும் சீனா மற்றும் ரஷ்யாவின் குற்றச்சாட்டுக்களை வெளிப்படையாக உறுதிப்படுத்துவதாக” இந்த குறிப்புகள் ஒப்புக்கொண்டன. இந்த கருத்துக்கள், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ், பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் அல்லது பைடென் ஆகியோர் நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தத்தை அறிவித்தபோது கூறியதை விட மிக வெளிப்படையானவை என்று Australian பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
அறிக்கைகள் அமெரிக்க அரசாங்கம் மற்றும் பென்டகனின் கோட்பாடுகளுடன் முழுமையாக ஒத்துப்போகின்றன. 2018 இல், பென்டகன் மூலோபாய ஆவணமானது, “பெரும் வல்லரசுப் போட்டி என்பது பயங்கரவாதத்திற்கு எதிரானது அல்ல, இப்போது அமெரிக்க தேசிய பாதுகாப்பின் முதன்மை மையமாக உள்ளது” என்று அறிவித்தது. அது சீனாவையும் ரஷ்யாவையும் அமெரிக்காவின் உலகளாவிய மேலாதிக்கத்திற்கான அச்சுறுத்தல்களாக வெளிப்படையாக அடையாளம் காட்டியது.
பைடென் நிர்வாகத்தின் 2022 தேசிய பாதுகாப்பு மூலோபாயம் இவ்வாறு வலியுறுத்தியுள்ளது: அதாவது “சர்வதேச ஒழுங்கை மறுவடிவமைக்கும் நோக்கத்தையும், அதை செய்வதற்கான அதிகரித்தளவிலான தகமையும் கொண்ட சீன மக்கள் குடியரசுடன் நாங்கள் திறம்பட போட்டியிடுவோம்” என்கிறது.
அதேவேளை அமெரிக்க அரசாங்கத்தின் ஏனைய ஆவணங்கள், அமெரிக்க இராணுவத்தின் உலகளாவிய நடவடிக்கைகளுக்கு சீனா ஒரு அச்சுறுத்தலாக இல்லை என்பதை ஒப்புக்கொண்டுள்ளன. உதாரணமாக, கடந்த ஆண்டு, அமெரிக்க பாதுகாப்புத் துறையின் வருடாந்திர அறிக்கையானது, சீனாவின் ஒரே இராணுவ இலட்சியம், “சீனாவின் எல்லையில் அமெரிக்க பிரசன்னத்தைக் கட்டுப்படுத்துவது” தான் என்று கூறியுள்ளது.
உண்மையில், “சர்வதேச ஒழுங்கு” பற்றிய குறிப்புகளானது, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நீடித்த வீழ்ச்சியின் மத்தியில் நிகழும் சீனாவின் பொருளாதார வளர்ச்சி, அமெரிக்க முதலாளித்துவத்தின் மேலாதிக்கத்தை அச்சுறுத்துகிறது என்ற அச்சத்தை வெளிப்படுத்துகிறது.
டெல் டோரோவினதும், விட்மேனினதும் கருத்துக்கள், நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தம் குறித்த தொழிற்கட்சியின் பல்வேறு நியாயப்படுத்தல்களின் பொய்யான தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.
இது ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டபோது, அல்பானீஸ், அவரது பாதுகாப்பு அமைச்சர் ரிச்சார்ட் மார்லஸ் உடன் சேர்ந்து ஆஸ்திரேலியாவின் வடக்கு பிராந்தியங்களை பாதுகாக்க நீர்மூழ்கிக் கப்பல்கள் உதவும் என்று தெளிவற்ற முறையில் கூறினார். அதாவது, ஆசியாவிலிருந்து தொடங்கப்படும் படையெடுப்பின் வாய்ப்பை ஆஸ்திரேலியா எப்படியோ எதிர்கொண்டது என்பதே இதன் தெளிவான உட்குறிப்பாகும்.
கடந்த மாதம் National Press club இல் முன்னாள் பிரதமர் பௌல் கீட்டிங் பேசுகையில், இந்த உள்நோக்கங்களைத் தகர்த்தார். அதாவது, பரந்த கண்டத்தின் பெரும்பாலும் தரிசான மற்றும் மக்கள் வசிக்காத வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளை வந்தடைவதற்கு முன்பு, சுமார் 6,000 கிலோமீட்டர்கள் பயணிக்க வேண்டிய போர்க் கப்பல்களின் ஒரு தொகுப்பை (armada) சீனர்கள் ஏவ வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். மேலும், சீனா அத்தகைய நடவடிக்கையை மேற்கொள்வதற்கு எந்த உந்துதலையும் கொண்டிருக்கவில்லை.
மாறாக, இந்த எச்சரிக்கைகள் வடக்கில் இருந்து “மஞ்சள் ஆபத்து” என்ற இனவாத கூற்றுக்களின் மெல்லிய மூடிமறைப்புடனான தயாரிப்பாக இருந்தன. இது “வெள்ளை ஆஸ்திரேலியா” என்ற கொள்கையுடன் தொடர்புடையது. அதாவது, அமெரிக்கா தலைமையிலான எந்தவொரு போரின் ஒரு பகுதியாக சீனாவின் கடற்கரையோரத்தில் தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு, நெடுந்தூரம் சென்று தாக்கும் திறன் கொண்ட, அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்கள் பயன்படுத்தப்படும் என்ற உண்மையை மறைப்பதே அவர்களின் நோக்கமாக இருந்தது.
கீட்டிங்கின் தலையீட்டைத் தொடர்ந்து, ஆஸ்திரேலிய அரசு தன் போக்கை மாற்றிக் கொண்டது. அவரது கருத்துக்களுக்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு, நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தம் என்பது சீனாவுக்கு எதிரான அமெரிக்கா தலைமையிலான போரில் ஆஸ்திரேலியா தானாகவே சேரும் என்பதற்கான உறுதியளிப்பு அல்ல என்று மார்ல்ஸ் கூறினார். மாறாக, இந்தோ-பசிபிக் வழியாகச் செல்லும் ஆஸ்திரேலிய வர்த்தகப் பாதைகளைப் பாதுகாப்பதே அதன் நோக்கமாகும் என்கிறார்.
சீனப் படையெடுப்புக்கான பரிந்துரைப்புகளை விட இந்த கூற்று மிகவும் கற்பனையானது. பல வர்ணனையாளர்கள் குறிப்பிட்டது போல, இந்தப் பிராந்தியத்தில் ஆஸ்திரேலிய வர்த்தக்கத்தின் பெரும்பகுதி சீனாவுடன் நடக்கிறது. அதாவது, சீனாவிடமிருந்தான சீன வர்த்தகத்தைப் பாதுகாக்க அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் அவசியம் என்று மார்ல்ஸ் முக்கியமாகக் கூறினார்.
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் ஒரு அம்சம், கீட்டிங்கின் நிலைப்பாடுகளும், AUKUS மீதான எவ்வித பரந்த எதிர்ப்பும் எதிர்க்கப்படும் என்று பைடென் நிர்வாகத்திற்கு உறுதியளிப்பதாகத் தெரிகிறது. செனட்டர் பேட்டர்சனும் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்வான்சனும் வாஷிங்டனுக்கு வந்து சிறிது நேரத்திலேயே Nine Media வெளியீடுகளில் வெளிவந்த ஒரு கட்டுரைக்கு “AUKUS மீதான கீட்டிங்கின் கொதிப்பான தாக்குதல் ஆஸ்திரேலியாவை அமெரிக்காவின் சேதக் கட்டுப்பாட்டிற்குள் கைவிடுகிறது” என்ற தலைப்பிடப்பட்டது.
“கீட்டிங் யாருக்காகப் பேசுகிறார் என இது பற்றி ஏற்கனவே இங்குள்ளவர்களால் கேட்கப்பட்டிருப்பதாகவும், அவர் AUKUS இற்கு ஆதரவாகப் பேசுகிறாரா, மேலும் இது ஆபத்தானதா என்பது பற்றி அறிய உண்மையில் ஆர்வமாக உள்ளவர்கள் அவரிடம் கேட்டிருப்பதாக” பேட்டர்சன் கூறியுள்ளார்.
பேட்டர்சன் மேலும் இவ்வாறு கூறினார்: “கீட்டிங் வெறுமனே ஒரு முன்னாள் பிரதமர் மட்டுமல்ல. அவர் பெரும் அந்தஸ்தையும், மரியாதைக்குரிய உலகளாவிய நன்மதிப்பையும் பெற்றவராவார். அப்படியானால், அத்தகைய விவரிப்புகள் பொதுமக்கள் ஆதரவால் ஏற்றுக்கொள்ளப்படும் என்பதோடு, மறுக்கப்படாது. அது மிகவும் ஆபத்தானது.”
இராணுவ உளவுத்துறை எந்திரத்துடன் மிக நெருக்கமான உறவுகளைக் கொண்ட வலதுசாரி செனட்டரான இவர், உடனடியாக கீட்டிங்கைக் கண்டித்ததற்காக தொழிற்கட்சி அரசாங்கத்தை பாராட்டினார். “அவர் ஒட்டுமொத்த தொழிற்கட்சிக்காக பேசுகிறார் என்று எங்கள் பங்காளிகள் எவரும் ஏதோவொரு வகையில் தவறாகக் கருதுவதை நாங்கள் விரும்பவில்லை,” என்று பேட்டர்சன் கூறினார்.
ஒரு வலதுசாரி பிரமுகரான கீட்டிங் எந்த வகையிலும் போரையோ அல்லது அமெரிக்க ஏகாதிபத்தியத்தையோ எதிர்க்கவில்லை. ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளியுடனான முழு அளவிலான போரின் விளைவுகள் குறித்த அச்சத்தில் அவர் ஆளும் உயரடுக்கின் சிறுபான்மை பிரிவை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.
இந்த அடுக்கு அரசியல் ஸ்தாபனத்தின் மேலாதிக்க பிரிவுகளுடன் அதிகரித்தளவில் தனிமைப்படுத்தப்பட்டு வருவதானது, பைடென் நிர்வாகம் சீனாவுடனான ஒரு போரை குறிவைத்துள்ள போதிலும், அதற்கு கட்டுப்பட்டு ஆஸ்திரேலிய ஏகாதிபத்தியத்தின் நலன்களை அவர்கள் தொடர்வார்கள் என்பதைத் தெளிவுபடுத்துகிறது.
இந்த போர் உந்துதலுடனான ஆஸ்திரேலிய அணிவகுப்பின் முக்கிய அங்கமாக, சீனாவில் இருந்து ஆஸ்திரேலியாவில் “வெளிநாட்டு தலையீடுகள்” என்று கூறப்படுவதற்கு எதிரான ஒரு வெறித்தனமான பிரச்சாரம் உள்ளது. இந்த மெக்கார்தியிச முயற்சியானது, பெரும் போர் எதிர்ப்பை சட்டவிரோதமாக்கிய 2018 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட இருகட்சிகளின் கடுமையான சட்டத்தை உள்ளடக்கி, “குறுக்கீடு” என்பதற்கான ஒரு சிறிய ஆதாரத்தையும் கண்டுபிடிக்காமல் ஆறு ஆண்டுகளாக நடத்தப்பட்டது.
இருப்பினும், பெருநிறுவன பத்திரிகைகளின் பக்கங்களில், அமெரிக்க உயர்மட்ட அதிகாரிகள், ஆஸ்திரேலிய அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சி செய்தித் தொடர்பாளர்களுடனான இரகசிய பின்னணி சந்திப்புகள் உட்பட, முன்னாள் பிரதமர் கீட்டிங்கின் கருத்துக்களுக்கு எதிராக கிளர்த்தெழுந்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. “வெளிநாட்டு குறுக்கீடு” என்பதை தெளிவாகக் குறிக்கும் அப்பட்டமான புள்ளி வெறுமனே புறக்கணிக்கப்பட்டுள்ளது.
கீட்டிங் போன்ற பிரமுகர்களால் உருவாக்கப்பட்ட AUKUS பற்றிய தந்திரோபாய விமர்சனங்களை விட தொழிலாளர்களினதும் இளைஞர்களினதும் பரந்த எதிர்ப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். AUKUS அறிவிப்பு பரவலான அதிர்ச்சியையும் கோபத்தையும் தூண்டியுள்ளது. கடந்த தசாப்தத்தில் சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின் போர்த் திட்டங்களில் ஆஸ்திரேலியாவின் பங்கு அதிகரித்து வருவது குறித்து அறியவிடாமல் சாமானிய மக்கள் இருட்டில் வைக்கப்பட்டுள்ளனர். நீர்மூழ்கிக் கப்பல்களுக்கான 368 பில்லியன் டாலர் செலவினங்களுக்கு தவிர்க்க முடியாமல் சமூகச் செலவினங்களில் பாரிய வெட்டுக்களை மேற்கொள்ள நேரிடும். இது பெருகிய முறையில் போருக்கு எதிராக இயக்கப்படும் வர்க்கப் போராட்டத்தின் வளரும் எழுச்சியை இன்னும் தீவிரப்படுத்தும்.