இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
கடந்த செப்டம்பரில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்ததற்காக, உலகின் மிகப்பெரிய எண்ணெய் பெருநிறுவனங்களில் ஒன்றுக்கு கொடுக்கப்பட்ட ஒரு மென்மையான தண்டனையில், அமெரிக்க தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிர்வாகம் (OSHA) கடந்த வாரம் வட அமெரிக்க பிரிட்டிஷ் பெட்ரோலியம் உற்பத்தி ஆலைக்கு $156,250 அபராதம் விதித்தது. அமெரிக்க முதலாளித்துவத்தைப் பொறுத்தவரை, ஒரு தொழிலாளியின் வாழ்க்கை மிகவும் மலிவானது.
32 மற்றும் 34 வயதுடைய பென் மற்றும் மாக்ஸ் மோரிஸ்ஸி என்ற இரண்டு சகோதரர்கள், டோலிடோவுக்கு சற்று வெளியே, ஓஹியோவின் ஓரிகானில் உள்ள பிரிட்டிஷ் பெட்ரோலியம் ஹஸ்கி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஏற்பட்ட வெடிப்பு மற்றும் தீ விபத்தில் எரிந்து உயிரிழந்தனர்.
ஆறு மாத விசாரணைக்குப் பின்னர், மத்திய அரசின் அந்த வேலையிட பாதுகாப்பு அமைப்பு 10 'தீவிரமான' விதிமீறல்கள் மற்றும் ஒரு 'தீவிரமான அல்லாத வேறு விதமான' விதிமீறல்களுக்காக அந்நிறுவனத்தைச் எச்சரித்தது. அதன் கச்சா எண்ணெய் செறிவூட்டும் முதல் பிரிவில் இரசாயன மட்டங்களைக் கட்டுப்படுத்த தவறியதும் அதில் உள்ளடங்கும். இது 'திரவ நாப்தா வெளியாகி, எரியக்கூடிய நிராவி, நெருப்பு, ஹைட்ரஜன் சல்பைடு மற்றும் வெடிக்கும் அபாயங்களை தொழிலாளர்களை எதிர்நோக்க வைத்தது.”
அமெரிக்க தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிர்வாகத்தின் பத்திரிகை அறிக்கையின்படி, 'திரவ எரிவாயு கலவை உலையில் அதிகரித்து வந்த திரவ அளவை அந்தத் தொழிலாளர்கள் சரி செய்ய முயன்ற போது, ஒரு எரியக்கூடிய நீராவி மேகம் போல் உருவாகி, நெருப்பு ஏற்பட்டு, பின்னர் செப்டம்பர் 2022 இல் ஒரு வெடிப்பை ஏற்படுத்தியது. இவை அவர்களுக்கு உயிராபத்தான தீக்காயங்களை ஏற்படுத்தின.”
'எந்த நிலைமைகளின் கீழ் அவசரமான நிறுத்தம் தேவைப்படுகிறது, அவசரமான நிறுத்தத்தைப் பாதுகாப்பாகவும் உரிய நேரத்திலும் செய்வதை உறுதிப்படுத்தத் உரிய திறமையான தொழிலாளர்களுக்கு அதை நிறுத்துவதற்கான பொறுப்பை ஒதுக்குவது உட்பட, அவசரமான நிறுத்தத்திற்கான தெளிவான அறிவுறுத்தல்களை வழங்கும் எழுத்துப்பூர்வமான வேலையிட வழிமுறைகளை உருவாக்கி நடைமுறைப்படுத்த' தவறி இருந்ததற்காகவும் பிரிட்டிஷ் பெட்ரோலியம் எச்சரிக்கப்பட்டது.
உண்மையில், அந்த உயிராபத்தான வெடிப்புக்கு முன்னரே, எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை தொழிலாளர்கள் எண்ணெய் செறிவூட்டும் பிரிவில் அதிகரித்து வந்த உறுதியற்ற நிலைமைகளைக் குறித்து தொடர்ந்து எச்சரித்திருந்ததுடன், நிர்வாகம் அதன் செயல்பாட்டை நிறுத்த வேண்டும் என்றும் கோரியிருந்தார்கள். அவர்களின் கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டிருந்தன.
அந்தப் பிரிவைப் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டு வரும் ஒரு குழாய் பொருத்துநர் WSWS இக்கு கூறியது போல, “அந்த பிரிவு எவ்வளவு உறுதியற்றதாக இருந்தது என்பதை அவர்கள் புகார் கூறியிருந்தார்கள். அதிகப்படியான பொருட்கள் பற்றியெரியும் நெருப்பில் இருந்து இந்தளவுக்கு மிகப் பெரியளவில் தீம்பிழம்புகள் வெளிவந்ததை இதுவரை ஒருபோதும் பார்த்ததில்லை என்று 30 ஆண்டுகள் அனுபவம் உள்ள ஒரு இயந்திர இயக்குனர் தெரிவித்தார். ஏதோ தவறு இருப்பது அவர்களுக்குத் தெரிந்திருந்தது. என்ன விலை கொடுத்தாவது அதை நிறுத்தி இருக்க வேண்டும். இரண்டு தொழிலாளர்களின் உயிர்களுக்கு $150,000 என்பது மிகவும் வேதனையானது. இவ்வளவு பெரிய நிறுவனத்திற்கு ஒரு அற்பத் தொகை,” என்றார்.
இந்த அபராதத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்ய பிரிட்டிஷ் பெட்ரோலியத்திற்கு 15 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. உக்ரேன் போரின் காரணமாக எரிபொருள் விலைகள் அதிகரித்ததன் காரணமாக, அந்த நாடுகடந்த நிறுவனம் 2022 இல் ஈட்டிய மிக அதிகபட்ச $28 பில்லியன் இலாபத்தில் இந்த அபராதம் சுமார் 0.0005 சதவீதம் மட்டுமே ஆகும். மோரிஸ்ஸி சகோதரர்களின் விதவை மனைவியர் அவர்களின் சின்னஞ்சிறிய குழந்தைகளுக்குத் தந்தை இல்லாமல் அவர்களை வளர்க்க போராடி வருகின்ற அதேநேரத்தில், பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனமோ செல்வந்த முதலீட்டாளர்களின் பங்கு மதிப்புகளை அதிகரிக்க கடந்தாண்டு அது செலவிட்ட $11.7 பில்லியனுக்குக் கூடுதலாக, அடுத்த சில மாதங்களில் $2.75 பில்லியன்களைப் பங்குகள் வாங்கி விற்க செலவிட்டு வருகிறது.
இந்த OSHA அறிக்கையானது, நிறுவனத்தின் ஒரு முழுமையான மூடிமறைப்பாக உள்ளது. அது கடந்த தசாப்தங்களில் அதன் உலகளாவிய தொழிலாளர் சக்தியில் 20,000 க்கும் அதிகமான வேலைகளை வெட்டி உள்ளதுடன், பராமரிப்பு மற்றும் பழுது பார்க்கும் வேலைகளைக் குறைந்த செலவு ஒப்பந்ததாரர்களிடம் ஒப்படைத்துள்ளது. இதனால் அதன் எஞ்சிய தொழிலாளர்கள் 12-16 மணி நேரங்கள் வேலை செய்ய நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். சிலர் தொடர்ந்து 21 நாட்கள் வரையில் இவ்வாறு வேலை செய்ய நிர்பந்திக்கப்பட்டுள்ளனர்.
இது பிரிட்டிஷ் பெட்ரோலியம் ஹஸ்கி ஆலையில் தொழிலாளர்கள் மற்றும் நிர்வாகத்தின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்புக்கான கூட்டுக் குழுக்களை செயல்படுத்தும் ஐக்கிய எஃகுத்துறை தொழிலாளர்கள் சங்கம் (USW) வகித்த பாத்திரத்தையும் மூடிமறைக்கிறது. அது இந்த அபாயகரமான பிரிவை நிறுத்துவதற்கான தொழிலாளர்களின் கோரிக்கைகளை அமுலாக்க எதையும் செய்யவில்லை.
USW இன் தேசிய எண்ணெய் நிறுவன பேரம்பேசும் திட்டத்தின் தலைவர் மைக் ஸ்மித், கடந்த வாரம் OSHA இன் தீர்ப்பு பற்றிய அறிக்கையில், “எந்த அபராதமோ அல்லது நஷ்டஈடோ இழந்த உயிர்களுக்கு ஈடாகாது என்றாலும், அவர்களின் விபரங்களையும் பிரிட்டிஷ் பெட்ரோலியத்தைக் பொறுப்பேற்க வைப்பதற்கான அவர்களின் முயற்சிகளையும் நாங்கள் வரவேற்கிறோம். முன்னோக்கி நகர்கையில், இந்த மாதிரியான துயரம் எதுவும் இனிமேல் ஒருபோதும் நடக்காமல் இருப்பதை உறுதிப்படுத்த, எங்கள் தொழிற்சங்கம் OSHA மற்றும் அந்த ஆலையின் புதிய உரிமையாளர் செனோவஸ் உடன் இணைந்து செயலாற்ற உறுதி பூண்டுள்ளது,” என்று தெரிவித்தார்.
உண்மையில் USW அதிகாரத்துவம் அது பிரதிநிதித்துவம் செய்வதாக கூறும் தொழிலாளர்களை விலையாக கொடுத்து பெருநிறுவனத்தின் இலாபங்களை அதிகரிக்க பல தசாப்தங்களாக BP, Exxon, Marathon மற்றும் பிற பெருநிறுவனங்களுடன் ஒத்துழைத்து வருகிறது. ஓஹியோவில் இந்த விபத்துக்கு ஏழு மாதங்களுக்கு முன்னர், USW தலைவர் டொம் கொன்வே, 30,000 சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோலிய-இரசாயன தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தைத் தடுக்க ஜனாதிபதி பைடெனுடன் இரகசிய பேச்சுவார்த்தைகளை நடத்தினார். அந்த வேலைநிறுத்தம் ரஷ்யாவுக்கு எதிரான அதன் போர் தயாரிப்புகளில் குறுக்கிடும் என்று வெள்ளை மாளிகை அஞ்சியது. நிஜமான சம்பளங்களில் ஆழ்ந்த வெட்டுக்களுடன் அரசாங்கத்தால் கட்டளையிடப்பட்ட ஓர் ஒப்பந்தத்திற்கு USW ஒப்புக் கொண்டது. அந்த ஒப்பந்தம் தொழில்துறையில் நிலவும் உயிராபத்தான நிலைமைகளைத் தடுக்க எதுவும் செய்யவில்லை.
பிரிட்டிஷ் பெட்ரோலியம் மற்றும் பிற பெருநிறுவனங்களைப் பொறுத்த வரையில், தொழிலாளர்களைக் கொல்வதற்கும், ஊனமாக்குவதற்கும் அவர்கள் என்ன அபராதங்கள் செலுத்தினாலும் அவை வியாபார செலவுகளில் ஒரு சிறிய அதிகரிப்பாக உள்ளது.
பிரிட்டிஷ் பெட்ரோலியம் குறிப்பாக இலாபத்திற்காக தொழிலாளர்களைத் தியாகம் செய்வதில் இழிபெயர் பெற்ற நிறுவனமாகும். 2005 இல், டெக்சாஸ் நகர சுத்திகரிப்பு ஆலையில் ஏற்பட்ட ஒரு வெடிப்பில் 15 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 180 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்துக்கு, உற்பத்தியை அதிகரிக்கவும் செலவுகளைக் குறைக்கவும் நிர்வாகிகள் தொழிலாளர்களுக்கு அழுத்தம் கொடுத்து வந்ததாக விசாரணையாளர்கள் கண்டறிந்தனர். 2010 இல், பிரிட்டிஷ் பெட்ரோலியம் ஆழ்கடல் Deepwater Horizon ஆலை வெடிப்பில் 11 தொழிலாளர்கள் கொல்லப்பட்டார்கள். இது ஒரு மிகப் பெரிய சுற்றுச்சூழல் பேரிடரை ஏற்படுத்தியது. மீண்டும் அந்த விபத்திலும் செலவு குறைப்பு பங்களித்திருந்ததாக விசாரணையாளர்கள் கண்டறிந்தனர்.
அதே ஆண்டில், வட அமெரிக்க பிரிட்டிஷ் பெட்ரோலிய நிறுவனம் மற்றும் பிரிட்டிஷ் பெட்ரோலிய-ஹஸ்கி நிறுவனம் ஆகியவற்றுக்கு 62 “தெரிந்தே செய்த' மற்றும் 'தீவிர' பாதுகாப்பு விதிமீறல்களுக்காக OSHA அமைப்பு 3 மில்லியன் டொலர்களை அபராதம் விதித்தது. அதன் சுத்திகரிப்பு ஆலைகளில் அறியப்பட்ட ஆபத்துக்களைச் திருத்தாமல் புறக்கணித்தமை அல்லது நீண்டகாலம் காலதாமதம் ஆகியவையும் அதில் உள்ளடங்கும். பிரிட்டிஷ் பெட்ரோலியம் அந்த அபராதத்திற்கு எதிராக வழக்கு தொடுத்தது. ஒரு நிர்வாக நீதிபதி அதன் அபராதத்தை $80,000 ஆகக் குறைத்தார்.
அமெரிக்காவில் ஒரு தொழிலாளியை கொன்றதற்காக OSHA அமைப்பின் சராசரி அபராதம், கிடைக்கும் சமீபத்திய விபரங்களின்படி, 2021 இல் 9,753 டொலராக இருந்தது. இது ஒரு 'தடுக்கும்' அமைப்பு என்பதற்கு மாறாக, பாதுகாப்பற்ற நிலைமைகளைப் பராமரிக்கவும் மற்றும் இடைவிடாமல் சுரண்டலை அதிகரிக்கவும் பெருநிறுவனங்களுக்கான ஒரு வெற்றுக் காசோலையாக உள்ளது.
2021 இல் இருந்து சமீபத்திய காலம் வரையிலான தொழிலாளர் புள்ளியியல் விபரங்களின்படி, அமெரிக்காவின் தொழில்துறை படுகொலைக் கூடத்தில், வேலை தொடர்பான காயத்தில் ஒவ்வொரு 101 நிமிடங்களுக்கும் ஒரு தொழிலாளி கொல்லப்படுகிறார்.
5,000 இக்கும் அதிகமான உத்தியோகப்பூர்வ இறப்பு எண்ணிக்கையில், இரசாயன வெளிப்பாடுகளாலும் மற்றும் பிற தொழில்ரீதியான நோய்களாலும் ஒவ்வொரு ஆண்டும் ஏற்படும் சுமார் 120,000 உயிரிழப்புகள் உள்ளடக்கப்படவில்லை. பணியின் போது கோவிட் நோய்தொற்றுக்கு உள்ளாகி இறந்திருக்கக் கூடிய பத்தாயிரக் கணக்கான தொழிலாளர்களும் இந்த எண்ணிக்கையில் சேர்க்கப்படவில்லை. இந்தப் புள்ளிவிபரங்கள் இப்போது தெரிவிக்கப்படுவதும் கூட இல்லை.
பெருநிறுவன இலாபங்களை அதிகரிப்பதற்கான அவர்களின் முயற்சிகளில், ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும் ஏற்கனவே கடுமையான பாதுகாப்பு விதிமுறைகளைத் திரும்பப் பெற்றுள்ளனர். இது நோர்போக் தெற்கு ரயில் தடம் புரண்ட விபத்து மற்றும் ஓஹியோவின் கிழக்கு பாலஸ்டைனில் வசிப்பவர்கள் நச்சுப்புகையை சுவாசிக்க வேண்டிய நிலை போன்ற சம்பவங்களுக்கு இட்டுச் சென்றுள்ளது.
உலகெங்கிலும் தொழிலாளர்களின் உயிரிழப்புகளின் தினசரி எண்ணிக்கை கணக்கிடப்படுகிறது. கடந்த வாரம், மத்திய கொலம்பியாவின் ஒரு சுரங்கத்தில் மீத்தேன் வெடிப்பில் 21 நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். பெப்ரவரி பிற்பகுதியில், சீனாவின் உள்ளார்ந்த மங்கோலியா பகுதியில் உள்ள ஒரு மிகப் பெரிய திறந்தவெளி நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் டசின் கணக்கான தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.
தொழிலாளர்கள் தங்கள் உயிரைப் பாதுகாக்க கூட்டாகச் செயல்படத் தொடங்கும் போது மட்டுந்தான் இந்தப் படுகொலைகள் தடுக்கப்படும். கோவிட்-19 பெருந்தொற்று நெடுகிலும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் மரணங்களை ஏற்றுக் கொண்டதைப் போலவே, தொழிற்சங்க எந்திரம் முடிவின்றி படுகொலைகளை ஏற்றுக்கொள்கிறது. அவை பெருநிறுவனங்கள் மற்றும் அரசின் முகமைகள் என்பதைத் தவிர வேறில்லை.
வேலையிடங்களில் சுரண்டலின் கொடூரமான நிலைமைகளுக்கு எதிரான போராட்டத்திற்கு, அதிகாரத்தைத் தொழிற்சங்க அதிகாரத்துவத்திடம் இருந்து ஆலை தளத்தில் உள்ள தொழிலாளர்களுக்கு மாற்ற சாமானியத் தொழிலாளர் நடவடிக்கை குழு மற்றும் வேலையிட நடவடிக்கை குழுக்களை உருவாக்க வேண்டியது அவசியமாகும். சாமானியத் தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியின் (IWA-RFC) வழிகாட்டுதலின் கீழ் கட்டியெழுப்பப்பட்டு வரும் இந்தக் குழுக்கள், பெருநிறுவன சர்வாதிகாரத்தை எதிர்த்து, உற்பத்தி, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நிலைமைகள் மீது தொழிலாளர்களின் கட்டுப்பாட்டுக்காக போராட வேண்டும்.
சமுதாயத்தின் சோசலிச மாற்றத்தின் பாகமாக, சமூகத்தின் மிகப் பெரிய தொழில்துறைகளின் தனிச்சொத்துடைமையை ஒழித்து, அவற்றை சமூக சொத்துக்களாக மாற்றுவதன் மூலமாக, இலாபத்திற்காக அன்றாடம் தொழிலாளர்களின் உயிர்களைத் தியாகம் செய்வதைத் தடுப்பதற்கான போராட்டத்திற்கு இது அடித்தளத்தை அமைக்கும்.