இலங்கையில் புதன்கிழமை நடைபெற்ற தேசிய வேலைநிறுத்தத்தில் ஐந்து இலட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தால் திணிக்கப்படும் சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட்டுள்ள சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இலங்கை முழுவதிலும் இருந்து 5 இலட்சத்துக்கும் அதிகமான அரச மற்றும் தனியார் துறை ஊழியர்கள் புதன்கிழமை ஒரு நாள் தேசிய வேலைநிறுத்தத்தில் இணைந்துகொண்டனர்.

15 மார்ச் 2023 அன்று யாழ்ப்பாணத்தில் அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக ஆசிரியர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்.

போராட்டத்தில் பங்கேற்காமல் இருக்க தொழிலாளர்களை அதைரியப்படுத்தும் முயற்சியில் தொழிற்சங்கங்கள் ஈடுபட்ட போதிலும், தொழிலாளர்களோ வேலைநிறுத்தத்துக்கு எதிராக விதிக்கப்பட்ட அத்தியாவசிய சேவை உத்தரவுகளை மீறி, கொழும்பிலும் பல நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டனர்.

200,000 ஆசிரியர்கள், மருத்துவர்கள் மற்றும் தாதிகள் உட்பட கிட்டத்தட்ட 100,000 சுகாதார ஊழியர்கள், 22,000 மின்சார ஊழியர்கள், 10,000 க்கும் மேற்பட்ட கொழும்பு துறைமுக ஊழியர்கள், ஏறக்குறைய 13,000 பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் மற்றும் 6,000 பல்கலைக்கழக ஆசிரியர்கள், 24,000 தபால் ஊழியர்கள், 8,000 தொலைத்தொடர்பு ஊழியர்கள், மற்றும் 20,000 க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் பொது வங்கி ஊழியர்களும் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கெடுத்திருந்தனர்.

இந்த தேசிய வேலைநிறுத்தத்துக்கு, தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளுடன் (TUMO) சேர்ந்து, சுகாதார தொழிலறிஞர்கள் கூட்டமைப்பு (HPF) மற்றும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) உட்பட தொழிற்சங்கங்களின் ஒரு பெரிய கூட்டமைப்பான தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையம் (TUCC) அழைப்பு விடுத்திருந்தது. பெரும்பாலான தொழிற்சங்கங்கள், குறிப்பாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் போன்ற தொழில்சார் சங்கங்கள், தங்கள் கோரிக்கைகளை, தொழிலாளர்களின் சம்பளத்தின் மீது அரசாங்கத்தால் திணிக்கப்பட்டுள்ள ஊதியத்தை ஒத்த வரி என்ற ஒரே ஒரு பிரச்சினைக்கு மட்டும் மட்டுப்படுத்தியுள்ளன.

இருப்பினும், இந்த தொழிற்சங்கங்கள் எதுவும் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கனத் திட்டத்தை எதிர்க்கவில்லை. அரசாங்கத்தின் மீது அதிக அழுத்தம் கொடுப்பதன் மூலம் தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளை வென்றெடுக்க முடியும் என்று அவை வலியுறுத்துகின்றன. அதே நேரத்தில் அவை, சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளை ஆதரிக்கும் ஐக்கிய மக்கள் சக்தி (ஐ.ம.ச.) மற்றும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) போன்ற எதிர் பாராளுமன்றக் கட்சிகளுக்குப் பின்னால் கட்டிப் போடுவதன் மூலம் தொழிலாளர்களின் போராட்டங்களைத் தடம் புரளச் செய்வதற்கு வேலை செய்கின்றன.

அரசாங்கம் தமது கோரிக்கைகளை நிறைவேற்றத் தவறினால் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தொழிற்சங்கங்கள் ஏற்கனவே அறிவித்திருந்தன. எவ்வாறாயினும், மார்ச் 15 புதன்கிழமை தேசிய வேலை நிறுத்தம், ஒரு நாள் வேலைநிறுத்தத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டதுடன் எதிர்கால போராட்ட நடவடிக்கை மார்ச் 22 வரை ஒத்திவைக்கப்பட்டது.

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம், புதன்கிழமை மாலை அரசாங்கத்துடனான கலந்துரையாடல்களுக்குப் பிறகு, அது ஒரு 'சாதகமான பதிலை' பெற்றதாக அறிவித்ததுடன் வியாழன் காலை நடத்துவதற்கு முன்னர் திட்டமிடப்பட்ட வேலைநிறுத்தத்தை கைவிட்டது. இருப்பினும், அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தால் கூறப்படும் 'சாதகமான பதில்' என்பது, சர்வதேச நாணய நிதியத்துடன் பிணை எடுப்பு ஒப்பந்தத்தைப் பெற்று ஆறு மாதங்களுக்குப் பிறகு, அதன் புதிய ஊதியத்தை ஒத்த வரியை மறுபரிசீலனை செய்வதற்காக அரசாங்கம் கொடுத்த 'வாக்குறுதி' ஆகும்.

நேற்று, அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் அங்கம் வகிக்கும் தொழிற்சங்கங்களின் கூட்டு, அரசாங்கத்தின் 'பதிலை' ஏற்க முடியாது என்றும், அடுத்த வாரம் நிர்வாகத்துடனான கலந்துரையாடலில் 'தீர்வை' பெறத் தவறினால், அடுத்த வேலைநிறுத்த நடவடிக்கை குறித்து முடிவு எடுப்பதாகவும் அறிவித்தது.

எந்த சலுகையும் வழங்கப்பட மாட்டாது என விக்கிரமசிங்க அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது. புதிய, ஊதியத்தை ஒத்த வரியைப் போலவே, அரசுக்கு சொந்தமான தொழிற்துறையில் விரிவான தனியார்மயமாக்கல் மற்றும் இலட்சக் கணக்கான அரச துறை வேலைகள் அழிப்பும் மேற்கொள்ளப்படும் என்று கடந்த ஆண்டு அறிவித்தது. சம்பள வெட்டு மற்றும் மின்சாரம், நீர்வழங்கல், போக்குவரத்து மற்றும் பிற பொதுப் பயன்பாடுகளுக்கான கட்டண அதிகரிப்பும் திட்டமிடப்பட்டுள்ளன. உழைக்கும் மக்கள் மீதான இந்த கொடூரமான சமூகத் தாக்குதல், வாழ்க்கைச் செலவின் வானளவு அதிகரிப்புக்கும் சுகாதாரம் மற்றும் கல்வி வசதிகளில் பாரிய சரிவுக்கும் மேலாக திணிக்கப்படுகின்றன.

சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக போராடுவதற்கு நடவடிக்கை எடுக்கும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு எதிராக அரசாங்கம் பொலிஸ் அடக்குமுறையை முடுக்கி விடுகின்றது.

செவ்வாயன்று, பொலிஸ் திணைக்களமானது மேலதிக கலக எதிர்ப்பு உபகரணங்களை தலைநகரில் உள்ள பொலிஸ் களப்படை தலைமையகத்திற்கு அனுப்புமாறு, கொழும்பிற்கு வெளியே உள்ள உயர் அதிகாரிகளுக்கு பணித்தது. சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ, இந்த உபகரணங்கள்,, “அவை மிகவும் தேவைப்படும் பகுதிகளில் இருக்க வேண்டும்” என்றார். இது, தொழிலாள வர்க்கம் அரசியல்ரீதியாக தயார் செய்ய வேண்டும் என்பதற்கான மற்றொரு எச்சரிக்கை ஆகும். தொழிற்சங்கங்களால் பெருகிவரும் எதிர்ப்பைக் கட்டுப்படுத்த முடியாவிட்டால், வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களை கொடூரமான முறையில் தாக்குவதற்கு அரசாங்கம் பொலிஸ் மற்றும் இராணுவத்தை திரட்டும்.

இந்த வாரம் உலக சோசலிச வலைத் தள நிருபர்களிடம் பேசிய தொழிலாளர்கள், விக்கிரமசிங்க அரசாங்கம் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு எதிராக தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியதுடன் ஒரு ஐக்கியப்பட்ட தொழிலாள வர்க்கப் போராட்டத்தின் அவசியத்தை வலியுறுத்தினர்.

கொழும்பின் புறநகரில் உள்ள கொலன்னாவ எண்ணெய் விநியோக நிலையத்தைச் சேர்ந்த பெட்ரோலியத் தொழிலாளி ஒருவர், பெட்ரோலிய தொழிற்சங்கத் தலைவர்கள் அரசாங்கத்துடன் ஒத்துழைப்பதை விமர்சித்தார்.

'மார்ச் 15 அன்று எதுவும் நடக்கவில்லை. 300 தாங்கிகள் அனுப்பப்படும் வழக்கமான சாதாரண நாளாகவே அது இருந்தது. தொழிற்சங்கத் தலைவர்களுக்கு அரசாங்கம் சில சலுகைகளை வழங்கியதாகவும் அவர்கள் வாயை மூடிக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்து இந்த அரசாங்கத்தை விரட்ட விரும்பினர் ஆனால் தொழிற்சங்கங்கள் தலையிடவில்லை. சுயவிருப்பு ஓய்வூதிய திட்டத்தின் மூலம் 3,700 தொழிலாளர்கள் வேலையில் இருந்து நீக்கப்படுவர் என்று ஏற்கனவே கூறிய அதே அமைச்சருடன் அவர்கள் கூட்டாக உள்ளனர். தொழிலாளர்கள் இதற்கு எதிராக இருந்த போதிலும், அவர்கள் வேறு எந்த மாற்றையும் காணாததால், அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளலாம்,” என்று அவர் கூறினார்.

கொழும்பில் உள்ள ஒரு பெரிய பாடசாலை ஒன்றின் ஆசிரியர் பத்திரன கூறியதாவது: “எந்த ஒரு தொழிற்சங்கமும் எங்கள் பாடசாலைக்கு வருகை தராததால் அல்லது எந்த விளக்கமும் அளிக்காததால் மார்ச் 15 அன்று வேலைநிறுத்தத்தில் சேருவது பற்றிய யோசனையில் நாங்கள் குழப்பிப் போயிருந்தோம். சமூக வலைத் தளங்களில் பொது அறிவிப்புகள் மட்டுமே வெளியாகின. ஆசிரியர்களின் சம்பளம் குறைவாகவே உள்ளது. அதனால் அவர்கள் புதிய வரிச் சீர்திருத்தங்களால் பாதிக்கப்படவில்லை. நாம் எதிர்கொள்ளும் வரி அதிகரிப்பு மற்றும் ஏனைய சிக்கன நடவடிக்கைகளின் மூலகாரணம் சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைகளை அரசாங்கம் செயல்படுத்துவதுதான் என்று தொழிற்சங்கங்கள் விளக்கவில்லை.

அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகள் குறித்து ஆசிரியர்கள் 15 மார்ச் 2023 அன்று ஹோமாகமவில் நடத்திய ஆர்ப்பாட்டம்

“வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்த தொழிற்சங்கங்களே தொழிலாளர்களின் மன உறுதியைக் குலைத்து வருகின்றன. தற்போது ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தையை எதிர்பார்த்து திட்டமிட்ட வேலைநிறுத்தத்தை கைவிட்டுள்ளன. தொழிற்சங்கங்களின் பங்கு தெளிவாக அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. தொழிலாளி வர்க்கம் இந்தப் போராட்டத்தைத் தன் கைகளில் எடுக்க வேண்டும் என்ற உங்கள் விளக்கத்தில் எனக்கு எந்த முரண்பாடும் இல்லை. அதுதான் நடக்க வேண்டும். ஆனால் அதற்கு, தொழிலாளர்களின் புரிதலை பெருமளவு அதிகரிக்க வேண்டும்” என அவர் கூறினார்.

பெரும்பாலான தொழிலாளர்களுக்கு கால் கிலோ ரொட்டி (பாண்) கூட வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கண்டி தேசிய வைத்தியசாலையின் தாதி ஒருவர் தெரிவித்தார். 'நான் முன்பு காரில் வேலைக்கு வந்தேன், ஆனால் இப்போது அதைச் செய்ய முடியாது. ஜே.வி.பி.யால் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்ததால், அதனுடன் எனக்கு ஓரளவு அனுதாபம் இருந்தது. ஆனால், நீங்கள் அவர்களின் திட்டத்தை விளக்கிய பிறகு, அவர்களின் கொள்கைகள் அரசாங்கத்திலிருந்தும் மற்ற முதலாளித்துவக் கட்சிகளிலிருந்தும் வேறுபட்டவை அல்ல என்பதை நான் புரிந்துகொள்கிறேன்,” என்று அவர் கூறினார்.

புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த கலைத்துறை ஆசிரியர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், “ஒரு நாள் வேலை நிறுத்தத்தின் அர்த்தம் என்ன? நமது உரிமைகளை எப்படி வென்றெடுப்பது என்பது பற்றியோ, இதற்கான அவர்களின் வேலைத்திட்டம் என்ன என்பது பற்றியோ தொழிற்சங்கத் தலைவர்கள் எதுவும் கூறவில்லை. அதனால்தான் போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்படவில்லை.

புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த இலங்கை மின்சார சபை (CEB) ஊழியர் ஒருவர், புதன் கிழமை வேலை நிறுத்தத்தில் தனது பகுதியில் உள்ள அனைத்து தொழிலாளர்களும் கலந்துகொண்டதாக தெரிவித்தார். “இப்போது இலங்கை மின்சார சபை தொழிலாளர்கள் எங்கள் கோரிக்கைகளை அடையும் வரை தொடர்ச்சியான வேலைநிறுத்தம் பற்றி கலந்துரையாடுகின்றனர். இந்த இடை இடையே நடக்கும் வேலைநிறுத்தங்கள் மற்றும் ஒட்டுமொத்த தொழிலாளர்களின் முழுப் பங்கேற்பு இல்லாத வேலைநிறுத்தங்களை தொழிலாளர்கள் எதிர்க்கின்றனர். ஒரு நாள் பொது வேலைநிறுத்தம் அரசாங்கத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று நான் நினைக்கிறேன், ”என்று அவர் விளக்கினார்.

காலவரையற்ற வேலைநிறுத்தத்திற்கு ஜே.வி.பி தயாராக இல்லை என அறிவித்துள்ள ஜே.வி.பி. தொழிற்சங்க தலைவர் லால் காந்தவை அவர் விமர்சித்தார். “எங்கள் தொழிற்சங்கம் ஜே.வி.பி.யுடன் இணைந்துள்ளது, ஆனால் ஜே.வி.பி ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வார்கள் என்பதை தொழிலாளர்கள் சிந்திக்க வேண்டும். இதுவும் சர்வதேச நாணய நிதிய சிக்கன கொள்கைகளை செயல்படுத்தும்,” என அவர் கூறினார். “அரசாங்கம் மற்றும் அதன் சர்வதேச நாணய நிதிய கொள்கைகளுக்கு எதிராக முழு தொழிலாள வர்க்கத்தையும் அணிதிரட்ட வேண்டும் என்பதில் நான் உங்களுடன் முழுமையாக உடன்படுகிறேன். ஒவ்வொரு வேலைத் தளத்திலும் நடவடிக்கைக் குழுக்களையும் நடவடிக்கைக் குழுக்களின் சர்வதேச கூட்டணியையும் உருவாக்குவது அவசியம்.'

இலங்கை மின்சார சபை ஊழியர் தனது மாதச் சம்பளம் கிட்டத்தட்ட 80,000 ரூபாய் ($US233) என்றாலும், கடன் தவணைகள் வெட்டப்பட்ட பின்னர், 45,000 ரூபாய் மட்டுமே மீதம் இருப்பதாக கூறினார். 'எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர், அதனால் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவை நிர்வகிப்பது கடினம். இலங்கை மின்சார சபை தனியார் மயமாக்கப்பட்டால் இன்னும் அதிகமான தாக்குதல்களை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்” என்று அவர் கூறினார்.

தொழிற்சங்கங்கள் துறைமுக வேலைநிறுத்தத்தை எப்படி காட்டிக்கொடுத்தன என்பதை கொழும்பு துறைமுக ஊழியர் ஒருவர் சுட்டிக்காட்டினார். 'மார்ச் 15 அன்று 24 மணிநேரம் வேலைநிறுத்தம் செய்யப் போவதாக அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்கள், ஆனால் காலையில் தொழிலாளர்கள் வேலைக்கு வந்து உள்ளேயே இருக்குமாறு கூறப்பட்டனர்,' என்று அவர் கூறினார். “ஊதியத்தை ஒத்த வரி துறைமுக தொழிலாளர்களை கடுமையாக பாதிக்கிறது. வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் பணவீக்கத்தால் நாங்கள் ஏற்கனவே மிகவும் கடினமான சூழ்நிலையில் இருக்கிறோம்.'

தொழிற்சங்கத் தலைவர்கள், துறைமுகத் தலைவருடன் கலந்துரையாடியதன் பின்னர், தொழிலாளர்களின் எதிர்ப்பையும் மீறி நான்கு கப்பல்களில் பணிபுரிந்து அவை புறப்படுவதற்கு அனுமதியளித்ததாக அவர் கூறினார்.

'துறைமுகத் தொழிலாளர்கள் மத்தியில் ஜே.வி.பி.க்கு கொஞ்சம் செல்வாக்கு உள்ளது, ஆனால் ஜே.வி.பி. ஒரு முதலாளித்துவக் கட்சி என்றும் இலங்கையின் அனைத்து முதலாளித்துவக் கட்சிகளும் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கையை ஆதரிக்கின்றன என்றும் நான் அவர்களுக்கு விளக்கினேன்,' என்று அவர் தொடர்ந்தார்.

அரசாங்கத்தின் ஊதியத்தை ஒத்த வருமான வரிக்கு எதிராக 2023 மார்ச் 1 அன்று இலங்கை துறைமுக ஊழியர்கள் கொழும்பு துறைமுக நுழைவாயிலுக்கு வெளியே நடத்திய ஆர்ப்பாட்டம். [AP Photo/Eranga Jayawardena]

“தொழிலாளர்கள் இந்தப் போராட்டத்தை தங்கள் கைகளில் எடுக்க வேண்டும். ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான தொழிலாளர்களதும் கிராமப்புற மக்களதும் மாநாட்டிற்கான சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரம் மிகவும் முக்கியமானது. தொழிலாளர்கள் ஒரு சர்வதேச சோசலிச அமைப்பிலும், முதலாளித்துவ அமைப்பை ஒழிப்பதற்கான வேலைத்திட்டத்திலும் ஒழுங்கமைக்கப்பட வேண்டும்” என்று அவர் கூறினார்.

தீவின் தெற்கில் உள்ள ஹிகடுவாவைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: “அரசாங்கத்தால் வழங்கப்படாத தேவையான உபகரணங்கள் இல்லாமல் ஆசிரியர்கள் பணிபுரிய வேண்டியுள்ளது. பிள்ளைகளிடம் பொருட்களை வாங்குவதற்கு தேவையான பணம் இல்லை, குடும்பத்துக்கு இருந்தாலும், இந்த பொருட்களின் விலை இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.

'பல ஆசிரியர்களுக்கு கடன் செலுத்துவதற்கு கடன் தவணைகள் உள்ளன, அது அவர்களின் சம்பளத்தில் இருந்து வெட்டப்படுகிறது. எனக்கு கடன் இல்லை, ஆனால் எனது சம்பளம் வீட்டுச் செலவுக்கு இன்னும் போதுமானதாக இல்லை. தற்போதைய நிலைமைக்கு அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்,” என்று அவர் கூறினார்.

“ஜே.வி.பி.யால் இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்று நான் நினைக்கவில்லை. நான் புதன்கிழமை வேலைநிறுத்தத்தில் பங்கேற்றேன், ஆனால் அது எந்த தீர்வும் இல்லாமல் முடிந்தது. என்ன நடக்கிறது என்பது பற்றி ஊடகங்களில் இருந்து மட்டுமே எங்களுக்குத் தெரிந்தது, தொழிற்சங்கத்திற்கும் எங்களுக்கும் இடையே நேரடி கலந்துரையாடல் இல்லை. எங்கள் கடைசி [ஆசிரியர்கள்] வேலைநிறுத்தம் மூன்று மாதங்களுக்கும் மேலாக இழுத்துச் செல்லப்பட்டது, ஆனால் எங்களுக்கு என்ன கிடைத்தது?” என்று அவர் கூறினார்.

அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் இலட்சக்கணக்கான இலங்கைத் தொழிலாளர்கள் இணைந்து கொண்டனர்

ஒவ்வொரு வேலைத் தளத்திலும் நடவடிக்கைக் குழுக்களை உருவாக்கு! இலங்கை அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக ஐக்கியப்பட்ட போராட்டத்தை கட்டியெழுப்ப போராடு!

இலங்கையின் ஜே.வி.பி. 'நாட்டைக் காப்பாற்ற' அதிகாரத்தை பெற முயற்சிக்கின்றது

Loading