மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
33 ஆண்டுகளாக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் உறுப்பினராக இருந்த ரெஜினா சுசான் லோரின் மரணத்தை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவிக்கிறோம். ரெஜினா அக்டோபர் 10 ஆம் தேதி நியூ சவுத் வேல்ஸில் உள்ள காஃப்ஸ் துறைமுகத்தில் (NSW) மார்பக புற்றுநோயுடன் நான்கு வருட போராட்டத்தைத் தொடர்ந்து இறந்தார். அவருக்கு 66 வயதாகின்றது.
ரெஜினா தனது நீண்ட கால துணைவரும், தோழருமான கென் மாண்டல் மற்றும் அவரது நான்கு உடன்பிறப்புகளான இங்க்ரிட், லியான், ரொபேர்ட், ஐரீன் ஆகியோரை விட்டுச்சென்றுள்ளார்.
ரெஜினாவின் பெற்றோர்களான ரொபேர்ட் மற்றும் பிரிஹிட்ட ஆகியோரின் ஆரம்பகால குடும்ப வாழ்க்கை இரண்டாம் உலகப் போருடன் நெருக்கமாக இணைக்கப்பட்டிருந்தது. 1944 ஆம் ஆண்டில், அவரது தந்தை செம்படைக்கு எதிராக கிழக்கு முன்னணியில் போராட அனுப்பப்பட்டார். அவர் காயமடைந்து ஜேர்மனிக்கு திருப்பி அனுப்பப்பட்டார். அவரது காயம் இறுதியில் அவரது கால் இழப்பை ஏற்படுத்தியிருந்தது.
போருக்குப் பின்னர் இந்த இளம் ஜோடியினர் சுடெடென்லாண்ட் பகுதி ஜேர்மனியர்களாக இருந்ததால் நாடற்றவர்களாக காணப்பட்டு கிழக்கு ஜேர்மனிக்கு குடிபெயர்ந்தனர். அங்கு ரொபேர்ட் ஒரு மின் பொறியாளராகப் பயிற்சி பெற்றார். பின்னர் அவர் ரெஜினா பிறந்த கார்ல்ஸ்ரூக நகருக்கு இடம்பெயர்ந்தார். 1942 இல் பிரிட்டிஷ் போர் குண்டுவீச்சாளர்களால் கணிசமாக சேதமடைந்த பல ஜேர்மன் நகரங்கள் மற்றும் நகரங்களில் கார்ல்ஸ்ரூகவும் ஒன்றாகும்.
இக்குடும்பம் 1964 இல் ஜனவரி 25 அன்று SS Aurelia கப்பலில் ஆஸ்திரேலியாவிற்கு குடிபெயர்ந்தது. ரெஜினா இந்த ஆண்டு தனது 66 வது பிறந்தநாள் கொண்டாட்டங்களில் விளக்கியது போல், பனிப்போரின் உச்சத்தில் ஐரோப்பாவை விட்டு வெளியேற குடும்பத்தின் முடிவு 1962 கியூபா ஏவுகணை நெருக்கடியால் தூண்டப்பட்டது. இது உலகை அணுசக்தி போரின் விளிம்பிற்கு கொண்டு வந்தது.
1960 களில் குடும்பம் அவரது சொந்த நாடான ஜேர்மனியில் இருந்து வேறுபட்ட உலகமான ஆஸ்திரேலியாவுக்கு வந்தபோது ரெஜினாவுக்கு ஏழு வயது. அங்கு வந்தவுடன் சிட்னியின் மேற்கு மற்றும் தென்மேற்கு புறநகர் தொழிலாளி வர்க்க பகுதிகளுக்கு குடும்பம் சென்றதாகவும், அங்கு சிமெந்து இழைகளான கூரையிடப்பட்ட வீடுகளின் வரிசைகளைக் கண்டு வியந்ததாகவும், இது இளம் ஐரோப்பிய குடும்பத்திற்கு கடினமான அட்டைப் பலகையால் கட்டப்பட்டது போல் தோன்றியதாக அவர் விவரித்தார்.
அக்குடும்பம், இப்போது ரெஜினாவின் நான்காவது உடன்பிறந்த ஐரீன் பிறந்த பின்னர் இறுதியாக சிட்னியில் உள்ள தென்மேற்கு புறநகர் Picnic Point இல் குடியேறியது. அங்கு லோஹ்ர் குடும்பத்தின் குழந்தைகள் உள்ளூர் பள்ளிகளில் படித்தனர்.
உயர்நிலைப் பள்ளியைத் தொடர்ந்து, காமன்வெல்த் வேலைவாய்ப்பு சேவை (CES) உட்பட பொதுச் சேவையில் ரெஜினா பணிபுரிந்தார். ஆனால் அங்கு நலன்புரிக் கொடுப்பனவுகளுக்காக விண்ணப்பதாரர்களை மிருகத்தனமான கையாண்ட ஊழியர்களை சந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
ரெஜினாவின் வாழ்க்கையில் திருப்புமுனை 1989 இல் அவர் சோசலிச சமத்துவக் கட்சியின் (SEP) முன்னோடியான சோசலிச தொழிலாளர் கழகத்தை (SLL) சந்தித்தபோது நிகழ்ந்தது. முன்னாள் சோவியத் ஒன்றியம் மற்றும் ஜேர்மன் ஜனநாயகக் குடியரசின் (GDR) ஸ்ராலினிச அதிகாரத்துவங்கள் சோவியத் ஒன்றியத்தைக் கலைத்து, இரு நாடுகளிலும் முதலாளித்துவ சொத்து உறவுகளை மீட்டெடுக்கும் முடிவின் விளைவாக, 1917 ரஷ்யப் புரட்சியினதும் மற்றும் 'இடைத்தடை நாடுகளிலும்' எஞ்சியிருந்த வெற்றிகள் அழிக்கப்பட்டன. இது சர்வதேச அளவில் தொழிலாளர்களுக்கு இது ஒரு தீவிர குழப்பமான காலமாகும்.
தொழிலாள வர்க்கத்தின் எந்த ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட வெகுஜன எதிர்ப்பும் இல்லாமல் இது நிகழக்கூடியதாக இருந்த்தற்கான காரணம் ஸ்ராலினிசத்தின் காட்டிக்கொடுப்பின் விளைவு ஆகும். மேலும் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு ட்ரொட்ஸ்கிசத்துடன் முறித்துக் கொண்டிருந்த பப்லோவாத திருத்தல்வாத அமைப்புகளில் இருந்த அவர்களது கூட்டாளிகளான ஏர்னெஸ்ட் மண்டேலின் தலைமையிலான ஐக்கிய செயலகத்தின் கட்சிகள், கிழக்கு ஐரோப்பாவில் ஸ்ராலினிச ஆட்சிகள் தோன்றியதை, இது ஸ்ராலினிசம் வகிக்கக்கூடிய முற்போக்கான பாத்திரத்தின் நிரூபணமாகப் பாராட்டினர். மணடேலின் ஜேர்மன் இணை-சிந்தனையாளர்கள் கிழக்கு ஜேர்மனியில் வெறுக்கப்பட்ட அதிகாரத்துவ சக்திகளின் பாதுகாப்பிற்கு விரைந்து, முன்னாள் கிழக்கு ஜேர்மனியின் சோசலிச ஐக்கிய கட்சி (SED) தலைமையிலான அரசாங்கத்தில் இணைந்தனர்.
உலக ட்ரொட்ஸ்கிச இயக்கமான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மட்டுமே ஸ்ராலினிசத்தை இடதுபுறத்தில் இருந்து எதிர்த்துப் போராடியது. சோசலிச ஐக்கிய கட்சிக்கு எவ்விதமான விட்டுக்கொடுப்புமின்றி ஜேர்மனியில் முதலாளித்துவ மீட்சியின் பேரழிவு விளைவுகளைப் பற்றி எச்சரித்த ஒரே அமைப்பு சோசலிச சமத்துவக் கட்சியின் (PSG) முன்னோடியான சோசலிச தொழிலாளர் கழகம் (Bund Sozialistischer Arbeiter-BSA) மட்டுமே.
நவம்பர் 4, 1989 அன்று பேர்லினில் ஒரு வெகுஜன ஆர்ப்பாட்டத்திற்கு விநியோகிக்கப்பட்ட ஒரு அழைப்பில் BSA பின்வருமாறு விளக்கியது: 'தொழிலாள வர்க்கம் ஆளும் அதிகாரத்துவத்தை தூக்கி எறிந்து, அதை அனைத்து பதவிகளிலிருந்தும் வெளியேற்றும் ஒரு அரசியல் புரட்சியின் மூலம் மட்டுமே அரசியல் சுயாதீனம் மற்றும் ஜனநாயக உரிமைகளை வென்றெடுக்க முடியும். பாட்டாளி வர்க்க அதிகாரத்திற்கும், ஜனநாயகத்திற்குமான சுயாதீன அமைப்புகளை நிறுவி, தொழிற்சாலைகள் மற்றும் குடியிருப்புகளில் உள்ள தொழிலாளர்களால் அவர்களின் பலத்தையும், அணிதிரளலையும் மட்டும் அடித்தளமாகக் கொண்ட தேர்ந்தெடுக்கப்பட்ட தொழிலாளர் குழுக்களை நிறுவவேண்டும்”.
இந்த பகுப்பாய்வினால் தான் ரெஜினா மிகவும் அழுத்தமாக ஈர்க்கப்பட்டார். கிழக்கு ஜேர்மனியின் வீழ்ச்சி மற்றும் சோவியத் ஒன்றியத்தின் கலைப்பு வரலாற்றின் அல்லது சோசலிசத்தின் முடிவு என்ற பொய்யை வளர்த்தெடுத்த முதலாளித்துவ வெற்றியின் அலையால் அவர் சளைக்கவில்லை. உண்மையில், அது தேசியவாத அடிப்படையிலான திட்டங்கள் மற்றும் அமைப்புகளின் முடிவு என்றும், சோசலிச சர்வதேசியத்தின் முன்னோக்கு மட்டுமே தொழிலாள வர்க்கம் எதிர்கொள்ளும் பெருகிவரும் நெருக்கடிக்கு விடையளிக்கும் என்றும் அவர் புரிந்துகொண்டவுடன், அவர் ஒருபோதும் அந்நிலைப்பாட்டை விட்டு அசையவில்லை.
ரெஜினா சோசலிச தொழிலாளர் கழகத்திலும் பின்னர் சோசலிச சமத்துவக் கட்சியிலும் கிளைகளில் இயங்கினார். சிட்னியின் தொழிலாள வர்க்க புறநகர்ப் பகுதிகளில் செயலில் இருந்த சோசலிச தொழிலாளர் கழகத்தின் வார இருமுறை செய்தித்தாளான Workers News உடன் பிரச்சாரம் செய்து, பின்னர் உலக சோசலிச வலைத் தளம் (WSWS) தொடங்கப்பட்டதைத் தொடர்ந்து தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் கட்சியின் செல்வாக்கை அதிகரிக்க போராடினார். பொதுத்துறை தொழிற்சங்கத்தில் கட்சியின் கொள்கைகளுக்காக போராடுவது மற்றும் ஜேர்மன் மொழிபெயர்ப்புகளுக்கு உதவுவதும் இதில் அடங்கும்.
பல ஆண்டுகளாக, ரெஜினா தனது வயதான பெற்றோரைக் கவனித்து, அவர்களின் மரணத்தைத் தொடர்ந்து, வீட்டுப் பராமரிப்பில் பணிபுரிந்தார், பின்னர் கற்றுக்கொள்வதில் சிரமங்களைக் கொண்ட குழந்தைகளுக்கு கற்பித்தார். இந்த கடுமையான பணியில் அவர் சிறந்து விளங்கினாலும், 2018 இல் மார்பக புற்றுநோயைக் கண்டறியப்பட்டதால் அது குறைக்கப்பட்டது.
ரெஜினா கட்சியில் அவரது பங்கை குணாதிசயப்படுத்தியது அதே உறுதியுடன் தனது நோயறிதலை சந்தித்தார். ஆறு மாத கடுமையான சிகிச்சைக்குப் பிறகு, 2019இல் அவருக்கு முற்றுமுழுதாக நோய் மாறிவிட்டதாக அறிவிக்கப்பட்ட பின்னர் கெனுடன் Coffs Harbour க்கு மாறிச்சென்றார்.
எவ்வாறாயினும், அவர்கள் இடம்பெயர்ந்த சில வாரங்களுக்குப் பின்னர் புற்றுநோய் திரும்பியபோது இந்த நிவாரணம் குறுகிய காலமுள்ளதாக இருந்தது. அடுத்த மூன்றரை ஆண்டுகளுக்கு கென்னும் மற்றும் ரெஜினாவும் நோயைத் தோற்கடிக்க அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர். இதில் Coffs Harbour மருத்துவமனையில் கிடைக்காத சிகிச்சையை பெற 285 கிலோமீட்டர் வடக்கே உள்ள Tweed Heads இற்கான வாராந்திர பயணங்களும் அடங்கும்.
கோவிட்-19 தொற்றுநோயின் தொடக்கமானது, பல தசாப்தங்களாக நிதி வெட்டுக்களால் முடக்கப்பட்ட மருத்துவமனை அமைப்பில் பாதுகாப்பான மற்றும் பயனுள்ள சிகிச்சைக்கு எதிர்பாராத தடைகளை ஏற்படுத்தியது. இது குறிப்பாக NSW இன் மத்திய-வடக்கு கடற்கரையில் உள்ள பிராந்திய சுகாதார அமைப்பில் தெளிவாகத் தெரிந்தது. அவரது உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோதிலும், ரெஜினா வைரஸை அகற்றுவதற்கான விஞ்ஞான அடிப்படையிலான நடவடிக்கைக்காக போராடுவதற்கான சாத்தியத்தையும் அவசியத்தையும் கேட்கும் எவருக்கும் விளக்கமளிக்கும் ஒரு சந்தர்ப்பமாக தான் மருத்துவமனையில் தங்கியிருப்பதை பயன்படுத்திக்கொண்டார்.
அவரது நண்பர்கள், சகோதரி ஐரீன் மற்றும் அவரது தோழர்களின் ஆதரவு ரெஜினாவுக்கு மகத்தான பலத்தை அளித்தது. ஆனால் இந்த கடினமான காலகட்டத்தில் அவரைத் தாங்கியது சோசலிச சர்வதேசியத்தின் அரசியல் முன்னோக்கின் மீதான அவரது நம்பிக்கையும் ஆகும். மனிதகுலத்திற்கான சோசலிச எதிர்காலத்தின் வெற்றிக்கு பங்களிக்கும் வகையில் வாழ வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.
'சோசலிசப் புரட்சியின் தசாப்தம் தொடங்குகிறது' என்ற தலைப்பில் டேவிட் நோர்த் மற்றும் ஜோசப் கிஷோர் எழுதிய 2020 புத்தாண்டு அறிக்கையின் வெளியீடு, 'நான் அக்காலகட்டத்தில் இருக்க விரும்புகிறேன்' என்று அறிவிக்க ரெஜினாவைத் தூண்டியது.
துரதிர்ஷ்டவசமாக, புற்றுநோய் ரெஜினாவின் அந்த ஆசையைப் பறித்தது. சோசலிச சமத்துவக் கட்சியும் தொழிலாள வர்க்கமும் ட்ரொட்ஸ்கிசத்திற்கான விடாமுயற்சியும் அர்ப்பணிப்பும் கொண்ட ஒரு போராளியை இழந்துவிட்டன. ஆனால் அவரது நினைவும் அவரது மரபும் முதலாளித்துவ அமைப்புக்கு எதிரான அவரது தோழர்களினதும், தொழிலாளர்களினதும் போராட்டங்களில் வாழும்.