இரங்கல்: ஆஸ்திரேலிய சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர் வேர்ஜீனியா கிரென்ஃபெல் (மே 2, 1953–நவம்பர் 8, 2022)

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

நவம்பர் 8 அன்று தோழர் வேர்ஜீனியா கிரென்ஃபெல் இறந்ததை நாங்கள் மிகுந்த வருத்தத்துடன் தெரிவிக்கிறோம். 15 ஆண்டுகளாக சோசலிச சமத்துவக் கட்சியில் உறுப்பினராக இருந்த வேர்ஜீனியா 69 வயதாக இருந்தபோது, தீவிரமான, அறுவை சிகிச்சை செய்ய முடியாத மற்றும் சிகிச்சை அளிக்க முடியாத புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மூன்று மாதங்கள் மட்டுமே ஆகியிருந்தது. அவர் தனது மகன் ஆஸ்கார், தாயார் பாற் மற்றும் நான்கு சகோதரிகளான ரெபேக்கா, லூயிஸ், ஜோ மற்றும் எல் மற்றும் அவர்களது குடும்பங்களை விட்டுச் சென்றார்.

வேர்ஜீனியா கிரென்ஃபெல்

ஆறு குழந்தைகளில் இரண்டாவது மூத்தவரான வேர்ஜீனியா 1953 இல் விக்டோரியா மெல்போர்னில் பிறந்தார். குடும்ப வாழ்க்கை வெளிப்படையாக அரசியல்ரீதியானது அல்ல. ஆனால் வேர்ஜீனியாவின் தாய்வழி தாத்தா ஒரு தொழிற் கட்சி செனட்டராக இருந்தமை அவர் மீது தாக்கத்தை ஏற்படுத்தியதுடன், உழைக்கும் மக்கள் எதிர்கொள்ளும் கடினமான நிலைமைகளை தணிப்பதற்கான வழிமுறையாக தொழிற் கட்சியை பார்க்க அவர் பங்களித்தார். கலை, ஆங்கில இலக்கியம் மற்றும் தத்துவம் படித்த அதே பல்கலைக்கழகத்தில் தான் உலக நிகழ்வுகளிலும் அரசியலில் அதிக ஆர்வம் காட்டினார்.

அவரது தலைமுறையைச் சேர்ந்த பல மாணவர்களையும் இளைஞர்களையும் போலவே, அவர் வியட்நாம் போரின் கொடூரங்கள் மற்றும் அதில் ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் பங்கேற்பு ஆகியவற்றால் தீவிரமயமாக்கப்பட்டு 1970 களில் போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றார். எவ்வாறாயினும், அந்த நேரத்தில் பல்கலைக்கழகத்தில் இருந்த முக்கிய குட்டி-முதலாளித்துவ தீவிரமான பிரிவினரால் அவர் ஈர்க்கப்படவில்லை. அவர்கள் தொழிலாள வர்க்கத்திற்கும் ஒரு சோசலிச மற்றும் புரட்சிகர தலைமையை கட்டியெழுப்புவதற்கான போராட்டத்திற்கும் விரோதமாக இருந்தனர்.

18, 1970 இல் மெல்போர்ன் நகர சதுக்கத்தில் வியட்நாம் போர் எதிர்ப்பாளர்கள் [Photo by National Archives of Australia / CC BY-SA 3.0]

1975 இல் அவரது நீண்ட கால கூட்டாளியான ஜாக் ஐ சந்தித்த பின்னர், அவர்கள் அடலெய்ட், டார்வின் மற்றும் மெல்போர்ன் ஆகிய இடங்களில் ஒன்றாகப் பயணம் செய்து ஒன்றாகப் பணிபுரிந்தனர். இறுதியாக சிட்னியில் குடியேறினர். அங்கு அவர்களது மகன் ஆஸ்கார் 1992 இல் பிறந்தார். அந்த உறவு 1996 இல் முடிவடைந்தபோதும் 2020 இல் ஜாக்கின் அகால மரணம் வரை அவர்கள் சிறந்த நண்பர்களாக இருந்தனர். இந்தக் காலம் முழுவதும் வேர்ஜீனியா விருந்தோம்பல், முதியோர் பராமரிப்பு நிலையங்கள் மற்றும் சிட்னியின் ஏழ்மையான பகுதிகளில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உதவி செய்யும் நிறுவனங்களுடன் பணியாற்றினார்.

1998 இல், ஹோவர்ட்டின் தாராளவாத அரசாங்கத்தால் துறைமுகத் தொழிலாளர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட முன்னோடியில்லாத தாக்குதலால், அந்த நேரத்தில் ஆஸ்திரேலியாவில் இருந்த பல தொழிலாளர்களை போலவே, அவர் அதிர்ச்சியடைந்தார். வேர்ஜீனியா, இளம் ஆஸ்கருடன், தொழிலாளர்களுக்கு ஆதரவாக நடந்த போராட்டங்களில் கலந்து கொண்டார்.

பேட்ரிக் இறங்குதுறை துறைமுக போராட்டத்தில், 1,400 பேர் பலம் வாய்ந்த பணியாளர்கள் முழுவதையும் கப்பல் நிறுவனம் பணிநீக்கம் செய்த பின்னர், கறுப்பு முகமூடி அணிந்த பாதுகாப்புக் காவலர்கள் இறங்குதுறையில் இருந்து தொழிலாளர்களை வெளியேற கட்டாயப்படுத்தினர். வேலைநிறுத்த எதிர்ப்பு சட்டத்தை வலுப்படுத்தும் அதே வேளையில், ஹோவர்ட் அரசாங்கத்தால் பாதிப் பணியாளர்களை அகற்றுவதற்கும் உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கும் இது ஒரு திருப்புமுனையாகப் பயன்படுத்தப்பட்டது. இது துறைமுகத்தை மட்டுமல்ல, ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தையும் இலக்காகக் கொண்டது.

இருப்பினும், ஸ்ராலினிச ஜென்னி ஜார்ஜ் தலைமையிலான ஆஸ்திரேலிய தொழிற்சங்கங்களின் குழு (ACTU) மற்றும் ஆஸ்திரேலியாவின் கடல்சார் ஒன்றியத்தின் (MUA) தலைமையின் பங்கு இல்லாமல், அரசாங்கமோ நிறுவனமோ அத்தகைய தாக்குதல்களை சுமத்தியிருக்க முடியாது. தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களை பாதியாகக் குறைப்பது, நூற்றுக்கணக்கான பிற வேலைகளை வெளி நிறுவனங்களுக்கு கொடுப்பது, கூடுதல் வேலைநேரம் மற்றும் அபராத விகிதங்கள் உட்பட கடினமாக வென்றெடுத்த நிலைமைகளை அழித்தல் மற்றும் அதிகரித்த தற்காலிக தொழிலாளர்களை பணிக்கமர்த்தலை திணிப்பு ஆகியவற்றிற்கு ஒப்புக்கொண்டன.

1998ஸ்வான்சன் கப்பல்துறை, மெல்போர்ன், 1998 இல் மறியல்போராட்டம் [Photo by Tirin / CC BY-SA 3.0]

ஆனால் 2003 ஈராக்-எதிர்ப்பு போர் ஆர்ப்பாட்டங்கள் ஏகாதிபத்திய படுகொலைகளைத் தடுக்கத் தவறியது. இது ஈராக், ஆப்கானிஸ்தான் மற்றும் லிபியாவை இடிபாடுகளாக்கியமை வேர்ஜீனியாவை திகைக்க வைத்தது மற்றும் பயமுறுத்தியது. இந்தப் போராட்டத்தில் தாயும் மகனும் கலந்து கொண்டனர். அவை ஆஸ்திரேலியாவிலும் சர்வதேச அளவிலும் இதுவரை கண்டிராத மிகப் பெரிய ஆர்ப்பாட்டங்களாக இருந்தன. ஆனால் ஜோர்ஜ் டபிள்யூ. புஷ், ஹோவர்ட்டின் தராளவாத-தேசிய அரசாங்கமும் அனைத்து ஏகாதிபத்திய நிர்வாகங்களும் இப்போராட்டங்களை அவமதித்து, இகழ்ச்சியுடன் நிராகரித்தன.

2007 இல் Dulwich Hill இல் சோசலிச சமத்துவக் கட்சியின் (SEP) தேர்தல் பிரச்சாரக் குழுவை வேர்ஜீனியாவும் பின்னர் 14 வயதான ஆஸ்கரும் சந்தித்தபோது, அவருடன் கலந்துரையாடப்பட்ட பகுப்பாய்வு மூலம் அவர் நிம்மதியும் உற்சாகமும் அடைந்தார். சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை எடுத்து, அதன் ஒவ்வொரு பக்கத்தையும் வாசித்துவிட்டு, அந்த அறிக்கையில் விளம்பரப்படுத்தப்பட்ட கட்சித் தேர்தல் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

முக்கிய வரலாற்று அல்லது அரசியல் பிரச்சினைகளை அல்லாமல் வாக்குகளைப் பெறுவதே ஒரே ஆர்வமாக இருந்த போலி-இடது சோசலிசக் கூட்டணியை முன்பு சந்தித்த நிலையில், வேர்ஜீனியாவும் ஆஸ்காரும் சோசலிச சமத்துவக் கட்சியால் ஈர்க்கப்பட்டனர். இது முதலாளித்துவத்தின் உலகளாவிய நெருக்கடி, போர் அச்சுறுத்தல் மற்றும் நடந்துகொண்டிருக்கும் தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்தது. வணிக நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற் கட்சி மற்றும் தாராளவாதக் கட்சிகளில் இருந்து சுயாதீனமான ஒரு சோசலிச தலைமையின் அவசியத்தை சோசலிச சமத்துவக் கட்சி விளக்கியது.

வேர்ஜீனியாவுக்கு இது ஒரு திருப்புமுனையாக இருந்தது. அவர் இவ்வாறான எதையும் கேள்விப்பட்டதில்லை என்பதை பின்னர் நினைவு கூர்ந்தார். முதன்முறையாக, அவரை மிகவும் கோபமும், கவலையடையவும் செய்த போர் மற்றும் சமத்துவமின்மை போன்ற பிரச்சினைகளுக்கு அவருக்குப் பதில்கள் கிடைத்தன. என்ன நடக்கிறது என்பது மட்டுமல்ல, ஏன் மற்றும் அதை எவ்வாறு எதிர்த்துப் போராடுவது என்பது பற்றிய முன்னோக்கும் அவருக்கு கிடைத்தது.

அவர் ஒரு தேர்தல் உறுப்பினராக (Electoral Member - EM) சேர்ந்தார். இது அவர் இணைந்த முதல் அரசியல் அமைப்பு என்பதால் அவர் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டார். பின்னர் அரசியல் விவாதம் மற்றும் பயிற்றுவித்தல் காலம் தொடங்கியது. இது வழக்கமான EM கூட்டங்கள், கல்வி வகுப்புகள், கட்சி கூட்டங்கள் மற்றும் முக்கிய அரசியல், வரலாற்று மற்றும் தத்துவ பிரச்சினைகளை உள்ளடக்கிய விவாதங்கள் மூலம் நடத்தப்பட்டது. பல்கலைக்கழகத்தில் தான் கற்றுக்கொண்ட எதையும் விட இந்த ஆய்வு மிகவும் ஆழமானதும், தீவிரமானதும் என்று அவர் பின்னர் கருத்து தெரிவித்தார்.

சமூக ஜனநாயகம், ஸ்ராலினிசம் மற்றும் தொழிற்சங்கங்கள் ஆற்றிய பாத்திரம் மற்றும் இந்த அமைப்புகளின் கைகளில் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் போராட்டங்கள் காட்டிக்கொடுக்கப்பட்டதன் துயரமான மற்றும் கடினமான படிப்பினைகளைப் பற்றி அவர் கற்றுக்கொண்டார். தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரத் தலைமையின் நெருக்கடியைத் தீர்ப்பதற்கு, அனைத்துலகக் குழு தலைமை வகிக்கும் நான்காம் அகிலத்தின் சுயாதீன புரட்சிகர அமைப்புகளை கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியத்தை அவர் அறிந்துகொண்டார்.

வேர்ஜீனியா ஒரு தடவை இணைந்துகொண்டதும், அவர் ஒருபோதும் அதை கைவிடவில்லை.

அவர் கிளைகளின் வேலைகளில் முக்கியமாக ஈடுபட்டார். வணிக மையங்கள், பல்கலைக்கழக வளாகங்கள், தொழிற்சாலைகள் மற்றும் போராட்டங்களில் பிரச்சாரம் செய்தார், சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோக்கு மற்றும் வேலைத்திட்டத்திற்காக விளக்கி போராடினார். அவர் எமது தொடர்புகள் மற்றும் ஆதரவாளர்களை சென்று பார்வையிட்டார் மற்றும் கட்சியின் இளைஞர் இயக்கமான சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் (IYSSE) குழுக்களை உருவாக்குவதற்கான போராட்டத்தில் உதவினார். சோசலிச சமத்துவக் கட்சியின் இலக்கியப் பிரிவான மெஹ்ரிங் புக்ஸின் வளர்ச்சியிலும், பொதுக் கூட்டங்களில் ஈர்க்கத்தக்க பதாகைகள் மற்றும் மேசைகளை உருவாக்குவதிலும், ஜூலியன் அசாஞ்சை பாதுகாக்கும் சோசலிச சமத்துவக் கட்சி பேரணிகளிலும் முக்கிய பங்கு வகித்தார்.

கட்சிக் கிளைகளின் பணிகளில் வேர்ஜீனியா முக்கியப் பங்கு வகித்தாலும், தனது மகன் ஆஸ்காரின் வளர்ச்சியையே தனது பெருமைக்குரிய சாதனையாகக் கருதினார்.

தாயும் மகனும் ஒரே நேரத்தில் இணைந்தாலும், ஆஸ்கார் தனது சொந்த முடிவை எடுக்கவும், கட்சியில் தனது சொந்த வழியைக் கண்டறியவும் வேர்ஜீனியா மிகவும் கவனமாக இருந்தார். அவர் IYSSE மற்றும் SEP இன் தலைவராகவும், உலக சோசலிச வலைத் தளத்தின் (WSWS) ஒரு சிறந்த எழுத்தாளராகவும் அவர் வளர்ச்சியடைந்தது, வேர்ஜீனியாவுக்கு மகத்தான பெருமையையும் திருப்தியையும் அளித்தது.

திடீரெனவும் எதிர்பாராதவிதமாகவும் வேர்ஜீனியாவின் புற்றுநோய் கண்டறியப்பட்டது அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. மேலும் அவரது நிலைமை வேகமாக மோசமடைந்தபோது வேர்ஜீனியா தனது முன்கணிப்பை தைரியத்துடனும் புறநிலைரீதியாகவும் எதிர்கொண்டார். அவர் நோயின் விளைவுகளைப் பற்றி நன்கு அறிந்திருந்தார். ஆனால் அவரது வழக்கமான பெரிதுபடுத்தாதக முறையில் அதைக் கையாண்டார். ஆஸ்கார் தனது தாயை இறக்கும் வரை கவனித்து வந்தார்.

முதலாளித்துவத்தைத் தூக்கி எறிவதற்கும், ஒரு சோசலிச சமூகத்திற்கான புரட்சிகரப் போராட்டங்களில் தொழிலாள வர்க்கத்தை வழிநடத்துவதை அதன் பணியாக கொண்ட சோசலிசப் புரட்சிக்கான உலகக் கட்சியைக் கட்டியெழுப்புவதில் முக்கிய பங்கு வகித்த நம்பிக்கையுடன் வேர்ஜீனியா இறந்தார்.

Loading