உண்மையான சுதந்திரமா அல்லது போலிச் சுதந்திரமா?

நான்காம் அகிலத்தின் இந்திய உபகண்ட கிளையான, இந்திய போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சி (BLPI) தலைவரான கொல்வின் ஆர்.டி. சில்வா எழுதிய “உண்மையான சுதந்திரமா அல்லது போலிச் சுதந்திரமா” என்ற தலைப்பிலான, 1948 பெப்ரவரி 4ம் திகதி வெளியான அறிக்கையை நாம் இங்கு பிரசுரிக்கிறேம்.

கொல்வின் ஆர்.டி. சில்வா

இரண்டாம் உலகப்போரின் பின், விசேடமாக 1947-48 காலகட்டத்தில் தெற்காசியாவில் ஏகாதிபத்தியவாதிகளால் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் பண்பு பற்றி, முன் கூட்டிய கணிப்பின் படி எழுதப்பட்ட இந்த அறிக்கையானது, ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவத்தின் அடிப்படையில் அமைந்ததாகும். அத்துடன் இது கடந்த 71 ஆண்டு காலமாக பரீட்சிக்கப்பட்டு மென்மேலும் பிரகாசிக்கின்ற ஒன்றாக விளங்குகின்றது.

இலங்கையை மட்டுமன்றி சர்வதேச முதலாளித்துவத்தையும் தனது முகவர்களாக மாற்றியமைத்த பிரித்தானிய காலனித்துவ ஆட்சியில் இருந்து உத்தியோகபூர்வமாக சுதந்திரம் பெற்றதாக அங்கீகரிக்கப்பட்ட இந்தியா, பாகிஸ்தான், பர்மா (பின்னர் ஏற்படுத்தப்பட்ட பங்களாதேஷ்) போன்ற தெற்காசிய பிராந்திய நாடுகள் அனைத்திலும் உக்கிரமடையும் வறுமை, இனவாத யுத்தம், மதரிதியிலான ஒடுக்குதல், அடிப்படை ஜனநாயக உரிமைக்கு மாறாக பொலிஸ் இராணுவ அடக்குமுறை மற்றும் கல்வியும் சுகாதாரமும் வியாபாரமாகி சீரழிந்து போனமை என்பவையே உழைக்கும் மக்களுக்கு உரித்தாயுள்ளன.

“அணிசேரா இயக்கம்” என்ற நாமத்தில் ஏகாதிபத்தியத்திடமிருந்து சுதந்திரமடைந்ததாக சித்தரிக்க எடுத்த முயற்சி கழன்றுபோய், தற்போது இலங்கை உள்ளடங்கலாக முழு தெற்காசிய நாடுகளின் முதலாளித்துவங்களும் அமெரிக்க தலைமையிலான ஏகாதிபத்தியவாதிகளது முகவர்களாக ஆகியுள்ளதை காணலாம்.

1942 ஆகஸ்ட் மாதம் ஆரம்பிக்கப்பட்ட BLPI, 1950 ஜூன் மாதம் லங்கா சம சமாஜ கட்சிக்குள் கரைக்கப்பட்டது. ட்ரொட்ஸ்கிசத்தின் அடிப்படை வேலைத்திட்டத்தை கைவிட்டிருந்தாலும், அக் கட்சியானது ட்ரொட்ஸ்கிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் போராடிய காலகட்டத்தில் வெளியிட்டிருந்த இந்த அறிக்கையின் முக்கியத்துவம் அப்படியே இருப்பதை இங்கு காணலாம்.

இந்த அறிக்கையை மிக கவனமாக படிக்குமாறு தொழிலாளர்கள், மாணவர்கள் உட்பட இளைஞர்கள் மற்றும் புத்திஜீவிகள் உள்ளடங்கலாக சகல போராளிகளிடமும் நாம் வேண்டுகோள் விடுக்கின்றேம்.

***

BLPI பெப்ரவரி 4 வெளியிட்ட அறிக்கை.

பிரித்தானிய கொடியின் கிழான போலிச் சுதந்திரம் அன்றி பிரித்தானிய ஏகாதிபத்தியத்திலிருந்து வெளியேறி உன்மையான சுதந்திரத்துக்காக.

பெப்ரவரி 4ம் திகதி திருமண பேரிகை சப்தத்துடன் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன் பின் தொடரும் விளையாட்டுக்கள் வானவேடிக்கையுடன் முடிவுறும். இவ் இடைவேளையில் ஆட்சியாளர் ஆளுநராக மாற்றப்படுவார். அரச பிரதிநிதி ஒருவர் வந்து போவார். எமது இலட்சக் கணக்கான பணம் விரயம் செய்யப்பட்டு, இலங்கைக்கு “பிரித்தானிய பொது நலவாய நாடுகளுள் பூரண பொறுப்பு வாய்ந்த நிலமை“ கிடைக்கப்பெறும். இச் சகலவற்றுக்கும் மத்தியில், இந்த நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஏதாவது உள்ளதா?

மேற்குறித்த கேள்விக்கு BLPI இன் பதில் என்னவெனில், மிகத்தெளிவாகவும் திட்டவட்டமாகவும் “இல்லை” என்பதே ஆகும். சேனநாயக்கா – மன்க் – மெசன்மூவரால் எம்மிடையே கொண்டுவரப்பட்டுள்ள “புதிய நிலமை“ குறித்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்ய ஒன்றுமே கிடையாது. அவர்களால் பேரிகைகொட்டி அறிவிக்கப்பட்டுள்ள “சுதந்திரம்” குறித்து மக்கள் “மகிழ்ச்சியடைய” ஒன்றுமே கிடையாது. ஏனெனில் அவர்கள் கொடுக்கும் “புதிய நிலமை“ எனப்படுவது “சுதந்திரம்” மட்டுமல்ல, பிரித்தானிய ஏகாதிபத்தியத்துடன் இலங்கை கட்டுண்டுள்ள அடிமைத்தனத்தின் வடிவத்தில் சற்று வித்தியாசம் மட்டுமே ஏற்பட்டுள்ளது. அதாவது, பிரித்தானிய ஏகாதிபத்தியமானது தனது ஆட்சியை இலங்கைக்குள் கொண்டு நடத்தும் வடிவத்தில் மாற்றமொன்றை ஏற்படுத்தி, தனது ஆட்சியை இடைநிறுத்தாது முன்னோக்கிச் செல்லும் என்பதே ஆகும்.

இந்த ஆட்சி இடைநிறுத்தப்படாது எவ்வாறு முன்னோக்கி நகரவுள்ளது? உண்மையில், இன்றியமையாத வகையில் பிரித்தானிய ஏகாதிபத்தியம் பொருளாதார ரீதியில் இலங்கையின் குரல் வளையை நெரிப்பதை தொடர்ந்தும் முன்னெடுக்கும். எமது வங்கி அமைப்பு, எமது தோட்ட நிர்வாக அமைப்பு மற்றும் வெளி நாடுகளுடன் தாம் தொடர்புபடும் முறையும் அவர்ளால் நடத்தப்பட்டு அவர்கள் எமது பொருளாதாரத்தை நிர்வகிப்பவர்களாக உள்ளனர். மேலும் ஒரு நாட்டின் பொருளாதார முறையை நிர்வகிப்பவர்கள் எவரோ, அதனால், இறுதி ஆய்வுகளில், அவர்களே அந்நாட்டு அரசையும் நிர்வாகம் செய்பவராக உள்ளார். வேறு வார்த்தைகளில் கூறினால், எமக்கு எமது நாட்டுக் கொடியை உயர்த்த, தேசிய கீதம் பாட மற்றும் (பர்மாவைப் போல) பிரித்தானிய ஏகாதிபத்தியத்திடம் இருந்து சுதந்திரம் பெற்ற நாடென்று கூறிக் கொள்ளும் வாய்ப்பு கிட்டினாலும், பிரித்தானிய ஏகாதிபத்தியத்தியம் எமது பொருளாதாரத்தின் குரல்வளையை நெரிக்கும் நிலைமையில் மாற்றம் ஏற்பட்டிருக்காவிட்டால், நாம் பிரித்தானிய அடிமைகளாகவே இனிமேலும் சீவிப்போம். இந்த கொடிய குரல்வளை பிடியிலிருந்தும் விடுபடுவது மட்டுமே உண்மையான சுதந்திரத்தின் சாரம் ஆகும்.

அத்துடன், எவ்வாறாயினும், இப் புதிய நிலமையானது எமது அடிமைத்தனத்தை அப்படியே முன்கொண்டு செல்வது மட்டுமல்ல, அதன் வடிவத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதும் ஆகும் என்பதை நாம் கவனத்தில் கொள்வது அத்தியாவசியமானதாகும். முட்டாள்கள் மட்டுமே இலங்கை “நிலமையில் வேறுபாடில்லை“ என்று கூறுவர். வேறுபாடு உள்ளது. எனினும், இவ்வேறுபாடு இருப்பது, இலங்கையானது காலனித்துவ நாடென்ற நிலமையிலிருந்து சுதந்திர நாடென்ற நிலைக்கு மாற்றப்பட்டுள்ளது என்பதில் அல்ல, மாறாக, பிரித்தானிய ஏகாதிபத்தியம் இலங்கையை நேரடியாக ஆட்சி செய்யும் முறையிலிருந்து, சுற்றி வளைத்து ஆட்சி செய்யும் முறைக்கு மாற்றப்பட்டுள்ளதிலேயே இருக்கின்றது.

இந்த மாற்றத்தின் உள்ளடக்கம் எங்கிருக்கின்றது? இலங்கையினுள் பிரித்தானிய ஏகாதிபத்திய நலன்களை பேணும் நடவடிக்கையை, உள்நாட்டு சுரண்டல் நடத்தும் வர்க்கத்திடம் முற்றாக ஒப்படைத்ததிலேயே அந்த மாற்றம் தங்கியிருக்கின்றது. பிரித்தானிய ஏகாதிபத்தியம் எந்த விதத்திலேனும் ஒழிக்கப்பட்டிருக்காததோடு அது பின்னணியில் இருக்கின்றது.

ஒருவர் இங்ஙனம் கேள்வி எழுப்பலாம். உள்நாட்டு சுரண்டல்காரர்கள் தமது எஜமானர்களை “தட்டிக் கேட்பதில்” இருந்து அவர்களைத் தடுப்பது எது? அதில் தாக்கத்தை ஏற்படுத்தும் விடயங்கள் சில உள்ளன. பிரித்தானிய அரசாங்கத்தால் இலங்கை அரசாங்கத்தின் மீது பலவந்தமாக திணிக்கப்பட்டுள்ள “ஒப்பந்தங்கள்” அதில் முதலாவதாகும். அவற்றில், இலங்கையின் கழுத்தை நெரிக்குமளவிற்கு இராணுவ மற்றும் வெளிவிவகார நடவடிக்கை சம்பந்தமான அதிகாரத்தை பிரித்தானியா தன் கையில் வைத்துக்கொள்வதை நிரந்தரமாக உறுதிப்படுத்திக்கொண்டுள்ளது. மேலும் இலங்கையில் வாழும் பிரித்தானிய மற்றும் இலங்கை முதலாளித்துவ தட்டினருக்கு சொந்தமான பொருளாதார, அரசியல் மற்றும் நிதி சம்பந்தமான உரிமை அவற்றுடன் கட்டுண்டுள்ளன.

எனினும், இவை யாவற்றுக்கும் மேலான முக்கியமான விடயம் எதுவெனில், இலங்கை முதலாளிகளின் சாதாரண தேவைகளையும், விசேடமாக இலங்கை பிரஜைகளுக்கு எதிராக பேணப்பட்டு வரும் அவர்களுடைய உரிமைகளையும் தாங்கியிருக்கின்ற அடிப்படை அத்திவாரம், பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகளுடன் அரசியல், பொருளாதார மற்றும் இராணுவ ரீதியிலான அவர்களுடைய பிணைப்பே ஆகும்.

எமது முதலாளிமார்கள் ஒருபோதும் இலங்கையின் சுதந்திரத்தை கோரவில்லை. அவர்கள் கேட்டது எதை? பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் பாகமாகவும், அதன்  மரபுரிமையாகவும், இலங்கையை பேணிக் காக்கும் முழுப் பொறுப்பை மட்டுமே அவர்கள் கோரினர். தற்சமயம் அவர்களுக்கு அது கிடைத்துள்ளது.

இலங்கை மக்களுக்கும் அவர்களது போராட்டத்துக்கும் இந்த ஆட்சி முறை மாற்றம் மூலம் கிடைத்துள்ள பிரதிபலன் என்ன? அத்துடன், இவ்விடத்தில் கேட்க வேண்டியுள்ள முதலாவது கேள்வி, ஏகாதிபத்திய-எதிர்ப்பு போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டதா? என்பதே ஆகும். இந்த கேள்வியை கேட்பதிலேயே அதற்கான விடையும் உள்ளது. பொருளாதார முறை, பாதுகாப்பு நடவடிக்கைகள், வெளிநாட்டு உறவுகள் ஆகிய இவை அனைத்துமே, பிரித்தானிய ஏகாதிபத்தியம் என்ற பொறிக்குள் சிக்குண்டுள்ளன. அந்த நிலைமையிலிருந்து அவற்றை விடுவித்துக்கொள்ளும் போராட்டம் இப்போதும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது – அதை முன்னெடுத்தே ஆக வேண்டும். தமது எஜமானாகிய “சேர் ஹென்றி மக்ஸ் மெசன்மூவர்”  என்பவருடன் இலங்கையின் பெயரில் டி.எஸ். சேனநாயக்க கூட்டு கையெழுத்திட்ட அடிமை ஒப்பந்தத்திற்கு எதிராக விசேடமாக நாம் போராடவேண்டும். ஆகையினால் இந்திய போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சி (BLPI) மக்களுக்கு பின்வருமாறு வேண்டுகோள் விடுக்கிறது.

  • பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தைத் தொடருங்கள்!
  • பிரித்தானிய ஏகாதிபத்தியத்துடன் ஏற்படுத்திக்கொண்டுள்ள அடிமை உடன்படிக்கையை ஒழித்திடுங்கள்!

ஏகாதிபத்தியத்துக்கும் அடிமைத்தனத்துக்கும் எதிரான போராட்டம் முன்னெடுக்கப்பட வேண்டிய அதேவேளை, இலங்கை மக்கள் முகங்கொடுத்து போராட வேண்டியுள்ள எதிரி யார்? முதலாவதாக அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருப்பது வெளிநாட்டு ஏகாதிபத்தியத்தின் துப்பாக்கி முனையை அல்ல, உள்நாட்டு முதலாளிகளது பொலிஸ் மற்றும் ஏனைய இராணுவப் படைகளையே ஆகும். பிரித்தானிய ஏகாதிபத்தியத்தை எமது பரம எதிரியாக கருதினாலும், இலங்கைக்குள் ஏகாதிபத்திய ஆட்சி வடிவத்தில் ஏற்ப்பட்டுள்ள புதிய நிலமையை கருத்தில் கொண்டால், நாம் நேரடியாக எதிர் கொண்டுள்ள எதிரிகளாக உள்நாட்டு ஆட்சியாளர்களே மேலோங்கி நிற்கின்றனர்.

ஏகாதிபத்தியம் இறுதி நடவடிக்கையாக மட்டும் பயன்படுத்துவதற்காக, நேரடியாக ஆட்சி நிர்வாகத்தில் தலையிடும் உரிமையை தன் கையில் கொண்டுள்ளது. எழுச்சிபெற்று வரும் ஒடுக்கப்பட்ட மக்களை அடக்கி ஒடுக்குவதற்கான பிரதான பொறுப்பை இலங்கை முதலாளிகளிடம் ஒப்படைத்துள்ளது. மேற்குறிப்பிட்ட விதத்திலேயே வெளிநாட்டு ஏகாதிபத்தியவாதிகளுக்கும் உள்நாட்டு முதலாளிளுக்கும் இடையிலான புதிய உடன்படிக்கையில் வேலைகள் பகிரப்பட்டுள்ளன. இலங்கையில் நிலவும் ஏகாதிபத்திய அதிகாரத்தை புரட்டிபோடுவதை நோக்கிய பயணத்தில், எமது முதலாளிகளுக்கு எதிராக செய்யும் போராட்டம் பிரதான போராட்டமாக விளங்குகின்றது. ஏகாதிபத்தியம் ஒழிக என்பதன் அர்த்தம் ஏகாதிபத்திய-முதலாளித்துவ கூட்டு ஒழிக என்பதே ஆகும். இந்தக் கூட்டின் பிரதான ஆயுதமாக இருப்பது எதுவெனில், சோல்பரி அரசியல் யாப்பு காரணமாக (தற்போது ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்கள் உள்ளடங்கலாக மற்றும் பொதுச் சேவை ஆணைக்குழுவையும் சேர்த்து), சோல்பரி அரசில் யாப்பு மற்றும் அதனோடு இணைந்த அம்சங்களுக்கும் எதிரான எமது போராட்டத்தை இடைவிடாது முன்னெடுக்க வேண்டும். ஆகையால் போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சி இவ்வாறு உரத்துக் கூறுகின்றது.

  • ஏகாதிபத்திய-முதலாளித்துவ கூட்டுக்கு எதிராகப் போராடு!
  • சோல்பரி அரசியல் யாப்பு மற்றும் அதனோடு இணைந்த சகல பிரிவுகளும் ஒழிக!

பொதுமக்கள் குறித்த ஒரு சரியான அமைப்பிற்குள் ஒருங்கிணைந்தால் மட்டுமே ஏகாதிபத்தியத்திற்கும் ஏகாதிபத்திய-முதலாளித்துவ கூட்டுக்கும் எதிரான போராட்டம் சாத்தியமாகும். பொருளாதார முன்னரங்கில் தொழிலாளர்களது வெகுஜன இயக்கம் முன்னோக்கி நகருவதோடு சேர்த்து பலமாக வளர்ந்த தொழிற்சங்க இயக்கம் இன்று பலவீனமான பாதையில் உள்ளது. இந்த தொழிலாளர் அமைப்புகளை மீண்டும் சீர்திருத்தி கட்டியெழுப்ப வேண்டும். பரந்துபட்ட இயக்கத்துக்குள் ஒன்றிணைந்து, தைரியமான வேலைத் திட்டத்தை நோக்கி கிராமப்புற மக்கள் திரும்பும் நிலையில், யூலை வேலை நிறுத்த தோல்வியின் பின்னர், தொழிலாள வர்க்க வெகுஜன இயக்கம் பின்னடைந்துள்ளதால், கிராமப்புற மக்களுடைய அந்த முன்நோக்கிய பயணம், சற்று நிறுத்தப்பட்டுள்ளது. அந்த பயணத்திற்கு மீண்டும் புத்துயிரூட்ட வேண்டும். அதனூடாக மட்டுமே பொதுமக்கள் பாதுகாப்பு சட்டம் மற்றும் அரச சேவையாளர்களுக்கு தொழிற்சங்க உரிமை இல்லை என்ற சட்ட விதிகளை ஏற்படுத்திய, ஏகாதிபத்திய-முதலாளித்துவ கூட்டின் ஊடாக உழைக்கும் மக்களுக்கு எதிராக தொடுக்கப்படும் தாக்குதல்களை தடுக்க முடியும். ஆகையினால் போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சி பின்வருமாறு அறைகூவல் விடுக்கின்றது.

  • ஏகாதிபத்திய-முதலாளித்துவ கூட்டினை எதிர்கொள்வதற்காக உழைக்கும் மக்கள் அமைப்பினை மீண்டும் கட்டியெழுப்பு!

  • பொதுமக்கள் பாதுகாப்பு சட்டம் மற்றும் ஏனைய அடக்கு முறை சட்டம் ஒழிக!

  • பேச்சும், எழுத்தும், கூட்டம் கூடும் மற்றும் ஒருங்கிணைவதற்குமான பூரண சுதந்திரத்துக்காகப் போராடு!

உழைக்கும் மக்களது வெகுஜன இயக்கத்தை மீண்டும் கட்டியெழுப்புவதும் அதனை முன்னெடுப்பதற்கு இருக்கும் தடைகளை தகர்ப்பதற்கான போராட்டங்களை நடத்துவதும், எதிர்காலத்தில் உழைக்கும் மக்களால் நடத்தப்படவுள்ள கடும் போராட்டங்களுக்கான தயாரிப்புக்களாகும். அப்போராட்டமானது உக்கிரமடையும் வேலையின்மை, தீவிரமடையும் வறுமை போன்றவற்றுக்கு எதிரான போராட்டமாகும். பெரும் வர்த்தக சீரழிவுக்கான சமிக்ஞை காணப்படுகின்றது. வேலை நீக்கம் செய்வது அதிகரிக்கின்றது. யுத்தகாலத்தின் போதான மோசடித்தனமான செழுமை அகற்றப்பட்டு, வறுமை அதிகரிக்கின்றது. வேலை அல்லது வாழ்க்கையை நடத்துவதற்கான தேவைகளைப் பெறுவதற்கான போராட்டத்தை இக்காலத்தில் முன்னெடுப்பதற்கான வழிமுறையாக போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சி பின்வருமாறு கோருகிறது.

  • வேலை நீக்கம் செய்வதை நிறுத்து!

  • சம்பள குறைப்பின்றி வேலை நேரத்தை குறை!

  • இருக்கின்ற வேலையை சகல தொழிலாளர்களுக்கும் பகிர்ந்தளி!

  • யுத்தத்திற்கு முன்பிருந்த அளவிற்கு விலை வாசியை குறைத்திடு!

  • ஏழைகளை வரிச் சுமையில் இருந்து விடுவிப்பதற்கு செல்வந்தர்களிடம் அறவிடும் வரியை அதிகரித்திடு!

  • விலை வாசி உயர்வுக்கேற்ப சம்பள அதிகரிப்பை வழங்கு!

முழு உழைக்கும் மக்களது போராட்டத்தையும் அமைப்புரீதியாக முன்னெடுத்துச் செல்ல ஒரே ஒரு வர்க்கத்தால் மட்டுமே முடியும். அது தொழிலாள வர்க்கமே ஆகும். எனினும், இன்று தொழிலாள வர்க்கம் கூட கருத்து வேறுபாடுற்று, சஞ்சலப்பட்டு, பேதப்பட்டு காணப்படுகின்றது. தொழிலாள வர்க்கத்தை செயற்பாட்டில் அணிதிரட்டுவதை உடனடியாக சீக்கிரமாக செய்ய வேண்டும். வர்க்கத்தை பாதுகாக்க அதனால் மட்டுமே முடியும். முழு உழைக்கும் மக்களையும் போராட்டத்தில் ஈடுபடுத்துவது என்பது இதனூடாக மட்டுமே சாத்தியமாகும்.

உழைக்கும் மக்களை செயற்பாட்டு ரீதியில் அணிதிரட்டும் முகமாக தொழிலாள வர்க்க கூட்டினை கட்டியெழுப்புவேம். உழைக்கும் மக்களது போராட்டத்திற்கான தலைமையை தொழிலாள வர்க்க தலைமைத்துவமே வழங்க வேண்டும்.

தொழிலாள வர்க்க கூட்டினை ஏற்படுத்துவதற்கான வழி, தொழிலாள வர்க்க அரசியல் கட்சிகள் மத்தியிலான செயற்பாடுகளில் ஒருங்கிணைப்பதாகும். வேலைத்திட்டம் மற்றும் செயற்பாடு தொடர்பாக அக்கட்சிகளிடையே தேவையான போராட்டம் காணப்படலாம். எனினும் அக்கட்சிகளிடையே காணப்படும் வேறுபாடுகள், தொழிலாள வர்க்கத்துக்கு, செயற்பாடுகளின் போது விரோதமானதாக இருந்துவிடக் கூடாது. இக்கால கட்டத்தில் போல்ஷிவிக்–சமசமாஜ-கம்யூனிச ஐக்கிய முன்னணி ஒன்று ஏற்படுத்தப்படாவிடின், தலைதூக்கி வரும் ஏகாதிபத்திய-முதலாளித்துவ தாக்குதல்களுக்கு எதிராக ஏற்படுத்திக்கொள்ளப்பட வேண்டிய உழைக்கும் மக்களது இயக்கம் பலவீனம் அடையும். ஆகையினால் போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சி பின்வருமாறு அறைகூவல் விடுக்கின்றது.

  • போல்ஷிவிக்–சமசமாஜ–கம்யூனிஸ்ட் ஐக்கிய முன்னணி ஒன்று தேவை!

  • முதலாளித்துவ ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் ஒழிக!

  • தொழிலாளர்–விவசாயிகள் அரசாங்கத்துக்காக வீதிக்கு இறங்குவோம்!

  • புரட்சிக்கு வெற்றி கிடைக்கட்டும்!

Loading