மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
திங்களன்று, நேட்டோ இராணுவக் கூட்டமைப்பு Steadfast Noon என்று அழைக்கப்படும் ஒரு பயிற்சியை நடத்தவுள்ளது. இது அமெரிக்க B-52 குண்டுவீச்சு விமானங்களும் F-16 போர் விமானங்களும் ரஷ்யாவுடனான ஒரு தீவிரமடைந்துவரும் அணுவாயுத மோதலுக்கு மத்தியில் ஐரோப்பாவில் அணுகுண்டுகளை வீசுவதற்கான ஒத்திகையாக இருக்கும்.
1962 ஆம் ஆண்டின் கியூப ஏவுகணை நெருக்கடிக்குப் பின்னர் மிகப்பெரிய அணு ஆயுதப் போரின் ஆபத்து பற்றி அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் அணுசக்தி 'பேரழிவு' பற்றி எச்சரித்த பத்து நாட்களுக்குப் பின்னர் இந்தப் பயிற்சி இடம்பெறுகின்றது.
'இந்த பயிற்சியானது அமெரிக்கா இரட்டை திறன் கொண்ட விமானங்கள் மற்றும் B61 தந்திரோபாய அணுகுண்டுகளுடன் நேட்டோவின் அணுசக்தி தாக்குதல் நடவடிக்கையில் ஐரோப்பாவில் ஈடுபடுகின்றது' என்று அமெரிக்க விஞ்ஞானிகளின் கூட்டமைப்பைச் சேர்ந்த ஹான்ஸ் கிறிஸ்டென்சன் எழுதினார்.
விமானம் B61 'தந்திரோபாய' அணுவாயுதவெப்பக் குண்டுகளை வீசுவதை ஒத்திகை செய்யும். இவை ஒவ்வொன்றும் 126,000 பொதுமக்களைக் கொன்ற இரண்டாம் உலகப் போரில் ஹிரோஷிமாவை அழித்த ஆயுதத்தை விட 20 மடங்கு அதிக சக்தி வாய்ந்தது.
அணு ஆயுதப் பயிற்சிகள் வழக்கமாக வழக்கமானவை, அச்சுறுத்தல் இல்லாதவை மேலும் எந்த குறிப்பிட்ட நாட்டையும் குறிவைக்காதவை என முன்வைக்கப்பட்டாலும், இந்த ஆண்டு நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பேர்க், இந்தப் பயிற்சி ரஷ்யாவிற்கு அச்சுறுத்தும் நோக்கத்தை கொண்டது என்பதை தெளிவுபடுத்தினார்.
ரஷ்யாவைப் பற்றி ஐந்து முறை குறிப்பிட்டு பேசிய ஒரு உரையில், ஸ்டோல்டன்பேர்க், 'அடுத்த வாரம், நேட்டோ அதன் நீண்ட திட்டமிடப்பட்ட தடுப்புப் பயிற்சியான Steadfast Noon நடத்தும்.' ஒரு அணு ஆயுதப் போரை வெல்ல முடியாது, ஒருபோதும் அதற்காக முனையக்கூடாது என்பது ரஷ்யாவுக்குத் தெரியும் என்றும்” அவர் கூறினார்.
2019 ஆம் ஆண்டு நிலவரப்படி, பெல்ஜியம், ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து மற்றும் துருக்கி உட்பட நேட்டோ அணு ஆயுதக் களஞ்சியத்தின் ஒரு பகுதியாக ஐரோப்பா முழுவதும் அமெரிக்கா 150 'தந்திரோபாய' அணு ஆயுதங்களை வைத்திருந்தது.
ஞாயிற்றுக்கிழமை, இத்திட்டமிடப்பட்ட அணு ஆயுதப் பயிற்சிக்கு ஒரு நாள் முன்னதாக, சீனா உக்ரேனில் வசிக்கும் தனது குடிமக்களிடம் 'கடுமையான பாதுகாப்பு நிலைமையை' மேற்கோள் காட்டி நாட்டைவிட்டு வெளியேச் சொன்னது.
ஜூன் மாதம், நேட்டோ கூட்டணி, 'அணு ஆயுதம் ஏந்திய சக-போட்டியாளர்களுக்கு எதிரான உயர்-தீவிர, பல-துறைகளிலான போர்களுக்கு' தேவையான 'முழு அளவிலான படைகளை வழங்க' உறுதிமொழி அளித்து ஒரு ஆவணத்தை வெளியிட்டது.
Steadfast Noon பயிற்சியை அறிவிக்கையில், பயிற்சி விமானங்களில் 14 நாடுகள் மற்றும் நான்காம் மற்றும் ஐந்தாம் தலைமுறை போர் விமானங்கள், அத்துடன் கண்காணிப்பு மற்றும் டேங்கர் விமானங்கள் உட்பட பல்வேறு வகையான 60 விமானங்கள் அடங்கும். 'US B-52 நீண்ட தூர குண்டுவீச்சு விமானங்கள்' பயிற்சியில் பங்கேற்பதற்காக 'வடக்கு டகோட்டாவில் உள்ள மினோட் விமானத்தளத்திலிருந்து' பறக்கும் என நேட்டோ மேலும் கூறியது.
இந்த விமானப் பயிற்சி “பெல்ஜியத்தின் மீதும், வட கடல் மற்றும் ஐக்கிய இராச்சியம் மீதும்' நடைபெறும்.
நேட்டோ மேலும், 'உண்மையான ஆயுதங்கள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை'. இது ஒரு நின்மதி, ஏனெனில் பயிற்சியில் ஈடுபட்டுள்ள ஆயுதங்கள் பல நூறு சதுர மைல்களுக்கு கதிர்வீச்சை பரப்புவதுடன் மற்றும் பல நாடுகளில் சிதறடிக்கப்படும் எனக்கூறியது.
அக்டோபர் 7 அன்று, ஜனாதிபதி ஜோ பைடென், உலகம் அணுஆயுத 'பேரழிவின்' ஆபத்தில் இருப்பதாகக் கூறியது, உக்ரேனில் போர் வேகமாக அதிகரிப்பதானது அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே அணுசக்தி போருக்கு வழிவகுக்கும் என்பதைக் குறிக்கிறது.
'கென்னடி மற்றும் கியூப ஏவுகணை நெருக்கடிக்குப் பின்னர் நாங்கள் இவ்வாறான பேரழிவின் சாத்தியத்தை எதிர்கொள்ளவில்லை' என்று பைடென் கூறினார்.
'ஒரு பேரழிவுடன் முடிவடையாமல் அவ்வாறான ஒரு தந்திரோபாய அணு ஆயுதத்தை எளிதில் பயன்படுத்த முடியும்' என்று தான் நினைக்கவில்லை என்று பைடென் மேலும் கூறினார்.
பெப்ரவரியில், உக்ரேனுக்கு தாக்குதல் ஆயுதங்களை அனுப்புவது 'மூன்றாம் உலகப் போரை' தூண்டிவிடும் என்று அவர் எச்சரித்திருந்தார். அப்போதிருந்து, அமெரிக்கா நூற்றுக்கணக்கான கவச வாகனங்கள், மேம்பட்ட நீண்ட தூர ஏவுகணை அமைப்புகள் மற்றும் பிற உயர்தர ஆயுதங்களை உக்ரேனுக்கு அனுப்பியுள்ளது.
Politico இதழில் கடந்த வாரம் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில், முன்னாள் CIA இயக்குநர் லியோன் பனெட்டா பின்வருமாறு எழுதினார், உக்ரேனில் நடக்கும் போர் அணு ஆயுதப் போராக மாறுவதற்கான வாய்ப்புகள் நான்கில் ஒன்று என்ற விகிதத்தில் இருக்கின்றது என அமெரிக்க உளவுத்துறை நம்புகிறது.
'சில உளவுத்துறை ஆய்வாளர்கள் இப்போது உக்ரேனில் தந்திரோபாய அணு ஆயுதங்களை பயன்படுத்துவதற்கான நிகழ்தகவு போரின் தொடக்கத்தில் இருந்த 1-5 சதவீதத்திலிருந்து இன்று 20-25 சதவீதமாக உயர்ந்துள்ளதாக நம்புவதாக' என்று பனெட்டா எழுதினார்.
உக்ரேனில் போர் அணுசக்தி மோதலாக அதிகரித்தால், 'பீதியை' தடுக்க அரசாங்கங்கள் திட்டங்களை வகுத்து வருவதாக வெள்ளியன்று, கார்டியன்அறிவித்தது. 'ரஷ்யா உக்ரேனில் அணுகுண்டைப் பயன்படுத்தினால் பீதியைத் தவிர்க்க மேற்கு நாடுகள் திட்டமிடுகின்றன' என்பது அதன் அறிக்கையின் தலைப்பாக இருந்தது. இது ஒரு பெயரிடப்படாத அதிகாரியை மேற்கோள் காட்டி, அரசாங்கங்கள் 'ஒரு தொடர் சாத்தியமான நிலைமைகளுக்கான விவேகமான திட்டமிடலை' மேற்கொள்கின்றன என்று கூறியது.
நேட்டோ அணு ஆயுதப் பயிற்சி ரஷ்யா அதன் 'grom' அணுசக்தி பயிற்சியை மேற்கொள்ளும் அதே நேரத்தில் நிகழ உள்ளது. நேட்டோ தனது அணு குண்டுவீச்சு பயிற்சிகளை உரக்க அறிவித்து வரும் நிலையில், ரஷ்யாவிடம் இருந்து அதுபோன்ற அறிவிப்பு எதுவும் வரவில்லை.
எவ்வாறாயினும், இது நேட்டோ அதிகாரிகள் இதுவரை அறிவிக்கப்படாத ரஷ்யப் பயிற்சியை ஒரு ஆத்திரமூட்டும் விரிவாக்கம் என்று குரல் எழுப்புவதைத் தடுக்கவில்லை.
பெயரிடப்படாத அமெரிக்க அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸிடம், 'அமெரிக்காவையும் அதன் நட்பு நாடுகளையும் அணு ஆயுதங்களை பயன்படுத்த வற்புறுத்துவது பொறுப்பற்ற செயல்' என்று கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், “அணு ஆயுத முரசறைதல் கவனமற்றதும், பொறுப்பற்றதும் என்று நாங்கள் நினைக்கிறோம். அந்த விளையாட்டை விளையாட ரஷ்யா தேர்வு செய்யலாம் - ஆனால் நாங்கள் மாட்டோம். அணு குண்டுகளை வீசுவதை பயிற்சி செய்வதற்காக ஐரோப்பாவிற்கு குண்டுவீச்சு விமானங்களை அனுப்புவதற்காக வாஷிங்டன் திட்டமிடுவதற்கு சில நாட்களுக்கு முன்பு அமெரிக்க அதிகாரி இவ்வாறு கூறினார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் ஜோசப் பொரெல், கடந்த வாரம் உக்ரேனில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தினால் ரஷ்ய இராணுவத்தை 'அழித்துவிடுவோம்' என்று அச்சுறுத்தினார். 'உக்ரேனுக்கு எதிரான எந்த அணுவாயுதத் தாக்குதலும் ஒரு பதிலை உருவாக்கும். அணுவாயுத பதிலல்லாது, ரஷ்ய இராணுவம் அழிக்கப்படும் அத்தகைய சக்திவாய்ந்த பதிலை உருவாக்கும்”.
அக்டோபர் 7 அன்று, அணுசக்தி பேரழிவு பற்றி பைடெனின் கருத்து தெரிவித்த அதே நாளில், உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி, ஒரு ஆஸ்திரேலிய சிந்தனைக் குழுவின் கூட்டத்தில், 'ரஷ்யா அணுவாயுதங்களைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை' தடுக்க ரஷ்யா மீது முன்கூட்டிய தாக்குதல்களை நடத்த நேட்டோவுக்கு அழைப்பு விடுத்தார்.
'நேட்டோ என்ன செய்ய வேண்டும்? ரஷ்யா அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பை இல்லாதொழிக்கவேண்டும்” என செலென்ஸ்கி கூறினார். 'எங்களுக்கு முன்கூட்டிய தாக்குதல்கள் தேவை. எனவே அவர்கள் அணுகுண்டுகளைப் பயன்படுத்தினால் என்ன நடக்கும் என்பதை அது அவர்களுக்கு காட்டும். வேறு வழியில் அல்ல.'
இந்த அதிசூடான சூழ்நிலையில், அமெரிக்கா தலைமையிலான அணுசக்தி பயிற்சியானது ஒரு பெரிய தவறான கணக்கீட்டிற்கான சாத்தியத்தை எழுப்புகிறது. பனிப்போரின் போது வருடாந்த நேட்டோ Able Archer பயிற்சியானது 1983 இல் ஒரு முழு அளவிலான அணு ஆயுதப் போருக்கு கிட்டத்தட்ட வழிவகுத்தது. சோவியத் ஒன்றியத்தின் தலைமை அமெரிக்கா உண்மையில் அணுவாயுதத்தை ஏவப் போகிறது என்று உறுதியாக நம்பியது என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும்.
'ஒவ்வொரு விமானத்தின் ஒரு படைப்பிரிவிலும் அணுகுண்டுகளை ஏற்றும்படி சோவியத் குண்டுவீச்சுக் குழுக்கள் கட்டளையிடப்பட்டன. மேலும் விமானங்கள் 'தயார்நிலை 3' இல் வைக்கப்பட்டன. அதாவது 30 நிமிட எச்சரிக்கையுடன் 'தாக்குதலுக்கு தயாராக இருந்தது”, என்று வாஷிங்டன் போஸ்ட் குறிப்பிட்டது.
பெப்ரவரி 2021 இல், அமெரிக்க வெளியுறவுத் துறையின் வரலாற்றாசிரியர் அலுவலகம், S. லெப்டினன்ட் ஜெனரல் லியோனார்ட் ஹெச். பெரூட்ஸ் எழுதிய கடிதத்தை வெளிப்படுத்தியது. இது சோவியத் படைகள் அமெரிக்கக் குவிப்புக்கு பதில் அணு ஆயுதங்களை தங்கள் குண்டுவீச்சுகளில் ஏற்றி, அமெரிக்கா அதை செய்திருந்தால் இது ஒரு அணு ஆயுதப் போரைத் தூண்டியிருக்கலாம் என்பதை தெளிவாக்கியது.
பகிரங்கமாக வெளியிடப்பட்ட பின்னர், பெரூட்ஸ் இன் குறிப்பு வெளியுறவுத்துறையால் அகற்றப்பட்டு மற்றும் ஒரு நீதிபதி அதை இரகசியமான் பத்திரமாக மறுவரையறுக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.
மேலும் படிக்க
- ரஷ்யா மீது "முன்கூட்டிய தாக்குதல்களுக்கு" செலென்ஸ்கி அழைப்பு விடுக்கையில், அணுசக்தி "பேரழிவு" பற்றி பைடென் எச்சரிக்கிறார்
- அமெரிக்கா கதிர்வீச்சு எதிர்ப்பு மருந்துகளை வாங்குகையில் போலந்து அமெரிக்க அணு ஆயுதங்களுக்கு இடம் வழங்க திட்டமிட்டுள்ளது
- அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான அமெரிக்க அச்சுறுத்தல்களின் வரலாறு