எரிவாயு மற்றும் மின்சார விலைகள் அதிகரிப்பால் ஜேர்மன் தொழிலாளர்கள் போருக்கான செலவை செலுத்துகின்றனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

விலைவாசி உயர்வின் சுனாமி, உழைக்கும் வர்க்க குடும்பங்களை நோக்கிப் பாய்வதுடன், பலருக்கு அழிவை ஏற்படுத்துகிறது. பல குடும்பங்கள் தங்கள் வீடுகளை சூடேற்ற பயன்படுத்தும் இயற்கை எரிவாயுவின் விலைக்குப் பின்னர், இப்போது மின்சாரத்தின் விலையும் கட்டுக்கடங்காது செல்கிறது. இந்த வார இறுதியில், பெட்ரோலுக்கும் டீசலுக்கும் மூன்று மாதங்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட தள்ளுபடி காலாவதியாவதுடன், சராசரி உற்பத்தி விலைகள் ஒரு வருடத்தில் 37 சதவீதம் உயர்ந்துள்ளன. இது தவிர்க்க முடியாமல் நுகர்வோருக்கான விலையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

பெட்ரோல் விலை விரைவில் மீண்டும் ஒரு லிட்டருக்கு இரண்டு யூரோக்களுக்கு மேல் உயரும்

இந்த ஆண்டின் இறுதியில் உத்தியோகபூர்வ பணவீக்க விகிதம் 10 சதவீதமாக இருக்கும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். இது தொழிற்சங்கங்கள் ஒப்புக்கொண்ட ஊதிய அதிகரிப்பை விட பல மடங்கு அதிகமாகும். இந்த வழியில், சமூக ஜனநாயகவாதிகள் (SPD), தாராளவாத ஜனநாயகவாதிகள் (FDP) மற்றும் பசுமைக் கட்சியின் 'போக்குவரத்து விளக்கு' கூட்டணி, உக்ரேன் போரின் செலவுகளை சுமக்க உழைக்கும் மக்களை கட்டாயப்படுத்துகிறது. இதனை ரஷ்யா மீது முழுமையான 'வெற்றி' வரை (உக்ரேனிய ஜனாதிபதி செலென்ஸ்கியின் வார்த்தைகளில்) தொடர கூட்டணி விரும்புகின்றது.

இதற்கிடையில், எரிசக்தி நிறுவனங்கள் பெருத்த இலாபம் ஈட்டும் வெறியை கொண்டாடுகின்றன. எரிசக்தி பரிவர்த்தனைகளில் முன்னர் கற்பனை செய்ய முடியாத அதிக விலைகள் பில்லியன்களில் ஊக இலாபங்களைக் கொண்டு வருகின்றன. லைப்ஸிக் இல் உள்ள ஐரோப்பிய எரிசக்தி பரிமாற்றத்தில் (European Energy Exchange - EEX) ஒரு மெகாவாட் மணிநேர மின்சாரத்திற்கான விலை கடந்த வாரம் 550 யூரோக்ளுக்கு மேல் உயர்ந்தது. இது ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட 2,000 சதவீதம் அதிகம். அந்த நேரத்தில், ஒரு மெகாவாட் மணிநேரத்திற்கு (MWh) 20 யூரோக்கள் முதல் 80 யூரோக்கள் வரை விலை ஏற்ற இறக்கம் இருந்தது. பிரான்சில், ஒரு மெகாவாட் மணிநேரத்திற்கு 1,000 யூரோக்கள் கூட எதிர்கால விலைகள் பற்றி ஒப்பந்தம் செய்யும் சந்தையில் (futures market) வழங்கப்பட்டது.

ரஷ்யா மீது விதிக்கப்பட்ட தடைகள் மற்றும் நோர்ட் ஸ்ட்ரீம் 2 எரிவாயுக்குழாய்கள் செயல்படாததால், இயற்கை எரிவாயுவின் மீதும் அதிக ஊக இலாபங்கள் பெறப்படுகின்றன. திங்களன்று ஒரு மெகாவாட்டிற்கு 292.50 யூரோக்கள் என்ற சாதனையை ஐரோப்பிய எதிர்கால விற்பனை எட்டியது. ஐரோப்பிய ஒன்றியத்தில் சராசரி எரிவாயு விலைகள் ஒரே மாதத்தில் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது மற்றும் கடந்த 10 ஆண்டுகளின் சராசரி மதிப்பை விட 14 மடங்கு அதிகமாகும்.

எரிசக்தி நிறுவனங்களின் இலாபமடையும் களியாட்டம் போக்குவரத்து விளக்கு கூட்டணியின் ஆசீர்வாதத்துடன் நடைபெறுகிறது. இது ஒரு எரிவாயு கூடுதல் கட்டணத்தை அறிமுகப்படுத்தியது, இது தற்போதுள்ள அதிக பங்குச் சந்தை விலைகளுக்கும் ரஷ்ய எரிவாயுவிற்கான முந்தைய குறைந்த இறக்குமதி விலைகளுக்கும் இடையிலான விலை வேறுபாட்டினை இடைத்தரகர்களுக்கு ஈடுசெய்கிறது. இதனால் இக்கட்டணமானது பெரிய எரிசக்தி நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக பாய்கிறது. இது அனைத்து எரிவாயு வாடிக்கையாளர்களுக்கும் ஒரு வகையான போர் வரியாக விதிக்கப்படுகிறது. ஆண்டுக்கு 15,000 கிலோவாட் மணிநேரம் நுகர்வினை கொண்ட ஒரு குடும்ப வீட்டுக்கு சுமார் 400 யூரோக்கள் கூடுதல் சுமையாக இருக்கும். இதனுடன் அதிகரித்து வரும் எரிவாயு விலையும், குறிப்பாக புதிய வாடிக்கையாளர்களுக்கு பயங்கரமானதாக உள்ளது.

இதுவரை, 12 நிறுவனங்கள் எரிவாயு வரி விதிப்பிலிருந்து இழப்பீட்டுக்கான உரிமைகோரல்களை தாக்கல் செய்துள்ளன. இது மொத்தம் 34 பில்லியன் யூரோக்கள் ஆகும். பணவீக்கத்தின் சுமையை குறைக்க உதவுவதற்காக இந்த ஆண்டு ஜேர்மன் அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இரண்டு 'நிவாரணப் பொதிகளின்' தொகையை விட இது அதிகம்.

அவற்றில் இடைத்தரகர்களாகவும் எரிசக்தி வழங்குனர்களாகவும் செயல்படும் குழுக்கள் அதிக இலாபத்தை அறிவிக்கின்றன. எடுத்துக்காட்டாக, OMV 2022 இன் முதல் பாதியில் €5.6 பில்லியன் மற்றும் Gunvor 2 பில்லியன் யூரோக்கள் இலாபம் ஈட்டியுள்ளது. இவை இரண்டும் புதிய எரிவாயு வரி கட்டணத்தில் இருந்து பணத்திற்கு விண்ணப்பித்துள்ளனர். இன்றுவரை ரஷ்ய எரிவாயுவின் மிகப்பெரிய இறக்குமதியாளராக, 2016 இல் E.ON என்ற எரிசக்தி குழுவிலிருந்து பிரிக்கப்பட்ட எரிவாயு வரியில் மூன்றில் இரண்டு பங்கைக் கொண்ட Uniper நிறுவனம் கடந்த ஆண்டு 5.3 பில்லியன் யூரோக்கள் இலாபம் ஈட்டியுள்ளது.

ஜேர்மன் அரசாங்கம் எரிசக்தி நிறுவனங்களின் பெருத்த இலாபமடைதலை வெளிப்படையாக ஆதரிக்கிறது. இலாபகரமான நிறுவனங்களும் எரிவாயு வரியை ஏன் வசூலிக்கின்றன என்று கேட்டதற்கு, பொருளாதார அமைச்சர் ரோபர்ட் ஹாபெக்கின் செய்தித் தொடர்பாளர் சூசான அன்கிராட் செவ்வாயன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் 'ஒரு நிறுவனம் இலாபம் ஈட்ட வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு' எனப்பதிலளித்தார்.

மிகையாக கிடைக்கும் இலாபத்தில் குறைந்தபட்சம் ஒரு பகுதியையாவது மேலதிக இலாபவரி மூலம் திரும்ப பெறுவதை, போக்குவரத்து விளக்கு கூட்டணி கண்டிப்பாக நிராகரிக்கிறது. எரிவாயுவிற்கான கூடுதல் கட்டணம் இதற்கு மாறாக செயற்படுகின்றது. இது தொழிலாள வர்க்க குடும்பங்களின் எரிவாயு கட்டணத்தில் இருந்து எடுக்கும் பணத்தில் பெருநிறுவனங்களுக்கு பில்லியன் கணக்கான இலாபங்களாக நிதியளிக்கிறது.

எரிசக்தி விலைகளில் ஏற்படும் வெடிப்பு, ஒவ்வொரு தனிப்பட்ட குடும்பங்களுக்கும் என்ன அர்த்தம் என்பதை மட்டுமே தற்போது மதிப்பிட முடியும்.

பின்னர் அறிவிக்கப்பட்ட, மதிப்பு கூட்டப்பட்ட (விற்பனை) வரி (VAT) குறைக்கப்பட்ட போதிலும், எரிவாயுவை சூடாக்கி சமைக்கும் குடும்பங்கள், ஒரு கிலோவாட் மணிநேரத்திற்கு 2.4 சென்ட் என்ற எரிவாயு கூடுதல் கட்டணத்தின் காரணமாக மூன்று இலக்க விலை உயர்வை எதிர்கொள்ளும். அக்டோபர் முதல், மேலும் இரண்டு வரிகளும் நடைமுறைக்கு வரும்: சமநிலைப்படுத்தும் எரிசக்தி செலவுகள் என்று அழைக்கப்படுவதற்கு ஒரு கிலோவாட் மணி நேரத்திற்கு 0.57 சென்ட்கள் மற்றும் குளிர்காலத்திற்கு முன் எரிவாயு சேமிப்பு வசதிகளை நிரப்ப 0.06 சென்ட்கள், அதாவது சராசரி வீட்டுக்கு 100 யூரோக்களுக்கும் அதிகமான கூடுதல் ஆண்டு சுமையாகின்றது.

எவ்வாறாயினும், செலவினங்களில் மிகப்பெரிய அதிகரிப்பு எரிவாயுவின் விலையேற்றத்தில் இருந்து வருகிறது. இது எந்த வகையிலும் உச்சத்தை எட்டவில்லை என நிபுணர்கள் கூறுகின்றனர். மத்திய புள்ளிவிபர அலுவலகத்தின்படி, ஜூலை மாதத்தில் மின் உற்பத்தி நிலையங்கள் இயற்கை எரிவாயுவிற்கு 235 சதவீதம் அதிகமாகவும், தொழில்துறை நுகர்வோர் 195 சதவீதமும், மறுவிற்பனையாளர்கள் 187 சதவீதமும் முந்தைய ஆண்டை விட அதிகமாக செலுத்தியுள்ளனர். இந்த அதிகரிப்புகள் முழுவதுமாக தனியார் குடும்பங்கள் மீது எப்போது சுமத்தப்படும் என்பதே இப்போதுள்ள கேள்வியாகும். புதிய வாடிக்கையாளர்களுக்கு, இது ஏற்கனவே ஓரளவு நடைமுறைப்படுத்தப் பட்டுவிட்டது.

மின்சாரத்தின் விலை உயர்வும் வியத்தகு அளவில் உள்ளது. நுகர்வோர் ஒப்பீட்டு இணைய தளமான Verivox, வரும் ஆண்டில் சராசரி விலை ஒரு கிலோவாட் மணி நேரத்திற்கு 45 சென்ட்டுகளுக்கு மேல் இருக்கும் என்று கருதுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் சராசரி விலை 30 முதல் 32 சென்ட் வரை இருந்ததை விட இது சுமார் 50 சதவீதம் அதிகமாக இருக்கும்.

சில எரிசக்தி வினியோகத்தர்கள் ஏற்கனவே தங்கள் விலைகளை உயர்த்தியுள்ளனர். எடுத்துக்காட்டாக, EnBW இன் வாடிக்கையாளர்கள் அக்டோபர் முதல் அடிப்படைக் கட்டணத்தின் கீழ் வீட்டு மின்சாரத்திற்கு 31.1 சதவிகிதம் அதிகமாகச் செலுத்த வேண்டும். Verivox ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் அடிப்படை வினியோகத்தர்களிடமிருந்து 123 விலை உயர்வுகளைப் பதிவுசெய்துள்ளது, சராசரியாக 25 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 4,000 கிலோவாட் மணிநேர நுகர்வு கொண்ட மூன்று நபர் குடும்பத்திற்கு சராசரியாக 311 யூரோக்கள் கூடுதல் வருடாந்திர செலவு ஆகும். மற்றொரு ஒப்பீட்டு வலைத் தளமான Check24 இன்படி, 47.4 சதவிகிதம் விலை அதிகரிப்பை தெரிவிக்கிறது.

இங்கேயும் உச்சகட்டம் இன்னும் அடையப்படவில்லை. ஜேர்மனியின் மின்சாரத்தில் சுமார் 13 சதவீதத்தை உற்பத்தி செய்யப் பயன்படும் இயற்கை எரிவாயுவின் அதிக விலைக்கு கூடுதலாக, பிற காரணிகளும் மின்சார விலை உயர்வுக்கு பங்களிக்கின்றன. கடுமையான வறட்சி, நீர் மின் நிலையங்கள் மற்றும் குளிரூட்டும் அமைப்புகளின் தோல்விக்கு வழிவகுத்தது. நீர்மட்டம் குறைவாக இருப்பதால், நிலக்கரி மற்றும் மின் உற்பத்தி நிலையங்களுக்கான எண்ணெய் ஆகியவற்றை நதிகளினூடாக கொண்டு செல்ல முடியாது. 70 சதவீத மின்சாரத்தை அணுசக்தியில் இருந்து பெறும் பிரான்சில், 56 அணு உலைகளில் 29 அணு உலைகள் சரியாக குளிர்விக்க முடியாததால் அல்லது அவசர பராமரிப்பு தேவைப்படுவதால் தற்போது செயல்படாமல் உள்ளன. எப்போதும் மின்சாரத்தை ஏற்றுமதி செய்யும் நாடு, தற்போது ஜேர்மனியில் இருந்து எரிவாயு மூலம் தயாரிக்கப்படும் மின்சாரத்தை அதிக அளவில் இறக்குமதி செய்து வருகிறது.

மின்சார விநியோகமும் குறிப்பாக நெருக்கடிகளுக்கு ஆளாகிறது, ஏனெனில் அதை பெரிய அளவில் சேமிக்க முடியாது மற்றும் சிறிய மின்னழுத்த ஏற்ற இறக்கங்கள் கூட கணினி நெட்வொர்க்குகள் மற்றும் இணைய பயன்பாடுகளின் தோல்விக்கு வழிவகுக்கும் அல்லது மின்வினியோகங்களின் சரிவுக்கு கூட வழிவகுக்கும். எனவே தேவையை பூர்த்தி செய்ய வேண்டிய அவசியம் ஏற்படுவதால் தேவையான அளவுகளை வாங்குவதை அவசரமாக சார்ந்து இருக்கிறார்கள். இது மின்சார சந்தைகளை ஊகவாணிபத்தின் தாக்கத்திற்கு ஆளாக்குகிறது. மின்சார விநியோகம் போன்ற ஒரு அடிப்படை சமூகத் தேவையானது தனியார் இலாப நலன்களுக்கு உட்படுத்தப்பட்டு, ஊக வணிகர்களின் தயவில் இருப்பது எவ்வளவு அபத்தமானது என்பதை தற்போதைய நெருக்கடி அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

எரிசக்தி விலை உயர்வு என்பது பணவீக்க பனிப்பாறையின் முனை மட்டுமே. மத்திய புள்ளிவிபர அலுவலகத்தின்படி, ஜூலை மாதத்தில் ஒட்டுமொத்த உற்பத்தியாளர் விலைகள் முந்தைய ஆண்டை விட 37.2 சதவீதம் அதிகமாகும். எரிசக்தி விலைகள் சராசரியாக 105 சதவிகித அதிகரிப்புடன், அதிக பங்களிப்பை செய்திருந்தாலும், நுகர்வோர் பொருட்களின் உற்பத்தியாளர் விலையும் 16.2 சதவிகிதம் கடுமையாக உயர்ந்துள்ளது. உணவுப் பொருட்களின் விலை ஒரு வருடத்திற்கு முந்தைய ஆண்டை விட 21.1 சதவீதம் அதிகமாக உள்ளது. இதில் வெண்ணெய் 75.2 சதவீதம், பால் 32 சதவீதம், காப்பி 31.6 சதவீதம் மற்றும் இறைச்சி 23.5 சதவீதத்தாலும் அதிகரித்துள்ளது.

செப்டம்பரில் எரிபொருள் தள்ளுபடியான எரிசக்தி வரியில் கடந்த மூன்று மாதக் குறைப்பு காலாவதியாகும் போது பெட்ரோல் விலையும் லீட்டருக்கு 2 யூரோக்களுக்கு மேல் உயரும். உள்ளூர் மற்றும் பிராந்திய இரயில்களில் ஜேர்மனி முழுவதும் பயணிக்க உதவும் 9 யூரோ பயணச்சீட்டு இந்த மாதமும் முடிவடைகிறது. தங்கள் வாகனங்களையோ அல்லது பொதுப் போக்குவரத்தையோ நம்பியிருக்கும் உழைக்கும் மக்களுக்கு இது மற்றொரு வேதனையான சுமையைக் குறிக்கிறது.

உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிராக நேட்டோ நடத்தி வரும் பினாமிப் போரின் நேரடி விளைவுதான் இந்த விலை வெடிப்பாகும். ஜேர்மனியின் எரிசக்தி வழங்கல் ரஷ்ய எரிவாயு விநியோகத்தை பெரிதும் நம்பியிருந்தாலும், இதற்கு எதிர்வரும் காலங்களில் மாற்று எதுவும் கிடைக்கவில்லை என்றபோதிலும், ஜேர்மன் அரசாங்கம் ரஷ்யாவை பொருளாதார ரீதியாக தனிமைப்படுத்த முடிவு செய்தது மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட நோர்ட் ஸ்ட்ரீம் 2 குழாய்த்திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வரவில்லை.

உக்ரேன், போர் ஜனாதிபதி புட்டினின் பிற்போக்குத்தனமாகவும் குறுகிய நோக்கத்துடனும் நாட்டை இராணுவ ரீதியாக தாக்கும் முடிவால் தூண்டப்படவில்லை. அமெரிக்கா, ஜேர்மனி மற்றும் இதர மேற்கத்திய சக்திகள் 2014 இல் நேட்டோ-சார்பு ஆட்சியை கியேவில் அதிகாரத்திற்கு கொண்டு வந்து, நாட்டை பாரியளவில் ஆயுதமயமாக்கியதில் இருந்து திட்டமிட்டு அதைத் தயாரித்து தூண்டிவிட்டன. இப்போது, அவர்கள் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கான எந்தவொரு அணுகுமுறையையும் நாசப்படுத்துகிறார்கள். பில்லியன் கணக்கான மதிப்புள்ள ஆயுதங்களை வழங்குவதுடன், மேலும் பின்னணியில் இருந்து போரை வழிநடத்துகிறார்கள்.

மேலும் அணுசக்தி போர் உலகை ஆபத்தில் ஆழ்த்தினாலும் கூட, மாபெரும் வளங்கள் நிறைந்த நாட்டை அவர்கள் அடிபணியவும், பிரிக்கவும், சூறையாடவும் ரஷ்யாவை தோற்கடிக்கும் வரை விடக்கூடாது என்பது அவர்களின் உறுதியான குறிக்கோளாகும். ஜேர்மனியின் ஆளும் வட்டங்கள் தங்கள் நீண்டகால மறுஆயுதமயமாக்கல் திட்டங்களை செயல்படுத்தவும் இராணுவச் செலவினங்களை மூன்று மடங்காக உயர்த்தவும் போரைப் பயன்படுத்துகின்றன.

ஒவ்வொரு ஏகாதிபத்திய போரைப் போலவே, தொழிலாள வர்க்கம் அவர்களின் வாழ்க்கைத் தரம், அவர்களின் ஜனநாயக உரிமைகள் மற்றும் அவர்களின் உயிரை கொடுத்து அதற்கான செலவைத் தாங்கிக் கொள்ளச் செய்யப்படுகிறது. இது நடக்க அனுமதிக்கக் கூடாது. சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீன இயக்கம் மட்டுமே இதைத் தடுக்க முடியும். இது, வாழ்க்கைத் தரங்களை அழிப்பதற்கு எதிரான போராட்டத்தையும், ஊதியம், வேலை மற்றும் சமூக வெட்டுக்களுக்கு எதிரான போராட்டத்தையும், போருக்கு எதிரான போராட்டத்தையும், முதலாளித்துவத்தை தூக்கியெறிவதற்கான சோசலிச தாக்குதலுடன் ஒருங்கிணைக்கிறது.

Loading