கடந்த பல ஆண்டுகளுக்கு பின்னர் ஜெனின் மீது நடத்திய கொடூரமான தேடுதல் தாக்குதலில் இஸ்ரேலிய இராணுவம் 10 பாலஸ்தீனியர்களைக் கொன்றதோடு, 20 பேரை காயப்படுத்தியுள்ளது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இஸ்ரேலிய இராணுவம், பொலிஸ் மற்றும் பாதுகாப்பு நிறுவனமான ஷின் பெட் ஆகியவை, வியாழனன்று, மேற்குக் கரை நகரமான ஜெனினில் உள்ள அகதிகள் முகாமில் உள்ள பாலஸ்தீனியர்கள் மீது ஒரு படுகொலைத் தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் ஒரு வயதான பெண் உட்பட 9 பேர் கொல்லப்பட்டனர். குறைந்தது 20 பேர் காயமடைந்தனர், அவர்களில் 4 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். வியாழக்கிழமை மாலை தொடர்ந்த மோதலில் மேலும் ஒருவர் உயிரிழந்தார். இது பல ஆண்டுகளின் பின்னர் நடந்த கொடூரமான தாக்குதலாகும்.  

இஸ்ரேலிய இராணுவம் பாலஸ்தீனிய அவசர வைத்திய சேவைகளை சம்பவ இடத்திற்கு வரவிடாமல் தடுத்ததோடு, மேலும் திகிலை அதிகப்படுத்தியது. பாலஸ்தீனிய சுகாதார அமைச்சர் மே அல்-கைலே, இஸ்ரேலியப் படைகள் “ஜெனின் அரசு மருத்துவமனையைத் தாக்கியதுடன், மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் பிரிவு மீது வேண்டுமென்றே கண்ணீர் புகை குண்டுகளை வீசியது”. இதனால் குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது என்று கூறினார். மருத்துவமனை காணொளிகள், பெண்கள் மருத்துவமனை அறைகளில் இருந்து நடைபாதைகளுக்கு குழந்தைகளை தூக்கிச் செல்வதைக் காட்டியது.  

ஜனவரி 26, 2023 அன்று, மேற்குக் கரை நகரமான ஜெனினில் நடந்த கூட்டு இறுதிச் சடங்கின் போது, துக்கம் அனுசரிப்பவர்கள் இறந்த எட்டு பாலஸ்தீனியர்களின் சடலங்களுக்கு இஸ்லாமிய இராணுவக்குழுவான  ஜிஹாத் இன் கொடிகளால்  போர்த்தப்பட்டு எடுத்துச்சென்றனர். இஸ்ரேலியப் படைகள் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் முக்கிய இலக்குப் பகுதியில் நடத்திய திடீர் தாக்குதலில் 60 வயது பெண் உட்பட குறைந்தது 9 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர், மற்றும் பலர் காயமடைந்தனர் என்றும் இது பல ஆண்டுகளுக்கு பின்னர் நடந்த பலஸ்தீன சுகாதார அதிகாரிகள் கூறுகையில், பல ஆண்டுகளாக நடந்த சண்டையின் மிக மோசமான நாட்களில் ஒன்று என பாலஸ்தீனிய சுகாதார அதிகாரிகள் கூறினர். [AP Photo/Majdi Mohammed]

அத்துடன் பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகத்தைச் சேர்ந்த 60 வயது மக்தா ஒபைட், இறந்தவர்களில் 24 வயது சயப் எஸ்ஸாம் மஹ்மூத் அஸ்ரிகி, 26 வயது இசிதின் யாசின் சலாஹத், அப்துல்லா மர்வான் அல்-கோல் மற்றும் மொட்டாசெம் அபு அல்-ஹசன் ஆகியோர் அடங்குவர் என்று கூறினார். அவர்களின் இறுதிச் சடங்குகள் போது வேலைநிறுத்தத்திற்கு மத்தியில் அதே நாளில் நடந்தன. 

அல்-கைலேயின் கூற்றுப்படி, ஒரு சதுர கிலோமீட்டருக்கும் குறைவான இடத்தில் 10,000 பேரை அடைத்து வைத்திருக்கும் அகதிகள் முகாமின் நிலைமை ‘கொடூரமானது’. கோவிட்-19 தொற்றுநோய் முகாமில் வசிப்பவர்களின் வாழ்வாதாரங்களை பேரழிவிற்குட்படுத்தியதைத் தொடர்ந்து, இஸ்ரேலிய குடியேற்றக்காரர்களின் வன்முறை நடவடிக்கைகள் மற்றும் துன்புறுத்தல்கள், கடந்த மார்ச் மாதம் முதல் இஸ்ரேலியப் பாதுகாப்புப் படைகள் நடத்திய தொடர்ச்சியான திடீர் சோதனைகள் மற்றும் பாரிய கைதுகள், ஏதேனும் பாதுகாப்பை வழங்குவதில் பாலஸ்தீனிய அதிகாரம் (PA) கண்ட தோல்வி ஆகியவற்றால் நகரம் ஒரு சமூக கொதிகலனாக உள்ளது. ஜெனினின் துணை ஆளுநர் கமால் அபு அல்-ருப்சாய்ட், AFP இடம், குடியிருப்பாளர்கள் ஒரு ‘உண்மையான போர்ச் சூழலில்’ வாழ்கிறார்கள் என்றும், இஸ்ரேலிய இராணுவம் அனைத்தையும் அழிப்பதுடன், நகரும் எவரையும் சுட்டுக் கொல்கிறது’ என்றும் கூறினார்.

1967 அரபு இஸ்ரேலியப் போருக்குப் பின்னர், காசா மற்றும் சிரியாவின் கோலான் குன்றுகள் இணைந்த கிழக்கு ஜெருசலேம் உட்பட இஸ்ரேல் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள மேற்குக் கரையில் நடத்தப்பட்ட இரவு நேர திடீர் சோதனைகளையும் கைதுகளையும் தொடர்ந்து இந்த படுகொலை நடந்துள்ளது. 2022 ஆம் ஆண்டில், பெரும்பாலும் மேற்குக் கரையில் இஸ்ரேலிய இராணுவம் நடத்திய திடீர் தாக்குதல்கள் 2,500 க்கும் மேற்பட்ட கைதுகளுக்கு வழிவகுத்ததுடன் மற்றும் அதில் 271 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.  

இந்த சமீபத்திய படுகொலை இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து ஒரு நாளைக்கு ஒன்றுக்கு மேல் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை 30 ஆக்கியுள்ளது. வடக்கு மேற்குக் கரையில் உள்ள கெடுமிம் குடியேற்றத்திற்கு அருகே இஸ்ரேலிய சிப்பாய் ஒருவரைக் குத்த முயன்றதாகக் கூறப்படும் ஜெனின் அகதிகள் முகாமைச் சேர்ந்த 20 வயது பாலஸ்தீனியர் சுட்டுக் கொல்லப்பட்ட ஒரு நாளுக்குப் பின்னர் இது நடந்துள்ளது.    

பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் புதிய அதி தீவிர வலதுசாரி அரசாங்கம் பதவியேற்றதிலிருந்து கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என்பதை ஒரு மூத்த இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) அதிகாரி குறிப்பிட்டார். புதிய அரசாங்கம் பாசிச மற்றும் வெளிப்படையான இனவெறி சக்திகளை உள்ளடக்கியுள்ளது. இது மேற்குக் கரையின் 60 சதவிகித பகுதியை உள்ளடக்கிய மற்றும் பெரும்பாலான இஸ்ரேலிய குடியேற்றங்களைக் கொண்ட Area C எனப்படும் பகுதியில் வசிக்கும் 100,000 பாலஸ்தீனியர்களை வெளியேற்றத் தீர்மானித்துள்ளது.

காசாவில் உள்ள பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிஹாத் (PIJ) இன் பதில்  தாக்குதலை  எதிர்பார்த்து, இஸ்ரேலிய பாதுகாப்புப்படை  செய்தித் தொடர்பாளர், “எந்தச் சூழ்நிலைக்கும் இது தயாராக உள்ளது. மேலும் இது தெற்கு அரங்கையும் பாதிக்கும் என்பதில் சந்தேகமில்லை” என்று காசாவுக்கு ஒரு குறிப்பாகக் கூறினார். 

ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸின் பாலஸ்தீனிய அதிகார சபை (PA) படுகொலையை கண்டித்து ஒரு அறிக்கை வெளியிட்டது. இது ‘சர்வதேச மவுனத்தின் பின்னணியில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அரசாங்கத்தால் நடத்தப்படும் ஒரு படுகொலை’ என்றும், பாலஸ்தீனிய அதிகார சபை இஸ்ரேலுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பை நிறுத்திக் கொள்கிறது என்றும் அறிவித்தது. பாலஸ்தீனிய அதிகார சபையின் வெளியுறவு அமைச்சகம், ‘இஸ்ரேலிய கொலை எந்திரத்திற்கு’ எதிராக ‘உடனடியாக தலையிடுமாறு’ ‘சர்வதேச சமூகம்’ மற்றும் ‘அமெரிக்காவிடம்’ ஒரு அற்பமான வேண்டுகோளை விடுத்தது.  

நெதன்யாகு அரசாங்கம் பிராந்திய விரிவாக்கம், யூத மேலாதிக்கம் மற்றும் பாலஸ்தீனியர்கள் மீதான பாரிய அடக்குமுறை போன்ற நிகழ்ச்சி நிரலுடன் மட்டுமே பதவியில் தொடர முடியும். ஏனென்றால் வாஷிங்டனும் முக்கிய ஐரோப்பிய சக்திகளும் அதற்கு மறைமுக ஆதரவை வழங்குகின்றன. இவையனைத்தும் பின்வரும் ஒரே மாதிரியான நிறைவேற்றும் செயல்களின் பட்டியலைக் கொண்டுள்ளன. அதாவது  வெளிநாட்டில் ஆக்கிரமிப்பு போர்கள் மற்றும்  தங்கள் சொந்த நிதிய தன்னலக்குழுக்களைப் பாதுகாப்பதற்கு எப்போதும் அதிகரிக்கும் எதேச்சதிகாரத்தால் இவை ஆதரிக்கப்படும் உள்நாட்டில் வர்க்கப் போர்  என்பனவே அவையாகும்.  

பைடென் நிர்வாகம் இஸ்ரேலுக்கான அதன் நிபந்தனையற்ற ஆதரவை வழங்கும் என்று வியாழனன்று வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் வலியுறுத்திக் கூறியதுடன், வெளியுறவுச் செயலாளர் ஆண்டனி பிளிங்கன் இஸ்ரேலுக்கு விஜயம் செய்யவிருப்பது பற்றியும் அறிவித்தது. இந்த அறிக்கை, அவர் “பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, வெளியுறவு மந்திரி எலி கோஹன் மற்றும் பிற மூத்த தலைவர்களை சந்தித்து, இஸ்ரேலின் பாதுகாப்பு குறித்து, குறிப்பாக ஈரானின் அச்சுறுத்தல்களுக்கு எதிராக அமெரிக்கா அளித்து வரும் ஆதரவு குறித்து விவாதிப்பார்” என்று விளக்கியுள்ளது.

ஏப்ரல் 2021 இல் நியூயோர்க்கை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பு தொண்டு நிறுவனத்தால் ஆவணப்படுத்தப்பட்டபடி பைடென் நிர்வாகம், இஸ்ரேலின் நிறவெறிக் கொள்கை குறித்து அதை நிறுத்தவோ அல்லது அனுமதிக்கவோ எதுவும் செய்யவில்லை. மே 2021 இல் காசா மீது அது நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதலில் 250 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்; ஜனவரி 2022 இல், 80 வயது மூத்த அமெரிக்கக் குடிமகனான உமர் முஹம்மது ஆசாத், பொலிசாரால் காரில் இருந்து வெளியே இழுத்துப் போடப்பட்டு, தாக்கப்பட்டு, சாலையில் இறந்துபோக விடப்பட்டார்; மேற்குக் கரையில் உள்ள நகர்ப்பகுதிகள் மற்றும் நகரங்களில் கிட்டத்தட்ட தினசரி நடத்தப்படும் திடீர் சோதனைகள்; மே 2022 இல் அல்-ஜசீராவின் பாலஸ்தீனிய-அமெரிக்க பத்திரிகையாளர் ஷிரீன் அபு அக்லே வேண்டுமென்றே படுகொலை செய்யப்பட்டார், மேற்குக் கரையில் 4,000 குடியேற்ற வீடுகளை கட்டுவதற்கான இஸ்ரேலின் திட்டம் பற்றி அதே மாதத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பு; அல்லது 2022 இல் குறைந்தது 271 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர், என்று அறிக்கை கூறுகின்றது. 

இஸ்ரேலின் Iron Dome ஏவுகணை பாதுகாப்பு அமைப்புக்கு 1 பில்லியன் டாலர் நிதியுதவிக்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது மற்றும் அபு அக்லேவின் கொலைக்கான இஸ்ரேலின் பொறுப்பைக் குறைக்கும் அறிக்கையை வெளியிட்டது. இரண்டு மாதங்களில் முன்னோடியில்லாத வேகத்துடன் கூடிய மிகப்பெரிய கூட்டு இராணுவப் பயிற்சிக்கான தயாரிப்புகளுக்கு மத்தியில், கடந்த வாரம், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக்கே சுல்லிவன் ஈரானுக்கு எதிரான போர் உந்துதலுக்கான திட்டங்கள் பற்றி விவாதிக்க இஸ்ரேலுக்குச் சென்றார். இது, பாசிஸ்டுகள் நிறைந்த நெதன்யாகுவின் அரசாங்கம் ஆட்சிக்கு வந்த சில வாரங்களுக்குப் பின்னர், ஈரானுக்கு ஒரு எச்சரிக்கை விடுக்கவும், இஸ்ரேலுக்கான பைடென் நிர்வாகத்தின் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டவும் வடிவமைக்கப்பட்டது. 

பிளிங்கனின் பயணம் எகிப்தில் தொடங்குகிறது. அங்கு அவர் ஜனாதிபதி அப்தெல் ஃபத்தாஹ் அல்-சிசியை சந்தித்து   “அமெரிக்கா-எகிப்து மூலோபாய கூட்டாண்மையை முன்னேற்றுவது, மற்றும் பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவது,” பற்றி விவாதிப்பார் என்று அறிக்கை கூறியுள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE), பஹ்ரைன் – சவுதி அரேபியாவின் வழிகாட்டுதலின்படி – சூடான் மற்றும் மொராக்கோ ஆகியவை இஸ்ரேலுடன் முழு இராஜதந்திர மற்றும் வணிக உறவுகளைத் திறப்பதை மேற்பார்வையிடும் அமெரிக்க-தரகு ஆபிரகாம் ஒப்பந்தங்கள், கிழக்கு அண்டைப் பகுதியிலுள்ள பாலஸ்தீனிய அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரண மற்றும் வேலை முகமைக்கு (United Nations Relief and Works Agency for Palestine Refugees in Near East-UNRWA) அரேபிய நன்கொடையாளர்களால் வழங்கப்படும் நிதியில் கடுமையான வீழ்ச்சிக்கு வழிவகுத்தது. 2018 இல், அரபு நாடுகள் முகமையின் வரவு செலவுத் திட்டத்தில் 25 சதவீதத்தை வழங்கின. ஆனால் இது 2021 இல் வெறும் 3 சதவீதமாகவும், கடந்த ஆண்டு 4 சதவீதமாகவும் குறைந்துள்ளது. 

கடந்த ஆண்டு, கிழக்கு ஜெருசலேம், ஜோர்டான், லெபனான் மற்றும் சிரியா உட்பட பாலஸ்தீனிய பிரதேசங்களில் பதிவுசெய்யப்பட்ட கிட்டத்தட்ட ஆறு மில்லியன் பாலஸ்தீனியர்களுக்கு அத்தியாவசிய பொது சேவைகளை வழங்கும் UNRWA அமைப்பானது தான் கோரியிருந்த 1.6 பில்லியன் டாலரில் 1.2 பில்லியன் டாலருக்கு குறைவாகவே நிதி திரட்டியது. இது தொடர்ந்து நான்காவது ஆண்டாக 70 மில்லியன் டாலருக்கும் அதிகமான நிதி பற்றாக்குறையுடன் முடிகிறது.   

பொது அரச நிர்வாகத்தின் கீழ் மேற்குக் கரையில் உள்ள நிர்வாக அதிகாரிகளை புதிதாக நியமிக்கப்பட்ட நிதி அமைச்சரான பாசிச மத சியோனிசத்தின் தலைவர் பெசலெல் ஸ்மோட்ரிச்சின் கீழ் மாற்றுவதற்கான நகர்வுகளுக்கு மத்தியில், ஜெனினில் இஸ்ரேலின் பாலஸ்தீனியர்கள் படுகொலை நடந்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு இஸ்ரேலின் இரண்டு அடிப்படை சட்டங்களில் திருத்தங்கள் தேவைப்படும்.  

தற்போது பாதுகாப்பு அமைச்சக கட்டுப்பாட்டிற்குள் இயங்கும் பொது நிர்வாகம், மேற்குக் கரையின் Area C பகுதியில் திட்டமிடுதல் மற்றும் கட்டுமானத்திற்கு பொறுப்பாக உள்ளது. ஸ்மோட்ரிச், இஸ்ரேலிய சட்டத்தின் கீழ் தற்போது சட்டவிரோதமாக உள்ள குடியேற்ற புறக்காவல் நிலையங்கள் உட்பட குடியேற்ற விரிவாக்கத்தின் நடைமுறைக் கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பார். இப்பொது நிர்வாகத்தை நிதி அமைச்சகத்திற்கு மாற்றுவது, Area C இன் நடைமுறை இணைப்பிற்கு சமமாகும். ஏனெனில் இப்பகுதியிலான குடியேற்றங்கள் இனி இராணுவ ஆட்சியின் கீழ் அல்லாமல், பொது நிர்வாகத்தின் கீழ் வரும். 

இதுவும், அந்த இடத்தில் யூதர்களின் பிரார்த்தனைகளைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டு அல்-அக்ஸா மசூதி வளாகத்தில் தேசிய பாதுகாப்பு அமைச்சரும் யூத சக்தி தலைவருமான இதாமர் பென்-க்விரின் செய்த ஆத்திரமூட்டல்களும், பதட்டங்களைத் தூண்டிவிட்டு பாலஸ்தீனியர்களுடன் ஒரு முழுமையான போரைத் தூண்டுவதற்கு உத்தரவாதம் அளிக்கின்றன, இது ஏப்ரல் மாதம் இஸ்லாமியர்களின் ரமலான் மற்றும் யூதர்களின் பாஸ்கா (Passover) பண்டிகைகளுடன் ஒரே நேரத்தில் நடக்கவிருக்கின்றன. 

நெதன்யாகுவின் தீவிர வலதுசாரி அரசாங்கத்தின் சர்வாதிகார அதிகாரங்களுக்கு எதிரான போராட்டத்தை நடத்துவதற்கு இஸ்ரேலிய தொழிலாளர்கள்   வேறு எந்த தலைமையும் நம்ப முடியாதோ அதேபோல், பாலஸ்தீனியத் தொழிலாளர்கள் இந்த பாசிச சக்திகளுக்கு எதிராக தங்களைக் காக்க, தங்கள் வெறித்தனமான, முதலாளித்துவ தேசியத் தலைவர்களை, மதச்சார்பற்ற அல்லது மதவாதத் தலைவர்களை இனி நம்ப முடியாது.

இந்த இரண்டு போராட்டங்களையும் ஒன்றிணைப்பதும், ஆளும் உயரடுக்கின் ஒன்று அல்லது மற்ற பிரிவின் பிடியைத் தக்கவைத்துக் கொள்ள முயலும் அனைத்து சக்திகளிடமிருந்தும் பாலஸ்தீனிய மற்றும் இஸ்ரேலிய தொழிலாள வர்க்கத்தின் சுதந்திரத்தைப் பாதுகாக்க ஒரு புரட்சிகர தலைமையை உருவாக்குவதும் தான் தீர்க்கமான கேள்வியாக உள்ளது. இஸ்ரேலிய மற்றும் பாலஸ்தீனிய தொழிலாளர்கள் முதலாளித்துவத்திற்கு எதிரான, சோசலிசத்திற்கான தங்கள் போராட்டத்தை, பிராந்தியம் முழுவதிலும் உள்ள அரபு, ஈரானிய, குர்திஷ் மற்றும் துருக்கிய மற்றும் ஏகாதிபத்திய மையங்களில் உள்ள தங்கள் சகோதர சகோதரிகளுடன் ஒன்றிணைக்க வேண்டும். இதுவே நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) போராடி வரும் நிரந்தரப் புரட்சிக்கான முன்னோக்காகும்.