சான்ஸ்லர் ஷோல்ஸ் ஜேர்மனியின் பெரும் சக்திக்கான கொள்கையை ஊக்குவிக்கிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

Frankfurter Allgemeine Zeitung பத்திரிகையில் திங்களன்று வந்த விருந்தினர் பத்தியில், அதிபர் ஓலாவ் ஷோல்ஸ், ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோவின் பினாமிப் போரை ஜேர்மனி ஏன் ஆதரிக்கிறது, உக்ரேனைப் பெரிதும் ஆயுதபாணியாக்குகிறது, பேச்சுவார்த்தையூடான தீர்வை குழப்புகின்றது மற்றும் ஜேர்மன் இராணுவத்தை பெருமளவில் மறுசீரமைக்கிறது என்பதை பற்றிய தெளிவாக விளக்கத்தை அளித்தார்.

ஜேர்மன் சான்சிலர் ஓலாப் ஷோல்ஸ் [Photo by Bundesregierung/Schacht] [Photo by Bundesregierung/Schacht]

ஜனநாயகம் மற்றும் 'மேற்கத்திய விழுமியங்கள்' ஆகியவற்றைப் பாதுகாப்பதற்கும், ஒரு சர்வாதிகார ஆக்கிரமிப்பாளரை தடுப்பதற்கும், ஏனைய உத்தியோகபூர்வ நியாயங்களாக வழமையாக குறிப்பிடப்படுவதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. உண்மையில், உக்ரேனில் நடக்கும் போர் ஜேர்மனியை ஐரோப்பாவில் முன்னணி இராணுவ சக்தியாக ஆக்குவதற்கும், ஒரு பெரிய சக்தியாக இருந்து தன்னை ஒரு உலக வல்லரசாக மாற்றுவதற்கும் உதவும் நோக்கம் கொண்டது.

'போர்க்காலத்தில் ஐரோப்பா: ஐரோப்பிய ஒன்றியம் ஒரு புவிசார் அரசியல் முக்கிய பங்குவகிப்பாளராக மாற வேண்டும்' என்ற தலைப்பில் அந்தக் கட்டுரை உள்ளது. அதில் ஷோல்ஸ் பின்வருமாறு எழுதுகிறார், 'ஐரோப்பிய ஒன்றியம் ஒரு புவிசார் அரசியல் முக்கிய பங்குவகிப்பாளராக வேண்டும் என்று சமீப ஆண்டுகளில் அடிக்கடி கோரப்பட்டது. இது ஒரு நியாயமான கோரிக்கையும், ஆனால் சரியானதுமாகும்! சமீபத்திய மாதங்களின் வரலாற்று முடிவுகளுடன், ஐரோப்பிய ஒன்றியம் இந்த திசையில் ஒரு பெரிய படியை எடுத்துவைத்துள்ளது”.

ஜேர்மன் அரசாங்கத்திலுள்ள ஒரு அங்கத்தவர் 'ஐரோப்பா' அல்லது 'ஐரோப்பிய ஒன்றியம்' என்று கூறினால், அவர் ஜேர்மனியையே குறிப்பிடுகின்றார். தனது கட்டுரையில், சிறிய நாடுகளின் மாற்றிக்கொள்ளும் கொள்கைகளை எதிர்காலத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தில் பொறுத்துக்கொள்ள முடியாது என்று ஷோல்ஸ் வலியுறுத்துகிறார். ஏற்கனவே நிதி மற்றும் பொருளாதாரத் துறைகளில், பிரஸ்ஸல்ஸ், பேர்லின் மற்றும் அவற்றின் பின்னணியிலுள்ள சக்திவாய்ந்த பொருளாதார நலன்கள் வெளியுறவுக் கொள்கையிலும் பாதையை கட்டளையிட வேண்டும்.

'காலத்தின் திருப்பத்திற்கு ஐரோப்பாவின் மிக முக்கியமான பதில்' 'ஒற்றுமை' என்று ஷோல்ஸ் கூறுகிறார். 'நாம் அதை முற்றிலும் பராமரிக்க வேண்டும், அதை ஆழப்படுத்த வேண்டும். என்னைப் பொறுத்தவரை, தனிப்பட்ட அங்கத்துவ நாடுகளின் ஐரோப்பிய முடிவுகளின் தன்னலமிக்க தடைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாகும். ஒட்டுமொத்த ஐரோப்பாவிற்கும் தீங்கு விளைவிக்கும் தேசிய தனித்த நடவடிக்கைகளுக்கு முடிவு வேண்டும். போட்டியிடும் பெரும் வல்லரசுகளின் உலகில் நமது குரல் தொடர்ந்து கேட்கப்படவேண்டும் என்றால், உதாரணமாக வெளியுறவுக் கொள்கையில் நாம் இனி தேசிய தடுப்புரிமைகளை ஏற்றுக்கொள்ள முடியாது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்வது என்பது ஜனநாயகம் மற்றும் தேசிய சுயநிர்ணயத்திற்கானது என்று செலென்ஸ்கி அரசாங்கத்தின் கூற்று எவ்வளவு அபத்தமானது என்பதை இது காட்டுகிறது. உண்மையில், செலென்ஸ்கி பேசும் தன்னலக்குழுக்கள், ஐரோப்பிய ஒன்றியத்தின் இணைப்பு, தங்கள் சொந்த தொழிலாள வர்க்கத்தை இன்னும் மோசமாக சுரண்ட அனுமதிக்கும் என்று தங்களைத் தாங்களே உறுதிகூறிக் கொள்கின்றனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன நடவடிக்கைகளால் வாழ்க்கைத் தரம் சீரழிந்துள்ள கிரேக்கத் தொழிலாளர்கள் மற்றும் 15 ஆண்டுகள் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினராக இருந்தும் அவர்களின் மேற்கு ஐரோப்பிய சகாக்களை விட ஒரு சிறுதொகையை சம்பாதிக்கும் பல்கேரியா, ருமேனியா மற்றும் பிற கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் உள்ள தொழிலாளர்கள் இதைப் பற்றி பலவிஷயங்களைக் கூறலாம். ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்களாக, அவர்கள் நடமாடும் சுதந்திரத்தை அனுபவிக்கிறார்கள் மற்றும் பிற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் வேலை செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால் அங்கு அவர்கள் கட்டுமான தளங்கள், இறைச்சிக் கூடங்கள் மற்றும் சேவைத் துறையில் அடிமை ஊதியத்துடன் சுரண்டப்படுகிறார்கள்.

அணு ஆயுதப் போரின் ஆபத்தில் ஆழ்த்தினாலும், ரஷ்யாவை இராணுவரீதியாக தோற்கடிக்கப்படும் வரை போரைத் தொடரும் நேட்டோவின் இலக்கை ஷோல்ஸ் நிபந்தனையின்றி ஆதரிக்கிறார். 'நாங்கள் உக்ரேனை ஆதரிக்கிறோம். பொருளாதாரம், மனிதாபிமான, நிதி மற்றும் ஆயுதங்களை வழங்குவதன் மூலம் இந்த ஆதரவு தேவைப்படும் வரை நாங்கள் அவ்வாறு செய்வோம்' என்று அவர் எழுதுகிறார்.

போரின் தொடக்கத்தில், ஷோல்ஸ் மற்றும் சமூக ஜனநாயக்கட்சி (SPD) உக்ரேனை அரை மனதுடன் ஆதரித்ததாகவும் ஆயுதங்களை வழங்குவதில் தாமதம் செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் அதிலிருந்து அக்கட்சி தெளிவான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. மாஸ்கோவுடனான முழுமையான முறிவுக்கு எதிராக எச்சரிக்கும் உறுப்பினர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஜனாதிபதி புட்டினுடன் நண்பராகவும், ரஷ்ய எரிசக்தி நிறுவனமான காஸ்ப்ரோமில் நீண்டகாலமாக பணியாற்றிய முன்னாள் ஜேர்மன் சான்சிலர் ஹெகார்ட் ஷ்ரோடர் கட்சி நீக்க நடவடிக்கைகளுக்கு உட்பட்டார்.

ஜூன் 21 அன்று கட்சியுடன் இணைந்த Friedrich Ebert Foundation இன் மாநாட்டில், சமூக ஜனநாயக் கட்சியின் புதிய தலைவர் லார்ஸ் கிளிங்பைல் ஏற்கனவே 'புதிய மூலோபாய கூட்டாண்மைகளுக்கு' அழைப்பு விடுத்திருந்தார்.

'பொருளாதார நலன்கள் மற்றும் அரசியல் நோக்குநிலையின் அடிப்படையில் எங்களுக்கு புதிய மூலோபாய கூட்டணிகள் தேவை' என்று அவர் அறிவித்தார். 'ஜேர்மனி ஒரு முன்னணி சக்தியாக இருக்க வேண்டும். ஏறக்குறைய 80 ஆண்டுகால கட்டுப்பாட்டிற்குப் பின்னர், ஜேர்மனி இப்போது சர்வதேச ஒருங்கிணைக்கும் அமைப்பில் ஒரு புதிய பங்கைக் கொண்டுள்ளது” என்றார்.

ஒரு 'முன்னணி சக்தியாக' இந்த பங்கு இராணுவ வழிமுறைகளை பயன்படுத்துவதையும் குறிக்கிறது என்று கிளிங்பைல் வெளிப்படையாக வலியுறுத்தினார். 'சிலர் இப்போது எச்சரிக்கையாக இருப்பதாக நான் சந்தேகிக்கிறேன்,' என்று அவர் கூறினார். 'சமூக ஜனநாயக் கட்சியின் தலைவர் ஒரு முன்னணி சக்தியாக இருப்பதை பற்றி, ஆயுதப் படைகள் பற்றி [Bundeswehr], இராணுவ பலத்தைப் பற்றி பேசுகிறார். இப்போது சில விவாதங்கள் எப்படி நடக்கின்றன என்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. ஆனால் நாங்கள் யதார்த்தமானவர்கள் என்று என்னால் கூற முடியும்” என்றார்.

ரஷ்யாவிற்கு எதிரான பினாமி போருடன், ஜேர்மன் அரசாங்கம் ஹிட்லரின் Wehrmacht (ஆயுதப் படைகள்) மரபுகளைப் பின்பற்றுகிறது. நேட்டோ மற்றும் ஜேர்மன் அரசாங்கத்தால் கோரப்பட்ட ரஷ்யாவின் இராணுவத் தோல்வியானது, இரண்டாம் உலகப் போரில் ஜேர்மனி ஏற்கனவே சோவியத் ஒன்றியத்தை ஆக்கிரமித்தபோது பின்பற்றிய இலக்கான அந்த மிகப்பெரிய நாட்டைப் பிளவுபடுத்துவதற்கும், அதன் பரந்த மூலப்பொருட்களைக் கொள்ளையடிப்பதற்கும் களத்தை அமைக்கும்.

கிழக்கு ஐரோப்பாவில் ஜேர்மன் மேலாதிக்கத்தை வலுப்படுத்துவதற்கான ஒரு வழிமுறையாக உக்ரேன் போரை ஷோல்ஸ் பார்க்கிறார். 'ஐரோப்பாவின் மையத்தில் உள்ள நாடு' என்ற முறையில், ஜேர்மனி 'ஐரோப்பாவில் கிழக்கு மற்றும் மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு ஆகியவற்றை ஒன்றிணைக்கும்' என்று அவர் எழுதுகிறார். உக்ரேன், மால்டோவா, ஜோர்ஜியா மற்றும் மேற்கு பால்கனின் ஆறு நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியத்தில் அனுமதிக்கப்பட உள்ளன. 'கிழக்கு கூட்டணி பகுதியில் லித்துவேனியாவில், ஸ்லோவாக்கியா மற்றும் பால்டிக் கடலில்' ஜேர்மனி 'கணிசமாக அதன் இராணுவ இருப்பை அதிகரிக்கும்' என்று அவர் மேலும் கூறினார்.

இங்கேயும், ஷோல்ஸ் ஜேர்மனியின் குற்றவியல் மரபுகளுக்குத் திரும்புகிறார். 'மத்திய ஐரோப்பா' என்று அழைக்கப்பட்ட பகுதியின் கட்டுப்பாடு, முதல் உலகப் போர் மற்றும் இரண்டாம் உலகப் போரில் ஜேர்மனியின் முக்கிய போர்க்கால நோக்கமாக இருந்தது. முதலாம் உலகப் போர் ஆரம்பித்த பின்னர் அப்போதைய குடியரசின் சான்சிலர் தியோபால்ட் வொன் பெத்மான்-ஹோல்வேக்கின் (Theobald von Bethmann-Hollweg) பிரபலமற்ற “செப்டம்பர் திட்டத்தில்” எழுதியதுபோல், மத்திய ஐரோப்பாவில் பலப்படுத்தப்பட்ட ஜேர்மனி மட்டுமே பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ரஷ்யா போன்ற உலக வல்லரசுகளுக்கு இடையே சமமான உலக வல்லரசாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முடியும் என்று கூறியது.

ஷோல்ஸ் தனது கட்டுரையில் அமெரிக்காவை ஒரு தடவை கூட குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒரு புறக்கணிப்பு அல்ல. தற்போது, உலகின் மிகப்பெரிய இராணுவ சக்தியாகவும், முன்னணி நேட்டோ சக்தியாகவும் ஜேர்மனிக்கு அமெரிக்கா இன்றியமையாதது, ஆனால் நீண்டகாலப்போக்கில், அது ஒரு மூலோபாய போட்டியாக கருதப்படுகிறது.

ஜேர்மன் ஊடகங்கள் அமெரிக்காவின் உள்நாட்டு மற்றும் வெளிப்புற வீழ்ச்சியை கவலை மற்றும் ஏளனம் கொண்ட கலவையுடன் பின்பற்றுகின்றன. சவூதி அரேபியாவிற்கு ஜனாதிபதி ஜோ பைடெனின் பயணம் பற்றிய Süddeutsche Zeitung பத்திரிகையின் வர்ணனை அவற்றிற்கு பொதுவானது.

'முற்றிலும் மேலதிக சுமையேற்றப்பட்ட விருப்பப் பட்டியலைக் கொண்டு வந்த பைடென் 24 மணிநேரத்திற்குப் பிறகு, பல வெற்று வார்த்தைகளுடனும் ஆனால் மிகசில உறுதியான பெறுபேறுகளுடன்' 'அதிகார இழப்பில் ஒரு பாடம் கற்றுக்கொண்டார்' என்று செய்தித்தாளின் அரசியல் துறையின் தலைவர் ஸ்டீபன் கோர்னேலியஸ் எழுதுகிறார். “இந்தப் பயணம் அமெரிக்காவின் அதிகாரத்தின் சரிவை விளக்குகிறது; இது ஒரு பல்துருவ உலகாக மாறியுள்ளதில் செயல்படும் மையவிலக்கு விசைகளைக் வெளிப்படையாக்கியுள்ளது'.

ஜேர்மன் ஏகாதிபத்தியம் ஹிட்லருக்குப் பின்னர் மிகப்பெரிய மறுஆயுதமயமாக்கலுடன் அதன் முன்னாள் பாதுகாக்கும் சக்தியாக. தனது அதிகாரத்தை இழந்ததற்கு எதிர்வினையாற்றுகிறது. அது அதன் புவிசார் அரசியல் அபிலாஷைகளை ரஷ்யாவிற்கும் ஐரோப்பாவிற்கும் மட்டுப்படுத்தவில்லை; 'ஆசியா, ஆபிரிக்கா மற்றும் இலத்தீன் அமெரிக்கா' என்று ஷோல்ஸ் அழைக்கும் 'தெற்கு உலகும்' அதன் செல்வாக்கு மண்டலமாகவும் மாற உள்ளது.

ஜேர்மனி 'இந்த கடினமான காலங்களில் ஐரோப்பாவிற்கும் உலகத்திற்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டால்,' அது 'தெற்கு உலகின் கவலைகளை எங்கள் கவலையாக மாற்றும்' என்று ஷோல்ஸ் எழுதுகிறார். சமீபத்தில் ஜேர்மனியில் நடந்த ஜி7 மாநாட்டிற்கு இந்தியா, தென்னாபிரிக்கா, இந்தோனேசியா, செனகல் மற்றும் ஆர்ஜென்டினா ஆகிய நாடுகளைச் சேர்ந்த தனது சக கூட்டாளிகளை அவர் வேண்டுமென்றே அழைத்திருந்தார்.

ஷோல்ஸ் மற்றும் கிளிங்பைல் இருவரும் ஜேர்மனி இராணுவவாதம் மற்றும் பெரும் அதிகார அரசியலுக்கு திரும்புவதை உக்ரேன் மீதான ரஷ்ய தாக்குதலுக்கு எதிர்வினையாக எடுத்துக்காட்டுசிரத்தை எடுத்துக்கொள்கிறார்கள், அதை அவர்கள் 'காலத்தின் திருப்புமுனை' என்று விவரிக்கிறார்கள். உண்மையில், இது அதற்கு மாறானதாகும். ஜேர்மன் இராணுவவாதத்தின் புத்துயிர்ப்பே உக்ரேனில் போருக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும்.

2014 ஆம் ஆண்டிலேயே, அப்போதைய ஜேர்மன் ஜனாதிபதி ஜோகாயிம் கவுக் மற்றும் ஜேர்மன் அரசாங்கத்தின் முன்னணி பிரதிநிதிகளான, தற்போதைய ஜேர்மன் ஜனாதிபதி பிராங்க் வால்டர் ஸ்ரைன்மையர் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் தற்போதைய தலைவர் ஊர்சுலா வொன் டெயர் லெயென் ஆகியோர் ஜேர்மனியின் மிகவும் மூர்க்கமான உலகளாவிய அரசியல் மற்றும் இராணுவவாதத்தை அறிவித்தனர். இது உக்ரேனில் நடைமுறைப்படுத்தப்பட்டது. தீவிர வலதுசாரி ஆயுதக்குழுக்களின் உதவியுடன் ஒரு மேற்கத்திய கைப்பாவை ஆட்சியை அதிகாரத்திற்கு கொண்டு வந்த சதியை அவர்கள் ஆதரித்தனர்.

மாஸ்கோ கிரிமியாவை இணைப்பதன் மூலம் இதற்கு பதிலளித்தது. அதன் குடிமக்கள் ரஷ்யாவுடன் இணைவதற்கு ஆதரவாக பெருமளவில் வாக்களித்தனர் மற்றும் கிழக்கு உக்ரேனில் உள்ள பிரிவினைவாத இயக்கங்களை ஆதரிப்பதன் மூலம் கியேவில் தீவிர வலதுசாரி ஆட்சியை அவர்கள் ஏற்கத் தயாராக இல்லை. அப்போதிருந்து, உக்ரேன் திட்டமிட்டு நேட்டோவால் மீண்டும் ஆயுதமயமாக்கப்பட்டதுடன் மற்றும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கான எந்தவொரு அணுகுமுறையும் நாசமாக்கப்பட்டது. இறுதியில் உக்ரேனை இராணுவரீதியாக தாக்குவதற்கான ரஷ்ய ஜனாதிபதி புட்டினின் பிற்போக்கு முடிவை தூண்டியது.

2014ல், சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே ஜேர்மன் இராணுவவாதம் மற்றும் அதன் விளைவுகளுக்கு எதிராக எச்சரித்து அதற்கு எதிராக அணிதிரட்டிய ஒரே கட்சியாக இருந்தது. இந்த பணிகள் மதிப்பீடு உலக சோசலிச வலைத் தளத்திலும் மற்றும் மெஹ்ரிங் வெளியீட்டகம் வெளியிட்ட 'அறிவியலா போர் பிரச்சாரமா?' மற்றும் 'ஏன் அவர்கள் மீண்டும் வருகிறார்கள்?' என்ற இரண்டு புத்தகங்களிலும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

இப்போது எங்களின் அனைத்து எச்சரிக்கைகளும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. ஜேர்மன் இராணுவவாதத்தின் மீள்வரவு தேசிய சோசலிசம் மற்றும் ஸ்டீபன் பண்டேரா போன்ற அதன் ஒத்துழைப்பாளர்களுக்கு புத்துயிர்ப்புடன் இணைந்துள்ளது. மேலும் இது தொழிலாள வர்க்கத்தின் மீதான போர்ப் பிரகடனத்துடன் தொடர்புடையது.

ஷோல்ஸ் தனது FAZ கட்டுரையிலும் இதை வெளிப்படையாகக் கூறுகிறார். அவர் ஜேர்மன் மக்களை பெரும் மற்றும் நீண்டகால தியாகங்களுக்கு தயார்படுத்துகிறார். 'நம்மைப் போன்ற வலுவான மற்றும் வளமான ஒரு நாட்டிற்கு கூட இந்த பாதை எளிதானது அல்ல' என்று அவர் எழுதுகிறார். 'எங்களுக்கு நின்றுபிடிக்கும் சக்தி தேவைப்படும்' என்கிறார்.

பல குடிமக்கள் ஏற்கனவே போரின் விளைவுகளால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மற்றும் மின்சாரம், எண்ணெய் அல்லது எரிவாயுவுக்கான அடுத்த கட்டணங்களை கவலையுடன் பார்க்கிறார்கள் என்று ஷோல்ஸ் கூறினார். உலகப் பொருளாதாரம், 'பல தசாப்தங்களில் முன்னோடியில்லாத சவாலை எதிர்கொள்கிறது. சீர்குலைந்த விநியோகச் சங்கிலிகள், பற்றாக்குறை மூலப்பொருட்கள், எரிசக்தி சந்தைகளில் போர் தொடர்பான நிச்சயமற்ற தன்மை ஆகியவை அனைத்தும் உலகளவில் விலைகளை உயர்த்துகின்றன.' ஆனால், 'இந்த நெருக்கடியில் இருந்து நாம் அதற்குள் சென்றபோது இருந்ததை விட வலிமையாகவும் சுதந்திரமாகவும் வெளிப்படுவோம்' என்று அவர் உறுதியாக நம்புவதாகக் கூறினார்.

Loading