முன்னோக்கு

நேட்டோ பொதுச்செயலாளர் பதவிக்கு வாஷிங்டனால் பரிந்துரைக்கப்பட்ட கிறிஸ்டியா ஃப்ரீலாண்ட் யார்?

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

செப்டம்பர் 2023 இல் நோர்வேக்கான பதவிக்காலம் முடிவடையும் போது ஜென்ஸ் ஸ்டோல்டன்பேர்க்கிற்கு பின்னர் நேட்டோ பொதுச் செயலாளராக வருவதற்கு கனடாவின் துணைப் பிரதம மந்திரி கிறிஸ்டியா ஃபிரீலாண்டை வாஷிங்டன் அதன் 'பிரதம வேட்பாளராக' முன்கொண்டு வருவதாக நியூ யோர்க் டைம்ஸ் சமீபத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பு இராணுவக் கூட்டணிக்கு ஃபிரீலாண்டை தலைவராக்க அமெரிக்க ஏகாதிபத்தியம் முன்வருவது ஏனெனில், அவர் ரஷ்யாவிற்கு எதிரான மேற்கத்திய சக்திகளின் கொள்ளையடிக்கும் போருக்கு ஒரு முக்கிய பினாமியாக வெளிப்பட்டுள்ள உக்ரேனிய பாசிசத்துடன் விரிவான தனிப்பட்ட மற்றும் அரசியல் உறவுகளைக் கொண்ட ஒரு போர் வெறியர் ஆவார்.

அமெரிக்கா தலைமையிலான கூட்டணியின் அடுத்த தலைவரை தேர்ந்தெடுப்பது வாஷிங்டன் மற்றும் ஐரோப்பிய தலைநகரங்களில் ஒரு முக்கிய பிரச்சினையாக பார்க்கப்படுகிறது. அடுத்த பொதுச்செயலாளர் ஐரோப்பாவில் சுமார் 300,000 நேட்டோ 'உயர் தயார் நிலையிலுள்ள படைகளை' மேற்பார்வையிடுவார். எனவே ரஷ்யாவை ஒரு அரை-காலனி நிலைக்கு அடிபணியச் செய்து அதன் இயற்கை வளங்களைக் கைப்பற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ள ஏகாதிபத்திய சக்திகளின் போரை நடத்துவதில் முக்கிய பங்கு வகிப்பார்.

கடந்த மூன்று தசாப்தங்களாக ஒவ்வொரு அமெரிக்க ஆக்கிரமிப்புப் போருக்கும் பொய்யாகப் பிரச்சாரம் செய்த ஒரு செய்தித்தாளான டைம்ஸ் தனது வழக்கமான பாணியில் தன் நவம்பர் 4 அறிக்கையில் தீவிர வலதுசாரிகளுடனும், வெளிப்படையான பாசிச சக்திகளுடனுமான ஃபிரீலாண்டின் தனிப்பட்ட மற்றும் அரசியல் உறவுகளை வெட்கமின்றி மூடிமறைத்தது.

தேர்ந்தெடுக்கப்பட்ட ரஷ்ய-சார்பு ஜனாதிபதி விக்டர் யானுகோவிச்சை தூக்கியெறிந்த பாசிச தலைமையிலான ஆட்சிக்கவிழ்ப்பு 'கொண்டாட்டத்தில்' 2014 இல் ஃபிரீலாண்டின் பிரசன்னத்தைக் குறிப்பிட்ட பின்னர், டைம்ஸ் பின்வருமாறு குறிப்பிட்டது. 'அவரின் உக்ரேனிய தாத்தா, கனடாவிற்கு நன்றியுள்ள குடியேற்றக்காரர். சோவியத்துகளை எதிர்ப்பதற்கு நாஜிக்களை பயனுள்ள கூட்டாளிகளாகக் கண்ட உக்ரேனிய தேசியவாத இயக்கத்தில் அவர் ஒரு இளைஞராக இருந்தார்.

ஃபிரீலாண்டின் தாத்தா ஒரு இளைஞனாக வழிதவறியதாக இந்த தீங்கற்ற சித்தரிப்புக்கு மாறாக, மைக்கைலோ சோமியாக் ஒரு உயர்மட்ட நாஜி ஒத்துழைப்பாளராக இருந்தார் என்பதே உண்மை. 1940 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 1945 ஆம் ஆண்டின் ஆரம்ப மாதங்கள் வரை, நாஜி ஆக்கிரமிக்கப்பட்ட போலந்தில் வெளியிட அனுமதிக்கப்பட்ட ஒரே உக்ரேனிய மொழி செய்தித்தாளின் நிர்வாக ஆசிரியராக பணியாற்றினார்.

நாஜி மரண முகாமில் கொல்லப்பட்ட ஒரு யூதரிடமிருந்து திருடப்பட்ட அச்சகத்தில் தயாரிக்கப்பட்ட Krakivski Visti (கிராக்கிவ்ஸ்கிசெய்திகள்), யூத-விரோத மற்றும் போலந்து-எதிர்ப்பு இனவெறி அழுக்கினை தொடர்ச்சியாக வெளியிட்டது. அடோல்ஃப் ஹிட்லரை புதிய ஐரோப்பாவினது ஒரு தலைவராகவும் உக்ரேனினதும் கூட்டாளியாகவும் தொடர்ந்து பாராட்டி, மற்றும் கலீசியா பிரிவு என்று அழைக்கப்படும் Waffen SS இன் 14 வது பிரிவுக்கு ஆட்சேர்ப்புக்காக தீவிரமாக பிரச்சாரம் செய்தது. கலீசியா பிரிவு 1943 மற்றும் 1944 ஆம் ஆண்டுகளில் யூதர்கள் மற்றும் போலந்து மக்களின் கொடூரமான படுகொலைகளில் பங்கேற்றது.

சோமியாக் உக்ரேனிய தேசியவாதிகளின் அமைப்பில் (OUN) உறுப்பினராக இருந்தார். இது நாஜிகளுடன் நெருக்கமாக ஒத்துழைத்து, சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான அழிப்புப் போரில் சேர்ந்தது. மேலும் யூதப்படுகொலைகளில் போலந்து மக்களினதும் யூதர்களினதும் நூறாயிரக்கணக்கான இறப்புகளில் ஈடுபட்டிருந்தது. உக்ரேனிய தேசியவாதிகளின் அமைப்பு என்பது ஒரு வெளிப்படையான பாசிச அமைப்பாகும். இது இனரீதியாக தூய்மையான உக்ரேனிய அரசை உருவாக்குவதை இலக்காகக் கொண்டிருந்தது.

சோமியாக் இணைந்திருந்த பிரிவான OUN Melnyk (M), பொது அரசாங்கத்தின் (நாஜி ஆக்கிரமிக்கப்பட்ட போலந்து) நிர்வாக மற்றும் பாதுகாப்பு எந்திரத்தில் தன்னை ஒருங்கிணைத்து நேரடியாக நாஜி ஆக்கிரமிப்பாளர்களுக்கு சேவை செய்தது. ஸ்டீபன் பண்டேரா தலைமையிலான மற்ற பிரிவான OUN (B), இராணுவத்தில் தனது படைகளை இணைப்பதில் கவனம் செலுத்தியதுடன், நாஜிகளிடம் இருந்து மேலும் 'சுதந்திரமாக' செயல்படுவதாகக் கூறியது. இரு பிரிவுகளின் செயல்பாடுகளும், 'சுதந்திரமான' உக்ரேனிய அரசுக்கான அவர்களின் உந்துதலும் உண்மையில் முற்றிலும் நாஜி ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் ஆதரவில் தங்கியிருந்தன.

மூன்றாம் குடியரசின் வீழ்ச்சிக்குப் பின்னர், சோமியாக் கனடா மற்றும் அமெரிக்காவில் உள்ள ஆயிரக்கணக்கான நாஜி ஒத்துழைப்பாளர்களுடன் தஞ்சம் அடைந்தார். பாசிச OUN இன் முன்னாள் உறுப்பினர்கள் புதிதாக உருவாக்கப்பட்ட CIA இன் முதல் ஆட்சேர்ப்பு செய்தவர்களில் அடங்குவர். CIA எல்லாவற்றிற்கும் மேலாக பனிப்போருக்கு மத்தியில் ‘கம்யூனிச எதிர்ப்பு’ சக்திகளை ஆட்சேர்ப்பு செய்வதில் அக்கறை கொண்டிருந்தது.

ஹிட்லரின் கூட்டாளிகள் தங்கள் வரலாற்றை மூடிமறைப்ப்பதற்கும், புதிய கட்டுக்கதையை எழுதுவதற்கும் கனடா ஒரு முக்கிய பங்காளியாக உருவெடுத்தது. இக் கட்டுக்கதையின் படி உக்ரேனிய தேசியவாதம் ஒரே நேரத்தில் நாஜி ஜேர்மனி மற்றும் சோவியத் ஒன்றியத்துக்கு எதிராக 'விடுதலை'க்காக போராடியது. பல்லாயிரக்கணக்கான முன்னாள் SS உறுப்பினர்கள் மற்றும் பிற நாஜி ஒத்துழைப்பாளர்கள் கனடாவில் குடியேற அனுமதித்ததுடன், உக்ரேனிய கனேடிய காங்கிரஸினதும், எட்மண்டனில் உள்ள ஆல்பேர்ட்டா பல்கலைக்கழகத்தில் உக்ரேனிய ஆய்வுகள் நிறுவனத்தை உருவாக்கிதன் மூலமும் தீவிர வலதுசாரி உக்ரேனிய தேசியவாதத்தை நியாயப்படுத்துவதற்கான கருத்தியல் பிரச்சாரத்திற்கு ஒட்டாவா நிதியுதவி அளித்தது.

இரண்டாம் உலகப் போருக்கு முன்னர் சோசலிசம் மற்றும் இடதுசாரி அரசியலின் கோட்டையாக இருந்த உக்ரேனிய புலம்பெயர்ந்தோரை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுக்களுக்கு சொந்தமான சொத்து மற்றும் பிற சொத்துக்களை OUN உடன் தொடர்புடைய தீவிர வலதுசாரி சக்திகள் கட்டுப்படுத்த உதவுவதற்கு அரசு தலையிட்டது. (இந்த வரலாறு WSWS தொடரில் கனேடிய ஏகாதிபத்தியத்தின் பாசிச நண்பர்களில்விரிவாக முன்வைக்கப்பட்டுள்ளது).

ஃபிரீலாண்ட் இந்த சூழலில் இருந்து வெளிப்பட்டார். ஹிட்லருக்கும், நாஜிகளுக்கும் கிராக்கிவ்ஸ்கிசெய்திகள் இன் வெளியீட்டாளரான வோலோடிமிர் குபியோவிச் தலைமையிலான நாஜிகளுக்கான உக்ரேனிய தேசியவாதிகளின் தீவிர ஆதரவை மறைப்பதை நோக்கமாகக் கொண்ட திட்டமான “Encyclopedia of Ukraine,” என்று அழைக்கப்படும் திட்டத்தில் ஒரு மாணவராகப் பணிபுரிந்த பின்னர், அவர் பயிற்றுவிக்கப்பட்ட தீவிர வலதுசாரி உக்ரேனிய தேசியவாதத்தை தூண்டுவதற்கு 1980 களின் பிற்பகுதியில் சோவியத் உக்ரேனுக்கு சென்றார்.

கனேடிய அரசு பல நாடுகடந்து வாழ்ந்தவர்களும், அவர்களது வழித்தோன்றல்களுக்கும் அடுத்த ஆண்டுகளில் தீவிர வலதுசாரி தேசியவாத குழுக்களுடன் தொடர்பு கொண்டு அங்கு திரும்புவதற்கு வழிவகுத்தது. அவர்களில் பலர் சோவியத் ஒன்றியம் ஸ்ராலினிஸ்டுகளால் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து ஒரு சுதந்திர முதலாளித்துவ உக்ரேனை ஸ்தாபிப்பதில் முக்கிய நபர்களாக வெளிப்பட்டனர். ஃபிரீலாண்டின் தாயார் ஹலினா சோமியாக், உக்ரேனிய சட்ட அறக்கட்டளையை நிறுவ உக்ரேனுக்குத் திரும்பினார். இது நாட்டின் அரசியலமைப்பை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தது.

இந்த சக்திகளை உக்ரேனுக்கு மீண்டும் கொண்டு வந்ததில் மிக முக்கியமானது தீவிர வலதுசாரி தேசியவாதத்தின் நச்சாகும். 'எனது உக்ரேன், புட்டினின் பெரிய பொய்' என்ற தலைப்பில் 2015 ஆம் ஆண்டு கட்டுரையில் ஃபிரீலாண்ட் எழுதியபடி: 'உக்ரேனின் தேசிய உணர்வு பலவீனமாக இருந்தது.' கனேடிய அரசு, அரசியல் செல்வாக்கு பெற்ற உக்ரேனிய கனேடிய காங்கிரஸால் ஆதரிக்கப்பட்டது, ஸ்டீபன் பண்டேராவின் தனிநபர் வழிபாட்டை புதுப்பிக்க அடுத்த ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியது. இதன் விளைவாக பாசிச தலைவருக்கு டஜன் கணக்கான சிலைகளும், பிற நினைவுச்சின்னங்களும் எழுந்தன.

கனேடிய ஏகாதிபத்தியத்தின் தயாரிப்பு மற்றும் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்கத் தலைமையிலான போரை நடத்துவதில் ஃபிரீலாண்ட் ஏன் இவ்வளவு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளார் என்பதை விளக்குவதற்கு இந்த வரலாறு நீண்ட தூரம் செல்கிறது. 2014 இல் பாசிச தலைமையிலான மைதான் சதி கியேவில் மேற்கத்திய சார்பு ஆட்சியை ஆட்சிக்குக் கொண்டுவந்த பின்னர், ரஷ்யாவை கிரிமியாவை இணைக்கத் தூண்டியது, உக்ரேனின் ஆயுதப் படைகளை மறுசீரமைப்பதில் வாஷிங்டனும் ஒட்டாவாவும் முன்னணி வகித்தன.

மோசமான அசோவ் பட்டாலியன் போன்ற பாசிச ஆயுதக்குழுக்களை அதன் அணிகளில் ஒருங்கிணைப்பதை அவர்கள் மேற்பார்வையிட்டனர். உக்ரேனில் இராணுவப் பயிற்சிப் பணியில் ஈடுபட்டிருந்த கனேடிய துருப்புக்கள், பாசிச இராணுவ அதிகாரிகளின் உயரடுக்கு குழுவான அசோவ் மற்றும் செஞ்சுரியா உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கினர்.

கனடா ஒரே நேரத்தில் லாத்வியாவில் கூட்டணியின் முன்னணி படைப்பிரிவுகளில் ஒன்றை வழிநடத்துவதன் மூலம் ரஷ்யாவின் மேற்கு எல்லையில் நேட்டோவின் பாரிய இராணுவப் படைகளில் இணைந்தது. எஸ்தோனியா, லித்துவேனியா மற்றும் போலந்தில் இதேபோன்ற படைப்பிரிவுகளை நிலைநிறுத்துவது, ரஷ்யா மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் ஸ்ராலினிஸ்டுகளால் முதலாளித்துவத்தை மீட்டெடுத்த பின்னர் தொடங்கிய ரஷ்யாவை சுற்றி வளைக்கும் நோக்கில் ஆக்கிரமிப்பு இராணுவ கூட்டணியின் கிழக்கு நோக்கிய விரிவாக்கம் தொடர்ந்தது.

2019 கூட்டாட்சித் தேர்தலைத் தொடர்ந்து பிரதம மந்திரி ஜஸ்டின் ட்ரூடோவால் துணைப் பிரதமர் மற்றும் நிதியமைச்சர் பதவிக்கு உயர்த்தப்படுவதற்கு முன்பு, ஃபிரீலாண்ட் இந்த காலகட்டத்தின் பெரும்பகுதி முழுவதும் வெளியுறவு அமைச்சராக பணியாற்றினார். அமெரிக்காவும் அதன் நேட்டோ நட்பு நாடுகளும் புட்டினை உக்ரேன் மீதான அவரது பிற்போக்குத்தனமான படையெடுப்பில் பெப்ரவரியில் வழிநடத்துவதில் வெற்றி பெற்றபோது, SWIFT உலகளாவிய கொடுப்பனவு வலையமைப்பிலிருந்து ரஷ்யாவை அகற்றுவது உட்பட இரக்கமற்ற பொருளாதாரத் தடைகளுக்கான முன்னணிக் குரல்களில் ஒன்றாக ஃபிரீலாண்ட் வெளிப்பட்டார். அவர் உக்ரேனிய அரசாங்கத்திற்கும் அதன் ஏகாதிபத்திய எஜமானர்களுக்கும் இடையே ஒரு முக்கிய தொடர்பை உருவாக்குபவராக பணியாற்றியுள்ளார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் உக்ரேனின் பிரதம மந்திரியுடனும் நிதியமைச்சருடனும் தினசரி உரையாடல்களை நடத்துவதாக அவர் பெருமையடித்துக் கொண்டார்.

ஃபிரீலாண்ட் இப்போது நேட்டோவில் உயர்மட்ட பதவிக்கு முன்மொழியப்படுத்தப்பட்டுள்ள உண்மை, ரஷ்யாவிற்கு எதிராக அமெரிக்காவும் நேட்டோவும் நடத்திய ஏகாதிபத்தியப் போரின் கொள்ளையடிக்கும் தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. டைம்ஸ் போன்ற வெளியீடுகள் இடைவிடாது கூறுவது போல, மேற்கத்திய சக்திகள் உக்ரேனின் 'இறையாண்மை' மற்றும் 'ஜனநாயகம்' ஆகியவற்றை பாதுகாக்க தலையிடுவதற்குப் பதிலாக, ரஷ்யாவின் பாரிய இயற்கை வளங்களைக் கொள்ளையடிப்பது மற்றும் புவி மூலோபாய ரீதியாக முக்கியமான யூரேசிய நிலப்பரப்பின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றுவதைப் பற்றியதாகும்.

இந்த இலக்குகள், வெளிநாட்டில் இரக்கமற்ற இராணுவப் படையை நிலைநிறுத்துவதையும், உலகை அணுவாயுத வெடிப்பால் அச்சுறுத்துவதையும், ஏகாதிபத்தியப் போருக்கும் வெற்றிக்கும் சமூகத்தின் வளங்களை அடிபணிய வைப்பதற்கு எதிரான மக்களின் எதிர்ப்பை நசுக்க உள்நாட்டில் அரச அடக்குமுறையின் கொடூரமான வழிமுறைகளைக் கோருகிறது. இதனால்தான் ஏகாதிபத்தியங்கள் பாசிச சக்திகளுடன் நெருங்கிய உறவுகளை வளர்த்துக்கொள்கின்றன.

ஃபிரீலாண்டிற்கும் டைம்ஸிற்கும் மற்றும் ஏகாதிபத்திய போருக்கான ஆதரவின் முக்கிய ஆதரவுப் பிரிவினரான அதன் உயர்-நடுத்தர வர்க்க வாசகர்களின் அரசியல் ஐக்கியமானது, உக்ரேனிய பாசிசத்துடனான தனது நெருங்கிய உறவுகளை அடையாள அரசியலின் தேவையான அளவுடன் ஒன்றுபடுத்துவதாகும்.

இந்த சமூக அடுக்குகளுக்கு, ஃபிரீலாண்ட் ஒரு போர்வெறியராகவும், முக்கியமான நாஜி ஒத்துழைப்பாளரைத் தனது தலைவர்களில் ஒருவராக விவரிக்கும் தீவிர வலதுசாரி உக்ரேனிய தேசியவாதி என்பதை விட, 'நேட்டோவின் முதல் பெண் பொதுச்செயலாளர்' ஆக முடியும் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.

2017 ஆம் ஆண்டில் நாஜி ஒத்துழைப்பாளராக தனது தாத்தாவின் கடந்த காலத்தை எதிர்கொண்ட ஃப்ரீலாண்ட் அதை 'ரஷ்ய தவறான தகவல்' என்று நிராகரித்தார். உக்ரேனிய கலாச்சாரம் மற்றும் தேசியம் பற்றி அவருக்கு கற்பித்ததற்காக சோமியாக்கிற்கு அவர் மீண்டும் மீண்டும் அஞ்சலி செலுத்தினார்.

இவர் கனடாவின் வெளியுறவு அமைச்சராக இருந்த காலத்தில், 'பெண்ணிய வெளியுறவுக் கொள்கையை' பின்பற்றுகிறது என்று ஃப்ரீலாண்ட் அறிவித்தார். இதன்போதே ஒட்டாவா லாத்வியாவிற்கு துருப்புக்களை அனுப்பி, உக்ரேனில் நவ-நாஜிகளுக்கு பயிற்சி அளித்து, மற்றும் தென் சீனக் கடலில் 'போக்குவரத்து சுதந்திரத்திற்கான' பயிற்சிகளில் ஒட்டாவா பங்கேற்றது. 2017 ஆம் ஆண்டில், ஃபிரீலாண்ட் ஒரு தசாப்தத்திற்குள் 70 சதவீதத்திற்கும் மேலாக இராணுவ செலவின உயர்வை அறிவித்து, மேலும் கனடாவின் புதிய பாதுகாப்பு மூலோபாயம் குறித்து ஒரு முக்கிய உரையை வழங்கினார். இது ரஷ்யா மற்றும் சீனா ஆகிய இரண்டையும் தேசிய பாதுகாப்புக்கு 'அச்சுறுத்தல்கள்' என்று மேற்கோள் காட்டியது.

ஃபிரீலாண்ட் தொழிற்சங்க அதிகாரத்துவத்துடனும் நெருங்கிய உறவுகளை கொண்டுள்ளார். இதனை கனடாவின் லிபரல் அரசாங்கம் போருக்குச் செலுத்தும் சிக்கன நடவடிக்கைகளை அமுல்ப்படுத்துவதற்கும், வர்க்கப் போராட்டத்தை நசுக்குவதற்குமான முக்கிய பங்காளியாகக் கருதுகிறது. போர் வெடித்ததில் இருந்து, ஃபிரீலாண்ட் ஜூன் மாதம் 2022 Teamsters மாநாடு உட்பட பல தொழிற்சங்க மாநாடுகளில் உரையாற்ற அழைக்கப்பட்டார்.

நேட்டோவின் உயர் பதவிக்கு ஃபிரீலாண்டின் நியமனத்திற்கு எந்த வகையிலும் உத்தரவாதம் அளிக்கப்படவில்லை. 1949 இல் உருவாக்கப்பட்டதிலிருந்து, இந்த கூட்டணி பாரம்பரியமாக ஒரு ஐரோப்பியரால் தலைமை தாங்கப்படுகிறது. அதே நேரத்தில் ஒரு அமெரிக்க ஜெனரல் பொதுவாக ஐரோப்பாவில் உச்ச நேச நாட்டுத் தளபதி பதவியை வகிக்கிறார்.

நேட்டோவின் இரண்டு உயர்மட்ட பதவிகளை ஒரு கனேடியரும் ஒரு அமெரிக்கரும் நிரப்பும் வாய்ப்பு சந்தேகத்திற்கு இடமின்றி குறிப்பாக ஜேர்மனி தனது உலகளாவிய பெரும் வல்லரசு அபிலாஷைகளுக்கு புத்துயிர் அளிக்க இந்தப் போரை பற்றியிருக்கும் சூழ்நிலையில் ஐரோப்பிய ஏகாதிபத்தியவாதிகள் மத்தியில் புருவங்களை உயர்த்த வைக்கும். இந்த புவிசார் அரசியல் பதட்டங்கள் ஒருபுறம் இருக்க, வாஷிங்டன், ஒட்டாவா, பேர்லின் மற்றும் பிரஸ்ஸல்ஸில் உள்ள போர் வெறியர்களால், அவர்களின் கொலைக்கும் அழிவுக்குமான இராணுவக் கூட்டணிக்கு தலைமை தாங்குவதற்கு கிறிஸ்டியா ஃப்ரீலாண்டை விட அரசியல்ரீதியாக பொருத்தமான ஒரு நபரைக் கண்டுபிடிக்க முடியாது.